Kamba Ramayanam Tamilischer Text Teil 4

Aus Yogawiki


Kamba Ramayanam Tamilischer Text Teil 4 enthält den fortlaufenden Text der Kapitel 6.18 bis 6.39 des Kamba Ramayanam. Dieser Abschnitt gibt den tamilischen Originaltext in seiner eigenen Schrift wieder. Das Lesen und Hören der Verse lässt den Klang, die Bildsprache und die Hingabe dieser großen tamilischen Dichtung hervortreten.

Rama: göttliche Gegenwart inmitten menschlicher Erfahrungen.

Dieser Teil führt durch Yuddha Kandam. Am Meer und vor Lanka verdichten sich die Konflikte des Epos. Vibhishanas Zuflucht, der Kampf um Sitas Befreiung und die spätere Heimkehr stellen Fragen nach Schutz, Verantwortung, Dharma und Versöhnung.

Zu allen Fassungen:

Yuddha Kandam – Das Buch des Krieges

6.18 – Die Schlangenfessel

6.18. நாகபாசப் படலம் (8133- 8342)

அரக்கியர் அழுவதுணர்ந்து இந்திரசித்து எழுதல்

‘குழுமி, கொலை வாள் கண் அரக்கியர் கூந்தல் தாழ,
தழுவித் தழுவித் தம் கைகொடு மார்பின் எற்றி,
அழும் இத்தொழில் யாது கொல்? ‘என்று, ஓர் அயிர்ப்பும் உற்றான்,
எழிலித் தனி ஏறு என இந்திரசித்து எழுந்தான் 6.18.1

இந்திரசித்தின் ஐயப்பாடு

‘எட்டு ஆகிய திக்கையும் வென்றவன் இன்றும் ஈடு
பட்டான் கொல்? அது அன்று எனின், பட்டு அழிந்தான் கொல்? பண்டு
சுட்டான் இவ் அகன் பதியைத் தொடு வேலையோடும்
கட்டான் கொல்? இதற்கு ஒரு காரணம் என் கொல்? ‘என்றான். 6.18.2

இந்திரசித்து இராவணனைக் காணுதல்

கேட்டான், ‘இடை உற்றது என்? ‘என்று கிளத்தல் யாரும்
மாட்டாது நடுங்கினர்; மாற்றம் மறந்து நின்றார்,
‘ஓட்டா நெடுந்தேர் கடிது ‘ஓட்டி இமைப்பின் உற்றான்,
காட்டாதன காட்டிய தாதையைச் சென்று கண்டான் 6.18.3

இந்திரசித்தின் வினாவும் இராவணன் விடையும்

கண்டான், இறை ஆறிய நெஞ்சினன், கைகள் கூப்பி,
‘உண்டாயது என், இவ் உழி? ‘என்றலும் ‘உம்பி மாரைக்
கொண்டான் உயிர் காலனும்; கும்ப நிகும்பரோடும்
விண்தான் அடைந்தான், அதிகாயனும் வீர! ‘என்றான். 6.18.4

இந்திரசித்து ஏங்கி நைதல்

சொல்லாத முன்னம், சுடரைச் சுடர்தூண்டு கண்ணான்,
பல்லால் அதரத்தை அதுக்கி, விண்மீது பார்த்தான்;
எல்லாரும் இறந்தனரோ! ‘என ஏங்கி நைந்தான்;
வில்லாளரை எண்ணில் விரற்குமுன் நிற்கும் வீரன் 6.18.5

உம்பியரைக் கொன்றோர் இவர் என இராவணன் உரைத்தல்

‘ஆர் கொன்றவர் ‘என்றலும் பேர் அதிகாயன் என்னும்
பேர் கொன்றவன் வென்றி இலக்குவன்; பின்பு நின்றார்
ஊர் கொன்றவனால், பிறரால் என உற்ற எல்லாம்,
தார் கொன்றையினான் கிரி சாய்த்தவன்தான் உரைத்தான். 6.18.6

இந்திரசித்து இராவணனைச் சினத்தல் (8139-8140)

‘கொன்றார் அவரோ! “கொலை சூழ்க “ என நீ கொடுத்தாய்;
வன் தானையர் மானிடர் வன்மை அறிந்தும், மன்னா!
என்றானும் எனைச் செல ஏவலை; இற்றது ‘என்னா
நின்றான், நெடிது உன்னி, முனிந்து, நெருப்பு உயிர்ப்பான். 6.18.7

‘அக்கப் பெயரோனை நிலத்தொடு அரைத்துளானை,
விக்கற்கு ஒரு வெவ் உரைத் தூதுவன் என்று விட்டாய்;
புக்கு அத் தலை எய்த நினைந்திலை; புந்தி இல்லாய்!
மக்கள் துணை அற்றனை; இற்றது உன் வாழ்க்கை மன்னோ! 6.18.8

இந்திரசித்தின் வஞ்சினம் (8141-8145)

‘என், இன்று நினைந்தும், இயம்பியும், எண்ணியும் தான்?
கொன் நின்ற படைக்கலத்து எம்பியைக் கொன்றுளானை,
அந்நின்ற நிலத்து அவன் ஆக்கையை நீக்கி அல்லால்,
மன்நின்ற நகர்க்கு இனி வாரலென்; வாழ்வும் வேண்டேன். 6.18.9

‘மாற்றா உயிர் எம்பியை மாற்றிய மானிடன்தன்
ஊற்று ஆர் குருதிப் புனல் பார்மகள் உண்டிலாளேல்,
ஏற்றான் இகல் இந்திரன் ஈர் இரு கால், எனக்கே
தோற்றான் தனக்கு என் நெடுஞ் சேவகம் தோற்க என்றான். 6.18.10

வெங்கண் நெடு வானரத் தானையை வீற்று வீற்றாய்ப்
பங்கம் உற நூறி, இலக்குவனைப் படேனேல்,
அங்கம் தர அஞ்சி என் ஆணை கடக்கிலாத
செங்கண் நெடு மால் முதல் தேவர் சிரிக்க, என்னை! 6.18.11

‘பாம்பின் தரு வெம்படை, பாசு பதத்தினோடும்,
தேம்பல் பிறை சென்னி வைத்தான் தரு தெய்வ ஏதி,
ஓம்பித் திரிந்தேன் எனக்கு இன்று உதவாது போமேல்,
சோம்பித் துறப்பென் உயிர்; சோறும் உகந்து வாழேன் 6.18.12

‘மருந்தே நிகர் எம்பிதன் ஆருயிர் வவ்வினானை
விருந்தே என அந்தகற்கு ஈகிலென், வில்லும் ஏந்தி,
பொரும் தேவர் குழாம் நகை செய்திடப் போந்து, பாரின்
இருந்தேன் எனின், நான் அவ் இராவணி அல்லென் ‘என்றான். 6.18.13

இராவணன் இந்திரசித்தைப் பாராட்டுதல்

‘ஏகா, இது செய்து, எனது இன்னலை நீக்கிடு; எந்தைக்கு
ஆகாதனவும் உளவோ? எனக்கு ஆற்றலார் மேல்
மாகால் வரி வெஞ்சிலையோடும் வளைத்த போது
சேகு ஆகும் என்று எண்ணி இவ் இன்னலில் சிந்தை செய்தேன். 6.18.14

இந்திரசித்தின் போர்க்கோலம்

என்றானை வணங்கி, இலங்கு அயில் வாளும் ஆர்த்திட்டு,
ஒன்றானும் ஆறா, உருவா, உடற்காவலோடும்,
பொன் தாழ் கணையின் நெடும் புட்டில் புறத்து வீக்கி,
வன் தாள் வயிரச்சிலை வாங்கினன் வானை வென்றான். 6.18.15

வில்லின் பெருமை

வயிரந் நெடு மால்வரை கொண்டு, மலர்க்கண் வந்தான்,
செயிர் ஒன்றும் உறாவகை, இந்திரற்கு என்று செய்த
உயர் வெஞ்சிலை; அச்சிலை பண்டு அவன் தன்னை ஓட்டி,
துயரின் தலை வைத்து, இவன் கொண்டது; தோற்றம் ஈதால். 6.18.16

அம்புறாத்தூணியின் பெருமை

தோளில் கணைப் புட்டிலும், இந்திரன் தோற்ற நாளே
ஆளித் திறல் அன்னவன் கொண்டன; ஆழி ஏழும்
மாளப் புனல் வற்றினும் வாளி அறாத; வன்கண்
கூளிக் கொடுங் கூற்றினுக்கு ஆவது ஓர் கூடு போல்வ. 6.18.17

இந்திரசித்து ஆயுதங்களை ஆய்ந்து கொள்ளுதல்

பல்லாயிர கோடி படைக்கலம், பண்டு, தேவர்
எல்லாரும் முனைத்தலை யாவரும் ஈந்த, மேரு
வில்லாளன் கொடுத்த, விரிஞ்சன் அளித்த, வெம்மை
அல்லால் புரியாதன, யாவையும் ஆய்ந்து, கொண்டான். 6.18.18

இந்திரசித்து ஏறிய தேரின் பெருமை

நூறாயிரம் யாளியின் நோன்மை தரெிந்த சீயத்து
ஏறாம் அவை அன்னவை ஆயிரம் பூண்டது என்ப;
மாறாய் ஒர் இலங்கை நிகர்ப்பது; வானுேளாரும்
தேறாதது மற்று அவன் ஏறிய தெய்வ மாத்தேர். 6.18.19

அத்தேரின் விரைவும் வலிமையும்

பொன் சென்று அறியா உவணத் தனிப் புள்ளினுக்கும்,
மின் சென்று அறியா மழுவாளன் விடைக்கும், மேல் நாள்
பின் சென்றது அல்லால் ஒர் பெருஞ்சிறப்பு உற்ற போதும்
முன் சென்று அறியாதது, மூன்று உலகத்தினுள்ளும். 6.18.20

பேய்க் கொடி

‘ஏயாத் தனிப் போர் வலி காட்டிய இந்திரன் தன்
சாயாப் பெரும் சாய் கெட, தாம்புகளால் தடந் தோள்
போய் ஆர்த்தவன் வந்தனன் வந்தனன், என்று பூசல்
பேய் ஆர்த்து எழுந்து ஆடு நெடுங்கொடி பெற்றது அம்மா! 6.18.21

தேர்ச் சக்கரமும் மொட்டும்

செதுகைப் பெருந் தானவர் ஊனொடும் தேய்த்த நேமி
யது; ‘கைத்திசை யானையை ஓட்டியது ‘ என்னலாமே?
மதுகைத் தடந்தோள்வலி காட்டிய வான வேந்தன்
முதுகைத் தழும்பு ஆக்கிய மொய் ஒளி மொட்டது அம்மா! 6.18.22

சேமத்தேர் பின்வர இந்திரசித்து தேரேறிச் செல்லுதல்

அத் தேரினை ஏறியது ஒப்பன ஆயிரம் தேர்
ஒத்து ஏய்வன சேமமதாய் வர, ‘உள்ளம் வெம்போர்ப்
பித்து ஏறினன் ‘என்ன நடந்தனன் பின்பு அலால், மற்று
எத் தேவரையும் முகம் கண்டு அறியாத ஈட்டான் 6.18.23

இந்திரசித்துடன் சென்ற சேனையின் அளவு

அன்னானொடு போயின தானை அளந்து கூற
என்னால் அரிதேனும், இயம்பு வான்மீகன் என்னும்
நல் நான்மறையான், ‘அது நாற்பது வெள்ளம் ‘என்னச்
சொன்னான்; பிறர் யார், அஃது உணர்ந்து தொகுக்க வல்லார்? 6.18.24

பல்லியம் ஆர்த்தல்

தூமக்கண் அரக்கனும், தொல் அமர் யார்க்கும் தோலா
மா பக்கனும், அந்நெடுந் தேர் மணி ஆழி காக்க,
தாமக் குடை மீது உயர பெருஞ் சங்கம் விம்ம,
நாமக் கடல் பல் இயம் நால் கடல் மேலும் ஆர்ப்ப. 6.18.25

நால்வகைச் சேனையும் உடன்வர இந்திரசித்துச் செல்லுதல்

தேர் ஆயிரம் ஆயிர கோடி தன் மாடு செல்ல,
போர் ஆனை புறத்தின் அவற்றின் இரட்டி போத,
தார் ஆர் புரவிக் கடல் பின் செல, தானை வீரப்
பேர் ஆழி முகம் செல, சென்றனன் பேர்ச்சி இல்லான். 6.18.26

இலக்குவன் போரை விரும்பி நிற்றல்

நின்றனன் இலக்குவன் களத்தை நீங்கலன்
‘பொன்றினன் இராவணன் புதல்வன்; போர்க்கு இனி
அன்றவன் அல்லனேல் அமரர் வேந்தனை
வென்றவன் வரும் ‘என விரும்பும் சிந்தையான். 6.18.27

யாரிவன் என்ற இலக்குவனுக்கு வீடணன்,
இந்திரசித்து எனல்

‘யார் இவன் வருபவன்? இயம்புவாய்! ‘என
வீர வெந் தொழிலினான் வினவ வீடணன்
‘ஆரிய! இவன் இகல் அமரர் வேந்தனைப்
போர் கடந்தவன்; இன்று வலிது போர் ‘என்றான். 6.18.28

வீடணன் இலக்குவனுக்குச் சில சொல்லுதல்

‘எண்ணினது உணர்த்துவது உளது ஒன்று எம்பிரான்!
கண் அகன் பெரும் படைத் தலைவர் காத்திட
நண்ணின துணையொடும் பொருதல் நன்று; இது
திண்ணிதின் உணர்தியால் தெளியும் சிந்தையால். 6.18.29

உடன் வரத்தக்க வீரர் இவர் எனல்

‘மாருதி சாம்பவன் வானரேந்திரன்
தாரை சேய் நீலன் என்று இனைய தன்மையார்
வீரர் வந்து உடன் உற விமல நீ நெடும்
போர் செயத் தகுதியால் புகழின் பூணினாய். 6.18.30

வீடணன் கூறும் இந்திரசித்தன் வீரச் சிறப்புகள் (8163-8164)

‘பல் பதினாயிரம் தேவர் பக்கமா
எல்லை இல் சேனை கொண்டு எதிர்ந்த இந்திரன்
ஒல்லையின் உடைந்தனன் உயிர்கொண்டு உய்ந்துளான்
மல்லல் அம் தோளினாய்! அமிழ்தின் வன்மையால். 6.18.31

‘இனி அவை மறையுமோ இந்திரன் புயப்
பனி வரை உள நெடும் பாசப் பல் தழும்பு?
அனுமனைப் பிணித்துளன் ஆனபோது இவன்
தனுமறை வித்தகம் தடுக்கற் பாலதோ? 6.18.32

அனுமன் இலக்குவனை அடைதல்

என்று அவன் இறைஞ்சலும்; இளைய வள்ளலும்
‘நன்று ‘என மொழிதலும் நணுகினான் அரோ
வன் திறல் மாருதி ‘இலங்கைக் கோமகன்
சென்றனன் இளவல்மேல் ‘என்னும் சிந்தையான். 6.18.33

அனுமன் வருவதற்குக் காரணம்

கூற்றமும் கண் புலம் புதைப்ப கோத்து எழு
தோற்றமும் இராவணி துணிவும் நோக்கு உறா
மேல் திசை வாயிலை விட்டு வெம் கடும்
காற்று என அணுகினான் கடிதின் வந்து அரோ. 6.18.34

சுக்கிரீவன் சேனையொடு இலக்குவனை அடைதல்

அங்கதன் முன்னரே ஆண்டையான்; அயல்
துங்கவன் தோளினார் எவரும் சுற்றினார்;
செங் கதிரோன் மகன் முன்பு சென்றனன்
சங்க நீர்க் கடல் எனத் தழீஇய தானையான். 6.18.35

இரு சேனைகளும் சினமிக்கு எதிர்தல்

இரு திரைப் பெருங் கடல் இரண்டு திக்கினும்
பொரு தொழில் வேட்டு எழுந்து ஆர்த்துப் பொங்கின
வருவன போன்றன மனத்தினால் சினம்
திருகின எதிர் எதிர் செல்லும் சேனையே. 6.18.36

விண்ணவர் போரைக்காண விரும்பி வருதல்

‘கண்ணினால் மனத்தினால் கருத்தினால் தரெிந்து
எண்ணினால் பெறு பயன் எய்தும் இன்று ‘எனா
நண்ணினார் இமையவர் நங்கை மாரொடும்
விண்ணின் நாடு உறைவிடம் வெறுமை கூரவே. 6.18.37

போர் ஆரவாரம் (8170-8172)

ஒத்து இரு தானையும் உடற்ற உற்றுழி
அத்தனை வீரரும் ஆர்த்த அவ் ஒலி
நத்து ஒலி முரசு ஒலி நடுக்கலால் தலை
பொத்தினர் செவிகளைப் புரந்தர ஆதியர். 6.18.38

‘எற்றுமின் பற்றுமின் எறிமின் எய்ம்மின் ‘என்று
உற்றன உற்றன உரைக்கும் ஓதையும்
முற்றுறு கடை யுகத்து இடியின் மும்மடி
பெற்றன; பிறந்தன சிலையின் பேர் ஒலி. 6.18.39

கல்பட மரம்பட கால வேல் பட
வில்படு கணைபட வீழும் வீரர்தம்
எல்படும் உடல்பட இரண்டு சேனையும்
பின் பட நெடு நிலம் பிளந்து பேருமால். 6.18.40

அரக்கர் கவந்தம் ஆடுதல்

எழுத்தொடர் மரங்களால் எற்ற முற்றிய
விழுத்தலை முழுவதும் சிதறி வீழ்ந்தன
அழுத்திய பெருஞ் சினத்து அரக்கர் ஆக்கைகள்
கழுத்து உள தலை இல களத்தின் ஆடுவ. 6.18.41

குரங்குகளின் உடம்புகளில் குருதி சோர்தல்

வெட்டிய தலையன நரம்பு வீச மேல்
முட்டிய குருதிய குரங்கின் மொய்யுடல்
சுட்டு உயர் நெடுவனம் தொலைந்தபின் நெடுங்
கட்டைகள் எரிவன போன்று காட்டுவ. 6.18.42

குரக்குச் சேனை அரக்கர் சேனையை அழித்தல்

பிடித்தன நிருதரை பெரிய தோள்களை
ஒடித்தன கால் விசைத்து உதைத்த உந்தின
கடித்தன கழுத்து அற கைகளால் எடுத்து
அடித்தன அரைத்தன ஆர்த்த வானரம். 6.18.43

அரக்கர் குரங்குகளை அழித்தல்

வாள்களின் கவிக்குல வீரர் வார்கழல்
தாள்களைத் துணித்தனர் தலையைத் தள்ளினர்
தோள்களைப் பிரித்தனர் உடலைத் துண்டவன்
போழ்களின் புரட்டினர் நிருதர் பொங்கினார். 6.18.44

குரங்குகள் அரக்கரைக் கொல்லுதல்

மரங்களில் அரக்கரை மலைகள் போன்று உயர்
சிரங்களைச் சிதறின; உடலைச் சிந்தின;
கரங்களை கழல்களை ஒடியக் காதின
குரங்கு எனப் பெயர் கொடு திரியும் கூற்றமே. 6.18.45

சில குரங்குகளின் வீரச் செயல்

சுடர் தலை நெடும் பொறி சொரியும் கண்ணன
அடர்த்தலை நெடுமரம் அற்ற கையன
உடர்த்தலை வயிரம் வேல் உருவ உய்த்தவர்
மிடற்றினைக் கடித்து உடன் விளிந்து போவன. 6.18.46

கரடிப்படை அரக்கரின் யானைப்படையை அழித்தல்

அடர்ந்தன கிரிகளை அசனி ஏறு எனத்
தொடர்ந்தன மழைபொழி தும்பிக் கும்பங்கள்
இடந்தன மூளைகள் இனிதின் உண்டன
கடந்தன பசித்தழல் கரடி காதுவ. 6.18.47

வானரப்படை அரக்கர்களின் நால்வகைப் படைமேலும் தாவிச் சென்று அழித்தல்

கொலை மதக் கரியன குதிரை மேலன
வல மணித் தேரன ஆளின் மேலன
சிலைகளின் குடுமிய சிரத்தின் மேலன
மலைகளின் பெரியன குரங்கு வாவுவ. 6.18.48

குரங்குச் சேனையில் குருதி ஆறு பெருகி ஓடுதல்

தண்டு கொண்டு அரக்கர் தாக்கத் தகர்ந்து உகு தலைகள் தள்ளி,
துண்டங்களாக வாளில் துணித்த பேர் உடலைத் தூவிக்
கொண்டு எழும் அலைகேளாடும் குரக்கு இனப் பிணத்தின் குப்பை
மண்டு வெங் குருதியாறு அம் மறிகடல் மடுத்த மாதோ. 6.18.49

அனுமனால் அரைப்புண்ட அரக்கர் சேனையின் நிலை

பனி வென்ற பதாகை என்றும், பல் உளைப் பரிமா என்றும்,
தனு என்றும், வாளி என்றும், தண்டு என்றும், தனிவேல் என்றும்,
சின வென்றி மதமா என்றும், தேர் என்றும், தரெிந்தது இல்லை
அனுமன் கை வயிரக் குன்றால் அரைப் புண்ட அரக்கர் தானை. 6.18.50

அங்கதனால் அழிந்த அரக்கர் சேனை

பொங்கு தேர், புரவி, யானை, பொரு கழல் நிருதர், என்னும்
சங்கையும் இல்லா வண்ணம், தன் உளே தழுவி, கூற்றம்,
‘எங்கு உள, உயிர்? ‘என்று எண்ணி, இணைக் கையால் இளைத்தது என்ப
அங்கதன் மரம் கொண்டு எற்ற, அளறு பட்டு அழிந்த தானை. 6.18.51

முனிவர் போரைக் கண்டு வியத்தல்

தாக்கிய திசைகள் தோறும் தலைத்தலை மயங்கி, தம்மில்
நூக்கிய களிறும், தேரும், புரவியும், நூழில் செய்ய,
ஆக்கிய செருவை நோக்கி, அமரரோடு அசுரர் போரைத்
தூக்கினர் முனிவர், ‘என்னே? இதற்கு அது தோற்கும் ‘என்றார். 6.18.52

அரக்கரால் நிலைகெட்ட வானரரை வானர வீரர் தடுத்துக் காத்தல்

எடுத்தது நிருதர் தானை; இரிந்தது குரங்கின் ஈட்டம்;
தடுத்தனர் முகங்கள் தாங்கி, தனித்தனி தலைவர் தள்ளி
படுத்தனர்; அரக்கர் வேலை பட்டது; படவும் பாரார்
கடுத்தனர்; கடுத்த பின்னும், காத்தனர் கவியின் வீரர். 6.18.53

நீலன் போர்த்திறம்

சூலமும் மழுவுந் தாங்கித் தோள் இரு நான்கும் தோன்ற,
மூலம் வந்து உலகை உண்ணும் உருத்திர மூர்த்தி என்ன,
நீலன் நின்றுழியே நின்றான்; நிரந்தரம், கணங்கேளாடும்,
காலன் என்று ஒருவன், யாண்டும் பிரிந்திலன், பாசக் கையான். 6.18.54

குமுதன் போர்த்திறன்

“காற்று அலன்; புனலோ அல்லன்; கனல் அல்லன்; இரண்டு கையால்,
ஆற்றலன், ஆற்று கின்ற அருஞ் சமம் இதுவே ஆகில்,
ஏற்றம் என் பலவும் சொல்லி? என்பதம் இழந்தேன் ‘‘ என்னாக்
கூற்றமும் குலுங்கி அஞ்ச, வெம் கதக் குமுதன் கொன்றான். 6.18.55

இடபன் போர்த்திறம்

மறிகடல் புடைசூழ் வைப்பின் மானவன் வாளி போன
செறிபணை மரமே நின்ற, மரங்களில்; தரெியச் செப்பும்
குறி உடை மலைகள் தம்மில் குலவரைக் குலமே கொள்ளா,
எறிதலோடு அறைதல் வேட்ட, இடவன் அன்று இடந்து இலாத. 6.18.56

சாம்பவன் போர்த்திறம்

‘வாம் பரி, மதமா, மான் தேர், வாள் எயிற்று அரக்கர், மாயப்
பாம்பினும் வெய்யோர், சாலப் படுகுவர்; பயம் இன்று இன்றே
தூம்பு உறழ் குருதி மண்ட, தொடர் நெடு மரங்கள் சுற்றிச்
சாம்பவன் கொல்ல, சாம்பும் என்று கொண்டு அமரர் ஆர்த்தார் 6.18.57

பனசன் படைக்கடலைக் கலக்குதல்

பொருங் குலப் புரவி ஆன திரைகளும், கலம் பொன் தேரும்,
இருங்களி யானை ஆன மகரமும், இரியல் போக,
நெருங்கிய படைகள் ஆன மீன் குலம் நெரிந்து சிந்த,
கருங்கடல் கலக்கும் மத்தின் பனசனும் கலக்கிப் புக்கான். 6.18.58

மயிந்தன் முதலிய வானரவீரரின் போர்

மயிந்தனும் துமிந்தன் தானும், மழைக் குலம் கிழித்து, வானத்து
உயர்ந்து எழும் எருவை வேந்தர் உடன் பிறந்தவரை ஒத்தார்;
கயம் குடைந்து ஆடும் வீரக் களிறு ஒத்தான், கவயன்; காலின்
பெயர்ந்திலன், உற்றது அல்லால், கேசரி பெரும் போர் பெற்றான். 6.18.59

அரக்கர் சரிய இந்திரசித்துப் போர் செய்யத் தொடங்குதல்

பெரும் படைத் தலைவர் யாரும் பெயர்ந்திலர், பிணத்தின் குப்பை
வரம்பு இல பரப்பி ஆர்த்து மலைகின்ற பொழுதின் வந்துற்று,
இரிந்தன கவியும் கூடி எடுத்தன; எடுத்தலோடும்,
சரிந்தது நிருதர் தானை; தாக்கினன் அரக்கன், தானே. 6.18.60

இந்திரசித்து நாண் தறெித்தல்

பூண் எறிந்த குவடு அனைய தோள்கள்
இருபுடை பரந்து உயர அடல்வலித்
தூண் எறிந்து அனைய விரல்கள் கோதையொடு
ஒரு தொழில்பட சுவடு எறிந்தது
சேண் எறிந்துநிமிர் திசைகேளாடு மலை செவிடு
எறிந்து உடைய மிடல்வலோன்
நாண் எறிந்து, முறைமுறை தொடர்ந்து கடல்
உலகம் யாவையும் நடுக்கினான். 6.18.61

இந்திரசித்து அம்பு எய்தல்

சிங்க ஏறு கடல்போல் முழங்கி, நிமிர் தேர்
கடாய் நெடிது செல்க எனா,
அங்கதாதியர் அனுங்க, வானவர்கள் அஞ்ச
வெஞ்சின அனந்தன் மாச்
சங்க பால குளிகாதி வால் எயிறு
தந்த தீ விடம் உமிழ்ந்து சார்
வெங்கண் நாகம் என, வேகமாய், உருமு வெள்க,
வெங்கணைகள் சிந்தினான். 6.18.62

இந்திரசித்தோடு வானரர் போர் (8195-8200)

சுற்றும் வந்து, கவிவீரர் வீசிய சுடர்த்
தடங்கல் வரை, தொல்மரம்
இற்று எறிந்து பொடியாய் உதிர்ந்தன;
எழுந்து சேணிடை இழிந்தபோல்
வெற்றி வெங்கணை படப் படத் தலைகள்
விண்ணினூடு திசைமீது போய்
அற்று எழுந்தன விழுந்து, மண்ணிடை
அழுந்து கின்றன அனந்தமால். 6.18.63

சிலைத் தடம்பொழி வயக் கடும் பகழி
செல்ல, ஒல்கினர், சினத்தினால்
உலைத்து எறிந்திட எடுத்த குன்று
தொறு உடல்பரங்கள் கொடு ஒதுங்கினார்,
நிலைத்து நின்று, சினம் முந்து செல்ல,
எதிர் சென்று சென்று, உற நெருக்கலால்,
மலைத் தடங்கெளாடு உரத்தலம்
கழல, ஊடுசென்ற பல வாளியே. 6.18.64

முழுத்தம் ஒன்றில், ஒரு வெள்ள வானரம்
முடிந்து மாள்வன, தடிந்துபோய்,
கழுத்த, கைய, நிமிர்கால, வால, பல
கண்டமானபடி கண்டு, நேர்
எழுத் தொடர்ந்த படர் தோள்களால் எறிய,
எற்ற, அற்றன எழுந்துமேல்,
விழுத்த பைந் தலைய வேணு மால் வரைகள்
வீசி வீசி, உடன் வீழுமால் 6.18.65

அற்ற பைந் தலை அரிந்து சென்றன
அயில் கடுங்கணை வெயில்கள்போல்
புற்று அடைந்த கொடு வெவ் அராவின்
நெடு நாகலோகம் அது புக்கவால்;
வெற்ற வெள்ளிடை விரிந்து போவது ஒரு
மேடு பள்ளம் வெளி இன்மையால்
உற்ற செங்குருதி வெள்ளம், உள்ளதிரை
ஓத வேலையொடும் ஒத்ததால். 6.18.66

விழிக்குமேல் விழிய, நிற்கின் மார்பிடைய
மீளுமேல் முதுக, மேனிய
கழிக்குமேல், உயர ஓடுமேல் நெடிய
கால, வீசின் நிமிர்கைய, வாய்த்
தழெிக்குமேல் அகவும் நாவ, சிந்தையின்
உன்னுமேல் சிகரம் யாவையும்
பழிக்கும் மேனிய குரக்கின்மேல், அவன்
விடும்கொடும் பகழி பாயுமே. 6.18.67

மொய் எடுத்தகணை மாரியால், இடைமுடிந்தது
ஒன்றும் முறை கண்டிலார்;
எய்விடத்து எறியும் நாணின் ஓசையலது
யாதும் ஒன்று செவி உற்றிலார்;
‘மெய் எடுத்தகவி வெள்ளம் யாவையும்
விழுந்துபோன ‘எனும் விம்மலால்
கய் எடுத்தன குரங்கின் ஓடும் முறை கண்டு
தேவர்கள் கலங்கினார். 6.18.68

சுக்கிரீவன் எதிர்த்தல்

கண்ட வானரம் அனந்தகோடி முறை
கண்டமானபடி கண்ட அக்
கண்டன், மாறு ஒருவர் இன்மை கண்டு,
கணைமாறினான், விடுதல் இன்மையான்
கண்ட காலையில், விலங்கினான் இரவி
காதல், காதுவது ஓர் காதலால்
கண்ட கார் சிதைய மீது உயர்ந்து ஒளிர்
மராமரம் சுலவு கையினான். 6.18.69

சுக்கிரீவன் மராமரங்கொண்டு அரக்கர் படைக்கடலைக் கலக்குதல்

உடைந்து, தன்படை உலைந்து சிந்தி,
உயிர் ஒல்க, வெல்செரு உடற்றலால்,
கடைந்து தெள் அமுது கொள்ளும் வண்ணம்
என மேல்நிமிர்ந்தது ஓர் கடுப்பினான்
இடைந்து சென்றவனை எய்தி, எய்த அரிய
காவல்பெற்று இகல் இயற்றுவான்
மிடைந்து நின்ற படை வேலை கால்தளர
வீசினான்; நிருதர் கூசினார். 6.18.70

சுக்கிரீவன் கையிலிருந்த மரத்தை இந்திரசித்து பொடியாக்குதல்

சுற்றி நின்றபடை சிந்தி ஓட, ஓர் மராமரம்
கொடு துகைத்துளான்
வெற்றி கண்டு, ‘வலிநன்று, நன்று! ‘என வியந்து,
வெங்கணை தரெிந்து, அவன்
நெற்றியின்தலை இரண்டு, மார்பிடை ஒர்
அஞ்சு, நஞ்சு என நிறுத்தவன்
பற்றி வந்த மரம் வேறு வேறுற நுறுக்கி,
நுண்பொடி பரப்பினான். 6.18.71

அனுமன் வந்து வீசிய குன்றை இந்திரசித்துப் புழுதியாக்குதல்

அக் கணத்து, அனுமன் ஆலகாலம் எனலாயது
ஓர் வெகுளியாய் அவண்
புக்கு, அனைத்து உலகமும் குலுங்க நிமிர்
தோள்புடைத்து உருமு போல் உறா,
‘இக் கணத்து அவன் இறக்கும் ‘என்பது ஒரு
குன்று எடுத்து, மிசை ஏவினான்;
உக்கது அக்கிரி, சொரிந்து வாளிகளின்,
ஊழ் இலாத சிறு பூழியாய். 6.18.72

இந்திரசித்து அனுமனை நோக்கிக் கூறிய வீரமொழி

“நில்லடா! சிறிது நில்லடா! உனை நினைத்து
வந்தனென் முனைக்கு நான்
வில் எடாமை, நினது ஆண்மை பேசி,
உயிரோடு நின்று விளையாடினாய்;
கல் அடா; நெடு மரங்கேளா இருகரத்தினேன்
வலி கடப்ப? நீ
சொல்லடா! ‘‘ என இயம்பினான் இகல் அரக்கன்;
ஐயன் இவை சொல்லினான். 6.18.73

அனுமன் கூறும் மறுமொழி

வில் எடுக்க உரியார்கள் வெய்யசில வீரர்,
இங்குமுளர்; மெல்லியோய்!
கல் எடுக்க உரியானும் நின்றனன்; அது இன்று
நாளையிடை காணலாம்;
எல் எடுத்தபடை இந்திராதியர் உனக்கு
இடைந்து உயிர்கொடு ஏகுவார்;
புல் எடுத்தவர்கள் அல்லம்; வேறுசில போர்
எடுத்து, எதிர் புகுந்துளேம். 6.18.74

யாரொடு போர் செய்கின்றாய் என இந்திரசித்தை வினவுதல்

‘என்னோடே பொருதியோ? அது அன்று எனின்
இலக்குவப் பெயரின் எம்பிரான்
தன்னோடே பொருதியோ? உன் உந்தைதலை
தள்ள நின்ற தனிவள்ளலாம்
மன்னோடே பொருதியோ? உரைத்தது
மறுக்கிலோம் ‘என வழங்கினான்
பொன்னோடே பொருவின் அல்லது ஒன்றொடு
பொருப்படா உயர் புயத்தினான் 6.18.75

இந்திரசித்தின் தன் மேம்பாட்டுரை (8208-8209)

எங்கு நின்றனன் இலக்குவப் பெயர்
அவ் ஏழை, எம்பி அதிகாயனாம்
சிங்கம் வந்தவனை வென்று, தன்னுயிர்
எனக்கு வைத்தது ஓர் சிறப்பினான்?
அங்கு அவன்தனை மலைந்து கொன்று, முனிவு
ஆற வந்தனன்; அது அன்றியும்,
உங்கள் தன்மையின் அடங்குமோ, உலகு ஒடுக்கும்
வெம் கணை தொடுக்கினே? 6.18.76

யாரும் என்படைஞர் எய்தல் இன்றி அயல் ஏக,
யானும், இகல் வில்லும், ஓர்
தேரின் நின்று, உமை அடங்கலும் திரள் சிரம்
துணிப்பென்; இது திண்ணமால்;
வாரும்; உங்களுடன் வானுேளார்களையும்
மண்ணுேளாரையும் வரச் சொலும்;
போரும், இன்று ஒரு பகல் கண்ணே பொருது,
வெல்வென்; வென்று அலது போகலேன். 6.18.77

இந்திரசித்தும் அனுமனும் போர்செய்தல்

என்று, வெம்பகழி, ஏழுநூறும், இருநூறும்,
வெஞ்சிலை கொடு ஏவினான்
குன்று நின்று அனைய வீர மாருதிதன்
மேனிமேல் அவை குழுக்களாய்ச்
சென்று சென்று உருவலோடும், வாள்
எயிறு தின்று சீறி, ஒரு சேமவன்
குன்று நின்றது பறித்து எடுத்து, அவனை எய்தி,
நொய்தின் இது கூறினான். 6.18.78

அனுமன் இந்திரசித்தின் மேல் மலையை எறிதல்

தும்பி என்று உலகின் உள்ள யாவை அவை ஏவையும்
தொகுபு, துள்ளு தாள்
வெம்பு வெஞ்சின மடங்கல் ஒன்றின் வலிதன்னை
நின்று எளிதின் வெல்லுமோ?
நம்பி தம்பி, எனது எம்பிரான், வருதுணைத்
தரிக்கிலை நலித்தியேல்
அம்பின் முந்தி உனது ஆவி உண்ணும் இது; கா,
அடா! சிலைவல் ஆண்மையால் 6.18.79

அனுமன் எறிந்த மலை இந்திரசித்தின் மார்பில் பட்டுத் துகளாதல்

செருப் பயிற்றிய தடக்கை ஆளி செல விட்ட குன்று,
திசை யானையின்
மருப்பை உற்ற திரள்தோள் இராவணன்
மகன்தன் மார்பின், உயர் வச்சிரப்
பொருப்பை உற்றது ஓர் பொருப்பு எனக் கடிது
ஒடிந்து இடிந்து, திசைபோயதால்;
நெருப்பை உற்றது ஓர் இரும்பு கூடம் உற,
நீறுபட்டது நிகர்த்ததால் 6.18.80

இந்திரசித்து அனுமன்மேல் அம்புகளை எய்தல்

விலங்கல்மேல் வர விலங்கல் வீசிய
விலங்கல் நீறு படு வேலையில்,
சலம் கைமேல் நிமிர, வெஞ்சினம் திருகி,
வஞ்சன்மேல் நிமிர் தருக்கினான்,
வலம் கொள் பேர் உலகம் மேருவோடு உடன்
மறிக்கும் மாருதிதன் வாசம் நாறு
அலங்கல் மார்பும் உயர் தோளும் ஊடு உருவ,
ஆயிரம் சரம் அழுத்தினான். 6.18.81

அனுமன் தளர நீலன் இந்திரசித்தை எதிர்த்தல்

ஒன்று போல்வன ஓராயிரம் பகழி
ஊடுபோய் உருவ, ஆடகக்
குன்று காலெறிய மெய்குலைந்து இடை
குலுங்க நின்றனைய கொள்கையான்,
மன்றல் நாறு தட மேனிமேல் உதிர
வாரி சோரவரும் மாருதி,
நின்று தேறும் அளவின்கண், வெம் கண் அடல்
நீலன் வந்து இடை, நெருக்கினான். 6.18.82

நீலன் எறிந்த மலையை இந்திரசித்து அம்பினால் பொடி செய்தல்

நீலன் நின்றது ஒரு நீலமால்வரை நெடுந்தடக்கையின் இடந்து, நேர்
மேல் எழுந்து, எரி விசும்பு செல்வது ஒரு வெம்மையோடு வர வீசலும்
சூலம் அந்தகன் எறிந்தது அன்னது துணிந்து சிந்த, இடை சொல்லுறும்
காலம் ஒன்றும் அறியாமல், அம்புகொடு கல்லினான், நெடிய வில்லினான்.83

இந்திரசித்தின் அம்பு துளைக்க நீலன் நடுங்குதல்

ஊகம் எங்கும் உயிரோடு நின்றனவும் ஓட,
வானவர்கள் உள்ளமும்
மோகம் எங்கும் உளவாக, மேருவினும்
மும்மடங்கு வலி திண்மை சால்
ஆகம் எங்கும் வெளி ஆக, வெங்குருதி
ஆறு பாய, அனல் அஞ்சுவாய்
நாக வெங்கண் நகு, வாளி பாய்தொறும்
நடுங்கினான் மலை பிடுங்கினான். 6.18.84

அங்கதன் வந்து இந்திரசித்தின்மேல் மலையை எறிதல்

‘மேரு, மேரு ‘என, ‘அல்ல, அல்ல ‘என
வேரினோடு நெடுவெற்பு எலாம்,
மாரின் மேலும் உயர்தோளின் மேலும் வர,
வாலி காதலன் வழங்கினான்;
சேருமே அவை, தனுக் கைநிற்க? எதிர்
செல்லுமே? கடிது செல்லினும்
பேருமே? கொடிய வாளியால் முறி
பெறுக்கலாவகை நுறுக்கினான். 6.18.85

அங்கதன் இந்திரசித்தின் அம்பினால் மயங்கி வீழ்தல்

நெற்றி மேலும், உயர் தோளின் மேலும்,
நெடுமார்பின் மேலும், நிமிர் தாளினும்
புற்றினூடு நுழை நாகம் அன்ன,
புகை வேக வாளிகள் புகப்புக,
தெற்றி வாள் எயிறு தின்று, கைத் துணை
பிசைந்து, கண்கள் எரி தீ உக,
வற்றி ஓடு உதிர வாரி சோர்வுற, மயங்கினான்,
நிலம் முயங்கினான். 6.18.86

வானரசேனையின் சிதைவு கண்ட இலக்குவன் சினந்து சொல்லத் தொடங்கியது

மற்றை வீரர்கள்தம் மார்பின்மேலும், உயர்
தோளின்மேலும், மழை மாரிபோல்
கொற்ற வெங்கணை உலக்க, எய்தவை
குளிப்ப நின்று, உடல் குலுங்கினார்;
இற்று அவிந்தன, பெரும் பதாதி; உயிர்
உள்ள எங்கணும் இரிந்த; அப்
பெற்றி கண்டு, இளைய வள்ளல், ஒள் எரி
பிறந்த கண்ணன் இவை பேசினான். 6.18.87

இலக்குவன் சொன்னது (8220-8221)

பிழைத்தது, கொள்கை போத; பெரும்படைத் தலைவர் யாரும்
உழைத்தனர், குருதி வெள்ளத்து; உலந்ததும் உலப்பிற்று அன்றே;
அழைத்து இவன்தன்னை யானே ஆருயிர் கொளப்படாதே?
இழைத்தது பழுதே அன்றோ? வீடண! என்னச் சொன்னான். 6.18.88

‘ஐய! ஈது அன்னதே யால்; ஆயிரங் கோடித் தேவர்
எய்தினர்; எய்தினார்கள் ஈடுபட்டு இரிந்தது அல்லால்,
செய்திலர் இவனை ஒன்றும்; நீ இது தீர்ப்பின் அல்லால்,
உய்திறன் உண்டோ, வேறு இவ் உலகினுக்கு உயிரோடு ‘என்றான். 6.18.89

இந்திரசித்து இலக்குவனை ஒற்றனால் துணிதல்

என்பது சொல்லக் கேட்ட, இந்திர வில்லினோடும்
பொன் பொரு மேகம் ஒன்று வருவது போல்கின்றானை,
முன்பனை, முன்பு நோக்கி, ‘இவன் கொலாம், பரதன் முன்னோன்
தன் பெருந் தம்பி? ‘என்றான் ஆம் எனச் சாரன் சொன்னான். 6.18.90

அரக்க வீரர் இலக்குவனை எதிர்த்தல்

தீயவன் இளவல் தன்மேல் செல்வதன்முன்னம், ‘செல்க! ‘என்று
ஏயினர் ஒருவர் இன்றி, இராக்கதத் தலைவர், ‘எங்கள்
நாயகன் மகனைக் கொன்றாய்! நண்ணினை நாங்கள் காண;
போய் இனி உய்வது எங்கே? ‘ என்று, எரி விழித்துப் புக்கார். 6.18.91

இலக்குவன் எதிர்த்த அரக்கரை அம்பு கொண்டழித்தல்

கோடி நூறு அமைந்த கூட்டத்து இராக்கதர், கொடித்திண் தேரும்,
ஆடல் மாக் களிறும், மாவும், கடாவினர் ஆர்த்து மண்டி
மூடினார்; மூடினாரை முறை முறை துணித்து, வாகை
சூடினான், இராமன் பாதம் சூடிய தோன்றல் தம்பி. 6.18.92

அரக்கர் படை அழிதல்

அதிர்ந்தன உலகம் ஏழும்; அனல் பொறி அசனி என்னப்
பிதிர்ந்தன; மலையும் பாரும் பிளந்தன; பிணத்தின் மேன்மேல்
உதிர்ந்தன, தலைகள்; மண்டி ஓடின உதிர நீத்தம்
விதிர்ந்தன, அமரர் கைகள்; விளைந்தது கொடிய வெம்போர். 6.18.93

இலக்குவன் விட்ட அம்புகளின் வீரச்செயல்கள் (8226-8227)

விட்டனன் விசிகம் வேகம் விடாதன வீரன், மார்பில்
பட்டன; உலகம் எங்கும் பரந்தன பதாகைக் காட்டைச்
சுட்டன; துரக ராசி துணித்தன பனைக் கைம் மாவை
சுட்டன; கூற்றம் என்ன அடர்ந்தன; அனந்தம் அம்மா. 6.18.94

உலக்கின்றார்; உலக்கின்றாரை எண்ணுவான் உற்ற விண்ணோர்
கலக்குறு கண்ணர் ஆகி, கடையுறக் காணல் ஆற்றார்
விலக்கரும் பகழி மாரி விளைக்கின்ற விளைவை உன்னி
இலக்குவன் சிலையொடே கொல், எழுமழை பயின்றது என்றார். 6.18.95

இலக்குவன் அம்பு யானைகளையும் குதிரைகளையும் கொல்லுதல்

ஓளி ஒண் கணைகள் தோறும் உந்தின வேழம், ஒற்றை
வாளியின் தலைய பாரின் மறிவன, மலையில் சூழ்ந்த;
ஆளியின் துப்பின் வீரர் பொருகளத்து, ஆர்த்த வாளித்
தூளியின் தொகைய, வள்ளல் சுடுகணைத் தொகையும் அம்மா! 6.18.96

இலக்குவன் அம்புகளால் காலாள் வீரர் பட்டமை (8229-8230)

‘பிறவியில் பெரிய தோற்றப் பிசிதம் உண்டு, உழலும் பெற்றிச்
சிறையவே ‘என்ன நோக்கித் தேவரும் திகைக்கத் தோற்றி
துறைதொறும் தொடர்ந்து, வானம் வெளி அறத் துவன்றி, வீழும்
பறவையின் பெரிய, பட்டார் பிணத்தின்மேல் பகழி மாதோ. 6.18.97

திறம்தரு கவியின் சேனை, செறிகழல் நிருதன் சீற,
இறந்தன கிடந்த வெள்ளம் எழுபதின் பாதி மேலும்
பறந்தலை முழுதும் பட்ட வஞ்சகர் படிவம் மூட,
மறைந்தன; குருதி ஓடி, மறிகடல் மடுத்த மாதோ. 6.18.98

அரக்கர் அழிவு

கை அற்றார்; கால்கள் அற்றார்; கழுத்து அற்றார்; கவசம் அற்றார்
மெய் அற்றார் குடர்கள் சோர, விசை அற்றார் விளிவும் அற்றார்;
மையல் தார்க் கரியும், தேரும், வாசியும் மற்றும் அற்றார்
உய்யச் சாய்ந்து ஓடிச் சென்றார், உயிர் உள்ளார் ஆகி உள்ளார். 6.18.99

இந்திரசித்து இலக்குவனெதிர் வருதல்

வற்றிய கடலுள் நின்ற மலை என, மருங்கின் யாரும்
சுற்றினர் இன்றி, தோன்றும் தசமுகன் தோன்றல், துள்ளித்
தறெ்றின புருவத்தோன் தன் மனமெனச் செல்லும் தேரான்,
உற்றனன், இளைய கோவை; அனுமனும் உடன் வந்து உற்றான். 6.18.100

இலக்குவன் அனுமன் தோள்மேல் ஏறி இந்திரசித்தோடு பொருதல்

‘தோளின்மேல் ஆதி ‘ஐய! ‘ என்று அடி தொழுது நின்றான்;
ஆளிபோல் மொய்ம்பினானும் ஏறினன்; அமரர் ஆர்த்தார்;
காளியே அனைய காலன் கொலை அன, கனலின் வெய்ய,
வாளிமேல் வாளி தூர்த்தார், மழையின்மேல் மழை வந்தன்னார். 6.18.101

நாணொலிகளின் விளைவும் அம்புகளின் செயலும்

இடித்தன சிலையின் நாண்கள்; இரிந்தன, திசைகள் இற்று;
வெடித்தன, மலைகள் விண்டு; பிளந்தது; விசும்பு; மேன்மேல்
பொடித்த, இவ் உலகம் எங்கும்; பொழிந்தன பொறிகள் பொங்கி;
கடித்தன, கணைகேளாடு கணைகள்தம் அயில்வாய் கவ்வி. 6.18.102

அம்புகளின் செயலைக்கண்ட உலகநிலை

அம்பினோடு அம்பு ஒன்று ஒன்றை அறுக்க, மற்று அறுக்கிலாத,
வெம் பொறி கதுவ, விண்ணில் வெந்தன, கரிந்து வீழ்ந்த;
உம்பரும் உணர்வு சிந்தி ஒடுங்கினார்; உலகம் யாவும்
கம்பம் உற்று உலைந்த; வேலைக் கலம் எனக் கலங்கிற்று அண்டம். 6.18.103

இருவரூர்திகளும் சாரிதிரிதலால் உண்டாய நிலைமை

அரி இனம் பூண்ட தேரும், அனுமனும், அனந்த சாரி
புரிதலின், இலங்கை ஊரும் திரிந்தது; புலவரேயும்,
எரிகணைப் படலம் மூட ‘இலர், உளர் ‘என்னும் தன்மை
தரெிகிலர்; செவிடு செல்லக் கிழிந்தன திசைகள் எல்லாம். 6.18.104

இருவர் பொருஞ் செயலைத் தேவர்களும் காண இயலாமை (8237-8238)

‘நாண் பொரு வரிவில் செங்கை, நாம நூல் நவின்ற கல்வி
மாண்பு ஒரு வகையிற்று அன்று; வலிக்கு இலை அவதி; மானம்
சேண் பெரிது ‘என்று சென்ற தேவரும், ‘இருவர் செய்கை
காண்பு அரிது ‘என்று, காட்சிக்கு ஐயுறவு எய்திற்று அன்னோ! 6.18.105

‘என் செய்தார்! என் செய்தார்! ‘என்று இயம்புவார்; ‘இனைய தன்மை
முன் செய்தார் யாவர்? ‘என்பார்; ‘முன் ஏது? பின் ஏது? ‘என்பார்;
கொன்செய் தார் வீரர் இன்ன திசையினார் என்றும் கொள்ளார்;
பொன்செய் தார் மவுலி விண்ணோர் உணர்ந்திலர் புகுந்தது ஒன்றும். 6.18.106

இருவரும் விற்போர் வீரங்காட்டுதல் (8239-8246)

ஆயிர கோடி பல்லம், அயில் எயிற்று அரக்கன் எய்தான்;
ஆயிர கோடி பல்லத்து அவை துணித்து அறுத்தான் ஐயன்;
ஆயிர கோடி நாகக் கணை தொடுத்து அரக்கன் எய்தான்;
ஆயிர கோடி நாகக் கணைகளால் அறுத்தான் அண்ணல். 6.18.107

கோட்டியின் தலைய கோடி கோடி அம்பு அரக்கன் கோத்தான்
கோட்டியின் தலைய கோடி கோடியால் குறைத்தான், கொண்டல்
மீட்டு ஒரு கோடி கோடி வெஞ்சினத்து அரக்கன் விட்டான்;
மீட்டு, ஒரு கோடி கோடி கொண்டு, அவை தடுத்தான், வீரன். 6.18.108

கங்க பத்திரம் ஓர் கோடி கை விசைத்து அரக்கன் எய்தான்;
கங்க பத்திரம் ஓர் கோடி கணை தொடுத்து இளவல் காத்தான்;
திங்களின் பாதி கோடி, இலக்குவன் தரெிந்து விட்டான்
திங்களின் பாதி கோடி தொடுத்து, அவை அரக்கன் தீர்த்தான். 6.18.109

கோரையின் தலைய கோடி கொடுங்கணை அரக்கன் கோத்தான்
கோரையின் தலைய கோடி தொடுத்து அவை இளவல் எய்தான்
பாரையின் தலைய கோடி பரப்பினான் இளவல் பல்கால்
பாரையின் தலைய கோடி அரக்கனும் பதைக்க எய்தான். 6.18.110

தாமரைத் தலைய வாளி, தாமரைக் கணக்கின் சார்ந்த
தாம்வரத் துரந்து, முந்தி, தசமுகன் தனயன் ஆர்த்தான்
தாமரைத் தலைய வாளி, தாமரைக் கணக்கின் சார்ந்த
தாம்வரத் தடுத்து வீழ்த்தான், தாமரைக் கண்ணன் தம்பி. 6.18.111

வச்சிரப் பகழி கோடி வளை எயிற்று அரக்கன் எய்தான்;
வச்சிரப் பகழி கோடி துரந்து, அவை அனகன் மாய்த்தான்;
முச்சிரப் பகழி கோடி இலக்குவன் முடுக விட்டான்;
முச்சிரப் பகழி கோடி தொடுத்து அவை தடுத்தான் முன்பன். 6.18.112

அஞ்சலி அஞ்சு கோடி தொடுத்து, இகல் அரக்கன் எய்தான்;
அஞ்சலி அஞ்சு கோடி தொடுத்து, அவை அறுத்தான் ஐயன்;
குஞ்சரக் கன்னம் கோடி இலக்குவன் சிலையில் கோத்தான்;
குஞ்சரக் கன்னம் கோடி தொடுத்து, அவை அரக்கன் கொய்தான் 6.18.113

எய்யவும், எய்த வாளி விலக்கவும், உலகம் எங்கும்
மொய்கணைக் கானம் ஆகி முடிந்தது; முழங்கு வேலை
பெய்கணைப் பொதிகளாலே வளர்ந்தது; பிறந்த கோபம்
கைம் மிகக் கனன்றது அல்லால், தளர்ந்திலர், காளை வீரர். 6.18.114

இந்திரசித்து அனுமன்மேலும் இலக்குவன் கவசத்தின்மேலும் அம்பு சொரிதல்

வீழியின் கனிபோல் மேனி கிழிபட, அனுமன் வீரச்
சூழ் எழு அனைய தோள்மேல் ஆயிரம் பகழி தூவி,
ஊழியின் நிமிர்ந்த செந்தீ உருமினை உமிழ்வது என்ன
ஏழ் இருநூறு வாளி இலக்குவன் கவசத்து எய்தான். 6.18.115

இந்திரசித்தின் வில்லாண்மையை விண்ணவரும் முனிவரும் வியத்தல்

‘முற்கொண்டான் அரக்கன் ‘, என்னா,
முளரிவாள் முகங்கள், தேவர்,
பின்கொண்டார்; இளைய கோவைப் பியல்
கொண்டான் பெருந்தோள் நின்று,
கல்கொண்டு ஆர் கிரியின் நாலும்
அருவிபோல், குருதி கண்டார்,
‘வில் கொண்டான் இவனே! ‘என்னா,
வெருக்கொண்டார், முனிவர் மேலோர். 6.18.116

இலக்குவன் இந்திரசித்தின் கவசத்தில் அம்பெய்தல்

சீறும் நூல் தரெிந்த சிந்தை இலக்குவன், சிலைக்கை வாளி
நூறுநூறு ஏவி, வெய்தின், நுடங்கு உளை மடங்கல் மாவும்
வேறு வேறு இயற்றி, வீரக் கொடியையும் அறுத்து வீழ்த்தி,
ஆறு நூறு அம்பு செம்பொன் கவசம் புக்கு அழுந்த எய்தான். 6.18.117

இந்திரசித்தின் உடம்பில் இரத்த வெள்ளம் பெருகுதல்

காள மேகத்தைச் சார்ந்த கதிரவன் என்னக் காந்தி,
தோளின்மேல் மார்பின் மேலும், சுடர்விடு கவசச் சூழல்
நீளு நீர்ப் பவள வல்லி நிரை ஒளி நிமிர்வ என்ன,
வாளி வாய் தோறும் வந்து பொடித்தன, குருதி வாரி. 6.18.118

இலக்குவனது விரைந்த விற்போரை இந்திரசித்து அறியகில்லாமை

பொன் உறு தடந்தேர் பூண்ட மடங்கல் மா புரண்ட போதும்
மின் உறு பதாகையோடு சாரதி வீழ்ந்த போதும்,
தன் நிறத்து உருவ, வாளி தடுப்பு இல சார்ந்த போதும்
இன்னது என்று அறியான், அன்னான், இனையது ஓர் மாற்றம் சொன்னான். 6.18.119

இலக்குவன் வில் வீரத்தை இந்திரசித்துப் புகழ்தல்
8252. 6.18.‘அந் நரன்; அல்லன் ஆகில் நாரணன்; அனையன் அன்றேல்
பின் அரன் பிரமன் என்று பேசினும் பிறந்து வாழும்
மன்னர் நம் பதியின் வந்து வரிசிலை பிடித்த கல்வி
இந்நரன் தன்னோடு ஒப்பார் யாருளர் ஒருவர்? ‘என்றான். 6.18.120

இந்திரசித்து வேறு தேர் ஏறுதல்

வாயிடை நெருப்புக் கால உடல் நெடுங் குருதி வார
தீயிடை நெய் வார்த்தன்ன வெகுளியான் உயிர் தீர்ந்தாலும்
ஓய்விடம் இல்லான் வல்லை ஓர் இமை ஒடுங்கா முன்னம்
ஆயிரம் புரவி பூண்ட ஆழி அம் தேரன் ஆனான். 6.18.121

இந்திரசித்து அம்பு எய்தல்

ஆசை எங்கணும் அம்பு உக வெம்பு போர்
ஓசை விம்ம உருத்திரரும் உடல்
கூச ஆயிர கோடி கொலைக் கணை
வீசி விண்ணை வெளி இலது ஆக்கினான். 6.18.122

இலக்குவன் அம்பு எய்தல்

அத் திறத்தில் அனகனும் ஆயிரம்
பத்தி பத்தியின் எய்குவ பல்கணை
சித்திரத்தினில் சிந்தி இராவணன்
புத்திரற்கும் ஓர் ஆயிரம் போக்கினான். 6.18.123

இந்திரசித்து இலக்குவன்மேல் அம்பு எய்தல்

ஆயிரம் கணை பாய்தலும் ஆற்ற அருங்
காய் எரித்தலை நெய் எனக் காந்துறா
தூயவன் சுடர் சூழ் ஒளி நெற்றியில்
தீய வெங்கணை நூறு செலுத்தினான். 6.18.124

இலக்குவன் அம்பு எய்தல்

நெற்றி மேல் ஒரு நூறு நெடுங் கணை
உற்ற போதினும் யாதும் ஒன்று உற்றிலன்
மற்று அவ் வன் தொழிலோன் மணி மார்பிடை
முற்ற வெங்கணை நூறு முடுக்கினான். 6.18.125

இந்திரசித்து இளைத்தல்

நூறு வெங் கணை மார்பில் நுழைதலின்
ஊறு சோரியொடு உள்ளமும் சோர்தர
தேறல் ஆம் துணையும் சிலை ஊன்றியே
ஆறி நின்றனன் ஆற்றலில் தோற்றிலான். 6.18.126

அனுமன் இந்திரசித்தின் தேரை உதைத்துருட்டுதல்

புதையும் நல் மணி பொன் உருள் அச்சொடும்
சிதைய ஆயிரம் பாய்பரி சிந்திட
வதையின் மற்றொரு கூற்று என மாருதி
உதையினால் அவன் தேரை உருட்டினான். 6.18.127

இந்திரசித்து பேய்கள் பூண்ட மற்றொரு தேரேறி இலக்குவன் மேல் அம்பு சொரிதல்

பேய் ஓர் ஆயிரம் பூண்டது பெய்ம் மணி
ஏய தேர் இமைப்பின் இடை ஏறினான்;
தூயவன் சுடர்த் தோள் இணை மேல் சுடர்
தீய வெங் கணை ஐம்பது சிந்தினான். 6.18.128

இந்திரசித்து ஏறிவந்த ஆயிரந்தேர்களையும் இலக்குவன் அழித்தல்

ஏறி ஏறி இழிந்தது அல்லால் இகல்
வேறு செய்திலன் வெய்யவன்; வீரனும்
ஆறு கோடி பகழியின் ஐ இரு
நூறு தேர் ஒரு நாழிகை நூறினான். 6.18.129

தேவர்களின் மகிழ்ச்சி ஆரவாரம்

ஆசி கூறினர்; ஆர்த்தனர்; ஆய்மலர்
வீசி வீசி வணங்கினர்; விண்ணவர்
ஊசல் நீங்கினர்; உத்தரிகத்தொடு
தூசு வீசினர்; நல் நெறி துன்னினார். 6.18.130

அரக்கர் வீரர் போர்க்கு முந்துதல்

அக்கணத்தின் ஒர் ஆயிரம் ஆயிரம்
மிக்க வெங் கண் அரக்கர் அவ் வீரனோடு
ஒக்க இன்ப ஒருவழி ஊணினார்
புக்கு முந்தினர் போரிடைப் பொன்றுவார். 6.18.131

எதிர்த்த அரக்கரின் இயல்பு

தேரர் தேரின் இவுளியர் செம் முகம்
காரர் காரின் இடிப்பினர் கண்டையின்
தாரர் தாரணியும் விசும்பும் தவழ்
பேரர் பேரி முழக்கு அன்ன பேச்சினார். 6.18.132

அவர்தம் போரார வாரம்

பார்த்த பார்த்த திசைதொறும் பன்மழை
போர்த்த வானம் என இடி போர்த்து எழ
ஆர்த்த ஓசையும் அம்பொடு வெம்படை
தூர்த்த ஓசையும் விண்ணினைத் தூர்த்தவால். 6.18.133

துகள் எழுதற்குரிய தேர்கள் ஓடவும் துகள் எழாமை

ஆளி ஆர்த்தன வாள் அரி ஆர்த்தன
கூளி ஆர்த்தன குஞ்சரம் ஆர்த்தன
வாளி ஆர்த்தன தேர் இவர் மண் தலம்
தூளி ஆர்த்திலதால் பிணம் துன்னலால். 6.18.134

இந்திரசித்து எய்த அம்புகளை இலக்குவன் விலக்குதல்

வந்து அணைந்தது ஓர் வாள் அரி வாவு தேர்
இந்திரன்தனை வென்றவன் ஏறினான்;
சிந்தினன் சர மாரி திசைதிசை;
அந்தி வண்ணன் ஓர் அம்பின் அகற்றினான். 6.18.135

சுற்றியிருந்த அரக்கரை இலக்குவன் அழித்தல்

சுற்றும் வந்து படர்ந்தது தொடர்ந்தவர்
எற்றுகின்றன எய்த எறிந்தன
அற்று உதிர்ந்தன; ஆயிரம் வன்தலை
ஒற்றை வெம் கணையோடும் உருண்டவால். 6.18.136

போர்க்களக் காட்சி (8269-8271)

குடர் கிடந்தன. பாம்பு என; கோள் மதித்
திடர் கிடந்தன; சிந்தின தேர்த்திரள்;
படர் கிடந்தனர் பல் படைக் கையினர்
கடர் கிடந்தன போன்ற களத்தினே. 6.18.137

குண்டலங்களும் ஆரமும் கோவையும்
கண்ட நாணும் கழலும் கவசமும்
கண்ட மாருதம் வீச தலத்து உகும்
விண் தலத்தினின் மீன் என வீழ்ந்தவால். 6.18.138

அரக்கன் மைந்தனை ஆரியன் அம்பினால்
கரக்க நூறி எதிர்பொரு கண்டகர்
சிரக் கொடுங்குவைக் குன்று திரட்டினான்
இரக்கம் எய்தி வெங்காலனும் எஞ்சவே. 6.18.139

அனுமன் விளைத்தபோர் (8272-8775)

சுற்றும் வால்கொடு; தூவும்; துகைக்கும்; விட்டு
எற்றும்; வானின் எடுத்து எறியும்; எதிர்
உற்று மோதும்; உதைக்கும்; உறுக்குமால்
கொற்ற வில்லி அன்று ஏறிய கூற்றமே. 6.18.140

பார்க்கும் அஞ்ச; உறுக்கும்; பகட்டினால்
தூர்க்கும் வேலையை; தோள்புடை கொட்டி நின்று
ஆர்க்கும்; ஆயிரம் தேர்பிடித்து அம் கையால்
ஈர்க்கும் ஐயன் அன்று ஏறிய யானையே. 6.18.141

மாவும் யானையும் வாளுடைத் தானையும்
பூவும் நீரும் புனைதளிரும் என
தூவும்; அள்ளிப் பிசையும்; துகைக்குமால்
சேவகன் தரெிந்து ஏறிய சீயமே. 6.18.142

உரகம் பூண்ட உருளை பொருந்தின
இரதம் ஆயிரம் ‘ஏ ‘எனும் மாத்திரை
சரதம் ஆகத் தரைப்படச் சாடுமால்
வரதன் அன்று உவந்து ஏறிய வாசியே. 6.18.143

மயங்கி வீழ்ந்த வானரத் தலைவர் தெளிந்தழெுதல்

அவ் இடத்தினில் ஆய் மருந்தால் அழல்
வெவ் விடத்தினை உண்டவர் மீண்டென
எவ் இடத்தினும் வீழ்ந்த இனத்தலைத்
தவெ் அடக்கும் வலியவர் தேறினார். 6.18.144

தெளிந்த வானரர் போர் செய்தல் (8277-8278)

தேறினார் கண் நெருப்பு உகச் சீறினார்;
ஊறினார் வந்து இளவலை ஒன்றினார்;
மாறு மாறு மலையும் மரங்களும்
நூறும் ஆயிரமும் கொடு நூறினார். 6.18.145

விகடம் உற்ற மரனொடு வெற்பு இனம்
புகட உற்ற பொறுத்தன போவன
துகள் தவத் தொழில் செய்துறைக் கம்மியர்
சகடம் ஒத்தன தார் அணி தேர் எலாம். 6.18.146

அங்கதன் இந்திரசித்தோடு பொருதல்

வாலி மைந்தன் ஓர் மாமரம் வாங்கினான்
காலின் வந்த அரக்கனை ‘கா; இது
போலும் உன் உயிர் உண்பது புக்கு ‘எனா
மேல் இவர்ந்து நெருப்பு உக வீசினான். 6.18.147

அங்கதன் வீசிய மரம் இந்திரசித்தின் தேரை அழித்தல்

‘ஏர் அழித்தது செய்தவன் ஈண்டு எழில்
சீர் அழித்தவன் ஆம் ‘என தேவர்கள்
ஊர் அழித்த உயர்வலித் தோளவன்
தேர் அழித்து ஓர் இமைப்பிடைச் சென்றதால். 6.18.148

தேவர்கள் மகிழ்தல்

அந்த வேலையின் ஆர்த்து எழுந்து ஆடினார்
சிந்தை சால உவந்தனர் தேவர்கள்
‘தந்தை தந்தை பண்டு உற்ற சழக்கு எலாம்
எந்தை தீர்த்தனன் என்பது ஓர் ஏம்பலால். 6.18.149

வென்ற அங்கதனை இந்திரசித்து நெருங்குதல்

அழிந்த தேரின் நின்று அந்தரத்து அக்கணத்து
எழுந்து மற்று ஓர் இரதம் உற்று ஏறினான்
‘கழிந்து போகலை நில்! எனக் கைக்கணை
பொழிந்து சென்றனன் தீ எனப் பொங்கினான். 6.18.150

இந்திரசித்தினை ஏனைவானரரும் சூழ்ந்து கொள்ளுதல்

இந்திரன் மகன் மைந்தனை ‘இன் உயிர்
தந்து போகெனச் சாரலுற்றான்தனை
வந்து மற்றைய வானர வீரரும்
முந்து போர்க்கு முறைமுறை முற்றினார். 6.18.151

சூழ்ந்துகொண்ட வானரர் மர முதலியவற்றை வீசுதல்

மரமும் குன்றும் மடிந்த அரக்கர்தம்
சிரமும் தேரும் புரவியும் திண்கரிக்
கரமும் ஆளியும் வாரிக் கடியவன்
சரமும் தாழ்தர வீசினர் தாக்கினார். 6.18.152

இலக்குவன் அரக்கர் பலரை அழித்தல்

அனைய காலையில் ஆயிரம் ஆயிரம்
வினைய வெங்கண் அரக்கரை விண்ணவர்
நினையும் மாத்திரத்து ஆர் உயிர் நீக்கினான்
மனையும் வாழ்வும் உறக்கமும் மாற்றினான். 6.18.153

தன் சேனை அழியக்கண்ட இந்திரசித்து சீறுதல்

ஆனையும் தடந்தேரும் தன் ஆர் உயிர்த்
தானையும் பரியும் பட்ட தன்மையை
மான வெங் கண் அரக்கன் மனக் கொளா
போன வென்றியன் தீ எனப் பொங்கினான். 6.18.154

இந்திரசித்தின் தேர் இரத்த வெள்ளத்தால் ஈர்க்கப்படுதல் (8287-8288)

சீர்த் தடம்பெருஞ் சில்லி அம் தேரினைக்
காத்து நின்ற இருவரைக் கண்டனன்
ஆர்த்த தம்பெருஞ் சேனைகொண்டு அண்டமேல்
ஈர்த்த சோரிப் பரவை நின்று ஈர்த்தலால். 6.18.155

நேர் செலாது இடை நின்றனர் நீள் நெடுங்
கார் செலா; இருள் சீறிய கண் அகல்
தேர் செலாது; விசும்பிடைச் செல்வது ஓர்
பேர் செலாது; பிணத்தின் பிறக்கமே. 6.18.156

அவ்விருவரிடம் இந்திரசித்து இலக்குவன் வில்வீரத்தை வியத்தல்

அன்று தன் அயல் நின்ற அரக்கரை
ஒன்று வாள்முகம் நோக்கி ‘ஒருவிலான்
நன்று நம்படை நாற்பது வெள்ளமும்
கொன்று நின்றபடி! ‘எனக் கூறினான். 6.18.157

இந்திரசித்துக்கு அரக்கர் மறுமொழி

ஆய வீரரும் ‘ஐய! அமர்த் தலை
நீயும் நாற்பது வெள்ள நெடும் படை
மாய வெங் கணை மாரி வழங்கினை
ஓய்வு இல் வெஞ்செரு ஒக்கும் ‘என்று ஓதினார். 6.18.158

இந்திரசித்தும் இலக்குவனும் எதிர் எதிர் பொருதல்

வந்து நேர்ந்தனன் மாருதி மேல்வரும்
அந்தி வண்ணனும் ஆயிரம் ஆயிரம்
சிந்தினான் கணை; தேவரை வென்றவன்
நுந்த நுந்த முறை முறை நூறினான். 6.18.159

இந்திரசித்து வானரரை அழித்தல்

ஆறும் ஏழும் அறுபதும் ஐம்பதும்
நூறும் ஆயிரமும் கணை நூக்கி வந்து
ஊறினாரை உணர்வு தொலைத்து உயிர்
தேறினாரை நெடு நிலம் சேர்த்தினான். 6.18.160

சுக்கிரீவன் முதலியோர் தளர்வதுகண்டு இலக்குவன் கணை தொடுத்தல்

கதிரின் மைந்தன் முதலினர் காவலர்
உதிர வெள்ளத்தின் ஒல்கி ஒதுங்கலும்
எதிரில் நின்ற இராவணி ஈடுற
வெதிரின் காட்டு எரிபோல் சரம் வித்தினான். 6.18.161

இந்திரசித்து தளர்தலும் இலக்குவன் அரக்கரை அழித்தலும்

உளைவு தோன்ற இராவணி ஒல்கினான்;
கிளையின் நின்ற இருவர் கிளைத்தலும்
அளவு இல் சேனை அவிதர ஆரியற்கு
இளைய வீரன் சுடுசரம் ஏவினான். 6.18.162

இலக்குவன் அம்பினால் அரக்கர்கள் பட்டபாடு (8295-8301)

தெரிகணை மாரி பெய்ய, தேர்களும், சினைக் கைம் மாவும்,
பரிகளும், அரக்கர் தாமும், பட்டன கிடக்கக் கண்டார்
இருவரும் நின்றார்; மற்று அங்கு இராக்கதர் என்னும் பேரார்
ஒருவரும் நின்றார் இல்லை; உள்ளவர் ஓடிப் போனார். 6.18.163

ஓடினார் அரக்கர் தண்ணீர் உண் நசை உலர்ந்த நாவர்,
தேடினார், தரெிந்து கையால் முகிலினை முகந்து தேக்கி,
பாடு உறு புண்கள் தோறும் பசும்புனல் பாயப் பாய,
வீடினர் சிலவர்; சில்லோர், பெற்றிலர், விளிந்து வீழ்ந்தார். 6.18.164

வெங்கணை திறந்த மெய்யர், விளிந்திலர், விரைந்து சென்றார்,
செங்குழல் கற்றை சோரத் தரெிவையர் அரற்ற, தெய்வப்
பொங்குபூம் பள்ளி புக்கார்; அவருடல் பொருந்தப் புல்லி
அங்கு அவர் ஆவியோடும் தம் உயிர் போக்கி அற்றார். 6.18.165

பொறிக்கொடும் பகழி மார்பர் போயினர், இடங்கள் புக்கார்,
மறிக்கொளும் சிறுவர் தம்மை, மற்றுள சுற்றம் தம்மை,
‘குறிக்கொளும் ‘என்று கூறி, அவர்முகம் குழைய நோக்கி
நெறிக்கொளும் கூற்றை நோக்கி ஆருயிர் நெடிது நீத்தார். 6.18.166

தாமரைக் கண்ணன் தம்பி தன்மை ஈது ஆகின் மெய்யே
வேம், அரைக் கணத்தின் இவ் ஊர்; இராவணி விளிதன் முன்னம்
மாமரக் கானில், குன்றில், மறைந்திரும்; மறைய வல்லே
போம் ‘எனத் தமரைச் சொல்லி, சிலர் உடல் துறந்து போனார். 6.18.167

வரை உண்ட மதுகை மேனி மருமத்து, வள்ளல் வாளி
இரை உண்டு துயில, சென்றார், ‘வாங்கிடின், இறப்பம் ‘என்பார்,
பிரை உண்ட பாலின் உள்ளம் பிறிதுற, பிறர்முன் சொல்லா
உரை உண்ட நல்லோர் என்ன, உயிர்த்து உயிர்த்து, உழைப்பது ஆனார். 6.18.168

தேரிடைச் செல்லார், மானப் புரவியில் செல்லார், செங்கண்
காரிடைச் செல்லார், காலின் கால் எனச் செல்லார், காவல்
ஊரிடைச் செல்லார், நாணால், உயிரின்மேல் உடைய அன்பால்,
போரிடைச் செல்லார், நின்று நடுங்கினர், புறத்தும் போகார். 6.18.169

இந்திரசித்தின் கவசத்தை இலக்குவன் வீழ்த்துதல்

நொய்தினின் சென்று கூடி, இராவணி உளைவை நோக்கி,
வெய்தினில் கொன்று வீழ்ப்பல் என்பது ஓர் வெகுளி வீங்கி,
பெய்துழிப் பெய்யும் மாரி அனையவன் பிணங்கு கூற்றின்
கையினில் பெரிய அம்பால், கவசத்தைக் கழித்து வீழ்த்தான். 6.18.170

துமிராட்சனும் மகாபாரிசுவனும் இலக்குவனோடு பொருதல்

‘கவசத்தைக் கழித்து வீழ்ப்ப காப்புறு கடன் இன்று ஆகி,
அவசத்தை அடைந்த வீரன் அறிவுறும் துணையின் வீரத்,
துவசத்தின் புரவித் திண்தேர் கடிதுற தூண்டி, யாம் இத்
திவசத்தின் முடித்தும், வெம்போர் ‘ எனச் சினம் திருகிச் சென்றார். 6.18.171

இலக்குவன் அவ்விருவரையும் கொல்லுதல்

மாருதி மேலும் ஐயன் மார்பினும் தோளின் மேலும்
தேரினர் இருவர் சென்றார், செந்தழல் பகழி சிந்த,
ஆரியன் வாகை வில்லும் அச்சு உடைத் தேரும் அத்தேர்
ஊர்குவார் உயிரும் கொண்டான்; புரவியின் உயிரும் உண்டான். 6.18.172

அவ்விருவரும் தண்டுகொண்டு அனுமனோடு பொருதல் (8305-8306)

இருவரும் இழந்த வில்லார், எழுமுனை வயிரத் தண்டார்,
உரும் எனக் கடிதின் ஓடி, அனுமனை இமைப்பின் உற்றார்,
பொருகனல் பொறிகள் சிந்தப் புடைத்தனர்; புடைத்தலோடும்,
பருவலி கரத்தினால் தண்டு இரண்டையும் பறித்துக் கொண்டான். 6.18.173

தண்டு அவன் கையது ஆய தன்மையைத் தறுகணாளர்,
கண்டனர்; கண்டு, செய்ய லாவது ஒன்றானும் காணார்;
‘கொண்டனன் எறிந்து நம்மைக் கொல்லும் ‘என்று, அச்சம் கொண்டார்,
உண்ட செஞ் சோறும் நோக்கார், உயிருக்கே உதவி செய்தார். 6.18.174

வானர வீரர்கள் மயக்கந் தெளிந்து எழுதல்

காற்று வந்து அசைத்தலாலும், காலம் அல்லாமை யாலும்,
கூற்று வந்து ஆவி கொள்ளும் குறி இன்மை குறித்தலாலும்,
தேற்றம் வந்து எய்தி, நின்ற மயக்கமும் நோவும் தீர்ந்தார்;
ஏற்றமும் வலியும் பெற்றார்; எழுந்தனர் வீரர் எல்லாம். 6.18.175

எழுந்த வானரவீரர் போராரவாரம் செய்தல்

அங்கதன், குமுதன், நீலன், சாம்பவன், அருக்கன் மைந்தன்,
பங்கம் இல் மயிந்தன் தம்பி, சதவலி, பனசன் முன்னாச்
சிங்க ஏறு அனைய வீரர் யாவரும் சிகரம் ஏந்தி,
மங்கலம் வானோர் சொல்ல, மழை என ஆர்த்து வந்தார். 6.18.176

வானரர் வீசிய குன்றங்களை இந்திரசித்து சின்னபின்னமாக்குதல்

அத்தனையோரும், குன்றம் அளப்பு இல, அசனி ஏற்றோடு
ஒத்தன, நெருப்பு வீசும் உரும் என ஒருங்க உய்த்தார்;
‘இத்தனை போலும் செய்யும் இகல் ‘எனா, முறுவல் எய்தி,
சித்திர வில் வலோனும் சின்ன பின்னங்கள் செய்தான். 6.18.177

சூரியன் மறைதல்

மரங்களும் மலையும் கல்லும் மழை என வழங்கி, வந்து
நெருங்கினர்; நெருங்கக் கண்டும், ஒரு தனி நெஞ்சும், வில்லும்,
சரங்களும், துணையாய் நின்ற நிசாசரன் தனிமை நோக்கி,
இரங்கினன் என்ன, மேல்பால் குன்றுபுக்கு இரவி நின்றான். 6.18.178

இருள் பரவுதல்

‘வாழிய வேதம் நான்கும் மனுமுதல் வந்த நூலும்,
வேள்வியும், மெய்யும், தெய்வ வேதியர் விழைவும் ஆகும்,
ஆழி அம் கமலக் கையான் ஆதி அம் பரமன் ‘என்னா
ஏழையர் உள்ளம் என்ன, இருண்டன திசைகள் எல்லாம். 6.18.179

விரைந்து கொல்லாக்கால் இந்திரசித்து விசும்பில் எழுந்து வெல்வான் என வீடணன் சொல்லுதல்

‘நாகமே அனைய நம்ப! நாழிகை ஒன்று நான்கு
பாகமே காலம் ஆகப் படுத்தியேல், பட்டான்; அன்றேல்,
வேக வாள் அரக்கர் காலம் விளைந்தது; விசும்பின் வஞ்சன்
ஏகுமேல், வெல்வன் ‘என்பது, இராவணற்கு இளவல் சொன்னான். 6.18.180

இலக்குவன் இந்திரசித்தின் தேரை அழித்தல்

அத்தனை வீரர் மேலும் ஆண்தகை அனுமன் மேலும்,
எத்தனை கோடி வாளி மழை என எய்யா நின்ற
வித்தக வில்லினானைக் கொல்வது விரும்பி, வீரன்
சித்திரத் தேரைத் தெய்வப் பகழியால் சிதைத்து வீழ்த்தான் 6.18.181

இந்திரசித்து விண்மிசை எழுதல்

‘அழித்த தேர் அழுந்தா முன்னம், அம்பொடு கிடந்து வெம்பி
உழைத்து உயிர் விடுவது அல்லால் ‘உறுசெரு வென்றோம் ‘என்று
பிழைத்து இவர் போவார் அல்லர் பாசத்தால் பிணிப்பின் ‘என்னா
விழித்து இமையாத முன்னம் வில்லொடும் விசும்பில் சென்றான். 6.18.182

இந்திரசித்து விண்ணிடை விரைந்தமைகண்டு தேவர் அஞ்சுதல்

‘பொன் குலாம் மேனி மைந்தன் தன்னொடும் புகழ்தற்கு ஒத்தான்
வன்கலாம் இயற்றி நின்றான், மற்றொரு மனத்தன் ஆகி,
மின் குலாம் கழல் கால் வீரன் விண்ணிடை விரைந்த தன்மை
என் கொலாம்! ‘என்ன அஞ்சி வானவர் இரியல் போனார். 6.18.183

இந்திரசித்து மேகமண்டலத்திற்கப்பால் நிற்றல்

தாங்கு வில் கரத்தன் தூணி தழுவிய புறத்தன் தன்னுள்
ஓங்கி உற்று எரியா நின்ற வெகுளியன் உயிர்ப்பன் தீயன்,
தீங்கு இழைப்பவர்கட்கு எல்லாம் சீரியன், மாயச் செல்வன்,
வீங்கு இருள் பிழம்பின், உம்பர் மேகத்தின் மீதின் ஆனான். 6.18.184

இந்திரசித்து நுண்ணுடம்பெடுத்தல்

தணிவு அறப் பண்டு செய்த தவத்தினும், தருமத்தானும்,
பிணி அறுப்பவரில் பெற்ற வரத்தினும், பிறப்பினானும்,
மணிநிறத்து அரக்கன் செய்த மாய மந்திரத்தினானும்,
அணு எனச் சிறியது ஆங்கு ஓர் ஆக்கையும் உடையன் ஆனான். 6.18.185

இந்திரசித்து நாகபாசப் படையை எடுத்தல்

வாங்கினான் மலரின் மேலான், வானக மணிநீர்க் கங்கை
தாங்கினான், உலகந் தாங்கும் சக்கரத்தவன், என்றாலும்,
வீங்கு வான் தோளை வீக்கி வீழ்த்து அலால் மீள்கிலாத
ஓங்கு வாள் அரவின் நாமத்து ஒரு தனிப் படையை உன்னி. 6.18.186

வானரர் ஆர்த்தலும் இலக்குவன் நகுதலும்

ஆயின காலத்து ஆர்த்தார், ‘அமர்த் தொழில் அஞ்சி, அப்பால்
போயினன் ‘என்பது உன்னி, வானர வீரர் போல்வார்;
நாயகற்கு இளைய கோவும் அன்னதே நினைந்து, நக்கான்;
மாயையைத் தரெிய உன்னார், போர்த்தொழில் மாற்றி நின்றார் 6.18.187

இலக்குவன் அனுமன் தோளில் நின்று இறங்கி இளைப்பாறுதல்

அது கணத்து, அனுமன் தோள்நின்று ஐயனும் இழிந்து, வெய்ய
கது வலிச் சிலையை வென்றி அங்கதன் கையது ஆக்கி,
முதுகு உறச் சென்று நின்ற கணை எலாம் முறையின் வாங்கி,
விது விதுப்பு ஆற்றலுற்றான், விளைகின்றது உணர்ந்திலாதான். 6.18.188

இந்திரசித்து நாகக்கணையை விடுதலும் அது இலக்குவனைக் கட்டுதலும்

விட்டனன் அரக்கன் வெய்ய படையினை; விடுத்தலோடும்,
எட்டினோடு இரண்டு திக்கும் இருள் திரிந்து இரிய ஓடி,
கட்டினது என்ப மன்னோ, காகுத்தற்கு இளைய காளை
வட்ட வான் வயிரத் திண் தோள் மலைகளை உளைய வாங்கி. 6.18.189

இலக்குவன் நாகக்கணையால் கட்டுண்டு களத்தையும் விண்ணையும் நோக்குதல்

இறுகுறப் பிணித்தலோடும், யாவையும் எதிர்ந்த போதும்
மறுகுறக் கடவான் அல்லன்; மாயம் என்று உணர்வான் அல்லன்;
உறுகுறைத் துன்பம் இல்லான்; ஒடுங்கினன்; செய்வது ஓரான்,
அறு குறை களத்தை நோக்கி, அந்தரம் அதனை நோக்கும். 6.18.190

இந்திரசித்தைப் பிடிக்க எழும் அனுமனையும் அக்கணை கட்டுதல்

காலுடைச் சிறுவன், ‘மாயக் கள்வனைக் கணத்தின் காலை
மேல் விசைத்து எழுந்து நாடிப் பிடிப்பென் ‘என்று உறுக்கும் வேலை,
ஏல்புடைப் பாசம், மேல் நாள் இராவணன் புயத்தை வாலி
வால் பிணித் தனெ்ன, சுற்றிப் பிணித்ததும், வயிரத் தோளை. 6.18.191

நாகக்கணை மற்றவர்களையும் கட்டுதல்

மற்றையோர் தமையும் எல்லாம் வாள் எயிற்று அரவம் வந்து,
சுற்றின; வயிரத் தூணின், மலையினின், பெரிய தோள்கள்,
‘இற்றன, இற்ற என்ன, இறுக்கின; இளகா உள்ளம்
தறெ்றென உடைய வீரர் இருந்தனர், செய்வது ஓரார். 6.18.192

கட்டுண்ட வானரர் செயல் (8325-8329)

மலை என எழுவர்; வீழ்வர்; மண்ணிடைப் புரள்வர்; வானில்
தலைகளை எடுத்து நோக்கி, தழல் எழ விழிப்பர்; தாவி
அலைகிளர் வாலால் பாரின் அடிப்பர்; வாய் மடிப்பர்; ஆண்மைச்
சிலையவற்கு இளைய கோவை நோக்குவர்; உள்ளம் தீவர் 6.18.193

வீடணன் முகத்தை நோக்கி, ‘வினை உண்டே இதனுக்கு? என்பர்
மூடின கங்குல் மாலை இருளினை முனிவர்; ‘மொய்ம்பில்
ஈடுறத் தக்க போலாம் நம் எதிர் ‘என்னா ஏந்தல்
ஆடகத் தோளை நோக்கி, நகை செய்வர்; அழுவர்; அஞ்சார். 6.18.194

ஆர், இது தீர்க்க வல்லார்? அஞ்சனை பயந்த வள்ளல்,
மாருதி, பிழைத்தான் கொல்லோ? என்றனர், மறுகி நோக்கி,
வீரனைக் கண்டு, ‘பட்டது இது கொலாம்! ‘என்று விம்மி,
வார்கழல் தம்பி தன்மை காணுமோ, வள்ளல்? ‘என்பார். 6.18.195

என், சென்ற தன்மை சொல்லின்? எறுழ் வலி அரக்கன் எய்தான்,
மின் சென்றது அன்ன; வானத்து உரும் இனம் வீழ்வ என்ன,
பொன் சென்ற வடிம்பின் வாளி, புகையொடு பொறியும் சிந்தி,
முன்சென்ற முதுகில் பாய, பின் சென்ற மார்பம் உற்ற. 6.18.196

மலைத் தலை கால மாரி, மறித்து எறி வாடை மோத,
தலைத் தலை மயங்கி வீழும் தன்மையின், தலைகள் சிந்தும்,
கொலைத் தலை வாளி பாயக் குன்று அன குவவுத் தோளார்
நிலைத்தலைக் குலைந்து சார்ந்தார்; நிமிர்ந்தது, குருதி நீத்தம். 6.18.197

அனுமன் இலக்குவனுக்கு உற்றதுகண்டு நடுங்குதல்

ஆயிர கோடி மேலும் அம்பு தன் ஆகத் தூடு
போயின போதும் ஒன்றும் துடித்திலன்; பொறுத்து, மானத்
தீ எரி சிதறும் செங்கண் அஞ்சனை சிங்கம், தெய்வ
நாயகன் தம்பிக்கு உற்ற துயர் சுட நடுங்குகின்றான். 6.18.198

அங்கதன் நிலை

வேறு உள வீரர் எல்லாம் வீழ்ந்தனர், உருமின் வெய்ய
நூறும் ஆயிரமும் வாளி உடல் இடை நுழைய, சோரி
ஆறுபோல் ஒழுக, அண்ணல் அங்கதன் அனந்த வாளி
ஏறிய மெய்யனேனும், இருந்தனன் இடைந்து இலாதான். 6.18.199

சுக்கிரீவன் நிலை

கதிரவன் காதல் மைந்தன், கழல் இளம் பசுங் காய் அன்ன,
எதிர் எதிர் பகழி தைத்த, யாக்கையன், எரியுங் கண்ணன்,
வெதிர் நெடுங் கானம் என்ன வேகின்ற மனத்தன், மெய்யன்,
உதிர வெங்கடலுள் தாதை உதிக்கின்றான் தனையும் ஒத்தான். 6.18.200

இலக்குவன் நிலை

வெப்பு ஆரும் பாசம் வீக்கி, வெங் கணை துளைக்கும் மெய்யன்,
ஒப்பு ஆரும் இல்லான் தம்பி உணர்ந்திருந்து இன்னல் உய்ப்பான்,
‘இப்பாசம் மாய்க்கும் மாயம், யான் வல்லென் ‘என்பது ஓர்ந்தும்
அப்பாசம் வீச ஆற்றாது அழிந்த நல் அறிவு போன்றான் 6.18.201

இலக்குவன் சூரியன் போன்று தோன்றுதல்

அம்பு எலாம் கதிர்கள் ஆக, அழிந்து அழிந்து இழியும் ஆகச்
செம்புனல் வெயிலில் தோன்ற, திசை இருள் இரிய, சீறிப்
பம்பு பேர் ஒளிய, நாகம், பற்றிய படிவத் தோடும்
உம்பர் நாடு இழிந்து வீழ்ந்த ஒளியவனேயும் ஒத்தான். 6.18.202

இந்திரசித்தின் நிலை

மயங்கினான் வள்ளல் தம்பி; மற்றையோர் முற்றும் மண்ணை
முயங்கினார்; மேனி எல்லாம் மூடினான் அரக்கன் மூரித்
தயங்கு பேர் ஆற்றலானும் தன் உடல் தைத்த வாளிக்கு
உயங்கினான், உளைந்தான் வாயால் உதிர நீர் உமிழா நின்றான். 6.18.203

இந்திரசித்து இராவணன் மனைக்கு ஏகுதல் (8336-8338)

‘சொற்றது முடித்தேன்; நாளை, என் உடல் சோர்வை நீக்கி,
மற்றதும் முடிப்பேன் ‘என்னா, எண்ணினான், ‘மனிசன் வாழ்க்கை
இற்றது; குரங்கின் தானை இறந்தது, என்று இரண்டு பாலும்
கொற்ற மங்கலங்கள் ஆர்ப்ப இராவணன் கோயில் புக்கான். 6.18.204

ஈர்க்கு உடைப் பகழி மாரி இலக்குவன் என்ன நின்ற
நீர்க்கடை மேகம் தன்னை நீங்கியும், செருவின் நீங்கான்,
வார்க்கு இடை மதுகைக் கொங்கை, மணிக்குறு முறுவல் மாதர்
போர்க் கடைக் கருங்கண் வாளி புயந்தொறும் பொழியப் புக்கான். 6.18.205

ஐ இரு கோடி செம்பொன் மணி விளக்கு அம்கை ஏந்தி
மை அறு வான நாட்டு மாதரும், மற்றை நாட்டுப்
பை அரவு அல்குலாரும் பலாண்டு இசை பரவ, தங்கள்
தையலர் அறுகு தூவி வாழ்த்தினர் தழுவ, சார்ந்தான். 6.18.206

தந்தைக்குத் தன் வெற்றியைத் தரெிவித்து இந்திரசித்து தன் மனை புகுதல்

தந்தையை எய்தி அன்று ஆங்கு உற்றுள தன்மை எல்லாம்
சிந்தையின் உணரக் கூறி, ‘தீருதி, இடர் நீ; எந்தாய்!
நொந்தனென் யாக்கை; நொய்தின் ஆற்றி, மேல் நுவல்வென் ‘என்னா,
புந்தியில் அனுக்கம் தீர்ப்பான், தன்னுடைக் கோயில் புக்கான். 6.18.207

இலக்குவன் முதலியோர் நிலைமை கண்டு வீடணன் வருந்துதல்

இத்தலை, இன்னல் உற்ற வீடணன் இழைப்பது ஓரான்,
மத்துறு தயிரின் உள்ளம் மறுகினன், மயங்கு கின்றான்,
அத்தலைக் கொடியன் என்னை அட்டிலன்; அளியத்தேன் நான்;
செத்திலென்; வலியென் நின்றேன் ‘ என்று போய் வையம் சேர்ந்தான். 6.18.208

வீடணன் வாய் திறந்தரற்றல் (8341-8344)

‘பாசத்தால் அனகன் தம்பி பிணிப்பு உண்ட படியைக் கண்டு
நேசத்தார் எல்லாம் வீழ்ந்தார்; யான் ஒரு தமியன் நின்றேன்;
தேசத்தார், என்னை என்னென் சிந்திப்பார்! ‘என்று, தீயும்
வாசத்தார் மாலை மார்பன் வாய்திறந்து அரற்றல் உற்றான் 6.18.209

“கொல்வித்தான், உடனே நின்று அங்கு “ என்பரோ? “கொண்டு போனான்
வெல்வித்தான், மகனை ‘‘ என்று பகர்வரோ ‘‘விளைவிற்கு எல்லாம்
நல்வித்தாய் நடந்தான் முன்னே ‘‘ என்பரோ? நயந்தோர் தம் தம்
கல்வித்தாம் வார்த்தை ‘என்று கரைவித்தான் உயிரைக் கண்போல் 6.18.210

‘போர் அவன் புரிந்த போதே பொரு அரு வயிரத் தண்டால்,
தேரொடும் புரண்டு வீழச் சிந்தி, என் சிந்தை செப்பும்
வீரம் முன் தரெித்தேன் அல்லேன், விளிந்திலேன்; மெலிந்தேன் இஞ்ஞான்று
ஆர் உறவு ஆகத் தக்கேன்? அளியத்தேன், அழுந்து கின்றேன் 6.18.211

ஒத்து அலைத்து, ஒக்க வீடி, உய்வினும் உய்வித்து உள்ளம்
கைத் தலை நெல்லி போலக் காட்டிலேன்; கழிந்தும் இல்லேன்;
அத்தலைக்கு அல்லேன் யான், இன்று ‘அவயம் ‘என்று அடைந்துநின்ற
இத்தலைக்கு அல்லேன்; நின்றேன் இருதலைக் கொள்ளி ஒப்பேன். 6.18.212

அனலன் வீடணனைத் தேற்றுதல்

அனையன பலவும் பன்னி, ஆகுலித்து அரற்று வானை,
‘வினையுள பலவும் செய்யத் தக்கன; வீர! நீயும்
நினைவு இலார் போல நெஞ்சம் நெகிழ்தியோ? நீத்தி! ‘என்னா,
இனையன சொல்லித் தேற்றி, அனலன் மற்று இனைய செய்தான் 6.18.213

அனலன் நிகழ்ந்ததுகூற இராமன் துயர்க்கடலுள் ஆழ்தல்

நீ இவண் இருத்தி; யான் போய் நெடியவற்கு உரைப்பென் ‘என்னா,
போயினன், அனலன்; போய், அப் புண்ணியன் பொலன்கொள் பாதம்
மேயினன் வணங்கி, உற்ற வினை எலாம் இயம்பி நின்றான்;
ஆயிரம் பெயரினானும் அருந்துயர்க் கடலுள் ஆழ்ந்தான். 6.18.214

இராமன் இலக்குவற்கு நேர்ந்தது கேட்டுத் தேம்புதல்

உரைத்திலன் ஒன்றும் தன்னை உணர்ந்திலன் உயிரும் ஓடக்
கரைத்திலன் கண்ணில் நீரை கண்டிலன் யாதும் கண்ணால்;
அரைத்திலன் உலகம் எல்லாம் அங்கையால் பற்றி; பொங்கி
இரைத்திலன், ‘உளன் ‘என்று எண்ணி இருந்தனன் விம்மி ஏங்கி 6.18.215

ஏங்கியிருந்த இராமன் போர்க்களம் சேர்தல்

விம்மினன் வெதும்பி வெய்துற்று ஏங்கினன், இருந்த வீரன்
‘இம்முறை இருந்து செய்வது யாவதும் இல் ‘என்று எண்ணி,
பொம் எனும் விம்மலோடும் பொருக்கென எழுந்து போனான்
தமெ் முறை துறந்து வென்ற செங்கள மருங்கிற் சேர்ந்தான். 6.18.216

போர்க்களம் இருள் சூழ்ந்திருத்தல்

இழிந்து எழும் காள மேகம், எறிகடல் அனைய மற்றும்
ஒழிந்தன, நீல வண்ணம் உள்ளன எல்லாம் ஒக்கப்
பிழிந்து அது காலம் ஆகக் காளிமைப் பிழம்பு போதப்
பொழிந்தது போன்றது அன்றே பொங்கி இருள் கங்குல் போர்வை. 6.18.217

இராமன் அனலம்பில் இருளை அகற்றல்

ஆர் இருள் அன்னது ஆக, ஆயிர நாமத்து அண்ணல்,
சீரிய அனலித் தெய்வப் படைக்கலம் தரெிந்து வாங்கி,
பாரிய விடுத்தலோடும், பகை இருள் இரிந்து பாற,
சூரியன் உச்சி உற்றால் ஒத்ததால் உலகின் சூழல். 6.18.218

இராமன் போர்க்களத்தைக் காணுதல்

படை உறு பிணத்தின் பம்மல் பருப்பதம் துவன்றி, பல்வேறு
இடை உறு குருதி வெள்ளத்து, எறிகடல் எழுநீர் பொங்கி,
உடை உறு தலைக்கை அண்ணல் உயிர் எலாம் ஒருங்கி உண்ணும்
கடை உறு காலத்து ஆழும் உலகு அன்ன களத்தைக் கண்டான் 6.18.219

இராமன் இலக்குவனைக் காணுதல்

பிணம் பெருங் குன்றினூடும், குருதி நீர்ப் பெருக்கினூடும்,
நிணப்பெருஞ் சேற்றி னூடும், படைக்கல நெருக்கி னூடும்,
மணப் பெருங் களத்தில் மோடி மங்கல வாழ்க்கை வைப்பில்
கணத்திலும் பாதிப் போதில் தம்பியைச் சென்று கண்டான். 6.18.220

இராமன் இலக்குவன் மேல் வீழ்ந்து அழுது அரற்றல் (8353-8354)

அய்யவன் ஆக்கை தன்மேல் விழுந்து, மார்பு அழுந்தப் புல்லி,
‘உய்யலன் ‘என்ன ஆவி உயிர்த்து உயிர்த்து, உருகுகின்றான்,
பெய் இரு தாரைக்கண்ணன்; பெருந்துளி பிறங்க, வானின்
வெய்யவன் தன்னைச் சேர்ந்த நீல்நிற மேகம் ஒத்தான். 6.18.221

உழைக்கும்; வெய்து உயிர்க்கும்; ஆவி உருகும்; போய் உணர்வு, சோரும்;
இழைக்குவது அறிதல் தேற்றான், ‘இலக்குவா! இலக்குவா! ‘என்று,
அழைக்கும்; தன் கையை வாயின், மூக்கின் வைத்து, அயர்க்கும்; ‘ஐயா!
பிழைத்தியோ! ‘என்னும் மெய்யே பிறந்தேயும் பிறந்திலாதான். 6.18.222

இராமனுடைய தாய்மைச் செயல்கள்

தாமரைக் கையால் தாளைத் தைவரும்; குறங்கைத் தட்டும்;
தூமலர்க் கண்ணை நோக்கும்; ‘மார்பிடைத் துடிப்பு உண்டு ‘என்னா,
ஏமுறும்; விசும்பை நோக்கும்; எடுக்கும்; தன் மர்பில் ஏற்றும்;
பூமியில் வளர்த்தும்; ‘கள்வன் போய் அகன்றானோ? ‘என்னும் 6.18.223

இராமனுடைய வீரக்குறிப்புகள் (8356-8357)

வில்லினை நோக்கும்; பாச விசிப்பினை நோக்கும்; வீயா
அல்லினை நோக்கும்; வானத்து அமரரை நோக்கும்; பாரைக்
கல்லுவன் வேரோடு என்னும்; பவள வாய் கறிக்கும் மற்றோர்
சொல்லினை நோக்கும்; தன்பொற் புகழினை நோக்கும் தோளான் 6.18.224

வீரரை எல்லாம் நோக்கும்; விதியினை நோக்கும்; வீரப்
பார வெஞ் சிலையை நோக்கும்; பகழியை நோக்கும்; ‘பாரில்
யார் இதுபட்டார் ‘என்போல் எளிவந்த வண்ணம்? ‘என்னும்;
நேரிது, பெரிது ‘என்று ஓதும் அளவையின் நிமிர நின்றான். 6.18.225

இராமன் வீடணனோடு நொந்து கொள்ளுதல்

“‘எடுத்தபோர், இலங்கை வேந்தன் மைந்தனோடு இளைய கோவுக்கு
அடுத்தது ‘‘ என்று என்னை வல்லை அழைத்திலை, அரவின் பாசம்
தொடுத்த கை தலையினோடும் துணித்து உயிர் துடைக்க; என்னைக்
கெடுத்தனை; வீடணா! நீ ‘ என்றனன் கேடு இலாதான். 6.18.226

வீடணன் தான் சொல்லாமைக்குக் காரணம் கூறுதல் (8359-8364)

அவ் உரை அருளக் கேட்டான், அழிகின்ற அரக்கன் தம்பி
‘இவ் வழி, அவன் வந்து ஏற்பது அறிந்திலம்; எதிர்ந்த போதும்,
“வெவ்வழியவனே தோற்கும் “ என்பது விரும்பி நின்றேன்,
தெய்வ வன் பாசம் செய்த செயல், இந்த மாயச் செய்கை. 6.18.227

‘அற்று அதிகாயன் ஆக்கை, தலை இலது ஆக்கி, ஆண்ட
வெற்றியன் ஆய வீரன் மீண்டிலன், “இலங்கை மேல் நாள்
பெற்றவன் எய்தும் ‘‘ என்னும் பெற்றியை உன்னி; பின் போது,
உற்றனன் மைந்தன்; தானை நாற்பது வெள்ளத் தோடும். 6.18.228

‘ஈண்டு, நம் சேனை வெள்ளம் இருபதிற்று இரட்டி மாள,
தூண்டினன், பகழி மாரி; தலைவர்கள் தொலைந்து சோர,
மூண்டு எழு போரில், பாரில் முறைமுறை முடித்தான்; பின்னர்,
ஆண்தகையோடும் ஏற்றான், ஆயிரம் மடங்கல் தேரான். 6.18.229

‘அனுமன் மேல் நின்ற ஐயன் ஆயிரம் தேரும் மாய,
தனு வலம் காட்டி, பின்னை, நாற்பது வெள்ளத் தானை
பனி எனப் படுவித்து, அன்னான் பலத்தையும் தொலைத்து, “பட்டான்
இனி ‘‘ என வயிர வாளி, எண் இல, நிறத்தின் எய்தான். 6.18.230

‘ஏ உண்ட பகுவாய் ஊடு குருதிநீர் இழிய நின்றான்,
தூவுண்ட தானை முற்றும் பட, ஒரு தமியன் சோர்வான்;
“போவுண்டது என்னின், ஐய! புணர்க்குவன் மாயம் “ என்று,
பாவுண்ட கீர்த்தி யானுக்கு உணர்த்தினன்; பரிதி பட்டான். 6.18.231

‘மாயத்தால் இருண்டது ஆழி உலகு எலாம்; வஞ்சன், வானில்
போய், அத்தானுடைய வஞ்ச வரத்தினால் ஒளிந்து, பொய்யின்
ஆயத்தார்ப் பாசம் வீசி அயர்வித்தான், அம்பின் வெம்பும்
காயத்தான் ‘என்னச் சொல்லி, வணங்கினான், கலுழும் கண்ணான். 6.18.232

வீடணன், யாரும் இறந்திலர் என்று இராமனைத் தேற்றுதல்

பின்னரும் வணங்கி, ‘ஏதும், பிழைத்திலன் பெரும! யாரும்
இன் உயிர் துறந்தார் அல்லர், இறுக்கிய பாசம் இற்றால்
புல் நுனைப் பகழிக்கு ஓயும் தரத்தரோ? புலம்பி உள்ளம்
இன்னல் உற்று அயரல்; வெல்லாது அறத்தினைப் பாவம் ‘என்றான். 6.18.233

நாகபாசத்தைப்பற்றி நீ உணர்ந்ததை உரை எனல்

‘யார் இது கொடுத்த தேவன்? என்னை ஈது? இதனைத் தீர்க்கும்
காரணம் யாது? நின்னால் உணர்ந்தது கழறிக் காண் ‘என்று,
ஆரியன் வினவ, அண்ணல் வீடணன், ‘அமல! சாலச்
சீரிது ‘என்று, அதனை, உள்ள பரிசு எலாம், தரெியச் சொன்னான் 6.18.234

வீடணன் கூறும் பாசத்தின் வரலாறு

‘ஆழி அம் செல்வ! பண்டு இவ் அகலிடம் அளித்த அண்ணல்
வேள்வியில் படைத்தது; ஈசன் வேண்டினன் பெற்று, வெற்றித்
தாழ்வு அறு சிந்தையோற்குத் தவத்தினால் அளித்தது; ஆணை!
ஊழியின் நிமிர்ந்த காலத்து உருமினது; ஊற்றம் ஈதால். 6.18.235

பாசத்தின் ஆற்றல்

அன்னதன் ஆற்றல் அன்றே ஆயிரம் கண்ணினானைப்
பின் உற வயிரத் திண் தோள் பிணித்தது, பெயர்த்து ஒன்று எண்ணி
என், இனி? அனுமன் தோளை இறுக்கியது இதனால் ஆண்டும்;
பொன்னுலகு ஆளும் செல்வம் துறந்தது, புலவோர் எல்லாம். 6.18.236

பாசம் நீக்கும் வகையிலது என்றல்

தான் விடின் விடுதல் அன்றிச் சதுமுகன் முதல்வர் ஆய
வான் விடின் விடாது; மற்று, இம்மண்ணினை எண்ணி என்னே!
ஊன் விட, உயிர் போய் நீங்க, நீங்கும்; வேறு உய்தி இல்லை;
தேன் விடு துளபத் தாராய்! இது இதன் செய்கை ‘என்றான். 6.18.237

இராமன் சினந்து கூறுதல் (8370-8372)

‘ஈந்துள தேவர்மேலே எழுகெனோ? உலகம் யாவும்
தீய்ந்து உக நூறி, யானும் தீர்கெனோ? இலங்கை சிந்தப்
பாய்ந்து, அவர் சுற்றம் முற்றும் படுப்பெனோ? இயன்ற பண்போடு
ஏய்ந்தது பகர்தி ‘என்றான், இமையவர் இடுக்கண் தீர்ப்பான். 6.18.238

‘வரம் கொடுத்து இனைய பாசம் வழங்கினான் தானே நேர்வந்து
இரங்கிடத் தக்கது உண்டேல், இகழ்கிலென்; இல்லை என்னின்
உரம் கெடுத்து, உலகம் மூன்றும், ஒருவன் ஓர் அம்பிற் சுட்ட
புரங்களின் தீய்த்து, காண்பேன் பொடி ஒரு கடிகைப் போழ்தின். 6.18.239

‘எம்பியே இறக்கும் என்னில் எனக்கு இனி, இலங்கை வேந்தன்
தம்பியே! புகழ்தான் என்னை? பழி என்னை? அறம் தான் என்னை?
நம்பியே என்னைச் சேர்ந்த நண்பரின்; நல்ல ஆமே,
உம்பரும் உலகத்து உள்ள உயிர்களும், உதவி பார்த்தால்? 6.18.240

இராமனது சினம் மாறுதல்

என்று கொண்டு இயம்பி ‘ஈண்டு இங்கு ஒருவன் ஓர் இடுக்கண் செய்ய
வென்று, அரும் உலகை மாய்த்தல் விதி அன்றால் ‘என்றா விம்மி,
நின்று நின்று, உன்னி உன்னி, நெடிது உயிர்த்து அலக்கண் உற்றான்;
தன்துணைத் தம்பி தன்மேல், துணைவர்மேல் தாழ்ந்த, அன்பான். 6.18.241

இலக்குவன் வீயின் இராமனும் வீவதாக எண்ணுதல்

மீட்டும் வந்து இளைய வீரன் வெற்பு அன்ன விசயத் தோளைப்
பூட்டுறு பாசம் தன்னைப் பல்முறை புரிந்து நோக்கி,
‘வீட்டியது என்னின், பின்னை வீவென் ‘என்று எண்ணும் வேதத்
தோட்டியின் தொடக்கில் நிற்கும் துணைக் கைம் மால் யானை அன்னான். 6.18.242

கருடன் வருகை

இத் தன்மை எய்தும் அளவின்கண், நின்ற இமையோர்கள் அஞ்சி, ‘இதுபோய்
எத் தன்மை எய்தி முடியும் கொல்? ‘ என்று குலைகின்ற எல்லை இதன்வாய்,
அத் தன்மை கண்டு, புடைநின்ற அண்ணல் கலுழன்தன் அன்பின் மிகையால்
சித்தம் நடுங்கி, இதுதீர, மெள்ள, இருள் ஊடு வந்து தரெிவான். 6.18.243

கலுழன் இறகுகளின் சிறப்பு (8376-8377)

அசையாத சிந்தை அரவால் அனுங்க, அழியாத உள்ளம் அழிவான்,
இசையான் இலங்கை அரசோடும் அண்ணல் அருள்தன்மை கண்டு பெயர்வான்,
விசையால் அனுங்க வடமேரு வையம், ஒளியால் விளங்க இமையாத்
திசையானை கண்கள் முகிழா ஒடுங்க நிறைகால் வழங்கு சிறையான். 6.18.244

காதங்கள் கோடி கடைசென்று காணும் நயனங்கள் வாரி கலுழ
கேதங்கள் கூர, அயர்கின்ற வள்ளல் திருமேனி கண்டு, கிளர்வான்,
சீதம் கொள் வேலை அலை சிந்த, ஞாலம் இருள் சிந்த, வந்த சிறையான்,
வேதங்கள் பாட; உலகங்கள் யாவும் வினை சிந்த; நாகம் மெலிய. 6.18.245

கலுழனுடைய மேனியும் மணிமுடியும் (8378-8379)

அல்லைச் சுருட்டி, வெயிலைப் பரப்பி, அகல் ஆசை எங்கும் அழியா
வில்லைச் செலுத்தி, நிலவைத் தரெுட்டி, விரிகின்ற சோதி மிளிர,
எல்லைக் குயிற்றி எரிகின்ற மோலி, இடை நின்ற மேரு எனும் அத்
தொல்லைப் பொருப்பின் மிசையே விளங்கு சுடரோனின் மும்மை சுடர. 6.18.246

நன்பால் விளங்கு மணி கோடியோடு, நளிர்போது, செம்பொன் முதலாத்
தன் பால் இயைந்த நிழல் கொண்டு அமைந்த தழுவாது வந்து தழுவ,
மின் பால் இயன்றது ஒருகுன்றம் வானின் மிளிர்கின்றது என்ன, வெயிலோன்
தனெ்பால் எழுந்து, வடபால் நிமிர்ந்து வருகின்ற செய்கை தரெிய. 6.18.247

கலுழன் இராமனைக் கண்டு தொழுதல்

பல்நாகர் சென்னி மணி கோடி கோடி பலகொண்டு செய்த வகையால்
மின்னால் இயன்றது எனலாய் விளங்கு மிளிர்பூண் வயங்க, வெயில்கால்
பொன்னால் இயன்ற நகை ஓடை பொங்க, வனமாலை மார்பு புரள,
தொல் நாள் பிரிந்த துயர்தீர அண்ணல் திருமேனி கண்டு, தொழுவான் 6.18.248

கலுழன் தொழும் இயல்பு

முடிமேல் நிமிர்ந்து முகிழ் ஏறு கையன், முகில்மேல் நிமிர்ந்த ஒளியான்,
அடிமேல் விழுந்து பணியாமல் நின்ற நிலை உன்னி உன்னி அழிவான்,
கொடிமேல் இருந்து, இவ் உலகு ஏழொடு ஏழு தொழநின்ற கோளும் இலனாய்,
படிமேல் எழுந்து வருவான், விரைந்து, பலகால் நினைந்து, பணிவான்; 6.18.249

கலுழன் விண்ணில் நின்றே இராமனது தெய்வநிலையை நினைந்து துதிப்பது (8382-8393)

‘வந்தான் மறைந்து பிரிவால் வருந்து மலர்மேல் அயன்தன் முதலோர்
தம் தாதை தாதை இறைவா! பிறந்து விளையாடுகின்ற தனியோய்!
சிந்தாகுலங்கள் களைவாய்! தளர்ந்து துயர்கூரல் என்ன செயலோ?
எந்தாய்! வருந்தல், உடையாய்! வருந்தல், என, இன்ன, பன்னி மொழிவான். 6.18.250

‘தேவாதி தேவர் பலராலும் முந்து திருநாமம் ஓது செயலோய்!
மூவாது எந் நாளும் உலகு ஏழொடு ஏழும் அரசாளும் மேன்மை முதல்வா!
மேவாத இன்பம் அவைமேவி, மேவ நெடு வீடு காட்ட முடியாய்!
ஆவாய்! வருந்தி அழிவாய்கொல்! ஆர், இவ் அதிரேக மாயை அறிவார்? 6.18.251

‘எழுவாய், எவர்க்கும் முதலாகி, ஈறு ஒரு இடை ஆகி; எங்கும் உளையாய்,
வழுவாது எவர்க்கும் வரம் ஈயவில்லை; அவரால் வரங்கள் பெறுவாய்;
தொழுவாய் உணர்ச்சி தொடராத தன்மை உருவாய் மறைந்து; துயரால்
அழுவாய் ஒருத்தன் உளைபோலும்! ஆர் இவ் அதிரேக மாயை அறிவார் 6.18.252

‘உன் ஒக்க வைத்த இருவர்க்கும் ஒத்தி; ஒருவர்க்கும் உண்மை உரையாய்;
முன் ஒக்க நிற்றி; உலகு ஒக்க ஒத்தி; முடிவு ஒக்கின், என்றும் முடியாய்;
“என் ஒக்கும், இன்ன செயலோ இது? “ என்னில் இருள் ஒக்கும் என்று விடியாய்;
அந் நொப்பமேகொல்? பிறிதேகொல்? ஆர் இவ் அதிரேக மாயை அறிவார்? 6.18.253

வாழ் நாள் அளித்தி, முடியாமல்; நீதி வழுவாமல் நிற்றி மறையாய்;
பேணாய், உனக்கு ஓர்பொருள் வேண்டும் என்று; பெறுவான் அருத்தி பிழையாய்,
ஊணாய் உயிர்க்கும் உயிராகி நிற்கும் உணர்வு ஆதி; பெண்ணின் உருவாய்
ஆணாகி; மற்றை அலியாதி! ஆர் இவ் அதிரேக மாயை அறிவார்? 6.18.254

“தான் அந்தம் இல்லை; பல “ என்னும், ஒன்று; “தனி “ என்னும், ஒன்று, “தவிரா
ஞானம் தொடர்ந்த சுடர் ‘‘ என்னும், ஒன்று; ‘‘நயனம் தொடர்ந்த ஒளியால்,
வானம் தொடர்ந்த பதம் ‘‘ என்னும், ஒன்று; மறைநாலும் அந்தம் அறியாது,
“ஆனந்தம்“ என்னும், “அயல்“ என்னும்! ஆர் இவ் அதிரேக மாயை அறிவார்? 6.18.255

‘மீளாத வேதம், முடிவின்கண், நின்னை மெய்யாக மெய்யின் நினையும்
“கேளாக நிற்றி; பிற வேறு, பேசு கெடுவார்கள் சொன்ன கடவாய்;
மாளாத நீதி இகழாமை நின் கண் அபிமானம் உள்ள வறியோர்
ஆளாயும் வாழ்தி; அரசாள்தி! ஆர், இவ் அதிரேக மாயை அறிவார்? 6.18.256

சொல் ஒன்று உரைத்தி; பொருளாதி; தூய மறையும் துறந்து, திரிவாய்;
வில் ஒன்று எடுத்தி; சரம் ஒன்று எடுத்தி; மிளிர்சங்கம் அம் கை உடையாய்!
‘கொல் ‘என்று உரைத்தி; கொலை உண்டு நிற்றி; கொடியாய் உன் மாயை அறியேன்;
அல்லென்று நிற்றி; பகல் ஆதி! ஆர், இவ் அதிரேக மாயை அறிவார்? 6.18.257

‘மறந்தாயும் ஒத்தி; மறவாயும் ஒத்தி; மயலாரும் யானும் அறியேன்
துறந்தாயும் ஒத்தி; துறவாயும் ஒத்தி; ஒருதன்மை சொல்ல அரியாய்;
பிறந்தாயும் ஒத்தி, பிறவாயும் ஒத்தி, பிறவாமல் நல்கு பெரியோய்!
அறம்தான் நிறுத்தல் ஆரிது ஆக! ஆர், இவ் அதிரேக மாயை அறிவார்? 6.18.258

‘வினைவர்க்கு முற்றும் உடனே படைத்தி; அவைசெய்தி, ஒன்றும் விழையாய்
நினைவர்க்கு, நெஞ்சின் உறு காமம் முற்றி, அறியாமை நிற்றி; நிமிரா;
முனைவர்க்கும் முத்தி, அமரர்க்கும் ஒத்தி, முழுமூடர் என்றும் முதலோர்
அனைவர்க்கும் ஒத்தி, அறியாமை ஆர் இவ் அதிரேக மாயை அறிவார்? 6.18.259

‘எறிந்தாரும் ஏறு படுவாரும், இன்ன பொருள்கண்டு இரங்குபவரும்,
செறிந்து ஆயது உண்மை எனல் ஆய தன்மை தரெிகின்றது, உன்தன் இடையே;
பிறிந்தார் பிறிந்த பொருேளாடு போதி; பிறியாது நிற்றி பெரியோய்!
அறிந்தார் அறிந்த பொருள் ஆதி ஆர் இவ் அதிரேக மாயை அறிவார்? 6.18.260

‘பேர் ஆயிரங்கள் உடையாய்; பிறந்த பொருள்தோறும் நிற்றி, பிரியாய்;
தீராய்; பிறந்து திரிவாய், திறம்தொறு; அவை தேறும் என்று; சிதையாய்,
கூர் ஆழி அம்கை உடையாய்; திரண்டு ஓர் உரு ஆய கோடல் உரி போல்,
ஆராயின், ஏதும் இலை ஆதி ஆர், இவ் அதிரேக மாயை அறிவார்? ‘ 6.18.261

கருடன் இராமனை நெருங்குதல்

என்று, இன்ன பன்னி அழிவான், எறிந்த எரிசோதி கீற, இருள்போய்,
பொன் துன்னி அன்ன வெயில் வீசுகின்ற பொருள் கண்டு, நின்ற புகழோன்
நின்று உன்னி உன்னி, ‘இவன் யாவன்? ‘என்று நிமிர்கின்ற எல்லை, நிமிரச்
சென்று, உன்னும் முன்னம், உடன் ஆயினான், இவ் உலகு ஏழும் மூடு சிறையான். 6.18.262

கலுழன் வந்தவுடன் நாகபாசம் அகலுதல் (8395-8396)

வாசம் கலந்த மரைநாள நூலின் வகை என்பது என்னை? மழை என்று
ஆசங்கை கொண்ட கொடைமீளி அண்ணல் சரராமன் வெண்ணெய் அணுகும்,
தேசம் கலந்த மறைவாணர், செஞ்சொல் அறிவாளர்; என்று இம்முதலோர்
பாசம் கலந்த பசிபோல் அகன்ற பதகன் துரந்த உரகம். 6.18.263

பல் ஆயிரத்தின் முடியாத பக்கம் அவை வீச வந்து படர்கால்
செல்லா நிலத்தின் இருளாதல், செல்ல, உடல் நின்ற வாளி சிதறுற்று,
எல்லா விதத்தும் உணர்வோடும் எண்ணி அறனே இழைக்கும் உரவோன்
வல்லான் ஒருத்தன் இடையே படுத்த வடு ஆன, மேனி வடுவும். 6.18.264

வானரசேனை உயிர்பெற்று எழுதல்

தருமத்தின் ஒன்றும் ஒழுகாத செய்கை தழுவிப் புணர்ந்த தகையால்
உரும் ஒத்த வெங்கண், வினை தீய, வஞ்சர் உடல் உய்ந்தது இல்லை; உலகின்
கருமத்தின் நின்ற கவிசேனை வெள்ளம், மலர்மேல் அவ் வள்ளல் கடைநாள்
நிருமித்த என்ன, உயிரோடு எழுந்து நிலைநின்ற, தெய்வ நெறியால். 6.18.265

இலக்குவன் எழக்கண்ட இராமன் மகிழ்ச்சி

இளையான் எழுந்து தொழுவானை, அன்பின், இணை ஆர மார்பின் அணையா,
‘விளையாத துன்பம் விளைவித்த தெய்வம் வெளிவந்தது ‘என்ன வியவா,
இளையார்கள் அன்ன துணையோரை, ஆவி கெழுவா, எழுந்து தழுவா
முளையான திங்கள் உகிரான்முன் வந்து, முறைநின்ற வீரன் மொழிவான். 6.18.266

இராமன் கருடனை யாரென வினவி அவன் உதவியைப் பாராட்டுதல் (8399-8401)

‘ஐய! நீ யாரே? எங்கள் அருந்தவப் பயத்தினான் வந்து, இங்கு
எய்தினை; உயிரும் வாழ்வும் ஈந்தனை; எம்மனோரால்
கையுறை கோடற்கு ஒத்த காட்சியை அல்லை; மீட்சி
செய்திறம் இலையால் ‘என்றான் தேவர்க்கும் தரெிகிலாதான். 6.18.267

‘பொருளினை உணர வேறு புறத்தும் ஒன்று உண்டோ, புந்தித்
தரெுளினை உடையர் ஆயின்? செயல் அருங் கருணைச் செல்வ!
மருளினில் வரவே, வந்த வாழ்க்கை ஈது ஆகின், வாயால்
அருளினை என்னின், எய்த அரியன உளவோ? ஐய! 6.18.268

‘கண்டிலை, முன்பு; சொல்லக் கேட்டிலை; கடன் ஒன்று எம்பால்
கொண்டிலை; கொடுப்பது அல்லால், குறை இலை; இது நின் கொள்கை;
“உண்டு, இலை “ என்ன நின்ற உயிர் தந்த உதவியோனே!
பண்டு இலை நண்பு; நாங்கள் செய்வது என்? பகர்தி! என்றான 6.18.269

கருடன் விடைபெற்றுச் செல்லுதல்

பறவையின் குலங்கள் காக்கும் பாவகன் “பழைய நின்னோடு
உறவு உளதன்மை எல்லாம் உணர்த்துவென்; அரக்கனோடு அம்
மற வினை முடித்த பின்னர், வருவென் ‘ என்று உணர்த்தி, மாயப்
பிறவியின் பகைஞ! நல்கு, விடை ‘‘ எனப் பெயர்ந்து போனான். 6.18.270

இராமன் கருடனைப் புகழ்தல்

ஆரியன் அவனை நோக்கி, ‘ஆயிருர் உதவி, யாதும்
காரியம் இல்லான் போனான்; கருணையோர் கடமை ஈதால்;
பேர் இயலாளர், “செய்கை ஊதியம் பிடித்தும் “ என்னார்;
மாரியை நோக்கிக் கைம்மாறு இயற்றுமோ, வையம்? ‘என்றான். 6.18.271

அனுமன் ஆரவாரம் செய்யலாம் என்பது

“இறந்தனன், இளவல் “ என்னா, இறைவியும் இடுக்கண் எய்தும்;
மறந்தனர் உறங்கு கின்ற வஞ்சரும் மறுகி, “மீளப்
பிறந்தனர் ‘‘ என்று கொண்டு, ஓர் பெரும்பயம் பிடிப்பர் அன்றே,
அறந்தரும் சிந்தை ஐய! ஆர்த்தும் என்று அனுமன் சொன்னான் 6.18.272

அனுமன் கருத்திற்கு இராமன் உடன்படல்

‘அழகிது ‘என்று அண்ணல் கூற, ஆர்த்தனர் கடல்கள் அஞ்சிக்
குழைவுற, அனந்தன் உச்சிக் குன்றின் நின்று அண்ட கோளம்
எழ மிசை, உலகம் மேல்மேல் ஏங்கிட, இரிந்து சிந்தி
மழைவிழ, மலைகள் கீற, மாதிரம் பிளக்க மாதோ. 6.18.273

வானரங்களின் ஆரவாரத்தை இராவணன் கேட்டல்

பழிப்பு அருஞ் சிந்தையாள்பால் சிந்தனை படர, கண்கள்
விழிப்பு இலன், மேனிசால வெதும்பினன், ஈசன் வேலும்
குழிப்பு அரிது ஆய மார்பை மன்மதன் கொற்ற வாளி
கிழிப்புற, உயிர்ப்பு வீங்கிக் கிடந்த வாள் அரக்கன் கேட்டான் 6.18.274

இலங்கையில் துயிலாதார் இருவரே

தாதைசொல் தலைமேல் கொண்ட தாபதன், தரும மூர்த்தி,
ஈதைகள் தீர்க்கும் நாமத்து இராமனை எண்ணி எங்கும்
சீதையும், அவளை உன்னிச் சிந்தனை தீர்ந்து தீராப்
பேதையும், அன்றி, அவ் ஊர் யார் உளர், துயில் பெறாதார்? 6.18.275

இராவணன் இந்திரசித்தின் சொல்லை நினைந்து சிரித்தல்

சிங்க ஏறு, அசனை ஏறு கேட்டலும், ‘சீற்றம் சேனை
பொங்கியது ‘என்ன மன்னன் பொருக்கென வெழுந்து, ‘‘போரில்
மங்கினர் பகைஞர் ‘‘ என்ற வார்த்தையே வலியது! என்னா,
அங்கையோடு அங்கை கொட்டி அலங்கல் தோள் குலுங்க நக்கான் 6.18.276

ஆரவாரத்தினை இராவணன் பிரித்துணர்வது (8409-8410)

‘இடிக்கின்ற அசனி என்ன இரைக்கின்றது, இராமன் போர் வில்;
வெடிக்கின்றது அண்டம் என்ன, படுவது தம்பி வில் நாண்;
அடிக்கின்றது என்னை வந்து செவிதொறும் அனுமன் ஆர்ப்புப்
பிடிக்கின்றது உலகம் எங்கும், பரிதி சேய் ஆர்ப்பின் வெற்றி. 6.18.277

வானரசேனை பாசத்தினின்று விடுபட்டதை இராவணன் உய்த்துணர்தல்

‘அங்கதன் அவனும் ஆர்த்தான்; அந்தரம் ஆர்க்கின்றானும்,
வெங்கத நீலன்; மற்றை வீரரும், வேறு வேறு
பொங்கினர் ஆர்த்த ஓசை அண்டத்தின் புறத்தும் போன;
சங்கை ஒன்று இன்றித் தீர்ந்தார் பாசத்தை, தருமம் நல்க! 6.18.278

இராவணன் இந்திரசித்தின் மாளிகைக்குப் போதல்

என்பது சொல்லி, பள்ளிச் சேக்கை நின்று இழிந்து, வேந்தன்,
ஒன்பது கோடி வாள் கை அரக்கர் வந்து உழையின் சுற்ற,
பொன்பொதி விளக்கம் கோடிப் பூங்குழை மகளிர் ஏந்த,
தன் பெருங் கோயில் நின்றும் மகன் தனிக் கோயில் சார்ந்தான் 6.18.279

உடன் சென்ற மகளிர் (8412-8415)

தாங்கிய துகிலார், மெள்ளச் சரித்து வீழ் குழலார், தாங்கி
வீங்கிய உயிர்ப்பார் விண்ணை விழுங்கிய முலையார், மெல்லத்
தூங்கிய விழியார், தள்ளித் துளங்கிய நடையார், வல்லி
வாங்கிய மருங்கின் மாதர், அனந்தரால் மயங்கி வந்தார். 6.18.280

பானமும், துயிலும், கண்ட கனவும், பண்கனிந்த பாடல்
கானமும், தள்ளத் தள்ள, களியொடும் கள்ளம் கற்ற,
மீனினும் பெரிய, வாள் கண் விழிப்பது முகிழ்ப்பது ஆக,
வானவர் மகளிர் போனார், மழலை அம் சதங்கை மாழ்க. 6.18.281

மழையிழை நீலம் ஊட்டி, வாசமும் புகையும் மாட்டி
உழை உழை சுருட்டி, மென்பூ குவித்து இடைக்கு இடையூறு என்னாப்
பிழையுடை நுதலார் செய்த பெருங் குழல் கருங் கண் செவ்வாய்
இழை அணி மகளிர் சூழ்ந்தார், அனந்தரால் இடங்கள் தோறும் 6.18.282

தேனிடை, கரும்பில், பாலில், அமுதினில் கிளவி தேடி,
மானிடை, கயலில், வாளில், மலரிடை நயனம் வாங்கி,
மேல் நடை அனைய மற்றும் நல்வழி நல்க வேண்டி,
வானுடை அண்ணல் செய்த மங்கையர் மருங்கு சென்றார். 6.18.283

ஆரவாரம் கேட்டு அரக்கரும் அரக்கியரும் நடுங்குதல்

தொடங்கிய ஆர்ப்பின் ஓசை செவிப் புலம் தொடர்தலோடும்,
இடங்கரின் வயப் போத்து அன்ன எறுழ்வலி அரக்கர் யாரும்,
மடங்கலின் முழக்கம் கேட்ட வான்கரி ஒத்தார்; மாதர்
அடங்கலும் அசனி கேட்ட அளை உறை அரவம் ஒத்தார். 6.18.284

இராவணன் படுக்கையில் புண்ணோடு புரளும் இந்திரசித்தினைக் காணுதல்

அரக்கனும் மைந்தன் வைகும் ஆடகத்து அமைந்த மாடம்
பொருக்கெனச் சென்று புக்கான், புண்ணினிற் குமிழி பொங்கத்
தரிக்கிலன் மடங்கல் ஏற்றால் தொலைப்பு உண்டு சாய்ந்து போன,
கருக் கிளர் மேகம் அன்ன, களிறு அனையானைக் கண்டான். 6.18.285

இந்திரசித்தின் துன்ப நிலைக்குக் காரணம் வினவுதல்

எழுந்து அடி வணங்கல் ஆற்றான், இருகையும் அரிதின் ஏற்றித்
தொழும் தொழிலானை நோக்கித் துணுக்குற்ற மனத்தன் ஆகி
அழுங்கினை, ‘மைந்த! என்னை அடுத்தது? ‘என்று எடுத்துக் கேட்டான்.
புழுங்கின உள்ளத் தானும் இனையன புகலல் உற்றான். 6.18.286

இந்திரசித்தின் மறுமொழி (8419-8422)

‘உருவின் உரத்தை முற்றும், உலப்பு இல உதிரம் வற்றப்
பருகின, அளப்பிலாத பகழிகள்; கவசம் பற்று அற்று
அருகின; பின்னை, சால அலசினென்; ஐய! கண்கள்
செருகின அன்றே, யானும் மாயையில் தீர்ந்திலேனேல்? 6.18.287

இந்திரன், விடையின் பாகன், எறுழ்வலிக் கலுழன் ஏறும்
சுந்தரன், அருக்கன், என்று இத் தொடக்கத்தார் தொடர்ந்த போரில்
நொந்திலன்; இனையது ஒன்றும் நுவன்றிலன்; மனிதன் நோன்மை,
மந்தரம் அனைய தோளாய்! வரம்பு உடைத்து அன்று மன்னோ. 6.18.288

“இளையவன் தன்மை ஈதால்; இராமனது ஆற்றல் எண்ணில்,
தளை அவிழ் அலங்கல் மார்ப! நம்வயின் தங்கிற்று அன்றால்,
விளைவு கண்டு உணர்வது அல்லால், வென்றிமேல் விளையும் என்ன
உளை; அது அன்று; “ என்னச் சொன்னான் உற்றுளது உணர்ந்திலாதான். 6.18.289

‘வென்றது பாசத்தாலும், மாயையின் விளைவினாலும்;
கொன்றது, குரக்கு வீரர் தம்மொடு அக் கொற்றத் தோனை;
நின்றனன், இராமன் இன்னும்; நிகழ்ந்தவா நிகழ்க மேன்மேல் ‘
என்றனன்; என்னக் கேட்ட இராவணன் இதனைச் சொன்னான். 6.18.290

இராவணன் பகைவரின் போரொலி கேட்டிலையோ எனல்

‘வார்கழல் கால! மற்று அவ் இலக்குவன் வயிர வில்லின்
பேர் ஒலி அரவம் விண்ணைப் பிளந்திடக், குரங்கு பேர்ந்த,
கார் ஒலி மடங்க, வேலை கம்பிக்க, களத்தின் ஆர்த்த
போர் ஒலி ஒன்றும் ஐய! அறிந்திலை போலும்! ‘என்றான 6.18.291

இந்திரசித்து வியந்து விடை கூறுதல்

‘ஐய! வெம் பாசம் தன்னால் ஆர்ப்புண்டார்; அசனி என்னப்
பெய்யும் வெஞ்சரத்தால் மேனி பிளப்புண்டார்; “உணர்வு பேர்ந்தார்
உய்யுநர் ‘‘ என்று உரைத்தது உண்மையோ? ஒழிக்க ஒன்றோ?
செய்யும் என்று எண்ணத் தெய்வம் சிறிது அன்றோ? தரெியின் அம்மா! 6.18.292

அப்போது இராவணன் அனுப்பிய தூதுவர் வந்து களத்தில் கண்டதைக் கூறத் தொடங்குதல்

ஈது உரை நிகழும் வேலை, எய்தியது அறியப் போன
தூதுவர், விரைவின் வந்தார், புகுந்து, அடி தொழுதலோடும்,
‘யாது அவண் நிகழ்ந்தது? ‘என்ன இராவணன் இயம்ப, ஈறு இன்று
ஓதிய கல்வியாளர் புகுந்துளது உரைக்கலுற்றார். 6.18.293

தூதுவர் உரைத்தது (8426-8427)

‘பாசத்தால் பிணிப்புண்டாரை, பகழியால் களப் பட்டாரை,
தேசத்தார் அரசன் மைந்தன் இடை இருள் சேர்ந்து நின்றே,
ஏசத்தான் இரங்கி ஏங்கி, “உலகு எலாம் எரிப்பென் “ என்றான் :
வாசத்தார் மாலை மார்ப : வான் உறை கலுழன் வந்தான். 6.18.294

‘அன்னவன் வரவு காணா அயில் எயிற்று அரவம் எல்லாம்
சின்ன பின்னங்கள் ஆன; புண்ணொடும் அயர்வு தீர்ந்தார்;
முன்னையின் வலியர் ஆகி, மொய்க் களம் நெருங்கி, மொய்த்தார்;
இன்னது நிகழ்ந்தது ‘என்றார், அரக்கன் ஈது எடுத்துச் சொன்னான். 6.18.295

இராவணன் வீரமொழி (8428-8430)

ஏத்தருந் தடந்தோள் ஆற்றல் என்மகன் எய்த பாசம்
காற்றிடைக் கழித்துத் தீர்த்தான், கலுழன் ஆம்; காண்மின், காண்மின்!
வார்த்தை ஈது ஆயின், நன்றால், இராவணன் வாழ்ந்த வாழ்க்கை!
மூத்தது கொள்கை போலாம்? என்னுடை முயற்சி எல்லாம். 6.18.296

‘உண்டு உலகு ஏழும் ஏழும் உமிழ்ந்தவன் என்னும் ஊற்றம்
கொண்டவன், என்னோடு ஏற்ற செருவினில், மறுக்கம் கொண்டான்,
மண்டலம் திரிந்த போதும், மறிகடல் மறைந்த போதும்,
கண்டிலன் போலும், சொற்ற கலுழன், அன்று, என்னைக் கண்ணால்? 6.18.297

‘கரங்களில் நேமி சங்கம் தாங்கிய கரியோன் காக்கும்
புரங்களும் அழியப் போன பொழுதில், என் சிலையின் பொங்கி,
உரங்களின், முதுகின், தோளின், உழையுறு சிறையின் உற்ற
சரங்களும் நிற்கவே கொல், வந்தது அவ் அருணன் தம்பி? 6.18.298

இந்திரசித்தைப் போர்க்குப் போகுமாறு சொல்லுதல்

‘ஈண்டு அது கிடக்க; மேன்மேல் இயைந்தவாறு இயைக! எஞ்சி
மீண்டவர் தம்மைக் கொல்லும் வேட்கையே வேட்கும் அன்றே;
ஆண்தகை! நீயே இன்னும் ஆற்றுதி, அரும்போர் அன்னோன்
காண்டலும், நாணும் ‘என்றான்; மைந்தனும் கருத்தைச் சொன்னான 6.18.299

இந்திரசித்து நாளைக்குப் போவேன் எனல்

‘இன்று ஒரு பொழுதும் தாழ்த்து என் இகல் பெருஞ் சிரமம் நீங்கி,
சென்று ஒரு கணத்தில் நாளை நான்முகன் படைத்த தெய்வ
வென்றி வெம் படையினால் உன் மனத்துயர் மீட்பென் ‘என்றான்;
‘நன்று ‘என அரக்கன் போய், தன் நளிமலர்க் கோயில் புக்கான். 6.18.300
------------------

6.19 – Die Tötung der Heerführer

6.19 படைத் தலைவர் வதைப் படலம் ( 8433 -8534)

வானரர்கள் செய்த ஆரவாரங் கேட்ட படைத்தலைவர் போர் செய்ய இராவணனிடம் விடை கேட்டல்

ஆர்த்து எழும் ஓசை கேட்ட அரக்கரும் முரசம் ஆர்ப்ப,
போர்த்தொழில் வேட்கை பூண்டு, பொங்கினர், புகுந்து மொய்த்தார்,
தார்த் தட மார்பன் தன்னை, ‘தா, விடை ‘என்னச் சார்ந்தார்;
பார்த்தனன், முனிந்து மன்னன் இனையன பகர்வது ஆனான். 6.19.1

மாபெரும் பக்கனும் புகைக் கண்ணனும் தம்மைப் போர் செய்ய அனுப்புமாறு வேண்டுதல்

மாபெரும் பக்கனோடு வான்புகைக் கண்ணன் வந்து, ‘இங்கு
ஏவுதி எம்மை ‘என்பார் தம்முகம் இனிதின் நோக்கி,
‘போவது புரிதிர் ‘என்னப் புகறலும், பொறாத தூதர்
தேவ, மற்று இவர்கள் செய்கை கேள்! ‘எனத் தரெியச் சொன்னார் 6.19.2

தூதர்கள் மாபெரும் பக்கன் புகைக் கண்ணன் ஆகிய இருவரது செய்கையைச் சொல்லுதல்

‘ஆனையும் பரியும் தேரும் அரக்கரும் அமைந்த ஆழித்
தானைகள் வீய, நின்ற தலைமகன் தனிமை ஓரார்,
“மானவன் வாளி வாளி! “ என்கின்ற மழலை வாயார்
போனவர் மீள வந்து புகுந்தனர் போலும்! ‘என்றார். 6.19.3

இராவணன் படைத்தலைவர் மீது கோபங் கொள்ளுதல்

அற்று அவர் கூறலும் ஆர் அழலிற்றாய்
முற்றிய கோபம் முருங்க முனிந்தான்
‘இற்று இதுவோ இவர் சேவகம்? ‘என்னா
‘பற்றுமின்! ‘என்றனன் வெம்மை பயின்றான். 6.19.4

என்றலும் எய்தினர் கிங்கரர் என்பார்
பின்றலினோரை வலிந்து பிடித்தார்
நின்றனர்; ஆயிடை நீல நிறத்தான்
‘கொன்றிடுவீர் அலீர்; கொண்மின் இது’என்றான். 6.19.5

‘ஏற்றம் இனிச்செயல் வேறு இலை; ஈர்வீர்
நாற்றம் நுகர்ந்து உயர் நாசியை; நாமக்
கோல்தரு திண் பணை கொட்டினர் கொண்டு ஊர்
சாற்றுமின் “அஞ்சினர் ” என்று உரைதந்தே ‘. 6.19.6

மாலி அச் செயலைத் தடுத்துரைத்தல் (8439-8447)

அக்கணனே அயில் வாளினர் நேரா;
மிக்கு உயர் நாசியை ஈர விரைந்தார்
புக்கனர்; அப்பொழுதில் புகழ் தக்கோய்!
தக்கிலது ‘என்றனன் மாலி தடுத்தான். 6.19.7

‘அம்சமம் அஞ்சி அழிந்துளர் ஆனார்
வெம்சமம் வேறலும் வென்றியது இன்றாய்த்
துஞ்சலும் என்று இவை தொல்லைய அன்றே?
தஞ்சு என ஆர் உளர் ஆண்மை தகைந்தார்? 6.19.8

‘அந்தரம் ஒன்றும் அறிந்திலை அன்றே;
வந்தன நம்வயின் எத்தனை மன்னா!
தந்திரம் வானவர் தானவர் என்னும்
இந்திரன் அஞ்சினன்; எண்ணுதி அன்றே; 6.19.9

‘வருணன் நடுங்கினன் வந்து வணங்கிக்
கருணை பெறும் துணையும் உயிர் கால்வான்;
இருள் நிற வஞ்சகர் எங்கு உளர்? எந்தாய்?
பருணிதர் தண்டம் இது அன்று பகர்ந்தால். 6.19.10

‘பத்து ஒரு நாலு பகுத்த பரப்பின்
அத்தனை வெள்ளம் அரக்கர் அவிந்தார்;
ஒத்து ஒரு மூவர் பிழைத்தனர் உய்ந்தார்;
வித்தக யார் இனி வீரம் விளைப்பார்? 6.19.11

‘பாசமும் இற்றது; பாதியின் மேலும்
நாசமும் உற்றது; நம்பி! நடந்தாய்;
பூசல் முகத்து ஒரு கான்முளை போதா
நீசரை ஈருதியோ நெடு நாசி? 6.19.12

“வாழி இலக்குவன் ” என்னின் மறுக்குற்று
ஆழி அரக்கர்தம் வாயில் அடைப்பார்;
ஏழு கடல் துணையோ? இனி நாசி
ஊழி அறுத்திடினும் உலவாதால். 6.19.13

‘தூது நடந்தவனைத் தொழுது அந்நாள்
ஓது நெடுஞ்செரு அஞ்சி உடைந்தார்
தீது இலர் நின்றவர் சேனையின் உள்ளார்
பாதியின் மேலுளர் நாசி படைத்தார். 6.19.14

‘விட்டிலை சீதையை ஆமெனின் வீரர்
ஒட்டிய போரினில் ஆர் உளர் ஓடார்?
“வெட்டுதி நாசியை வெந்தொழில் வல்லோர்
பட்டிலர் “ என்றிலை ‘என்று பகர்ந்தான். 6.19.15

மாபெரும் பக்கனும் புகைக்கண்ணனும் கூறுதல் (8448-8451)

ஆறின பின்னர் அழிந்தனர் அன்னார்
தேறினர் அன்னது சிந்தை உணர்ந்தார்
சீறிய நெஞ்சினர் செங்கணர் ஒன்றோ
கூறினர் தம்நிலை செய்கை குறித்தார். 6.19.16

‘உன்மகன் ஒல்கி ஒதுங்கினன் ஒன்றோ?
மின் நகு வான் இடை ஏக விரைந்தான்
அன்னதின் மாயை இயற்றி அகன்றான்
இந்நகர் எய்தினன் உய்ந்தனன் எந்தாய்! 6.19.17

‘இப்பகல் ஒன்றினின் நாளையின் அல்லால்
முப்பகல் தீர்கிலம்; ஆவி முடிப்போம்
வெப்பு அகலா எரி வெந்தழல் வெந்த
செப்பு அகல் வெண்ணெயின் நோன்மை தரெிந்தோய்! 6.19.18

‘விட்டனை எம்மை விடுத்து இனி வெம்போர்
பட்டனர் ஒன்று படுத்தனர் ஒன்றோ
கெட்டனர் என்பது கேளலை ‘என்னா
ஒட்டினர் ஆவி முடிக்க உவந்தார். 6.19.19

இராவணன் அப் படைத்தலைவர் இருவருடன் சேனைகளை அனுப்புதல்

அன்னவர் தம்மொடும் ஐ இரு வெள்ளம்
மின்னு படைக்கை அரக்கரை விட்டான்;
சொன்ன தொகைக்கு அமையானை சுடர்த்தேர்
துன்னு வயப் பரியோடு தொகுத்தான். 6.19.20

படைத்தலைவர் போருக்குப் புறப்படுதல் (8453-8454)

நெய் அழல் வேள்வி நெடும்பகை நேர் விண்
தைவரு சூரிய சத்துரு என்பான்
பெய்கழல் மாலி பிசாசன் எனும் பேர்
வெய்யவன் வச்சிரம் வென்ற எயிற்றான். 6.19.21

என்றவரோடும் எழுந்து உலகு ஏழும்
வென்றவன் ஏவலின் முன்னம் விரைந்தார்;
சென்றன மால்கரி தேர் பரி செல்லக்
குன்று இனம் என்ன நடந்தனர் கோட்பால். 6.19.22

சேனைகள் சென்ற காட்சி (8455-8460)

விண்ணை விழுங்கிய தூளிய விண்ணோர்
கண்ணை விழுங்குதலின் கரை காணார்
எண்ணை விழுங்கிய சேனையை யாரும்
பண்ணை விழுங்க உணர்ந்திலர் பண்பால். 6.19.23

கால்கிளர் தேரொடு கால் வரையோடு
மேல்கிளர் பல்கொடி வெண்திரை வீச
மால்கடல் ஆனது மாமழை வானம்
பால்கிளர் மீனிடை ஆடிய பண்பால். 6.19.24

பேரி கலித்தன பேர் உலகைச் சூழ்
ஏரி கலித்தன ஆம் என; யானை
கார் இகலிக் கடலோடு கலித்த;
மாரி கலித்து என வாசி கலித்த. 6.19.25

சென்றன சென்ற சுவட்டொடு செல்லா
நின்று பிணங்கிய கல்வியின் நில்லா
ஒன்றினை ஒன்று தொடர்ந்தன ஓடைக்
குன்று நடந்தன போல் கொலை யானை 6.19.26

மாக நெடுங்கரம் வானின் வழங்கா
மேக நெடும்புனல் வாரின மேன்மேல்
போக விலங்கின உண்டன போலாம்
காக நெடுங்கனி யானை களிப்பால். 6.19.27

எரிந்து எழு பல்படையின் ஒளி வீரர்
அருங்கல மின் ஒளி தேர் பரி யானை
பொருந்திய பண் ஒளி தார் ஒளி பொங்க
இரிந்தது பேரிருள் எண் திசை தோறும். 6.19.28

இராமன் வீடணனை வினாவுதல்

எய்திய சேனையை ஈசன் எதிர்ந்தான்
‘வெய்து இவண் வந்தவன் மாயையின் வெற்றி
செய்தவனேகொல்; தரெித்தி இது ‘என்றான்;
ஐயமில் வீடணன் அன்னது உரைத்தான். 6.19.29

வீடணன் இராமனுக்கு வீரர்களைப் பற்றிக் கூறுதல் (8462-8467)

‘முழைக் குலச் சீயம் வெம்போர் வேட்டது முனிந்தது என்ன,
புழைப்பிறை எயிற்றுப் பேழ்வாய், இடிக் குலம் பொடிப்ப, ஆர்த்து,
தழைப்பொறி வாளிப் புட்டில் கட்டி, வில் தாங்கி, சார்வான்
மழை குரல் தேரின் மேலான் மாபெரும் பக்கன் மன்னோ. 6.19.30

‘சிகை நிறக் கனல் பொழி தறெுகண் செக்கரான்
பகைநிறத்தவர் உயிர் பருகும் பண்பினான்
நகைநிறப் பெருங்கடை வாயை நக்குவான்
புகைநிறக் கண்ணவன் பொலம் பொன்தேரினான். 6.19.31

‘பிச்சரின் திகைத்தன பெற்றிப் பேச்சினான்
முச்சிரத்து அயிலினான் மூரித் தேரினான்
“இச் சிரம் உம்மதே? ” என வந்து எய்துவான்
வச்சிரத்து எயிற்றவன் மலையின் மேனியான். 6.19.32

‘காலையும் மனத்தையும் பிறகு காண்பது ஓர்
வால் உளை புரவியன் மடித்த வாயினன்
வேலையின் ஆர்ப்பினன் விண்ணை மீக்கொளும்
சூலம் ஒன்று உடையவன் பிசாசன் தோன்றுவான். 6.19.33

‘சூரியன் பகைஞன் அச்சுடர் பொன் தேரினன்
நீரினும் முழக்கினன் நெருப்பின் வெம்மையான்;
ஆரிய! வேள்வியின் பகைஞன் ஆம் அரோ
சோரியும் கனலியும் சொரியும் கண்ணினான். 6.19.34

‘சாலி வண்கதிர் நிகர் புரவித் தானையான்
மூலவெங் கொடுமையின் தவத்தின் முற்றினான்
சூலியும் வெரு கொளத் தேரில் தோன்றுவான்
மாலி’என்று அடிமுறை வணங்கிக் கூறினான். 6.19.35

வானரரும் அரக்கரும் பொருதல் (8468-8483)

ஆர்த்து எதிர் நடந்தது அவ் அரியின் ஆர்கலி
தீர்த்தனை வாழ்த்தி; உற்று இரண்டு சேனையும்
போர்த் தொழில் புரிந்தன; புலவர் போக்கு இலார்
வேர்த்து உயிர் பதைத்தனர் நடுங்கி விம்மியே. 6.19.36

கல் எறிந்தன கடை உருமின் கார் என
வில் எறிந்தன கணை; விசும்பின் மேகத்துச்
செல் எறிந்தன எனச் சிதறி வீழ்ந்தன
பல் எறிந்தன தலை மலையின் பண்பு என. 6.19.37

கடம் படு கரிபட கலின மாப்பட
இடம்படு சில்லியின் ஈர்ந்த தேர்பட
உடம்பு அடும் அரக்கரை அனந்தன் உச்சியில்
படம்படும் எனப்படும் கவியின் கல்பல. 6.19.38

கொலை ஒடுங்கா நெடும் புயத்தின் குன்றொடும்
நிலைநெடுங் காலொடும் நிமிர்ந்த வாலொடும்
மலையொடும் மரத்தொடும் கவியின் வல்நெடுந்
தலையொடும் போம் விசைத்து எறிந்த சக்கரம். 6.19.39

ஆண்தகைக் கவிக்குலத் தலைவர் ஆக்கையைக்
கீண்டன புவியினைக் கிழித்த மாக் கரி
தாண்டுவ குலம் பரி மனத்தின் தாவுவ
தூண்டினர் கைவிசைத்து எறிந்த தோமரம். 6.19.40

சில்லி அம் தேர்க்கொடி சிதைய சாரதி
பல்லொடு நெடுந்தலை மடிய பாதகர்
வில்லொடு கழுத்து இற பகட்டை வீட்டுமால்
கல்லெனக் கவிக்குலம் வீசும் கல் அரோ. 6.19.41

கரகம் உந்திய மலை முழையில் கண் செவி
உரகம் முந்தின என ஒளிக்கும் ஒள் இலை
அரகம் முந்தின நெடுங் கவிகள் ஆக்கையில்
துரகம் உந்தினர் எடுத்து எறியும் குலமே. 6.19.42

வால் பிடித்து அடிக்கும் வானரத்தை மால்கரி;
கால் பிடித்து அடிக்கும் அக் கரியினைக் கவி;
தோல் பிடித்து அரக்கரை எறியும் சூர் முசு;
வேல் பிடித்து எறிவர் அம் முசுவை வெம் கணார். 6.19.43

முன் படு கவிக் குலம் முடுக வீசிய
கல்பட களம்படும் அரக்கர் கார்க் கடல்;
பல்படு தலைபடப் படுவ பாதகர்
வில்படு கணைபட குரங்கின் வேலையே. 6.19.44

எயிற்றொடு நெடுந்தலை இட்ட கல்லொடும்
வயிற்றிடை புக பல பகலும் வைகிய
பயிற்றியர் ஆயினும் தரெிக்கும் பண்பு இலார்
அயிர்ப்பர் தம் கணவரை அணுகி அந் நலார். 6.19.45

கிச்சு உறு கிரி பட கிளர் பொன் தேர் நிரை
அச்சு இற செல்கில ஆடல் வாம் பரி
எச்சு உறு துயர் இடை எய்த ஈத்து உணா
முச்சு இறு வாழ்க்கையின் மூண்டுேளார் என. 6.19.46

மீயவர் யாவரும் வீய வெம் கரி
சேயிருங் குருதியில் திரிவ சேர்வு இல
நாயகர் ஆெளாடும் அவிய நவ்விதம்
பாயொடு வேலையில் திரியும் பண்பின. 6.19.47

படையொடு மேலவர் மடிய பல்பரி
இடை இடை தர விழுந்து இழிந்த பண்பன
கடல் நெடுங் குருதிய கனலி காலுறு
வடவையை நிகர்த்தன உதிரம் வாயன. 6.19.48

தூமக் கண்ணனும் அனுமனும் எதிர் எதிர் தொடர்ந்தார்;
தாமத்து அங்கதன் மாபெரும் பக்கனைத் தடுத்தான்;
சேமத் திண்சிலை மாலியும் நீலனும் செறுத்தார்;
வாம் அப் போர் வயப் பிசாசனும் பனசனும் மலைந்தார். 6.19.49

சூரியன் பெரும் பகைஞனும் சூரியன் மகனும்
நேர் எதிர்ந்தனர்; நெருப்புடை வேள்வியின் பகையும்
ஆரியன் தனித் தம்பியும் எதிரெதிர் அடர்ந்தார்;
வீர வச்சிரத்து எயிற்றனும் இடபனும் மிடைந்தார். 6.19.50

வெங்கண் வெள் எயிற்று அரக்கரில், கவிக்குல வீரச்
சிங்கம் அன்ன போர்த் தலைவரில், தலைவராய்த் தரெிந்தார்,
அங்கு அமர் களத்து ஒருவரோடு ஒருவர் சென்று அடர்ந்தார்;
பொங்கு வெஞ்செருத் தேவரும் நடுக்குறப் பொருதார்; 6.19.51

அரக்கர் சேனையின் அழிவு

இன்ன காலையின், ஈர் ஐந்து வெள்ளம், வந்து ஏற்ற
மின்னும் வெள் எயிற்று அரக்கர்தம் சேனையில், வீரன்
அன்ன வெஞ் சமத்து ஆறு வெள்ளத்தையும் அவித்தான்;
சொன்ன நாலையும் இலக்குவன் பகழியால் தொலைத்தான். 6.19.52

இரத்த வெள்ளம் கடலொடு சேர்ந்த தோற்றம் (8485-8486)

உப்புடைக் கடல் மடுத்தன உதிரநீர் ஓதம்
அப்பொடு ஒத்தன கடுத்தில, ஆர்கலி முழுதும்
செப்பு உருக்கு எனத் தரெிந்தது; மீன்குலம் செருக்கித்
துப்பொடு ஒத்தன, முத்து இனம் குன்றியின் தோன்ற. 6.19.53

தத்து நீர்க் கடல் முழுவதும் குருதியாய்த் தயங்க,
சித்திரக் குலப் பல் நிற மணிகளும் சேந்த;
ஒத்து வேறு உருத் தரெியல, உயர் மதத்து ஓங்கல்
மத்தகத்து உகுதரளமும், வளை சொரி முத்தும். 6.19.54

சூரியன் தோன்றுதல்

அதிரும் வெஞ்செரு அன்னது ஒன்று அமைகின்ற அளவில்,
கதிரவன், கொழுஞ் சேயொளிக் கற்றை அம் கரத்தால்,
எதிரும் வல் இருள் கரி இறுத்து எழுமுறை, முழுகி,
உதிர வெள்ளத்துள் எழுந்தவன் ஆமென உதித்தான். 6.19.55

வெயில் பரத்தல்

அரக்கர் என்ற பேர் இருளினை இராமன் ஆம் இரவி
துரக்க, வெஞ்சுடர்க் கதிரவன் புறத்து இருள் தொலைக்க,
புரக்கும் வெய்யவர் இருவரை உடையன போல,
நிரக்கும் நல் ஒளி பரந்தன, உலகு எலாம் நிமிர. 6.19.56

போர்க்களக் காட்சி (8489-8491)

நிலைகொள் பேர் இருள் நீங்கலும், நிலத்திடை நின்ற
மலையும் வேலையும் வரம்பு இல வயின்தொறும் பரந்து,
தொலைவு இல் தன்மைய தோன்றுவ போன்றன சோரி
அலைகொள் வேலையும் அரும் பிணக் குன்றமும் அணவி 6.19.57

நிலம் தவாத செந்நீர் இடை, நிணக் கொழுஞ் சேற்றில்
புலர்ந்த காலையில், பொறி வரி அம்பு எனும் தும்பி
கலந்த தாமரைப் பெருவனம், கதிரவன் கரத்தால்
மலர்ந்தது ஆம் எனப் பொலிந்தன, உலந்தவர் வதனம 6.19.58

தேரும் யானையும் புரவியும் விரவின தேவர்
ஊரும் மானமும் மேகமும் உடுக்கள் தம் உலகும்
பேரும் ஆன வெம் காலத்துக் கால்பொர பிணங்கிப்
பாரின் வீழ்ந்தன போன்றன கிடந்தன பரந்த. 6.19.59

போர்க்களம் எய்திய அரக்கியரின் தன்மையும் செயலும் (8492-8499)

எல்லி சுற்றிய மதிநிகர் முகத்தியர் எரிவீழ்
அல்லி சுற்றிய கோதையர் களம் புகுந்து அடைந்தார்
புல்லி முற்றிய உயிரினர் பொருந்தினர் கிடந்தார்
வல்லி சுற்றிய மாமரம் நிகர்த்தனர் வயவர். 6.19.60

வணங்கு நுண்ணிடை, வனமுலை, செக்கர் வார் கூந்தல்,
அணங்கு வெள் எயிற்று, அரக்கியர் களத்து வந்து அடைந்தார்
குணம் கொளும் துணைக் கணவர்தம் பசுந்தலை கொடாது
பிணங்கு பேய்களின் வாய்களைப் பிளந்தனர் பிடித்தார் 6.19.61

சுடரும் வெள்வளைத் தோளி, தன் கொழுநனைத் தொடர்வாள்,
உடரும் அங்கமும் கண்டு, கொண்டு ஒருவழி உய்ப்பாள்,
குடரும் ஈரலும் கண்ணும், ஓர் குறுநரி கொள்ள,
தொடர ஆற்றலள், நெடிது உயிர்த்து, ஆருயிர் துறந்தாள் 6.19.62

பெரிய வாள் தடங் கண்ணியர், கணவர்தம் பெருந்தோள்
நரிகள் ஈர்த்தன, வணங்கவும் இணங்கவும் நல்கா
இரியல் போவன தொடர்ந்து, அயல் இனப் படைகிடந்த
அரிய நொந்திலர் அலத்தகச் சீறடி, அயர்ந்தார் 6.19.63

நலம்கொள் நெஞ்சினர், தம் துணைக் கணவரை நாடி,
விலங்கல் அன்னவான் பெரும்பிணக் குப்பையின் மேலார்
அலங்கல் ஓதியர், அருந்துணை பிரிந்து நின்று அயரும்,
பொலம்கொள் மாமயில் வரையின் மேல் திரிவன போன்றார். 6.19.64

சிலவர் தம் பெருங் கணவர்தம் செருத்தொழில் சினத்தால்
பலரும், வாய் மடித்து உயிர்துறந் தார்களைப் பார்த்தார்,
‘அலைவு இல் வெள் எயிற்றால் இதழ் மறைத்துளது, அயலாள்
கலவியின் குறி காண்டும் என்று ஆம்‘ எனக் கனன்றார். 6.19.65

நவைசெய், வன்தலை இழந்த தம் நண்பரை நணுகி
அவசம் எய்திய மடந்தையர் உருத் தரெிந்து அறியார்,
துவசம் அன்ன தம் கூர் உகிர்ப் பெருங்குறி, தோள்மேல்
கவசம் நீக்கினர், கண்டுகண்டு, ஆருயிர் கழித்தார். 6.19.66

மாரி ஆக்கிய கண்ணியர், கணவர்தம் வயிரப்
போர் யாக்கைகள் நாடி, அப் பொருகளம் புகுந்தார்,
பேர் யாக்கையின் பிணப்பெருங் குன்றிடைப் பிறந்த
சோரி ஆற்றிடை அழுந்தினர், இன் உயிர் துறந்தார். 6.19.67

அனுமனுடன் பொருது புகைக்கண்ணன் மடிதல் (8500-8504)

வகை நின்று உயர் தாள் நெடு மாருதியும்
புகையின் பொரு கண்ணவனும் பொருவார்;
மிகை சென்றிலர் பின்றிலர்; வென்றிலரால்;
சிகை சென்று நிரம்பிய தீ உமிழ்வார். 6.19.68

ஐ அஞ்சு அழல் வாளி அழற்கொடியோன்
மெய் அஞ்சனை கான்முளை மேனியின்மேல்
வை அம் சிலை ஆறு வழங்கினனால்
மொய் அஞ்சன மேகம் முனிந்தனையான். 6.19.69

பாழிப் புயம் அம்பு உருவப் படலும்
வீழிக் கனிபோல் புனல்வீச வெகுண்டு
ஆழிப் பெருந் தேரை அழித்தனனால்
ஊழிப் பெயர் கார் நிகர் ஒண்திறலான். 6.19.70

சில்லிப் பொருதேர் சிதைய சிலையோடு
எல்லின் பொலி விண்ணின் விசைத்து எழுவான்
வில் இற்றது இலக்குவன் வெம் கணையால்;
புல்லித் தரை இட்டனன் நேர் பொருவான். 6.19.71

மலையின் பெரியான் உடல் மண்ணிடை இட்டு
உலையக் கடல் தாவிய கால்கொடு உதைத்து
அலையின் பருகிப் பகுவாய் அனல்கால்
தலை கைக் கொடு எறிந்து தணிந்தனனால். 6.19.72

அங்கதனொடு மாபக்கன் பொருது அழிதல் (8505-8510)

மாபக்கனும் அங்கதனும் மலைவார்
தீபம் அத்து இன் எரிந்து எழு செங்கணினார்
கோபத்தினர் கொல்ல நினைந்து அடர்வார்
தூபத்தின் உயிர்ப்பர் தொடர்ந்தனரால். 6.19.73

ஐம்பத்தொரு வெங்கணை அங்கதன் மா
மொய்ம்பில் புக உய்த்தனன் மொய் தொழிலான்
வெம்பி களியோடு விளிந்து எழு திண்
கம்பம் கரி உண்டை கடாய் எனவே. 6.19.74

ஊரோடு மடுத்து ஒளியோனை உறும்
காரோடு நிறக் கத நாகம் அனான்
தேரோடும் எடுத்து உயர் திண் கையினால்
பாரோடும் அடுத்து எறி பண்பு இடையே. 6.19.75

வில்லைச் செல வீசி விழுந்து அழியும்
எல்லின் பொலி தேர் இடை நின்று இழியா
சொல்லின் பிழையாதது ஒர் சூலம் அவன்
மல்லின் பொலி மார்பின் வழங்கினனால். 6.19.76

‘சூலமெனின் அன்று இது; தொல்லை வரும்
காலம் ‘என உன்னு கருத்தினனாய்
ஞாலம் உடையான் அது நாம் அற ஓர்
ஆலம் உடை அம்பின் அறுத்தனனால். 6.19.77

உளம்தான் நினையாதமுன் உற்று உகவாக்
கிளர்ந்தானை இரண்டு கிழித் துணையாய்ப்
பிளந்தான் உலகு ஏழினொடு ஏழு பெயர்ந்து
அளந்தான் ‘வலி நன்று ‘என அங்கதனே. 6.19.78

மாலியும் நீலனும் பொருதல் (8511-8512)

மா மாலியும் நீலனும் வானவர்தம்
கோமானொடு தானவர்கோன் இகலே
ஆமாறு மலைந்தனர் என்று இமையோர்
பூ மாரி பொழிந்து புகழ்ந்தனரால். 6.19.79

கல் ஒன்று கடாவிய காலை அவன்
வில் ஒன்று இரு கூறு விளைத்திடலும்
செல் ஒன்றிய வாள் ஒடு தேரினன் ஆய்
‘நில்! ‘என்று இடை சென்று நெருக்கினனால். 6.19.80

இடையே வந்து குமுதன் எறிந்த குன்றால் மாலியின் தேர் பொடியாதல்

அற்று அத்தொழில் எய்தலும் அக் கணனே
மற்றப் புறம் நின்றவன் வந்து அணுகா
கொற்றக் குமுதன் ஒரு குன்று கொளா
எற்ற பொருதேர் பொடி எய்தியதால். 6.19.81

மாலியின் தோளை இலக்குவன் துணித்தல்

தாளார் மரம் நீலன் எறிந்தன தன்
வாளால் மடிவித்து வலித்து அடர்வான்
தோள் ஆசு அற வாளி துரந்தனனால்
மீளா வினை நூறும் விடைக்கு இளையான். 6.19.82

கையற்ற மாலியுடன் பொருதல் தகாது என இலக்குவன் அப்பால் செல்லுதல்

மின்போல் மிளிர் வாெளாடு தோள் விழவும்
தன் போர் தவிராதவனை சலியா
‘என்போலியர் போரெனின் அன்று; இது ஓர்
புன்போர் ‘எனநின்று அயல் போயினனால். 6.19.83

வானரவீரர் இராமனிடம் இலக்குவனைப் புகழ்ந்து கூறுதல்

நீர் வீரை அனான் எதிர்நேர் வரலும்
பேர் வீரனை வாசி பிடித்தவனை
‘யார் வீரதை இன்ன செய்தார்கள்? ‘எனா
போர் வீரர் உவந்து புகழ்ந்தனரால். 6.19.84

வேள்விப் பகைஞன் இலக்குவனொடு பொருது மடிதல் (8517-8518)

வேள்விப் பகையோடு வெகுண்டு அடரும்
தோள் வித்தகன் அங்கு ஓர் சுடர்க் கணையால்
‘வாழ்வு இத்தனை ‘என்று அவன் மார்பு அகலம்
போழ்வித்தனன்; ஆர் உயிர் போயினனால். 6.19.85

மல்லல் தடமார்பன் வடிக் கணையால்
எல் உற்று உயர்வேள்வி இரும்பகைஞன்
வில் அற்றது தேரொடு; மேல் நிமிரும்
கல் அற்ற; கழுத்தொடு கால்கெளாடும். 6.19.86

சூரியன் பகைவனைச் சுக்கிரீவன் கொல்லுதல்

தன் தாதையை முன்பு தடுத்து ஒருநாள்
வென்றானை விலங்கலின் மேனியனை
பின்றாத வலத்து உயர் பெற்றியனை
கொன்றான் கவியின் குலம் ஆளுடையான். 6.19.87

இடபனும் வச்சிரத்து எயிற்றனும் பொருதல் (8520-8521)

இடபன் தனி வெஞ் சமம் உற்று எதிரும்
விட வெங்கண் எயிற்றவன் விண் அதிரக்
கடவும் கதழ் தேர் கடவு ஆளினொடும்
பட அங்கு ஒரு குன்று படர்த்தினனால். 6.19.88

திண்தேர் அழிய சிலை விட்டு ஒரு தன்
தண்டோடும் இழிந்து தலத்தினன் ஆய்
‘உண்டோ உயிர்? ‘என்ன உருத்து உருமோடு
எண் தோளனும் உட்கிட எற்றினனால். 6.19.89

இடபன் அடியுண்டு அயர, அனுமன் வச்சிரத்தயெிற்றனோடு பொருதல் (8522-8523)

‘அடி உண்டவன் ஆவி குலைந்து அயரா
இடி உண்ட மலைக் குவடு இற்றது போல்
முடியும் ‘எனும் எல்லையில் முந்தினனால்
‘நெடியன் குறியன் ‘எனும் நீர்மையினான். 6.19.90

கிடைத்தான் இகல் மாருதியை கிளர் வான்
அடைத்தான் என மீது உயர் ஆக்கையினைப்
படைத்தானை நெடும் புகழ்ப் பைங்கழலான்
புடைத்தான் அவன் மார்பு பொடிச் சிதற. 6.19.91

அனுமனால் வச்சிரத்தயெிற்றன் மடிதல்

எற்றிப் பெயர்வானை இடக் கையினால்
பற்றி கிளர் தண்டு பறித்து எறியா
வெற்றிக் கிளர் கைக்கொடு மெய் வலி போய்
முற்ற தனி குத்த முடிந்தனனால். 6.19.92

பிசாசன் பனசனொடு பொருதல் (8525-8530)

காத்து ஓர்மரம் வீசு உறு கைக் கதழ்வன்
போத்து ஓர் புலிபோல் பனசன் புரள
கோத்து ஓட நெடுங் குருதிப் புனல் திண்
மாத் தோமரம் மார்பின் வழங்கினனால். 6.19.93

கார் மேலினனோ? கடல் மேலினனோ?
பார் மேலினனோ? பகல் மேலினானோ?
யார் மேலினனோ? இன என்று அறியாம்;
போர் மேலினன் வாசி எனும் பொறியான். 6.19.94

‘நூறாயிர கோடிகொல்? அன்றுகொல்? என்று
ஆறு ஆயிரம் வானரும் அறிவின்
தேறா வகை நின்று திரிந்து உளதால்
பாறாடு களத்து ஒரு பாய் பரியே. 6.19.95

கண்ணின் கடுகும்; மனனின் கடுகும்;
விண்ணில் படர் காலின் மிகக் கடுகும்;
உள் நிற்கும் எனின் புறன் நிற்கும்; உலாய்
மண்ணில் திரியாத வயப் பரியே. 6.19.96

மாப் புண்டர வாசியின் வட்டணைமேல்
ஆப்புண்டவன் ஒத்தவன் ஆர் அயிலால்
பூப் புண்தர ஆவி புறத்து அகல
கோப்புண்டன வானர வெங் குழுவே. 6.19.97

‘நூறும் இருநூறும் நொடிப்பு அளவின்
ஏறும் நுதிவேலின் இறைப் பொழுதில்
சீறும் கவி சேனை சிதைக்கும் ‘எனா
ஆறும் திறல் உம்பரும் அஞ்சினரால். 6.19.98

இலக்குவன் காற்றின் படையால் பிசாசனைக் கொல்லுதல் (8531-8532)

தோற்றும் உரு ஒன்று எனவே துணியா
கூற்றின் கொலையால் உழல் கொள்கையனை
ஏற்றும் சிலை ஆண்மை இலக்குவன் வெங்
காற்றின் படை கொண்டு கடந்தனனால். 6.19.99

குலையப் பொருசூலன் நெடுங் கொலையும்
உலைவு உற்றில உய்த்தலும் ஓய்வு இலன்; ஒண்
தலை அற்று உகவும் தரை உற்றிலனால்;
இலையப் பரிமேல் கொள் இருக்கையினான். 6.19.100

சீதைக்கு நன்னிமித்தம் தோன்றுதலும் இயமதூதரும் இராவணன் தூதரும் தம் நகர் சேர்தலும்

சென்று ஊதின தும்பிகள்; தனெ்திசையான்
வன் தூதரும் ஏகினர்; வஞ்சனையான்
தன் தூதரும் ஏகினர் தம் நகர்வாய். 6.19.101

இராவணனிடத்துத் தூதர் நிகழ்ந்த செய்தியை அறிவித்தல்

ஏகி தனிமன்னன் இருந்துழி புக்கு
‘ஓகை பொருள் இன்று ‘என உள் அழியா
வேகம் அத்து அடல் வீரர் விளிந்த எலாம்
சோகத்தொடு இறைஞ்சினர் சொல்லினரால். 6.19.102
----------------

6.20 – Die Tötung Makarakannans

6.20 மகரக் கண்ணன் வதைப் படலம் (8535 - 8572)

இராவணன் தூதர் சொல்லைக் கேட்டு வருந்துதல்

சொன்னார் அவர்; சொல் செவியில் தொடர்வோன்
இன்னாத மனத்தின் இலங்கையர் கோன்
வெம் நாக உயிர்ப்பினன் விம்மினனால்;
அன்னான் நிலை கண்டு அயல்நின்று அறைவான் : 6.20.1

மகரக் கண்ணன் போர்க்குச் செல்ல விடையளிக்குமாறு இராவணனை வேண்டுதல் (8536-8538)

'முந்தே என தாதையை மொய் அமர்வாய்
அந்தோ! உயிர் உண்டவன் ஆருயிர்மேல்
உந்தாய்; எனை யாதும் உணர்ந்திலையோ?
எந்தாய்! ஒரு நீ இடர் கூருதியோ? 6.20.2

யானே செல எண்ணுவன் எய்த அவன்
தான் நேர்வது தீது எனவே தணிவேன்;
வானே நிலனே முதல் மற்றும் எலாம்
கோனே எனை வெல்வது ஒர் கொள்கையதோ? 6.20.3

'அருந்துயர்க் கடல் உளான் என் அம்மனை, அழுத கண்ணள்,
பெருந்திருக் கழித்தல் ஆற்றாள், "கணவனைக் கொன்று பேர்ந்தோன்
கருந்தலைக் கலத்தின் அல்லால், கடனது கழியேன் என்றாள்;
பருந்தினுக்கு இனிய வேலாய்! இன்னருள் பணித்தி 'என்றான். 6.20.4

மகரக் கண்ணன் இராவணனிடம் விடைபெற்றுப் போருக்குச் செல்லுதல் (8539-8540)

அவ் உரை மகரக் கண்ணன் அறைதலும், அரக்கன், 'ஐய!
செவ்விது; சேறி! சென்று, உன் பழம் பகை தீர்த்தி! 'என்றான்
வெவ்வழி அவனும், பெற்ற விடையினன் தேர்மேற் கொண்டான்.
வவ்விய வில்லன் போனான், வரம் பெற்று வளர்ந்த தோளான். 6.20.5

தன்னுடைச் சேனை கோடி ஐந்து உடன் தழுவ, தானை
மன்னுடைச் சேனை வெள்ளம் ஓர் ஐந்து மழையின் பொங்கிப்
பின்னுடைத்தாக, பேரி கடல்பட பெயர்ந்த தூளி
பொன் உடைச் சியைத்து உச்சிக்கு உச்சியும் புதைய, போனான். 6.20.6

சோணிதக் கண்ணன் முதலியோர் இராவணன் ஏவலால் மகரக் கண்ணனுடன் செல்லுதல்

'சோணிதக் கண்ணனோடு சிங்கனும், துரகத் திண்தேர்த்
தாள்முதல் காவல் பூண்டு செல்க' என, 'தக்கது 'என்னா
ஆள்முதல் தானையோடும் அனைவரும் தொடரப் போனான்,
நாள்முதல் திங்கள் தன்னைத் தழுவிய அனைய நண்பான். 6.20.7

அரக்கர் சேனை செல்லும் திறம் (8542-8543)

பல்பெரும் பதாகைப் பத்தி மீமிசைத் தொடுத்த பந்தர்,
எல்லவன் சுடர் ஒண் கற்றை முற்ற, இன்நிழலை ஈய,
தொல் சின யானை அம்கை விலாழி நீர்த் துவலை தூற்ற,
செல் பெருங் கவியின் சேனை அமர்த் தொழில் சிரமம் தீர்ந்த 6.20.8

'முழங்கின யானை; வாசி ஒலித்தன; முரசின் பண்ணை
தழங்கின; வயவர் ஆர்த்தார் ' என்பதோர் முறைமை தள்ள,
வழங்கின, பதலை ஓதை, அண்டத்தின் வரம்பின் காறும்;
புழுங்கின உயிர்கள், யாண்டும் கால்புகப் புரை இன்றாக 6.20.9

அரக்கர்க்கும் வானரர்க்கும் போர் நிகழ்தல் (8544-8546)

வெய்தினின் உற்ற தானை முறைவிடா நூழில் வெம் போர்
செய்தன; செருக்கிச் சென்று நெருக்கினர் தலைவர்; சேர்த்த
கையொடு கைகள் உற்றுக் கலந்தன; கல்லும் வில்லும்
எய்தன எறிந்த; யானை ஈர்த்தன கோத்த சோரி. 6.20.10

வானர வீரர் விட்ட மலைகளை அரக்கர் வவ்வி,
மீனொடு மேகம் சிந்த விசைத்தனர் மீட்டும் வீச,
கானகம் இடியுண்டு என்னக் கவிக்குலம் மடியும் கவ்வி,
போனகம் நுகரும் பேய்கள் வாய்ப் புறம் புடைப்போடு ஆர்ப்ப 6.20.11

மைந் நிற அரக்கர் வன்கை வயிர வாள் வலியின் வாங்கி,
மெய்ந் நிறத்து எறிந்து கொல்வர், வானர வீரர்; வீரர்
கை நிறைத்து எடுத்த கல்லும் மரனும் தம் கரத்தின் வாங்கி,
மொய்ந்நிறத்து எறிவர், எற்றி முருக்குவர்; அரக்கர் முன்பர். 6.20.12

மகரக் கண்ணன் இராமன் மேற்சேறல்

வண்டு உலாம் அலங்கல் மார்பன் மகரக்கண் மழை ஏறு என்ன,
திண்திறல் அரக்கன் கொற்றப் பொன் தடஞ் சில்லித் தேரை,
தண்டலை மருத வைப்பின் கங்கை நீர் தழுவும் நாட்டுக்
கொண்டல்மேல் ஓட்டிச் சென்றான்; குரங்கு இனப் படையைக் கொன்றான 6.20.13

மகரக் கண்ணன் இராமனை நோக்கிக் கூறுதல் (8548-8549)

'இந்திரன் பகைஞனே கொல்? ' என்பது ஓர் அச்சம் எய்தித்
தந்திரம் இரிந்து சிந்த, படைப் பெருந் தலைவர், தாக்கி
எந்திரம் எறிந்த என்ன, ஏவுண்டு புரண்டார்; எய்தி,
சுந்தரத் தோளினானை நோக்கி நின்று, இனைய சொன்னான். 6.20.14

"என்னுடைத் தாதை தன்னை இன் உயிர் உண்டாய் " என்று
முன் உடைத்தாய தீய முழுப்பகை மூவர்க்கு இன்றி,
நினுடைத்து ஆயது அன்றே; இன்று அது நிமிர்வென் 'என்றான்
பொன்னுடைத் தாதை வண்டு குடைந்து உணும் பொலம்பொன் தாரான் 6.20.15

இராமன், மகரக்கண்ணன் கூறியது தக்கது எனல்

தீயவன் பகர்ந்த மாற்றம் சேவகன் தெரியக் கேட்டான்
'நீய் கரன் புதல்வன் கொல்லோ? நெடும்பகை நிமிர வந்தாய்;
ஆயது கடனே அன்றோ ஆண் பிறந்து அமைந்தார்க்கு? ஐய!
ஏயது சொன்னாய் 'என்றான், இசையினுக்கு இசைந்த தோளான் 6.20.16

மகரக்கண்ணனுக்கும் இராமனுக்கும் போர் நிகழ்தல் (8551-8555)

உரும் இடித்து என்ன வில் நாண் ஒலி படுத்து, 'உன்னோடு எந்தை
செருமுடித்து, என்கண் நின்ற சினம் முடித்து அமைவென் 'என்னா,
கருமுடித்து அமைந்த மேகம், கால் முடித்து எழுந்த காலம்,
பெருமுடிக் கிரியில் பெய்யும் தாரை போல், பகழி பெய்தான். 6.20.17

அம்புயக் கண்ணன் கண்டத்து ஆயிரம் பகழி நாட்டி,
தம்பிதன் கவச மீதே இரட்டிச் சாயகங்கள் தாக்கி
வெம்பு இகல் அனுமன் மீதே வெங்கணை மாரி வித்தி
உம்பர் தம் உலகம் முற்றும் சரங்களாய் மூடி உய்த்தான். 6.20.18

சொரிந்தன பகழி எல்லாம் சுடர்க் கடுங் கணைகள் தூவி,
அரிந்தனன் அகற்றி, மற்று அ(வ்) ஆண்தகை அலங்கல் ஆகத்து,
எரிந்து ஒரு பகழி பாய எய்தனன், இராமன்; ஏவ,
நெரிந்து எழு புருவத்தான் தன் நிறத்து உற்று நின்றது அன்றே. 6.20.19

ஏ உண்டு துளக்கம் எய்தா, இரத்தகப் பரிதி ஈன்ற
பூவுண்ட கண்ணன், வாயின் புகை உண்டது உமிழ்வான் போல்வான்
தேவுண்ட கீர்த்தி அண்ணல் திரு உண்ட கவசம் சேர,
தூவுண்ட வயிர வாளி ஆயிரம் தூவி ஆர்த்தான். 6.20.20

அன்னது கண்ட வானோர் அதிசயம் உற்றார்; ஆழி
மன்னனும், முறுவல் எய்தி, வாய் அம்பு ஓர் ஆறு வாங்கி,
பொன் நெடுந் தடந்தேர் பூண்ட புரவியின் குரங்கள் போக்கி,
வில் நடு அறுத்து, பாகன் தலையையும் நிலத்து வீழ்த்தான். 6.20.21

மகரக் கண்ணன் வானில் சென்று இடி, காற்று, நெருப்பு ஆகியவற்றை உண்டாகுதல்

மார்பிடை நின்ற வாளி வாயிடை வெயிலின் வாரும்
சோரியன், விசும்பினூடு ஓர் இமைப்பு இடை தோன்றா நின்றான்,
கார் உரும் ஏறும், காற்றும், கனலியும், கடைநாள் வையம்
பேர்வுறு காலம் என்ன, பெருக்கினன், தவத்தின் பெற்றான். 6.20.22

உரும் முறை அநந்த கோடி உதிர்ந்தன; ஊழி நாளின்
இரு முறை காற்றுச் சீறி எழுந்தது; விழுந்த எங்கும்
கரு முறை நிறைந்த மேகம் கான்றன கல்லின் மாரி;
பொரு முறை மயங்கி, சுற்றும் இரியலின் கவிகள் போன. 6.20.23

கண்ணணனுக்கு காற்று முதலியவற்றை உண்டாக்கும் வல்லமை எதனால் உண்டாயிற்று என்று இராமன் வீடணனைக் கேட்க, அவன் கூறுதல் (8558-8559)

போயின திசைகள் எங்கும் புகையொடு நெருப்புப் போர்ப்ப,
தீ இனம் அமையச் செல்லும் மாயமா மாரி சிந்த,
ஆயிர கோடி மேலும் அவிந்தன கவிகள்; ஐயன்,
'மாயமோ? வரமோ? 'என்றான்; வீடணன் வணங்கிச் சொல்வான் 6.20.24

'நோற்றுடைத் தவத்தின் நோன்மை நோக்கினர், கருணை நோக்கி,
காற்றுடைச் செல்வன் தானும், மழையுடைக் கடவுள் தானும்,
மாற்றலர், ஈந்த தெய்வ வரத்தினால் வந்தது 'என்றான்;
நூற்று இதழ்க் கமலக் கண்ணன், 'அகற்றுவென் நொடியின் 'என்றான். 6.20.25

மகரக் கண்ணன் தவ வலிமையால் செய்த போர் அழிதல்

காலவன் படையும், தெய்வக் கடலவன் படையும், காலக்
கோல வன் சிலையில் கோத்து, கொடுங் கணையோடும் கூட்டி,
மேலவன் துரத்தலோடும், விசும்பின் நின்று எரிந்து, வெய்தின்
மால் இருங் கடலின் வீழ்ந்து மறைந்தன மழையும் காற்றும். 6.20.26

மகரக் கண்ணனது மாயப் போர்

அத் துணை, அரக்கன் நோக்கி, அந்தர வானம் எல்லாம்
ஒத்தன உருவே ஆக்கி, தான் மறைந்து ஒளித்து, சூலப்
பத்திகள் கோடி கோடி பரப்பினன்; அதனைப் பார்த்த
வித்தகன், 'ஒருவன் செய்த வினையம் '! என்று இனைய சொன்னான்; 6.20.27

இராமன் மனம் வருந்துதல்

'மாயத்தால் வகுத்தான் யாண்டும் வரம்பிலா உருவம்; தான் எத்
தேயத்தான் என்னா வண்ணம் கரந்தனன்; தெரிந்திலாதான்,
காயத்தால் இனையன் என்று நினையலாம் கருத்தன் அல்லன்;
தீ ஒத்தான் திறத்தின் என்னை செயல்? 'எனச் சிந்தை நொந்தான். 6.20.28

மகரக் கண்ணன் மடிதல்

அம்பின்வாய் ஆறு சோரும் அரக்கன் தன் அருள் இல் யாக்கை
உம்பரில் பரப்பி, தான் வேறு ஒளித்தனன், என்ன ஓர் வான்,
செம்புனல் சுவடு நோக்கி "இது நெறி 'என்று தேவர்
தம்பிரான் பகழி தூண்ட, தலை அற்றுத் தலத்தன் ஆனான் 6.20.29

அரக்கன் மாய, மாயையும் அகலுதல்

அயில்படைத்து உருமின் செல்லும் அம்பொடும், அரக்கன் யாக்கை,
புயல்படக் குருதி வீசி, படியிடைப் புரள்தலோடும்
வெயில் கெடுத்து இருளை ஓட்டும் காலத்தின் விளைவினோடும்
துயில் கெடக் கனவு மாய்ந்தால் ஒத்தது சூழ்ந்த மாயை. 6.20.30

நளன் குருதிக் கண்ணனோடு பொருது அவனை மாய்த்தல் (8565-8568)

குருதியின் கண்ணன், வண்ணக் கொடி நெடுந் தேரன், கோடைப்
பருதியின் நடுவண் தோன்றும் பசுஞ்சுடர் மேகப் பண்பன்,
எரிகணை சிந்தி, காலின் எய்தினான் தன்னோடு ஏற்றான்
விரிகடல் தட்டான், கொல்லன், வெஞ்சினத் தச்சன், வெய்யோன். 6.20.31

அன்று, அவன் நாம வில் நாண் அலங்கல் தோள் இலங்க வாங்கி
ஒன்று அல பகழி மாரி, ஊழித் தீ என்ன உய்த்தான்
நின்றவன், நெடியது ஆங்கோர் தருவினால் அகல நீக்கி,
சென்றனன் கரியின் வாரிக்கு எதிர் படர் சீயம் அன்னான். 6.20.32

கரத்தினில் திரியா நின்ற மரத்தினைக் கண்டமாகச்
சரத்தினின் துணித்து வீழ்த்த தறுகணான் தன்னை நோக்கி,
உரத்தினைச் சுருக்கிப் பாரின் ஒடுங்கினான், தன்னை ஒப்பான்
சிரத்தினில் குதித்தான்; தேவர் திசைமுகம் கிழிய ஆர்த்தார். 6.20.33

எரியும் வெங் குன்றின் உம்பர், இந்திர வில் இட்டு என்ன,
பெரியவன் தலைமேல் நின்ற பேர் எழிலாளன், சோரி
சொரிய, வன்கண்ணின் மூக்கின் செவிகளின் மூளை தூங்க,
நெரிய, வன் தலையைக் காலால் உதைத்து, மாநிலத்தில் இட்டான். 6.20.34

சிங்கனைப் பனசன் கொல்லுதல் (8569-8571)

அங்கு அவன் உலத்தலோடும், அழல் கொழுந்து ஒழுகும் கண்ணான்,
சிங்கன், வெங்கணையன், வில்லன், தாரணி தேரின் மேலான்
'எங்கு அடா போதி? 'என்னா, எய்தினன்; எதிர் இலாத
பங்கம் இல் மேரு ஆற்றல், பனசன்வந்து, இடையில் பாய்ந்தான். 6.20.35

பாய்ந்தவன் தோளில், மார்பில், பல்லங்கள் நல்ல பண்போடு
ஆய்ந்தன, அசனி போல, ஐ இரண்டு அழுந்த எய்தான்;
காய்ந்தனன், கனலி நெய்யால் கனன்றது போலக் காந்தி;
ஏய்ந்து எழு தேரினோடும், இமைப்பிடை எடுத்துக் கொண்டான். 6.20.36

தேரொடும் எடுத்தலோடு, நிலத்திடைக் குதித்த செங்கண்
மேருவின் தோற்றத்தான் தன் உச்சிமேல் அதனை வீச,
பார் இடை விழுதலோடும், தானவன் உம்பர் பாய,
சோரியும் உயிரும் சோர, துகைத்தனன் வயிரத் தோளான். 6.20.37

போர்ச் செய்தியை இராவணனுக்கு உரைக்கத் தூதர் செல்லுதல

தராதல வேந்தன் மைந்தர் சரத்தினும், கவியின் தானை
மராமரம், மலை, என்று இன்ன வழங்கவும், வளைந்த தானை,
பராவ அரும் வெள்ளம் பத்தும் பட்டன பட்டிலாதார்
இராவணன் தூதர் போனார் படைக்கலம் எடுத்திலாதார். 6.20.38
------------------

6.21 – Die Brahmawaffe

6.21 பிரமாத்திரப் படலம் (8573 - 8803 )

மகரக் கண்ணன் முதலியோர் இறந்த செய்தியைத் தூதர் கூறக் கேட்ட இராவணன் இந்திரசித்தை அழைத்து வரும்படி கூறுதல்

கரன்மகன் பட்ட வாறும், குருதியின் கண்ணன் காலின்
சிரன் நெரிந்து உக்க வாறும், சிங்கனது ஈறும், சேனைப்
பரம் இனி உலகுக்கு ஆகாது என்பதும், பகரக் கேட்டான்;
வரன்முறை துறந்தான், 'வல்லைத் தருதிர் என் மகனை 'என்றார். 6.21.1

இந்திரசித்து இராவணன்பால் விரைந்து வருதல்

'கூயினன், நுந்தை 'என்றார்; குன்று எனக் குவிந்த தோளான்,
'போயின நிருதர் யாரும் பொன்றினர் போலும் 'என்றான்;
'ஏயின பின்னை, மீள்வார் நீ அலாது யாவர்? 'என்னா,
மேயது சொன்னார்; கேட்டான்; தாதைபால் விரைவின் வந்தான். 6.21.2

இந்திரசித்து, தந்தையைத் தேற்றி வணங்கிச் சேனைகள் சூழப் போர்க்களம் நோக்கிச் செல்லுதல் (8575-8583)

வணங்கி, "நீ, ஐய! நொய்தின் மாண்டனர் மக்கள் 'என்ன
உணங்கலை; இன்று காண்டி; உலப்பு அறு குரங்கின் ஓங்கல்
பிணங்களின் குப்பை, மற்றை நரர் உயிர் பிரிந்த யாக்கை
கணங் குழைச் சீதை காணும்; அமரரும் காண்பர் என்றான். 6.21.3

வலம் கொடு வணங்கி, வான் செல் ஆயிரம் மடங்கல் பூண்ட
பொலம் கொடி நெடுந்தேர் ஏறி, போர்ப்பணை முழங்கப் போனான்;
அலங்கல் வாள் அரக்கர் தானை அறுபது வெள்ளம், யானைக்
குலங்களும், தேரும், மாவும், குழாம்கொளக் குழீஇய அன்றே. 6.21.4

கும்பிகை, திமிலை, செண்டை, குறடு, மாப்பேரி, கொட்டி,
பம்பை, தார் முரசம், சங்கம், பாண்டில், போர்ப் பணவம், தூரி,
கம்பலி, உறுமை, தக்கை, கரடிகை, துடி, வேய், கண்டை,
அம்பலி, கணுவை, ஊமை, சகடையோடு ஆர்த்த அன்றே. 6.21.5

யானைமேல் பறை, கீழ்ப் பக்கத்து எறிமணி, இரதத்து ஆழி,
மான மாப் புரவிப் பொன் தார், மரக் கொடி கண்டை, மானச்
சேனையோர் கழலும் தாரும் சேண் தரப் புலம்ப, மற்றை
வானகத்து ஓடும் ஆழி அலை என, வளர்ந்த அன்றே. 6.21.6

சங்கு ஒலி, வயிரின் ஓசை, ஆகுளி, தழங்கு காளம்
பொங்கு ஒலி, வரிகண் பீலிப் பேர் ஒலி, வேயின் பொம்மல்,
சிங்கத்தின் முழக்கம், வாசிச் சிரிப்பு, தேர் இடிப்பு, திண் கைம்
மங்குலின் அதிர்வு, வான மழையொடு மலைந்த அன்றே. 6.21.7

பண் தரு கிளவிச் செவ்விப் பல்லியத்து ஒழுகு தீந்தேன்,
கண்டினில் குயின்ற வீணை நரம்பொடு கமழும் தேறல்,
வண்டினில் பொலியும் நல்யாழ் வழி உறும் நறவம், வானத்து
அண்டர்தம் செவியின் உண்ணும் அமிழ்து எனலாய அன்றே. 6.21.8

வில்லொலி, வயவர் ஆர்க்கும் விளி ஒலி, தழெிப்பின் ஓங்கும்
ஒல்லொலி, வீரர் பேசும் உரை ஒலி, உரப்பில் தோன்றும்
செல்லொலி, திரள்தோள் கொட்டும் சேண் ஒலி, நிலத்தில் செல்லும்
கல்லொலி துரப்ப, மற்றைக் கடல் ஒலி கரந்தது அன்றே. 6.21.9

நாற்கடல் அனைய தானை நடந்திட, கிடந்த பாரின்
மேல்கடந்து எழுந்த தூளி விசும்பின்மேல் கொழுந்து வீச,
மால்கடல் சேனை காணும் வானவர் மகளிர், மானப்
பாற்கடல் அனைய வாட்கண், பனி கடல் படைத்த அன்றே. 6.21.10

ஆயிர கோடி திண்தேர், அமரர்கோன் நகரம் என்ன
மேயின சுற்ற, தானோர் கொற்றப் பொன் தேரின் மேலான்,
தூய மாச் சுடர்கள் எல்லாம் சுற்றுற நடுவண் தோன்றும்
நாயகப் பரிதி போன்றான் தேவரை நடுக்கம் கண்டான் 6.21.11

இந்திரசித்து தன் சேனைகளை அன்றிலின் உருவமைய அணி வகுத்து நிறுத்திச் சங்க நாதஞ் செய்து தன் வில்லின் நாணொலி செய்து ஆரவாரித்தல் (8584-8586)

சென்று வெங்களத்தை எய்தி, சிறையொடு துண்டம், செங் கண்,
ஒன்றிய கழுத்து, மேனி, கால், உகிர், வாலொடு, ஒப்ப,
பின்றல் இல் வெள்ளத் தானை முறைபடப் பரப்பி, பேழ்வாய்
அன்றிலின் உருவது ஆய அணிவகுத்து, அமைந்து நின்றான் 6.21.12

புரந்தரன் செருவில் தந்து போயது, புணரி ஏழும்
உரம் தவிர்த்து ஊழி பேரும் காலத்துள் ஒலிக்கும் ஓதை
கரந்தது வயிற்று, கால வலம்புரி கையின் வாங்கி,
சிரம் பொதிர்ந்து அமரர் அஞ்ச ஊதினான், திசையும் சிந்த. 6.21.13

சங்கத்தின் முழக்கம் கேட்ட கவிப் பெருந்தானை, தள்ளி,
சிங்கத்தின் நாதம் வந்து செவி புக, விலங்கு சிந்தி
'எங்கு உற்ற 'என்னா வண்ணம் இரிந்தபோல் இரிந்த, ஏழை
பங்கத்தன் மலை வில் அன்ன சிலை ஒலி பரப்பி ஆர்த்தான். 6.21.14

இந்திரசித்தின் போர்முழக்கம் கேட்ட வானர சேனைகள் வெருவி ஓடுதல் (8587-8588)

கீண்டன, செவிகள்; நெஞ்சம் கிழிந்தன; கிளர்ந்து செல்லா
மீண்டன, கால்கள்; கையின் விழுந்தன, மரனும் வெற்பும்;
பூண்டன, நடுக்கம்; வாய்கள் புலர்ந்தன; மயிரும் பொங்க,
'மாண்டனம் அன்றோ? 'என்ற வானரம் எவையும் மாதோ. 6.21.15

செங்கதிர்ச் செல்வன் சேயும், சமீரணன் சிறுவன் தானும்,
அங்கதப் பெயரினானும், அண்ணலும், இளைய கோவும்,
வெங்கதிர் மௌலிச் செங்கண் வீடணன் முதல வீரர்
இங்கு இவர் நின்றார் அல்லது, இரிந்தது, குரங்கின் ஈட்டம். 6.21.16

அரக்கர் சேனை ஆரவாரித்துப் போர்க்களத்தில் மேற்சென்று நெருங்குதல்

படைப் பெருந் தலைவர் நிற்க, பல் பெருந் தானை வேலை
உடைப்பு உறு புனலின் ஓட, ஊழிநாள் உவரி ஓதை
கிடைத்திட முழங்கி ஆர்த்துக் கிளர்ந்தது; நிருதர் சேனை,
அடைத்தது, திசைகள் எல்லாம்; அன்னவர் அகத்தர் ஆனார். 6.21.17

அனுமன் தோளில் இராமனும் அங்கதன் தோளில் இலக்குவனும் ஏறியமர்ந்து போருக்குப் புறப்படுதல் (8590-8591)

மாருதி அலங்கல் மாலை மணி அணி வயிரத் தோள்மேல்
வீரனும், வாலி சேய்தன் விறல்கெழு சிகரத் தோள்மேல்
ஆரியற்கு இளைய கோவும் ஏறினர்; அமரர் வாழ்த்தி
வேரி அம் பூவின் மாரி சொரிந்தனர், இடைவி டாமை. 6.21.18

விடையின்மேல், கலுழன் தன்மேல், வில்லினர் விளங்குகின்ற
கடை இல் மேல் உயர்ந்தார் காட்சி இருவரும் கடுத்தார் கணுற்று
அடையின் மேருவையும் சாய்க்கும் அனுமன் அங்கதன் என்று அன்னார்
தொடையின்மேல் மலர்ந்த தாரார், தோளின்மேல் தோன்றும் வீரர் 6.21.19

போருக்கு முற்பட்டெழுந்த நீலன் முதலிய படைத் தலைவர்களைப் பின்வரிசையில் நிற்குமாறு இராமன் பணித்தல் (8592-8593)

நீலன் முதலாய் உள்ள நெடும்படைத் தலைவர் நின்றார்,
தாலமும் மலையும் ஏந்தித் தாக்குவான் சமையுங் காலை,
ஞாலமும் விசும்பும் காத்த நானிலக் கிழவன் மைந்தன்,
மேல் அமர் விளைவை உன்னி, விலக்கினன், விளம்பலுற்றான். 6.21.20

'கடவுளர் படைகள், நும்மேல் வெய்யவன் துரந்த காலை,
தடை உள அல்ல; தாங்கும் தன்மையிர் அல்லிர்; தாக்கிற்கு
இடை உளது எம்பால் நல்கி, பின் நிரை நிற்றிர்; ஈண்டு இப்
படை உள தனையும், இன்று எம் வில்தொழில் பார்த்திர் 'என்றான். 6.21.21

இராம இலக்குவரின் விற்றொழில் வன்மையும், அது கண்டு இந்திரசித்து வியந்துரைத்தலும் (8594-8598)

அருள்முறை அவரும் நின்றார்; ஆண்டகை வீரர், ஆழி
உருள்முறை தேரின், மாவின், ஓடை மால்வரையின், ஊழி
இருள்முறை நிருதர் தம்மேல் ஏவினர் இமைப்பிலோரும்
'மருள் முறை எய்திற்று 'என்பர் சிலை வழங்கு அசனி மாரி. 6.21.22

இமைப்பதன் முன்னம், வந்த இராக்கத வெள்ளம் தன்னைக்
குமைத் தொழில் புரிந்த வீரர் தனுத் தொழில் குறித்து, இன்று எம்மால்
அமைப்பது என்? பிறிது ஒன்று உண்டோ? மேரு என்று அமைந்த வில்லால்
உமைக்கு ஒரு பாகன் எய்த புரங்களின் ஒருங்கி வீழ்ந்த. 6.21.23

தேரின்மேல் சிலையின் நின்ற இந்திர சித்து என்று ஓதும்
வீரருள் வீரன் கண்டான் வீழ்ந்தனர் வீழ்ந்த என்னும்
பாரின்மேல் நோக்கின் அன்றேல், பட்டன, பட்டார் என்னும்
போரின்மேல் நோக்கு இலாத, இருவரும் பொருத பூசல். 6.21.24

'யானை பட்டனவோ? 'என்றான்; 'இரதம் இற்றனவோ; ' என்றான்;
'மான மா வந்த எல்லாம் மறிந்து ஒழிந்தனவோ? 'என்றான்;
'ஏனை வாள் அரக்கர் யாரும் இல்லையோ, எடுக்க? 'என்றான்
வான் உயர் பிணத்தின் குப்பை மறைத்தலின், மயக்கம் உற்றான். 6.21.25

'செய்கின்றார், இருவர் வெம்போர்; சிதைகின்ற சேனை நோக்கின்,
ஐயம்தான் இல்லா வெள்ளம் அறுபதும்; 'அவிக 'என்று
வைகின்றார் அல்லர்; ஆகின், வரிசிலை வலத்தால் மாள
எய்கின்றார் அல்லர்; ஈது எவ்இந்திர சாலம்? 'என்றான். 6.21.26

இருவரது போர்த்தொழில் விளைவுகளை இந்திரசித்து வியந்து நோக்குதல் (8599-8605)

அம்பின் மா மழையை நோக்கும்; உதிரத்தின் ஆற்றை நோக்கும்;
உம்பரின் அளவும் சென்ற பிணக்குன்றின் உயர்வை நோக்கும்;
கொம்பு அற உதிர்ந்த முத்தின் குப்பையை நோக்கும்; கொன்ற
தும்பியை நோக்கும்; வீரர் சுந்தரத் தோளை நோக்கும். 6.21.27

மலைகளை நோக்கும்; மற்று அவ் வானுறக் குவிந்த வன்கண்
தலைகளை நோக்கும்; வீரர் சரங்களை நோக்கும்; தாக்கி
உலைகொள் வெம் பொறியின் உக்க படைக்கலத்து ஒழுக்கை நோக்கும்;
சிலைகளை நோக்கும்; நாண் ஏற்று இடியினைச் செவியின் நோக்கும் 6.21.28

ஆயிரம் தேரை ஆடல், ஆனையை, அலங்கல் மாவை,
ஆயிரம் தலையை, ஆழிப் படைகளை அறுத்தும், அப்பால்
போயின பகழி வேகத் தன்மையைப் புரிந்து நோக்கும்
பாய்வன பகழிக்கு ஒன்றும் கணக்கு இலாப் பரப்பைப் பார்க்கும். 6.21.29

அறுபது வெள்ளம் ஆய அரக்கர்தம் ஆற்றற்கு ஏற்ற,
எறிவன, எய்வ, பெய்வ, எற்றுறு படைகள் யாவும்,
பொறிவனம் வெந்த போலச் சாம்பராய்ப் போயது அல்லால்
செறிவன இல்லா ஆற்றைச் சிந்தையால் தெரிய நோக்கும். 6.21.30

வயிறு அலைத்து ஓடிவந்து கொழுநர்மேல் மகளிர் மாழ்கி,
குயில்தலத்து உக்க என்னக் குழைகின்ற குழைவை நோக்கும்;
எயிறு அலைத்து இடிக்கும் பேழ்வாய்த் தலை இலா யாக்கை ஈட்டம்
பயில்தலை, பறவை பாரில் படிகிலாப் பரப்பைப் பார்க்கும். 6.21.31

'அங்கதர் அநந்த கோடி உளர் ' எனும்; 'அனுமர் என்பார்க்கு
இங்கு இனி உலகம் யாவும் இடம் இலை போலும் 'என்றும்;
எங்கும் இம் மனிதர் என்பார் இருவரேகொல்? 'என்று உன்னும்;
சிங்க ஏறு அனைய வீரர் கடுமையைத் தெரிகிலாதான். 6.21.32

ஆர்க்கின்ற அமரர்தம்மை நோக்கும்; அங்கு அவர்கள் அள்ளித்
தூர்க்கின்ற பூவை நோக்கும்; துடிக்கின்ற இடத் தோள் நோக்கும்
பார்க்கின்ற திசைகள் எங்கும் படும் பிணப் பரப்பை நோக்கும்
ஈர்க்கின்ற குருதி யாற்றில் யானையின் பிணத்தை நோக்கும். 6.21.33

அஞ்சி ஓடிய வானரசேனை அரக்கர் பலர் மாளக்கண்டும் மீளாமை

ஆயிர கோடித் தேரும் அரக்கரும் ஒழிய, அல்லா
மா இருஞ் சேனை எல்லாம் மாய்ந்தவா கண்டும், வல்லை
போயின குரக்குத் தானை புகுந்தில அன்றே, பொன் தேர்த்
தீயவன்தன்மேல் உள்ள பயத்தினால் கலக்கம் தீரா. 6.21.34

இராம இலக்குவர் போர்த்தொழில் கண்டு அனுமன் தோள்கொட்டி ஆரவாரிக்க, அரக்கர்கள் அஞ்சி நடுங்குதல் (8607-8608)

தளப் பெருஞ் சேனை வெள்ளம் அறுபதும் தலத்தது ஆக,
அளப்ப அருந் தேரின் உள்ளது ஆயிரம் கோடி ஆக,
துளக்கமில் ஆற்றல் வீரர் தோளும் போர்த்தொழிலும் நோக்கி,
அளப்ப அருந் தோளைக் கொட்டி, அஞ்சனை சிறுவன் ஆர்த்தான். 6.21.35

ஆர் இடை அநுமன் ஆர்த்த ஆர்ப்பு ஒலி அசனி கேளா,
தேரிடை நின்று வீழ்ந்தார் சிலர்; சிலர் படைகள் சிந்தி,
பாரிடை இழிந்து போகப் பாரித்தார்; பைம்பொன் இஞ்சி
ஊரிடை நின்றுளாரும், உயிரினோடு உதிரம் கான்றார். 6.21.36

அஞ்சிய அரக்கர்களைக் கடிந்துரைத்து இந்திரசித்து தான் ஒருவனாகவே இராம இலக்குவர்மேற் போருக்கு எதிர்தல்

'அஞ்சினிர், போமின்; இன்று, ஓர் ஆர்ப்பு ஒலிக்கு அழியற்பாலிர்
வெஞ்சமம் விளைப்பது என்னா? நீரும் இவ் வீரரோடு
துஞ்சினிர் போலும் அன்றே? என்று அவர்ச் சுளித்து நோக்கி
மஞ்சினும் கரிய மெய்யான் இருவர்மேல் ஒருவன் வந்தான். 6.21.37

இந்திரசித்துடன் வந்த தேர்ப்படைகள் கிளர்ந்து எழுதல்

அக்கணத்து ஆர்த்து மண்டி, ஆயிர கோடித் தேரும்
புக்கன, நேமிப் பாட்டில் கிழிந்தது புவனம் என்ன
திக்கு இடை நின்ற யானை சிரம் பொதிர் எறிய, சிந்தி
உக்கன விசும்பின் மீன்கள் உதிர்ந்திட, தேவர் உட்க. 6.21.38

இலக்குவன், இந்திரசித்தின் தலையினை அம்பினால் வீழ்த்துவதாக இராமன் முன்னிலையில் வஞ்சினம் கூறுதல் (8611-8615)

மாற்றம் ஒன்று இளையவன் வளைவில் செங் கரத்து
ஏற்றினை வணங்கி நின்று இயம்புவான் : 'இகல்
ஆற்றலன் அரவு கொண்டு அசைப்ப ஆர் அமர்
தோற்றனன் 'என்று எனை உலகம் சொல்லுமால் 6.21.39

"காக்கவும் கிற்றிலன் காதல் நண்பரை;
போக்கவும் கிற்றிலன் ஒருவன் பொய்ப் பிணி;
ஆக்கவும் கிற்றிலன் வென்றி; ஆருயிர்
நீக்கவும் கிற்றிலன் " என்று நின்றதால். 6.21.40

'இந்திரன் பகை எனும் இவனை என் சரம்
அந்தரத்து அருந் தலை அறுக்கலாது எனின்
வெந்தொழிற் செய்கையன் விருந்தும் ஆய் நெடு
மைந்தரில் கடை எனப் படுவன் வாழியாய்! 6.21.41

'நின்னுடை முன்னர் இந் நெறி இல் நீர்மையான்
தன்னுடைச் சிரத்தை என் சரத்தின் தள்ளினால்
பொன்னுடை வனைகழல் பொலம் பொன் தோளினாய்!
என்னுடை அடிமையும் இசையிற்று ஆம் அரோ. 6.21.42

'நெடியன உலகு எலாம் கண்டு நிற்க என்
அடுசரம் இவன் தலை அறுக்கலாது எனின்
முடிய ஒன்று உணர்த்துவென்; உனக்கு நான் முயல்
அடிமையின் பயன் இகந்து அறுவதாக 'என்றான். 6.21.43

அதுகண்டு அமரர் ஆர்த்தலும் இலக்குவனை இராமன் பாராட்டுதலும் (8616-8617)

வல்லவன் அவ்வுரை வழங்கும் ஏல்வையுள்
'அல்லல் நீங்கினம் என அமரர் ஆர்த்தனர்;
எல்லை இல் உலகங்கள் யாவும் ஆர்த்தன;
நல்லறம் ஆர்த்தது; நமனும் ஆர்த்தனன். 6.21.44

முறுவல் வாள் முகத்தினன் முளரிக் கண்ணனும்
'அறிவ! நீ "அடுவல் ” என்று அமைதி ஆம் எனின்
இறுதியும் காவலும் இயற்றும் ஈசரும்
வெறுவியர்; வேறு இனி விளைவது யாது? 'என்றான். 6.21.45

இராமனைத் தொழுது இலக்குவன் போர்க்குப் புறப்படுதல்

சொல் அது கேட்டு அடி தொழுது 'சுற்றிய
பல பெருந் தேரொடும் அரக்கர் பண்ணையைக்
கொல்வல்; இங்கு அன்னது காண்டிகொல்! எனா
ஒல்லையில் எழுந்தனன் உவகை உள்ளத்தான். 6.21.46

அங்கதன் ஆரவாரித்தலும் இராமனது சங்கம் ஒலித்தலும்

அங்கதன் ஆர்த்தனன் அசனி ஏறு என;
மங்குல்நின்று அதிர்ந்தன; வயவன் தேர்புனை
சிங்கமும் நடுக்குற திருவின் நாயகன்
சங்கமொன்று ஒலித்தது கடலும் தள்ளுற 6.21.47

அரக்கர் இலக்குவன்மேல் படைக்கலங்களை வீசுதல்

எழு மழு சக்கரம் ஈட்டி தோமரம்
முழு முரண் தண்டு; வேல் முசுண்டி மூவிலை
கழு அயில் கப்பணம் கவண்கல் கன்னகம்
விழுமலைக்கு இரட்டிவிட்டு அரக்கர் வீசினார். 6.21.48

இலக்குவன் அரக்கர் சேனையை அழித்தல் (8621-8630)

மீன் எலாம் விண்ணின்நின்று ஒருங்கு வீழ்ந்து என
வானெலாம் மண்ணெலாம் மறைய வந்தன
தானெலாம் துணிந்து போய்த் தகர்ந்து சாய்ந்தன;
வேனிலான் அனையவன் பகழி வெம்மையால் 6.21.49

ஆயிரம் தேர் ஒரு தொடையின் அச்சு இறும்;
பாய்பரிக் குலம்படும்; பாகர் பொன்றுவர்;
நாயகர் நெடுந்தலை துமியும் நாம் அற
தீ எழும் புகை எழும் உலகும் தீயுமால். 6.21.50

அடி அறும் தேர்; முரண் ஆழி அச்சு இறும்;
வடி நெடுஞ் சிலை அறும்; கவசம் மார்பு அறும்;
கொடி அறும்; குடை அறும்; கொற்ற வீரர்தம்
முடி அறும்; முரசு அறும்; முகிலும் சிந்துமால். 6.21.51

'இன்னது ஓர் உறுப்பு; இவை இனைய தேர் பரி;
மன்னவர் இவர்; இவர் படைஞர் மற்றுளார்
என்ன ஓர் தன்மையும் தெரிந்தது இல்லையால்
சின்னபின்னங்களாய் மயங்கிச் சிந்தலால். 6.21.52

தந்தையர் தேரிடைத் தனயர் வன்தலை
வந்தன; தாதையர் வயிர வான்சிரம்
சிந்தின காதலர்க்கு இயைந்த தேரிடை
அந்தரத்து அம்பொடும் அற்று எழுந்தன. 6.21.53

செம்பெருங் குருதியின் திகழ்ந்த; செங்கண் மீன்
கொம்போடும் பரவையில் திரியும் கொட்பு என
தும்பை ஆம் தொடையலார் தடக்கை தூணி வாங்கு
அம்பொடும் துணிந்தன சிலையொடு அற்றன. 6.21.54

8627. 6.21.தடிவன கொடுஞ்சரம் தள்ள தள்ளுற
மடிவன கொடிகளும் குடையும் மற்றவும்
முடிவு அறு பெரும்பிணக் களத்தின் மொய்த்தன
படிவன ஒத்தன பறவை பன்மைய. 6.21.55

சிந்துரங்களின் பருமமும், பகழியும், தேரும்,
குந்து வல் நெடுஞ்சிலை முதல் படைகளும், கொடியும்,
இந்தனங்கள் ஆய், இறந்தவர் விழிக் கனல் இலங்க,
வெந்த வெம் பிணம் விழுங்கின, கழுதுகள் விரும்பி. 6.21.56

சில்லி ஊடு அறச் சிதறின சில; சில, கோத்த
வல்லி ஊடு அற மறிந்தன புரவிகள் மடியப்
புல்லி மண்ணிடைப் புரண்டன சில; சில போர் ஆள்
வில்லி சாரதியொடும் பட, திரிந்தன வெறிய. 6.21.57

அலங்கு பல்மணிக் கதிரன குருதியின் அழுந்தி
விலங்கு செஞ்சுடர் விடுவன வெளி இன்றி மிடைந்த
குலம்கொள் வெய்யவர் மறுகிடத் தீயிடைக் குளித்த
இலங்கை மாநகர் மாளிகை நிகர்த்தன இரதம். 6.21.58

இலக்குவனுடன் சேர்ந்து இராமனும் அம்பு சொரிதலால் தன் சேனைகள் மடிய இந்திரசித்து தனித்து நிற்றல்

ஆன காலையில், இராமனும், அயில் முகப் பகழி
சோனை மாரியின் சொரிந்தனன், அனுமனைத் தூண்டி;
வான மானங்கள் மறிந்து எனத் தேர் எலாம் மடிய,
தானும் தேருமே ஆயினன், இராவணன் தனயன். 6.21.59

இந்திரசித்து, இராம இலக்குவரை நோக்கி, 'இருவிரும் சேர்ந்து என்னுடன் பொருதிரோ? அன்றி ஒருவர் ஒருவிராய் நின்று பொருதிரோ? என வினவுதல் (8632-8633)

பல் விலங்கொடு புரவிகள் பூண்ட தேர் பரவை
வல் விலங்கல் போல் அரக்கர்தம் குழாத்தொடு மடிய,
வில்விலங்கிய வீரரை நோக்கினன், வெகுண்டான்,
சொல், விலங்கலன், சொல்லினன் இராவணன் தோன்றல். 6.21.60

'இருவிர் என்னொடு பொருதிரோ? அன்று எனின், ஏற்ற
ஒருவிர் வந்து உயிர் தருதிரோ? உம் படையோடும்
பொருது பொன்றுதல் புரிதிரோ? உறுவது புகலும்,
தருவல், இன்று உமக்கு ஏற்றுளது 'ஒன்று' எனச் சலித்தான். 6.21.61

யானே உன்னைக் கொல்வதாக வஞ்சினஞ் செய்துள்ளேன் 'என இலக்குவன் மறுமொழி பகர்தல்

'வாளின், திண் சிலைத் தொழிலின், மல்லினின், மற்றை
ஆள் உற்று எண்ணிய படைக்கலம் எவற்றினும் அமரில்
கோள் உற்று உன்னொடு குறித்தது செய்து, உயிர்கொள்வான்
சூள் உற்றேன்; இது சரதம் 'என்று, இலக்குவன் சொன்னான் 6.21.62

உன்னையான் கொல்வது உறுதி 'என இந்திரசித்து இலக்குவனை நோக்கிக் கூறுதல் (8635-8637)

'முன் பிறந்த உன் தம்முனை முறை தவிர்த்து, உனக்குப்
பின்பு இறந்தவன் ஆக்குவென்; பின் பிறந்தோயை
முன்பு இறந்தவன் ஆக்குவென்; இது முடியேனேல்
என், பிறந்ததனால் பயன் இராவணற்கு? 'என்றான். 6.21.63

8636. 6.21.இலக்குவன் எனும்பெயர் உனக்கு இயைவதே என்ன
இலக்கு வன்கணைக்கு ஆக்குவென்; "இதுபுகுந்து இடையே
விலக்குவன் என, விடையவன் விலக்கினும், வீரம்
விலக்குவன்; இதுகாணும், உன் தமையனும் விழியால். 6.21.64

அறுபது ஆக்கிய வெள்ளத்தின் அரக்கரை அம்பால்,
இறுவது ஆக்கிய இரண்டு வில்லீரும் கண்டு இரங்க,
மறுவது ஆக்கிய எழுபது வெள்ளமும் மாள,
வெறுவிது ஆக்குவென், உலகை இக்கணத்தின் ஓர்வில்லால். 6.21.65

என் தம்பிமாருக்கும் என் சிறிய தந்தைக்கும், நும் இருவரது குருதி நீரால் இறுதிக்கடன் செய்வேன் 'என இந்திரசித்து கூறுதல்

'கும்பகன்னன் என்று ஒருவன், நீர் அம்பிடைக் குறைத்த
தம்பி அல்லன் யான்; இராவணன் மகன்; ஒரு தமியேன்;
எம்பிமாருக்கும் என் சிறு தாதைக்கும், இருவீர்
செம் புண் நீர் கொடு கடன் கழிப்பேன்' எனத் தீர்ந்தான். 6.21.66

அரக்கராகிய நும்மினத்தார்க்கெல்லாம் ஒருசேர இறுதிக்கடன் செய்தற்கு உள்ளவன் வீடணனே 'என இலக்குவன் மொழிதல்

'அரக்கர் என்பது ஓர் பெயர் படைத்தீர்க்கு எலாம் அடுத்த
புரக்கும் நன்கடன் செயவுளன், வீடணன் போந்தான்;
கரக்கும் நுந்தைக்கு நீ செயக் கடவன கடன்கள்
இரக்கம் உற்று, உனக்கு அவன் செயும் ' என்றனன், இளையோன். 6.21.67

இந்திரசித்து வெகுண்டு கடும்போர் புரிதல் (8640-8642)

ஆன காலையில் அயில் எயிறு அரக்கன் நெஞ்சு அழன்றான்;
வானும் வையமும் திசைகளும் யாவையும் மறைய,
பால் நல் வேலையைப் பருகுவ சுடர் முகப் பகழி,
சோனை மாரியின் இருமடி மும்மடி சொரிந்தான். 6.21.68

அங்கதன்தன் மேல் ஆயிரம்; அவற்றினுக்கு இரட்டி,
வெங்கண் மாருதி மேனிமேல்; வேறு உள வீரச்
சிங்கம் அன்னவர் ஆக்கைமேல் உலப்பு இல செலுத்தி,
எங்கும் வெங்கணை ஆக்கினன் இராவணன் சிறுவன். 6.21.69

இளைய மைந்தன்மேல், இராமன்மேல், இராவணி இகலி,
விளையும் வன்தொழில் வானர வீரர்மேல், மெய்யுற்று
உளைய வெஞ் சரம் சொரிந்தனன்; நாழிகை ஒன்று,
வளையும் மண்டலப் பிறை என நின்றது, வரிவில் 6.21.70

அது கண்டு அமரர்கள் அஞ்சுதல்

பச்சி மத்தினும், முகத்தினும், மருங்கினும், பகழி,
உச்சி முற்றிய வெய்யவன் கதிர் என உமிழ,
கச்சம் உற்றவன் கைக்கணைக் கடுந்தொழில் காண
அச்சம் உற்றனர், கண் புதைத்து ஒடுங்கினர், அமரர். 6.21.71

இந்திரசித்து ஏவிய அம்புகளைத் தடுத்து விலக்கி இலக்குவன் இந்திரசித்தின்மேல் விரைந்து செல்லுதல்

மெய்யில் பட்டன பட, படாதன எலாம் விலக்கி,
தெய்வப் போர்க் கணைக்கு அத்துணைக்கு அத்துணை செலுத்தி,
ஐயற்கு ஆங்கு இளங் கோளரி, அறிவு இலான் அறைந்த
பொய்யின் போம்படி போக்கினன், கடிதினில் புக்கான். 6.21.72

இராமன் இந்திரசித்தின்மேல் அம்பு செலுத்தாது வறிதே நிற்க, இலக்குவன் இந்திரசித்து இருவரும் கடும்போர் புரிதல் (8645-8647)

பிறகு நின்றனன் பெருந்தகை, இளவலைப் பிரியான்,
'அறம் இது அன்று' என அரக்கன்மேல் சரம் துரந்து அருளான்;
இறவு கண்டிலர் இருவரும், ஒருவரை ஒருவர்;
விறகின் வெந்தன, விசும்பிடைச் செறிந்தன விசிகம். 6.21.73

மாடு எரிந்து எழுந்து இருவர்தம் கணைகளும் வழங்க,
காடு எரிந்தன; கனம் வரை எரிந்தன; கனக
வீடு எரிந்தன; வேலைகள் எரிந்தன; மேகம்
ஊடு எரிந்தன; ஊழியின் எரிந்தன, உலகம். 6.21.74

படம்கொள் பாம்பு அணை துறந்தவற்கு இளையவன், பகழி,
விடம்கொள் வெள்ளத்தின் மேலன வருவன விலக்கி
இடங்கர் ஏறு என, எறுழ்வலி அரக்கன் தேர் ஈர்க்கும்
மடங்கல் ஐ இரு நூற்றையும் கூற்றின்வாய் மடுத்தான் 6.21.75

இந்திரசித்து, தானேறிய தேர் அழிந்த நிலையில் தனியனாய் நின்று அங்கதன் முதலியோர்மேல் அம்பு எய்து தன் வெற்றிச் சங்கினை ஊதுதல் (8648-8649)

தேர் அழிந்திட, சேமத் தேர் பிறிது இலன், செறிந்த
ஊர் அழிந்திடத் தனி நின்ற கதிரவன் ஒத்தான்;
'பார் அழிந்தது குரங்கு எனும் பெயர் ' என, பகைத்த
சூர் அழிந்திடத் துரந்து அ(ன்)ன சுடுசரம் சொரிந்தான 6.21.76

அற்ற தேர் மிசை நின்று, போர் அங்கதன் அலங்கல்
கொற்றத் தோளினும், இலக்குவன் புயத்தினும், குளித்து
முற்ற, எண்ணிலா முரண் கணை தூர்த்தனன்; முரண் போர்
ஒற்றைச் சங்கு எடுத்து ஊதினன், உலகு எலாம் உலைய. 6.21.77

இலக்குவன், இந்திரசித்தின் கங்கணமும் கவசமும் மூட்டறக் கழல அவன்மேற் பத்து அம்புகளைச் சிதறி வில்நாண் ஒலி செய்தல்

சங்கம் ஊதிய தசமுகன் தனிமகன் தரித்த
கங்கணத்தொடு கவசமும் மூட்டு அறக் கழல,
வெங் கடுங் கணை ஐ இரண்டு உரும் என வீசி,
சிங்க ஏறு அன்ன இலக்குவன் சிலையை நாண் எறிந்தான். 6.21.78

இலக்குவனது வெற்றிகண்டு, ஆரவாரம் செய்யும்படி இராமன் பணிக்க, வானரர் ஆரவாரித்தல்

கண்ட கார்முகில் வண்ணனும், கமலக்கண் கலுழ,
துண்ட வெண்பிறை நிலவு என முறுவலும் தோன்ற,
அண்டம் உண்ட தன்வாயினால், ஆர்மின் என்று அருள,
'விண்டது அண்டம் 'என்று உலைந்து இட, ஆர்த்தனர், வீரர். 6.21.79

இந்திரசித்து வானில் மறைந்த நிலையில், இலக்குவன் 'அவன் மேல் அயன்படை தொடுப்பேன் 'என இராமனிடம் கூற, இராமன் அது கூடாதனெத் தடுத்தல்

கண் இமைப்பதன் முன்புபோய் விசும்பிடைக் கரந்தான்;
அண்ணல்; மற்று அவன் ஆக்கை கண்டு அறிகிலன்; ஆழிப்
பண்ணவற்கு, 'இவன் பிழைக்குமேல், படுக்கும் நம்படையை;
எண்ணம் மற்று இலை; அயன் படை தொடுப்பல் 'என்று இசைத்தான். 6.21.80

இராமனது ஆணைக்கு இசைந்து இலக்குவன் அச் செயலைத் தவிர்தல்

ஆன்றவன் அது பகர்தலும், 'அறநிலை வழாதாய்!
ஈன்ற அந்தணன் படைக்கலம் தொடுக்கில், இவ் உலகம்
மூன்றையும் சுடும்; ஒருவனால் முடிகலது 'என்றான்,
சான்றவன்; அது தவிர்ந்தனன், உணர்வுடைத் தம்பி. 6.21.81

மறைந்த இந்திரசித்து, அவரது கருத்தறிந்து, அவர்கள்மேல் தானே தெய்வப்படையினை ஏவுவதாகத் துணிந்து அவ்விடத்தை விட்டு நீங்க, அதனையுணராத தேவர்களும் வானரர்களும் ஆரவாரித்தல் (8654-8655)

மறைந்துபோய் நின்ற வஞ்சனும், அவருடை மனத்தை
அறிந்து, தெய்வ வான் படைக்கலம் தொடுப்பதற்கு அமைந்தான்;
'பிரிந்து போவதே கருமம் இப்பொழுது 'எனப் பெயர்ந்தான்;
செறிந்த தேவர்கள் ஆவலம் கொட்டினர், சிரித்தார். 6.21.82

செஞ் சரத்தொடு செம்மழை விசும்பிடைச் செல்ல.
மஞ்சின் மாமழை போயினதாம் என மறைய,
அஞ்சினான் அகன்றான் 'என, அறிந்தனர் ஆர்த்தார்
வெஞ்சினம் தருகளிப்பினர், வானர வீரர். 6.21.83

தோல்வியுற்ற இந்திரசித்து யாவரும் உணராதபடி மறைந்து இலங்கையை அடைதல்

உடைந்த வானரச் சேனையும், ஓத நீர் உவரி
அடைந்தது ஆம் என வந்து, இரைத்து, ஆர்த்து, எழுந்து ஆடி
தொடர்ந்து சென்றது, தோற்றவன், யாவர்க்கும் தோற்றான்
கடந்த வேலைபோல், கலங்குறும் இலங்கையைக் கலந்தான் 6.21.84

அயன்படையைத் தானே முற்படத் தொடுத்தற்கு எண்ணிச் சென்ற இந்திரசித்தின் கருத்தினையுணராத இராம இலக்குவர் போர்க்கோலம் களைதலும் வானவர் மலர்மழை சொரிந்து வாழ்த்துதலும் (8657-8658)

'எல் கொள் நான்முகன் படைக்கலம் இவர் என்மேல் விடாமுன்
முற்கொள்வேன்' எனு முயற்சியன், மறைமுறை மொழிந்த
சொல்கொள் வேள்வி போய்த் தொடங்குவான் அமைந்தவன் துணிவை
மல் கொள் தோளவர் உணர்ந்திலர்; அவன் திறம் மறந்தார். 6.21.85

அனுமன் அங்கதன் தோளின்நின்று இழிந்தனர் ஆகி,
தனுவும், வெங்கணைப் புட்டிலும், கவசமும், தடக்கைக்கு
இனிய கோதையும் துறந்தனர் இருந்தனர்; இமையோர்
பனிமலர் பொழிந்து ஆர்த்தனர், வாழ்த்து ஒலி பரப்பி. 6.21.86

சூரியன் மறைதல்

ஆர்த்த சேனையின் அமலை போய் விசும்பினை அலைக்க,
ஈர்த்த தேரொடும் கடிது சென்றான் அகன்று இரவி,
'தீர்த்தன்மேல் அவன் திசைமுகன் படைக்கலம் செலுத்தப்
பார்க்கிலேன் : முந்திப் படுவல் ' என்பான் என, பட்டான். 6.21.87

இராமன், சேனைகட்கு உணவுதேடிக் கொணருமாறு வீடணனுக்குக் கூற, அவன் தமரொடும் விரைந்து செல்லுதல் (8660-8661)

'இரவும் நன்பகலும் பெரு நெடுஞ்செரு இயற்றி,
உரவு நம் படை மெலிந்து உளது; அருந்துதற்கு உணவு
வரவு தாழ்த்தது; வீடண! வல்லையின் ஏகி,
தரவு வேண்டினென் 'என்றனன், தாமரைக் கண்ணன். 6.21.88

'இன்னதே கடிது இயற்றுவென் ' எனத் தொழுது எழுந்தான்,
பொன்னின் மோலியன் வீடணன், தமரொடும் போனான்;
கன்னல் ஒன்றில் ஓர் காலினின் வேலையைக் கடந்தான்;
அன்ன வேலையின் இராமன் ஈது இளையவற்கு அறைந்தான். 6.21.89

தெய்வப் படைக்கலங்களுக்குப் பூசனைபுரிய எண்ணிய இராமன் இலக்குவனை நோக்கிச் சேனைகளைக் காக்கும்படி பணித்து, தான் போர்க்களத்தைவிட்டு வேறிடஞ் செல்லுதல்

'தெய்வ வான்பெரும் படைகட்கு வரன்முறை திருந்து
மெய்கொள் பூசனை இயற்றினம் விடும் இது விதியால்;
ஐய! நானிவை ஆற்றினன் வருவது ஓர் அளவும்
கைகொள் சேனையைக் கா' எனப் போர்க்களம் கடந்தான். 6.21.90

தன் தந்தையைக் கண்டு போரில் நிகழ்ந்தவற்றை இந்திரசித்து கூற இராவணன் 'இனிச் செய்தற்குரியது யாது? 'என வினவுதல்

தந்தையைக் கண்டு, புகுந்துள தன்மையும், தன்மேல்
முந்தை நான்முகன் படைக்கலம் தொடுக்குற்ற முறையும்
சிந்தையுள் புகச் செப்பினன்; அனையவன் திகைத்தான்,
'எந்தை! என், இனிச் செயத் தக்கது? இசை' என இசைத்தான். 6.21.91

இந்திரசித்து, இனி செய்யத் தகுவது இதுவெனக் கூறுதல் (8664-8665)

"தன்னைக் கொல்வது துணிவரேல், தனக்கு அது தகுமேல்,
முன்னர்க் கொல்லிய முயல்க 'என்று அறிஞரே மொழிந்தார்;
அந் நல் போரவர் அறிவுறாவகை மறைந்து அயன்தன்
வெல் நல் போர்ப்படை விடுதலே நலம்; இது விதியால். 6.21.92

'தொடுக்கின்றேன் என்பது உணர்வரேல் அப்படை தொடுத்தே
தடுப்பர்; காண்பரேல், கொல்லவும் வல்லர்; அத் தவத்தர்;
இடுக்கு ஒன்று ஆகின்றது இல்லை; நல் வேள்வியை இயற்றி
முடிப்பல், அன்னவர் வாழ்வை ஓர் கணத்து' என்று முடித்தான். 6.21.93

இந்திரசித்தின் கருத்திற்கிசைந்த இராவணன், மகோதரனை நோக்கி, 'நீ படையுடன் முன்னதாகச் சென்று மகோதரனை மாயப் போர் புரிக 'எனப் பணித்தல்(8666-8668)

'என்னை அன்னவர் மறந்தனர் நின்று இகல் இயற்ற
துன்னு போர்ப் படை முடிவு இலாது அவர்வயின் தூண்டின்
பின்னை, நின்றது புரிவல் 'என்று அன்னவன் பேச
மன்னன், முன்நின்ற மகோதரற்கு இம்மொழி வழங்கும். 6.21.94

'வெள்ளம் நூறுடை வெஞ்சினச் சேனையை, வீர!
அள் இலைப்படை அகம்பனை முதலிய அரக்கர்
எள் இல் எண் இலர் தம்மொடு விரைந்தனை ஏகி,
கொள்ளை வெஞ் செரு இயற்றுதி, ' மனிதரைக் குறுகி. 6.21.95

'மாயை என்றன, வல்லன யாவையும், வழங்கி,
தீ இருள் பெரும் பரப்பினைச் செறிவு உறத் திருத்தி,
நீ ஒருத்தனே உலகு ஒரு மூன்றையும் நிமிர்வாய்;
போய் உருத்தவர் உயிர் குடித்து உதவு 'எனப் புகன்றான். 6.21.96

மகோதரன் மகிழ்ந்து போருக்குப் புறப்பட்ட நிலையில் உடன்சென்ற நால்வகைச் சேனைகளின் தோற்றம் (8669-8675)

என்ற காலையின், 'என்றுகொல் ஏவுவது? 'என்று
நின்ற வாள் எயிற்று அரக்கனும் உவகையின் நிமிர்ந்தான்;
சென்று தேர்மிசை ஏறினன்; இராக்கதர் செறிந்தார்,
குன்று சுற்றிய மதகரிக் குலம் அன்ன குறியார். 6.21.97

கோடி கோடி நூறாயிரம் ஆயிரம் குறித்த
ஆடல் யானைகள் அணிதொறும் அணிதொறும் அமைந்த;
ஓடு தேர்க்குலம் உலப்பு இல கோடி, வந்து உற்ற;
கேடு இல் வாம்பரி, கணக்கையும் கடந்தன கிளர்ந்த. 6.21.98

படைக்கலங்களும், பருமணிப் பூண்களும், பகுவாய்
இடைக் கலந்தன எயிற்று இளம்பிறைகளும் எறிப்ப,
புடைப் பரந்தன வெயில்களும் நிலாக்களும் புரள,
விடைக் குலங்கள்போல், இராக்கதப் பதாதியும் மிடைந்த. 6.21.99

கொடிக் குழீஇயன, கொழுந்து எடுத்து எழுந்து மேற்கொள்ள,
இடிக் குழீஇ எழு மழைப் பெருங் குலங்களை இரித்த;
அடிக் குழீஇயிடும் இடம் தொறும் பிதிர்ந்து எழுந்து ஆர்த்த
பொடிக் குழீஇ, அண்டம் படைத்தவன் கண்ணையும் புதைத்த. 6.21.100

ஆனை என்னும் மா மலைகளின் இழிமத அருவி
வான யாறுகள், வாசி வாய் நுரையொடு மயங்கி,
கான மாமரம் கல்லொடும் ஈர்த்தன, கடிதின்
போன, போக்க அரும் பெருமைய, புணரியுள் புக்க. 6.21.101

தடித்து, மீன்குலம் விசும்பிடைத் தயங்குவ சலத்தின்
மடித்த வாயினர், வாளெயிற்று அரக்கர், தம் வலத்தின்
பிடித்த திண்படை விதிர்த்திட விதிர்த்திடப் பிறழ்ந்து
பொடித்த வெம்பொறி, கொதித்து மேல் போவன போன்ற. 6.21.102

சொன்ன நூறுடை வெள்ளம் என்று, இராவணன் துரந்த
அன்ன சேனையை வாயில் ஊடு உமிழ்கின்ற அமைதி,
முன்னம் வேலையை, முழுவதும் குடித்தது 'முறை ஈது '
என்ன மீட்டு உமிழ் தமிழ்முனி ஒத்தது, அவ் இலங்கை. 6.21.103

அரக்கர்க்கும் வானரர்க்கும் இடையே நிகழ்ந்த பெரும்போர் (8676-8681)

சங்கும், பேரியும், தாளமும், காளமும், தலைவர்
சிங்க நாதமும், சிலையின் நாண் ஒலிகளும், சின மாப்
பொங்கும் ஓதையும் புரவியின் ஓதையும், பொலந் தேர்
வெங்கண் ஓலமும், மால் என, விழுங்கிய உலகை. 6.21.104

புக்க தார்ப் பெரும் போர்ப்படை, பறந்தலைப் புறத்தில்
தொக்கதால்; நெடு வானரத் தானையும் துவன்றி
ஒக்க ஆர்த்தன, உறுக்கின, தழெித்தன, உருத்த
மிக்க வான்படை விடுகணை மாமழை விலக்கி. 6.21.105

குன்று கோடியும் கோடிமேல் கோடியும் குறித்த
வென்றி வானர வீரர்கள், முகம்தொறும் வீச
ஒன்றின், நால்வரும் ஐவரும் இராக்கதர் உலந்தார்;
பொன்றி வீழ்ந்தன, பொருகரி, பாய்பரி, பொலந்தேர். 6.21.106

மழுவும், சூலமும், வலயமும், நாஞ்சிலும், வாளும்,
எழுவும், ஈட்டியும், தோட்டியும், எழுமுனைத் தண்டும்;
தழுவும் வேலொடு கணையமும், பகழியும், தாக்க,
குழுவினோடு பட்டு உருண்டன, வானரக் குலங்கள். 6.21.107

முற்கரங்களும், முசலமும், முசுண்டியும், முளையும்,
சக்கரங்களும், பிண்டி பாலத்தொடு தண்டும்,
கப்பணங்களும், வளையமும், கவண் உமிழ் கல்லும்
வெற்பு இனங்களை நுறுக்கின; கவிகளை வீழ்த்த. 6.21.108

கதிர் அயில்படைக் கலம் அவர் முறைமுறை கடாவ
அதிர் பிணப் பெருங் குன்றுகள் படப்பட, அழிந்த
உதிரம் உற்ற பேர் ஆறுகள் திசைதிசை ஓட,
எதிர் நடக்கில குரங்கு இனம்; அரக்கரும் இயங்கார். 6.21.109

இறந்த வானரர், வானவராதல்

யாவர், ஆங்கு இகல் வானரர் ஆயினர், எவரும்
தேவர் ஆதலின், அவரொடும் விசும்பிடைத் திரிந்தார்;
மேவு காதலின் மெலிவுறும் அரம்பையர் விரும்பி,
ஆவி ஒன்றிடத் தழுவினர், பிரிவுநோய் அகன்றார். 6.21.110

இரக்கமற்ற அரக்கர்களும் பெருந் தேவராதல்

கரக்கும் மாயமும், வஞ்சமும், களவுமே கடனா,
இரக்கமே முதல் தருமத்தின் நெறி ஒன்றும் இல்லா
அரக்கரைப் பெருந் தேவர்கள் ஆக்கின, அமலன்
சரத்தின் மேல் இனிப் பவித்திரம் உள எனத் தகுமே? 6.21.111

இலக்குவன் பெரும் போர் விளைத்தல்

அந்தகன் பெரும் படைக்கலம் மந்திரத்து அமைத்தான்;
இந்து வெள் எயிற்று அரக்கரும், யானையும், தேரும்,
வந்த வந்தன வானகம் இடம்பெறா வண்ணம்
சிந்தினான் சரம் இலக்குவன், முகம்தொறும் திரிந்தான். 6.21.112

கும்பகருணன் கையாண்ட தண்டாயுதம் போர்க்களத்திற் கிடந்ததை அனுமன் தன் கையிற்கொண்டு போர் செய்தல் (8685-8692)

கும்ப கன்னன் ஆண்டு இட்டது, வயிரம் வான் குன்றின்
வெம்பு வெஞ்சுடர் விரிப்பது, தேவரை மேல்நாள்
தும்பையின் தலைத் துரந்தது சுடர் மணித் தண்டு ஒன்று
இம்பர் ஞாலத்தை நெளிப்பது, மாருதி எடுத்தான். 6.21.113

'காற்று அன்று, இதுகனல் அன்று' என, இமையோர் இடைகாணா
ஏற்றம் கடுவிசையோடு, உயர்கொலை நீடிய இயல்பால்,
சீற்றம் தனது உருவாய், இடை தேறாதது ஒர் மாறு ஆய்,
கூற்றம், கொடுமுனை வந்த என கொன்றான், இகல் நின்றான். 6.21.114

வெங்கண் மத மலை மேல், விரை பரிமேல், விடு தேர்மேல்,
சங்கம் தரு படைவீரர்கள் உடல்மேல் : அவர் தலைமேல்;
"எங்குமுளன் ஒருவன்' என இரு நான்மறை தெரிக்கும்
செங்கண்ணவன் இவனே எனத் திரிந்தான் கலை தெரிந்தான். 6.21.115

கிளர்ந்தாரையும் கிடைத்தாரையும் கிழித்தான், கனல் விழித்தான்;
களம்தான் ஒரு குழம்பு ஆம் வகை அரைத்தான், உருக்கரைத்தான்;
வளர்ந்தான் நிலை உணர்ந்தார், 'உலகு ஒருமூன்றையும் வலத்தால்
அளந்தானும் முனிவனே? 'என இமையோர்களும் அயிர்த்தார். 6.21.116

மத்தக் கரி நெடு மத்தகம் வகிர்பட்டு உக, மண்மேல்
முத்தின் பொலி முழுமேனியன், முகில் விண்தொடு மெய்யான்,
ஒத்து அக் கடையுகம் உற்றுழி, உறுகால் பொர, உடுமீன்
தொத்தப் பொலி கனகம் கிரி வெயில் சுற்றியது ஒத்தான். 6.21.117

'இடித்தான் நிலம் விசும்போடு 'என ' இட்டான் அடி, எழுந்தான்.
பொடித்தான், கடற் பெருஞ்சேனையை; பொலம் தண்டு தன் வலத்தால்
பிடித்தான், மதகரி தேர் பரி பிழம்பு ஆனவை குழம்பா
அடித்தான்; உயிர்குடித்தான்; எடுத்து ஆர்த்தான்; பகைதீர்த்தான். 6.21.118

நூறாயிரம் மத மால்கரி, ஒரு நாழிகை நுவல்போது,
ஆறாய், நெடுங் கடுஞ் சோரியின் அளறு ஆம் வகை அரைப்பான்;
ஏறு ஆயிரம் எனல் ஆய் எழுவய வீரரை இடறி,
தேறாது உறு கொலை மேவிய திசை யானையின் திரிந்தான். 6.21.119

தேர் ஏறினர், பரி ஏறினர், விடை ஏறினர்; சினவெம்
கார் ஏறினர், மலை ஏறினர்; கடல் ஏறினர்; பலவெம்
போரேறினர், புகழேறினர், புகுந்தார், புடை வளைந்தார்
நேரேறினர் விசும்பு ஏறிட, நெரித்தான், கதைதிரித்தான். 6.21.120

சுக்கிரீவன் முதலியோர் ஒருவரையொருவர் காணாதவராகி அரக்கர் படைக்கடலில் அமைதல்

அரிகுல மன்னன், நீலன், அங்கதன், குமுதன், சாம்பன்,
பருவலிப் பனசன், என்று இப் படைத்தலை வீரர் யாரும்
பொருசினம் திருகி, வென்றிப் போர்க்கள மருங்கில் புக்கார்
ஒருவரை ஒருவர் காணார், உயர்படைக் கடலின் உள்ளார். 6.21.121

அனுமன் அகம்பனொடு பொருதல் (8694-8703)

தொகும் படை அவுணர் வெள்ளம் துறைதொறும் அள்ளித் தூவி
நகம் படை ஆகக் கொல்லும் நரசிங்கம் நடந்தது என்ன
மிகும் படைக் கடலுள் செல்லும் மாருதி வீர வாழ்க்கை
அகம்பனைக் கிடைத்தான், தண்டால் அரக்கரை அறைக்கும் கையான். 6.21.122

மலைப் பெரும் கழுதை ஐஞ்ஞூற்று இரட்டியான், மனத்தில் செல்லும்
தலைத் தடந் தேரன், வில்லன், தாருகன் என்னும் தன்மைக்
கொலைத் தொழில் அவுணன், பின்னை, இராக்கத வேடம் கொண்டான்,
சிலைத்தொழில் குமரன் கொல்ல, தொல்லை நாள் செருவில் தீர்ந்தான். 6.21.123

'பாகசா தனனும், மற்றைப் பகை அடுந் திகிரி பற்றும்
ஏக சாதனனும், மூன்று புரமும் பண்டு எரித்துேளானும்
போக, தாம் ஒருவர் மற்று இக் குரங்கொடு பொரக் கற்றாரே?
ஆக, கூற்று ஆவி உண்பது இதனின் மேற்று ஆகும் 'என்றான். 6.21.124

'யான் தடேன் என்னின், மற்று இவ் எழுதிரை வளாகம் என்னாம்?
வான் தடாது; அரக்கர் என்னும் பெயரையும் மாய்க்கும் 'என்னா
ஊன் தடா நின்ற வாளிமழை துரந்து உருத்துச் சென்றான்;
மீன் தொடா நின்ற திண்தோள் அனுமனும் விரைவின் வந்தான். 6.21.125

தேரொடு களிறும் மாவும் அரக்கரும் நெருக்கித் தறெ்ற,
காரொடு கனலும் காலும் கிளர்ந்தது ஓர் காலம் என்ன,
வாரொடு தொடர்ந்த பைம்பொன் கழலினான் வருதலோடும்,
சூரொடும் தொடர்ந்த தண்டைச் சுழற்றினான், வயிரத் தோளான். 6.21.126

எற்றின, எறிந்த, வல்லை ஏவின, எய்த, பெய்த,
முற்றின படைகள் யாவும், முறைமுறை முறிந்து சிந்த,
சுற்றின வயிரத் தண்டால் துகைத்தனன், அமரர் துள்ள;
கற்றிலன், அன்று கற்றான், கதையினால் வதையின் கல்வி. 6.21.127

அகம்பனும் காணக் காண, ஐ இருகோடி கைம் மா,
முகம்பயில் கலினப் பாய்மா, முளை எயிற்று அரக்கர், மூரி
நுகம்பயில் தேரினோடும் நுறுக்கினன்; நூழில் தீர்த்தான்
உகம்பெயர் ஊழிக் காற்றின் உலைவு இலா மேரு ஒப்பான் 6.21.128

படுகளப் பரப்பை நோக்கி பாழிவாய் மடித்து, அவ் ஊழிச்
சுடுகனற் பொறிகள் வெங்கண் தோன்றிட, கொடித்தேர் தூண்டி,
விடுகனல் பகழி மாரி மழையினும் மும்மை வீசி,
முடுகுறச் சென்று, குன்றின் முட்டினான், முகிலின் ஆர்ப்பான். 6.21.129

சொரிந்தன பகழி மாரி தோளினும் மார்பின் மேலும்
தெரிந்தன அசனி போல்வ, தறெுபொறி பிதிர்வ திக்கின்,
வரிந்தன எருவை மானச் சிறைகளால், அமரர் மார்பை
அரிந்தன, வடிம்பு பொன்கொண்டு அணிந்தன, வாங்கு கண்ண. 6.21.130

மார்பினும் தோளின் மேலும், வாளிவாய் மடுத்த வாயில்,
சோர்பெருங் குருதி சோரத், துளங்குவான் தேறா முன்னம்,
தேர் இரண்டு அருகும் பூண்ட கழுதையும் அச்சும் சிந்த,
சாரதி புரள, வீரத் தண்டினால் கண்டம் செய்தான். 6.21.131

வில்லினால் அனுமனை வெல்லுதல் அரிதனெ்றுணர்ந்த அகம்பன், தண்டாயுதத்தைக் கொண்டு அனுமனொடு பொருதல் (8704-8709)

'வில்லினால் இவனை வெல்வது அரிது' என, நிருதன் வெய்ய
மல்லினால் இயன்ற தோளின் வலியினால், வானத் தச்சன்
கொல்லினால் அமைத்தது ஆண்டு ஓர் கொடுமுனைத் தண்டு கொண்டான்
அல்லினால் வகுத்தது அன்ன மேனியான், கடலின் ஆர்ப்பான். 6.21.132

'இன்று இவன்தன்னை விண்ணாடு ஏற்றி, வாள் இலங்கை வேந்தை
வென்றியன் ஆக்கி, மற்றை மனிதரை வெறியர் ஆக்கி,
நின்று, உயர் நெடிய துன்பம் அமரர் பால் நிறுப்பல் 'என்னாச்
சென்றனன் அரக்கன்; 'நன்று வருக' என அனுமன் சேர்ந்தான். 6.21.133

தாக்கினார்; வலத்தும் மற்றை இடத்தினும் திரிந்தார் சாரி;
ஓக்கினார், ஊழின் ஆர்ப்புக் கொட்டினார்; கிட்டினார்; கீழ்த்
தூக்கினார், சுழற்றினார்; மேல் சுற்றினார்; எற்ற, எற்றி
நீக்கினார், நெருங்கினார் போய்; நெருக்கினார், நீங்கினார் மேல். 6.21.134

தட்டினார்; தழுவினார்; மேல் தாவினார்; தரையினோடும்
கிட்டினார்; கிடைத்தார், வீசிப் புடைத்தனர் கீழும் மேலும்;
கட்டினார்; காத்தார்; ஒன்றும் காண்கிலார், இறவு; கண்ணுற்று
ஒட்டினார்; மோதி, வட்டம் ஓடினார்; ஆதி போனார். 6.21.135

மையொடும் பகைத்து நின்ற நிறத்தினான் வயிர மார்பில்,
பொய்யொடும் பகைத்து நின்ற குணத்தினான் புகுந்து மோத,
வெய்யவன், அதனைத் தண்டால் விலக்கினான்; விலக்கலோடும்,
கையொடும் இற்று மற்று அக்கதை களம் கண்டது அன்றே. 6.21.136

கையொடு தண்டு நீங்க, கடலெனக் கலக்கம் உற்ற
மெய்யொடு நின்ற வெய்யோன், மிடல் உடை இடக்கை ஓச்சி,
ஐயனை, அலங்கல் ஆகத்து அடித்தனன்; அடித்த ஓசை,
ஒய் என வயிரக் குன்றத்து உருமினேறு இடித்தது ஒத்த. 6.21.137

வெறுங்கையனாய் நின்ற அகம்பனை அனுமன் கையாற் குத்தி வீழ்த்துதல் (8710-8711)

அடித்தவன் தன்னை நோக்கி, அசனி ஏறு அனைய தண்டு
பிடித்து நின்றேயும் எற்றான், 'வெறுங்கையான், பிழையிற்று 'என்னா,
மடித்து வாய், இடத்த கையால் மார்பிடைக் குத்த, வாயால்
குடித்து நின்று உமிழ்வான் என்னக் கக்கினன், குருதி வெள்ளம். 6.21.138

மீட்டும் அக்கையால் வீசி, செவித் தலத்து எற்ற, வீழ்ந்தான்;
கூட்டினான் உயிரை, விண்ணோர் குழாத்திடை; அரக்கர் கூட்டம்
காட்டில் வாழ் விலங்கு மாக்கள் கோள் அரி கண்ட என்ன,
ஈட்டம் உற்று எதிர்ந்த எல்லாம் இரிந்தன, திசைகள் எங்கும். 6.21.139

இலக்குவன் அம்பால் அரக்கர் சேனை மாளுதல்

மாண்டனன் அகம்பன்; மண்மேல் மடிந்தன நிருதர் சேனை;
மீண்டனர் குரக்கு வீரர்; விழுந்தன சினக் கை வேழம்;
தூண்டின கொடித்தேர் அற்றுத் துணிந்தன தொடுத்த வாசி;
ஆண்தகை இளைய வீரன் அடுசிலை பொழியும் அம்பால். 6.21.140

இலக்குவன் இருக்கும் சூழல் இதுவென அறியாது அனுமன் கலக்கமுறுதல்

ஆர்க்கின்ற குரலும் கேளான்; இலக்குவன் அசனி ஏற்றைப்
பேர்க்கின்ற சிலையின் நாணின் பேரொலி கேளான்; வீரர்
யார்க்கு இன்னல் உற்றது என்பது உணர்ந்திலன்; இசைப்போர் இல்லை;
போர்க்குன்றம் அனைய தோளான் இனையது ஓர் பொருமல் உற்றான். 6.21.141

அரக்கருடைய படைக் கடலினிடையே அங்கதன் முதலியோர் ஒருவரையொருவர் காணமுடியாத நிலையில் சேய்மையில் நிற்றல்

வீசின நிருதர் சேனை வேலையில் தனெ்மேல் திக்கின்
யோசனை ஏழு சென்றான் அங்கதன்; அதனுக்கு அப்பால்
ஆசையின் இரட்டி சென்றான் அரிகுலத்து அரசன்; அப்பால்
ஈசனுக்கு இளைய வீரன் இரட்டிக்கும் இரட்டி சென்றான். 6.21.142

அனுமன் இலக்குவன் நின்ற இடத்திற்கு இரண்டு மூன்று காத தூரத்திற்கு அண்மையில் அடைதல்

மற்றையோர் நாலும் ஐந்தும் யோசனை மலைந்து புக்கார்;
கொற்ற மாருதியும், வள்ளல் இலக்குவன் நின்ற சூழல்
முற்றினன்; இரண்டு மூன்று காவதம் ஒழியப் பின்னும்
சுற்றிய சேனை நீர்மேற் பாசியின் மிடைந்து துன்ன. 6.21.143

அனுமன், இலக்குவனால் நிகழ்த்தப்பட்ட போரின் பல்வேறு அடையாளங்களைக் காணுதல் (8716-8723)

'இளையவன் நின்ற சூழல் எய்துவென் விரைவின் 'என்று, ஓர்
உளைவு வந்து உள்ளம் தூண்ட, ஊழி வெங் காலின் செல்வான்,
களைவு அருந் துன்பம் நீங்கக் கண்டனன் என்ப மன்னோ
விளைவன செருவில் பல்வேறு ஆயின குறிகள் மேய. 6.21.144

ஆனையின் கோடும், பீலித் தழைகளும், ஆரத் தோடு
மான மா மணியும், பொன்னும், முத்தமும், கொழித்து வாரி,
மீனென அங்கும் இங்கும் படைக்கலம் மிளிர, வீசும்
பேன வெண் குடைய ஆய, குருதிப் பேர் ஆறு கண்டான். 6.21.145

ஆசைகள் தோறும் சுற்றி அலைக்கின்ற அரக்கர்தம் மேல்
வீசின பகழி, அற்ற தலையொடும் விசும்பை முட்டி,
ஓசையின் உலகம் எங்கும் உதிர்வுற, ஊழி நாளில்
காசு அறு கல்லின் மாரி பொழிவபோல், விழுவ கண்டான். 6.21.146

மான வேல் அரக்கர் விட்ட படைக்கலம், வான மாரி
ஆனவன் பகழி சிந்தத் திசையொடும் பொறியோடு அற்ற,
மீனினம் விசும்பினின்றும் இருள் உக வீழ்வ போல,
கானகம் தொடர்ந்த தீயின் சுடுவன பலவும் கண்டான். 6.21.147

அருளுடைக் குரிசில் வாளி, அந்தரம் எங்கும் தாமாய்,
தரெுள் உற தொடர்ந்து வீசிச் செல்வன தேவர் காண
இருளிடைச் சுடலை ஆடும் எண் புயதது அண்ணல் வண்ணச்
சுருளுடைச் சடையின் கற்றைச் சுற்று எனச் சுடர்வ கண்டான். 6.21.148

நெய் உறக் கொளுத்தப் பட்ட நெருப்பு என, பொருப்பின் ஓங்கும்
மெய் உறக் குருதி தாரை விசும்பு உற விளங்கு கின்ற,
ஐயனை, கங்குல் மாலை, அரசு என அறிந்து, காலம்
கைவிளக்கு எடுத்தது அன்ன கவந்தத்தின் காடு கண்டான். 6.21.149

ஆளெலாம் இழந்த தேரும் ஆனையும் ஆடல் மாவும்,
நாளெலாம் எண்ணினாலும் தொலைவு இல, நாதர் இன்றி,
தாள் எலாம் குலைய ஓடித் திரிவன; தாங்கள் ஆற்றும்
கோள் இலா மன்னன் நாட்டுக் குடி எனக் குலைவ கண்டான். 6.21.150

மிடல்கொளும் பகழி, மாரி வானினும் மும்மை வீசி,
மடல்கொளும் அலங்கல் மார்பன் மலைந்திட, உலைந்து மாண்டார்
உடல்களும் உதிர நீரும், ஒளிர்படைக் கலமும், உற்ற
கடல்களும்; நெடிய கானும், கார் தவழ் மலையும் கண்டான். 6.21.151

இலக்குவனது நாணொலிகேட்டு மகிழ்ந்த அனுமன் ஆரவாரித்தல்

சுழித்து எறி ஊழிக் காலின் துருவினன் தொடரும் தோன்றல்,
தழிக்கொண்ட குருதி வேலை தாவுவான், 'தனிப்பேர் அண்டம் '
கிழித்தது, கிழித்தது 'என்னும் நாண் உரும் ஏறு கேட்டான்;
அழித்து ஒழிகாலத்து ஆர்க்கும் ஆர்கலிக்கு இரட்டி ஆர்த்தான். 6.21.152

தன்னையடைந்து வணங்கிய அனுமனை இலக்குவன் தழுவிக் கொண்டு, வானர வீரர்களைக் குறித்து வினாவுதல் (8725-8726)

ஆர்த்த பேர் அமலை கேளா, 'அணுகினன் அனுமன்; எல்லார்
வார்த்தையும் கேட்கல் ஆகும் ' என்று அகம் மகிழ்ந்து, வள்ளல்
பார்ப்பதன் முன்னம் வந்து பணிந்தனன்; விசயப் பாவை
தூர்த்தனை இளைய வீரன் தழுவினன் இனைய சொன்னான். 6.21.153

'அரிகுல வீரர், ஐய! யாண்டையர்? அருக்கன் மைந்தன்
பிரிவு உனைச் செய்தது எவ்வாறு? அங்கதன் பிரிந்தது எங்கே?
விரி இருள் பரவைச்சேனை வெள்ளத்து விளைந்தது ஒன்றும்
தெரிகிலன் உரைத்தி 'என்றான்; சென்னிமேல் கையன் சொல்வான். 6.21.154

வானர வீரர்களைப்பற்றித் தான் ஒன்றும் அறிந்திலாமையை அனுமன் தெரிவித்தல்

'போயினார் போயவாறு போயினது அன்றி, போரில்
ஆயினார் ஆயது ஒன்றும் அறிந்திலென், ஐய! யாரும்
மேயினார் மேய போதே தெரிவது, விளைந்தது 'என்றான்
தாயினான் வேலையோடும் அயிந்திரப் பரவை தன்னை. 6.21.155

போர்க்களத்தில் ஒருவரையொருவர் அறியவியலாத நிலையில் உளதாய மயக்கத்தை யொழித்ததற்கு அனுமன் உபாயங் கூறுதல்

'மந்திரம் உளதால், ஐய! உணர்வுறும் மாலைத்து; அஃது, உன்
சிந்தையின் உணர்ந்து, செய்யற் பாற்றுஎனின் செய்தி; தவெ்வர்
தந்திரம் இதனைத் தெய்வப் படைகளால் சமைப்பின் அல்லால்
எந்தை! நின் அடியர் யாரும் எய்தலர், நின்னை 'என்றான். 6.21.156

இலக்குவன் இராமபிரானை நினைந்து வாழ்த்தி அரக்கர்மேற் சிவன்படை தொடுத்தல்

'அன்னது புரிவன் 'என்னா, ஆயிர நாமத்து அண்ணல்
தன்னையே வணங்கி வாழ்த்தி, சரங்களைத் தெரிந்து தாங்கி,
பொன் மலை வில்லினான் தன் படைக்கலம் பொருந்தப் பற்றி,
மின் எயிற்று அரக்கர் தம்மேல் ஏவினான் வில்லின் செல்வன். 6.21.157

இலக்குவன் ஏவிய பாசுபதப் படையினால் அரக்கர் சேனையழிய இருள் நீங்குதல்கண்டு தேவர்கள் மயக்கந்தீர்தல்

முக்கணான் படையை மூட்டி விடுதலும், மூங்கில் காட்டில்
புக்கது ஓர் ஊழித் தீயின், புறத்தின் ஓர் உருவும் போகாது
அக்கணத்து எரிந்து வீழ்ந்தது, அரக்கர்தம் சேனை; ஆழித்
திக்கு எலாம் இருளும் தீர்ந்த தேவரும் மயக்கம் தீர்ந்தார். 6.21.158

மாயை நீங்கினமையால் வானர வீரர்கள் இலக்குவனை வந்தடைதல் (8731-8732)

தேவர்தம் படையை விட்டான் என்பது சிந்தை செய்யா,
மாபெரும் மாயை நீங்க மகோதரன் மறையப் போனான்;
ஏவரும் பிரிந்தார் எல்லாம், இன மழை இரிய ஆர்த்து,
கோ இளங் களிற்றை வந்து கூடினார்; ஆடல் கொண்டார். 6.21.159

8732. 6.21.யாவர்க்கும் தீது இலாமை கண்டுகண்டு, உவகை ஏற,
தேவர்க்கும் தேவன் தம்பி திரு மனத்து ஐயம் தீர்ந்தான்;
காவல் போர்க் குரக்குச் சேனை கல்லெனக் கலந்து புல்ல
பூவர்க்கம் இமையோர் தூவப் பொலிந்தனர்; தூதர் போனார். 6.21.160

அரக்கராகிய தூதர்கள் சென்று இராவணனுக்கும் இந்திரசித்திற்கும் போர்க்களத்தில் நிகழ்ந்தவற்றை எடுத்துரைத்தல் (8733-8735)

இலங்கையர் கோனை எய்தி, எய்தியது உரைத்தார்; 'நீவிர்
விலங்கினிர் போலும்; வெள்ளம் நூற்றை ஓர் வில்லால், வேழக்
குலங்களினோடும் கொல்லக் கூடுமோ? என்ன, 'கொன்றை
அலங்கலான் படையின் 'என்றார்; 'அன்னதேல், ஆகும் 'என்றான். 6.21.161

'தோடு அவிழ் அலங்கல் என் சேய்க்கு உணர்த்துமின் 'என்னச் சொன்னான்;
ஓடினார், சாரர் வல்லை உணர்த்தினர்; துணுக்கம் எய்தா,
ஆடவர் திலகன், 'யாண்டையான் இகல் அனுமன்? ஏனோர்,
வீடணன் யாங்கண் உள்ளார்? உணர்த்துமின் விரைவின் 'என்றான். 6.21.162

'வந்திலன் இராமன்; வேறு ஓர் மலை உளான்; உந்தை மாயம்
தந்தன தீர்ப்பான் போனான், உண்பன தாழ்க்க தாழாது;
எந்தை! ஈது இயன்றது' என்றார்; 'மகோதரன் யாண்டை? 'என்றான்;
'அந்தரத்திடையான் 'என்ன, இராவணி 'அழகிது 'என்றான். 6.21.163

பிரமாத்திரத்தினைப் பகைவர்மேல் ஏவுதற்கு இதுவே ஏற்றகாலம் 'என எண்ணிய இந்திரசித்து முறைப்படி வேள்வியினைச் செய்தல் (8736-8737)

'காலம் ஈது' எனக் கருதிய இராவணன் காதல்,
ஆல மாமரம் ஒன்றினை விரைவினில் அடைந்தான்;
மூல வேள்விக்கு வேண்டுவ கலப்பைகள் முறையால்
கூலம் நீங்கிய இராக்கதப் பூசுரர் கொணர்ந்தார். 6.21.164

அம்பினால் பெருஞ் சமிதைகள் அமைத்தனன்; அனலில்
தும்பை மாமலர் தூவினன்; காரி எள் சொரிந்தான்;
கொம்பு பல்லொடு, கரிய வெள்ளாட்டு இருங்குருதி,
வெம்பு வெந் தசை முறையின் இட்டு, எண்ணெயால் வேட்டான் 6.21.165

வேள்வி முற்றிய இந்திரசித்து பிரமாத்திரத்துடன் வானிற்சென்று மறைந்திருத்தல் (8738-8739)

வலம் சுழித்து வந்து எழுந்து எரி நறுவெறி வயங்கி,
நலம் சுரந்தன பெருங்குறி முறைமையின் நல்க,
குலம் சுரந்து எழு கொடுமையான், முறையினின் கொண்டே,
'நிலம் சுரந்து எழும் வென்றி ' என்று உம்பரின் நிமிர்ந்தான். 6.21.166

விசும்பு போயினன், மாயையின் பெருமையான்; மேலைப்
பசும்பொன் நாட்டவர் நாட்டமும் உள்ளமும் படரா,
அசும்பு விண்ணிடை அடங்கினன்; முனிவரும் அறியார்;
தசும்பு நுண்நெடுங் கோெளாடு காலமும் சார. 6.21.167

மகோதரன் மாயையினால் இந்திரனாக வெள்ளை யானையின் மேல் அமர்ந்து போருக்கு வர, அது கண்டு வானரர் திகைப்புற்று வருந்துதல் (8740-8742)

அனையன் நின்றனன்; அவ் வழி மகோதரன் அறிந்து, ஓர்
வினையம் எண்ணினன், இந்திர வேடத்தை மேவி,
துனை வலத்து அயிராவதத்து எருத்தின்மேல் தோன்றி,
முனைவர் வானவர் அவரொடும் போர் செய மூண்டான். 6.21.168

'அரக்கர் மானிடர் குரங்கு எனும் அவை எல்லாம் அல்லா
உருக்கள் யா உள உயிர் இனி உலகத்தின் உழல்வ,
தருக்கு போர்க்கு உடன் வந்துளவாம் 'எனச் சமைத்தான்;
வெருக் கொளப் பெருங் கவிப்படை குலைந்தது, விலங்கி. 6.21.169

'கோடு நான்குடைப் பால்நிறக் குன்றமேல் கொண்டான்
ஆடல் இந்திரன்; அல்லவர் யாவரும் அமரர்,
சேடர், சிந்தனை முனிவர்கள்; அமரர் பொரச் சீறி
ஊடு வந்து உற்றது என்கொலோ, நிபம்? 'என உலைந்தார். 6.21.170

முனிவர், வானவர் முதலியோர் நம்முடன் போர்செய்ய வருவதற்குக் காரணம் யாது? 'என இலக்குவன் அனுமனை நோக்கி வினவுதல்

அனுமன் வாள்முகம் நோக்கினன், ஆழியை அகற்றித்
தனு வலம் கொண்ட தாமரைக் கண்ணவன் தம்பி,
'முனிவர் வானவர் முனிந்து வந்து எய்த, யாம் முயன்ற
துனி இது என்கொலோ? சொல்லுதி, உணர்ந்து 'எனச்சொன்னான். 6.21.171

அந் நிலையில் இந்திரசித்து பிரமாத்திரத்தை இலக்குவன்மேல் ஏவுதல்

இன்ன காலையின் இலக்குவன் மேனிமேல் எய்தான்,
முன்னை நான்முகன் படைக்கலம்; இமைப்பதன் முன்னம்
பொன்னின் மால்வரைக் குரீஇ இனம் மொய்ப்பது போல,
மன்னல் ஆம் தரம் அல்லன சுடர்க்கணை பாய்ந்த. 6.21.172

பிரமாத்திரத்தால் தாக்கப்பட்டு இலக்குவன் உணர்வற்று வீழ்தல்

கோடி, கோடி, நூறாயிரம் சுடர்க்கணைக் குழாங்கள்
மூடி மேனியை முற்றுறச் சுற்றின மூழ்க,
ஊடு செய்வது ஒன்று உணர்ந்திலன், உணர்வு புக்கு ஒடுங்க,
ஆடல் மாக்கரி சேவகம் அமைந்தனெ, அசைந்தான். 6.21.173

இந்திரனாகி வந்தவனை அந்தரத்து எற்றுவேன் 'என எழுந்த அனுமன் பிரமாத்திரத்தால் அயர்ந்து வீழ்தல்

அனுமன், 'இந்திரன் வந்தவன் என்கொல், இது அமைந்தான்?
இனி என்? எற்றுவன், களிற்றினோடு எடுத்து' என எழுந்தான்,
தனுவின் ஆயிர கோடி வெங் கடுங்கணை தைக்க,
நினைவும் செய்கையும் மறந்துபோய், நெடுநிலம் சேர்ந்தான். 6.21.174

சுக்கிரீவன் வீழ்தல்

அருக்கன் மாமகன், ஆடகக் குன்றின்மேல் அலர்ந்த
முருக்கின் கானகம் ஆமெனக் குருதி நீர் முடுக,
தருக்கி வெஞ்சரம் தலைத்தலை மயங்கின தைக்க
உருக்கு செம்பு அன்ன கண்ணினன், நெடுநிலம் உற்றான். 6.21.175

அங்கதனும் சாம்பனும் தரையிற் சாய்தல்

அங்கதன் பதினாயிரம் அயில் கணை அழுந்த,
சிங்க ஏறு இடி உண்டென நெடுநிலம் சேர்ந்தான்;
சங்கம் ஏறிய பெரும்புகழ்ச் சாம்பனும் சாய்ந்தான்;
துங்க மார்பையும் தோளையும் வடிக்கணை தொளைக்க. 6.21.176

நீலன், இடபன், பனசன், குமுதன் ஆகியோர் உயிர் நீத்தல

நீலன், ஆயிரம் வடிக்கணை நிறம் புக்கு நெருங்க,
காலனார் முகம் கண்டனன்; இடபன் விண் கலந்தான்;
ஆலமே அன்ன பகழியால், பனசனும் அயர்ந்தான்;
கோலின் மேவிய கூற்றினால், குமுதனும் குறைந்தான். 6.21.177

நளன், மயிந்தன், துமிந்தன், கவயன், கேசரி என்போர் மடிதல்

வேலை தட்டவன், ஆயிரம் பகழியால் வீழ்ந்தான்;
வாலி நேர் வலி மயிந்தனும் துமிந்தனும் மடிந்தார்;
கால வெந்தொழில் கவயனும் வானகம் கண்டான்;
மாலை வாளியின் கேசரி மண்ணிடை மடிந்தான். 6.21.178

சதவலி, சுசேடணன், கந்தமாதனன், இடும்பன், ததிமுகன் என்போர் இறத்தல்

விந்தம் அன்ன தோள் சதவலி, சுசேடணன், வினதன்,
கெந்த மாதனன், இடும்பன், வன் ததிமுகன், கிளர
உந்து வார்கணை கோடி தம் உடலம் உற்று ஒளிப்ப,
தம்தம் நல் உணர்வு ஒடுங்கினர், மண்ணுறச் சாய்ந்தார். 6.21.179

பிரமாத்திரத்தால் தாக்கப்பட்டு வானரவீரர் அனைவரும் இறந்துகிடக்கும் போர்க்களத்தின் தோற்றம் (8752-8754)

மற்றை வீரர்கள் யாவரும் வடிக்கணை மழையால்
முற்றும் வீந்தனர்; முழங்குபேர் உதிரத்தின் முந்நீர்
எற்று வான்திரைக் கடலொடு பொருது சென்று ஏற,
ஒற்றை வார்கணை ஆயிரம் குரங்கினை உருட்ட. 6.21.180

தளைத்து வைத்தது, சதுமுகன் பெரும்படை தள்ளி
ஒளிக்க, மற்றொரு புகலிடம் உணர்கிலர்; உருமின்
வளைத்து வித்திய வாளியால், மண்ணொடும் திண்ணம்
முளைப் புடைத்தன ஒத்தன; வானரம் முடிந்த. 6.21.181

குவளைக் கண்ணினை வானவர் மடந்தையர் கோட்டித்
துவள, பாரிடைக் கிடந்தனர்; குருதிநீர் சுற்றித்
திவள, கீழொடு மேல் புடைபரந்து இடைசெறிய,
பவளக் காடுடைப் பாற்கடல் ஒத்தது, அப்பரவை. 6.21.182

தம் உடம்பினைத் துறந்து விண்ணிற்சென்ற வானர வீரர்களை வானவர்கள் உபசரித்து மீட்டும் மண்ணுலகிற் செல்லுமாறு வற்புறுத்துதல் (8755-8757)

விண்ணில் சென்றது, கவிக்குலப் பெரும்படை வெள்ளம்;
கண்ணில் கண்டனர் வானவர், விருந்து எனக் கலந்தார்,
உள் நிற்கும் பெருங் களிப்பினர், அளவளாய் உவந்தார்;
'மண்ணில் செல்லுதிர் இக் கணத்தே ' என வலித்தார். 6.21.183

'பார் படைத்தவன் படைக்கு ஒருபூசனை படைத்தீர்;
நீர்படக் கடவீர் அலீர்; வரிசிலை நெடியோன்
பேர் படைத்தவர்க்கு அடியவர்க்கு அடியரும் பெறுவார்,
வேர் படைத்த வெம் பிறவியில் துவக்குணா, வீடு. 6.21.184

'நங்கள் காரியம் இயற்றுவான் நிலத்திடை நடந்தீர்;
உங்கள் ஆருயிர் எம் உயிர்; உடல் பிறிது உற்றீர்;
செங்கண் நாயகற்காக வெங் களத்து உயிர் தீர்ந்தீர்;
எங்கள் நாயகர் நீர்கள்' என்று, இமையவர் இசைத்தார். 6.21.185

வானரக் குழுவுடன் இலக்குவன் இறந்தான்; இராமன் இங்கு வந்திலன் 'என எண்ணிய இந்திரசித்து வெற்றிச் சங்கினை ஊதி இராவணனை அடைந்து நிகழ்ந்தன கூறுதல்

'வெங்கண் வானரக் குழுவொடும் இளையவன் விளிந்தான்;
இங்கு வந்திலன், அகன்றனன் இராமன்' என்று இகழ்ந்தான்;
சங்கம் ஊதினன்; தாதையை வல்லையில் சார்ந்தான்;
பொங்கு போரிடைப் புகுந்துள பொருள் எலாம் புகன்றான். 6.21.186

இராமன் இறந்திலனோ? 'என வினவிய இராவணனுக்கு அவன் அங்கு இல்லாமையை இந்திரசித்து எடுத்துரைத்தல்.

'இறந்திலன்கொல் அவ் இராமன்? 'என்று இராவணன் இசைத்தான்;
'துறந்து நீங்கினன்; அல்லனேல், தம்பியைத் தொலைத்து,
சிறந்த நண்பரைக் கொன்று, தன் சேனையைச் சிதைக்க,
மறந்து நிற்குமோ, மற்று அவன் திறன்? 'என்றான் 'மதலை 6.21.187

இந்திரசித்தும் மகோதரனும் தத்தம் இருப்பிடம் சேர்தல்

'அன்னதே 'என அரக்கனும் ஆதரித்து அமைந்தான்;
சொன்ன மைந்தனும், தன் பெருங் கோயிலைத் தொடர்ந்தான்;
மன்னன் ஏவலின், மகோதரன் போயினன், வந்தான்;
என்னை ஆளுடை நாயகன் வேறு இடத்து இருந்தான். 6.21.188

வேறிடத்திருந்து படைக்கலங்களுக்கு வழிபாடியற்றிய இராமன் அக்கினிப் படையினால் இருளை அகற்றிப் போர்க்களத்தை அடைதல் (8761-8762)

செய்ய தாமரை நாள்மலர்க் கைத்தலம் சேப்ப,
துய்ய தேவர்தம் படைக்கு எலாம் வரன்முறை துரக்கும்
மெய்கொள் பூசனை விதிமுறை இயற்றி, மேல், வீரன்,
'மொய்கொள் போர்க்களத்து எய்துவாம் இனி' என முயன்றான். 6.21.189

கொள்ளியின் சுடர் அனலிதன் பகழி கைக் கொண்டான்;
அள்ளி நுங்கலாம் ஆர் இருள் பிழம்பினை அழித்தான்;
வெள்ள வெங் களப் பரப்பினைப் பொருக்கென விழித்தான்;
தள்ளில், தாமரைச் சேவடி நுடங்குறச் சார்ந்தான். 6.21.190

இராமன், போர்க்களத்தில் வீழ்ந்து கிடக்கும் சுக்கிரீவன் முதலிய வானரத் தலைவரைத் தனித்தனி கண்டு வருந்துதல் (8763-8764)

நோக்கினான் பெருந் திசைதொறும், முறை முறைநோக்கி,
ஊக்கினான், தடந் தாமரைத் திரு முகத்து உதிரம்
போக்கினான்; நிணப் பறந்தலை அழுவத்துள் புக்கான்;
காக்கும் வானரத் தலைவரைத் தனித்தனி கண்டான். 6.21.191

சுக்கிரீவனை நோக்கி, தன் தாமரைத் துணைக்கண்
உக்க நீர்த்திரள் ஒழுகிட, நெடிது நின்று உயிர்த்தான்;
'தக்கதோ இது நினக்கு? 'என்று, தனிமனம் தளர்ந்தான்;
பக்கம் நோக்கினன்; மாருதி தன்மையைப் பார்த்தான். 6.21.192

அனுமனது நிலைகண்டு இராமன் அழுது புலம்புதல் (8765-8766)

'கடல்கடந்து புக்கு அரக்கரைக் கருவொடும் கலக்கி,
இடர் கடந்து நான் இருக்க, நீ நல்கியது இதற்கோ?
உடல் கடந்தனவோ, உனை அரக்கன் வில் உதைத்த
அடல் கடந்த போர் வாளி? ' என்று ஆகுலித்து அழுதான். 6.21.193

'முன்னைத் தேவர்தம் வரங்களும், முனிவர்தம் மொழியும்,
பின்னைச் சானகி உதவியும் பிழைத்தன பிறந்த
புன்மைச்செய் தொழில் என் வினைக் கொடுமையால்; புகழோய்!
என்னைப் போல்பவர் ஆருளர், ஒருவர்? 'என்று இசைத்தான். 6.21.194

இராமன், தன்னை நொந்துரைத்தல் (8767-8768)

புன்தொழில் புலை அரசினை வெஃகி என் பூண்டேன்?
கொன்று ஒருக்கினேன், எந்தையை; சடாயுவைக் குறைத்தேன்;
இன்று ஒருக்கினேன், இத்தனை வீரரை; இருந்தேன்;
வன்தொழிற்கு ஒரு வரம்பும் உண்டாய் வரவற்றோ? 6.21.195

'தமையனைக் கொன்று, தம்பிக்கு வானரத் தலைமை
அமைய நல்கினென், அடங்கலும் அவிப்பதற்கு அமைந்தேன்;
கமை பிடித்து நின்று, உங்களை இத்துணை கண்டேன்;
சுமை உடல் பொறை சுமக்க வந்தேன் ' எனச் சொன்னான். 6.21.196

விழுந்துகிடக்கின்ற அங்கதனை நோக்கி அழுதல்

விடைக் குலங்களின் நடுவண் ஓர் விடை கிடந்து என்ன
கடைக்கண் தீ உக, அங்கதக் களிற்றினைக் கண்டான்;
'படைக் கலங்களைச் சுமக்கின்ற பதகனேன், பழி பார்த்து
அடைக்கலப் பொருள் காத்தவாறு அழகிது 'என்று அழுதான். 6.21.197

இராமன், பிரமாத்திரத்தால் தாக்குண்டு கிடக்கும் தம்பியைக் காணுதல்

உடலிடைத் தொடர் பகழியின் ஒளிர்கதிர்க் கற்றை,
சுடருடைப் பெருங் குருதியில் பாம்பு என, சுமந்த
மிடல் உடை பணம் மீமிசை, தான், பண்டை வெள்ளைக்
கடலிடைத் துயில்வான் அன்ன தம்பியைக் கண்டான். 6.21.198

இராமன் ஆற்றொணாத் துயருற்று உணர்வு ஒடுங்குதல் (8771-8773)

பொருமினான், அகம்; பொங்கினான்; உயிர் முற்றும் புகைந்தான்;
குரு மணித் திருமேனியும், மனம் எனக் குலைந்தான்;
தருமம் நின்று தன் கண் புடைத்து அலமரச் சாய்ந்தான்;
உருமினால் இடியுண்டது ஓர் மராமரம் ஒத்தான். 6.21.199

உயிர்த்திலன் ஒரு நாழிகை; உணர்ந்திலன் ஒன்றும்;
வியர்த்திலன் உடல்; விழித்திலன் கண் இணை; விண்ணோர்
அயிர்த்து, 'இலன்கொல்? 'என்று அஞ்சினர்; அங்கையும் தாளும்
பெயர்த்திலன்; உயிர் பிரிந்திலன் கருணையால் பிறந்தான். 6.21.200

தாங்குவார் இல்லை; தம்பியைத் தழீஇக்கொண்ட தடக்கை
வாங்குவார் இல்லை; வாக்கினால் தரெுட்டுவார் இல்லை;
பாங்கர் ஆயினார் யாவரும் பட்டனர்; பட்ட
தீங்குதான் இது; தமியனை யார்துயர் தீர்ப்பார். 6.21.201

இராமனைத் தேற்றுவாரில்லாத போர்க்களத்தின் தோற்றம்

கவந்த பந்தமும், கழுதும், தம் கணவரைக் காணார்
சிவந்த கண்ணியர் தேடினர் திரிபவர் திரளும்,
உவந்த சாதகர் ஈட்டமும், ஓரியின் ஒழுக்கும்,
நிவந்த; அல்லது பிறர் இல்லை, களத்திடை நின்றார். 6.21.202

இராமனது துயர்கண்டு தேவர் முதலிய யாவரும் வருந்துதல்

வான நாடியர் வயிறு அலைத்து அழுது, கண் மழைநீர்
சோனை மாரியின் சொரிந்தனர்; தேவரும் சோர்ந்தார்;
ஏனை நிற்பவும் திரிபவும் இரங்கின, எவையும்
ஞான நாயகன் உருவமே ஆதலின் நடுங்கி. 6.21.203

முகையின் நாள்மலர்க் கிழவற்கும் முக்கணான் தனக்கும்
நகையின் நீங்கின, திருமுகம், கருணை உள் நலிய;
தொகையுள் நின்றவர்க்கு உற்றன சொல்லி என்? தொடர்ந்த
பகையும் பார்த்தன்று; பாவமும் கலுழ்ந்தது, பரிவால். 6.21.204

இராமன், சிறிது உணர்வு வரப்பெற்றுக் கண் விழித்துப் பார்த்து தம்பி இலக்குவன் இறந்தான் என்பதனை யுணர்ந்து பலவாறு புலம்புதல் (8777-8792)

அண்ணலும், சிறிது உணர்வினோடு அயாவுயிர்ப்பு அணுகி,
கண் விழித்தனன்; தம்பியைத் தெரிவுறக் கண்டான்;
'விண்ணை உற்றனன்; மீள்கிலன் ' என்று, அகம் வெதும்பி,
புண்ணின் உற்றது ஓர் எரி அன்ன துயரினன் புலம்பும். 6.21.205

'எந்தை இறந்தான் 'என்றும், இருந்தேன்; உலகு எல்லாம்
தந்தனன் என்னும் கொள்கை தவிர்ந்தேன் தனி அல்லேன்,
கந்தன் இருந்தாய்நீ என, நின்றேன்; இது காணேன்;
வந்தனென், ஐயா! வந்தனென், ஐயா! இனி வாழேன். 6.21.206

'தாயோ நீயே; தந்தையும் நீயே; தவம் நீயே;
சேயோ நீயே; தம்பியும் நீயே; திரு நீயே;
போயோ நின்றாய், என்னை இகந்தாய், புகழ் பாராய்,
நீயோ; நானும் நின்றனன்; நெஞ்சம் வலியேனோ! 6.21.207

'ஊறா நின்ற புண்ணுடையாய்பால் உயிர் காணேன்;
ஆறா நின்றேன், ஆவி சுமந்தே அழிகின்றேன்;
ஏறே! இன்னும் உய்யினும் உய்வேன்; இரு கூறாக்
கீறா நெஞ்சம் பெற்றனன் அன்றோ, கெடுவேனே? 6.21.208

'பயிலும் காலம் பத்தொடு நாலும் படர்கானத்து
அயில்கின்றேனுக்கு ஆவன நல்கி, அயிலாதாய்!
வெயிலென்று உன்னாய், நின்று தளர்ந்தே! மெலிவு எய்தி,
துயில்கின்றாயோ, இன்று? இவ் உறக்கம் துறவாயோ? 6.21.209

'அயிரா நெஞ்சும் ஆவியும் ஒன்றே எனும் அச்சொல்
பயிரா எல்லைப் பாதகனேற்கும் பரிவு உண்டோ?
செயிரோ இல்லா உன்னை இழந்தும், திரிகின்றேன்;
உயிரோ, நானோ, ஆர் இனி உன்னோடு உறவு? ஐயா! 6.21.210

வேள்விக்கு ஏகி வில்லும் இறுத்து, "ஓர் விடம் அம்மா
வாழ்விக்கும் என்று எண்ணினென், முன்னே வருவித்தேன்;
சூழ்வித்து, என்னைச் சுற்றினரோடும் சுடுவித்தேன்;
தாழ்வித்தேனோ, இத்தனை கேடும் தருவித்தேன்? 6.21.211

'மண்மேல் வைத்த காதலின், மாதா முதலோர்க்குப்
புண்மேல் வைத்த தீ நிகர் துன்பம் புகுவித்தேன்;
பெண்மேல் வைத்த காதலின், இப் பேறுகள் பெற்றேன்;
எண்மேல் வைத்தேன்; என் புகழ்; யான்தான் எளியேனோ? 6.21.212

'மாண்டாய் நீயோ; யான் ஒருபோதும் உயிர் வாழேன்;
ஆண்டான் அல்லன் நானிலம், அந்தோ பரதன்தான்
பூண்டார் எல்லாம் பொன்றுவர், துன்பம் பொறை ஆற்றார்;
வேண்டாவோ, நான் நல் அறம் அஞ்சி மெலிவுற்றால்? 6.21.213

'அறம், தாய், தந்தை, சுற்றமும், மற்றும், எனை அல்லால்,
துறந்தாய்; என்றும் என்னை மறாதாய்! துணை வந்து
பிறந்தாய்! என்னைப் பின்பு தொடர்ந்தாய்! பிரிவு ஆற்றாய்
இறந்தாய்; உன்னைக் கண்டும் இருந்தேன், எளியேனோ? 6.21.214

'சான்றோர் மாதைத் தக்க அரக்கன் சிறை வைக்க,
ஆன்றோர் சொல்லும் நல்லறம், அன்னான் வயமானால்,
மூன்றாய் நின்ற பேருலகு, ஒன்றாய் முடியாவேல்,
தோன்றாவோ, என் வில் வலி, வீரத் தொழில் அம்மா? 6.21.215

'வேலைப் பள்ளக் குண்டு அகழிக்கும் விராதற்கும்
காலின் செல்லாக் கவந்தன் உயிர்க்கும், கரனுக்கும்,
மூலப் பொத்தல் செத்த மரத்து ஏழ் முதலுக்கும்,
வாலிக்கும்மே ஆயினவாறு என் வலி அம்மா! 6.21.216

'இருந்தேன் ஆனால், இந்திர சித்தே முதலாய
பெருந் தேராரைக் கொன்று பிழைக்கப் பெறுவேனோ?
வருந்தேன், "நீயே வெல்லுதி " என்னும் வலி கொண்டேன்;
பொருந்தேன், நான், இப் பொய்ப் பிறவிக்கும் பொறை அல்லேன்! 6.21.217

'மாதாவும், நம் சுற்றமும், நாடும் மறையோரும்,
'ஏது ஆனாரோ 'என்று தளர்ந்தே இறுவாரை,
தாதாய்! காணச் சால நினைந்தே தளர்கின்றேன்;
போதாய், ஐயா, பொன்முடி என்னைப் புனைவிப்பான்! 6.21.218

'பாசமும் முற்றச் சுற்றிய போதும், பகையாலே
நாசமும் முற்று இப்போதும் நடந்தேன், உடன் அல்லேன்;
நேசமும் அற்றார் செய்வன செய்தே நிலைநின்றேன்;
தேசமும் மற்று என் கொற்ற நலத்தைச் சிரியாதோ? 6.21.219

கொடுத்தேன், அன்றே, வீடணனுக்குக் குலம் ஆள
முடித்து ஓர் செல்வம்; யான் முடியாதே முடிகின்றேன்;
படித்தேன் அன்றே பொய்மை? குடிக்குப் பழிபெற்றேன்;
ஒடித்தேன் அன்றே என்புகழ் நானே, உணர்வு அற்றேன்? 6.21.220

புலம்பிய இராமன் 'இறந்தொழிவோம் 'என்னும் நிலையில் அறிவு சோர்ந்து துயில் கொள்ளுதல்

என்று என்று ஏங்கும், விம்மும், உயிர்க்கும், இடை அஃகி,
சென்று ஒன்று ஒன்றோடு இந்தியம் எல்லாம் சிதைவு எய்த,
'பொன்றும் 'என்னாத் தம்பியை மார்பத்தொடு புல்லி,
ஒன்றும் பேசான்; தன்னை மறந்தான், துயில் உற்றான். 6.21.221

இராமன் துயர்நிலையைக்கண்டு துணுக்குற்ற தேவர்கள், அவனது இறைமைத் தன்மையையும் அவதாரத்தின் உண்மையையும் எடுத்துக்கூறித் தம்மைக் காத்தருளுமாறு வேண்டுதல் (8794-8801)

கண்டார் விண்ணோர்; கண்கள் புடைத்தார், கலுழ்கின்றார்;
கொண்டார் துன்பம், 'என்முடிவு? ' என்னா, குலைகின்றார்?
'அண்டா! ஐயா! எங்கள் பொருட்டால் அயர்கின்றாய்;
உண்டோ உன்பால் துன்பு? ' என, அன்பால் உரைசெய்தார். 6.21.222

'உன்னை உள்ளபடி அறியேம்; உலகை உள்ள திறம் உள்ளேம்;
பின்னை அறியேம்; முன் அறியேம், இடையும் அறியேம், பிறழாமல்;
நின்னை வணங்கி நீ வகுத்த நெறியின் நிற்கும் அது அல்லால்,
என்னை, அடியேம் செயற்பால? இன்ப துன்பம் இல்லோனே! 6.21.223

'அரக்கர் குலத்தை வேர் அறுத்து, எம் அல்லல் நீக்கி அருளாய் 'என்று
இரக்க, எம்மேல் கருணையினால், இயையா உருவம் இஃது எய்தி,
புரக்கும் மன்னர் குடிப்பிறந்து போந்தாய்! அறத்தைப் பொறை தீர்ப்பான்,
கரக்க நின்றே, நெடுமாயம் எமக்கும் காட்டக் கடவாயோ? 6.21.224

'ஈன்ற எம் இடுக்கண் துடைத்து அளிப்பான் இரங்கி; அரசர் இல்பிறந்தாய்!
"மூன்று ஆம் உலகம் துயர் தீர்த்தி என்னும் ஆசை முயல்கின்றேம்
ஏன்றும் மறந்தேம், "அவன் அல்லன்; மனிதன் " என்றே; இது மாயம்
போன்றது இல்லை, அருளுடையாய்! பொய்யும் புகலப் புக்காயோ? 6.21.225

'அண்டம் பலவும்; அனைத்து உயிரும், அகத்தும் புறத்தும் உள ஆக்கி,
உண்டும் உமிழ்ந்தும், அளந்து இடந்தும், உள்ளும் புறத்தும் உளை ஆகிக்
கொண்டு, சிலம்பிதன் வாயின் நூலால் இயையக் கூடு இயற்றி,
பண்டும் இன்றும் அமைக்கின்ற படியை ஒருவாய் பரமேட்டி! 6.21.226

'துன்ப விளையாட்டு இதுவேயும், உன்னைத் துன்பம் தொடர்பு இன்மை,
இன்ப விளையாட்டு ஆம்; எனினும், அறியாதோமுக்கு இடர் உற்றால்
அன்பு விளையும், அருள் விளையும், அறிவு விளையும் அவை எல்லாம்,
முன்பு பின்பு நாடு இல்லாய்! முடித்தால் அன்றி முடியாவே. 6.21.227

'வருவாய் போல வாராதாய்! வந்தாயென்று மனம் களிப்ப,
வெருவாது இருந்தோம்; நீ இடையே துன்பம் விளைக்க, மெலிகின்றேம்;
கரு ஆய் அளிக்கும் களைகண்ணே! நீயே இதனைக் களையாயேல்
திருவாழ் மார்ப! நின் மாயை எம்மால் தீர்க்கத் தீருமோ? 6.21.228

'அம்பரீடற்கு அருளியதும், அயனார் மகனார்க்கு அளித்ததுவும்,
எம்பிரானே! எமக்கு இன்று பயந்தது' என்றே ஏமுறுவோம்;
வெம்பு துயரம் நீ உழக்க, வெளி காணாது மெலிகின்றேம்;
தம்பி துணைவா! நீ இதனைத் தவிர்ந்து, எம் உணர்வைத் தாராயோ? 6.21.229

அரக்கராகிய தூதர்கள், இராவணனையடைந்து 'உன்பகை முடிந்தது 'என அறிவித்தல்

என்ப பலவும் எடுத்து இயம்பி, இமையாதோரும் இடர் உழந்தார்;
அன்பு மிகுதியால், ஐயன் ஆவி உள்ளே அடங்கினான்,
துன்ப மனிதர் கருமமே புரிய முன்பு துணிந்தமையால்;
புன்கண் நிருதர் பெருந்தூதர் போனார், அரக்கனிடம் புகுந்தார். 6.21.230

'என் வந்தது நீர்? 'என்று அரக்கர்க்கு இறைவன் இயம்ப, எறிசெருவில்
நின் மைந்தன்தன் நெடுஞ்சரத்தால் துணைவர் எல்லாம் நிலம் சேர,
பின்வந்தவனும் முன்மடிந்த பிழையை நோக்கி, பெருந் துயரால்,
முன்வந்தவனும் முடிந்தான்; உன் பகை போய் முடிந்தது 'என மொழிந்தார் 6.21.231
---------------

6.22 – Sita sieht das Schlachtfeld

6.22 சீதை களம் காண் படலம் (8804 - 8835)

வெற்றிவிழாக் கொண்டாட இராவணன் கட்டளையிடுதல்

பொய்யார் தூதர் என்பதனால், பொங்கி எழுந்த உவகையன் ஆய்
மெய்யார் நிதியின் பெருவெறுக்கை வெறுக்க வீசி, விளைந்தபடி
கை ஆர் வரைமேல் முரசு ஏற்றிச் சாற்றி நகரம் களி சிறப்ப
நெய் ஆர் ஆடல் கொள்க, என்று நிகழ்த்துக என்றான் நெறி இல்லான். 6.22.1

இராவணன் கட்டளைப்படி மருத்தன் மாய்ந்த அரக்கருடலைக் கடலில் எறிதல்

அந்த நெறியை அவர் செய்ய, அரக்கன் மருத்தன்தனைக் கூவி
'முந்த நீ போய் அரக்கர் உடல் முழுதும் கடலில் முடுக்கிடு; நின்
சிந்தை ஒழியப் பிறர் அறியின், சிரமும் வரமும் சிந்துவென்' என்று
உந்த; அவன்போய் அரக்கர் உடல் அடங்கக் கடலினுள் இட்டான். 6.22.2

இராவணன் ஏவியபடி சீதையைக் களத்திற்குக் கொணர்தல்

'தெய்வ மானத்திடை ஏற்றி மனிசர்க்கு உற்ற செயல் எல்லாம்
தையல் காணக் காட்டுமின்கள்; கண்டால் அன்றித் தனது உள்ளத்து
ஐயம் நீங்காள் 'என்று உரைக்க, அரக்கர் மகளிர் இரைத்து ஈண்டி,
உய்யும் உணர்வு நீத்தாளை நெடும் போர்க் களத்தின் மிசை உய்த்தார். 6.22.3

சீதை விமானத்திலிருந்தபடியே தரையில் வீழ்ந்து கிடக்கும் இராமனைக் கண்டு வருந்துதல்

கண்டாள் கண்ணால் கணவன் உரு; அன்றி, ஒன்றும் காணாதாள்;
உண்டாள் விடத்தை என, உடலும் உணர்வும் உயிர்ப்பும் உடன் ஓய்ந்தாள்;
தண் தாமரைப்பூ நெருப்புற்ற தன்மை உற்றாள்; தரியாதாள்
பெண்தான் உற்ற பெரும்பீழை உலகுக்கு எல்லாம் பெரிது அன்றோ! 6.22.4

சீதை அழுதலும் அதுகண்டு பெண்டிருலகமே அழுதல் (8808-8809)

மங்கை அழலும் வான் நாட்டு மயில்கள் அழுதார்; மழ விடையோன்
பங்கின் உறையும் குயில் அழுதாள்; பதுமத்து இருந்த மாது அழுதாள்
கங்கை அழுதாள்; நாமடந்தை அழுதாள்; கமலத் தடங்கண்ணன்
தங்கை அழுதாள்; இரங்காத அரக்கிமாரும் தளர்ந்து அழுதார். 6.22.5

பொன்தாழ் குழையாள் தனை ஈன்ற பூ மா மடந்தை புரிந்து அழுதாள்;
குன்றா மறையும், தருமமும், மெய் குழைந்து குழைந்து விழுந்து அழுத;
பின்றாது உடற்றும் பெரும்பாவம் அழுத பின் என் பிறர் செய்கை?
நின்றார் நின்றபடி அழுதார்; நினைப்பும் உயிர்ப்பும் நீத்திட்டாள். 6.22.6

சீதை தெளிந்து துன்புற்றேங்குதல் (8810-8812)

நினைப்பும் உயிர்ப்பும் நீத்தாளை நீரால் தெளித்து, நெடும்பொழுதின்
இனத்தின் அரக்கர் மடவார்கள் எடுத்தார்; உயிர்வந்து ஏங்கினாள்;
கனத்தின் நிறத்தான்தனைப் பெயர்த்தும் கண்டாள்; கயலைக் கமலத்தால்
சினத்தின் அலைப்பாள் எனக் கண்ணைச் சிதையக் கையால் மோதினாள். 6.22.7

அடித்தாள் முலைமேல்; வயிறு அலைத்தாள்; அழுதாள்; தொழுதாள்; அனல் வீழ்ந்த
கொடித்தான் என்ன, மெய் சுருண்டாள்; கொதித்தாள்; பதைத்தாள்; குலைவுற்றாள்;
துடித்தாள்; மின்போல்; உயிர் கரப்பச் சோர்ந்தாள், சுழன்றாள்; துள்ளினாள்
குடித்தாள் துயரை, உயிரோடும் குழைத்தாள்; உழைத்தாள் குயில் அன்னாள். 6.22.8

விழுந்தாள்; புரண்டாள்; உடல்முழுதும் வியர்த்தாள்; அயர்த்தாள்; வெதும்பினாள்;
எழுந்தாள்; இருந்தாள்; தளிர்க்கரத்தை நெரித்தாள்; சிரித்தாள்; ஏங்கினாள்;
'கொழுந்தா! 'என்றாள், 'அயோத்தியர்தம் கோவே! 'என்றாள்; எவ் உலகும்
தொழும் தாள் அரசேயோ! 'என்றாள்; சோர்ந்தாள் அரற்றத் தொடங்கினாள். 6.22.9

சீதையின் அரற்றல் அறத்தை நோக்கிக் கூறியது

'உற மேவிய காதல் உனக்கு உடையார்
புறம் ஏதும் இலாரொடு பூணலையோ?
மறமே புரிவார் வசம் ஆயினையோ?
அறமே! கொடியாய்; இதுவோ அருள்தான்? 6.22.10

விதியை நோக்கிக் கூறியது

முதியார் உணர் வேதம் மொழிந்த அலால்
கதி ஏதும் இலார் துயர் காணுதியோ?
மதியேன் மதியேன் உனை வாய்மை இலா;
விதியே! கொடியாய்; விளையாடுதியோ? 6.22.11

எமனை நோக்கிக் கூறியது

கொடியேன் இவை காணகிலேன்; உயிர் கோள்
முடியாய் நமனே! முறையோ? முறையோ?
விடியா இருள்வாய் எனை வீசினையே!
அடியேன் உயிரே அருள் நாயகனே. 6.22.12

இராமனை நோக்கி அரற்றியது (8816-8820)

'எண்ணா மயலோடும் இருந்தது நின்
புண்ணாகிய மேனி பொருந்திடவோ?
மண்ணோர் உயிரே! இமையோர் வலியே!
கண்ணே! அமிழ்தே! கருணாகரனே! 6.22.13

மேவிக் கனல் முன் மிதிலைத்தலை என்
பாவிக் கை பிடித்தது பண்ணவ! நின்
ஆவிக்கு ஒரு கோள் வரவோ? அலர் வாழ்
தேவிக்கு அமிழ்தே! மறையின் தெளிவே! 6.22.14

'உய்யாள் உயர் கோசலை தன் உயிரோ
ஐயா! இளையோர் உயிர் வாழ்கிலரால்
மெய்யே வினை எண்ணி விடுத்த கொடுங்
கைகேசி கருத்து இதுவோ? களிறே! 6.22.15

"'தகைவாள் நகர் நீ தவிர்வாய் ” எனவும்
வகையாது தொடர்ந்து ஒரு மான் முதலா
புகையாடிய காடு புகுந்து; உடனே
பகை ஆடியவா! பரிவு ஏதுமிலேன். 6.22.16

"இன்று ஈகிலையேல் இறவு இவ் இடை; மான்
அன்று ஈ " எனவே பரிவோடு அடியேன்
நின்று ஈவது நின்னை நெடுஞ் செருவில்
கொன்று ஈவது ஓர் தீமை குறித்தலினோ? 6.22.17

இலக்குவனை நோக்கி அரற்றியது (8821-8822)

மேதா! இளையோய்! விதியார் விளைவால்
போதா நெறி எம்மொடு போதுறுநாள்
"மூது ஆனவன் முன்னம் முடிந்திடு ” எனும்
மாதா உரையின் வழி நின்றனையோ? 6.22.18

'பூவும் தளிரும் தொகு பொங்கு அணைமேல்
கோவும் துயில தவிர்வாய்! கொடியார்
ஏவின் தலைவந்த இருங் கணையால்
மேவும் குளிர் மெல் அணை மேவினையோ? 6.22.19

மீண்டும் இராமனை நோக்கிக் கூறியது

'நெய்யார் பெருவேள்வி நிரப்பி நெடுஞ்
செய்யார் புனல்நாடு திருத்துதியால்;
மெய் ஆகிய வாசகமும் விதியும்
பொய் ஆன என்மேனி பொருந்துதலால். 6.22.20

இராமன் மேனிமீது விழச் சீதை எழுதலும் திரிசடை விலக்கலும்

'மழுவாள் உறினும் பிளவா மனன் உண்டு
அழுவேன் இனி ஏன்? இடர் ஆறிட யான்
விழுவேன் அவன் மேனியின் மீதின் 'எனா
எழுவாளை விலக்கி இயம்பினளால். 6.22.21

சீதையைத் தழுவிச் செவியிடைத் திரிசடை கூறியது

'மாடு உற வளைந்து நின்ற வளை எயிற்று அரக்கிமாரைப்
பாடுற நீக்கி, நின்ற, பாவையைத் தழுவிக் கொண்டு,
கூடினள் என்ன நின்று செவியிடை, குறுகிச் சொன்னாள்
தேடிய தவமே அன்ன ' திரிசடை மறுக்கம் தீர்ப்பாள். 6.22.22

திரிசடை சொன்னது அரக்கர் மாயம் என்று தேற்றியது

'மாய மான் விடுத்தவாறும், சனகனை வகுத்தவாறும்,
போய மா நாக பாசம் பிணித்தது போனவாறும்,
நீ அமா! நினையாய்; மாள நினைதியோ? நெறி இலாரால்
ஆய மா மாயம் ஒன்றும் அறிகிலை, அன்னம் அன்னாய் 6.22.23

முன்கண்ட கனவு முதலியன காட்டித் தேற்றியது

கண்டன கனவும் பெற்ற நிமித்தமும், நினது கற்பும்,
தண்ட வாள் அரக்கர் பாவச் செய்கையும், தருமம் தாங்கும்
அண்டர் நாயகன்தன் வீரத் தன்மையும் அயர்க்கலாமோ?
புண்டரீகற்கும் உண்டோ, இறுதி இப் புலையர்க்கு அல்லால். 6.22.24

இராமன் மேனியில் புண் இன்மை காட்டித் தேற்றியது

ஆழியான் ஆக்கை தன்னில் அம்பு ஒன்றும் உறுகிலாமை
ஏழை நீ காண்டி அன்றே? இளையவன் வதனம் இன்னும்
ஊழிநாள் இரவி என்ன ஒளிர்கின்றது; உயிருக்கு இன்னல்
வாழியார்க்கு இல்லை; வாளா மயங்கலை மண்ணில் வந்தாய். 6.22.25

உலகம் அழியாமை காட்டித் தேற்றியது

ஓய்ந்துளன், இராமன், என்னின், உலகம் ஓர் ஏழும் ஏழும்
தீய்ந்துறும்; இரவி பின்னும் திரியுமோ? தெய்வம் என்னாம்?
வீய்ந்துறும் விரிஞ்சன் முன்னா உயிரெலாம்; வெருவல், அன்னை!
ஆய்ந்தவை உள்ள போதே, அவர் உளர்; அறமும் உண்டால். 6.22.26

அனுமனைக் காட்டித் தேற்றியது

'மாருதிக்கு இல்லை அன்றே, மங்கை நின் வரத்தினாலே
ஆருயிர் நீங்கல்! நின்பால் கற்புக்கும் அழிவு உண்டாமோ?
சீரியது அன்று, இது ஒன்றும்; திசைமுகன் படையின் செய்கை
பேரும், இப்பொழுதே; தேவர் எண்ணமும் பிழைப்பது உண்டோ? 6.22.27

தேவரைக் காட்டித் தேற்றியது

'தேவரைக் கண்டேன்; பைம்பொன் செங்கரம் சிரத்தில் சேர்த்தி,
மூவரைக் கண்டால் என்ன, இருவரை முறையின் நோக்கி,
ஆவலிப்பு எய்து கின்றார்; அயர்ந்திலர்; அஞ்சல்; அன்னை!
"கூவலில் புக்கு; வேலை கோள் படும் " என்று கொள்ளேல். 6.22.28

விமானத்தின் தன்மை கூறித் தேற்றியது

'மங்கலம் நீங்கினாரை ஆருயிர் வாங்கினாரை,
நங்கை! இக்கடவுள் மானம் தாங்குறும் நவையிற்று அன்றால்,
இங்கு இவை அளவை ஆக, இடர்க்கடல் கடத்தி 'என்றாள்;
சங்கையள் ஆய தையல் சிறிது உயிர் தரிப்பதானாள். 6.22.29

சீதையின் மறுமொழி

'அன்னை! நீ உரைத்தது ஒன்றும் அழிந்திலது ஆதலானே
உன்னையே தெய்வமாக் கொண்டு, இத்தனை காலம் உய்ந்தேன்;
இன்னம் இவ்விரவு முற்றும் இருக்கின்றேன்; இறத்தல் என்பால்
முன்னமே முடிந்தது அன்றே? ' என்றனள் முளரி நீத்தாள். 6.22.30

'நாண் எலாம் துறந்தேன்; இல்லின் நன்மையின் நல்லார்க்கு ஏய்ந்த
பூண் எலாம் துறந்தேன்; என்தன் பொருசிலை மேகம் தன்னைக்
காணலாம் என்னும் ஆசை தடுக்க, என் ஆவி காத்தேன்;
ஏண் இலா உடலின் நீங்கல் எளிது, எனக்கு எனவும் சொன்னாள். 6.22.31

சீதையை அரக்கியர் மீண்டும் அசோகவனத்திற்குச் செலுத்துதல்

தையலை, இராமன் மேனி தைத்த வேல் தடங் கணாளை,
கைகளில் பற்றிக் கொண்டார், விமானத்தைக் கடவுகின்றார்,
மெய்யுயிர் உலகத்து ஆக, விதியையும் வலித்து, விண்மேல்
பொய்யுடல் கொண்டு செல்லும் நமனுடைத் தூதர் போன்றார். 6.22.32
-------------------------

6.23 – Der Heilkräuterberg

6.23 மருத்து மலைப் படலம் (8836 - 8951 )

கொணர்ந்த உணவைப் பாசறையில் சேர்த்த வீடணன் களத்தையடைதல்

போயினள் தையல்; இப்பால் புரிக எனப் புலவர் கோமான்
ஏயின கருமம் நோக்கி, எய்திய இலங்கை வேந்தன்,
மேயின உணவு கொண்டு, மீண்டு, அவை உறையுள் விட்ட
ஆயின ஆக்கி, தான் வந்து, அமர் பெருங் களத்தன் ஆனானான், 6.23.1

வீடணன் வானரசேனை முற்றும் மாய்ந்துள்ளமை கண்டு மயங்கி வீழ்தல்

நோக்கினான் கண்டான் பண்டு, இவ் உலகங்கள் படைக்க நோற்றான்
வாக்கினால் மாண்டார் என்ன, வானர வீரர் முற்றும்
தாக்கினார் எல்லாம் பட்ட தன்மையை; விடத்தைத் தானே
தேக்கினான் என்ன நின்று தியங்கினான், உணர்வு தீர்ந்தான். 6.23.2

வீழ்ந்த வீடணன் மெல்ல எழுந்து சென்று இராமன் இலக்குவனோடும் வீழ்ந்துகிடப்பதைக் காணுதல்

விளைந்தவாறு உணர்ந்திலாதான், ஏங்கினான், வெதும்பினான்; மெய்
உளைந்து உளைந்து உயிர்த்தான்; 'ஆவி உண்டு, இலை 'என்ன, ஓய்ந்தான்;
வளைந்த பேய்க் கணமும் நாயும் நரிகளும் இரிய, வந்தான்;
இளங்கிளையோடும் சாய்ந்த இராமனை இடையில் கண்டான். 6.23.3

வீடணனது அன்பு அவன் கண்ணீரால் புலப்படுகின்றது
கவிக்கூற்று

என்பு என்பது, யாக்கை என்பது, உயிர் என்பது இவைகள் எல்லாம்
பின்பு என்பது, அல்லது; என்றும் தம்முடைய நிலையின் பேரா
முன்பு என்பது, உளது; என்றாலும் முழுவதும் தெரிந்த ஆற்றால்
அன்பு என்பது ஒன்றின் தன்மை அமரரும் அறிந்தது இன்றால் 6.23.4

வீடணன் புலம்பாது விம்மி இராமன் மேனி கண்டு நடுக்கம் தீர்தல்

ஆயினும், 'இவருக்கு இல்லை அழிவு' எனும் அதனால் ஆவி
போயினது இல்லை; வாயால் புலம்பலன், பொருமி; பொங்கித்
தீயினும் எரியும் நெஞ்சின் வெருவலால் தெரிய நோக்கி
'நாயகன் மேனிக்கு இல்லை வடு' என நடுக்கம் தீர்ந்தான். 6.23.5

இராம இலக்குவர் வீழ்ந்து கிடத்திற்குக் காரணமும் தீர்வும் தேர்தல்

அந்தணன் படையால் வந்தது என்பதும், ஆற்றல் சான்ற
இந்திரசித்தே எய்தான் என்பதும், இளவற்கு ஆக
நொந்தனன் இராமன் என்னும் நுண்மையும், நொய்தின் நோக்கி,
சிந்தையின் எண்ணி எண்ணி, தீர்வது ஓர் உபாயம் தேர்வான். 6.23.6

இராமன் மூர்ச்சையுற்றமை நினைந்து வீடணன் கண்ணீர் சொரிதல் (8842-8843)

'உள்ளுறு துன்பம் ஊன்ற, உற்றனன் உறக்கம் அன்றோ?
தெள்ளிதின் உணர்ந்த பின்னை, சிந்தனை தெரிவது அன்றே;
வள்ளலோ, தம்பி மாய வாழ்கிலன்; மாய வாழ்க்கைக்
கள்ளனோ? என்றான்; என்னா, மழை எனக் கலுழும் கண்ணான். 6.23.7

பாசம் போய் இற்றாற் போலப் பதுமத்தோன் படையும் இன்னே
நாசம் போய் எய்தும்; நம்பி தம்பிக்கு நடுக்கம் இல்லை;
வீசும் போர்க் களத்து வீழ்ந்த சேனையும் மீளும்; வெய்ய
நீசன் போர் வெல்வது உண்டோ? என்று உளம் நிலையில் நின்றான் 6.23.8

இறவாதவர் யாரேனும் உளரோ என வீடணன் தேடச் செல்லுதல்

'உணர்வதன் முன்னம், இன்னே உற்றுழி உதவற்கு ஒத்த
துணைவர்கள், துஞ்சல் இல்லார், உளரெனின், துருவித் தேடிக்
கொணர்குவென், விரைவின் 'என்னா, கொள்ளி ஒன்று அங்கை கொண்டான்
புணரியின் குருதி வெள்ளத்து ஒருதனி விரைவில் போனான். 6.23.9

வீடணன் அனுமன் வீழ்ந்துகிடப்பதைக் காணுதல்

வாய் மடித்து, இரண்டு கையும் முறுக்கி, தன் வயிரச் செங்கண்
தீ உக, கனகக் குன்றின் திரண்டதோள் மழையைத் தீண்ட
ஆயிர கோடி யானைப் பெரும்பிணத்து அமளி மேலான்,
காய் சினத்து அனுமன் என்னும் கடல் கடந்தானைக் கண்டான். 6.23.10

வீடணன் அனுமனுடம்பிலுள்ள அம்புகளை நீக்கி முகத்தை நீரால் குளிர்வித்தல்

கண்டு, தன் கண்கள் ஊடு மழை எனக் கலுழி வார
'உண்டு உயிர் 'என்பது உன்னி, உடல் கணை ஒன்று ஒன்று ஆக,
விண்ட நீர்ப் புண்ணின் நின்று மெல்லென வாங்கிக் கையால்
கொண்டல் நீர் முகந்து கொண்டு முகத்தினைக் குளிரச் செய்தான். 6.23.11

அனுமன் விழித்து இராம நாமத்தைச் சொல்லி வாழ்த்துதல்

உயிர்ப்பு முன் உதித்த, பின்னர், உரோமங்கள் சிலிர்ப்ப, ஊறி
வியர்ப்பு உளதாக, கண்கள் விழித்தன, மேனி மெல்லப்
பெயர்த்து, வாய் புனல் வந்து ஊற, விக்கலும் பிறந்ததாக,
அயர்த்திலன் இராமன் நாமம், வாழ்த்தினன்; அமரர் ஆர்த்தார். 6.23.12

அனுமன் இராமனைப்பற்றி உசாவி அறிதல்

அழுகையோடு உவகை உற்ற வீடணன் ஆர்வம் கூர,
தழுவினன் அவனை, தானும் அன்பொடு தழுவி, 'தக்கோய்!
வழு இலன் அன்றே, வள்ளல்? ' என்றனன்; 'வலியன் 'என்றான்;
தொழுதனன், உலகம் மூன்றும் தலையின்மேல் கொள்ளும் தூயான். 6.23.13

இராமனது துன்பத்துயிலை உணர்ந்த அனுமன், சாம்பன் எங்குளன் என்றல்

'அன்பு தன் தம்பி மேலது அறிவினை மயக்க ஐயன்
துன்பொடும் துயிலன் ஆனான்; உணர்வு இனித் தொடர்ந்த பின்னை
என் புகுந்து எய்தும் என்பது அறிகிலம்! 'என்றலோடும்,
'தன் பெருந் தன்மைக்கு ஒத்த சாம்பன் எத் தலையன்? 'என்றான். 6.23.14

சாம்பனைத் தேடலாம் என அனுமன் கூறல்

'அறிந்திலென் அவனை; யாண்டும் கண்டிலென் "ஆவி யாக்கை
பிறிந்து இலன், உளன் என்று ஒன்றும் தெரிந்திலென், பெயர்ந்தேன் 'என்று
செறிந்த தார் நிருதர் வேந்தன் உரைசெய, காலின் செம்மல்,
'இறும் திறம் அவனுக்கு இல்லை; நாடுதும், ஏகி 'என்றான். 6.23.15

அனுமன் வீடணனோடு சென்று சாம்பனைச் சார்தல்

'அன்னவன் தன்னைக் கண்டால் ஆணையே, அரக்கர்க்கு எல்லாம்
மன்னவ! நம்மை ஈண்டு வாழ்விக்கும்; உபாயம் வல்லான் '
என்னலும், 'உய்ந்தோம், ஐய! எகுதும். விரைவின் 'என்றான்,
சில்நெறி இருளில் சென்றார், சாம்பனை விரைவில் சேர்ந்தார். 6.23.16

அவர் வருகையைச் சாம்பன் செவிவாயிலாக அறிதல்

எரிகின்ற மூப்பினாலும், ஏவுண்ட நோவினாலும்,
அரிகின்ற துன்பத்தாலும், ஆர் உயிர்ப்பு அடங்கி, ஒன்றும்
தெரிகின்றது இல்லா மம்மர்ச் சிந்தையன் எனினும், வீரர்
வருகின்ற சுவட்டை ஓர்ந்தான், செவிகளால் வயிரத் தோளான். 6.23.17

வருபவர் யார் எனச் சாம்பன் கருதுதல்

'அரக்கனோ? என்னை ஆளும் அண்ணலோ? அனுமன் தானோ?
இரக்கம் உற்று அருள வந்த தேவரோ? முனிவரேயோ?
வரக் கடவார்கள் அல்லர் மாற்றலர் மலைந்து போனார்;
புரக்க உள்ளாரே! 'என்னாக் கருதினன், பொருமல் தீர்ந்தான். 6.23.18

உய்ந்தனம் 'என்ற குரல்கேட்டு வீடணன் என்று சாம்பன் அறிதல் (8854-8855)

வந்து அயல் நின்று, குன்றின் வார்ந்து வீழ் அருவி மானச்
சிந்திய கண்ணின் நீரர் ஏங்குவார் தம்மைத் தேற்றி,
'அந்தமில் குணத்தீர் யாவிர், அணுகினிர்? 'என்றான்; 'ஐய!
உய்ந்தனம்! உய்ந்தோம்! 'என்ற வீடணன் உரையைக் கேட்டான். 6.23.19

'மற்று அயல் நின்றான் யாவன்? ' என்ன, மாருதியும், வாழி!
கொற்றவ! அனுமன் நின்றேன்; தொழுதனென் 'என்று கூற
இற்றிலம், ஐய, எல்லேம் எழுந்தனம், எழுந்தேம்! 'என்னா,
உற்ற பேர் உவகையாலே, ஓங்கினான், ஊற்றம் மிக்கான். 6.23.20

இராமன் நிலையைச் சாம்பன் வினவியறிதல்

'விரிஞ்சன் வெம்படை என்றாலும், வேதத்தின் வேதம் அன்ன
அரிந்தமன் தன்னை ஒன்றும் ஆற்றிலது என்னும் ஆற்றல்
தெரிந்தனென்; முன்னே, அன்னான் செய்தது என்? தெரித்தி 'என்றான்;
'பெருந்தகை துன்ப வெள்ளத் துயில் உளான், பெரும! 'என்றான். 6.23.21

சாம்பன் அனுமனை மருந்து கொணர்க எனல்

'அன்னவன் தன்மை கண்டால் ஆற்றுமே? யாக்கை வேறே;
இன்னுயிர் ஒன்றே மூலத்து இருவரும் ஒருவரே யால்;
இன்னது கடக்கத் தாழாது இப்பொழுது இமைப்பின் முன்னம்
கொன்னியல் வயிரத் தோளாய் மருந்துபோய்க் கொணர்தி 'என்றான். 6.23.22

மருந்து கொணர்வதால் உளதாம் பயன்

'எழுபது வெள்ளத்தோரும், இராமனும், இளைய கோவும்,
முழுதும் இவ் உலகம் மூன்றும், நல்லற மூர்த்தி தானும்,
வழுவல் இல் மறையும், உன்னால் வாழ்ந்தன ஆகும்; மைந்த!
பொழுது இறை தாழாது, என் சொல் நெறி தரக் கடிது போதி. 6.23.23

சாம்பன் மருத்துமலைக்கு வழிகூறல் (8859-8861)

'பின்பு உளது இக் கடல் என்னப் பெயர்ந்ததற்பின் யோசனைகள் பேச நின்ற
ஒன்பதினாயிரம் கடந்தால், இமயமெனும் குலவரையை உறுதி; உற்றால்,
தன்பெருமை ஓர் இரண்டாயிரம் உளது யோசனை; பின் தவிரப் போனால்,
முன்பு உள யோசனை எல்லாம்முற்றினை, பொன் கூடம் சென்று உறுதி 'மொய்ம்ப! 6.23.24

இம்மலைக்கும் ஒன்பதினாயிரம் உளதாம் யோசனையின் நிடதம் என்னும்
செம்மலைக்கும் உளவாய அத்தனை யோசனை கடந்தால் சென்று காண்டி
எம்மலைக்கும் பெரிது ஆய வடமலையை; அம்மலையின் அகலம் எண்ணின்,
மொய்மலைந்த திண்தோளாய்! முப்பத்து ஈர் ஆயிரம் யோசனையின் முற்றும். 6.23.25

மேருவினைக் கடந்து, அப்பால் ஒன்பதினாயிரம் உள யோசனையை விட்டால்,
நேர் அணுகும் நீலகிரி; தான் இரண்டாயிரம் உளயோ சனையின் நிற்கும்;
மாருதி! மற்று அதற்கு அப்பால் யோசனை நாலாயிரத்து மருந்து வைகும்
கார்வரையைக் காணுதி; மற்று அதுகாண இத்துயர்க்குக் கரையும் காண்டி. 6.23.26

நால்வகை மருந்துகளின் நல் இயல்பு கூறுதல்

'மாண்டாரை உய்விக்கும் மருந்து ஒன்றும், உடல் வேறு வகிர்கள் ஆகக்
கீண்டாலும் பொருந்துவிக்கும் ஒரு மருந்தும், படைக்கலங்கள் கிளைப்பது ஒன்றும்,
மீண்டேயும் தம் உருவை அருளுவது ஓர் மெய்ம்மருந்தும், உள; நீ, வீர!
ஆண்டு ஏகிக் கொணர்தி 'என அடையாளத்தொடும் உரைத்தான், அறிவின் மிக்கான். 6.23.27

சாம்பன் இம் மருந்துகளைப்பற்றித் தான் அறிந்த வரலாற்றைக் கூறியது (8863-8864)

இன்ன மருந்து ஒரு நான்கும், பயோத்தியைக் கலக்கிய ஞான்று, எழுந்த; தேவர்
உன்னி அமைத்தனர்; மறைக்கும் எட்டாத பரஞ்சுடர் இவுலகம் மூன்றும்
தன் இரு தாள் உள்ளடக்கிப் பொலி போழ்தின் யான் முரசம் சாற்றும் வேலை,
அன்னவை கண்டு, உயாவுதலும், தொல்முனிவர் அவற்று இயல் எற்கு அறிவித்தாரால். 6.23.28

'இம்மருந்து காத்து உறையும் தெய்வங்கள் எண்ணிலவால்; இரங்கா, யார்க்கும்;
நெய்ம்மருங்கு படரகில்லா நெடுநேமிப் படையும் அவற்றுடனே நிற்கும்;
பொய்ம்மருங்கின் நில்லாதாய்! புரிகின்ற காரியத்தின் பொருளை நோக்கிக்
கைம்மருங்கு தொடர்ந்து உன்னைக் 'காவாய்' என்று அப்புறம் போய்க் கரக்கும் என்றான். 6.23.29

மாருதி மருத்துமலை கொணரப் பேருருவெடுத்தல்

'ஈங்கு இதுவே பணி ஆகில், இறந்தோரும் பிறந்தோரே : எம் கோற்கு யாதும்,
தீங்கு இடையூறு எய்தாமல், தரெுட்டுதிர் போய் ' எனச் சொல்லி, அவரைத் தீர்ந்தான்
ஓங்கினன் வான் நெடு முகட்டை உற்றனன், பொன் தோளிரண்டும் திசையோடு ஒக்க
வீங்கின; ஆகாயத்தை விழுங்கினனே என வளர்ந்தான் வேதம் போல்வான். 6.23.30

அனுமனது பேருருவின் பெருமை

கோளோடு தாரகைகள், கோத்து அமைத்த மணி ஆரக் கோவை போன்ற;
தோளோடு தோள் அகலம் ஆயிரம் யோசனை அளவு சொல்ல ஒண்ணா;
தாளோடு தாள் பெயர்க்க, இடமிலது ஆயினது இலங்கை; தடக் கை வீச,
நீளோடு திசை போதா; விசைத்து எழுவான் உருவத்தின் நிலை ஈது அம்மா. 6.23.31

வால் விசைத்து, கை நிமிர்த்து, வாயினையும் சிறிது அகல வகுத்து, மானக்
கால் நிலத்தினிடை ஊன்றி, உரம் நெருக்கி கழுத்தினையும் சுருக்கிக் காட்டி
தோல் மயிர்க் குந்தளம் சிலிர்ப்ப, விசைத்து எழுந்தான், அவ் விலங்கை, துளங்கிச் சூழ்ந்த
வேலையில் புக்கு அழுந்தியது ஓர் மரக் கலம் போல் சுரித்து உலைய விசயத் தோளான் 6.23.32

அனுமனது வேகத்தால் நிகழ்ந்தவை (8868-8869)

கிழிந்தன, மாமழைக் குலங்கள், கீண்டது, நீண்டு அகல் வேலை; கிழக்கும் மேற்கும்;
பொழிந்தன, மீன்; தொடர்ந்து எழுந்த, பொருப்பு இனமும், தருக் குலமும், பிறவும், பொங்கி;
அழிந்தன வானவர் மானம், ஆகாயத் திசையினில் பேர் அசனி என்ன
விழுந்தன, நீர்க் கடல் அழுந்த; ஏறின மேல், கீறின போய்த் திசைகள் எல்லாம். 6.23.33

பாய்ந்தனன், அங்கு அப்பொழுதே; பருவரைகள் எனைப் பலவும் வடபாகத்துச்
சாய்ந்தன' பேருடல் பிறந்த சண்டமாருதம் வீசத் தாதை சால
ஓய்ந்தனன் 'என்று உரை செய்ய, விசும்பூடு படர்கின்றான் உரு வேகத்தால்,
காய்ந்தன வேலைகள்; மேகம் கரிந்தன; வெந்து எரிந்த பெருங்கானம் எல்லாம் 6.23.34

அனுமன் பேருருவத்தை நோக்கித் தேவர் புகழ்தல் (8870-8871)

கடன் முன்னே நிமிர்ந்து ஓட, கால் பின்னே தொடர்ந்து ஓட, கடிதின் செல்வான்
உடல் முன்னே செல, உள்ளம் கடைக் குழையாய்ச் செல, செல்வான் உருவை நோக்கி,
'அடல் முன்னே தொடங்கியநாள், ஆழ்கடல், சூழ் இலங்கை எனும் அரக்கர் வாழும்
திடல் முந்நீர் இடைப்படுத்து மறித்திலன் நம்துயர் என்றார் தேவரெல்லாம். 6.23.35

மேகத்தின் பதம் கடந்து, வெங்கதிரும் தண்கதிரும் விரைவில் செல்லும்
மாகத்தின் நெறிக்கு அப்பால், வானமீன் குலம் விளங்கும் வரம்பு நீங்கி,
போகத்தின் நெறி கடந்தார் புகலிடங்கள் பிற்படப் போய், 'பூவின் வந்த
ஏகத்து அந்தணன் இருக்கை இனிச் சேய்த்து அன்றாம் 'என்ன எழுந்து சென்றான். 6.23.36

விண்வழிச் செல்லும் அனுமனைக் கண்டு விண்ணவர் பலவாறு கூறுதல்

வான நாட்டு உறைகின்றார், 'வயக் கலுழன் வல்விசையால், மாயன் வைகும்
தான நாட்டு எழுகின்றான் 'என்று உரைத்தார் சிலர் சிலர்கள் 'விரிஞ்சன்தான் தன்
ஏனநாட்டு எழுகின்றான் 'என்று உரைத்தார் சிலர் சிலர்கள் 'ஈசன் அல்லால்
போன நாட்டிடை போக வல்லரோ? இவன் முக்கண் புனிதன் 'என்றார். 6.23.37

அனுமனைத் திருமாலாகவே எண்ணுதல்

'வேண்டு உருவம் கொண்டு எழுந்து, விளையாடுகின்றான், மெய் வேதம் நான்கும்
தீண்டு உருவன் அல்லாத திருமாலே இவன்' என்றார், 'தெரிய நோக்கிக்
காண்டும்' என இமைப்பதன்முன் கண் புலமும் கடந்து அகலும்; இன்னும் காண்மின்,
மீண்டு வரும் தரம் அல்லன், வீட்டு உலகம் புகும்' என்றார், மேன்மேல் உள்ளார். 6.23.38

அனுமனுருவைப் பற்றிப் பலவாறு எண்ணுதல்

'உரு' என்றார் சிலர்சிலர்கள்; 'ஒளி' என்றார். சிலர்சிலர்கள் ஒளிரு மேனி
'அரு' என்றார்; சிலர்சிலர்கள் அண்டத்துக்கு அப்புறம் நின்று உலகம் ஆக்கும்
'கரு' என்றார், சிலர்சிலர்கள்; 'மற்று' என்றார், சிலர்சிலர்கள்; கடலைத் தாவிச்
செரு வென்றான் நிலை ஒன்றும் தெரியகிலார் உலகு அனைத்தும் தெரியும் செல்வர். 6.23.39

அனுமன் வேகத்தால் உண்டான ஒலி

வாச நாள் மலரோன்தன் உலக அளவும் நிமிர்ந்தனன், மேல்வானம் ஆன
காசம் ஆயின எல்லாம் கரந்த தனது உரு இடையே கனகத் தோள்கள்
வீச, வான் முகடு உரிஞ்ச, விசைத்து எழுவான் உடல் பிறந்த முழக்கம் விம்ம
ஆசை காவலர் தலைகள் பொதிரெறிந்தார் விதிர் எறிந்தது அண்ட கோளம். 6.23.40

அனுமன் பேருருவம் உலகளக்க எடுத்த பாதத்தை ஒத்துத் தோன்றல்

தொடுத்த நாள் மாலை வானோர் முனிவரே முதல தொல்லோர்,
அடுத்த நான் மறைகள் ஓதி வாழ்த்த, வாள் அவுணர் வேந்தன்
கொடுத்த நாள், அளந்து கொண்ட குறளனார் குறிய பாதம்
எடுத்த நாள் ஒத்தது அண்ணல் எழுந்த நாள், உலகுக்கு எல்லாம். 6.23.41

வானவர் முதலோர் சொரிந்த மலர் முதலியவற்றால் அனுமன் கற்பகத் தருப்போலத் தோன்றுதல்

தேவரும் முனிவர் தாமும், சித்தரும் தெரிவைமாரும்,
மூவுலகிடை உேளாரும் உவகையால் தொடர்ந்து மொய்த்தார்
தூவின மலரும் சாந்தும் சுண்ணமும் மணியும் தொத்த,
பூவுடை அமரர் தெய்வத் தரு என, விசும்பில் போனான். 6.23.42

அனுமன் கயிலைகண்டு மகிழ்ந்து போதல்

இமய மால் வரையை உற்றான்; அங்கு உள இமைப்பு இலோரும்;
கமை உடை முனிவர், மற்றும் அறன்நெறி கலந்தோர்; எல்லாம்;
'அமைக, நின் கருமம். " என்று வாழ்த்தினர்; அதனுக்கு அப்பால்;
உமையொரு பாகன் வைகும் கயிலை கண்டு; உவகை உற்றான். 6.23.43

சிவன் அனுமனை உமைக்குக்காட்டிக் கூறுதல்

வடகுண திசையில் தோன்றும், மழுவலான் ஆண்டு வைகும்
தடவரை அதனை நோக்கி, தாமரை கைகள் கூப்பி,
படர்குவான் தன்னை, அண்ணல் பரமனும் விரும்பிப் பார்த்துத்
தடமுலை உமைக்குக் காட்டி வாயுவின் தநயன் என்றான். 6.23.44

உமையின் வினாவுக்குச் சிவன் விடை பகர்தல்

'என், இவன் எழுந்த தன்மை? ' என்று, உலகு ஈன்றாள் கேட்ப
'மன்னவன் இராமன் தூதன் மருந்தின்மேல் வந்தான்; வஞ்சர்
தனெ் நகர் இலங்கைத் தீமை தீர்வது திண்ணம்; சேர்ந்து,
நல் நுதல்! நாமும் வெம்போர் காணுதும், நாளை 'என்றான். 6.23.45

அனுமன் ஏமகூடத்தையும் நிடதத்தையும் முறையே அடைதல்

நாம யோசனைகள் கொண்டது ஆயிரம் நடுவு நீங்கி,
ஏம கூடத்தின் உம்பர் எய்தி நின்று, இறுதி இல்லாக்
காமமே நுகரும் செல்வக் கடவுளர் ஈட்டம் கண்டான்;
நேமியின் விசையின் செல்வான் நிடதத்தின் நெற்றி உற்றான். 6.23.46

அனுமன் மேருமலையை அடைதல்

எண்ணுக்கும், அளவு இலாத அறிவினோர் இருந்து நோக்கும்
கண்ணுக்கும், கருதும் தெய்வ மனத்திற்கும் கடியன் ஆனான்,
மண்ணுக்கும், திசைகள் வைத்த வரம்பிற்கும், மலரோன் வைகும்
விண்ணுக்கும், அளவை ஆய மேருவின் மீது சென்றான். 6.23.47

மேருமலையில் நாவல் மரத்தை அனுமன் பார்த்தல்

'யாவது நிலைமைத் தன்மை இன்னது, என்று 'இமையா நாட்டத்
தேவரும் தெரிகிலாத வடமலைக்கு உம்பர்ச் சென்றான்;
நாவலம் பெருந்தீவு என்னா நளிர்கடல் வளாக வைப்பில்
காவல் மூன்று உலகம் ஓதும் கடவுள் மா மரத்தைக் கண்டான். 6.23.48

மேருமலையின் நடுவில் உள்ள பிரமனைக் கண்டு வணங்குதல்

அன்ன மா மலையின் உம்பர், உலகு எலாம் அமைத்த அண்ணல்
தன்னகர் அதனை நோக்கி, அதன் நடு நாப்பண் நாமப்
பொன்மலர்ப் பீடம் தன்மேல் நான்முகன் பொலியத் தோன்றும்
தன்மையும் கண்டு கையால் வணங்கினான் தருமம் போல்வான். 6.23.49

அனுமன் வைகுண்டத்தில் நாரணனைக் கண்டுவணங்குதல்

தருவனம் ஒன்றில் வானோர் தலைத் தலை மயங்கித் தாழ,
பொரு அரு முனிவர் வேதம் புகழ்ந்து உரை ஓதை பொங்க,
மரு விரி துளப மோலி மாநிலக் கிழத்தியோடும்
திருவொடும் இருந்த, மூலத் தேவையும் வணக்கம் செய்தான 6.23.50

ஈசனைக் கண்டு வணங்குதல்

ஆயதன் வடகீழ் பாகத்து ஆயிரம் அருக்கர் ஆன்ற
காய்கதிர் பரப்பி, ஐந்து கதிர்முகக் கமலம் காட்டி
தூயபேர் உலகம் மூன்றும் தூவிய மலரின் சூழ்ந்த
சேயிழை பாகத்து, எண்தோள் ஒருவனை வணக்கம் செய்தான். 6.23.51

திசை காவலரில் இந்திரனைக் கண்டு வணங்குதல்

சந்திரன் அனைய கொற்றத் தனிக்குடை தலைமேல் ஓங்க,
சுந்தர மகளிர் அங்கைச் சாமரை தனெ்றல் தூவ,
அந்தர வான நாடர் அடிதொழ, முரசம் ஆர்ப்ப,
இந்திரன் இருந்த தன்மை கண்டு உவந்து, இறைஞ்சிப் போனான். 6.23.52

திசைக் காப்போரைக் காண்டல்

பூஅலர் மரத்தைப் போல அந்தரம் விரிந்து பொங்கும்
தேவர்தம் இருக்கையான மேருவின் சிகர வைப்பில்
மூவகை உலகம் சூழ்ந்த முரண் திசை முறையின் காக்கும்
காவலர் எண்மர் நின்ற தன்மையும் தெரியக் கண்டான். 6.23.53

சூரியனைக் கண்டு துன்புறுதல்

அத்தடங் கிரியை நீங்கி, அத்தலை அடைந்த அண்ணல்,
உத்தர குருவை உற்றான்; ஒளியவன் கதிர்கள் ஊன்றி,
செற்றிய இருள் இன்று ஆக்கி விளங்கிய செயலை நோக்கி
வித்தகன், 'விடிந்தது 'என்னா, 'முடிந்தது என் வேகம் 'என்றான். 6.23.54

'ஆதியான் உணரா முன்னம் அருமருந்து உதவி, அல்லின்
பாதியால், அனைய துன்பம் அகற்றுவான் பாவித்தேற்குச்
சோதியான் உதயம் செய்தான்; உற்றதோ துணிதல் ஆற்றேன்;
ஏது யான் செய்வது? என்னா, இடர் உற்றான், இணை இலாதான். 6.23.55

கால் திசை சுருங்கச் செல்லும் கடுமையான் கதிரின் செல்வன்
மேல்திசை எழுவான் அல்லன்; விடிந்ததும் அன்று; மேரு
மாற்றினன் வடபால் தோன்றும் என்பது மறைகள் வல்லோர்
சாற்றினர் என்னத் துன்பம் தணிந்தனன் தவத்தின் மிக்கான். 6.23.56

உத்தரகுரு நாட்டைக் காணுதல் (8892-8893)

இருவரே தோன்றி என்றும் ஈறு இலா ஆயுள் எய்தி,
ஒருவரோடு ஒருவர், உள்ளம் உயிரொடும் ஒன்றே ஆகி,
பொரு அரும் இன்பம் துய்த்து, புண்ணியம் புரிந்தோர் வைகும்
திரு உறை கமலம் அன்ன நாட்டையும் தெரியக் கண்டான். 6.23.57

வன்னி நாட்டிய பொன் மௌலி வானவன், மலரின் மேலான்
கன்னி நாள் திருவைச் சேரும் கண்ணனும், ஆளுங் காணி
சென்னி நாள் தெரியல் வீரன் தியாகமா விநோதன் தெய்வப்
பொன்னி நாட்டு உவமை வைப்பைப் புலன்கொள நோக்கிப் போனான். 6.23.58

அனுமன் நீலமலையைக் காணுதல்

விரியவன் மேரு என்னும் வெற்பினின் மீது செல்லும்
பெரியவன்; அயனார் செல்வம் பெற்றவன்; பிறப்பும் பேர்ந்தான்;
அரியவன், உலகம் எல்லாம் அளந்த நாள் வளர்ந்து தோன்றும்
கரியவன் என்ன நின்ற நீல மால் வரையைக் கண்டான். 6.23.59

மருத்துமலையைக் காணுதல்

அல் குன்ற அலங்கு சோதி அம்மலை அகலப் போனான்,
பொன்குன்றம் அனைய தோளான் நோக்கினான்; புலவன் சொன்ன
நல்குன்றம் அதனைக் கண்டான், உணர்ந்தனன் 'நாகம் உற்ற
எல் குன்ற எறியும் தெய்வ மருந்து அடையாளம் 'என்ன. 6.23.60

மருந்து காக்கும் தெய்வங்கள் கேட்டவற்றை மாருதி விளக்குதல் (8896-8897)

பாய்ந்தனன்; பாய்தலோடும், அம்மலை பாதலத்துச்
சாய்ந்தது; காக்கும் தெய்வம் சலித்தன; கடுத்து வந்து
காய்ந்தனை; நீதான் யாவன்? கருத்து என்கொல்? கழறுக என்ன
ஆய்ந்தவன்; உற்ற தன்மை அவற்றினுக்கு அறியச் சொன்னான். 6.23.61

மருந்தினை மீட்டுங் கொணர்க எனச் சொல்லித் தெய்வங்கள் மறைதல்

கேட்டு அவை, 'ஐய! வேண்டிற்று இயற்றி, பின் கெடாமல் எம்பால்
காட்டு' என உரைத்து, வாழ்த்திக் கரந்தன, கமலக் கண்ணன்
வாள் தலை நேமி தோன்றி, மறைந்தது; மண்ணில் நின்றும்
தோட்டனன், அனுமன் மற்று அக் குன்றினை, வயிரத் தோளால். 6.23.62

மருத்துமலையைக் கையால் அசைத்தல்

'இங்கு நின்று இன்னன மருந்து என்று எண்ணினால்
சிங்குமால் காலம்’என்று உணரும் சிந்தையான்
அங்கு அதை வேரொடும் அங்கை தாக்கினான்
பொங்கிய விசும்பிடைக் கடிது போகுவான். 6.23.63

மாருதி மருத்துமலையை ஒரு கையில் ஏந்திச் செல்லுதல் (8899-8900)

ஆயிரம் யோசனை அகன்று மீது உயர்ந்து
ஆயிரம் யோசனை சூழ்ந்தது அம்மலை
'ஏ’எனும் மாத்திரத்து ஒரு கை ஏந்தினான்
தாயினன் உலகு எலாம் தவழ்ந்த சீர்த்தியான். 6.23.64

அத்தலை அன்னவன் அனையன் ஆம்துணை
இத்தலை இருவரும் விரைவின் எய்தினார்
கைத்தலத்தால் அடி வருடும் காலையில்
உத்தமற்கு உற்றதை உணர்த்து வாம் அரோ. 6.23.65

இராமன் கண் மலர்தல்

விண்டன மடந்தையர் மனத்தை வேரொடும்
கண்டன களவு அறும் கருணைத்து ஆம் எனக்
கொண்டன கொடுப்பன வரங்கள் கோள் இலா
புண்டரீகம் துணை நயனம் பூத்தன. 6.23.66

இராமன் சாம்பனையும் வீடணனையும் காணுதல்

நோக்கினன் கரடிகட்கு அரசும் நோன்புகழ்
ஆக்கிய நிருதனும் அழுத கண்ணினர்
தூக்கிய தலையினர் தொழுத கையினர்
ஏக்கமுற்று அருகு இருந்து இரங்குவார்களை; 6.23.67

இராமன் அவ் விருவரையும் உசாவுதல் (8903-8905)

'ஏவிய காரியம் இயற்றி எய்தினை
நோவிலை; வீடணா! என்று நோக்கிப் பின்
சாவு அரும் பெரும்புகழ்ச் சாம்பன்தன்னை நீ
ஆவி வந்தனை கொல்? 'என்று அருளினான் அரோ. 6.23.68

'ஐயன்மீர்; நமக்கு உற்ற அழிவு இது ஆதலின்
செய்வகை பிறிது இலை; உயிரின் தீர்ந்தவர்
உய்கிலர்; இனிச் செயற்கு உரியது உண்டு எனின்
பொய்யிலீர்! புகலுதிர் புலமை உள்ளத்தீர்! 6.23.69

சீதை என்று ஒருத்தியால் உள்ளம் தேம்பிய
பேதையேன் சிறுமையால் உற்ற பெற்றியை
யாது என உணர்த்துகேன்! உலகம் ஓதிடும்
காதை வன் பழியொடும் திருத்திக் காட்டினேன். 6.23.70

இராமன் பெண்சொல் கேட்ட தன்பேதைமை நினைந்து வருந்துதல்

"மாயை இம்மான் ” என எம்பி வாய்மையால்
தூயன உறுதிகள் சொன்ன சொல் கொளேன்
போயினென் பெண் உரை மறாது; போகலால்
ஆனது இப்பழியுடை மரணம் அன்பினீர்! 6.23.71

இராவணனைக் கண்டு அமர்புரிந்தும் கொல்லாதுவிட்டதை நினைந்து வருந்தியது

'கண்டனென் இராவணன் தன்னைக் கண்களால்;
மண்டு அமர் புரிந்தனென் வலியின்; ஆருயிர்
கொண்டிலென் உறவு எலாம் கொடுத்து மாள நான்
பண்டுடைத் தீவினை பயந்த பண்பினால். 6.23.72

இலக்குவனைப் பிரமாத்திரம் தொடுக்கலாகாதனெ்றது நினைந்திரங்கியது

"தேவர்தம் படைக்கலம் தொடுத்து தீயவன்
சாவது காண்டும் " என்று இளவல் சாற்றவும்
ஆவதை இசைந்திலன் அழிவது என்வயின்
மேவுதல் உறுவது ஓர் விதியின் வெம்மையால். 6.23.73

இராமன் இலக்குவனுடன் நில்லாது போயதற்கு வருந்துதல்

"நின்றிலென் உடன் எறிபடைக்கு நீதியால்
ஒன்றிய பூசனை இயற்ற உன்னினேன்;
பொன்றினர் நமரெலாம்; இளவல் போயினான்;
வென்றிலன் அரக்கனை விதியின் மேன்மையால். 6.23.74

இராமன் இறத்தலே நலமென எண்ணுதல்

ஈண்டு இருந்து இவை இவை இயம்பும் ஏழைமை
வேண்டுவது அன்று; இனி அமரின் வீடிய
ஆண்தகை அன்பரை அமரர் நாட்டிடைக்
காண்டலே நலம்; பிற கண்டது இல்லையால். 6.23.75

எம்பியை இழந்தபின் ஏதும் வேண்டேன் எனல் (8911-8915)

'எம்பியைத் துணைவரை இழந்த நான் இனி
வெம்புபோர் அரக்கரை முருக்கி வேர் அறுத்து
அம்பினால் இராவணன் ஆவி பாழ்படுத்து
உம்பருக்கு உதவி மேல் உறுவது என் அரோ? 6.23.76

'இளையவன் இறந்தபின் எவரும் என் எனக்கு?
அளவு அறு சீர்த்தி என்? அறமென்? ஆண்மை என்?
கிளை உறு சுற்றமென்? அரசு என்? கேண்மை என்?
விளைவுதான் என்? மறை விதி என்? மெய்ம்மை என்? 6.23.77

'இரக்கமும் பாழ்பட எம்பி ஈறு கண்டு
அரக்கரை வென்று நின்று ஆண்மை ஆள்வனேல்
மரக் கண் வன்கள்வனே! வஞ்சர் என்னில் ஆர்?
கரக்குமது அல்லது ஓர் கடன் உண்டாகுமோ? 6.23.78

"தாதையை இழந்தபின் சடாயு வீய்ந்தபின்
காதலின் துணைவரும் முடிய காத்து உழல்
கோது அறு தம்பியும் விளிய கோள் இலன்
சீதையை உவந்துளன் " என்பர் சீரியோர். 6.23.79

வென்றனென் அரக்கரை வேரும் வீய்ந்து அறக்
கொன்றனென் அயோத்தியைக் குறுகினேன் குணத்து
இன்துணைத் தம்பியை இன்றி யான் உளேன்
நன்று அரசு ஆளுமா சால நன்று அரோ. 6.23.80

இராமன் இறப்பேன் எனக் கூறச் சாம்பன் கூறுவது உளதனெல்

படியின்மேல் காதலின் யாதும் பார்க்கலன்
'முடிகுவென் உடன்’என முடியக் கூறலும்
அடி இணை வணங்கிய சாம்பன் 'ஆழியாய்!
நொடிகுவது உளது’என நுவல்வதாயினான். 6.23.81

சாம்பவன் சொன்னது (8917-8926)

'உன்னை நீ உணர்கிலை; அடியனேன் உனை
முன்னமே அறிகுவேன்; மொழிதல் தீது அது;
என்னெனில் இமையவர் எண்ணுக்கு ஈனமாம்;
பின்னரே தெரிகுதி; தெரிவு இல் பெற்றியோய் 6.23.82

'அம் புயத்து அயன் படை ஆதல் தேறினேன்
உம்பியை உலப்பு அரும் வலத்தை ஒத்தது
வெம்பு போர்க் களத்திடை விழுத்த வென்றியால்;
எம் பெருந் தலைவ! ஈது எண்ணம் உண்மையால். 6.23.83

'அன்னவன் படைக்கலம் அமரர் தானவர்
தன்னையும் விடின் உயிர் குடிக்கும்; தற்பர!
உன்னை ஒன்று இழைக்கிலது ஒழிந்து நீங்கியது;
இன்னமும் அளவை ஒன்று எண்ண வேண்டுமோ? 6.23.84

'பெருந்திறல் அனுமன் ஈண்டு உணர்வு பெற்றுளான்
அருந்துயர் முடுக்குறும் அளவு இல் ஆற்றலான்
"மருந்து இறைப் பொழுதினில் கொணர்குவாய்! ” என
பொருந்தினன் வடதிசைக் கடிது போயினான். 6.23.85

'பனிவரை கடந்தனன் பருப்பதங்களின்
தனி அரசு அதன்புறம் தவிர்ந்து சார்ந்துளான்
இனி ஒரு கணத்தின் வந்து எய்தும்; ஈண்டுறும்
துனிவரு துன்பம் நீ துடைத்தி தொல்லையோய்! 6.23.86

'யான் அலால் எந்தையாய் உலகை ஈன்றுளான்
தான் அலால் சிவன் அலால் நேமி தாங்கிய
கோன் அலால் எனைவரும் உணரும் கோள் இலர்
வேனலான் மேனியாய்! மருந்தை மெய்யுற. 6.23.87

'ஆர்கலி கடைந்த நாள் அமிழ்தின் வந்தன;
கார்நிறத்து அண்ணல்தன் நேமி காப்பன;
மேருவின் உத்தர குருவின் மேல் உள;
யாரும் உற்று உணர்கிலா அரணம் எய்தின. 6.23.88

தோன்றிய நாள்முதல் யாரும் தொட்டில;
ஆன்ற பேர் அண்ணலே! அவற்றின் ஆற்றல் கேள்
மூன்று என ஒன்றிய உலகம் முன்னை நாள்
ஈன்றவன் இறப்பினும் ஆவி ஈயுமால். 6.23.89

'சல்லியம் அகற்றுவது ஒன்று; சந்துகள்
புல்லுறப் பொருத்துவது ஒன்று; போயின
நல்லுயிர் நல்குவது ஒன்று; நல் நிறம்
தொல்லையது ஆக்குவது ஒன்று; தொல்லையோய்! 6.23.90

'வருவது திண்ணம்; நீ வருந்தல்; மாருதி
தருநெறி தருமமே காட்ட தாழ்க்கிலன்;
அருமையது அன்று 'எனா அடி வணங்கினான்;
இருமையும் துடைப்பவன் ஏம்பல் எய்தினான். 6.23.91

இராமன் சாம்பனதுரையை ஏற்கின்றபோது வடதிசையில் ஒலியெழுதல்

"பொன்மலை மீதுபோய் போக பூமியின்
நல் மருந்து உதவும் " என்று உரைத்த நல்லுரைக்கு
அன்வயம் இல்லை என்று அயிர்க்கின்றேன் அலேன்
என்னலும் வடதிசை எழுந்தது ஓங்கு ஒலி. 6.23.92

வடதிசையில் சண்ட மாருதம் தோன்றுதல்

கடல் கிளர்ந்து எழுந்து மேல்படர கார்வரை
இடை இடை பறிந்து விண் ஏற இற்று இடை
தடை இலது உடற்றுறு சண்ட மாருதம்
வடதிசை தோன்றிய மறுக்கம் உற்றதால். 6.23.93

விண்மீன் முதலியன நிலைகுலைதல்

மீன்குலம் குலைந்து உக வெயிலின் மண்டிலம்
தான்குலைந்து உயர்மதி தழுவ தன் உழை
மான்குலம் வெருக் கொள மயங்கி மண்டி வான்
தேன்குலம் கலங்கிய நறவின் சென்றவால். 6.23.94

அனுமன் ஆர்த்தல்

வேர்த் துணர் தூரொடு விசும்பை மீச் செலப்
போர்த்தன மலையொடு மரனும் முன்புபோல்
தூர்த்தன வேலையை; காலின் தோன்றலும்
ஆர்த்தனன் அனையவர் அரந்தை ஆற்றுவான். 6.23.95

அனுமன் ஆர்ப்பொலியின் சிறப்பு

மழைகளும் கடல்களும் மற்றும் முற்றும் மண்
உழையவும் விசும்பவும் ஒலித்தற்கு ஒத்துள
குழீஇயின குமுறின கொள்கை கொண்டதால்
உழுவையின் சினத்தவன் ஆர்த்த ஓசையே. 6.23.96

அனுமன் கருடனை ஒத்துத் தோன்றுதல்

எறிதிரைப் பெருங்கடல் கடைய ஏற்ற நாள்
'செறிசுடர் மந்தரம் தருதி சென்று’என
'வெறிது கொல் 'எனக்கொடு விசும்பின் மீச்செலும்
உறுவலிக் கலுழனே ஒத்துத் தோன்றினான். 6.23.97

அனுமன் வாயுவைப் போலுதல்

பூதரத்து அரவொடு மலைந்து போன நாள்
ஓதிய வென்றியன் உடற்றும் ஊற்றத்தான்
ஏதம் இல் இலங்கை அம் கிரிகொடு எய்திய
தாதையும் ஒத்தனன் உவமை தனக்கு இலான். 6.23.98

அனுமன் தரையில் அடிவைத்தல்

'தோன்றினன் 'என்னும் அச்சொல்லின் முன்னம் வந்து
ஊன்றினன் நிலத்து அடி; கடவுள் ஒங்கல்தான்
வான்தனி நின்றது வஞ்சர் ஊர் வர
ஏன்றிலது ஆதலின்; அனுமன் எய்தினான். 6.23.99

மருத்துமலையின் காற்றுப்பட்டவுடன் எல்லோரும் உயிர்ப்பெற்றெழுதல் (8935-8936)

காற்று வந்து அசைதலும் கடவுள் நாட்டவர்
போற்றிட விருந்து உவந்து இருந்த புண்ணியர்
ஏற்றமும் பெருவலி அழகொடு எய்தினார்
கூற்றினை வென்று தம் உருவம் கூடினார். 6.23.100

அரக்கர்தம் யாக்கைகள் அழிவு இல் ஆழியில்
கரக்கல் உற்று ஒழிந்தன ஓழிய கண்டன
மரக் குலம் முதலவும் உய்ந்து வாழ்ந்தன;
குரக்கு இனம் உய்ந்தது கூறல் வேண்டுமோ? 6.23.101

இலக்குவன் உணர்வு பெறுதல்

கழன்ற நெடுங்கணை கரந்த புண்; கடுத்து
அழன்றன குளிர்ந்தன அங்கம்; செங்கண்கள்
சுழன்றன; உலகு எலாம் தொழுதது ஓங்கலை;
குழன்ற பூங் குஞ்சியான் உணர்வும் கூடினான். 6.23.102

மற்றவர்களும் உயிர்பெற்றெழுதல்

யாவரும் எழுந்தனர் ஆர்த்த ஏழ்கடல்
தாவரும் பேரொலி செவியில் சார்தலும்
தேவர்தம் வாழ்த்தொலி கேட்ட செங்கணான்
யோகம் நீங்கினன் என இளவல் ஓங்கினான். 6.23.103

இராமன் இலக்குவனைத் தழுவித் துயர்தீர்தல்

ஓங்கிய தம்பியை; உயிர் வந்து உள்ளுற
வீங்கிய தோள்களால் தழுவி வெந்துயர்
நீங்கினன் இராமனும்; உலகில் நின்றில
தீங்கு உள; தேவரும் மறுக்கம் தீர்ந்தனர். 6.23.104

மகிழ்ச்சி ஆரவாரம் (8940-8941)

அரம்பையர் ஆடினர்; அமிழ்த ஏழ் இசை
நரம்பு இயல் கின்னரம் முதல நன்மையே
நிரம்பின; உலகு எலாம் உவகை நெய் விழா
பரம்பின! முனிவரும் வேதம் பாடினார். 6.23.105

வேதம் நின்று ஆர்த்தன; வேத வேதியர்
போதம் நின்று ஆர்த்தன; புகழும் ஆர்த்தன;
ஓதம் நின்று ஆர்த்தன; ஓத வேலையின்
சீதம் நின்று ஆர்த்தன; தேவர் சிந்தனை. 6.23.106

பிரமாத்திரம் இராமனை வணங்கிச் செல்லுதல்

உந்தின பின் கொலை ஒழிவு இல் உண்மையும்
தந்தனை நீ; அது நினக்குச் சான்று எனா
சுந்தர வில்லியைத் தொழுது சூழவந்து
அந்தணன் படையும் நின்று அகன்று போயதால். 6.23.107

மருந்து கொணர்ந்துதவிய மாருதியைத் தழுவுதல்

ஆய காலையின் அமரர் ஆர்த்து எழ
தாயின் அன்பனைத் தழுவினான் தனி
நாயகன் பெருந்துயரம் நாம் அற
தூய காதல்நீர் துளும்பு கண்ணினான். 6.23.108

தன்னைத் தழுவிய இராமனை அனுமன் தொழுதல்

எழுது குங்குமத் திருவின் ஏந்து கோடு
உழுத மார்பினான் உருகி உள்ளுறத்
தழுவி நிற்றலும் தாழ்ந்து தாளுறத்
தொழுத மாருதிக்கு இனைய சொல்லினான். 6.23.109

இராமன் அனுமனைப் புகழ்ந்து வாழ்த்துதல் (8945-8948)

முன்னின் தோன்றினோர் முறையின் நீங்கலாது
என்னின் தோன்றிய துயரின் ஈறு சேர்
மன்னின் தோன்றினோம் முன்னம்; மாண்டுேளாம்
நின்னின் தோன்றினோம் நெறியின் தோன்றினாய். 6.23.110

'அழியுங்கால் தரும் உதவி ஐயனே!
மொழியுங்கால் தரும் உயிரின் முற்றுமோ?
பழியும் காத்து அரும் பகையும் காத்து எமை
வழியும் காத்து நன் மறையும் காத்தனை. 6.23.111

'தாழ்வும் இங்கு இறைப் பொழுது தாழ்ந்ததேல்
வாழி எம்பிமேல் அன்பு மாட்ட வான்
ஏழும் வீயும்; என் பகர்வது? எல்லை நாள்
ஊழி காண நீ உதவினாய் அரோ! 6.23.112

'இன்று வீகிலாது எவரும் எம்மொடு
நின்று வாழுமா நெடிது நல்கினாய்;
ஒன்றும் இன்னல் நோய் உறுகிலாது நீ
என்றும் வாழ்தியால் இனிது என் ஏவலால்! 6.23.113

மற்றையோரும் அனுமனை வாழ்த்துதல்

மற்றையோர்களும் அனுமன் வண்மையால்
பெற்ற ஆயுளார் பிறந்த காதலார்
சுற்றும் மேவினார்; தொழுது வாழ்த்தினார்;
உற்றவாறு எலாம் உணரக் கூறினான். 6.23.114

மருத்துமலையை உரிய இடத்தில் கொண்டுபோய் வைக்குமாறு சாம்பன் கூறுதல் (8950-8951)

உய்த்த மா மருந்து உதவ ஒன்னலார்
பொய்த்த சிந்தையார் இறுதல் பொய்க்குமால்
மொய்த்த குன்றை அம் மூல ஊழிவாய்
வைத்து மீடியால் வரம்பு இல் ஆற்றலாய். 6.23.115

என்று சாம்பவன் இயம்ப ஈது அரோ
நன்று சால! என்று உவந்து ஒர்நாழிகை
சென்று மீள்வென் என்று எழுந்து தெய்வமாக்
குன்று தாங்கி அக் குரிசில் போயினான். 6.23.116
-----------------

6.24 – Der Jubel

6.24 களியாட்டுப் படலம் (8952 - 8972 )

அயன் கணையால் பகையழிந்ததாகக் கருதி இராவணன் களியாட்டம் காணுதல்

இன்னது இத் தலையது ஆக, இராவணன் எழுந்து பொங்கி,
தன்னையுங் கடந்து நீண்ட உவகையன், சமைந்த கீதம்
கின்னரர் முதலோர் பாட, முகத்திடைக் கிடந்த கெண்டைக்
கன்னி நன் மயில் அன்னாரை நெடுங்களி ஆட்டம் கண்டான். 6.24.1

அரம்பையர் முதலியோர் வருதல்

அரம்பையர், விஞ்சை மாதர், அரக்கியர், அவுணர் மாதர்
குரும்பை அம் கொங்கை நாகர் கோதையர், இயக்கர் கோது இல்
கரும்பினும் இனிய சொல்லார், சித்தர்தம் கன்னிமார்கள்,
வரம்பு அறு சும்மையோர்கள், மயில் குலம் மருள வந்தார். 6.24.2

மேனகை முதலியோர் வருதல் (8954-8955)

மேனகை, விசய வாள் கண் திலோத்தமை, அரம்பை, மெல் என்
தேன்நகு மழலை இன்சொல் உருப்பசி, முதலாம் தெய்வ
வானக மகளிர் வந்தார் சில்லரிச் சதங்கை பம்ப,
ஆனகம், முரசம், சங்கம், முருடொடும் இரட்ட, ஆடி. 6.24.3

தோடு உண்ட சுருளும், தூங்கும், குழைகளும், சுருளில் தோன்றும்
ஏடு உண்ட பசும்பொன் பூவும், திலகமும், இலவச் செவ்வாய்
மூடுண்ட முறுவல் முத்தும், முள்ளுண்ட முளரிச் செங்கண்,
காடு உண்டு புகுந்தது என்னக் கலந்தது கறை வெண் திங்கள் 6.24.4

பெண்டிரின் ஒளியால் இருள் நிலைகெடல்

முளைக் கொழுங் கதிரின் கற்றை முறுவல் வெண்நிலவும், மூரி
ஒளிப்பிழம்பு ஒழுகும் பூணின் உமிழ் இள வெயிலும், ஒண் பொன்
விளக்கையும் விளக்கும் மேனி மிளிர்கதிர்ப் பரப்பும், வீச,
வளைத்த பேர் இருளும் கண்டோர் அறிவு என, மருளும் மாதோ. 6.24.5

கள்ளின் வேகம் பரவுதல்

நல்பெருங் கல்விச் செல்வம் நவை அறு நெறியை நண்ணி
முன் பயன் உணர்ந்த தூயோர் மொழியொடும் பழகி, முற்றி,
பின் பயன் உணர்தல் தேற்றாப் பேதைபால், வஞ்சன் செய்த
கற்பனை என்ன ஓடிக் கலந்தது, கள்ளின் வேகம். 6.24.6

கள்ளுண்டோர் நிலை

பலபட முறுவல் வந்து பரந்தன; பனித்த, மெய் வேர்;
இலவு இதழ் துடித்து; முல்லை எயிறு வெண் நிலவை ஈன்ற;
கொலைபயில் நயன வேலின் கொழுங்கடை சிவந்த; கொற்றச்
சிலைநிகர் புருவம் நெற்றிக் குனித்தன; விளர்த்த செய்வாய். 6.24.7

மகளிர்தம் மயக்கம் (8959-8962)

கூந்தல் அம்பாரக் கற்றைக் கொந்தளக் கோலக் கொண்டல்
ஏந்து அகல் அல்குல் தேரை இகந்துபோய் இறங்க, யாணர்ப்
பூந்துகிலோடும் பூசல் மேகலை, சிலம்பு பூண்ட
மாந் தளிர் எய்த, நொய்தின் மயங்கினர் மழலைச் சொல்லார் 6.24.8

கோத்த மேகலையினோடும் துகில்மணிக் குறங்கைக் கூட
காத்தன, கூந்தற் கற்றை, அற்றம்; அத் தன்மை கண்டு
வேத்தவை, 'கீழுேளார்கள் கீழ்மையே விளைத்தார்; மேலோர்
சீர்த்தவர் செய்யத் தக்க கருமமே செய்தார் 'என்ன. 6.24.9

பாணியின் தள்ளி; கால மாத்திரைப் படாது பட்ட
நாணியின் முறையிற் கூடாது, ஒருவழி நடையின் செல்லும்
ஆணியின் அழிந்த பாடல் நவின்றனர் அநங்க வேள்தன்
தூணியின் அடைத்த அம்பின் கொடுந்தொழில் துறந்த கண்ணார். 6.24.10

வங்கியம் வகுத்த கானம் வயங்கிய மழலை வாயர்
சங்கை இல் பெரும்பண் உற்ற திறம் துறை திறம்பத் தள்ளி,
சிங்கல் இல் அமிழ்தினோடும் புளி அளாம் தேறல் என்ன,
வெங் குரல் எடுத்த பாடல் விளித்தனர், மயக்கம் வீங்க. 6.24.11

நாடக மகளிரின் மயக்கம் (8963-8968)

ஏனைய பிறவும் கண்டார்க்கு இந்திர சாலம் என்ன,
தான் அவை உருவில் தோன்றும் பாவனைத் தகைமை சான்ற
மான் அமர் நோக்கின் நல்லார், மைந்தரைக் காட்டி, வாயால்
ஆனையை விளம்பி தேரை அபிநயத்து இயற்றி உற்றார். 6.24.12

அழுகுவர்; நகுவர்; பாடி ஆடுவர்; அயல் நின்றாரைத்
தொழுகுவர்; துயில்வர்; துள்ளித் தூங்குவர்; துவர்வாய் இன் தேன்
ஒழுகுவர்; ஒல்கி, ஒல்கி, ஒருவர்மேல் ஒருவர் புக்கு,
முழுகுவர், குருதி வாட்கண் முகிழ்த்து, இடை, மூரிபோவர். 6.24.13

உயிர்ப் புறத்து உற்ற தன்மை உணர்த்தினார் 'உள்ளத்து உள்ளது
அயிர்ப்பு இலது அறிதிர், என்றே, அது களி ஆட்டம் ஆக,
செயிர்ப்பு அறு சிந்தைத் தெய்வத் திருமறை முனிவர்க் கேயும்
மயிர்ப்புறம் தோறும் வந்து பொடித்தது காமம் வாரி. 6.24.14

மாப் பிறழ் நோக்கினார்தம் மணிநெடுங் குவளை வாட்கண்
சேப்புற, அரத்தச் செவ் வாய்ச் செங் குழை வெண்மை சேர,
காப்புறு படைக்கைக் கள்ள நிருதர்க்கு ஓர் இறுதி காட்டி,
பூப்பிறழ்ந்து உருவம் வேறாய்ப் பொலிந்தது ஓர்தன்மை போன்ற. 6.24.15

கயல், வரு காலன் கைவேல், காமவேள் கணை, என்றாலும்,
இயல்வரு கிற்கிலாத நெடுங்கணார், இணைமென் கொங்கைத்
துயல்வரு கனக நாணும், காஞ்சியும், துகிலும், வாங்கி,
புயல்வரு கூந்தல் பாரக் கற்றையின் புனையலுற்றார். 6.24.16

முத்து அன்மை மொழியல் ஆகா முகிழ் இளம் முறுவல் நல்லார்,
இத்தன்மை எய்த நோக்கி, அரசு வீற்றிருந்த எல்லை,
அத்தன்மெய் அரியின் சேனை ஆர்கலி ஆர்த்த ஒதை
மத்தன்மெய் மயங்க வந்து செவிதொறும் மடுத்தது அன்றே 6.24.17

வானர சேனையின் ஆரவாரத்தினால் களியாட்டம் மங்குதல்

ஆடலும், களியின் வந்த அமலையும், அமுதின் ஆன்ற
பாடலும், முழவின் தெய்வப் பாணியும், பவள வாயார்
ஊடலும், கடைக்கண் நோக்கும், மழலை வெவ் உரையும், எல்லாம்
வாடல் மென்மலரே ஒத்த ஆர்ப்பு ஒலி வருதலோடும். 6.24.18

இராம இலக்குவரின் வில்நாணொலி

தறிபொரு களிநல் யானை சேவகம் தள்ளி ஏங்க,
துறுசுவல் புரவி தூங்கித் துணுக்குற, அரக்கர் உட்க,
செறிகழல் இருவர் தெய்வச் சிலை ஒலி பிறந்தது அன்றே
எறிகல் கடைந்த மேல்நாள், எழுந்தபேர் ஓசை என்ன. 6.24.19

இராவணன் முகம் மழுங்கல்

முத்துவாள் நகையின் மூரல் முகத்தியர் முழுக்கண் வேலால்
குத்துவார் கூட்டம் எல்லாம் வானரக் குழுவின் தோன்ற,
மத்துவாழ் கடலின் உள்ளம் மறுகுற, வதனம் என்னும்
பத்துவாள் மதிக்கும் அந்நாள் பகல் ஒத்தது இரவு பண்பால். 6.24.20

ஒற்றர்களால் நிகழ்ந்ததறிந்த இராவணன் ஆலோசனை மண்டபம் அடைதல்

ஈது இடை ஆக வந்தார், அலங்கல் மீது ஏறினார்போய்
ஊதினார், வேய்கள், வண்டின் உருவினார், உற்ற எல்லாம்,
'தீது இலர், பகைஞர் 'என்ன, திக்கென்ற மனத்தன், தெய்வப்
போது உரு பந்தர் நின்று, மந்திரத் திருக்கை புக்கான். 6.24.21
-----------------------

6.25 – Die trügerische Sita

6.25 மாயா சீதைப் படலம் (8973 - 9069)

இந்திரசித்து முதலியோர்க்கு இராவணன் நேர்ந்துள்ள நிலைமையைச் சொல்லுதல்

மைந்தனும் மற்றுேளாரும் மகோதரன் முதலோர் ஆய
தந்தித் தலைமையோரும், முதியரும், தழுவத் தக்க
மந்திரர் எவரும், வந்து, மருங்கு உறப் படர்ந்தார்; பட்ட
அந்தரம் முழுதும் தானே அனையவர்க்கு அறியச் சொன்னான். 6.25.1

மாலியின் அறிவுரை (8974-8980)

நம்கிளை உலந்தது எல்லாம் உய்ந்திட நணுகும் அன்றே,
வெங்கொடுந் தீமை தன்னால் வேலையில் இட்டிலேமேல்?
இங்குள எல்லாம் மாள்தற்கு இனிவரும் இடையூறு இல்லை;
பங்கயத்து அண்ணல் மீளாப் படை பழுதுற்ற பண்பால் 6.25.2

இலங்கையின் நின்று, மேரு பின் பட, இமைப்பில் பாய்ந்து,
வலம்கிளர் மருந்து, நின்ற மலையொடும் கொணர வல்லான்
அலங்கலம் தடந்தோள் அண்ணல் அனுமனே ஆதல் வேண்டும்
கலங்கல் இல் உலகுக்கு எல்லாம் காரணம் கண்ட ஆற்றால். 6.25.3

'நீரினைக் கடக்க வாங்கி, இலங்கையாய் நின்ற குன்றைப்
பாரினில் கிழிய வீசின், ஆருளர், பிழைக்கற் பாலார்?
போரினிப் பொருவது எங்கே? போயின அனுமன் பொன் மா
மேருவைக் கொணர்ந்து, இவ் ஊர் மேல் இடுமெனின், விலக்கல் ஆமோ? 6.25.4

முறைகெட வேண்டின் முன்பு நினைந்ததே முடிப்பன், முன்பின்
குறை இலை குணங்கட்கு; என்னோ கோது இலா வேதம் கூறும்
இறைவர்கள் மூவர் என்பது? எண் இலார் எண்ணமே தான்;
அறைகழல் அனுமனோடும் நால்வரே முதல்வர் அம்மா. 6.25.5

'இறந்தனர் இறந்து தீர; இனி ஒரு பிறவி வந்து
பிறந்தனம் ஆகி உள்ளேம்; உய்ந்தனம்; பிழைக்கும் பெற்றி
மறந்தனம்; எனினும், இன்னம் சனகியை மரபின் ஈந்து, அவ்
அறம்தரு சிந்தையோரை அடைக்கலம் புகுதும் ஐய 6.25.6

'மறிகடல் குடித்து, வானை மண்ணொடும் பறிக்க வல்ல
எறிபடை அரக்கர் எல்லாம் இறந்தனர்; இலங்கை ஊரும்,
சிறுவனும் நீயும் அல்லால் ஆருளர் ஒருவர்? தீர்ந்தார்;
வெறிது நம் வீரம் என்றான், மாலி, மேல் விளைவது ஓர்வான். 6.25.7

'வாலியை வாளி ஒன்றால் வானிடை வைத்து வாரி
வேலையை வென்று, கும்ப கருணனை வீட்டினானை,
ஆலியின் மொக்குள் அன்ன அரக்கரோ, அமரின் வெல்வார்?
சூலியைப் பொருப் பினோடும் தூக்கிய விசயத் தோளாய்! 6.25.8

மாலியவான் சொல்லியது கேட்டு இராவணன் சினத்தல்

என்று மாலியவான் கூற; பிறை எயிற்று எழிலி நாப்பண்
மின்தெரிந் தனெ்ன நக்கு, வெருவர உரப்பி, பேழ்வாய்
ஒன்றின் ஒன்று அசனி என்ன உருத்து, நீ, உரைத்த மாற்றம்
நன்று, நன்று! 'என்று சீறி, உரைத்தனன், நலத்தை ஓரான். 6.25.9

இராவணனது வீரமொழி

கட்டுரை அதனைக் கேளா, கண் எரி கதுவ நோக்கி,
பட்டனர் அரக்கர் என்னில், படைக்கலம் படைத்த எல்லாம்
கெட்டன என்னில் வாட்கை கெடாது எனில், கிளி அனாளை
விட்டிட எண்ணியோ யான் பிடித்தது, வேட்கை வீய? 6.25.10

'மைந்தன் என்? மற்றையோர் என்? அஞ்சினிர் வாழ்க்கை வேட்டீர்!
உயந்துநீர் போவீர்; நாளை ஊழிவெந் தீயின் ஓங்கி,
சிந்தனை மனித்தரோடு அக் குரங்கினைத் தீர்ப்பேன் 'என்றான்,
வெந்திறல் அரக்கர் வேந்தன்; மகன் இவை விளம்பலுற்றான். 6.25.11

இந்திரசித்து கூறுகிறான்

உளதுநான் உணர்த்தற் பாலது, உணர்ந்தனை கோடல் உண்டேல்;
தள மலர் கிழவன் தந்த படைக்கலம் தழலின் சார்த்தி
அளவு இலது அமைய விட்டது இராமனை நீக்கி அன்றால்
விளைவு இலது அனையன் மேனி தீண்டில மீண்டது அம்மா! 6.25.12

மானிடன் அல்லன்; தொல்லை வானவன்; அல்லன்; மற்றும்
மேனியான் முனிவன் அல்லன்; வீடணன் மெய்யின் சொன்ன
யான் எனது எண்ணல் தீர்ந்தார் எண்ணுறும் ஒருவன் என்றே
தேன் உகு தெரியல் மன்னா! சேகு அறத் தெரிந்தது அன்றே. 6.25.13

'அனையது வேறு நிற்க; அன்னது பகர்தல் ஆண்மை
வினை எனின் அன்று; நின்று வீழ்ந்தவர் வீழ்க! வீர!
இனையல்நீ; மூண்டு யான்போய் நிகும்பலை விரைவின் எய்தி,
துனி அறு வேள்வி வல்லை இயற்றினால் முடியும் துன்பம். 6.25.14

இராவணன் உடன்பட்டு நிகும்பலை வேள்வியை இடையூறு இன்றி முடிக்கும் உபாயம் யாது? எனல்

'அன்னது நல்ல தேயால்; அமைதி 'என்று அரக்கன் சொன்னான்,
நல்மகன், 'உம்பி கூற, நண்ணலார் கண்டு நண்ணி,
முன்னிய வேள்வி முற்றா வகைசெரு முயல்வர் 'என்றான்;
'என், அவர் எய்தா வண்ணம் இயற்றலாம் உறுதி? 'என்றான். 6.25.15

இந்திரசித்து உபாயம் கூறல்

'சானகி உருவ மாகச் சமைத்து, அவள் தன்மை கண்ட
வானுயர் அனுமன் முன்னே, வாளினால் கொன்று மாற்றி,
யான்நெடுஞ் சேனையோடும் அயோத்திமேல் எழுந்தேன் என்னப்
போனபின், புரிவது ஒன்றும் அறிகிலர், துயரம் பூண்பர். 6.25.16

"இத்தலைச் சீதை மாண்டாள்; பயன் இவண் இல்லை " என்பார்,
அத் தலை, தம்பிமாரும் தாயரும் அடுத்து உேளாரும்,
உத்தம நகர் உேளாரும் ஒழிவரென்று உள்ளத்து உள்ளி,
பொத்திய துன்பம் மூளச் சேனையும் தாமும் போவார். 6.25.17

'போகிலர் என்ற போதும், அனுமனை ஆண்டுப் போக்கி,
ஆகியது அறிந்தால் அன்றி, அருந்துயர் ஆற்றல் ஆற்றார்;
ஏகிய கருமம் முற்றி, யான் அவண் விரைவின் எய்தி,
வேகவெம் படையின் கொன்று, தருகுவென் வென்றி 'என்றான். 6.25.18

மாயா சீதை அமைக்க இந்திரசித்து போதல்

'அன்னது புரிதல் நன்று என்று அரக்கனும் அமைய, அம்சொல்
பொன்னுரு அமைக்கும் மாயம் இயற்றுவான் மைந்தன் போனான்;
இன்னது இத்தலையது ஆக, இராமனுக்கு, இரவி செம்மல்,
'தொல்நகர் அதனை வல்லைக் கடிகெடச் சுடுதும் 'என்றான். 6.25.19

சுக்கிரீவன் இலங்கையை எரியூட்ட இராமன் இசைவு பெற்றுக் கோபுரத்தையடைய வானரங்கள் எல்லாம்கையில்கொள்ளி கொள்ளுதல்

'அத்தொழில் புரிதல் நன்று' என்று அண்ணலும் அமைய, எண்ணி;
தத்தினன், இலங்கை மூதூர்க் கோபுரத்து உம்பர்ச் சார்ந்தான்;
பத்துடை ஏழு சான்ற வானரப் பரவை பற்றிக்
கைத்தலத்து ஓரோர் கொள்ளி எடுத்தது எவ் உலகும் காண. 6.25.20

வானரங்கள் கொள்ளியை வீசுதல்

எண்ணின கோடிப் பல்படை யாவும்
மண்ணுறு காவல் திண்மதில் வாயில்
வெண்நிற மேகம் மின்னினம் வீசி
நண்ணினபோல தொல்நகர் நண்ணி. 6.25.21

குரங்குகள் கொள்ளியை வீசுதல்

ஆசைகள் தோறும் அள்ளின கொள்ளி
மாசு அறு தானை மர்க்கட வெள்ளம்
'நாசம் இவ்வூருக்கு உண்டு’என நள்ளின்
வீசின வானின் மீன்விழல் அன்ன. 6.25.22

கொள்ளிகள் மேன்மேல் செல்லுதல்

வஞ்சனை மன்னன் வாழும் இலங்கை
குஞ்சரம் அன்னார் வீசிய கொள்ளி
அஞ்சன வண்ணன் ஆழியில் ஏவும்
செஞ்சரம் என்னச் சென்றன மென்மேல். 6.25.23

இலங்கை எரிதல்

கை அகல் இஞ்சிக் காவல் கலங்க
செய்ய கொழுந்தீச் சென்று நெருங்க
ஐயன் நெருங்கார் ஆழியை அம்பால்
எய்ய எரிந்தால் ஒத்தது இலங்கை. 6.25.24

தீப்பற்றலால் பறவைகள் விண்ணில் எழுந்து பறத்தல்

பரல்துறு தொல் பழுவத்து எரிபற்ற
நிரல்துறு பல்பறவைக் குலம் நீளம்
உரற்றின விண்ணின் ஒலித்து எழும்வண்ணம்
அரற்றி எழுந்தது அடங்க இலங்கை. 6.25.25

இராமன் அம்பினால் இலங்கை மதிற்கோபுரம் விழுதல்

மூஉல கத்தவரும் முதலோரும்
மேவின வில்தொழில் வீரன் இராமன்
தீவம் எனச் சில வாளி செலுத்த
கோவுரம் இற்று விழுந்தது குன்றின். 6.25.26

அனுமன் மீண்டு வருதல்

இத்தலை இன்ன நிகழ்ந்திடும் எல்லை
கைத்தலையில் கொடு காலின் எழுந்தான்
உய்த்த பெருங்கிரி மேருவின் உப்பால்
வைத்த நெடுந்தகை மாருதி வந்தான். 6.25.27

அனுமன் ஆர்ப்பொலி கேட்டு இலங்கை நடுங்குதல்

அறை அரவக் கழல் மாருதி ஆர்த்தான்
உறை அரவம் செவி உற்றுளது அவ் ஊர்;
சிறை அரவக் கலுழன் கொடுசீறும்
இறை அரவக் குலம் ஒத்தது இலங்கை. 6.25.28

மேலைவாயிலில் அனுமனை இந்திரசித்து நெருங்குதல்

மேல்திசை வாயிலை மேவிய வெங்கண்
காற்றின் மகன்தனை வந்து கலந்தான்
மாற்றல் இல் மாயம் வகுக்கும் வலத்தான்
கூற்றையும் வென்று உயர் வட்டணை கொண்டான். 6.25.29

மாயா சீதையின் கூந்தலை ஒருகையில் பற்றிக்கொண்டு சினந்து இந்திரசித்து சொல்லுதல்

சானகி ஆம்வகை கொண்டு சமைத்து ஓர்
மான் அனையாளை வடிக்குழல் பற்றா
ஊன்நகு வாள் ஒரு கைக்கொடு உருத்தான்
ஆனவன் அந்நிலை இன்ன அறைந்தான். 6.25.30

சீதையைக் கொல்வேன் என்ற இந்திரசித்தின் சொல்லைக்கேட்டு அனுமன் அஞ்சிச் சோர்தல்

'வந்து இவள் காரணம் ஆக மலைந்தீர்;
எந்தை இகழ்ந்தனன்; யான் இவள் ஆவி
சிந்துவென் 'என்று செறுத்து உரைசெய்தான்;
அந்தமில் மாருதி அஞ்சி 'அயர்ந்தான். 6.25.31

இந்திரசித்தின் கையில் சீதையைக் கண்ட அனுமன் நிலை

'கண்டவளே இவள் 'என்பது கண்டான்
'விண்டது போலும் நம்வாழ்வு’என வெந்தான்;
கொண்டு இடைதீர்வது ஒர்கோள் அறிகில்லான்
'உண்டு உயிரோ’என வாயும் உலர்ந்தான். 6.25.32

இந்திரசித்துக்கு அனுமன் நீதி கூறல்

'யாதும் இனிச்செயல் இல்’என எண்ணா
நீதி உரைப்பது நேர்’என ஓரா
கோது இல் குலத்து ஒரு நீ குணம் மிக்காய்!
மாதை ஒறுத்தல் வசைத் திறம் அன்றோ? 6.25.33

'நான்முகனுக்கு ஒரு நால்வரின் வந்தாய்;
நூல்முகம் முற்றும் நுணங்க உணர்ந்தாய்;
பால்முகம் உற்ற பெரும்பழி அன்றோ
மால்முகம் உற்று ஒருமாதை வதைத்தல்? 6.25.34

'மண்குலை கின்றது; வானும் நடுங்கிக்
கண்குலை கின்றது; காணுதி கண்ணால்;
எண்குலை கின்றது; இரங்கல் துறந்தாய்!
பெண்கொலை செய்கை பெரும்பழி அன்றோ? 6.25.35

'என்வயின் நல்கினை ஏகுதி என்றால்
நின்வயம் ஆம்; உலகு யாவையும்; நீநின்
அன்வயம் ஏதும் அறிந்திலை; ஐயா!
புன்மை தொடங்கல் புகழ்க்கு அழிவு என்றான். 6.25.36

இந்திரசித்தின் மறுமொழி

என்றனன் மாருதி; இந்திர சித்தும்
'ஒன்று உரை கேள்; எனது எந்தையும் ஊரும்
பொன்றுதல் தீரும்; இதின் புகழ் உண்டோ?
நன்றுரை! 'என்று பின்நக்கு உரைசெய்தான். 6.25.37

'எந்தையும் இந்த இலங்கை உேளாரும்
உய்ந்திட வானவர் யாவரும் ஓட
சிந்துவென் வாளினில் என்று செறுத்தான்
இந்திர சித்தவன் இன்ன இசைத்தான். 6.25.38

இந்திரசித்து அயோத்திமேலும் செல்வேன் எனல்

'போமின் அடா! வினை போயது போலாம்?
ஆம் எனில் இன்னும் அயோத்தியை அண்மி
காமின்; அது இன்று கனல்கரி ஆக
வேம்; இது செய்து இனி மீள்குவென் 'என்றான். 6.25.39

இந்திரசித்து இராமன் தம்பியரையும் தாயரையும்
கொல்வேன் எனல்

தம்பியர் தம்மொடு தாயரும் ஆயோர்
உம்பர் விலக்கிடினும் இனி உய்யார்;
வெம்பு கடுங்கனல் வீசிடும் என்கை
அம்புகேளாடும் அவிந்தனர் அம்மா! 6.25.40

'இப்பொழுதே கடிது ஏகுவென்; யானிப்
புட்பக மானம் அதில்புக நின்றேன்;
தப்புவரே அவர் சங்கை இலா என்
வெப்புறு வாளிகள் இன்று விரைந்தால்? 6.25.41

மாயா சீதையை வெட்டிவிட்டு இந்திரசித்து சேனையொடு விரைதல்

'ஆளுடையாய்! அருளாய் அருளாய்! 'என்று
ஏழை வழங்குறு சொல்லின் இரங்கான்
வாளின் எறிந்தனன்; மாகடல் போலும்
நீளுறு சேனையினோடு நிமிர்ந்தான். 6.25.42

இந்திரசித்து சீதையைக் கொன்றுவிட்டுப் புறப்பட்டவுடன் அனுமன் அலறி விழுதல்

தனெ்திசை நின்று வடாது திசைக்கண்
பொன்திகழ் புட்பகம் மேல்கொடு போனான்;
ஒன்றும் உணர்ந்திலன் மாருதி உக்கான்
வென்றி நெடுங்கிரி போல விழுந்தான். 6.25.43

வடதிசைக்கண் போன இந்திரசித்து நிகும்பலை புகலும் அனுமன் நிலையும்

போயவன் மாறி நிகும்பலை புக்கான்;
தூயவன் நெஞ்சு துயர்ந்து சுருண்டான்
ஓய்வரு மாரி ஒருங்க உணர்ந்தான்;
ஏயன பன்னினன் இன்னன சொன்னான். 6.25.44

அனுமன் சீதையை நோக்கி அரற்றுதல்

'அன்னமே! 'என்னும்; 'பெண்ணின் அருங் குலக் கலமே! 'என்னும்
'என்னமே! 'என்னும்; 'தெய்வம் இல்லையோ யாதும்? 'என்னும்;
'சின்னமே 'செய்யக் கண்டும் தீவினை நெஞ்சம் ஆவி
பின்னமே ஆயது இல்லை என்னும் பேர் ஆற்றல் பேர்ந்தான். 6.25.45

அனுமன் படும் அல்லல்

எழுந்து அவன் மேலே பாய எண்ணும்; பேர் இடரைத் தள்ளி;
விழுந்துவெய்து உயிர்த்து விம்மி வீங்கும்; போய் மெலியும்; வெந் தீக்
கொழுந்துகள் உயிர்க்கும்; யாக்கை குலைவுறும்; தலையே கொண்டு உற்று
உழும்தரை தன்னை; பின்னை இனையன உரைப்பது ஆனான். 6.25.46

அனுமன் அவலஉரைகள்

"முடிந்தது நம்தம் எண்ணம்; மூவுல கிற்கும் கங்குல்
விடிந்தது என்று இருந்தேன்; மீள வெந்துயர் இருளின் வெள்ளம்
படிந்தது; வினையச் செய்கை பயந்தது; பாவி வாளால்
தடிந்தனன் திருவை! அந்தோ தவிர்ந்தது தருமம் அம்மா ' 6.25.47

'பெருஞ்சிறைக் கற்பினாளைப் பெண்ணினைக் கண்ணின் கொல்ல,
இருஞ்சிறை அற்ற புள்போல், யாதும் ஒன்று இயற்றல் ஆற்றேன்;
இருஞ்சிறை அமுங்கு கின்றேன்; எம்பிரான் தேவி பட்ட
அருஞ்சிறை மீட்ட வண்ணம் அழகிது பெரிதும் அம்மா. 6.25.48

பாதக அரக்கன், தெய்வப் பத்தினி, தவத்துளாளை,
பேதையை குலத்தின் வந்த பிழைப்பு இலாதாளை, பெண்ணை,
சீதையை, திருவை, தீண்டிச் சிறைவைத்த தீயோன் சேயே
காதவும், கண்டு நின்ற கருமமே பெருமைத்து அம்மா! 6.25.49

கல்விக்கும் நிமிர்ந்த கீர்த்திக் காகுத்தன் தூதன் ஆகிச்
சொல்விக்க வந்து போனேன், ஆய இத்துயர் செய்தாரை
வெல்விக்க வந்தேன்; உன்னை மீட்பிக்க அன்று; வெய்தின்
கொல்விக்க வந்தேன் என்று ஓர் கொடும்பழி கூட்டிக் கொண்டேன். 6.25.50

வஞ்சியை எங்கும் காணாது, உயிரினை மறந்தான் என்ன,
செஞ்சிலை உரவோன் தேடித் திரிகின்றான் உள்ளம் தேற,
"அம்சொலாள் இருந்தாள்; கண்டேன் " என்ற யான், "அரக்கன் கொல்லத்
துஞ்சினாள் 'என்றும் சொல்லத் தோன்றினேன்; தோற்றம் ஈதால்! 6.25.51

'அருங்கடல் கடந்து, இவ் ஊரை அள் எரி மடுத்து, வெள்ளக்
கருங்கடல் கட்டி, மேருக் கடந்து ஒரு மருந்து காட்டி,
"குரங்கு இனி உன்னோடு ஒப்பது இல் " எனக் களிப்புக் கொண்டேன்;
பெருங்கடல் கோட்டம் தேய்த்து ஆயது, என் அடிமைப் பெற்றி! 6.25.52

விண்டுநின்று ஆக்கை சிந்தப் புல் உயிர் விட்டிலாதேன்,
கொண்டு நின்றானைக் கொல்லக் கூசினேன்! எதிரே கொல்லக்
கண்டுநின்றேன்! மற்று இன்னும் கையினால் கனிகள் வெவ்வேறு
உண்டுநின்று உய்ய வல்லேன்; எளியனோ? ஒருவன் உள்ளேன்! 6.25.53

இரங்கிய அனுமன் இனிச் செய்வது யாதனெச் சிந்தித்தல்

என்னநின்று இரங்கி, 'கள்வன் "அயோத்திமேல் எழுவேன் " என்று
சொன்னதும் உண்டு; போன சுவடு உண்டு; தொடர்ந்து செல்லின்,
மன்னன் இங்கு உற்ற தன்மை உணர்கிலன்; வருவது ஓரான்;
பின் இனி முடிப்பது யாது? 'என்று இரங்கினான், உணர்வு பெற்றான். 6.25.54

சொன்னவாறு செய்வேன் என அனுமன் இராமனையடைதல்

'உற்றதை உணர்த்தி, பின்னை உலகுடை ஒருவனோடும்,
இற்று உறின், இற்று மாள்வென்; அன்று எனின், எண்ணம் எண்ணி,
சொற்றது செய்வென்; வேறு ஓர் பிறிது இலேன்; துணிவு இது என்னா,
பொன்தடந் தோளான், வீரன் பொன் அடி மருங்கில், போனான். 6.25.55

இராமனடியில் வீழ்ந்து பொருமுதல்

சிங்க ஏறு அனைய வீரன் செறிகழல் பாதம் சேர்ந்தான்,
அங்கமும் மனமும் கண்ணும் ஆவியும் அலக்கண் உற்றான்,
பொங்கிய பொருமல் வீங்கி, உயிர்ப்பொடு புறத்தைப் போர்ப்ப,
வெங்கண் நீர் அருவி சோர, மால்வரை என்ன வீழ்ந்தான். 6.25.56

இந்திரசித்து சீதையை வெட்டினான் என்பதைக் கூறி அனுமன் தரையில் புரளுதல்

வீழ்ந்தவன் தன்னை, வீரன், 'விளைந்தது விளம்பு 'கென்னா,
தாழ்ந்து, இரு தடக்கை பற்றி எடுக்கவும், தரிக்கிலாதான்,
'ஆழ்ந்து அழு துன்பத் தாளை, அரக்கன், இன்று, அயில்கொள் வாளால்
போழ்ந்தனன் 'என்னக் கூறி, புரண்டனன், பொருமுகின்றான். 6.25.57

சீதை கொல்லப்பட்டது கேட்ட இராமன் நிலை

துடித்திலன்; உயிர்ப்பும் இல்லன்; இமைத்திலன்; துள்ளிக் கண்ணீர்
பொடித்திலன்; யாதும் ஒன்றும் புகன்றிலன்; பொருமி, உள்ளம்
வெடித்திலன்; விம்மிப் பாரில் வீழ்ந்திலன்; வியர்த்தான் அல்லன்;
அடுத்து உள துன்பம் யாவும் அறிந்திலர் அமரரேயும். 6.25.58

வானர வீரர்களின் நிலை

சொற்றது கேட்டலோடும், துணுக்குற, உணர்வு சோர,
நல்பெரு வாடை உற்ற மரங்களின் நடுக்கம் எய்தா,
கற்பகம் அனைய வள்ளல் கருங்கழல் கமலக் கால்மேல்,
வெற்பு இனம் என்ன வீழ்ந்தார், வானர வீரர் எல்லாம். 6.25.59

இராமன் உயிரற்றவன்போல் தரையில் சாய்தல்

சித்திரத் தன்மை உற்ற சேவகன், உணர்வு தீர்ந்தான்,
மித்திரர் வதனம் நோக்கான், இளையவன் வினவப் பேசான்,
பித்தரும் இறை பொறாத பேரபிமானம் என்னும்
சத்திரம் மார்பில் தைக்க, உயிரிலன் என்னச் சாய்ந்தான். 6.25.60

இலக்குவனும் உணர்வழிந்து சாய்தல்

நாயகன் தன்மை கண்டும், தமக்கு உற்ற நாணம் பார்த்தும்,
ஆயின கருமம் மீள அழிவுற்ற அதனைப் பார்த்தும்,
வாயொடு மனமும் கண்ணும் யாக்கையும் மயர்ந்து சாம்பி,
தாயினை இழந்த கன்றின், தம்பியும் தலத்தன் ஆனான். 6.25.61

இந்திரசித்து சீதையைக் கொல்லுதலும் கூடும் என வீடணன் ஐயுறுதல்

தொல்லையது உணரத் தக்க வீடணன், துளக்கம் உற்றான்,
எல்லை இல் துன்பம் ஊன்ற, இடை ஒன்றும் தெரிகிலாதான்,
"வெல்லவும் அரிது; நாசம் இவள் தானால் விளைந்தது " என்னா,
கொல்வதும் அடுக்கும் என்று மனத்தின் ஓர் ஐயம் கொண்டான். 6.25.62

சீத நீர் முகத்தின் அப்பி, சேவகன் மேனி தீண்டி,
போதம் வந்து எய்தற் பால யாவையும் புரிந்து, பொன்பூம்
பாதமும் கையும் மெய்யும் பற்றினன் வருடலோடும்,
வேதமும் காணா வள்ளல் விழித்தனன், விழியை மெல்ல. 6.25.63

இராமனைத் தேற்ற இலக்குவன் சொல்வது

ஊற்றுவார் கண்ணீரோடும் உள் அழிந்து, உற்றது எண்ணி,
ஆற்றுவான் அல்லன் ஆகி, அயர்கின்றான் எனினும், ஐயன்,
மாற்றுவான் அல்லன்; மானம் உயிர் உக வருந்தும், என்னா,
தேற்றுவான் நினைந்து, தம்பி இவை இவை செப்பலுற்றான். 6.25.64

முடியும் நாள்தானே வந்து முற்றினால், துன்ப முந்நீர்
படியுமாம், சிறியோர் தன்மை; நினக்கு இது பழியிற்று ஆமால்;
குடியும் மாசு உண்டது என்னின், அறத்தொடும் உலகைக் கொன்று,
கடியுமாறு அன்றிச் சோர்ந்து கழிதியோ, கருத்து இலார்போல்? 6.25.65

அறத்தினை வெறுத்துக் கூறுவது

'தையலை, துணை இலாளை தவத்தியை, தருமக் கற்பின்
தெய்வதம் தன்னை, மற்று உன் தேவியை, திருவை, தீண்டி,
வெய்யவன் கொன்றான் என்றால், வேதனை உழப்பது இன்னும்
உய்யவோ? கருணை யாலோ? தருமத்தோடு உறவும் உண்டோ? 6.25.66

உலகை வெறுத்துக் கூறுவது

'அரக்கர் என், அமரர் தாம் என், அந்தணர் தாமென், அந்தக்
குருக்கள் என், முனிவர் தாம் என், வேதத்தின் கொள்கை தான் என்;
செருக்கினர் வலியராகி, நெறிநின்றார் சிதைவர் என்றால்,
இருக்குமிது என்னாம், இம் மூன்று உலகையும் எரி மடாதே? 6.25.67

உலகையும் அறத்தையும் அழிக்காமல் சோர்ந்து வருந்துவது நன்றன்று என்பது (9040-9043)

'முழுவது ஏழுலகம் இன்ன முறைமுறை செய்கை மேல்மூண்டு,
எழுவதே! அமரர் இன்னம் இருப்பதே! அறம் உண்டு என்று
தொழுவதே! மேகம் மாரி சொரிவதே! சோர்ந்து நாம் வீழ்ந்து
அழுவதே! நன்று, நம்தம் வில்தொழில் ஆற்றல் அம்மா! 6.25.68

'புக்கு, இவ்வூர் இமைப்பின் முன்னம் பொடிபடுத்து, அரக்கன் போன
திக்கு எலாம் சுட்டு, வானோர் உலகு எலாம் தீர்த்து, தீரத்
தக்க நாம், கண்ணீர் ஆற்றி, தலைசுமந்து இருகை நாற்றி,
துக்கமே உழப்பம் என்றால், சிறுமையாய்த் தோன்றும் அன்றே? 6.25.69

'அங்கும், இவ் அறமே நோக்கி, அரசு இழந்து, அடவி எய்தி
மங்கையை வஞ்சன் பற்ற, வரம்பு அழியாது வாழ்ந்தோம்;
இங்கும், இத் துன்பம் எய்தி இருத்துமேல், எளிமை நோக்கி,
பொங்குவன் தளையில் பூட்டி, ஆள் செய புகல்வர் அன்றே? ' 6.25.70

'மன்றலம் கோதை யாளைத் தம்மெதிர் கொணர்ந்து, வாளின்
கொன்றவர் தம்மைக் கொல்லும் கோளிலர், நாணம் கூரப்
பொன்றினர் 'என்பர், ஆவி போக்கினால்; பொதுமை பார்க்கின்,
அன்று இது கருமம்; என், நீ அயர்கின்றது, அறிவு இலார்போல்? ' 6.25.71

சுக்கிரீவன் எழுந்து, அரக்கன் மார்பில் குதிப்போம் எனல்

அனையன இளவல் கூற, அருக்கன் சேய், அயர்கின்றான், ஓர்
கனவு கண்டனனே என்னக் கதும் என எழுந்து, காணும்
வினை இனி உண்டே? வல்லை, விளக்கின்வீழ் விட்டில் என்ன,
மனை உறை அரக்கன் மார்பில் குதித்தும், நாம்; வம்மின் 'என்றான். 6.25.72

அரக்கரைக் குலங்கேளாடு அழிப்போம் எனல்

'இலங்கையை இடந்து, வெங்கண் இராக்கதர் என்கின்றாரைப்
பொலங்குழை மகளிரோடும், பால்நுகர் புதல்வரோடும்,
குலங்கேளாடு அடங்கக் கொன்று, கொடுந்தொழில் புரிதும்; நம்மேல்
விலங்குவார் என்னின், தேவர் விண்ணையும் மண்ணில் வீழ்த்தும். 6.25.73

'அறம்கெடச் செய்தும் என்றே அமைந்தனம் ஆகின், ஐய!
புறம்கிடந்து உழைப்பது என்னே? பொருது இனிப் புவனம் மூன்றும்
கறங்கு எனத் திரிந்து, தேவர் குலங்களைக் கட்டும் 'என்னா,
மறம்கிளர் வயிரத் தோளான் இலங்கைமேல் வாவல் உற்றான். 6.25.74

மற்றை வானரரும் ஏகலுற்றபோது அனுமன் அயோத்திமேல் அரக்கன் சென்றதை உரைத்தல்

மற்றைய வீரர் எல்லாம் மன்னனின் முன்னம் தாவி,
'எற்றுதும், அரக்கர் தம்மை இல்லொடும் எடுத்து' என்று, ஏகல்
உற்றனர்; உறுதலோடும், உணர்த்துவது உளது' என்று உன்னா,
சொற்றனன் அனுமன், வஞ்சன் அயோத்திமேல் போன சூழ்ச்சி. 6.25.75

அயோத்திமேல் அரக்கன் சென்றமை கேட்ட இராமன் சீதையை யிழந்த துயரை மறத்தல்

தாயரும் தம்பி மாரும் தவம்புரி நகரம் சாரப்
போயினன் என்ற மாற்றம் செவித்தொளை புகுதலோடும்,
மேயின வடிவின் உற்ற வேதனை, கனைய வெந்த
தீயிடைத் தணிந்தது என்ன, சீதைபால் துயரம் தீர்ந்தான். 6.25.76

துன்பத்தை மறந்த இராமன் அயோத்திக்கு விரையு நினைவால் கலங்குதல்

அழுந்திய பாலின் வெள்ளத்து ஆழிநின்று, அனந்தர் நீங்கி
எழுந்தனன் என்ன, துன்பக் கடலின் நின்று ஏறி, ஆறாக்
கொழுந்துறு கோபத் தீயும் நடுக்கமும் மனத்தைக் கூட,
உழுந்து உருள் பொழுதும் தாழா விரைவினான், மறுக்கம் உற்றான். 6.25.77

இராமன் அயோத்தியர்க்கு நேர்ந்துள்ள நிலைமை நினைந்து வருந்துதல் (9050-9053)

தீரும் இச் சீதையோடும் என்கிலது அன்று என் தீமை
வேரொடும் முடிப்பதாக விளைந்தது; வேறும் இன்னும்
ஆரொடும் தொடரும் என்பது அறிந்திலேன்; இதனை ஐய
பேர் உறு கதியும் உண்டோ? எம்பியர் பிழைக்கின்றாரோ? 6.25.78

நினைவதன் முன்னம் செல்லும் மானத்தில் நெடிது போனான்
வினை ஒரு கணத்தின் முற்றி மீள்கின்றான்; வினையேன் வந்த
மனைபொடி பட்டது அங்கு; மாண்டது தாரம் ஈண்டும்
எனையன தொடரும் என்பது உணர்கிலேன்! இறப்பும் காணேன்! 6.25.79

தாதைக்கும் சடாயு வான தந்தைக்கும் தமியள் ஆய
சீதைக்கும் கூற்றம் காட்டித் தீர்ந்திலது ஒருவென் தீமை;
பேதைப்பெண் பிறந்து பெற்ற தாயர்க்கும் பிழைப்பு இலாத
காதல் தம்பியர்க்கும் ஊர்க்கும் நாட்டிற்கும் காட்டிற்று அன்றே. 6.25.80

உற்றது ஒன்று உணரகில்லார்; உணர்ந்துவந்து உருத்தாரேனும்
வெற்றி வெம் பாசம் வீசி விசித்து அவன் கொன்று வீழ்த்தால்
மற்றை வெம் புள்ளின் வேந்தன் வருகிலன்; மருந்து நல்கக்
கொற்ற மாருதி அங்கு இல்லை; யாருயிர் கொடுக்கற் பாலார்? 6.25.81

விண்வழியே அயோத்திக்கு விரைய உபாயமுண்டோ என இராமன் கேட்டல்

மாக ஆகாயம் செல்ல, வல்லையின் வயிரத் தோளாய்!
ஏகுவான் உபாயம் உண்டேல், இயம்புதி, நின்ற எல்லாம்
சாக; மற்று இலங்கைப் போரும் தவிர்க; அச் சழக்கன் கண்கள்
காகம் உண்டதற்பின், மீண்டும் முடிப்பெனென் கருத்தை என்றான். 6.25.82

இலக்குவன் பரதனது ஆற்றலைப் புகழ்தல் (9055-9056)

அவ்விடத்து, இளவல் 'ஐய! பரதனை அமரின் ஆர்க்க
எவ்விடற்கு உரியான் போன இந்திர சித்தே அன்று;
தவெ்விடத்து அமையின் மும்மை உலகமும் தீர்ந்து அறாவோ?
வெவிடர்க் கடலில் வைகல் கேள் என விளம்பல் உற்றான். 6.25.83

தீக்கொண்ட வஞ்சன் வீச, திசைமுகன் பாசம் தீண்ட
வீக்கொண்டு வீழ, யானோ பரதனும்? வெய்ய கூற்றைக்
கூய்க் கொண்டு குத்துண்டு அன்னான் குலத்தொடு நிலத்தன் ஆதல்,
போய்க் கண்டு கோடி அன்றே? என்றனன் புழுங்கு கின்றான். 6.25.84

அனுமன் இராம இலக்குவரைத் தன்தோள்மேல் ஏற வேண்டுதல் (9057-9060)

அக்கணத்து அனுமன் நின்றான், 'ஐய! என் தோளின் ஆதல்
கைத்துணைத் தலத்தின் ஆதல், ஏறுதிர்; காற்றும் தாழ
இக்கணத்து அயோத்தி மூதூர் எய்துவென்; இடமுண்டு என்னின்
திக்கு அனைத்திலும் செல்வென், யானே போய்ப் பகையும் தீர்வென். 6.25.85

'எழுபது வெள்ளத்தோடும் இலங்கையை இடந்து, என் தோள்மேல்
தழுவுற வைத்து, "இன்று ஏகு " என்று உரைத்தியேல், சமைவென்; தக்கோய்!
பொழுது இறை தாழ்ப்பது என்னோ? புட்பகம் போதல் முன்னம்,
குழுவொடும் கொண்டு போவென்; கணத்தினில் குதிப்பென், கூற்றின். 6.25.86

'கொல்ல வந்தானை நீதி கூறினென், விலக்கிக் கொள்வான்,
சொல் அவம் சொல்லி நின்றேன்; கொன்றபின் துன்பம் என்னை
வெல்லவும் தரையில் வீழ்வுற்று உணர்ந்திலென்; விரைந்து போனான்;
இல்லையேல், உணரில், தீயோன் பிழைக்குமோ? இழுக்கம் உற்றேன். 6.25.87

'மனத்தின்முன் செல்லும் மானம் போனது வழியது ஆக,
நினைப்பின்முன் அயோத்தி எய்தி, வருநெறி பார்த்து நிற்பேன்?
இனிச்சில தாழ்ப்பது என்னே? ஏறுதிர் இரண்டு தோளூம்,
புனத்துழாய் மாலை மார்பீர்! புட்பகம் போதல் முன்னம். 6.25.88

அனுமன் தோள்மேல் இராம இலக்குவர் ஏறும்போது, வீடணன் தன் ஐயத்தைத் தெரிவித்தல் (9061-9062)

'ஏறுதும் 'என்னா, வீரர் எழுதலும் இறைஞ்சி ஈண்டுக்
கூறுவது உளது; துன்பம் கோள் உறக் குலுங்கி, உள்ளம்
தேறுவது அரிது; செய்கை மயங்கினென்; திகைத்து நின்றேன்;
ஆறினென்; அதனை ஐய! மாயமென்று அயிர்க்கிறேனால். 6.25.89

'பத்தினி தன்னைத் தீண்டிப் பாதகன் படுத்த போது,
முத்திறத்து உலகும் வெந்து சாம்பராய் முடியும் அன்றே?
அத்திறம் ஆனதேனும், அயோத்திமேல் போன வார்த்தை
சித்திரம்; இதனை எல்லாம் தெரியலாம் சிறிது போழ்தின். 6.25.90

சீதையின் இருப்பிடத்தைப் பார்த்தபின் முடிவு செய்யலாம் என்ற வீடணன் யோசனையை இராமன் உடன்பட வீடணன் செல்லுதல்

'இமை இடை யாக யான்சென்று, ஏந்திழை இருக்கை எய்தி,
அமைவுற நோக்கி, உற்றது அறிந்துவந்து அறைந்த பின்னர்ச்
சமைவது செய்வது 'என்று வீடணன் விளம்ப, 'தக்கது;
அமைவது; 'என்று இராமன் சொன்னான்; அந்தரத்து அவனும் சென்றான். 6.25.91

வண்டினது உருவம் கொண்டான், மானவன் மனத்தின் போனான்;
தண்டலை இருக்கை தன்னைப் பொருக்கெனச் சார்ந்து, தானே
கண்டனன் என்ப மன்னோ, கண்களால் கருத்தால், 'ஆவி
உண்டு, இலை 'என்ன நின்ற ஓவியம் ஒக்கின்றாளை. 6.25.92

'தீர்ப்பது துன்பம், யான் என் உயிரொடு' என்று உணர்ந்த சிந்தை
பேர்ப்பன செஞ்சொலாள், அத் திரிசடை பேசப் பேர்ந்தாள்,
கார்ப்பெரு மேகம் வந்து கடை யுகம் கலந்தது அன்ன
ஆர்ப்பொலி அமிழ்தம் ஆக, ஆருயிர் ஆற்றினாளை. 6.25.93

சீதையைக் கொன்றான் என்பது வஞ்சனை என்பதை உணர்ந்து மகிழ்ந்த வீடணன், இந்திரசித்து நிகும்பலை வேள்வியான் என்பதை உணர்தல்

வஞ்சனை என்பது உன்னி, வான் உயர் உவகை வைகும்
நெஞ்சினன் ஆகி உள்ளம் தள்ளுறல் ஒழிந்து நின்றான்,
'வெஞ்சிலை மைந்தன் போனான். நிகும்பலை வேள்வியான் 'என்று,
எஞ்சல் இல் அரக்கர் சேனை எழுந்து எழுந்து ஏகக் கண்டான். 6.25.94

இந்திரசித்தின் சூழ்ச்சியிதுவென உணர்ந்து வீடணன் இராமனை அடைதல்

'வேள்விக்கு வேண்டற்பால கலப்பையும் விறகும் நெய்யும்
வாழ்விக்கும் தாழ்வில் 'என்னும் வானவர் மறுக்கம் கண்டான்,
'சூழ்வித்த வண்ணம், ஈதோ? நன்று; ' எனத் துணிவு கொண்டான்,
தாழ்வித்த முடியன், வீரன் தாமரைச் சரணம் சார்ந்தான். 6.25.95

வீடணன் தான் கண்டதை இராமனுக்குச் சொல்வது

'இருந்தனள், தேவி; யானே எதிர்ந்தனென், என்கண் ஆர;
அருந்ததி கற்பினாளுக்கு அழிவு உண்டோ? அரக்கன் நம்மை
வருந்திட மாயம் செய்து, நிகும்பலை மருங்கு புக்கான்;
முருங்கு அழல் வேள்வி முற்றி, முதல் அற முடிக்க மூண்டான். ' 6.25.96

வானரசேனையின் ஆரவாரம்

என்றலும், 'உலகம் ஏழும் ஏழுமாத் தீவும், எல்லை
ஒன்றிய கடல்கள் ஏழும் ஒருங்கு எழுந்து ஆர்க்கும் ஓதை
அன்று' என 'ஆகும் 'என்ன அமரரும் அயிர்க்க, ஆர்த்து,
குன்று இனம் இடியத் துள்ளி, ஆடின குரங்கின் கூட்டம். 6.25.97
-------------------

Hanuman trägt Rama und Lakshmana. Tatkraft und Hingabe gehören für ihn zusammen.

Begleitender Vortrag von Yoga Vidya über Hanuman und den Geist der Hingabe:

6.26 – Das Opfer von Nikumbhila

6.26 நிகும்பலை யாகப் படலம் 9070 – 9252 (183)

வீரனும் ஐயம் தீர்ந்தான்; வீடணன் தன்னை மெய்யோடு
ஆர்வமும் உயிரும் ஒன்ற அழுந்துறத் தழுவி, 'ஐய!
தீர்வது பொருளோ, துன்பம்? நீ உளை; தெய்வம் உண்டு;
மாருதி உளன்; நாம் செய்த தவம் உண்டு; மறையும் உண்டால். 6.26.1

இலக்குவனுடன் சென்று இந்திரசித்தின் வேள்வியைச் சிதைத்தற்கு விடைதரும்படி வீடணன் இராமனை வேண்டுதல்

என்றலும், இறைஞ்சி, 'யாகம் முற்றுமேல், யாரும் வெல்லார்;
வென்றியும் அரக்கர் மேற்றே; விடை அருள்; இளவலோடும்
சென்று, அவன் ஆவி உண்டு, வேள்வியும் சிதைப்பென் 'என்றான்;
'நன்று, அது புரிதிர் 'என்னா, நாயகன் நவில்வது ஆனான். 6.26.2

இராமன் இலக்குவனைத் தழுவி, இந்திரசித்துடன் செய்யும் போரில் நடந்துகொள்ள வேண்டிய முறையினை அறிவுறுத்தல்

தம்பியைத் தழுவி, 'ஐய! தாமரைத் தவிசின் மேலான்
வெம்படை தொடுக்கும் ஆயின், விலக்குவது அன்றி, வெய்தின்
அம்பு நீ துரப்பாய் அல்லை; அனையது துரந்த காலை,
உம்பரும் உலகும் எல்லாம் விளியும்; அஃது ஒழிதி 'என்றான். 6.26.3

முக்கணான் படையும், ஆழி முதலவன் படையும், முன்நின்று
ஒக்கவே விடுமே; விட்டால், அவற்றையும் அவற்றால் ஓயத்
தக்கவாறு இயற்றி, மற்று உன் சிலைவலித் தருக்கினாலே
புக்கவன் ஆவி கொண்டு, போதுதி புகழின் மிக்கோய்! 6.26.4

'வல்லன மாய விஞ்சை வகுத்தன அறிந்து, மாள,
கல்லுதி, தருமம் என்னும் கண் அகன் கருத்தைக் கண்டு;
பல் பெரும் போரும் செய்து வருந்தலை; அற்றம் பார்த்து,
கொல்லுதி, அமரர் தங்கள் கூற்றினைக் கூற்றம் ஒப்பாய்! 6.26.5

'பதைத்து அவன், வெம்மை ஆடி, பல்பெரும் பகழி மாரி
விதைத்தன விதையா நின்று விலக்குதி; மெலிவு மிக்கால்,
உதைத்த வன் சிலையின் வாளி மருமத்தைக் கழிய ஓட்டி,
வதைத் தொழில் புரிதி சாப நூல்நெறி மறப்பிலாதாய்! 6.26.6

'தொடுப்பதன் முன்னம், வாளி தொடுத்து, அவை துறைகள் தோறும்
தடுப்பன தடுத்தி; எண்ணம் குறிப்பினால் உணர்ந்து, தக்க
கடுப்பினும், அளவு இலாத கதியினும், கணைகள் காற்றின்
விடுப்பன அவற்றை நோக்கி விடுதியால் விரைவு இலாதாய்! 6.26.7

இலக்குவனுக்கு இராமன் திருமாலின் வில்லும் கவசம் முதலியனவும் அளித்தல்

என்பன முதல் உபாயம் யாவையும் இயம்பி, ஏற்ற
முன்பனை நோக்கி, 'ஐய! மூவகை உலகும் தான் ஆய்,
தன் பெருந் தன்மை தானும் அறிகிலா ஒருவன் தாங்கும்
வன்பெருஞ் சிலை ஈது ஆகும்; வாங்குதி; வலமும் கொள்வாய். 6.26.8

'இச் சிலை இயற்கை மேல் நாள் தமிழ்முனி இயம்பிற்று எல்லாம்
அச்சு எனக் கேட்டாய் அன்றே? ஆயிரம் மௌலி அண்ணல்
மெய்ச் சிலை விரிஞ்சன் தானே வேள்வியில் வேட்டுப் பெற்ற
கைச் சிலை கோடி 'என்று கொடுத்தனன், கவசத் தோடும். 6.26.9

ஆணி, இவ் உலகுக்கு ஆன ஆழியான், புறத்தின் ஆர்த்த
தூணியும் கொடுத்து, மற்றும் உறுதிகள் பலவும் சொல்லி,
தாணுவின் தோற்றத்தானைத் தழுவினன், தழுவலோடும்,
சேண் உயர் விசும்பில் தேவர், 'தீர்ந்தது எம் சிறுமை, என்றார். 6.26.10

போர்க்கோலங்கொண்ட இலக்குவன் இராமன்பால் விடை பெற்று வானரத்தலைவர்களுடன் நிகும்பலை நோக்கிச் செல்லுதல்

மங்கலம் தேவர் கூற வானவர் மகளிர் வாழ்த்தி,
பங்கம் இல் ஆசி கூறி, பல ஆண்டு இசை பரவப் பாகத்
திங்களின் மௌலி அண்ணல் திரிபுரம் தீக்கச் சீறிப்
பொங்கினன் என்ன, தோன்றிப் பொலிந்தனன் போர்மேல் போவான். 6.26.11

'மாருதி முதல்வர் ஆய வானரத் தலைவரோடும்,
வீர! நீ சேறி, என்று விடை கொடுத்தருளும் வேலை,
ஆரியன் கமல பாதம் அகத்தினும் புறத்துமாக,
சீரிய சென்னி சேர்த்து, சென்றனன், தருமச் செல்வன். 6.26.12

பொலங் கொண்டல் அனைய மேனிப் புரவலன், பொருமி, கண்ணீர்
நிலம் கொண்டு படர நின்று, நெஞ்சு அழிவானை, தம்பி
வலம் கொண்டு, வயிர வல்வில் இடம் கொண்டு, வஞ்சன் மேலே,
சலம் கொண்டு கடிது சென்றான், 'தலைகொண்டு வருவென் 'என்றே. 6.26.13

இலக்குவன் பிரியத் தனித்து நிற்கும் இராமனது நிலை

தான் பிரிகின்றிலாத தம்பி வெங் கடுப்பின் செல்வான்,
ஊன் பிரிகின்றிலாத உயிர் என, மறைதலோடும்,
வான் பெருவேள்வி காக்க, வளர்கின்ற பருவ நாளில்
தான் பிரிந்து ஏகக் கண்ட தயரதன் தன்னை ஒத்தான். 6.26.14

நிகும்பலையை அடைந்த வானரர்கள் அரக்கர் சேனையைக் காணுதல்

சேனாபதியே முதல் சேவகர்தாம்
ஆனார் நிமிர் கொள்ளி கொள் அங்கையினார்
கான் ஆர் நெறியும் மலையும் கழியப்
போனார்கள் நிகும்பலை புக்கனரால். 6.26.15

உண்டாயது ஓர் ஆல் உலகுள் ஒருவன்
கொண்டான் உறைகின்றது போல் குலவி
விண்தானும் விழுங்க விரிந்ததனைக்
கண்டார் அவ் வரக்கர் கருங்கடலை. 6.26.16

நேமிப் பெயர் யூகம் நிரைத்து நெடுஞ்
சேமத்தது நின்றது தீவினையோன்
ஓமம் அத்து அனல் வெவ் வடவைக்கு உடனே
பாமக்கடல் நின்றது ஓர் பான்மையதை. 6.26.17

கார் ஆயின காய் கரி தேர் பரிமா
தார் ஆயிரகோடி தழீஇயதுதான்
நீர் ஆழியொடு ஆழி நிறீஇயதுபோல்
ஓர் ஆயிரம் யோசனை உள்ளதனை. 6.26.18

பொன் தேர் பரிமா கரிமா பொருதார்
எற்றே படைவீரரை எண்ணிலமால்
உற்று ஏவிய யூகம் உலோகமுடன்
சுற்று ஆயிரம் ஊடு சுலாயதனை. 6.26.19

வண்ணக் கரு மேனியின் மேல் மழை வாழ்
விண்ணைத் தொடு செம்மயிர் வீசுதலால்
அண்ணல் கரியான் அனல் அம்பு அட வெம்
பண்ணைக்கடல் போல்வது ஓர் பான்மையதை. 6.26.20

ஆரவாரமின்றி வேள்விக் களத்தைக் காத்துநின்ற அரக்கர் சேனையைக் கண்டு வானரர் ஆரவாரித்தல்

வழங்காசிலை நாணொலி வானில் வரும்
பழங் கார்முகம் ஒத்த; பணைக்குலமும்
தழங்கா கடல் வாழ்வனபோல்; தகைசால்
முழங்கா முகில் ஒத்தன மா முரசே. 6.26.21

வலியான் அ(வ்)இராகவன் வாய்மொழியால்
சலியாத நெடுங் கடல்தான் எனலாய்
ஒலியாது உறுசேனையை உற்று ஒருநாள்
மெலியாதவர் ஆர்த்தனர் விண்கிழிய. 6.26.22

அரக்கர் சேனையுடன் வானரர் பொருதல்

ஆர்த்தார் எதிர் ஆர்த்த அரக்கர்குலம்;
போர்த்தார் முரசங்கள் புடைத்த புகத்
தூர்த்தார் இவர் கல் படை; சூல் முகிலின்
நீர்த்தாரையின் அம்பு அவர் நீட்டினரால். 6.26.23

மின்னும் படை வீசினர் வெம்படைமேல்
பன்னும் கவிசேனை படிந்து உளதால்
துன்னும் துறைநீர் நிறைவாவி தொடர்ந்து
அன்னங்கள் படிந்தனவாம் எனவாய். 6.26.24

வில்லும் மழுவும் எழுவும் மிடலோர்
பல்லும் தலையும் உடலும் படியில்
செல்லும்படி சிந்தின சென்றனவால்
கல்லும் மரமும் கரமும் கதுவ. 6.26.25

வாலும் தலையும் உடலும் வயிறும்
சாலும் கரமும் தரை கண்டனவால்
கோலும் மழுவும் எழுவும் கொழுவும்
வேலும் கணையும் வளையும் விசிற. 6.26.26

வேள்வியைச் சிதைக்காமல் காலம் நீட்டித்தலாகாது என வீடணன் இலக்குவனுக்கு உரைத்தல்

வென்றிச் சிலை வீரனை வீடணன் 'நீ
நின்று இக்கடை தாழுதல் நீதியதோ?
சென்று இக்கடி வேள்வி சிதைத்திலையேல்
என்று இக்கடல் வெல்லுதும் யாம்? 'எனலும் 6.26.27

இலக்குவன் தேவர் முதலியோர் வியந்து காண அரக்கர் சேனையை யழித்தல்

தேவ அசுரரும் திசை நான்முகனும்
மூவாமுதல் ஈசனும் மூஉலகின்
கோ ஆகிய கொற்றவனும் முதலோர்
மேவாதவர் இல்லை விசும்பு உறைவோர். 6.26.28

பல்லார்படை நின்றது; பல் அணியாய்
பல்லார்படை நின்றது; பல் பிறைவெண்
பல்லார்படை நின்றது; பல்லியமும்
பல்லார்படை நின்றது பல்படையே. 6.26.29

அக் காலை இலக்குவன் அப் படையுள்
புக்கான் அயில் அம்பு பொழிந்தனனால்;
உக்கார் அவ் வரக்கர் தம் ஊர் ஒழிய
புக்கார் நமனார் உறை தனெ்புலமே. 6.26.30

தேறாமத மால்கரி தேர் பரிமா
நூறாயிர கோடியின் நூழில்பட
சேறு ஆர் குருதிக் கடலில் திடராய்க்
கூறு ஆய் உக ஆவி குறைத்தனனால். 6.26.31

அழிவுற்ற அரக்கர் சேனைகளின் தோற்றம்

வாமக் கரிதான் அழி வார்குழியின்
தீ மொய்த்த அரக்கர்கள் செம்மயிரின்
தாமத் தலை உக்க தழங்கு எரியின்
ஓமத்தை நிகர்ப்ப உலப்பு இலவால். 6.26.32

சிலையின் கணை ஊடு திறந்தன திண்
கொலை வெங்களி மால்கரி செம்புனல் கொண்டு
உலைவு இன்று கிடந்தன ஒத்தனவால்
மலையும் சுனையும் வயிறும் உடலும். 6.26.33

வில் தொத்திய வெங்கணை எண்கின் வியன்
பல் தொத்திய போல் படியப் பலவும்
முற்றச் சுடர் மின்மினி மொய்த்துள வன்
புற்று ஒத்த முடித்தலை பூழியன. 6.26.34

படுமாரி நெடுங் கணை பாய்தலினால்
விடுமாறு உதிரம் புனல் வீழ்வனவால்
தடுமாறு நெடுங் கொடி தாழ்கடல்வாய்
நெடு மா முகில் வீழ்வ நிகர்த்தனவால். 6.26.35

மின் ஆர்கணை தாள் அற வீச விழுந்து
அன்னார் உதிரத்துள் அழுந்துதலால்
ஒன்னார் முழு வெண் குடை ஒத்தனவால்
செந் நாகம் விழுங்கிய திங்களினை. 6.26.36

கொடு நீள் கரி கையொடு தாள்குறைய
படுநீள் குருதிப் படர்கின்றனவால்
அடு நீள் உயிர் இன்மையின் ஆழ்கிலவால்
நெடு நீரின் இடங்கர் நிகர்த்தனவால். 6.26.37

கரி உண்ட களத்திடை உற்றன கார்
நரி உண்டி உகப்பன நட்டனவால்;
இரி உண்டவர் இன் இயம் இட்டிடலால்
மரி உண்ட உடல் பொறை மானினவால். 6.26.38

வாயில் கனல் வெங்கடு வாளி இனம்
பாய பருமம் குலம் வேவனவால்
வேய் உற்ற நெடுங்கிரி மீவெயில் ஆம்
தீ உற்றன ஒத்த சினக் கரியே. 6.26.39

அலைவேலை அரக்கரை எண்கு அணுகி
தலைமேல் முடியைத் தரை தள்ளுதலால்
மலைமேல் உயர் புற்றினை வள் உகிரால்
நிலைபேர மறிப்ப நிகர்த்தனவால். 6.26.40

மா வாளிகள் மா மழைபோல் வரலால்
மா ஆளிகள் போர் தறெு மா மறவோர்
மா ஆளிகள் வன் தலையின்தலை வாழ்
மா ஆளிகேளாடு மறிந்தனரால். 6.26.41

அங்கம் கிழியத் துணிபட்டதனால்
அங்கு அங்கு இழிகுற்ற அமர்த் தலைவர்
அங்கம் கழி செம்புனல் பம்ப அலைந்து
அங்கங்கள் நிரம்பி அலம்பியதால். 6.26.42

வன்தானையை வார்கணை மாரியினால்
முன் தாதை ஒர் தேர்கொடு மொய் பலதேர்
பின்றா எதிர் தானவர் பேர் அணியைக்
கொன்றான் என எய்து குறைத்தனனால். 6.26.43

இலக்குவனது போரினால் இந்திரசித்தின் யாகம் சிதைதல்

மலைகளும் மழைகளும் வான மீன்களும்
அலைய வெங்கால் பொர அழிந்தவாம் என
உலைகொள் வெங்கனல் பொதி ஓமம் உற்றவால்
தலைகளும் உடல்களும் சரமும் தாவுவ. 6.26.44

வாரணம் அனையவன் துணிப்ப வான் படர்
தார் அணி முடிப்பெருந் தலைகள் தாக்கலால்
ஆரண மந்திரம் அமைய ஓதிய
பூரண மணிக் குடம் உடைந்து போயதால். 6.26.45

தாறுகொள் மதகரி சுமந்து தாமரை
சீறிய முகத் தலை உருட்டி செந்நிறத்து
ஊறுகள் சொரிந்த பேர் உதிரத்து ஓங்கு அலை
ஆறுகள் எழும் கனல் அவியச் சென்றவால். 6.26.46

தெரிகணை விசும்பிடைத் துணித்த செம்மயிர்
வரிகழல் அரக்கர்தம் தடக்கை வாெளாடும்
உரும் என விழுதலின் அனலிக்கு ஓக்கிய
எருமைகள் மறிந்தன; மறியும் ஈர்ந்தவால். 6.26.47

அம்கடம் கழிந்த பேர் அருவிக் குன்றின்நின்று
அம்கடம் கழிந்திலர் அழிந்த ஆடவர்
அங்கு அடங்கலும் படர்குருதி ஆழியின்
அங்கு அடங்கினர் தொடர்பகழி அஞ்சினார். 6.26.48

கால் தலத்தொடு துணிந்து அழிய காய்கதிர்க்
கோல் தலைத்தலை உற மறுக்கம் கூடினார்
வேல் தலத்து ஊன்றினார் துளங்கு மெய்யினார்
நாறு அலைக் குடரினர் பலரும் நண்ணினார். 6.26.49

பொங்கு உடல் துணிந்த தம் புதல்வர்ப் போக்கிலார்
தொங்கு உடல் தோள்மிசை இருந்து சோர்வுற
அங்கு உடல் தம்பியைத் தழுவி அண்மினார்
தம் குடர் முதுகு இடைச் சொரியத் தள்ளுவார். 6.26.50

மூடிய நெய்யொடு நறவு முற்றிய
சாடிகள் பொரியொடு தகர்ந்து தள்ளுற
கோடிகள் பலபடு குழாம் குழாங்களாய்
ஆடின அறுகுறை அறுக்கும் ஆக்கைகள். 6.26.51

இலக்குவன் அரக்கர் சேனையை விரைந்து அழித்தல்

கால் என கடு என கலிங்கக் கம்மியர்
நூல் என உடற் பொறை தொடர்ந்த நோய் என
பால் உறு பிரை என கலந்து பல்முறை
வேல் உறு சேனையைத் துணித்து வீழ்த்தினான். 6.26.52

தன் சேனைகள் நிலைகுலைந் தழிதலை இந்திரசித்து காணுதல்

கண்டனன் திசைதொறும் நோக்கி கண் அகல்
மண்தலம் மறிகடல் அன்ன மாப் படை
விண்டு எறி கால்பொர மறிந்து வீற்று உறும்
தண்டலை ஆம் எனக் கிடந்த தன்மையே. 6.26.53

மிடலின் வெங் கடகரிப் பிணத்தின் விண்தொடும்
திடலும் வெம் புரவியும் தேரும் சிந்திய
உடலும் வன் தலைகளும் உதிர்ந்து ஓங்கு அலைக்
கடலும் அல்லால் இடை ஒன்றும் கண்டிலன். 6.26.54

நூறு நூறாயிர கோடி நோன் கழல்
மாறுபோர் அரக்கரை ஒருவன் வாள்கணை
கூறு கூறு ஆக்கிய குவையும் சோரியின்
ஆறுமே அன்றி வேறு அரக்கன் கண்டிலன். 6.26.55

நஞ்சினும் வெய்யவர் நடுங்கி நா உலர்ந்து
அஞ்சினர் சிலர்சிலர் அடைகின்றார்; சிலர்
வெஞ்சின வீரர்கள் மீண்டிலாதவர்
துஞ்சினர் துணை இலர் எனத் துளங்கினார். 6.26.56

இந்திரசித்து தான் தொடங்கிய வேள்வியில் ஓமகுண்டத்துத் தீ அவிந்தமை கண்டு மனம் வெதும்புதல்

ஓம வெங் கனல் அவிந்து உழைக் கலப்பையும்
காமர் வண் தருப்பையும் பிறவும் கட்டு அற
வாம மந்திரத் தொழில் மறந்து நந்துறு
தூம வெங்கனல் எனப் பொலிந்து தோன்றினான். 6.26.57

இந்திரசித்தினைக் காவலாகச் சூழ்ந்து நின்ற அரக்கர் சேனையினை வானரசேனை எதிர்த்து அடைதல்

அக்கணத்து அடுகளத்து அப்பு மாரியால்
உக்கவர் ஒழிதர உயிர் உேளார் எலாம்
தொக்கனர் அரக்கனைச் சூழ்ந்து சுற்றுற
புக்கது கவிப்பெருஞ் சேனைப் போர்க்கடல். 6.26.58

இந்திரசித்து தன் சேனைகள் அழிந்தமையினையும் அதுகண்டு முனிவர் முதலியோர் கைகுலைப்பதனையும் கண்டு தனது நியமம் குலைந்து வருந்துதல்

ஆயிரம் மலர் உடை ஆழி மாப் படை
'ஏ 'எனும் மாத்திரத்து இற்ற கொற்றமும்
தூயவன் சிலைவலித் தொழிலும் துன்பமும்
மேயின வெகுளியும் கிளர வெம்பினான். 6.26.59

மெய் குலைந்து இருநில மடந்தை விம்முற
செய் கொலைத் தொழிலையும் செய்கை தீயவர்
மொய் குலத்து இறுதியும் முனிவர் கண்டனர்
கை குலைக்கின்றதும் கண்ணின் நோக்கினான். 6.26.60

மானமும் பாழ்பட வகுத்த வேள்வியின்
மோனமும் பாழ்பட முடிவு இலா முரண்
சேனையும் பாழ்பட சிந்தை மந்திரத்து
ஏனையும் பாழ்பட இனைய செப்பினான். 6.26.61

'வெள்ளம் ஐ ஐந்துடன் விரிந்த சேனையின்
உள்ளது அக்குரோணி ஈர் ஐந்தொடு ஓயுமால்;
எள்ள அரு வேள்வி நின்று இனி இயற்றுதல்
பிள்ளைமை; அனையது சிதைந்து பேர்ந்ததால். 6.26.62

'தொடங்கிய வேள்வியின் தூம வெம் கனல்
அடங்கியது அவிந்துளது அமையுமாம் அன்றே?
இடம்கொடு வெம்செரு வென்றி இன்று எனக்கு
அடங்கியது என்பதற்கு ஏது ஆகுமால். 6.26.63

'அங்கு அது கிடக்க; நான் மனிதர்க்கு ஆற்றலென்
'சிங்கினன் என்பது ஓர் எளிமை; தேய்வுற
இங்கு நின்று இவை இவை நினைக்கிலேன்; இனி
பொங்குபோர் ஆற்ற என் தோளும் போனவோ? 6.26.64

"'மந்திர வேள்விபோய் மடிந்ததாம் " எனச்
சிந்தையின் நினைந்து நான் வருந்தும் சிற்றியல்
அந்தரத்து அமரர்தாம் "மனிதற்கு ஆற்றலன்
இந்திரற்கே இவன் வலி " என்று ஏசவோ? 6.26.65

அப்பொழுது அரக்கர்சேனை வானர சேனையினால் நிலைகுலைதல்

என்று அவன் பகர்கின்ற எல்லையின் இருங்
குன்றொடு மரங்களும் பிணத்தின் கூட்டமும்
பொன்றின கரிகளும் கவிகள் போக்கின;
சென்றன பெரும்படை இரிந்து சிந்தின. 6.26.66

ஒதுங்கினர் ஒருவர்கீழ் ஒருவர் புக்குறப்
பதுங்கினர் நடுங்கினர்; பகழி பாய்தலின்
பிதுங்கினர் குடர் உடல் பிளவு பட்டனர்.
மதம் புலர் களிறு எனச் சீற்றம் மாறினார். 6.26.67

வீரன் வெம் கணையொடும் கவிகள் வீசிய
கார்வரை அரக்கர் வெம் கடலின் வீழ்ந்தன
போர்நெடுங் கால்பொர பொழியும் மாமழைத்
தாரையும் மேகமும் படிந்த தன்மைய. 6.26.68

இந்திரசித்துக்குச் சினம் மிகும்படி அனுமன் அவனை யடைந்து எள்ளி நகையாடுதல்

திரைக் கடல் பெரும்படை இரிந்து சிந்திட
மரத்தினின் புடைத்து அடர்த்து உருத்த மாருதி
அரக்கனுக்கு அணித்து என அணுகி அன்னவன்
வரக் கதம் சிறப்பன மாற்றம் கூறுவான். 6.26.69

'நான் உனை இரந்துகூறும் நயமொழி ஒன்றும் கேளாய்;
சானகி தன்னை வாளால் தடிந்ததோ? தனதன் தந்த
மானம்மேல் சேனையோடும் வடதிசை நோக்கிமீது
போனதோ? கோடிகோடி வஞ்சமும் பொய்யும் வல்லாய்! 6.26.70

'தடம் திரைப் பரவை அன்ன சக்கர யூகம் புக்குக்
கிடந்தது கண்டது உண்டோ? நாண் ஒலி கேட்டிலோமே,
தொடர்ந்து போய் அயோத்தி தன்னைக் கிளையோடும் துணிய நூறி
நடந்தது எப்பொழுது? வேள்வி முடிந்ததே? கருமம் நன்றே? 6.26.71

ஏந்து அகல் ஞாலம் எல்லாம் இனிது உறைந்து இவரத் தாங்கும்
பாந்தளின் பெரிய திண்தோள் பரதனை பழியின் தீர்ந்த
வேந்தனை, கண்டு நீர் நும் வில்வலி காட்டி மீண்டு,
போந்தது, எவ் அளவை நன்றே, போனமை பொருந்திற்று அன்றே. 6.26.72

'அம்பரத்து அமைந்த வல்வில் சம்பரன் ஆவி வாங்கி
உம்பருக்கு உதவி செய்த ஒருவனுக்கு உதயஞ் செய்த
நம்பியை முதல்வர் ஆன மூவர்க்கு நால்வர் ஆன
தம்பியைக் கண்டு, நின்தன் தனு வலம் காட்டிற்று உண்டோ? 6.26.73

'தீ ஒத்த வயிர வாளி உடல் உற, சிவந்த சோரி
காயத்தும், செவியின் ஊடும், வாயினும், கண்கள் ஊடும்
பாய, போய், இலங்கை புக்கு, வஞ்சனை பரப்பச் செய்யும்
மாயப் போர் ஆற்றல் எல்லாம் இன்றொடு மடியும் அன்றே! 6.26.74

'பாசமோ, மலரின் மேலோன் பெரும் படைக் கலமோ, பண்டை
ஈசனார் படையோ, மாயோன் நேமியோ, யாதோ, இன்னும்
வீச நீர் விரும்புகின்றீர்? அதற்கு நாம் வெருவி, சாலக்
கூசினோம்; போதும் போதும்; கூற்றினார் குறுக வந்தார். 6.26.75

'வரங்கள் நீர் உடையவாறும், மாயங்கள் வல்லவாறும்,
பரம் கொள் வானவரின் தெய்வப் படைக்கலம் படைத்தவாறும்
உரங்கேளாடு உன்னி அன்றோ, உம்மை நாம் உயிரினோடும்
சிரம் கொளத் துணிந்தது? அன்னது உண்டு; அது திறம்பினோமோ? 6.26.76

'விடம் துடிக்கின்ற கண்டத்து அண்ணலும், விரிஞ்சன் தானும்,
படம் துடிக்கின்ற நாகப் பாற்கடல் பள்ளியானும்,
சடம் துடிக்கிலராய் வந்து தாங்கினும், சாதல் திண்ணம்;
இடம் துடிக்கின்றது உண்டே? இருத்திரோ? இயம்புவீரே! 6.26.77

"கொல்வென் " என்று, உன்னைத்தானே குறித்து ஒரு சூளும் கொண்ட
வில்லி, வந்து அருகு சார்ந்து, உன் சேனையை முழுதும் வீட்டி,
"வல்லையேல் வா வா " என்று விளிக்கின்றான்; வரிவில் நாணின்
ஒல் ஒலி, ஐய! செய்யும் ஓமத்துக்கு உறுப்பு ஒன்று ஆமோ? 6.26.78

'மூவகை உலகும் காக்கும் முதலவன் தம்பி பூசல்
தேவர்கள், முனிவர், மற்றும் திறத்திறத்து உலகம் சேர்ந்தார்,
யாவரும் காண நின்றார்; இனி இறை தாழ்ப்பது என்னோ?
சாவது சரதம் அன்றோ? ' என்றனன், தருமம் காப்பான். 6.26.79

இந்திரசித்து வெகுண்டு அனுமன் முதலியோரை இகழ்ந்துரைத்தல்

அன்ன வாசகங்கள் கேளா, அனல் உயிர்த்து, அலங்கல் பொன் தோள்
மின் உக, பகு வாய் ஊடு வெயில் உக, நகைபோய் வீங்க,
'முன்னரே வந்து இம் மாற்றம் மொழிகின்றீர் 'மொழிந்த மாற்றம்
என்னதோ நீயிர் என்னை இகழ்ந்தது என்று இனைய சொன்னான். 6.26.80

மூண்ட போர்தோறும் பட்டு முடிந்தநீர், முறையின் தீர்ந்து
மீண்டபோது அதனை எல்லாம் மறத்திரோ? விளிதல் வேண்டி
'ஈண்டவா 'என்னா நின்றீர்; இத்தனை பேரும் பட்டு
மாண்டபோது, உயிர் தந்தீயும் மருந்து வைத்தனையோ மான? 6.26.81

'இலக்குவன் ஆக, மற்றை இராமனே ஆக, ஈண்டு
விலக்குவர் எல்லாம் வந்து விலக்குக; குரங்கின் வெள்ளம்
குலக்குலம் ஆக மாளும் கொற்றமும், மனிதர் கொள்ளும்
அலக்கணும், முனிவர் தம்மோடு அமரரும் காண்பர் அன்றே. 6.26.82

'யானுடை வில்லும், என் பொன் தோள்களும், இருக்க இன்னும்
ஊனுடை உயிர்கள் யாவும் உய்யுமோ 'ஒளிப்பு இலாமல்?
கூனுடைக் குரங்கினோடு மனிதரைக் கொன்று, சென்று அவ்
வானினும் தொடர்ந்து கொல்வென்; மருந்தினும் உய்ய மாட்டீர். 6.26.83

'வேட்கின்ற வேள்வி இன்று பிழைத்தது; "வென்றோம் " என்று
கேட்கின்ற வீரம் எல்லாம் கிளத்துவீர்! கிளத்தல் வேண்டா;
தாழ்க்கின்றது இல்லை; உம்மைத் தனித்தனி தலைகள் பாறச்
சூழ்க்கின்ற வீரம் என்கைச் சரங்களாய்த் தோன்றும் அன்றே. 6.26.84

'மற்று எலாம் நும்மைப் போல வாயினால் சொல்ல மாட்டேன்;
வெற்றிதான் இரண்டு தந்தீர்; விரைவது வெல்லக் கொல்லாம்?
உற்று நான் உருத்த காலத்து ஒருமுறை எதிரே நிற்கக்
கற்றிரோ? இன்னம் மாண்டு கிடத்திரோ? கடத்திரோதான்? 6.26.85

இந்திரசித்து, போர் செய்தற்கு ஆயத்தனாகித் தேரேறி வில்நாண் எறிந்து போர்ச்சங்கினை ஊதுதல்

'நின்மின்கள்; நின்மின்! 'என்னா, நெருப்பு எழ விழித்து, நீண்ட
மின்மின்கொள் கவசம் இட்டான்; வீக்கினான், தூணி; வீரப்
பொன் மின்கொள் கோதை கையில் பூட்டினான்; பொறுத்தான், போர்வில்;
எல் மின்கொள் வயிரத் திண்தேர் ஏறினான்; எறிந்தான் நாணி; 6.26.86

ஊதினான் சங்கம்; வானத்து ஒண்தொடி மகளிர் ஒண்கண்
மோதினார்; 'கணத்தின் முன்னே முழுவதும் முருங்க முற்றக்
காதினான் 'என்ன, வானோர் கலங்கினார்; கயிலை யானும்,
போதினான்தானும், 'இன்று புகுந்தது பெரும்போர் 'என்றார 6.26.87

பின் விளைவு எண்ணித் தேவர்கள் வாட்டமுறுதல்

'இழைத்த பேர் யாகம் தானே யாம் செய்த தவத்தினாலே
பிழைத்தது; பிழைத்ததேனும், வானரம் பிழைக்கல் ஆற்றா;
அழைத்தது விதியேகொல் என்று அஞ்சினார்; அம்பினாலே
உழைத்தது காண்கின்றோம் 'என்று, உணங்கினார், உம்பர் உள்ளார். 6.26.88

குரங்குகள், இந்திரசித்தின் நாணொலி கேட்டு நிலை குலைந்தோடுதலும் அனுமன் மலையினைப் பறித்து எதிர்த்தலும்

நாண்தொழில் ஓசை வீசிச் செவிதொறும் நடத்தலோடும்,
ஆண் தொழில் மறந்து, கையின் அடுக்கிய மரனும் கல்லும்
மீண்டன மறிந்து, சோர விழுந்தன; விழுந்த, 'மெய்யே
மாண்டனம் 'என்றே உன்னி, இரிந்தன, குரங்கின் மாலை. 6.26.89

படைப் பெருந்தலைவர் நின்றார்; அல்லவர், இறுதி பற்றும்
அடைப்ப அருங்காலக் காற்றால் ஆற்றலது ஆகிக் கீறிப்
புடை, திரிந்து ஓடும் வேலைப் புனல் என, இரியலுற்றார்;
கிடைத்த போர் அனுமன் ஆண்டு, ஓர் நெடுங்கிரி கிழித்துக் கொண்டான். 6.26.90

இந்திரசித்து வீரவுரை பகர்ந்து அனுமனுடன் பொருதல்

'நில், அடா! நில்லு நில்லு! நீ, அடா! வாசி பேசிக்
கல் எடாநின்றது, என்னைப் போர்க்களத்து, அமரர் காண,
கொல்லலாம் என்றோ? நன்று; குரங்கு என்றால் கூடும் அன்றே?
நல்லை; போர், வாவா 'என்றான் நமனுக்கு நமனாய் நின்றான். 6.26.91

வில் எடுத்து உருத்து நின்ற வீரருள் வீரன் நேரே,
கல் எடுத்து, எறிய வந்த அனுமனைக் கண்ணின் நோக்கி,
'மல் எடுத்து உயர்ந்த தோளாற்கு என்கொலோ வலியது? 'என்னா
சொல் எடுத்து, அமரர் சொன்னார்; தாதையும் துணுக்கம் உற்றான். 6.26.92

வீசினன் வயிரக் குன்றம், வெம் பொறிக் குலங்கள் விண்ணின்
ஆசையின் நிமிர்ந்து செல்ல, 'ஆயிரம் உரும் ஒன்றாகப்
பூசின பிழம்பு இது 'என்ன, வரும் அதன் புரிவை நோக்கி,
கூசின, உலகம் எல்லாம்; குலைந்தது அவ் அரக்கர் கூட்டம். 6.26.93

குண்டலம் நெடுவில் வீச, மேருவின் குவிந்த தோளான்,
அண்டமும் குலுங்க ஆர்த்து, மாருதி, அசனி அஞ்ச,
விண் தலத்து எறிந்த குன்றம் வெறுந் துகள் ஆகி வீழக்
கண்டனன்; எய்த தன்மை கண்டிலர், இமைப்பு இல் கண்ணார். 6.26.94

இந்திரசித்து ஏவிய அம்புகளால் அனுமன் அயர்தல்

மாறு ஒரு குன்றம் வாங்கி மறுகுவான் மார்பில், தோளில்,
கால்தரு காலில், கையில், கழுத்தினில், நுதலில், கண்ணில்,
ஏறின என்ப மன்னோ எரிமுகக் கடவுள் வெம்மை
சீறின பகழிமாரி, தீக்கடு விடத்தின் தோய்ந்த. 6.26.95

வெதிர் ஒத்த சிகரக் குன்றின் மருங்கு உற விளங்கலாலும்,
எதிர் ஒத்த இருளைக் கீறி எழுகின்ற இயற்கையாலும்,
கதிர் ஒத்த பகழிக் கற்றை கதிர் ஒளி காட்டலாலும்,
உதிரத்தின் செம்மை யாலும், உதிக்கின்ற கதிரோன் ஒத்தான். 6.26.96

எதிர்த்துப் போர் செய்ய வந்த அங்கதன் முதலியோரை நோக்கிய இந்திரசித்து, இலக்குவன் எங்குள்ளான் என வினவுதல்

ஆயவன் அயர்தலோடும், அங்கதன் முதல்வர் ஆனோர்,
காய்சினம் திருகி, வந்து கலந்துளார் தம்மைக் காணா,
'நீயிர்கள் நின்மின் நின்மின், இருமுறை நெடிய வானில்
போயவன் எங்கே நின்றான்? ' என்றனன், பொருள் செயாதான். 6.26.97

வெம்பினர் பின்னும் மேன்மேற் சேறலும் வெகுண்டு, 'சீயம்
தும்பியைத் தொடர்வது அல்லால், குரங்கினைத் தொடர்வது உண்டோ?
அம்பினை மாட்டி, என்னே? சிறிது போர் ஆற்ற வல்லான்
தம்பியைக் காட்டித் தாரீர்; சாதிரோ, சலத்தின்? 'என்றான். 6.26.98

'அனுமனைக் கண்டிலீரோ? அவனினும் வலியிரோ? என்
தனு உளதன்றோ? தோளின் அவ் வலி தவிர்ந்தது உண்டோ!
இனம் முனை தீர்கிலீரோ? எவ் வலி ஈட்டி வந்தீர்?
மனிதனைக் காட்டி, நும்தம் மலைதொறும் வழிக் கொளீரே. ' 6.26.99

இலக்குவன் மேற்சென்ற இந்திரசித்தினை எதிர்த்து வானரர் வலியழிதல்

என்று உரைத்து இளவல் தன்மேல் எழுகின்ற இயற்கை நோக்கி,
குன்றமும் மரமும் வீசிக் குறுகினார்; குழாங்கள் தோறும்
சென்றன பகழி மாரி, மேருவை உருவித் தீர்வ,
ஒன்று அல, கோடி கோடி நுழைந்தன; வலியும் ஓய்ந்தார். 6.26.100

வீடணன், விரைந்தழெுக என்றவாறு இலக்குவன் இந்திரசித்தின்மேல் போருக்கு முந்துதல்

'படுகின்றது அன்றோ, மற்று உன் பெரும் படை? பகழி மாரி
விடுகின்றது அன்றோ, வென்றி அரக்கனாம் காள மேகம்?
இடுகின்ற வேள்வி மாண்டது; இனி, அவன் பிழைப்பு உறாமே
முடுகு 'என்றான், அரக்கன் தம்பி; நம்பியும் சென்று மூண்டான். 6.26.101

வந்தான் நெடுந்தகை மாருதி, மயங்கா முகம் மலர்ந்தான்,
'எந்தாய்! கடிது ஏறாய், எனது இருதோள்மிசை 'என்றான்;
'அந்தாக 'என்று உவந்து, ஐயனும் அமைவு ஆயினன் 'இமையோர்
சிந்தாகுலம் துறந்தார்; அவன் நெடுஞ் சாரிகை திரிந்தான். 6.26.102

இந்திரசித்தும் இலக்குவனும் பெரும்போர் புரிதல்

'கார் ஆயிரம் உடன் ஆகிய ' எனல் ஆகிய கரியோன்,
ஓர் ஆயிரம் பரிபூண்டது ஓர் உயர் தேர்மிசை உயர்ந்தான்;
நேர் ஆயினர் இருவோர்களும்; நெடுமாருதி, நிமிரும்
போர் ஆயிரம் உடையான் என, திசை எங்கணும் பெயர்ந்தான். 6.26.103

தீ ஒப்பன, உரும் ஒப்பன, உயிர் வேட்டன திரியும்
பேய் ஒப்பன, பசி ஒப்பன, பிணி ஒப்பன, பிழையா
மாயக் கொடுவினை ஒப்பன; மனம் ஒப்பன, கழுகின்
தாய் ஒப்பன, சில வெங்கணை துரந்தான் துயில் துறந்தான். 6.26.104

அவ் அம்பினை அவ் அம்பினின் அறுத்தான், இகல் அரக்கன்;
'எவ் அம்பு இனி உலகத்து உள? ' என்னும்படி எய்தான்
வெவ் அம்பரம், வையம், திசை, மலை, வேலைகள், பிறவும்,
வவ்வும் கடையுக மாமழை பொழிகின்றது மான. 6.26.105

ஆயோன், நெடுங் குருவிக் குலம் எனலாம் சில அம்பால்
போய் ஓவிடத் துரந்தான்; அவை 'பொறியோ 'என, மறிய,
தூயோனும், அத்துணை வாளிகள் தொடுத்தான், அவை தடுத்தான்;
தீயோனும், அக்கணத்து, ஆயிரம் நெடுஞ் சாரிகை திரிந்தான். 6.26.106

கல்லும், நெடுமலையும், பலமரனும், கடைகாணும்
புல்லும் சிறு பொடியும் இடை தெரியாவகை, புரியச்
செல்லும் நெறிதொறும் சென்றன தறெு கால்புரை மறவோன்
சில்லின் முதிர்தேரும், சின வயமாருதி தாளும். 6.26.107

இருவீரரும், 'இவன் இன்னவன், இவன் இன்னவன் 'என்னச்
செருவீரரும் அறியாவகை திரிந்தார், கணை சொரிந்தார்;
'ஒரு வீரரும் இவர் ஒக்கிலர் ' என, வானவர் உவந்தார்;
பொரு வீரையும் பொரு வீரையும் பொருதால் எனப் பொருதார். 6.26.108

'விண் செல்கில, செல்கின்றன விசிகம் 'என, இமையோர்
கண் செல்கில; மனம் செல்கில : கணிதம் உறும் எனின், ஓர்
எண் செல்கில; நெடுங்கால வன் இடை செல்கிலன், உடல்மேல்
புண்செய்வன அல்லால், ஒரு பொருள் செல்வன தெரியா. 6.26.109

எரிந்து ஏறின, திசை யாவையும்; இடி ஆம் எனப் பொடியாய்
நெரிந்து ஏறின, நெடுநாண் ஒலி; படர் வான் நிறை உருமின்
சொரிந்து ஏறின சுடுவெங்கணை; தொடுந் தாரகை முழுதும்
கரிந்து ஏறின, உலகு யாவையும், கனல் வெம்புகை கதுவ. 6.26.110

வெடிக்கின்றன, திசை யாவையும், விழுகின்றன, இடிவந்து
இடிக்கின்றன, சிலைநாண் ஒலி; இருவாய்களும் எதிராக்
கடிக்கின்றன, கனல் வெம் கணை, கலி வான் உற விசைமேல்
பொடிக்கின்றன, பொறி வெம் கனல்; இவை கண்டனர் புலவோர். 6.26.111

கடல் வற்றின; மலை உக்கன; பருதிக் கனல் கதுவுற்று
உடல் வற்றின; மரம், உற்றன கனல் பட்டன; உதிரம்
சுடர் வற்றின; சுறு மிக்கது; துணிபட்டு உதிர்கணையின்,
திடர் பட்டது, பரவை குழி; திரிவுற்றது புவனம். 6.26.112

எரிகின்றன அயில் வெம் கணை இரு சேனையும் இரியத்
திரிகின்றன, புடை நின்றில, திசை சென்றன; சிதறிக்
கரி பொன்றின; பரி மங்கின; கவி சிந்தின; கடல் போல்
சொரிகின்றன, பொரு செம்புனல்; தொலைகின்றனர், கொலையால். 6.26.113

புரிந்து ஓடின; பொரிந்து ஒடின; புகைந்து ஓடின; புகை போய்
எரிந்து ஓடின; கரிந்து ஓடின; இடம் ஓடின; வலமே
திரிந்து ஓடின; பிரிந்து ஓடின; செறிந்து ஓடின; திசைமேல்
சரிந்து ஓடின கருங் கோளரிக்கு இளையான் விடு சரமே. 6.26.114

நீர் ஒத்தன; நெருப்பு ஒத்தன; பொருப்பு ஒத்தன; நிமிரும்
கார் ஒத்தன; உரும் ஒத்தன; கடல் ஒத்தன; கதிரோன்
தேர் ஒத்தன; விடைமேலவன் சிரிப்பு ஒத்தன; உலகின்
வேர் ஒத்தன; செரு ஒத்து இகல் அரக்கன் விடு விசிகம். 6.26.115

ஏமத் தடங் கவசத்து இகல் அகலத்தன; இருவோர்
வாமப் பெருந்தோள் மேலன; வதனத்தன; வயிரத்
தாமத்துணைக் குறங்கோடு இரு சரணத்தன, தம் தம்
காமக் குல மட மங்கையர் கடைக்கண் என, கணைகள். 6.26.116

'எந்நாளினின், எத்தேவர்கள், எத் தானவர், எவரே,
அன்னார் செரு விளைத்தார்? ' என, இமையோர் எடுத்து ஆர்த்தார்;
பொன் ஆர் சிலை இரு கால்களும், ஒருகால் பொறை உயிரா,
முன்நாளினில் இரண்டாம் பிறை முளைத்தால் என வளைத்தார். 6.26.117

வேகின்றன உலகு இங்கு இவர் விடுகின்றன விசிகம்
போகின்றன, சுடர் வெந்தன; இமையோர்களும் புலர்ந்தார்;
'ஆகின்றது ஒர் அழிகாலம் இது ஆம், அன்று 'என அயிர்த்தார்;
நோகின்றன திசை யானைகள், செவி நாண் ஒலி நுழைய. 6.26.118

மீன் உக்கது, நெடு வானகம்; வெயில் உக்கது, சுடரும்;
மான் உக்கது, முழு வெண்மதி மழை உக்கது, வானம்;
தான் உக்கது, குல மால் வரை; தரை உக்கது; தகைசால்
ஊன் உக்கது, எவ் உலகத்தினும் உள ஆயினம் உயிரும். 6.26.119

அக்காலையின் அயில்வெங்கணை ஐ ஐந்து புக்கு அழுந்த,
திக்கு ஆசு அற வென்றான் மகன் இளங்கோ உடல் செறித்தான்;
கைக் கார்முகம் வளையச் சில கனல் வெங்கணை, கவசம்
புக்கு, ஆகமும் கழன்று ஓடிட, இளங் கோளரி பொழிந்தான். 6.26.120

தெரிந்தான் சில சுடர் வெங்கணை, தேவேந்திரன் சினமா
இரிந்து ஓடிடத் துரந்து ஓடின, இமையோரையும் முன்நாள்
அரிந்து ஓடின, எரிந்து ஓடின, அவை கோத்து, அடல் அரக்கன்
சொரிந்தான், உயர் நெடு மாருதி தோள்மேலினில் தோன்ற. 6.26.121

குருதிப் புனல் சொரிய, குணம் குணிப்பு இல்லவன், குணபால்
பருதி படி பொலிவுற்றதை இளங் கோளரி பார்த்தான்;
ஒரு திக்கிலும் பெயராவகை, அவன் தேரினை உதிர்த்தான்;
'பொருது இக்கணம் வென்றான் 'என, சரமாரிகள் பொழிந்தான். 6.26.122

அத்தேர் அழிந்தது நோக்கிய இமையோர் எடுத்து ஆர்த்தார்;
முத்தேவரும் உவந்தார்; அவன், உரும் ஏறு என முனிந்தான்,
தத்தா; ஒரு தடந்தேரினைத் தொடர்ந்தான், சரம் தலைமேல்
பத்து ஏவினன்; அவை பாய்தலின், இளம் கோளரி பதைத்தான். 6.26.123

பதைத்தான், உடல் நிலைத்தான், சில பகுவாய் அயில் பகழி
விதைத்தான்; அவன் விலக்காதமுன், விடைமேல் வரு விமலன்,
மதத்தால் எதிர்வரு காலனை ஒரு காலுற மருமத்து
உதைத்தால் என, தனித்து ஓர் கணை அவன் மார்பிடை உய்த்தான். 6.26.124

கவசத்தையும் நெடு மார்பையும் கழன்று அக்கணை கழிய,
அவசத் தொழில் அடைந்தான்; அதற்கு இமையோர் எடுத்து ஆர்த்தார்;
திவசத்து எழு கதிரோன் எனத் தெரிகின்றது ஓர் கணையால்
துவசத்தையும் துணித்தே, அவன் மணித் தோளையும் தொளைத்தான் 6.26.125

உள் ஆடிய உதிரம் புனல் கொழுந் தீ என ஒழுக,
தள்ளாடிய வடமேருவின் சலித்தான்; உடல் தரித்தான்;
தொள்ளாயிரம் கடும் போர்க் கணை துரந்தான்; அவை, சுடர் போய்
விள்ளா நெடுங் கவசத்து இடை நுழையாது உக, வெகுண்டான். 6.26.126

மறித்து ஆயிரம் வடிவெங்கணை, மருமத்தினை மதியாக்
குறித்து, ஆயிரம் பரித்தேரவன் விடுத்தான்; அவை குறி பார்த்து
இறுத்தான், நெடுஞ் சரத்தால், ஒரு தனி நாயகற்கு இளையோன்;
செறித்தான் உடல் சில பொன் கணை, சிலை நாண் அறத் தெரித்தான். 6.26.127

'வில் இங்கு இது நெடுமால் சிவன் எனும் மேலவர் தனுவே
கொல்? 'என்று கொண்டு அயிர்த்தான்; நெடுங் கவசத்தையும் குலையாச்
செல்லுங் கடுங்கணை யாவையும் சிதையாமையும் தெரிந்தான்;
வெல்லும்தரம் இல்லாமையும் அறிந்தான், அகம் மெலிந்தான். 6.26.128

இந்திரசித்து மெலிவுற்றமையை யறிந்த வீடணன் இலக்குவனுக்கு அதனைத் தெரிவித்தல்

அத்தன்மையை அறிந்தான் அவன் சிறுதாதையும், அணுகா,
முத்தன் முகம் நோக்கா, 'ஒரு மொழி கேள் 'என மொழிவான்,
'எத்தன்மையும் இமையோர்களை வென்றான் இகல் கண்டாய்!
பித்தன் மகன் தளர்ந்தான்; இனிப் பிழையான் 'எனப் பகர்ந்தான். 6.26.129

இந்திரசித்து ஏவிய படைக்கலங்களை ஏற்ற கணைகளால் இலக்குவன் விலக்குதல்

கூற்றின்படி கொதிக்கின்ற அக் கொலை வாள் எயிற்று அரக்கன்,
ஏற்றும் சிலை நெடுநாண் ஒலி உலகு ஏழினும் எய்த,
சீற்றம் தலைத்தலை சென்று உற, 'இது தீர் 'எனத் தெரியா,
காற்றின் படை தொடுத்தான்; அவன் அதுவே கொடு காத்தான். 6.26.130

அனலின் படை தொடுத்தான்; அவன் அதுவே கொடு தடுத்தான்;
புனலின் படை தொடுத்தான்; அவன் அதுவே கொடு பொறுத்தான்;
கனல் வெங் கதிரவன் வெம்படை துரந்தான், மனம் கரியான்;
சினவெந் திறல் இளங் கோளரி அதுவே கொடு தீர்த்தான். 6.26.131

இந்திரசித்து அயன் படை தொடுத்தானாக இலக்குவன் அப்படையினையே தொடுத்து அதனை அழித்தல்

'இது காத்திகொல்? 'என்னா, எடுத்து, இசிகப்படை எய்தான்;
அது காப்பதற்கு அதுவே உளது என்னா, தொடுத்து அமைந்தான்;
செதுகாப் படை தொடுப்பேன் என நினைந்தான், திசை முகத்தோன்
முதுமாப்படை துரந்தான், 'இனி முடிந்தாய் 'என மொழிந்தான். 6.26.132

வானின்தலை நின்றார்களும் மழுவாளியும், மலரோன்
தானும், முனிவரரும், பிற தவத்தோர்களும், அறத்தோர்
கோனும், பிறபிற தேவர்கள் குழுவும், மனம் குலைந்தார்;
'ஊனம், இனி இலது ஆகுக இளங்கோக்கு 'என உரைத்தார். 6.26.133

ஊழிக்கடை இறுதி தலை, உலகு யாவையும் உண்ணும்
ஆழிப் பெருங்கனல் தன் ஒரு சுடர் என்னவும் ஆகாப்
பாழிச் சிகை பரப்பித் தனி படர்கின்றது பார்த்தான்
ஆழித் தனிமுதல் நாயகற்கு இளையான் அது மதித்தான். 6.26.134

'மாட்டான் இவன், மலரோன்படை முதற்போது தன் வலத்தால்
மீட்டான் அலன்; தடுத்தான் அலன்; முடிந்தான் 'என, விட்டான்;
'காட்டாது இனிக் கரந்தால், அது கருமம் அலது 'என்னா,
'தாள் தாமரை மலரோன் படை தொடுப்பேன் 'எனச் சமைந்தான். 6.26.135

'நன்று ஆகுக உலகுக்கு 'என முதலோன்மொழி நவின்றான்;
'பின்றாதவன் உயிர்மேற் செலவு ஒழிக 'என்பது பிடித்தான்;
'ஒன்றாக இம் முதலோன்படை தனை மாய்க்க 'என்று உரைத்தான்;
நின்றான், அது துரந்தான்; அவன் நலம் வானவர் நினைத்தார் 6.26.136

'தான் விட்டது மலரோன் படை எனின், மற்று இடை தருமே?
வான் விட்டதும், மண் விட்டதும், மறவோன் உடல் அறுமே,
'தேன் விட்டிடு மலரோன் படை தீர்ப்பாய் 'எனத் தெரிந்தான்;
'ஊன் விட்டவன் மறம் விட்டிலன் ' என, வானவர் உவந்தார். 6.26.137

உருமேறு வந்து எதிர்ந்தால், அதன் எதிரே நெருப்பு உய்த்தால்,
வரும் ஆங்கது தவிர்ந்தால் என, மறவோன் படை மாய,
திருமால் தனக்கு இளையான் படை உலகு ஏழையும் தீய்க்கும்
அருமாகனல் எனநின்றது, விசும்பு எங்கணும் ஆகி. 6.26.138

படை அங்கு அது படரா வகை, பகலோன் குல மருமான்,
இடை ஒன்று அது தடுக்கும்படி செந்தீஉக எய்தான்,
தொடை ஒன்றினை, கணைமீமிசைத் துறுவாய் இனி 'என்றான்;
விடம் ஒன்றுகொடு ஒன்று ஈர்ந்தது போல் தீர்ந்தது, வேகம். 6.26.139

தேவர்களது மகிழ்ச்சியும் சிவபெருமான் இராம இலக்குவரது பிறப்பின் உண்மையினை விளக்குதலும்

விண்ணோர் அது கண்டார், 'வய வீரர்க்கு இனி மேன்மேல்
ஒண்ணாதன உளவோ? 'என மனம் தேறினர், உவந்தார்;
கண்ணார் நுதல் பெருமான், 'இவர்க்கு அரிதோ? 'எனக் கடைபார்த்து,
'எண்ணாது இவை பகர்ந்தீர்; பொருள் கேளீர்! 'என இசைத்தான். 6.26.140

'நாராயண நரர் என்று இவர் உளராய், நமக்கு எல்லாம்
வேராய், முழு முதல் காரணப் பொருளாய், வினை கடந்தார்;
ஆராயினும் தெரியாதது ஒர் நெடு மாயையின் அகத்தார்;
பாராயண மறை நான்கையும் கடந்தார்; இவர் பழையோர். 6.26.141

"அறத்தாறு அழிவு உளது ஆம் " என, அறிவும் தொடர்ந்து அணுகாப்
புறத்தார், புகுந்து அகத்தார் எனப் பிறந்தார், அது புரப்பார்;
மறத்தார் குலம் முதல் வேர் அற மாய்ப்பான், இவண் வந்தார்;
திறத்தால் அதுதெரிந்து, யாவரும் தெரியாவகை திரிவார். 6.26.142

"உயிர்தோறும் உற்றுளன், தோத்திரத்து ஒருவன் " என உரைக்கும்
அயிராநிலை உடையான் இவன்; அவன், இவ் உலகு அனைத்தும்
தயிர்தோய் பிரை எனல் ஆம் வகை கலந்து, ஏறிய தலைவன்;
பயிராதது ஒர் பொருள் இன்னது என்று உணர்வீர்; இது பரமால். 6.26.143

'நெடும் பாற்கடல் கிடந்தாரும், பண்டு, இவர்; நீர் குறை நேர,
விடும்பாக்கியம் உடையார்களைக் குலத்தோடு அற வீட்டி,
இடும்பாக்கியத்து அறம் காப்பதற்கு இசைந்தார் 'என இது எலாம்,
அடும்பு ஆக்கிய தொடைச் செஞ்சடை முதலோன் பணித்து அமைந்தான். 6.26.144

உண்மையினை அறிவுறுத்திய சிவபெருமானைத் தேவர்கள் தொழுது போற்றுதல்

'அறிந்தே, இருந்து அறியேம், அவன் நெடு மாயையின் அயர்ப்பேம்;
பிறிந்தேம் இனி முழுது ஐயமும்; பெருமான் உரை பிடித்தோம்;
எறிந்தேம் பகைமுழுதும்; இனித் தீர்ந்தேம், இடர் கடந்தேம்;
செறிந்தோர் வினைப் பகைவா! ' எனத்தொழுதார், நெடுந்தேவர். 6.26.145

மாயோன் படையினை இந்திரசித்து ஏவுதலும் இலக்குவன், தன்னைத் திருமாலாகத் தியானித்த அளவில் அது விலகிப் போதலும்

மாயோன் நெடும்படை வாங்கிய வளைவாள் எயிற்று அரக்கன்,
'நீயோ இது தடுத்தாய் எனின், நினக்கு ஆர் எதிர் நிற்பார்?
போயோ விசும்பு அடைவாய்? இது பிழையாது 'எனப் புகலா,
தூயோன்மிசை, உலகு யாவையும் தடுமாறிட, துரந்தான். 6.26.146

சேமித்தனர் இமையோர்தமை, சிரத்து ஏந்திய கரத்தால்;
ஆம் இத் தொழில், பிறர் யாவரும் அடைந்தார்; பழுது அடையாக்
காமிப்பது முடிவிப்பது, படர்கின்றது கண்டான்;
'நேமித் தனி அரி, தான் 'என நினைந்தான், எதிர் நடந்தான். 6.26.147

தீக்கின்றது இவ் உலகு ஏழையும் எனச் செல்வதும் தெரிந்தான்;
நீக்கும் தரம் அல்லா முழு முதலோன் என நினைந்தான்;
மீச் சென்றிலது, அயல் சென்றது, விலங்கா, வலங்கொடு, மேல்
போய்த்து, அங்கு அது; கனல் மாண்டது புகை வீய்ந்தது, பொதுவே. 6.26.148

ஏத்து ஆடினர், இமையோர்களும் கவியின் குலம் எல்லாம்
கூத்து ஆடின; அர மங்கையர் குனித்து ஆடினர்; தவத்தோர்
'காத்தாய் உலகு அனைத்தும் 'எனக் களித்து ஆடினர்; கமலம்
பூத்தானும் அம் மழுவாளியும் முழு வாய் கொடு புகழ்ந்தார். 6.26.149

சிவனது படையினை இந்திரசித்து விடுதல்

அவன் அன்னது கண்டான், 'இவன் ஆரோ? 'என அயிர்த்தான்;
'இவன் அன்னது முதலே உடை இறையோன் என வியவா,
'எவன் என்னினும் நின்று ஆகுவது இனி எண்ணிலன் 'என்னா,
'சிவன் நன்படை தொடுத்து ஆருயிர் முடிப்பேன் 'எனத் தெரிந்தான். 6.26.150

பார்ப்பான் தரும் உலகு யாவையும் ஒரு நாள் ஒருபகலே
தீர்ப்பான் படை தொடுப்பேன் ' எனத் தெரிந்தான்; அது தெரியா,
மீப் பாவிய இமையோர் குலம் வெரு உற்றது; 'இப்பொழுதே
மாய்ப்பான் 'என உலகு யாவையும் மறுகுற்றன, மயங்கா. 6.26.151

'தானே சிவன்தரப் பெற்றது, தவம் நாள்பல உழந்தே;
தானே, 'பிறர் அறியாதது தந்தேன் 'எனச் சமைந்தான்;
ஆனால், இவன் உயிர் கோடலுக்கு ஐயம் இலை 'என்னா,
மேல்நாளும் இதனையே விடின் எதிர் நிற்பவர் இல்லை. 6.26.152

மனத்தால், மலர் புனல் சாந்தமொடு அவி தூபமும் வகுத்தான்;
நினைத்தான்; 'இவன் உயிர்கொண்டு இவண் நிமிர்வாய் 'என நிமிர்ந்தான்;
சினத்தால் நெடுஞ்சிலை நாண் தடந் தோள்மேல் உறச் செலுத்தா,
எனைத்து ஆயது ஒர் பொருளால் இடை தடை இல்லதை விட்டான். 6.26.153

சிவனது படையினால் தோன்றிய விளைவுகள்

சூலங்களும், மழுவும், சுடு கணையும், கனல் சுடரும்,
ஆலங்களும், அரவங்களும், அசனிக்குலம் எவையும்,
காலன்தனது உருவங்களும், கரும்பூதமும், பெரும் பேய்ச்
சாலங்களும் நிமிர்கின்றன, உலகு எங்கணும் தான் ஆய். 6.26.154

ஊழிக் கனல் ஒருபால் அத னுடனே தொடர்ந்து உடற்றும்;
சூழிக் கொடுங் கடுங்காற்று அத னுடனே வர, தூர்க்கும்
ஏழிற்கும் அப் புறத்தாய் உள பெரும் போர்க்கடல் இழிந்த ஆங்கு
ஆழித்தலைக் கிடந்தால் என நெடுந்தூங்கு இருள் அடைய. 6.26.155

இரிந்தார் குலநெடுந் தேவர்கள்; இருடிக் குலத்து எவரும்
பரிந்தார். 'இதுபழுது ஆகிலது, இறுவான் எனும் பயத்தால்;
நெரிந்து ஆங்கு அழிகுரங்கு உற்றது பகருந்துணை நெடிதே.
திரிந்தார், இரு சுடரோர்; உலகு ஒரு மூன்று உடன் திரிய. 6.26.156

அதுகண்டு அஞ்சிய வீடணன் இதனை விலக்க இயலுமோ என வினவ இலக்குவன் அதனை நோக்கிச் சிரித்தல்

பார்த்தான் நெடுந்தகை வீடணன், உயிர் கால் உற, பயத்தால்
வேர்த்தான், 'இது விலக்கும் தரம் உளதோ, முதல் வீரா!
தீர்த்தா! 'என அழைத்தான்; அதற்கு இளங்கோளரி சிரித்தான்;
போர்த்தார் அடல் கவிவீரரும், அவன் தாள்நிழல் புகுந்தார். 6.26.157

அபயம் அடைந்தவர்களை அஞ்சற்க எனக் கையமைத்துத் தானும் சிவன் படையை விட, அது இந்திரசித்தின் படையினை விழுங்குதல்

'அவயம்! உனக்கு அவயம்! 'எனும் அனைவோரையும், 'அஞ்சேல்
அவயம் உமக்கு அளித்தோம் 'எனத் தன் கைத் தலத்து அமைத்தான்
'உவயம் உறும் உலகின் பயம் உணர்ந்தேன், இனி ஒழியேன்;
சிவன் ஐம் முகம் உடையான் படை தொடுப்பேன் 'எனத் தெளிந்தான். 6.26.158

அப்பொன்படை மனத்தால் நினைந்து, அர்ச்சித்து அதை, 'அழிப்பாய்
இப்பொன் படைதனை மற்றொரு தொழில் செய்யலை 'என்னா,
துப்பு ஒப்பது ஒர்கணை கூட்டினன் துரந்தான்; இடை தொடரா
எப்பொன்படை எவையும் புக விழுங்குற்றது, ஒர் இமைப்பின். 6.26.159

விண் ஆர்த்தது; மண் ஆர்த்தது, மேலோர் மணிமுரசின்
கண் ஆர்த்தது, கடல் ஆர்த்தது, மழை ஆர்த்தது, கலையோர்
எண் ஆர்த்தது, மறை ஆர்த்தது, விசயம் என இயம்பும்
பெண் ஆர்த்தனள், அறம் ஆர்த்தது, பிறர் ஆர்த்தது பெரிதால். 6.26.160

இலக்குவனது வன்மையைக் கண்டு திகைப்புற்ற இந்திரசித்து தன் வன்மையால் மேலும் அம்புகளைச் செலுத்துதல்

இறு காலையின் உலகு யாவையும் அவிப்பான் இகல் படையை,
மறுகா வகை வலித்தான், அது வாங்கும்படி வல்லான்;
தறெுகாலனின் கொடியோனும், மற்று அதுகண்டு, அகம் திகைத்தான்;
அறுகால்வயக் கவிவீரரும் அரி என்பதை அறிந்தார். 6.26.161

'தெய்வப்படை பழுது உற்றது எனக் கூசுதல் சிதைவால்;
எய் வித்தகம் உளது; அன்னது பிழையாது 'என இசையா,
கைவித்தகம் அதனால் சில கணை வித்தினன்; அவையும்
மொய்வித்தகன் தடந்தோளினும் நுதற் சூட்டினும் மூழ்க. 6.26.162

வெய்யோன் மகன்முதல் ஆகிய விறலோர், மிகு திறலோர்,
கை ஓய்வு இலர், மலைமாரியின் நிருதக் கடல் கடப்பார்;
'உய்யார் 'என வடி வாளிகள் சதகோடிகள் உய்த்தான்.
செய்யோன் அயல் தனிநின்ற தன் சிறுதாதையைச் செறுத்தான். 6.26.163

இலக்குவனது அயலில் நின்ற வீடணனை இந்திரசித்து இகழ்ந்துரைத்தல்

'முரண்தடம் தண்டும் ஏந்தி, மனிசரை முறைமை கூறிப்
பிரட்டரின் புகழ்ந்து, பேதை அடியரின் தொழுது பின்சென்று,
இரட்டுறும் முரசம் என்ன, இசைத்ததே இசைக்கின்றாய் ஐப்
புரட்டுவன் தலையை, இன்று; பழி என ஒழிவென் போலாம். 6.26.164

'விழிபட, முதல்வர் எல்லாம் வெதும்பினர் ஒதுங்கி வீழ்ந்து
வழிபட, உலகம் மூன்றும் அடிப்பட வந்த தேனும்,
அழிபடை தாங்கல் ஆற்றும் ஆடவர், யாண்டும் அஃகாப்
பழிபட வந்த வாழ்வை யாவரே நயக்கற் பாலார்? 6.26.165

'நீர் உள்ளதனையும் உள்ள மீன் என, நிருதர் எல்லாம்
வேர் உளதனையும் வீவர், இராவணனோடு; மீளார்;
ஊர் உளது; ஒருவன் நின்றாய் நீ உளை உறைய; நின்னோடு
ஆர் உளர் அரக்கர் நிற்பார், அரசு வீற்றிருக்க? ஐயா! 6.26.166

'முந்தைநாள், உலகம் தந்த மூர்த்தி வானோர்கட்கு எல்லாம்
தந்தையார் தந்தை யாரைச் செரு இடை சாயத் தள்ளி,
கந்தனார் தந்தை யாரைக் கயிலையோடு ஒருகைக் கொண்ட
எந்தையார் அரசு செய்வது, இப்பெரும் பலம் கொண்டேயோ? 6.26.167

'பனிமலர்த் தவிசின் மேலோன் பார்ப்பன குலத்துக்கு எல்லாம்
தனிமுதல் தலைவன் ஆன உன்னை வந்து அமரர் தாழ்வார்;
மனிதருக்கு அடிமையாய் நீ இராவணன் செல்வம் ஆள்வாய்;
இனி உனக்கு என்னோ, மானம்? எங்கேளாடு அடங்கிற்று அன்றே. 6.26.168

'சொல்வித்தும், பழித்தும், நுங்கை மூக்கினைத் துணிவித்தோரால்,
எல்வித்தும் படைக்கை உங்கள் தமையனை எங்கேளாடும்
கொல்வித்தும், தோற்றுநின்ற கூற்றினார் குலத்தை எல்லாம்
வெல்வித்தும், வாழும் வாழ்வின் வெறுமையே விழுமிது அன்றே? 6.26.169

'எழுதி ஏர் அணிந்த திண்தோள் இராவணன், இராமன் அம்பால்,
புழுதியே பாயல் ஆகப் புரண்டநாள், புரண்டுமேல் வீழ்ந்து,
அழுதியோ? நீயும் கூட ஆர்த்தியோ? அவனை வாழ்த்தித்
தொழுதியோ? யாதோ, செய்யத் துணிந்தனை? விசயத் தோளாய்! 6.26.170

'ஊனுடை உடம்பின் நீங்கி, மருந்தினால் உயிர்வந்து உய்யும்
மானிடர் இலங்கை வேந்தைக் கொல்வரே? நீயும் அன்னான்
தான் உடை செல்வம் துய்க்கத் தகுதியோ? சரத்தினோடும்
வான் இடைப் புகுதி அன்றே, யான் பழி மறுக்கின்! 'என்றான். 6.26.171

வீடணன், மறுமொழி பகர்தல்

அவ் உரை அமையக் கேட்ட வீடணன், அலங்கல் மோலி
செவ்விதின் துளக்கி, மூரல் முறுவலும் தெரிவது ஆக்கி,
'வெவ்விது பாவம்; சாலத் தருமமே விழுமிது; ஐய;
இவ் உரை கேட்டி 'என்னா, இனையன விளம்பல் உற்றான். 6.26.172

'அறம்துணை ஆவது அல்லால், அருநரகு அமைய நல்கும்
மறம்துணை ஆக, மாயாப் பழியொடும் வாழ மாட்டேன்;
துறந்திலேன் மெய்ம்மை; எய்தும் பொய்ம்மையே துறப்பது அல்லால்,
பிறந்திலேன் இலங்கை வேந்தன் பின், அவன் பிழைத்த போதே. 6.26.173

'உண்டிலென் நறவம்; பொய்ம்மை உரைத்திலென்; வலியால் ஒன்றும்
கொண்டிலென்; மாய வஞ்சம் குறித்திலென்; யாரும் குற்றம்
கண்டிலர் என்பால்; உண்டே? நீயிரும் காண்டிர் அன்றே?
பெண்டிரின் திறம்பினாரைத் துறந்தது பிழையிற்று ஆமோ? 6.26.174

"மூவகை உலகும் ஏத்தும் முதலவன், எவர்க்கும் மூத்த
தேவர்தம் தேவன், தேவி கற்பினின் சிறந்துளாளை
நோவன செய்தல் தீது என்று உரைப்ப, நுன் தாதைசீறி
'போ 'எனப் போந்தேன்; இன்று நரகதில் பொருந்துவேனோ? 6.26.175

'வெம்மையின் தருமம் நோக்கா வேட்டதே வேட்டு, வீயும்
உம்மையே புகழும் பூண்க; துறக்கமும் உமக்கே ஆக;
செம்மையில் பொருந்தி, மேலோர் ஒழுக்கினோடு அறத்தைத் தேறும்
எம்மையே பழியும் பூண்க; நரகமும் எமக்கே ஆக. 6.26.176

"அறத்தினைப் பாவம் வெல்லாது " என்னும் அது அறிந்து "ஞானத்
திறத்தினும் உறும் என்று எண்ணி, தேவர்க்கும் தேவைச் சேர்ந்தேன்;
புறத்தினில் புகழே ஆக, பழியொடும் புணர்க, போதச்
சிறப்பு இனிப் பெறுக; தீர்க ' என்றனன், சீற்றம் தீர்ந்தான். 6.26.177

'பெறும் சிறப்பு எல்லாம் என்கைப் பிறைமுக வாளி ஒன்றால்
இறும் சிறப்பு அல்லால், அப்பால் எங்கு இனிப் போவது? 'என்னா,
தறெும் சிறைக் கலுழன் அன்னது ஒருகணை தெரிந்து, செம்பொன்
உறும் சுடர்க்கழுத்தை நோக்கி, நூக்கினான், உருமின் வெய்யோன். 6.26.178

அக் கணை அசனி என்ன அன்று என, ஆலம் உண்ட
முக்கணான் சூலம் என்ன, முடுகிய முடிவை நோக்கி,
'இக்கணத்து இற்றான் 'இற்றான் ' என்கின்ற இமையோர் காண,
கைக்கணை ஒன்றால், வள்ளல், அக்கணை கண்டம் கண்டான். 6.26.179

கோல் ஒன்று துணிதலோடும், கூற்றுக்கும் கூற்றம் அன்னான்,
வேல் ஒன்று வாங்கி விட்டான்; வெயில் ஒன்று விழுவது என்ன,
நாலொன்றும் மூன்றும் ஆன புவனங்கள் நடுங்கலோடும்,
நூல் ஒன்று வரிவிலானும், அதனையும் நுறுக்கி வீழ்த்தான். 6.26.180

'வேல்கொடு கொல்லல் உற்றான் ' என்று, ஒரு வெகுளி பொங்க,
கால்கொடு காலின் கூடிக் கைதொடர் கனகத் தண்டால்,
கோல்கொளும் ஒருவனோடும், கொடித் தடந்தேரில் பூண்ட
பால்கொளும் புரவி எல்லாம் படுத்தினான், துடிப்பு மாற. 6.26.181

அழிந்த தேர்மீது நின்றான் ஆயிர கோடி அம்பு
பொழிந்து, அவன் தோளின் மேலும், இலக்குவன் புயத்தின் மேலும்,
ஒழிந்தவர் உரத்தின் மேலும் உதிர நீர் வாரி ஓதம்
அழிந்து இழிந்து ஓட நோக்கி அண்டமும் இரிய ஆர்த்தான். 6.26.182

ஆர்த்தவன்; அனைய போழ்தின், 'அழிவு இலாத் தேர்கொண்டு அன்றிப்
போர்த்தொழில் வெல்லல் ஆகாது ' என்பது ஓர் பொருளை உன்னி,
பார்த்தவர் இமையா முன்னம் 'விசும்பிடைப் படர்ந்தான் 'என்னும்
வார்த்தையை நிறுத்திப் போனான், இராவணன் மருங்கு புக்கான். 6.26.183
----------------

6.27 – Die Tötung Indrajits

6.27 இந்திரசித்து வதைப் படலம் 9253 – 9323 (71)

இந்திரசித்து வானரர் ஐயுற விண்ணிடைக் கரந்து இராவணனை அடைதல்

விண்ணிடைக் கரந்தான் என்பார், வஞ்சனை விளைக்கும் என்பார்,
கண்ணிடைக் கலங்கி நோக்கி, ஐயுறவு உழக்குங்காலை,
புண் உடை யாக்கைச் செந்நீர் இழிதர, புக்கு நின்ற
எண்ணுடை மகனை நோக்கி, இராவணன் இனைய சொன்னான். 6.27.1

உற்றது சொல் என இராவணன் இந்திரசித்தினை வினவுதல்

'தொடங்கிய வேள்வி முற்றப் பெற்றிலாத் தொழில், நின் தோள்மேல்
அடங்கிய அம்பே என்னை அறிவித்தது; அழிவு இல் யாக்கை
நடுங்கினை போலச் சாலத் தளர்ந்தனை; கலுழன் நண்ணப்
படம்குறை அரவம் ஒத்தாய்; உற்றது பகர்தி 'என்றான். 6.27.2

இந்திரசித்து சொல்வது (9254-9257)

சூழ்வினை மாயை எல்லாம் உம்பியே துடைக்க, சுற்றி
வேள்ியைச் சிதைய நூறி வெகுளியால் எழுந்து வீங்கி,
ஆள்வினை ஆற்றல் தன்னால் அமர்த் தொழில் புக்கு நின்றான்;
தாழ்வு இலாப் படைகள் மூன்றும் தொடுத்தனென்; தடுத்து விட்டான். 6.27.3

'நிலம்செய்து விசும்பும் செய்து, நெடியவன் படை, நின்றானை
வலம்செய்து போயிற்று என்றால், மற்று இனி வலியது உண்டோ?
குலம் செய்த பாவத்தாலே கொடும்பகை தேடிக் கொண்டோம்
சலம்செயின் உலகம் மூன்றும் இலக்குவன் முடிப்பன், தானே. 6.27.4

முட்டிய செருவில் முன்னம் முதலவன் படையை என்மேல்
விட்டிலன், உலகை அஞ்சி; ஆதலால், வென்று மீண்டேன்;
கிட்டிய போதும் காத்தான்; இன்னமும் கிளர்ப்பான் அல்லன்;
சுட்டிய வலியினாலே கோறலைத் துணிந்து நின்றான். 6.27.5

'ஆதலால், "அஞ்சினேன் " என்று அருளலை; ஆசைதான் அச்
சீதைபால் விடுதி ஆயின், அனையவர் சீற்றம் தீர்வர்;
போதலும் புரிவர்; செய்த தீமையும் பொறுப்பர்; உன்மேல்
காதலால் உரைத்தேன் 'என்றான் உலகு எலாம் கலக்கி வென்றான். 6.27.6

இராவணன் சினந்து கூறுதல் (9258-9263)

இயம்பலும் இலங்கை வேந்தன் எயிற்று இளநிலவு தோன்ற,
புயங்களும் குலுங்க நக்கு, 'போர்க்கு இனி ஒழிதி போலாம்!
மயங்கினை; மனிசன் தன்னை அஞ்சினை வருந்தல்; ஐய!
சயம் கொடு தருவென், இன்றே, மனிசரைத் தனு ஒன்றாலே. 6.27.7

'முன்னையோர் இறந்தார் எல்லாம் இப்பகை முடிப்பர் என்றும்,
பின்னையோர், நின்றோர் எல்லாம் வென்றனர் பெயர்வர் என்றும்,
உன்னை "நீ அவரை வென்று தருதி " என்று உணர்ந்தும் அன்றால்;
என்னையே நோக்கி, யான் இந் நெடும்பகை தேடிக் கொண்டேன். 6.27.8

'பேதைமை உரைத்தாய்; பிள்ளாய்! உலகு எலாம் பெயரப், பேராக்
காதை என் புகழினோடு ' நிலைபெற, அமரர் காண,
மீது எழும் மொக்குள் அன்ன யாக்கையை விடுவது அல்லால்,
சீதையை விடுவது உண்டோ, இருபது திண்தோள் உண்டாய்? 6.27.9

'வென்றிலென் என்ற போதும் வேதம் உள்ளளவும், யானும்
நின்றுளென் அன்றோ, மற்று அவ் இராமன் பேர் நிற்கும் ஆயின்?
பொன்றுதல் ஒருகாலத்தும் தவிருமோ? பொதுமைத்து அன்றோ?
இன்று உளார் நாளை மாள்வார்; புகழுக்கும் இறுதி உண்டோ? 6.27.10

'விட்டனென், சீதை தன்னை என்றலும் விண்ணோர் நண்ணி,
கட்டுவது அல்லால், என்னை யான் எனக் கருதுவாரோ?
"பட்டனென் " என்றபோதும், எளிமையின் படுகிலேன்யான்
எட்டினோடு இரண்டும் ஆன திசைகளை எறிந்து வென்றேன். 6.27.11

'சொல்லி என், பலவும்? நீ நின் இருக்கையைத் தொடர்ந்து, தோளில்
புல்லிய பகழி வாங்கி, போர்த்தொழில் சிரமம் போக்கி,
எல்லியும் கழித்தி 'என்னா, எழுந்தனன்; எழுந்து பேழ்வாய்
வல்லியம் முனிந்தால் அன்னான், 'வருக, தேர் தருக! 'என்றான். 6.27.12

போர்க்கு எழுந்த இராவணனைத் தடுத்து இந்திரசித்து போர்க்குப் புறப்படுதல்

எழுந்தவன் தன்னை நோக்கி, இணை அடி இறைஞ்சி, 'எந்தாய்!
ஒழிந்து அருள், சீற்றம்; சொன்ன உறுதியைப் பொறுத்தி; யான்போய்க்
கழிந்தனென் என்ற பின்னர், 'நல்லவா காண்டி 'என்னா
மொழிந்து தன் தெய்வத் தேர்மேல் ஏறினன், முடியலுற்றான். 6.27.13

இந்திரசித்து தானம் செய்து விட்டு இராவணனை நோக்கிக் கண்ணீர் பெருக்கிக்கொண்டு போதல்

படைக்கலம், விஞ்சை மற்றும் படைத்தன பலவும், தன்பால்
அடைக்கலம் ஆகத் தேவர் அளித்தன, எல்லாம் வாங்கி,
கொடைத்தொழில் வேட்டோர்க்கு எல்லாம்
கொடுத்தனன் கொடியோன் தன்னைக்
கடைக் கணால் நோக்கி நோக்கி, இருகண் நீர் கலுழப் போனான். 6.27.14

தன்னைத் தொடர்ந்த அரக்கியரை விலக்கி மன்னனைக் காக்குமாறு இந்திரசித்து கூறித் தேற்றுதல்

இலங்கையின் நிருதர் எல்லாம் எழுந்தனர், விரைவின் எய்தி,
'விலங்கல் அம் தோளாய்! நின்னைப் பிரிகலம்; விளிதும் 'என்னா
வலங்கொடு தொடர்ந்தார் தம்மை, 'மன்னனைக் காமின்; யாதும்
கலங்கலிர்; இன்றே, சென்று, மனிசரைக் கடப்பல் 'என்றான். 6.27.15

தன்னைச் சூழ்ந்துகொண்டு வருந்தும் அரக்கியரை நீங்கி இந்திரசித்து அரிதிற் செல்லுதல்

வணங்குவார், வாழ்த்துவார், தன் வடிவனை நோக்கித் தம் வாய்
உணங்குவார், உயிர்ப்பார், உள்ளம் உருகுவார், வெருவலுற்றுக்
கணங்குழை மகளிர் ஈண்டி இரைத்தவர், கடைக்கண் என்னும்
அணங்கு உடை நெடுவேல் பாயும் அமர்கடந்து, அரிதின் போனான். 6.27.16

இலக்குவன் இந்திரசித்தின் தேர் வரும் ஓசை கேட்டல்

ஏயினன் இன்னன் ஆக, இலக்குவன் எடுத்த வில்லான்,
சேய் இரு விசும்பை நோக்கி 'வீடண! தீயோன் அப்பால்
போயினன் ஆதல் வேண்டும்; புரிந்திலன் ஒன்றும் 'என்பான்,
ஆயிரம் புரவி பூண்ட தேரின் பேர் அரவம் கேட்டான். 6.27.17

இந்திரசித்தின் தேர் வருதல்

குன்று இடை நெரிதர, வடவரையின் குவடு உருள்வது என முடுகுதொறும்
பொன்திணி கொடியது, இடி உருமின் அதிர்குரல் முரல்வது, புனைமணியின்
மின்திரள் சுடரது, கடல் பருகும் வட அனல் வெளி உற வருவது எனச்
சென்றது, திசை திசை உலகு இரிய திரிபுவனமும் உறுதனி இரதம். 6.27.18

கடல்மறுகிட, உலகு உலைய, நெடுங் கரி இரிதர, எதிர் கவிகுலமும்
குடல் மறுகிட, மலை குலைய, நிலம் குழியொடு கிழிபட, வழிபடரும்
இடம் மறுகிய பொடி முடுகிடவும், இருள் உளது என எழும் இகல் அரவின்
படம்மறுகிட, எதிர்விரவியது அவ் இருள்பகல் உறவரு பகை இரதம். 6.27.19

இந்திரசித்தும் இலக்குவனும் பொருதல்

ஆர்த்தது நிருதர்தம் அனிகம்; உடன், அமரரும்
வெருவினர்; கவிகுலமும்
வேர்த்தது, வெருவலொடு அலம்வரலால், விடுகணை
சிதறினன்; அடுதொழிலோன்,
தீர்த்தனும், அவன் எதிர்முடுகி; நெடுந் திசைசெவிடு
எறிதர, விசைகெழுதிண்
போர்த்தொழில் புரிதலும், உலகு கடும் புகையொடு சிகை
அனல் பொதுளியதால 6.27.20

வீடணன் இலக்குவனுக்கு ஆலோசனை கூற அவன் கடும்போர் புரிதல்

வீடணன் அமலனை, 'விறல் கெழு போர்
விடலையை இனி இடைவிடல் உளதேல்,
சூடலை, துறுமலர் வாகை 'எனத் தொழுதனன்;
அ(வ்) அளவில் அழகனும் அக்
கோடு அணை வரிசிலை உலகு உலைய, குலம்
வரை விதிர்பட, நிலவரையில்
சேடனும் வெருவுற, உரும் உறழ் திண் தறெுகணை
முறைமுறை சிதறினனால். 6.27.21

ஆயின அளவையின் அனல்முகவாய் அருகணை
அவன்விட, இவன்விட, அத்
தீயினும் எரிவன உயிர்பருக, சிதறின
கவிகேளாடு இன நிருதர்;
போயின போயின திசை நிறையப் புரள்பவர்
முடிவிலர்; பொருதிறலோர்
ஏயினர், ஒருவரை ஒருவர் குறித்து, எரிகணை
சொரிவன இருமழைபோல். 6.27.22

அற்றன, அனல்விழி நிருதன் வழங்கு அடுகணை
இடை இடை : அடல் அரியின்
கொற்றவன் விடுகணை முடுகி, அவன் உடல்பொதி
குருதிகள் பருகின கொண்டு
உற்றன; ஒளிகிளர் கவசம் நுழைந்து உறுகில;
தறெுகில அனுமன் உடல்;
புற்றிடை அரவு என நுழைய நெடும் பொருசரம்
அவன் அவை உணர்கிலனால் 6.27.23

ஆயிடை, இளையவன், விடம் அனையான் அவன்
இடு கவசமும் அழிவுபடத்
தூயினன், அயில்முக விசிகம் : நெடுந் தொளைபட,
விழிகனல் சொரிய, முனிந்து,
ஏயின நிருதனது எரிகணைதான் இடன் இல
படுவன இடை இடை வந்து
ஓய்வு உறுவன; அது தெரிவு உறலால், உரறினர்
இமையவர், உவகையினால். 6.27.24

இந்திரசித்து விட்ட வேலினை இலக்குவன் துணித்தல்

'வில்லினின் வெல்லுதல் அரிது 'எனலால், வெயிலினும்
அனல் உமிழ் அயில், விரைவில்
செல் என, மிடல் கொடு கடவினன்; மற்று அது
திசைமுகன் மகன் உதவியதால்;
எல்லினும் வெளிபட எதிர்வது கண்டு, இளையவன்
எழுவகை முனிவர்கள்தம்
சொல்லினும் வலியது ஓர் சுடுகணையால், நடு
இரு துணிபட உரறினனால். 6.27.25

ஆணியின் நிலை என விசிகம் நுழைந்து ஆயிரம்
உடல்புக, அழிபடு செஞ்
சோணிதம் நிலம் உற உலறிடவும், தொடுகணை
விடுவன மிடல்கெழு திண்
பாணிகள் கடுகின முடுகிடலும், பகலவன்
மருமகன், அடுகணைவன்
தூணியை உரும் உறழ் பகழிகளால் துணிபட,
முறைமுறை சிதறினனால். 6.27.26

இலக்குவன் இந்திரசித்தின் தேர்ப்பாகனை வீழ்த்தல்

'தேர் உளது எனின், இவன்வலி தொலையான் '
எனும் அது தெரிவு உற, உணர் உறுவான்
'போர் உறு புரவிகள் படுகிலவால்; புனைபிணி
துணிகில, பொருகணையால்;
சீரிது, பெரிது, இதன் நிலைமை 'எனத் தெரிபவன்
ஒரு சுடு தறெுகணையால்,
சாரதி மலை புரை தலையை நெடுந் தரையிடை
இடுதலும் நிலை திரிய. 6.27.27

பாகனை இழந்த தேரின் நிலைமை

உய்வினை ஒருவன் தூண்டாது உலத்தலின், தவத்தை நண்ணி,
அய்வினை நலிய நைவான் அறிவிற்கும் உவமை ஆகி,
மெய்வினை அமைந்த காமம் விற்கின்ற விரகில் தோலாப்
பொய்வினை மகளிர் கற்பும் போன்றது அப் பொலம் பொன் திண்தேர். 6.27.28

இந்திரசித்து தன் மார்பில் தைத்திருந்த அம்புகளைப் பறித்து வீசுதல்

துள்ளுபாய் புரவித் தேரும் முறை முறை தானே தூண்டி,
அள்ளினன் பறிக்கும் தன்பேர் ஆகமே ஆவம் ஆக,
வள்ளல்மேல் அனுமன்தன்மேல் மற்றையோர் மல்திண் தோள்மேல்,
உள்ளுறப் பகழி தூவி, ஆர்த்தனன் எவரும் உட்க. 6.27.29

இந்திரசித்தின் வீரச் செயல் கண்டு தேவர் மலர் சிந்துதல்

வீரர் என்பார்கட்கு எல்லாம் முன்னிற்கும் வீரர் வீரன்
பேரர் என்பார்கள் ஆகும் பெற்றியிப் பெற்றித்து ஆமே?
சூரர் என்று உரைக்கற் பாலார் துஞ்சும் போது உணர்வின் சோராத்
தீரர் என்று அமரர் செப்பிச் சிந்தினார், தெய்வப் பொன் பூ. 6.27.30

இந்திரசித்தின் செயல் கண்டு இலக்குவன் வியத்தல்

'எய்தவன் பகழி எல்லாம் பறித்து, இவன் என்மேல் எய்யும்;
கய்தடுமாறாது; உள்ளம், உயிர் இனம் கலங்காது யாக்கை
மொய்கணை கோடி கோடி மொய்க்கவும் இளைப்பு ஒன்று இல்லான்;
அய்யனும், 'இவனோடு எஞ்சும் ஆண்தொழில் ஆற்றல் 'என்றான். 6.27.31

இவன் பகலில் அல்லால் இறவான் என வீடணன் இலக்குவனுக்குச் சொல்லுதல்

'தேரினைக் கடாவி, வானில் செல்லினும் செல்லும்; செய்யும்
போரினைக் கடந்து மாயம் புணர்க்கினும் புணர்க்கும்; போய் அக்
காரினைக் கலந்து வஞ்சம் கருதினும் கருதும்; காண்டி,
வீர; மெய்; பகலின் அல்லால், விளிகிலன் இருளின், வெய்யோன். 6.27.32

இலக்குவன் இப்பொழுதே வெல்வேன் எனல்

என்று எடுத்து இலங்கை வேந்தற்கு இளையவன் இயம்ப, 'இன்னே
பொன்றுவது அல்லால் அப் பால் இனி ஒரு போக்கும் உண்டோ?
சென்றுழிச் செல்லும் அன்றே தறெுகணை; வலியில் தீர்ந்தான்;
வென்றி இப்பொழுதே கோடும்; காண் 'என விளம்பும் எல்லை. 6.27.33

சூரியன் உதித்தல்

செம்புனல் சோரிச் செக்கர் திசை உறச் செறிகையாலும்,
அம்பு என உற்ற கொற்றத்து ஆயிரம் கதிர்களாலும்,
வெம்புபொன் தேரில் தோன்றும் சிறப்பினும், அரக்கன் வெய்யோன்
உம்பரில் செல்கின்றான் ஒத்து உதித்தனன் அருக்கன் உப்பால். 6.27.34

அமரரின் மகிழ்ச்சி

விடிந்தது பொழுதும்; வெய்யோன் விளங்கினன், உலகம் மீதா
இடுஞ்சுடர் விளக்கம் என்ன, அரக்கரின் இருளும் வீய,
'கொடுஞ்சின மாயச் செய்கை வலியொடுங் குறைந்து குன்ற
முடிந்தனன், அரக்கன் 'என்னா, முழங்கினர் அமரர் எல்லாம். 6.27.35

வீடணன் இந்திரசித்தின் வரத்தைப் பற்றிக் கூறியது

'ஆர் அழியாத சூலத்து அண்ணல் தன் அருளின் ஈந்த
தேர் அழியாத போதும், சிலை கரத்து இருந்த போதும்,
போர் அழியான், இவ் வெய்யோன்; புகழ் அழியாத பொன் தோள்
வீர! இது ஆணை 'என்றான் வீடணன், விளைவது ஓர்வான். 6.27.36

இலக்குவன், கடை ஆணியை நீக்கித் தேரைப் பிரித்தல்

'பச்சை வெம்புரவி வீயா; பல இயல் சில்லி பாரில்
நிச்சயம் அற்று நீங்கா ' என்பது நினைந்து, வில்லின்
விச்சையின் கணவன் ஆனான், வின்மையால், வயிரம் இட்ட
அச்சினோடு ஆழி வெவ்வேறு ஆக்கினான், ஆணி நீக்கி. 6.27.37

தேர் அழிந்தது; குதிரைகள் ஆற்றாமல் வருந்துதல்

மணிநெடுந் தேரின் கட்டு விட்டு, அது மறிதலோடும்,
அணிநெடும் புரவி எல்லாம் ஆற்றல ஆய அன்றே
திணிநெடு மரம் ஒன்று ஆழிவாள் மழுத் தாக்க, சிந்திப்
பணை நெடு முதலும் நீங்க, பாங்கு உறை பறவை போல. 6.27.38

இந்திரசித்து விண்மிசைச் சென்று மறைந்து ஆரவாரித்தல்

அழிந்த தேர்த் தட்டில் நின்றும் அங்குள்ள படையை அள்ளிப்
பொழிந்தனன்; இளைய வீரன் கணைகளால் துணித்துப் போக்க,
மொழிந்தது ஓர் அளவின் விண்ணை முட்டினான், உலகம் மூன்றும்
கிழிந்தன என்ன ஆர்த்தான்; கண்டிலர், ஓசை கேட்டார். 6.27.39

இந்திரசித்து மறைந்து நின்று சொரிந்த கன்மாரியால் வானரர் அழிதல்

மல்லின் மாமாரி அன்ன தோளினான், மழையின் வாய்ந்த
கல்லின்மா மாரி, பெற்ற வரத்தினால், சொரியுங் காலை,
செல்லும் வான் திசைகள் ஓரார், சிரத்தினோடு உடல்கள் சிந்திப்
புல்லினார் நிலத்தை, நின்ற வானர வீரர், போகார். 6.27.40

இலக்குவன் விண்ணை நோக்கி அம்புகளை எய்தல்

காண்கிலன், கல்லின் மாரி அல்லது, காளை வீரன்,
சேண்கலந்து ஒளித்து நின்ற செய்கையால், திசைகள் எங்கும்
மாண் கலந்து அளந்த மாயன் வடிவு என, முழுதும் வௌவ,
ஏண்கலந்து அமைந்த வாளி ஏவினான், இடைவிடாமல். 6.27.41

இந்திரசித்து மேகக் கூட்டத்திடையே காணப்படுதல்

மறைந்தன திசைகள் எங்கும்; மாறுபோய் மலையும் ஆற்றல்
குறைந்தனன்; இருண்ட மேகக் குழாத்திடைக் குருதிக் கொண்மூ
உறைந்துளது என்ன நின்றான் உருவினை, உலகம் எல்லாம்
நிறைந்தவன் கண்டான்; காணா, இனையது ஓர் நினைப்பன் ஆனான். 6.27.42

இந்திரசித்தின் வில்லேந்திய கையை இலக்குவன் கொய்தல்

'சிலை அறாது எனினும், மற்று அத் திண்ணியோன் திரண்ட தோளாம்
மலை அறாது ஒழியாது 'என்னா, வரிசிலை ஒன்று வாங்கி,
கலை அறாத் திங்கள் அன்ன வாளியால், கையைக் கொய்தான்,
விலை அறா மணிப்பூணோடும், வில்லொடும், நிலத்து வீழ. 6.27.43

இந்திரசித்தின் கை அற்றுத் தரையில் வீழ்தல்

பாக வான் பிறைபோல் வெவ்வாய்ச் சுடுகணை படுதலோடும்,
மாக வான் தடக்கை மண்மேல் விழுந்தது மணிப்பூண் மின்ன
வேக வான் கடுங்கால் எற்ற முற்றும்போய் விளியும் நாளில்
மேகம் ஆகாயத்து இட்ட வில்லொடும் வீழ்ந்தது என்ன. 6.27.44

துணிபட்ட இந்திரசித்தின் கை தரையில் விழுந்து துடித்தல்

படித் தலம் சுமந்த நாகம் பாக வான் பிறையைப் பற்றிக்
கடித்தது போல, கோல விரல்களால் இறுகக் கட்டிப்
பிடித்த வெஞ்சிலையினோடும், பேர் எழில் வீரன் பொன் தோள்
துடித்தது, மரமும் கல்லும் துகள்படக் குரங்கும் துஞ்ச. 6.27.45

இந்திரசித்தின் கை யற்று வீழ்ந்தது கண்ட தேவர்கள் வியப்பு

அந்தரம் அதனில் நின்ற வானவர், 'அருக்கன் வீழா
சந்திரன் வீழா, மேரு மால்வரை தகர்ந்து வீழா;
இந்திர சித்தின் பொன் தோள் இற்று இடை வீழ்ந்தது என்றால்,
எந்திரம் அனைய வாழ்க்கை இனிச் சிலர் உகந்து என்? 'என்றார். 6.27.46

இந்திரசித்தின் கையற்றது கண்டு அரக்கர் கலங்குதல்

மொய் அறமூர்த்தி அன்ன மொய்ம்பினான் அம்பினால், அப்
பொய் அறச் சிறிது என்று எண்ணும் பெருமையான் புதல்வன், பூத்த
மை அறக் கரிது என்று எண்ணும் மனத்தினான், வயிரம் அன்ன,
கை அற, தலை அற்றார் போல் கலங்கினார், நிருதர் கண்டார். 6.27.47

வானர சேனை அரக்கர் சேனையை அழித்தல்

அன்னது நிகழும் வேலை, ஆர்த்து எழுந்து, அரியின் வெள்ளம்
மின் எயிற்று அரக்கர் சேனை யாவரும் மீளாவண்ணம்,
கொல் நகக் கரத்தால், பல்லால், மரங்களால், மானக் குன்றால்,
பொன்நெடு நாட்டை எல்லாம் புதுக்குடி ஏற்றிற்று அன்றே. 6.27.48

இந்திரசித்தின் வீரப் பேச்சு

காலம் கொண்டு எழுந்த மேகக் கருமையான், 'செம்மை, காட்டும்
ஆலம் கொண்டு இருண்ட கண்டத்து அமரர் கோன் அருளின் பெற்ற
சூலம் கொண்டு எறிவல் 'என்று தோன்றினான், 'பகையில் தோற்ற
மூலம் கொண்டு உணரா நின்னை முடித்து அன்றி முடியேன் 'என்றான். 6.27.49

இந்திரசித்தின் தோற்றங்கண்ட இலக்குவன் அவனைக் கொல்லத் துணிதல்

காற்று என, உரும் ஏறு என்ன, கனல் என, கடைநாள் உற்ற
கூற்றம் ஓர் சூலங்கொண்டு குறுகியது என்ன, கொல்வான்
தோற்றினான்; அதனைக் காணா, 'இனி, தலைதுணிக்கும் காலம்
ஏற்றது 'என்று, அயோத்தி வேந்தற்கு இளையவன் இதனைச் செய்தான். 6.27.50

இந்திரசித்தின்மேல் பிறைவாய் அம்பினை எய்தல்

'மறைகளே தேறத்தக்க, வேதியர் வணங்கற் பால
இறையவன் இராமன் என்னும் நல் அறமூர்த்தி என்னின்,
பிறை எயிற்று இவனைக் கோறி ' என்று, ஒரு பிறைவாய் வாளி
நிறை உற வாங்கி விட்டான் உலகு எலாம் நிறுத்தி நின்றான். 6.27.51

இலக்குவன் விடுத்த அம்பு இந்திரசித்தின் தலையை யறுத்துத் தள்ளுதல்

நேமியும், குலிச வேலும், நெற்றியின் நெருப்புக் கண்ணான்
நாம வேல் தானும், மற்ற நான்முகன் படையும், நாண,
தீ முகம் கதுவ ஓடிச் சென்று, அவன் சிரத்தைத் தள்ளி,
பூமழை அமரர் சிந்த, பொலிந்தது அப் பகழிப் புத்தேள். 6.27.52

இந்திரசித்தின் உடம்பு தரையில் வீழ்தல்

அற்ற வன்தலை மீது ஓங்கி, அண்டம் உற்று அணுகா முன்னம்,
பற்றிய சூலத்தோடும் உடன்நிறை பகழியோடும்,
எற்றிய காலக் காற்றில், மின்னொடும் இடியினோடும்
சுற்றிய புயல் வீழ்ந்து என்ன, வீழ்ந்தது, சோரன் யாக்கை. 6.27.53

இந்திர சித்தின் தலை தரையில் வீழ்தல்

விண்தலத்து இலங்கு திங்கள் இரண்டொடும் மின்னு வீசும்
குண்டலத் துணைகேளாடும் கொந்தளக் குஞ்சிச் செங்கேழ்ச்
சண்டவெங் கதிரின் கற்றைத் தழையொடும் இரவிதான் இம்
மண்தலம் வீழ்ந்தது என்ன வீழ்ந்தது தலையும் மண்மேல். 6.27.54

இந்திரசித்து வீழ்ந்ததும் அரக்கர்படை இரிந்தோடுதல்

உயிர் புறத்து உற்ற காலை உள்நின்ற உணர்வினோடும்
செயிர் அறு பொறியும் அந்தக் கரணமும் சிந்துமாபோல்
அயில் எயிற்று அரக்கர் உள்ளார், ஆற்றலர் ஆகி, ஆன்ற
எயில் உடை இலங்கை நோக்கி, இரிந்தனர், படையும் விட்டார். 6.27.55

தேவர்கள் ஆடையை வீசி ஆரவாரித்தல்

வில்லாளர் ஆனார்க்கு எல்லாம் மேலவன் விளிதலோடும்
'செல்லாது அவ் இலங்கை வேந்தற்கு அரசு, எனக் களித்த தேவர்
எல்லாரும் தூசு வீசி ஏறிட ஆர்த்த போது,
கொல்லாத விரதத்தார்தம் கடவுளர் கூட்டம் ஒத்தார் 6.27.56

முதல் தேவர்கள் தரையிடைத் தோன்றி நிற்றல்

வரந்தரு முதல்வன், மற்றை மான்மறிக் கரத்து வள்ளல்,
புரந்தரன் முதல்வர் ஆய, நான்மறைப் புலவர், பாரில்
நிரந்தரம் தோன்றி நின்றார்; அருளினால் நிறைந்த நெஞ்சர்
கரந்திலர் அவரை யாக்கை; கண்டன குரங்கும் கண்ணால். 6.27.57

'அறந்தலை நின்றார்க்கு இல்லை அழிவு 'எனும் அறிஞர் வார்த்தை
சிறந்தது சரங்கள் பாயச் சிந்திய சிரத்த ஆகி,
பறந்தலை அதனில் மற்று அப் பாதக அரக்கன் கொல்ல,
இறந்தன கவிகள் எல்லாம் எழுந்தன, இமையோர் ஏத்த. 6.27.58

அங்கதன் இந்திரசித்தின் தலையை முன்தூக்கிச் செல்ல இலக்குவன் அனுமன் தோள்மேல் செல்லுதல்

ஆக்கையின் நின்று வீழ்ந்த அரக்கன்தன் தலையை அம்கை
தூக்கினன், உள்ளம் கூர்ந்த வாலி சேய் தூசி செல்ல,
மேக்கு உயர்ந்து அமரர் வெள்ளம் அள்ளியே தொடர்ந்து வீசும்
பூக்கிளர் பந்தர் நிழல், அனுமன்மேல் இளவல் போனான். 6.27.59

அங்கதன் கையில் இந்திரசித்தின் தலையைக் கண்ட இந்திரன் மகிழ்ச்சி

வீங்கிய தோளன், தேய்ந்து மெலிகின்ற பழியன், மீதுற்று
ஓங்கிய முடியன், திங்கள் ஒளிபெறும் முகத்தன், உள்ளால்
வாங்கிய துயரன், மீப்போய் வளர்கின்ற புகழன், வந்துற்று
ஓங்கிய உவகை யாளன், இந்திரன், உரைக்கலுற்றான். 6.27.60

இந்திரன் மகிழ்ச்சி மொழி (9312-9313)

"எல்லிவான் மதியின் உற்ற கறை என, என்மேல் வந்து
புல்லிய வடுவும் போகாது என்று அகம் புலம்புகின்றேன்.
வில்லியர் ஒருவர் நல்க, துடைத்து உறும் வெறுமை தீர்ந்தேன்;
செல்வமும் பெறுதற்கு உண்டோ குறை? இனிச் சிறுமை யாதோ? 6.27.61

சென்று அலை ஆழி தொட்டோர் சேய் அருள் சிறுவன் செம்மல்,
வென்று அலைத்து என்னை ஆர்த்துப் போர்த்தொழில் கடந்த வெய்யோன்,
தன்தலை எடுப்பக் கண்டு, தானவர் தலைகள் சாய,
என் தலை எடுக்கலானேன்; இனிக்குடை எடுப்பேன் 'என்றான் 6.27.62

இராமன் அருகிலுள்ளோர் அங்கதனைப் புகழ்தல்

'வான்தலை எடுக்க, வேலை மண்தலை எடுக்க, வானோர்
கோன்தலை எடுக்க, வேதக் குலம் தலை எடுக்க, குன்றாத்
தேன்தலை எடுக்கும் தாராய்! தேவரை வென்றான் தீய
ஊன்தலை எடுத்தாய், நீ 'என்று உரைத்தனர் உவகை மிக்கார். 6.27.63

இராமன் இலக்குவன் வரவை எதிர்நோக்கியிருத்தல்

வரதன், போய் மறுகாநின்ற மனத்தினன், 'மாயத்தோனைச்
சரதம் போர் வென்று மீளும், தருமமே தாங்க 'என்பான்,
விரதம் பூண்டு, உயிரினோடும் தன்னுடை மீட்சி நோக்கும்
பரதன் போன்று இருந்தான், தம்பி வருகின்ற பரிவு பார்த்து. 6.27.64

மீளும் தம்பியைப் பார்த்து இராமன் கண்ணீர் சொரிதல்

வன்புலம் கடந்து மீளும் தம்பிமேல் வைத்த மாலைத்
தன்புல நயனம் என்னும் தாமரை சொரியும் தாரை,
அன்புகொல்? அழு கணீர்கொல்? ஆனந்த வாரியே கொல்?
என்புகள் உருகிச் சோரும் கருணைகொல்? யார் அது ஓர்வார்? 6.27.65

இராமன் திருவடியில் இந்திரசித்தின் தலையை வைத்தல்

விழுந்து இழி கண்ணின் நீரும், உவகையும், களிப்பும், வீங்க,
எழுந்து எதிர் வந்த வீரன் இணை அடி முன்னர் இட்டான்
கொழுந்து எழும் செக்கர்க் கற்றை வெயில்விட, எயிற்றின் கூட்டம்
அழுந்துற மடித்த பேழ்வாய்த் தலை அடி உறை ஒன்றாக. 6.27.66

இந்திரசித்தின் தலையினை நோக்கிய இராமனது மகிழ்ச்சி நிலை

தலையினை நோக்கும்; தம்பி கொற்றவை தழீஇய பொன்தோள்
மலையினை நோக்கும்; நின்ற மாருதி வலியை நோக்கும்;
சிலையினை நோக்கும்; தேவர் செய்கையை நோக்கும்; செய்த
கொலையினை நோக்கும்; ஒன்றும் உரைத்திலன், களிப்புக் கொண்டான். 6.27.66

தன் தாளின் மேல் வணங்கிய தம்பியை இராமன் தழுவிக் கொள்ளுதல்

காள மேகத்தைச் செக்கர் கலந்து என, கரிய குன்றின்
நாள்வெயில் பரந்தது என்ன, நம்பி தன் தம்பி மார்பில்
தோளின்மேல் உதிரச் செங் கேழ்ச் சுவடு தன் உருவில் தோன்ற,
தாளின்மேல் வணங்கினானைத் தழுவினன், தனித்து ஒன்று இல்லான். 6.27.68

தம்பியை இராமன் பாராட்டுதல்

கம்ப மதத்துக் களியானைக் காவல் சனகன் பெற்றெடுத்த
கொம்பும் என்பால் இனிவந்து குறுகினாள் என்று அகம்குளிர்ந்தேன்;
வம்பு செறிந்த மலர்க்கோயில் மறையோன் படைத்த மாநிலத்தில்,
"தம்பி உடையான் பகை அஞ்சான் " என்னும் மாற்றம் தந்தனையால். 6.27.69

தம்பியைப் பன்முறை தழுவுதல்

தூக்கிய தூணி வாங்கி, தோெளாடு மார்பைச் சுற்றி
வீக்கிய கவச பாசம் ஒழித்து, அது விரைவின் நீக்கி,
தாக்கிய பகழிக் கூர்வாய் தடிந்த புண் தழும்பும் இன்றிப்
போக்கினன் தழுவிப் பல்கால், பொன்தடந் தோளின் ஒற்றி. 6.27.70

இராமன் வீடணன் உதவியைப் புகழ்தல்

'ஆடவர் திலக! நின்னால் அன்று! இகல் அனுமன் என்னும்
சேடனால் அன்று; வேறு ஓர் தெய்வத்தின் சிறப்பும் அன்று;
வீடணன் தந்த வென்றி, ஈது 'என விளம்பி மெய்ம்மை,
ஏடு அவிழ் அலங்கல் மார்பன் இருந்தனன், இனிதின், இப்பால். 6.27.71
---------------

6.28 – Ravanas Trauer

6.28 இராவணன் சோகப் படலம் 9324 – 9384 (61)

தூதுவர் இராவணனிடம் சொல்ல ஓடுதல்

ஓத ரோதன வேலை கடந்துளார்
பூதரோதரம் புக்கென போர்த்து இழி
சீதரோதக் குருதித் திரை ஒரீஇ
தூதர் ஓதவெங் காலின் துதைந்துளார். 6.28.1

தூதுவர் இராவணனை அடைதல்

அன்றில் அம் கரும் பேடைகள் ஆம் என
முன்றில் எங்கும் அரக்கியர் மொய்த்து அழ
'இன்று இலங்கை அழிந்தது 'என்று ஏங்குவார்
சென்று இலங்கு ஐயில் தாதையைச் சேர்ந்துளார். 6.28.2

தூதுவர் இராவணனிடம் இந்திரசித்து இறந்ததைத் தெரிவித்தல்

பல்லும் வாயும் மனமும் தம் பாதமும்
நல் உயிர்ப் பொறையோடு நடுங்குவார்
'இல்லை ஆயினன்; உன்மகன் இன்று 'எனச்
சொல்லினார் பயம் சுற்றத் துளங்குவார். 6.28.3

வானவர் முதலோர் ஓடி ஒளிதல்

மாடு இருந்தவர் மாதவர் வானவர்
ஆடல் நுண்ணிடையார் மற்றும் யாவரும்
'வீடும் 'இன்று இவ் உலகு 'என விம்முவார்.
ஓடி எங்கணும் சிந்தி ஒளித்தனர். 6.28.4

சொன்ன தூதுவரை இராவணன் வாளால் வீசுதல்

சுடர்க் கொழும்புகை தீவிழி தூண்டிட
தடற்று வாள் உருவித் தரும் தூதரை
மிடற்று வீசல் உறா விழுந்தான் அரோ
கடல் பெருந்திரைபோல் கரம் சோரவே. 6.28.5

இராவணன் கண் தீ உகுத்தல்

'வாய்ப் பிறந்தும் உயிர்ப்பின் வளர்ந்தும் வான்
காய்ப்பு உறும் தறு கண்ணிடைக் காந்தியும்
போய்ப் பிறந்து இவ் உலகைப் பொதியும்வெந்
தீப் பிறந்துளது இன்று 'எனச் செய்ததால். 6.28.6

படம்பிறங்கிய பாந்தளும் பாரும் பேர்ந்து
இடம்பிறங்கி வலம் பெயர்ந்து ஈடு அற
உடம்பு இறங்கிக் கிடந்து உழைத்து ஓங்கு தீ
விடம் பிறந்த கடல் என வெம்பினான். 6.28.7

திருகு வெஞ்சினத் தீநிகர் சீற்றமும்
பெருகு காதலும் துன்பும் பிறழ்ந்திட
இருபது என்னும் எரிபுரை கண்களும்;
உருகு செம்பு என ஓடியது ஊற்றும்நீர். 6.28.8

இராவணன் பற்களைக் கடித்துக்கொண்டு கைகளால் தரையை மோதல்

கடித்த பற்குலம் கற்குலம் கண் அற
இடித்த காலத்து உரும் என எங்கணும்
அடித்த கைத் தலம் அம் மலை ஆழிநீர்
வெடித்த வாய்தொறும் பொங்கின மீச்செல. 6.28.9

இராவணன் வாய்திறந்து அரற்றல்

'மைந்தவோ! 'எனும் : மாமகனே! 'எனும்;
'எந்தையோ! 'எனும் 'என் உயிரே! 'எனும்
'உந்தினேன் உனை யான் உளனே 'எனும்
வெந்த புண்ணிடை வேல்பட்ட வெம்மையான். 6.28.10

'புரந்தரன் பகை போயிற்று அன்றோ! 'எனும்;
'அரந்தை வானவர் ஆர்த்தனரோ! 'எனும்;
'கரந்தை சூடியும் பாற்கடல் கள்வனும்;
நிரந்தரம் பகை நீங்கினரோ! 'எனும். 6.28.11

நீறு பூசியும் நேமி அம் கையனும்
மாறு குன்றொடு வேலை மறைந்துளார்
ஊறு நீங்கினராய் உவணத்தினோடு
ஏறும் ஏறி உலாவுவர் என்னுமால். 6.28.12

'வான மானமும் வானவர் ஈட்டமும்
போன போன திசை இடம்புக்கன
தானம் ஆனவை சார்கில; சார்குவது
ஊன மானிடர் வென்றி கொண்டோ? 'எனும். 6.28.13

'கெட்ட தூதர் கிளத்தினர் பொய்; ஒரு
கட்ட மானிடன் கொல்ல என்காதலன்
பட்டு ஒழிந்தனனே? 'எனும்; பன்முறை
விட்டு அழைக்கும் உழைக்கும் வெதும்புமால். 6.28.14

எழும்; இருக்கும்; இரைக்கும்; இரக்கம் உற்று
அழும்; அரற்றும்; அயர்க்கும்; வியர்க்கும்; போய்
விழும்; விழிக்கும்; முகிழ்க்கும்; தன் மேனியால்
உழும் நிலத்தை; உருளும்; புரளுமால். 6.28.15

இராவணனுடைய ஒவ்வொரு தலையும் சொல்வன

'அய்யனே! 'எனும் ஓர்தலை; 'யான் இனம்
செய்வெனே அரசு! 'என்னும் அங்கு ஓர்தலை;
'கய்யனேன். உனைக் காட்டிக் கொடுத்து நான்
உய்வெனே! 'என்ன உரைக்கும் அங்கு ஓர்தலை. 6.28.16

'எழுவின் கோலம் எழுதிய தோள்களால்
தழுவிக் கொள்ளலையோ 'எனும் ஓர்தலை;
'உழுவைப் போத்தை உழை உயிர் உண்பதே!
செழுவில் சேவகனே! 'எனும் ஓர்தலை. 6.28.17

'நீலம் காட்டிய கண்டனும் நேமியும்
ஏலும் காட்டின் எறிந்த படை எலாம்
தோலும் காட்டித் துரந்தனை மீண்டநின்
கோலம் காட்டிலையோ! 'எனும் ஓர் தலை. 6.28.18

'துஞ்சினாய்கொல்? துணைபிரிந்தேன் 'எனும்;
'வஞ்சமோ; ' எனும்; 'வாரலையோ! 'எனும்;
'நெஞ்சு நோவ நெடுந்தனியே கிடந்து
அஞ்சினேன்! 'என்று அரற்றும்; அங்கு ஓர்தலை. 6.28.19

'காகம் ஆடு களத்திடைக் காண்பெனோ
பாக சாதனன் மோலி பறித்திட
ஓகை மாதவர் உச்சியின் வைத்தநின்
வாகை நாள் மலர்? 'என்னும்; மற்று ஓர்தலை. 6.28.20

'சேல் இயல் கண் இயக்கர்தம் தேவிமார்
மேல் இனித் தவிர்கிற்பர்கொல் வீர! நின்
கோல வில் குரல் கேட்டுக் குலுங்கித் தம்
தாலியைத் தொடல்? 'என்னும் மற்று ஓர்தலை. 6.28.21

'கூற்றம் உன் எதிர் வந்து உயிர் கொள்வது ஓர்
ஊற்றம் தான் உடைத்து அன்று; எனையும் ஒளித்து
ஏற்ற எவ் உலகு உற்றனை? எல்லை இல்
ஆற்றலாய்! 'என்று உரைக்கும் அங்கு ஓர்தலை. 6.28.22

இன்னவாறு அழைத்து ஏங்குகின்றான் எழுந்து
உன்னும் மாத்திரத்து ஓடினன் ஊழிநாள்
பொன்னின் வான் அன்ன போர்க்களம் புக்கனன்.
நன் மகன் தனது ஆக்கையை நாடுவான். 6.28.23

தேவர் முதலிய சேவகர் பின் சென்று அஞ்சி இரங்குதல்

தேவரே முதலாகிய சேவகர்
யாவரும் உடனே தொடர்ந்து ஏகினார்
'மூவகைப் பேர் உலகின் முறைமையும்
ஏவது ஆகும்? 'என்று எண்ணி இரங்குவார். 6.28.24

இராவணனைக் கண்ட பறவைகளும் பேய்களும் பட்ட பாடு

அழுதவால் சில; அன்பின போன்று அடி
தொழுதவால் சில; தூங்கினவால் சில;
உழுத ஆனைப் பிணம் புக்கு ஒளித்தவால்
கழுதும் புள்ளும் அரக்கனைக் காண்டலும். 6.28.25

இராவணன் பிணங்களைக் கிளறி மகனைத் தேடுதல்

கோடி கோடிக் குதிரையின் கூட்டமும்
ஆடல் வென்றி அரக்கர்தம் ஆக்கையும்
ஓடை யானையும் தேரும் உருட்டினான்
நாடினான் தன் மகன் உடல் நாள் எலாம். 6.28.26

இராவணன் இந்திரசித்தின் கையினைக் காணுதல்

மெய் கிடந்த விழிவழி நீர் விழ
நெய்கிடந்த கனல்புரை நெஞ்சினான்
மொய்கிடந்த சிலையொடு மூரிமாக்
கய்கிடந்தது கண்டனன் கண்களால். 6.28.27

இந்திரசித்தின் தோளை இராவணன் தலைமேற் கொள்ளுதல்

பொங்கு தோள்வளையும் கணைப்புட்டிலும்
அங்கதங்களும் அம்பும் இலங்கிட
வெம் கண் நாகம் எனப் பொலி வெய்ய கை
செங்கையால் எடுத்தான் சிரம் சேர்த்தினான். 6.28.28

இராவணன் இந்திரசித்தின் கையோடு கவலுதல்

கல்திண் மார்பில் தழுவும்; கழுத்தினில்
சுற்றும்; சென்னியில் சூட்டும்; சுடர்க் கண்ணோடு
ஒற்றும்; மோக்கும்; உருகும்; உளைக்குமால்;
முற்றும் நாளில் விடும் நெடு மூச்சினான். 6.28.29

இந்திரசித்தின் உடம்பைக் கண்டு அதன் மேல் வீழ்ந்து அழுதல்

கய்கண்டான் பின் கருங்கடல் கண்டு அன
மெய்கண்டான் அதன்மேல் விழுந்தான் அரோ
பெய்கண் தாரை அருவிப் பெருந்திரை
மொய்கொண்டு ஆர்திரை வேலையை மூடவே. 6.28.30

இந்திரசித்தின் உடம்பைத் தழுவி யரற்றுதல்

அப்பு மாரி அழுந்திய மார்பைத் தன்
அப்பு மாரி அழுது இழி யாக்கையின்
அப்பும்; மாரில் அணைக்கும் அரற்றுமால்;
அப் புமான் உற்றது யாவர் உற்றார் அரோ! 6.28.31

அவன் மார்பில் தைத்துள்ள அம்புகளைப் பறித்து வெகுளல்

பறிக்கும் மார்பின் பகழியை; பல்முறை
முறிக்கும்; மூர்ச்சிக்கும்; மோக்கும்; முயங்குமால்;
எறிக்கும் வெங்கதிரோடு உலகு ஏழையும்
கறிக்கும் வாயின் இட்டு இன்று எனக் காந்துவான். 6.28.32

இராவணனது பெருஞ் சீற்றத் தன்மை

'தேவரோடும் முனிவு அருஞ் சீரியோர்
ஏவரோடும் இயம்பிய மூர்த்திகள்
மூவரோடும் உலகு ஒரு மூன்றொடும்
போவதே கொல் முனிவு? 'எனும்; பொம்மலான். 6.28.33

இந்திரசித்தின் தலையைக் காணாது இராவணன் அரற்றுதல்

கண்டிலன் தலை; 'காதிய மானிடன்
கொண்டு இறந்தனன் 'என்பது கொண்டவன்
புண் திறந்தன நெஞ்சன் பொருமலன்
விண் திறந்திட விம்மி அரற்றினான். 6.28.34

இராவணனது அரற்றல் (9357-9361)

'நிலையும் மாதிரத்து நின்ற யானையும், நெற்றிக் கண்ணான்
மலையுமே, எளியவோ, நான் பறித்தற்கு? மறு இல் மைந்தன்
தலையும் ஆருயிரும் கொண்டார் அவர் உடலோடும் தங்க,
புலையெனேன் இன்னும் ஆவி சுமக்கின்றேன் போலும் போலும்! 6.28.35

'எரி உண அளகை மூதூர், இந்திரன் இருக்கை எல்லாம்
பொரி உண; உலகம் மூன்றும் பொது அறப் புரந்தேன் போலாம்!
அரி உணும் அலங்கல் மௌலி இழந்த என் மதலை யாக்கை
நரி உணக் கண்டேன், ஊணின் நாயுணும் உணவு நன்றால். 6.28.36

'பூண்டு ஒரு பகைமேல் புக்கு, என் புத்திரனோடும் போனார்
மீண்டிலர் விளிந்து வீழ்ந்தார்; விரதியர் இருவரோடும்
ஆண்டு உள குரங்கும், ஒன்றும் அமர்க்களத்து, ஆரும் இன்னும்
மாண்டிலர்; இனிமற்று உண்டோ, இராவணன் வீர வாழ்க்கை. 6.28.37

'கந்தர்ப்பர், இயக்கர், சித்தர், அரக்கர்தம் கன்னிமார்கள்,
செந்து ஒக்கும் சொல்லினார், உன் தேவியர், திருவின் நல்லார்,
வந்து உற்று 'எம் கணவன்தன்னைக் காட்டு 'என்று, மருங்கில் வீழ்ந்தால்,
அந்து ஒக்க அரற்றவோ, நான் கூற்றையும் ஆடல் கொண்டேன். 6.28.38

'சினத்தொடும் கொற்றம் முற்றி, இந்திரன் செல்வம் மேவி,
நினைத்தது முடித்து நின்றேன்; நேரிழை ஒருத்தி நீரால்,
எனக்கு நீ செய்யத் தக்க கடன் எலாம், ஏங்கி ஏங்கி,
உனக்கு நான் செய்வது ஆனேன்! என்னின் யார் உலகத்து உள்ளார். 6.28.39

இராவணன் இந்திரசித்தின் உடம்பினை யெடுத்துக்கொண்டு இலங்கைக்குள் புகுதல்

என்பன பலவும் பன்னி, எடுத்து அழைத்து இரங்கி, ஏங்கி,
அன்பினால் மகனைத் தாங்கி அரக்கியர் அரற்றி வீழ,
பொன்புனை நகரம் புக்கான்; கண்டவர் புலம்பும் பூசல்,
ஒன்பது திக்கும், மற்றை ஒருதிக்கும், உற்றது அன்றே. 6.28.40

துயர்பொறுக்காத அரக்கர்களின் செயல்கள்

கண்களைச் சூல்கின்றாரும், கழுத்தினைத் தடிகின்றாரும்,
புண்கொளத் திறந்து, மார்பின் ஈருளைப் போக்கு வாரும்,
பண்கள் புக்கு அலம்பும் நாவை உயிரொடு பறிக்கின்றாரும்,
எண்களில் பெரியர் அந்த இருந்துயர் பொறுக்கலாதார். 6.28.41

அரக்கியர் கண்ணீர்

மாதிரம் கடந்த திண்தோள் மைந்தன் தன் மகுடச் சென்னி
போதலைப் புரிந்த யாக்கை பொறுத்தனன் புகுதக் கண்டார்,
ஓதநீர் வேலை அன்ன கண்களால் உகுத்த வெள்ளக்
காதல் நீர் ஓடி, ஆடல் கருங்கடல் மடுத்தது அன்றே. 6.28.42

இராவணன் அரண்மனைக்குள் புகுதல்

ஆவியின் இனிய காதல் அரக்கியர் முதல்வராய
தேவியர் குழாங்கள் சுற்றி, சிரத்தின்மேல் தளிர்க்கை சேர்த்தி,
ஓவியம் வீழ்ந்து வீழ்ந்து புரள்வன ஒப்ப, ஒல்லைக்
கோ இயல் கோயில் புக்கான், குருதிநீர்க் குமிழிக் கண்ணான். 6.28.43

மண்டோதரி கலங்கி வருதல்

கருங்குழல் கற்றைப் பாரம் கால்தொட, கமலப் பூவால்
குரும்பையைப் புடைக்கின்றாள்போல் கைகளால் முலைமேல் கொட்டி,
'அருங்கலச் சும்மை தாங்க, அகல் அல்குல் அன்றி, சற்றே
மருங்குலும் உண்டு உண்டு 'என்ன, மயன் மகள் மறுகி வந்தாள். 6.28.44

மண்டோதரி மகன்மேல் வீழ்தல்

தலையின்மேல் சுமந்த கையள். தழலின்மேல் மிதிக்கின்றாள்போல்
நிலையின்மேல் பதைக்கும் தாளள், ஏக்கத்தால் நிறைந்த நெஞ்சள்
கொலையின்மேல் குறித்த வேடன் கூர்ங்கணை உயிரைக் கொள்ள,
மலையின்மேல் மயில் வீழ்ந்து என்ன, மைந்தன்மேல் மறுகி வீழ்ந்தாள். 6.28.45

மண்டோதரியின் துன்பநிலை

உயிர்த்திலள்; உணர்வும் இல்லள்; 'உயிர் இலள் கொல்லோ 'என்னப்
பெயர்த்திலள், யாக்கை; ஒன்றும் பேசலள்; பில்கி யாதும்
வியர்த்திலள்; நெடிது போது விம்மலள்; மெல்ல மெல்ல,
அயர்த்திலள் அரிதின் தேறி, வாய்திறந்து, அரற்றல் உற்றாள். 6.28.46

மண்டோதரி இந்திரசித்தினை விளித்துப் புலம்புதல் (9369-9375)

'கலையினால் திங்கள் என்ன வளர்கின்ற காலத்தே உன்,
சிலையினால் அரியை வெல்லக் காண்பதோர் தவம்முன் செய்தேன்;
தலை இலா ஆக்கை காண எத் தவம் செய்தேன்! அந்தோ! '
நிலை இலா வாழ்வை இன்னும் நினைவெனோ, நினைவு இலாதேன்? 6.28.47

'அய்யனே! அழகனே! என் அரும்பெறல் அமிழ்தே! ஆழிக்
கய்யனே, மழுவனே, என்று அவர் வலி கடந்த கால
மொய்யனே! முளரி அன்ன நின்முகம் கண்டிலாதேன்,
உய்வெனே? உலகம் மூன்றுக்கு ஒருவனே! செருவலோனே! 6.28.48

'தாள் அரிச் சதங்கை ஆர்ப்பத் தவழ்கின்ற பருவம் தன்னில்,
கோள் அரி இரண்டு பற்றிக் கொணர்ந்தனை; கொணர்ந்து, கோபம்
மூளுறப் பொருத்தி, மாட முன்றிலின் முறையின் ஓடி
மீளுற விளையாட்டு இன்னும் காண்பெனோ, விதியிலாதேன்! 6.28.49

'அம்புலி! அம்ம வா! 'என்று அழைத்தலும் அவிர் வெண் திங்கள்
இம்பர் வந்தானை 'அஞ்சல் ' என இருகரத்தின் ஏந்தி
வம்பு உறும் மறுவைப் பற்றி முயல் என வாங்கும் வண்ணம்
எம் பெருங்களிறே! காண வேசற்றேன்; எழுந்திராயோ! 6.28.50

'இயக்கியர் அரக்கி மார்கள் விஞ்சையர், ஏழை மாதர்
முயல் கறை பயிலாத் திங்கள் முகத்தியர், முழுதும் நின்னை
மயக்கிய முயக்கம் தன்னால், மலர் அணை அமளி மீதே
அயர்த்தனை உறங்குவாயோ? அமர் பொருது அலசினாயோ? 6.28.51

'முக்கணான் முதலினோரை, உலகு ஒரு மூன்றினோடும்,
புக்க போர் எல்லாம் வென்று நின்ற என் புதல்வன் போலாம்,
மக்களில் ஒருவன் கொல்ல, மாள்பவன்? மான மேரு
உக்கிட, அணு ஒன்று ஓடி உதைத்தது போலும் அம்மா! 6.28.52

'பஞ்சு எரி, உற்றது என்ன அரக்கர்தம் பரவை எல்லாம்
வெஞ்சின மனிதர் கொல்ல, விளிந்ததே மீண்டது இல்லை;
அஞ்சினேன் அஞ்சினேன்; அச் சீதை என்று அமிழ்தால் செய்த
நஞ்சினால் இலங்கை வேந்தன் நாளை இத்தகையன் அன்றோ? ' 6.28.53

இராவணன் சீதையை வாளால் வெட்ட விரைதல்

என்று அழைத்து இரங்கி ஏங்க, 'இத்துயர் நமர்கட்கு எல்லாம்
பொன் தழைத்து அனைய அல்குல் சீதையால் புகுந்தது 'என்ன
'வன்தழைக் கல்லின் நெஞ்சின் வஞ்சகத்தாளை, வாளால்
கொன்று இழைத்திடுவென் 'என்னா, ஓடினன், அரக்கர் கோமான். 6.28.54

இராவணனை மகோதரன் தடுத்தல்

ஓடுகின்றானை நோக்கி 'உயர்பெரும் பழியை உச்சிச்
சூடுகின்றான் 'என்று அஞ்சி, மகோதரன், துணிந்த நெஞ்சன்,
மாடு சென்று, அடியின் வீழ்ந்து, வணங்கி, 'நின் புகழ்க்கு மன்னா
கேடு வந்து அடுத்தது 'என்னா, இனையன கிளத்தலுற்றான். 6.28.55

மகோதரன் சொன்னது (9378-9382)

'நீர் உளதனையும், சூழ்ந்த நெருப்பு உள தனையும், நீண்ட
பார் உளதனையும், வானப் பரப்பு உளதனையும், காலின்
பேர் உளதனையும், பேராப் பெரும்பழி பிடித்தி போலாம்
போர் உளதனையும் வென்று, புழ்க உளதனையும் உள்ளாய். 6.28.56

'தெள்ளருங் கால கேயர் சிரத்தொடும், திசைக்கை யானை
வெள்ளிய மருப்புச் சிந்த வீசிய விசயத்து ஒள்வாள்,
வள்ளி அம்மருங்குல், செவ்வாய், மாதர்மேல் வைத்தபோது
கொள்ளுமே ஆவி தானே, நாணத்தால் குறைவது அல்லால்? 6.28.57

'மங்கையை குலத்து உளாளை, தவத்தியை, முனிந்து, வாளால்
சங்கை ஒன்று இன்றிக் கொன்றால். 'குலத்துக்கே தக்கான் ', என்று
கங்கை அம் சென்னியானும் கண்ணனும் கமலத் தோனும்,
செங்கையும் கொட்டி, உன்னைச் சிரிப்பரால் 'சிறியன் 'என்னா. 6.28.58

'நிலத்து இயல்பு அன்று; வானின் நெறி அன்று; நீதி அன்று;
தலத்து இயல்பு அன்று; மேலோர் தருமமேல் அதுவும் அன்று;
புலத்தியன் மரபின் வந்து, புண்ணிய விரதம் பூண்டாய்!
வலத்து இயல்பு அன்று; மாயாப் பழிகொள மறுகு வாயோ? 6.28.59

'இன்று நீ இவளை வாளால் எறிந்து போய், இராமன் தன்னை
வென்று மீண்டு, இலங்கை மூதூர் எய்தினை வெதும்புவாயோ
பொன்றினள் சீதை என்றே? 'புரவல! புதல்வன் தன்னைக்
கொன்றவர் தம்மைக் கொல்லக் கூசினை போலும் 'என்றான். 6.28.60

மகோதரன் சொல்லைக் கேட்டு இராவணன் வாளினைத் தரையிலிட்டு வஞ்சினங் கூறுதல்

என்னலும் எடுத்த கூர்வாள் இருநிலத்து இட்டு, மீண்டு
மன்னவன் 'மைந்தன் தன்னை மாற்றலர் வலியிற் கொண்ட
சின்னமும், அவர்கள் தங்கள் சிரமும் கொண்டு அன்றிச் சேரேன்;
தொல் நெறித் தயிலத் தோணி வளர்த்துமின் 'என்னச் சொன்னான். 6.28.61
----------

6.29 – Die Heerschau

6.29 படைக்காட்சிப் படலம் 9385 – 9436 (52)

தூதுவர் அரக்கர் சேனை வந்து நிறைந்ததைச் சொல்லுதல்

அத்தொழில் அவரும் செய்தார்; ஆயிடை, அனைத்துத் திக்கும்
பொத்திய நிருதர் தானை கொணரிய போய தூதர்,
ஒத்தனர் அணுகி வந்து வணங்கினர், 'இலங்கை உன் ஊர்ப்
பத்தியின் அமைந்த தானைக்கு இடம் இலை; பணி என்? என்றார். 6.29.1

எங்கு எய்தியது? என்ற இராவணனுக்குத் தூதுவர் கூறுதல்

ஏம்பல் உற்று எழுந்த மன்னன் 'எவ்வழி எய்திற்று 'என்றான்;
கூம்பல் உற்று உயர்ந்த கையர், ஒருவழி கூறலாமோ?
வாம் புனல் பரவை ஏழும் இறுதியின் வளர்ந்தது என்னாத்
தாம் பொடித்து எழுந்த தானைக்கு உலகு இடம் தான் இல் என்றார். 6.29.2

அரக்கர் சேனை இலங்கையை எய்துதல்

மண் உற நடந்த தானை வளர்ந்த மாத் தூளி மண்ட,
விண் உற நடக்கின்றாரும் மிதித்தனர் ஏக ஏக,
கண்ணுறல் அரிது காண் அக் கற்பத்தின் முடிவில் கார்போல்
எண்ணுற அரிய சேனை எய்தியது, இலங்கை நோக்கி. 6.29.3

வாள்தனில் வயங்க மின்னா; மழை அதின் இருள மாட்டா;
ஈட்டிய முரசின் ஆர்ப்பை, இடியது முழங்க மாட்டா;
மீட்டு இனி உரைப்பது என்னே? வேலைமீச் சென்றது என்னத்
தீட்டிய படையும், மாவும், யானையும், தேரும், செல்ல. 6.29.4

உலகினுக்கு உலகு போய்ப் போய், ஒன்றின் ஒன்று ஒதுங்கல் உற்ற,
தொலைவு அருந்தானை மேன்மேல் எழுந்தது தொடர்ந்து சுற்ற,
நிலவினுக்கு இறையும் மீனும் நீங்கின; நிமிர்ந்து நின்றான்,
அலரியும், முந்து செல்லும் ஆறுநீத்து, அஞ்சி, அப்பால். 6.29.5

மேற்படர் விசும்பை முட்டி, மேருவின் விளங்கி, நீண்ட
நால் பெரு வாயில் ஊடும் இலங்கை ஊர் நடக்கும் தானை;
கார்ப்பெருங் கடலை, மற்றோர் இடத்தினில் காலன் தானே
சேர்ப்பது போன்றது, யாண்டும் சுமைபொறாது உலகம் என்ன. 6.29.6

'நெருக்கு உடை வாயிலூடு புகும் எனின், நெடிது காலம்
இருக்கும் அத்துணையே 'என்னா, மதிலினுக்கு உம்பர் எய்தி,
அரக்கனது இலங்கை உற்ற அண்டங்கள் அனைத்தின் உள்ள
கருக்கிளர் மேகம் எல்லாம் ஒருங்கு உடன் கலந்தது என்ன. 6.29.7

இராவணன் வந்த சேனையைக் கோபுரத்திலிருந்து காணுதல்

அதுபொழுது, அரக்கர்கோனும், அணிகொள் கோபுரத்தின் எய்தி,
பொது உற நோக்கலுற்றான், ஒருநெறி போகப் போக,
விதிமுறை காண்பென் என்னும் வேட்கையான், வேலை ஏழும்
கதும் என ஒருங்கு நோக்கும் பேதையின் காதல் கொண்டான். 6.29.8

தூதுவர் இராவணனுக்குப் படையினரை வகுத்துக் காட்டுதல்

மாதிரம் ஒன்றின் நின்று, மாறு ஒரு திசைமேல் மண்டி
ஓதநீர் செல்வது அன்ன 'தானையை உணர்வு கூடா,
வேத வேதாந்தம் கூறும், பொருளினை விரிக்கின்றார் போல்
தூதுவர் அணிகள் தோறும் வரன்முறை காட்டிச் சொன்னார். 6.29.9

சாகத்தீவினர்

'சாகத் தீவினின் உறைபவர், தானவர் சமைத்த
யாகத்தில் பிறந்து இயைந்தவர், தேவரை எல்லாம்
மோகத்தின்பட முடித்தவர், மாயையின் முதல்வர்,
மேகத்தைத் தொடும் மெய்யினர், இவர் 'என விரித்தார். 6.29.10

குசைத்தீவினர் இயல்பு

'குசையின் தீவினில் உறைபவர், கூற்றுக்கும் விதிக்கும்
வசையும் வன்மையும் வளர்ப்பவர், வானநாட்டு உறைவோர்
இசையும் செல்வமும் இருக்கையும் இழந்தது; இங்கு, இவரால்,
விசையம் தாம் என நிற்பவர், இவர் நெடு விறலோய்! 6.29.11

இலவத் தீவினர் இயல்பு

'இலவத் தீவினில் உறைபவர், இவர்கள்; பண்டு இமையாப்
புலவர்க்கு இந்திரன் பொன் நகர் அழிதரப் பொருதார்;
நிலவைச் செஞ்சடை வைத்தவன் வரம்தர, நிமிர்ந்தார்;
உலவைக் காட்டு உறு தீ என வெகுளி பெற்று உடையார். 6.29.12

அன்றில் தீவினர் இயல்பு

'அன்றில் தீவினில் உறைபவர், இவர்; பண்டை அமரர்க்கு
என்றைக்கும் இருந்து உறைவிடம் என்றிட மேருக்
குன்றைக் கொண்டு போய்க் குரைகடல் இட, அறக்குலைந்தோர்
சென்று, 'இத்தன்மையைத் தவிரும் 'என்று இரந்திடத் தீர்ந்தோர். 6.29.13

பவளக் குன்றினர்

பவளக் குன்றினில் உறைபவர்; வெள்ளி பண்பு அழிந்து, ஓர்
குவளைக் கண்ணி, அங்கு, இராக்கதக் கன்னியைக் கூட,
அவளில் தோன்றினர், ஐ இரு கோடியர்; நொய்தின்
திவளப் பாற்கடல் வறள்படத் தேக்கினர், சிலநாள். 6.29.14

கந்தமாதனத்தோர்

'கந்த மாதனம் என்பது, இக் கருங் கடற்கு அப்பால்
மந்த மாருதம் ஊர்வது ஓர்கிரி; அதில் வாழ்வோர்,
அந்த காலத்து அவ் ஆலகாலத்துடன் பிறந்தோர்;
இந்த வாள் எயிற்று அரக்கர் எண்ணிறந்தவர் இறைவ! 6.29.15

மலையத்து மறவோர்

'மலையம் என்பது பொதிய மாமலை : அதில் மறவோர்
நிலையம் அன்னது சாகரத் தீவு இடை நிற்கும்;
"குலையும் இவ் உலகு " எனக் கொண்டு, நான்முகன்கூறி,
"உலைவிலீர்! இதில் உறையும் " என்று இரந்திட, உறைந்தார். 6.29.16

புட்கரத் தீவினர்

முக்கரக் கையர், மூஇலை வேலினர்; முசுண்டி
சக்கரத்தினர், சாபத்தால் இந்நின்ற தலைவர்,
நக்கரக் கடல் நாலொடு மூன்றுக்கும் நாதர்;
புக்கரப் பெருந் தீவிடை உறைபவர் புகழோய்! 6.29.17

இறலித் தீவினர்

'மறலியை, பண்டு தம் பெருந்தாய் சொல, வலியால்,
புறநிலைப் பெருஞ் சக்கர மால்வரைப் பொருப்பின்,
விறல் கெடச் சிறையிட்டு, அயன் இரந்திட, விட்டோர்;
இறலி அப் பெருந்தீவிடை உறைபவர் இவர்கள். 6.29.18

பாதாளத்தர்

வேதாளக் கரத்து இவர், "பண்டு புவியிடம் விரிவு
போதாது உம்தமக்கு, எழுவகையாய் நின்ற புவனம்,
பாதாளத்து உறைவீர் என, நான்முகன் பணிப்ப,
நாதா! புக்கு இருந்து, உனக்கு அன்பினால் இவண் நடந்தார். 6.29.19

நிருதி குலத்தினர்

'நிருதிதன் குலப் புதல்வர்; நின் குலத்துக்கு நேர்வர்;
"பருதி தேவர்கட்கு " எனத்தக்க பண்பினர்; யானைக்
குருதி பெற்றிலரேல், கடல் ஏழையும் குடிப்பார்;
இருள் நிறத்து இவர், ஒருத்தர் ஏழ்மலையையும் எடுப்பார். 6.29.20

பூமிதேவிக்குப் பிறந்தவர்

'பார் அணைத்த வெம் பன்றியை அன்பினால் பார்த்த
காரணத்தின், அனாதியின் பயந்த பைங்கழலோர்;
பூரணத்தடந் திசைதொறும் இந்திரன் பொருவு இல்
வாரணத்தினை நிறுத்தியது, இவர்வரவு அஞ்சி. 6.29.21

பாதலத்தின் அடிப்பகுதியில் வாழ்பவர்

மறக்கண் வெஞ்சின மலை என இந்நின்ற வயவர்,
இறக்கம் கீழ் இலாப் பாதலம் அத்து உறைகின்ற இகலோர்;
அறக்கண் துஞ்சிலன், ஆயிரம் பணம் தலை அனந்தன்,
உறக்கம் தீர்ந்தனன், உறைகின்றது, இவர் தொடர்ந்து ஒறுக்க. 6.29.22

காளியின் சினத் தீயில் பிறந்தவர்

'காளியைப் பண்டு கண்ணுதல் காட்டிய காலை,
மூள முற்றிய சினக் கடுந் தீயிடை முளைத்தோர்;
கூளிகட்கு நல் உடன் பிறந்தார்; பெருங் குழுவாய்
வாள் இமைக்கவும், வாள் எயிறு இமைக்கவும், வருவார். 6.29.23

பாவத்தோடு பிறந்தவர்கள்

'பாவம் தோன்றிய காலமே தோன்றிய பழையோர்;
தீவம் தோன்றிய முழைத் துணை என தறெு கண்ணர்;
கோவம் தோன்றிடின், தாயையும் உயிர் உணும் கொடியோர்;
சாவம் தோன்றிட, வட திசை மேல் வந்து சார்வார். 6.29.24

சிவனது நெற்றிக் கண்ணில் பிறந்தவர்

'சீற்றம் ஆகிய ஐம்முகன், உலகு எலாம் தீப்பான்
ஏற்ற மா நுதல் விழியிடைத் தோன்றினர், இவரால்;
கூற்றம் ஆகிப் பண்டு உதித்து உளர் எனக் கொடுந் தொழிலால்
தோற்றினார் இவர் வலி எலாம் தொலைவுறத் தொலைப்பார். 6.29.25

எமன் குருதியில் பிறந்தவரும் ஆலகாலத்தில் பிறந்தவரும்

காலன் மார்பிடைச் சிவன்கழல் பட, பண்டு, கான்ற
வேலை ஏழ் அன்ன குருதியில் தோன்றிய வீரர்,
சூலம் ஏந்தி முன் நின்றவர்; இந்நின்ற தொகையார்,
ஆல காலத்தின், அமிழ்தின் முன் பிறந்த போர் அரக்கர். 6.29.26

வடவைத் தீயிலும் முப்புறத் தீயிலும் தோன்றியவர்கள்

'வடவைத் தீயிடை வாசுகி கான்ற மாக் கடுவை
இட, அத்தீ இடை எழுந்தவர் இவர்; இவர், மழையைத்
தடவித் தீநிமிர் குஞ்சியர் சங்கரன் தடந்தேர்
கடவத் தீந்த வெம் புரத்து இடைத் தோன்றிய கழலோர். 6.29.27

படையினர் பெருமை (9411-9412)

இனையர் இன்னவர் என்பது ஓர் அளவு இலர் ஐய!
நினையவும், குறித்து உரைக்கவும்; அரிது; இவர் நிறைந்த
வினையமும் பெருவரங்களும் தவங்களும் விளம்பின்,
அனைய பேர் உகம் ஆயிரத்து அளவினும் அடங்கா. 6.29.28

'ஒருவரே சென்று, அவ் உறுதிறல் குரங்கையும், உரவோர்
இருவர் என்றவர் தம்மையும், ஒருகையோடு எற்றி,
வருவர்; மற்று இனிப் பகர்வது என்? வானவர்க்கு அரிய
திருவ என்றனர் தூதுவர் : இராவணன் செப்பும். 6.29.29

இராவணன் வினாவும் தூதுவர் விடையும்

'எத் துணைத்து இதற்கு எண் எனத் தொகை வகுத்து, இயன்ற
அத்திறத்தினை அறைதிர் 'என்று உரை செய; அவர்கள்
'ஒத்த வெள்ளம் ஓர் ஆயிரம் உளது 'என உரைத்தார்,
பித்தர்; இப் படைக்கு எண் சிறிது ' என்றனர், பெயர்ந்தார். 6.29.30

இராவணன், படைத்தலைவரைக் கொணர்க எனல்

'படைப் பெருங் குலத் தலைவரைக் கொணருதிர், என்பால்
கிடைத்து, நான் அவர்க்கு உற்றுள பொருள் எலாம் கிளத்தி
அடைத்த நல் உரை விளம்பினன் அளவளாய், அமைவு உற்று,
உடைத்த பூசனை வரன் முறை இயற்ற 'என்று உரைத்தான். 6.29.31

படைத் தலைவரின் வினாவும் இராவணன் விளக்கமும்

தூதர் கூறிட, திசைதொறும் திசைதொறும் தொடர்ந்தார்,
ஓத வேலையின் நாயகர் எவரும் வந்து உற்றார்;
போது தூவினர், வணங்கினர், இராவணன் பொலன் தாள்
மோதும் மோலியின் பேர் ஒலி வானினை முட்ட. 6.29.32

வணங்கிய தலைவர்களை இராவணன் உசாவுதல்

அனையர் யாவரும் அருகுசென்று, அடிமுறை வணங்கி,
வினையம் மேவினர், இனிதின் அங்கு இருந்தது ஓர் வேலை,
'நினையும் நல்வரவு ஆக, நும் வரவு! 'என நிரம்பி,
'மனையும் மக்களும் வலியரே? ' என்றனன், மறவோன். 6.29.33

'பெரிய திண்புயன் நீ உளை; தவ வரம் பெரிதால்;
உரிய வேண்டிய பொருள் எலாம் முடிப்பதற்கு ஒன்றோ?
இரியல் தேவரைக் கண்டனம்; பகை பிறிது இல்லை;
அரியது என் எமக்கு? என்றனர், அவன் கருத்து அறிவார். 6.29.34

படைத் தலைவரின் வினாவும் இராவணன் விளக்கமும்

'மாதரார்களும் மைந்தரும் நின்மருங்கு இருந்தார்
பேது உறாதவர் இல்லை; நீ வருந்தினை, பெரிதும்;
யாது காரணம்? அருள் 'என அனையவர் இசைத்தார்;
சீதை காதலின் பிறந்துள பரிசு எலாம் தெரித்தான். 6.29.35

படைத்தலைவர் வியந்து சிரித்தல் (9419-9420)

'கும்ப கன்னனொடு இந்திரசித்தையும், குலத்தின்
வெம்பு வெஞ்சினத்து அரக்கர்தம் குழுவையும், வென்றார்
அம்பினால், சிறுமனிதரே! நன்று, நம் ஆற்றல்!
நம்பு! சேனையும் வானரமே! ' என நக்கார். 6.29.36

உலகைச் சேடன்தன் உச்சிநின்று எடுக்க அன்று, ஓர் ஏழ்
மலையை வேரோடும் வாங்க அன்று, அங்கையால் வாரி
அலைகொள் வேலையைக் குடிக்க அன்று, அழைத்தது; மலரோடு
இலைகள் கோதும் அக்குரங்கின்மேல் ஏவக்கொல், எம்மை? ' 6.29.37

எள்ளிச் சிரித்தவரை விலக்கி வன்னி என்னும் மன்னன் அம்மனிதர் யார்? அவர் வலிமை யாது? என வினவுதல்

என்ன, கை எறிந்து, இடி உரும் ஏறு என நக்கு,
மின்னும் வாள் எயிற்று அரக்கரை அம் கையால் விலக்கி,
வன்னி என்பவன், புட்கரத் தீவுக்கு மன்னன்,
அன்ன மானுடர் ஆர்? வலி யாது? என்று அறைந்தான். 6.29.38

மாலியவான் அம்மனிதரின் வலிமையைச் சொல்லுதல

மற்று அ(வ்)வாசகம் கேட்டலும், மாலியவான் வந்து,
'உற்ற தன்மையும், மனிதரது ஊற்றமும், உடன் ஆம்
கொற்ற வானரத் தலைவர்தம் தகைமையும், கூறக்
கிற்றும், கேட்டிரால் 'என்று அவன் கிளத்துவான் கிளர்ந்தான். 6.29.39

வாலியை யழித்தது

'ஆழி அன்னநீர் அறிதிர் அன்றே, கடல் அனைத்தும்
ஊழிக் கால் எனக் கடப்பவன் வாலி என்போனை?
ஏழு குன்றமும் எடுக்குறும் மிடுக்கனை இந்நாள்
பாழி மார்பகம் பிளந்து உயிர் குடித்தது, ஓர் பகழி. 6.29.40

விராதன் முதலியோரைத் தொலைத்தது

'பரிய தோளுடை விராதன், மாரீசனும் பட்டார்;
கரிய மால்வரை நிகர் கரதூடணர், கதிர்வேல்
திரிசிரா, அவர் திரை கடல் அன பெருஞ்சேனை,
ஒரு விலால், ஒருநாழிகைப் பொழுதினின் உலந்தார். 6.29.41

படைத் தலைவரை வினவியது

'இங்கு வந்து நீர் வினாயது என்? எறிதிரைப் பரவை
அங்கு வெந்திலதோ? சிறிது அறிந்ததும் இலிரோ?
கங்கை சூடிதன் கடுஞ்சிலை ஒடித்த அக் காலம்,
உங்கள் வான் செவி புகுந்திலதோ, முழங்கு ஓதை? 6.29.42

இலங்கையின் ஆயிரவெள்ளச் சேனையும் அழித்தமை விளம்பல் (9426-9428)

'ஆயிரம் பெருவெள்ளம் உண்டு, இலங்கையின் அளவில்,
தீயின் வெய்யபோர் அரக்கர்தம் சேனை; அச்சேனை
போயது, அந்தகன் புரம் புக நிறைந்தது போலாம்.
ஏயும் மும்மைநூல் மார்பினர் எய்த வில் இரண்டால். 6.29.43

'கொற்ற வெஞ்சிலைக் கும்பகன்னனும், நுங்கள் கோமான்
பெற்ற மைந்தரும், பிரகத்தன் முதலிய பிறரும்,
மற்றை வீரரும், இந்திரசித்தொடு மடிந்தார்;
இற்றை நாள்வரை, யானும் மற்று இவனுமே இருந்தேம். 6.29.44

மூலத் தானை என்று உண்டு; அது மும்மைநூறு அமைந்த
கூலச்சேனை இவ் வெள்ளம்; மற்று அதற்கு இன்று குறித்த
காலச் செய்கையான் நீர் வந்திராயின் அக்கழலோர்
சீலச் சேனையின் செய்வினைச் செய்கையும் தெரிவீர். 6.29.45

அனுமனின் சிறப்பு (9429-9430)

ஒருகுரங்கு வந்து இலங்கையை மலங்கு எரி ஊட்டி,
திருகு வெஞ்சினத்து அக்கனை நிலத்தொடும் தேய்த்து,
பொருது, தூது உரைத்து, ஏகியது, அரக்கியர் புலம்ப,
கருகு சேனைமாக் கடலையும்; கடலையும் கடந்து. 6.29.46

கண்டிலீர் கொலாம், கடலினை மலைகொண்டு கட்டி,
மண்டு போர்செய, வானரர் இயற்றிய மார்க்கம்?
உண்டு வெள்ளம் ஓர் எழுபது; மருந்து ஒரு நொடியில்
கொண்டு வந்தது, மேருவிற்கு அப்புறம் குதித்தே. 6.29.47

'இது இயற்கை; ஓர்சீதை என்று இருந் தவத்து இயைந்தாள்
பொது இயற்கை தீர் கற்புடைப் பத்தினி பொருட்டால்,
விதி விளைத்தது அவ் வில்லியர் வெல்க! நீர் வெல்க!
முதுமொழிப் பதம் சொல்லின் என் ' என்று உரை முடித்தான். 6.29.48

வன்னியின் வினாவிற்கு இராவணன் புன்மை நோக்கிக் குரங்கொடு பொருதிலேன் எனல்

வன்னி, மன்னனை நோக்கி, 'நீ இவர் எலாம் மடிய,
என்ன காரணம், இகல் செயாது இருந்தது? 'என்று இசைத்தான்;
'புன்மை நோக்கி நான் நாணினன் பொருதிலன் 'என்றான்!
'அன்னதேல், இனி அமையும் எம் கடன் அஃது 'என்றான். 6.29.49

வன்னி மாலியவான் கருத்துப்படி செய்தற்கு இது காலம் அன்று எனல்

'மூது உணர்ந்த இம் முதுமகன் கூறிய முயற்சி
சீதை என்பவள்தனை விட்டு, அம் மனிதரைச் சேர்தல்;
ஆதியின் தலை செயத்தக்கது; இனிச் செய்வது இழிவால்,
காதல் இந்திர சித்தையும் மாய்வித்தல் கண்டும். 6.29.50

இனிச் செய்யத் தக்கது போரே எனல்

'விட்டம் ஆயினும் மாதினை, வெஞ்சமம் விரும்பிப்
பட்ட வீரரைப் பெறுகிலம்; பெறுவது பழியால்;
முட்ட மற்றவர் குலத்தொடு முடிக்குவது அல்லால்,
கட்டம், அத் தொழில்; செருத் தொழில் இனிச் செயும் கடமை. 6.29.51

வென்று மீளுவம் என வஞ்சினம் கூறிச் செல்லுதல்

'என்று, எழுந்தனர் இராக்கதர், ' இருக்க நீ; யாமே
சென்று, மற்றவர் சில்லுடல் குருதி நீர் தேக்கி,
வென்று மீளுதும்; வெள்குதுமேல், மிடல் இல்லாப்
புன் தொழில் குலம் ஆதும் 'என்று உரைத்தனர் போனார். 6.29.52
---------------

6.30 – Die Vernichtung des Stammheeres

6.30 மூலபல வதைப் படலம் 9437 – 9672 (236)

இராவணன், முதற்கண் இராம இலக்குவரைப் பொருதழிக்குமாறு படைத் தலைவர்களுக்குக் கட்டளையிட்டு அவர்க்குத் துணையாக மூலபலச் சேனையை உடன் அனுப்புதல்

'வானரப் பெருஞ் சேனையை யான் ஒரு வழி சென்று,
ஊன் அறக்குறைத்து உயிர் உண்பன்; நீயிர் போய் ஒருங்கே
ஆன மற்றவர் இருவரைக் கோறிர் 'என்று அறைந்தான்
தானவப் பெருங் கிரிகளை வாள்கொண்டு தடிந்தான் 6.30.1

என உரைத்தலும், எழுந்து, தம் ஊர்திமேல் ஏறி,
கனை கடல் பெருஞ் சேனையைக் கலந்தது காணா,
'வினையம் மற்று இலை; மூல மாத் தானையை விரைவோடு
இனையர்முன் செல, ஏவுக 'என்று இராவணன் இசைத்தான். 6.30.2

இராவணனும் தன் தேர்மேலேறி இராமன் சேனையைக் தாக்க ஒருபுறம் செல்லுதல்

ஏவி அப்பெருஞ் சேனையை, தானும் வேட்டு எழுந்தான்,
தேவர் மெய்ப் புகழ் தேய்த்தவன், சில்லி அம் தேர்மேல்,
காவல் மூவகை உலகமும் முனிவரும் கலங்க,
பூவை வண்ணத்தன் சேனைமேல் ஒருபுறம் போனான். 6.30.3

போருக்கு எழுந்த மூலபலச் சேனையின் இயல்பு

'எழுக, சேனை " என்று, யானைமேல் அணிமுரசு எற்றி,
வழு இல் வள்ளுவர் துறைதொறும் விளித்தலும், வல்லைக்
குழுவி ஈண்டியது என்பரால், குவலயம் முழுதும்
தழுவி, விண்ணையும் திசையையும் தடவும் மாத் தானை. 6.30.4

அடங்கும் வேலைகள், அண்டத்தின் அகத்து அகல் மலையும்
அடங்கும், மன் உயிர் அனைத்தும் அவ் வரைப்பிடை அவைபோல்
அடங்குமே, மற்று அப் பெரும்படை அரக்கர்தம் யாக்கை,
அடங்கும் மாயவன் குறள் உருத் தன்மையின் அல்லால்? 6.30.5

போருக்கு எழுந்தமூலபலச் சேனை வீரர்களின் இயல்பு

அறத்தைத் தின்று, அருங்கருணையைப் பருகி, வேறு அமைந்த
மறத்தைப் பூண்டு, வெம் பாவத்தை மணம்புணர் மணாளர்,
நிறத்துக் கார் அன்ன நெஞ்சினர், நெருப்புக்கு நெருப்பாப்
புறத்துப் பொங்கிய பங்கியர், காலனும் புகழ்வார். 6.30.6

நீண்ட தாள்களால் வேலையைப் புறம்செல நீக்கி;
வேண்டும் மீனொடு மகரங்கள் வாய் இட்டு விழுங்கி,
தூண்டு வான் உரும் ஏற்றினைச் செவிதொறும் தூக்கி,
மூண்ட வான்மழை உரித்து உடுத்து, உலாவரும் மூர்க்கர். 6.30.7

மால் வரைக்குலம் பரல் என, மழைக் குலம் சிலம்பா,
சால் வரைப் பெரும்பாம்பு கொண்டு அசைத்த பைங் கழலார்;
மேல் வரைப் படர் கலுழன் வன்காற்று எனும் விசையோர்;
நால் வரைக் கொணர்ந்து உடன் பிணித்தால் அன்ன நடையார். 6.30.8

உண்ணும் தன்மைய ஊன்முறை தப்பிடின் உடனே
மண்ணின் நின்ற மால் யானையை வாயிடும் பசியார்;
தண்ணின் நீர்முறை தப்பிடின், தடக்கையால் தடவி,
விண்ணின் மேகத்தை வாரி வாய்ப் பிழிந்திடும் விடாயர். 6.30.9

உறைந்த மந்தரம் முதலிய கிரிகளை உருவ
எறிந்து, வேல்நிலை காண்பவர்; இந்துவால் யாக்கை
சொறிந்து, தீர்வு உறு தினவினர்; மலைகளைச் சுற்றி
அறைந்து, கற்ற மாத்தண்டினர்; அசனியின் ஆர்ப்பார். 6.30.10

சூலம் வாங்கிடின், சுடர்மழு ஏந்திடின், சுடர் வாள்
கோலும் வெஞ்சிலை பிடித்திடின், கொற்றவேல் கொள்ளின்,
சால வன்தண்டு தரித்திடின், சக்கரம் தாங்கின்,
காலன், மால், சிவன், குமரன், என்று இவரையும் கடப்பார். 6.30.11

ஒருவரே வல்லர், ஓர் உலகத்தினை வெல்ல;
இருவர் வேண்டுவர், ஏழ் உலகத்தையும் இறுக்க;
திரிவரேல், உடன் திரிதரும் நெடுநிலம்; செவ்வே
வருவரேல், உடன்கடல்களும் தொடர்ந்து, பின் வருமால். 6.30.12

நால்வகைச் சேனைகளின் மிகுதி

மேகம் எத்தனை, அத்தனை மால்கரி; விரிந்த
நாகம் எத்தனை, அத்தனை தேர்; நனி நாளாப்
போகம் முற்றின எத்தனை, அத்தனை புரவி;
ஆகம் உற்றன எத்தனை, அத்தனை அனிகம். 6.30.13

சேனைகளின் அணி நலம்

இன்ன தன்மைய யானை, தேர், இவுளி, என்று இவற்றின்
பன்னு பல்லணம், பருமம், மற்று உறுப்பொடு பலவும்,
பொன்னும் நல்நெடு மணியும் கொண்டு அல்லது புனைந்த
சின்னம் உள்ளன இல்லன, மெய்ம் முற்றும் தெரிந்தால். 6.30.14

சேனைகள் எழுப்பிய தூளியும் யானையின் மதநீரும்

இப் பெரும்படை எழுந்து இரைத்து ஏக, மேல் எழுந்த
துப்பு உதிர்த்து அன்ன தூளியின் படலம் மீத் தூர்ப்ப,
தப்பு இல் கார் நிறம் தவிர்ந்தது; கரிமதம் தழுவ
உப்பு நீங்கியது ஓங்கு நீர் வீங்கு அலை உவரி. 6.30.15

சேனைகள் புறப்பட்ட இலங்கை நகர வாயில்களின் தோற்றம்

மலையும், வேலையும், மற்று உள பொருள்களும், வானோர்
நிலையும், அப்புறத்து உலகங்கள் யாவையும், நிரம்ப
உலைவு உறா வகை உண்டு, பண்டு உமிழ்ந்த பேர் ஒருமைத்
தலைவன் வாய் ஒத்த இலங்கையின் வாயில்கள் தருவ. 6.30.16

மூல சேனைகளைக் கண்டு வானரம் இரிந்தோடுதல்

கடம் பொறா மதக்களிறு, தேர், பரி, மிடை காலாள்
படம் பொறாமையின் நனந்தலை அனந்தனும் பதைத்தான்;
விடம் பொறாது இரி அமரர்போல் குரங்கு இனம் மிதிக்கும்
இடம் பொறாமையின் இரிந்து போய், வடதிசை இறுத்த. 6.30.17

கவிக் கூற்று

ஆழி மால் வரை வேலி சுற்றிட வகுத்து அமைத்த
ஏழு வேலையும், இடு வலை; அரக்கரே, இன மா
வாழி காலனும் விதியும் வெவ் வினையுமே, மள்ளர்;
தோழம், மாமதில் இலங்கை; மால் வேட்டம் மேல் தொடர்ந்தான். 6.30.18

சேனைகளின் பேராரவாரம்

ஆர்த்த ஓசையோ? அலங்கு தேர் ஆழியின் அதிர்ப்போ?
கார்த் திண் மால் கரி முழக்கமோ? வாசியின் கலிப்போ?
போர்த்த பல் இயத்து அரவமோ? நெருக்கினாற் புழுங்கி
வேர்த்த அண்டத்தை வெடித்திடப் பொடித்தது, மேன்மேல். 6.30.19

சேனைக் கடலின் தோற்றம்

வழங்கு பல்படை மீனது; மதகரி மகரம்
முழங்குகின்றது; முரி திரைப் பரியது; முரசம்
தழங்கு பேர் ஒலி கலிப்பது; தறுகண் மா நிருதப்
புழுங்கு வெஞ்சினச் சுறவது நிறை படைப் புணரி. 6.30.20

அரக்கர் சேனை விசும்பினும் பரவுதல்

தசும்பின் பொங்கிய திரள் புயத்து அரக்கர்தம் தானை
பசும் புல் தண் தலம் மிதித்தலின், கரிபடு மதத்தின்
அசும்பின் சேறுபட்டு, அளறுபட்டு அமிழுமால், அடங்க;
விசும்பின் சேறலின் கிடந்தது, அவ் விலங்கல்மேல் இலங்கை. 6.30.21

அரக்கர் சேனையைப் பார்த்து அஞ்சிய வானவர்கள், சிவபெருமானை இறைஞ்சுதலும் இறைவன் அவர்களது அச்சத்தைப் போக்குதலும்

படியைப் பார்த்தனர்; பரவையைப் பார்த்தனர்; படர்வான்
முடியைப் பார்த்தனர்; பார்த்தனர்; நெடுந் திசை முழுதும்;
விடியப் பார்ப்பது ஓர் வெள்ளிடை கண்டிலர்; மிடைந்த
பொடியைப் பார்த்தனர்; வேர்த்தனர், வானவர் குலைந்தார். 6.30.22

'உலகில் நாம் அலா உரு எலாம் இராக்கத உருவா,
அலகு இல் பல்படை பிடித்து அமர்க்கு எழுந்தவோ? அன்றேல்
விலகு இல் நீர் திரை வேலை ஓர் ஏழும் போய் விதியால்
புலைகொள் வல் உரு பொடித்தனவோ? ' எனப் புகன்றார். 6.30.23

நடுங்கி, நஞ்சு அடை கண்டனை, வானவர் 'நம்ப!
ஒடுங்கி யாம் கரந்து உறைவு இடம் அறிகிலம்; உயிரைப்
பிடுங்கி உண்குவர்; யார், இவர் பெருமைபண்டு அறிந்தார்?
முடிந்தது, எம் வலி 'என்றனர், ஓடுவான் முயல்வார். 6.30.24

'ஒருவரைக் கொல்ல, ஆயிரம் இராமர் வந்து, ஒருங்கே
இருபதிற்றிரண்டு ஆண்டு நின்று அமர்செய்தால், எனாம்?
நிருதரைக் கொல்வது, இடம்பெற்று ஓர் இடையில் நின்று அன்றோ?
பொருவது, இப்படை கண்டு, தம் உயிர் பொறுத்து அன்றோ? ' 6.30.25

என்று இறைஞ்சலும், இருள் மிடறு இறைவனும் 'இனி, நீர்
ஒன்றும் அஞ்சலீர்; வஞ்சனை அரக்கரை ஒருங்கே
கொன்று நீக்கும், அக் கொற்றவன்; இக்குலம் எல்லாம்
பொன்றுவிப்பது ஓர் விதி தந்தது ஆம் 'எனப் புகன்றான். 6.30.26

மூலபலப் படையைக் கண்டு வானரங்கள் அஞ்சி ஓடுதல்

புற்றின் நின்று வல் அரவு இனம் புறப்பட, பொருமி,
'இற்றது, எம்வலி 'என விரைந்து இரிதரும் எலிபோல்,
மற்று அ(வ்) வானரப் பெரும் கடல் பயம் கொண்டு மறுகி,
கொற்ற வீரரைப் பார்த்திலது; இரிந்தது, குலைவால். 6.30.27

அணையின்மேல் சென்ற, சிலசில; ஆழியை நீந்தப்
புணைகள் தேடின, சில; சில நீந்தின போன;
துணைகேளாடு புக்கு, அழுந்தின சில; சில தோன்றாப்
பணைகள் ஏறின; மலைமுழை புக்கன, பலவால். 6.30.28

ஓடிய வானரங்களின் அச்சச் சொல்

'அடைத்த பேர் அணை அளித்தது நமக்கு உயிர்; அடைய
உடைத்துப் போதுமால், அவர் தொடராமல் 'என்று, உரைத்த;
'புடைத்துச் செல்குவர் விசும்பினும் ' என்றன; போதோன்
படைத்த திக்கு எலாம் பரந்தனர் ' என்றன, பயத்தால். 6.30.29

சுக்கிரீவன், அனுமன், அங்கதன் ஆகியவர்கள் மட்டும் தன்னைப் பிரியாதுடனிருக்க, ஏனைய வானர வீரர்கள் நிலைகெட்டோடினமையை இராமன் நோக்குதல்

அரியின் வேந்தனும், அனுமனும், அங்கதன் அவனும்,
பிரியகிற்றிலர் இறைவனை, நின்றனர் பின்றார்;
இரியல் உற்றனர் மற்றையோர் யாவரும், எறிநீர்
விரியும் வேலையைக் கடந்தனர்; நோக்கினன், வீரன். 6.30.30

இப் பெரும்படை எங்கிருந்து வந்துளது? சொல்லுக 'என இராமன் கேட்க, வீடணன் மூலமாத் தானையைப்பற்றி எடுத்துரைத்தல்

'இக் கொடும் படை எங்கு உளது? இயம்புதி 'என்றான் :
மெய்க் கடுந் திறல் வீடணன் விளம்புவான் : 'வீர!
திக்கு அனைத்தினும், ஏழு மாத்தீவினும், தீயோர்
புக்கு அழைத்திடப் புகுந்துளது, இராக்கதப் புணரி. 6.30.31

'ஏழ் எனப்படும் கீழ் உள தலத்தின் நின்று ஏறி
ஊழி முற்றிய கடல் எனப் புகுந்ததும் உளதால்;
வாழி மற்று அவன் மூல மாத் தானை முன் வருவ;
ஆழி வேறு இனி அப்புறத்து இல்லை, வாள் அரக்கர். 6.30.32

'ஈண்டு இவ் அண்டத்துள் இராக்கதர் எனும் பெயர் எல்லாம்
மூண்டு வந்தது, தீ வினை முன்னின்று முடுக;
மாண்டு வீழும் இன்று என்கின்றது என்மதி; வலி ஊழ்
தூண்டுகின்றது 'என்று அடிமலர் தொழுது, அவன் சொன்னான். 6.30.33

அஞ்சியோடிய வானர சேனையை அழைத்து வருமாறு அங்கதனை இராமன் ஏவுதல்

கேட்ட அண்ணலும், முறுவலும் சீற்றமும் கிளர,
'காட்டுகின்றனன் என்; காணுதி ஒரு கணத்து 'என்னா,
'ஓட்டின் மேற்கொண்ட தானையைப் பயம் துடைத்து, உரவோய்!
மீட்டிகொல்? 'என, அங்கதன் ஓடினன் விரைந்தான். 6.30.34

அங்கதன் சென்று அழைக்கப் படைத்தலைவர் மட்டும் நின்று தாம் அஞ்சியோடியதற்குரிய காரணங் கூறுதல்

சென்று தானையை உற்றனன், 'சிறை சிறை கெடுவீர்!
நின்று கேட்டபின் நீங்குமின் ' எனச் சொல்லி நேர்வான்;
'ஒன்றும் கேட்கிலம் 'என்றது அக் குரக்கு இனம், உரையால்
வென்றி வெந்திறல் படைப்பெருந் தலைவர்கள் மீண்டார். 6.30.35

மீண்டு, வேலையின் வடகரை, ஆண்டு ஒரு வெற்பின்
ஈண்டினார்களை, 'என் குறித்து இரிவு உற்றது? 'என்றான்;
'ஆண்ட நாயக! கண்டிலை, போலும், நீ அவரை?
மாண்டு செய்வது என்? 'என்று உரை கூறினர், மறுப்பார். 6.30.36

'ஒருவன் இந்திரசித்து என உள்ளவன் உள நாள்
செருவின் உற்றவை, கொற்றவ! மறத்தியோ? தெரியின்,
பொரு இல் மற்றவர் இற்றிலர், யாரொடும் பொருவார்;
இருவர் வில்பிடித்து, யாவரைத் தடுத்து நின்று எய்வார்? 6.30.37

'புரம் கடந்த அப் புனிதனே முதலிய புலவோர்
வரங்கள் தந்து உலகு அளிப்பவர் யாவரும், மாட்டார்,
கரந்து அடங்கினர்; இனி, மற்று அவ் அரக்கரைக் கடப்பார்
குரங்கு கொண்டு வந்து, அமர்செயும் மானுடர் கொல்லாம்? ' 6.30.38

'ஊழி ஆயிரம் கோடி நின்று, உருத்திரனோடும்
ஆழியானும் மற்று அயனொடு புரந்தரன் அவனும்,
சூழ ஓடினர்; ஒருவரைக் கொன்று தம் தோளால்
வீழுமா செய்ய வல்லரேல், வென்றியின் நன்றே! 6.30.39

'என் அப்பா! மற்று இவ் எழுபது வெள்ளமும், ஒருவன்
தின்னப் போதுமோ? தேவரின் வலியமோ, சிறியேம்?
முன் இப் பாரெலாம் படைத்தவன், நாளெலாம் முறைநின்று,
உன்னிப் பார்த்து நின்று, உறையிடப் போதுமோ, யூகம்? 6.30.40

'நாயகன் தலை பத்து உள; கையும் நால் ஐந்து 'என்று
ஓயும் உள்ளத்தேம்; ஒருவன், மற்று அவன்; வந்து, இங்கு உற்றார்
ஆயிரம் தலை; அதற்கு இரட்டிக் கையர்; ஐயா!
பாயும் வேலையின் கூலத்து மணலினும் பலரால் 6.30.41

'கும்பகன்னன் என்று உளன், மற்று இங்கு ஒருவன், கைக் கொண்ட
அம்பு தாங்கவும் மிடுக்கு இலம்; அவன் செய்தது அறிதி;
உம்பர் அன்றியே, உணர்வு உடையார் பிறர் உளரோ?
நம்பி! நீயும் உன் தனிமையை அறிந்திலை; நடந்தாய். 6.30.42

'அனுமன் ஆற்றலும், அரசனது ஆற்றலும், இருவர்
தனுவின் ஆற்றலும், தம் உயிர் தாங்கவும் சாலா;
கனியும் காய்களும் உணவு உள; முழை உள, கரக்க;
மனிதர் ஆளின் என், இராக்கதன் ஆளின் என், வையம்? 6.30.43

'தாம் உளார் அன்றே, புகழினைத் திருவொடும் தரிப்பார்?
யாம் உேளாம் எனின், எம் கிளை உள்ளது; எம் பெரும!
"போமின் நீர் " என்று விடை தரத் தக்கனை, புரப்போய்!
"சாமின் நீர் " என்றல் தருமம் அன்று ' என்றனர், தளர்ந்தார். 6.30.44

அங்கதன் சாம்பனை நோக்கி, 'ஓடுதல் தக்கதன்று 'என்று காரணங்காட்டி உரைத்தல்

சாம்பனை வதனம் நோக்கி, வாலிசேய், 'அறிவு சான்றோய்!
"பாம்பு அணை அமலனே மற்று இராமன் " என்று, எமக்குப் பண்டே
ஏம்பல் வந்து எய்தச் சொல்லித் தேற்றினாய் அல்லையோ, நீ?
ஆம்பல் அம் பகைஞன் தன்னோடு அயிந்திரம் அமைந்தோன் அன்னாய்! 6.30.45

'தேற்றுவாய், தெரிந்த சொல்லால் தரெுட்டி இத்தெளிவு இல்லோரை
ஆற்றுவாய் அல்லை; நீயும் அஞ்சினை போலும்! ஆவி
போற்றுவாய் என்றபோது, புகழ் என் ஆம்? புலமை என் ஆம்?
கூற்றின் வாய் உற்றால், வீரம் குறைவரே! இறைமை கொண்டார்? 6.30.46

'அஞ்சினாம்; பழியும் பூண்டாம்; அம்புவி யாண்டும், ஆவி
துஞ்சும் ஆறு அன்றி வாழ ஒண்ணுமோ, நாள் மேல் தோன்றின்,
நஞ்சு வாய் இட்டால் அன்னது அமுது அன்றே? நம்மை அம்மா,
தஞ்சம் என்று அடைந்த வீரர் தனிமையின் சாதல் நன்றே! 6.30.47

'தானவரோடும், மற்றைச் சக்கரத் தலைவனோடும்,
வானவர் கடைய மாட்டா மறிகடல் கடைந்த வாலி
ஆனவன் அம்பு ஒன்றாலே உலந்தமை அயர்த்தது என் நீ
மீன், அலர் வேலை பட்டது உணர்ந்திலை போலும்? மேலோய்! 6.30.48

'எத்தனை அரக்கரேனும், தருமம் ஆண்டு இல்லை அன்றே?
அத்தனை அறத்தை வெல்லும் பாவம் என்று அறிந்தது உண்டோ?
பித்தரைப் போல நீயும் இவரொடும் பெயர்ந்த தன்மை
ஒத்திலது 'என்னச் சொன்னான்; அவன் இவை உரைப்பது ஆனான் 6.30.49

சாம்பன் மறுமொழி பகர்தல்

நாணத்தால் சிறிதுபோது நவில்கிலன் இருந்து, பின்னர்,
'தூண் ஒத்த திரள்தோள் வீர! தோன்றிய அரக்கர் தோற்றம்
காணத்தான், நிற்கத்தான், அக் கறை மிடற்றவற்கும் ஆமே?
கோணற் பூ உண்ணும் வாழ்க்கைக் குரங்கின்மேல் குற்றம் உண்டோ? 6.30.50

தேவரும் அவுணர்தாமும் செருப் பண்டு செய்த காலை,
ஏவரே என்னால் காணப் பட்டிலர்? இருக்கை ஆன்ற
மூவகை உலகின் உள்ளார், இவர்துணை ஆற்றல் முற்றும்
பாவகர் உளரே? கூற்றும் இவருடன் பகைக்க வற்றோ? 6.30.51

'மாலியைக் கண்டேன்; மற்றை மாலியவானைக் கண்டேன்;
கால நேமியையும் கண்டேன்; இரணியன்தனையும் கண்டேன்;
ஆலமா விடமும் கண்டேன்; மதுவினை அனுசனோடும்
வேலையைக் கலக்கக் கண்டேன்; இவர்க்கு உளமிடுக்கும் உண்டோ? 6.30.52

'வலி இதன்மேலே, பெற்ற வரத்தினர்; மாயம் வல்லார்;
ஒலி கடல் மணலின் மிக்க கணக்கினர்; உள்ளம் நோக்கின்,
கலியினும் கொடியர்; கற்ற படைக்கலக் கரத்தர்; என்றால்,
மெலிகுவது அன்றி உண்டோ, விண்ணவர் வெருவல் கண்டால்? 6.30.53

'ஆகினும், ஐய! வேண்டினார்க்கு என அமரில் அஞ்சி,
சாகிலம் பெயர்ந்த தன்மை, பழிதரும்; நரகில் தள்ளும்;
ஏகுதும், மீள; இன்னும் இயம்புவது உளதால்; எய்தி,
மேகமே அனையான் கண்முன் எங்ஙனம் விழித்து நிற்றும்? 6.30.54

சாம்பனை நோக்கி அங்கதன் தேறுதல்மொழி பகர்தல்

என்று எடுத்து எண்கின் தானைக்கு இறையவன் இயம்பலோடும்,
வன்திறல் குலிசம் ஓச்சி வரைச் சிறகு அரிந்து, வெள்ளிக்
குன்று இடை நீலக் கொண்மூ அமர்ந்து என மதத்தின் குன்றின்
நின்றவன் அருளும் மைந்தன் மகன், இவை நிகழ்த்தல் உற்றான் 6.30.55

'எடுத்தலும், சாய்தல்தானும், இறத்தலும், எதிர்த்தோர் தம்மைப்
படுத்தலும், வீர வாழ்க்கை பற்றினர்க்கு உற்ற, மேல்நாள்;
அடுத்ததே அஃது; நிற்க, அன்றியும் ஒன்று கூறக்
கடுத்தது; கேட்டீர் நீரும். கருத்துளீர், கருதி நோக்கின். 6.30.56

'ஒன்றும் நீ அஞ்சல், ஐய! யாம் எலாம் ஒருங்கு சென்று
நின்றும், ஒன்று இயற்றல் ஆற்றேம்; நேமியான் தானே நேர்ந்து
கொன்று போர் கடக்கும் ஆயின் கொள்ளுதும் வென்றி, அன்றேல்
பொன்றுதும் அவனோடு என்றான் 'போதலோ புகழ் அன்று 'என்றான். 6.30.57

வானரத் தலைவரெல்லாம் அங்கதனுடன் மீண்டும் வருதலும் எதிர்த்த அரக்கர் சேனையைக் குறித்து இராமன் தம்பிக்கு உரைத்தலும்

'ஈண்டிய தானை நீங்க, நிற்பது என்? யாமே சென்று
பூண்ட வெம் பழியினோடும் போந்தனம்; போதும் 'என்னா,
மீண்டனர் தலைவர் எல்லாம், அங்கதனோடும்; வீரன்
மூண்ட வெம் படையை நோக்கி, தம்பிக்கு மொழிவ தானான். 6.30.58

'அத்த! நீ உணர்தி அன்றே அரக்கர்தான், அவுணரேதான்,
எத்தனை உளர் என்றாலும், யான் சிலை எடுத்தபோது,
தொத்து உறு கனலின் வீழ்ந்த பஞ்சு எனத் தொலையும் தன்மை!
ஒத்தது : ஒர் இடையூறு உண்டு என்று உணர்வு இடை உதிப்பது உண்டால். 6.30.59

வானர சேனை, அரக்கர் சேனையால் நிலைகுலையா வண்ணம் அனுமனோடும் சுக்கிரீவனோடும் சென்று காக்குமாறு இராமன் இலக்குவனுக்கு உரைத்தல்

'காக்குநர் இன்மை கண்ட கலக்கத்தால், கவியின் சேனை
போக்கு அறப் போகித் தம்தம் உறைவிடம் புகுதல் உண்டால்;
தாக்கி, இப் படையை முற்றுந் தலை துமிப்பு அளவும், தாங்கி,
நீக்குதி, நிருதர் ஆங்கு நெருங்குவார் நெருங்கா வண்ணம். 6.30.60

'இப்புறத்து இனைய சேனை ஏவி, ஆண்டு இருந்த தீயோன்
அப்புறத்து அமைந்த சூழ்ச்சி அறிந்தவன், அயலே வந்து,
தப்பு அறக் கொன்று நீக்கில், அவனை யார் தடுக்கத் தக்கார்,
வெப்பு உறுகின்றது உள்ளம் வீர! நீ அன்றி, வில்லோர்? 6.30.61

'மாருதியோடு நீயும், வானரக் கோனும், வல்லே,
பேருதிர் சேனை காக்க; என்னுடைத் தனிமை பேணிச்
சோருதிர் என்னின், வெம்போர் தோற்றும், நாம் 'என்னச் சொன்னான்,
வீரன்; மற்று அதனைக் கேட்ட இளையவன் விளம்பலுற்றான். 6.30.62

இலக்குவன் அதற்கு இசைந்து செல்ல, அனுமன் இராமனுக்கு அருகே நின்று அடித்தொண்டு புரிய வேண்டுதல்

'அன்னதே கருமம்; ஐய! அன்றியும், அருகே நின்றால்,
என் உனக்கு உதவிசெய்வது இதுபடை என்றபோது
சென்னியில் சுமந்த கையர் தேவரே போல, யாமும்
பொன் உடை வரிவில் ஆற்றல் புறன்நின்று காண்டல் போக்கி? 6.30.63

என்று அவன் ஏகல் உற்ற காலையின், அனுமன், 'எந்தாய்!
"புன்தொழில் குரங்கு " எனாது, என் தோளின்மேல் ஏறிப் புக்கால்,
நன்று எனக் கருதாநின்றேன்; அல்லது, நாயினேன் உன்
பின் தனிநின்ற போதும், அடித்தொழில் பிரியேன் 'என்றான். 6.30.64

இலக்குவனுக்கு உற்ற துணை நீ என்று இராமன் கூற, அனுமன், இலக்குவன் பின்னே செல்லுதல்

'ஐய! நிற்கு இயலாது உண்டோ? இராவணன் அயலே வந்து உற்று,
எய்யும் வில்கரத்து வீரன் இலக்குவன்தன்னோடு ஏற்றால்,
மொய் அமர்க்களத்தின் உன்னைத் துணைபெறான் என்னின், முன்ப!
செய்யும் மா வெற்றி உண்டோ? சேனையும் சிதையும் அன்றே? 6.30.65

'ஏரைக் கொண்டு அமைந்த குஞ்சி இந்திரசித்து என்பான் தன்
போரைக் கொண்டு இருந்த முன்நாள் இளையவன் தன்னைப் போக்கிற்று
ஆரைக் கொண்டு? உன்னால் அன்றே, வென்றது அங்கு அவனை? இன்னும்,
வீரர்க்கும் வீர! நின்னைப் பிரிகிலன், வெல்லும் என்பேன். 6.30.66

'சேனையைக் காத்து, என் பின்னே திருநகர் தீர்ந்து போந்த
யானையைக் காத்து, மற்றை இறைவனைக் காத்து, எண் தீர்ந்த
வானை இத்தலத்தினோடும் மறையோடும் வளர்த்தி 'என்றான்.
ஏனை மற்று உரைக்கலாதான், இளவல்பின் எழுந்து சென்றான். 6.30.67

இலக்குவனுக்குத் துணையாக வீடணனையும் உடன் அனுப்புதல்

'வீடண! நீயும் மற்று உன் தம்பியோடு ஏகி, வெம்மை
கூடினர் செய்யும் மாயம் தெரிந்தனை கூறி, கொற்றம்
நீடுறு தானைதன்னைத் தாங்கினை, நில்லாய் என்னின்,
கேடு உளது ஆகும் என்றான்; அவன் அது கேட்பதானான். 6.30.68

சுக்கிரீவன் முதலியோரும் இராமன் சொல்லியதை யேற்று இலக்குவனுடன் சென்று வானர சேனையைக் காத்தல்

'சூரியன் சேயும், 'செல்வன் சொற்றதே 'என்னும் சொல்லன்,
ஆரியன் பின்பு போனான்; அனைவரும், 'அதுவே நல்ல
காரியம் 'என்னக் கொண்டார்; கடல் படை காத்து நின்றார்;
வீரியன் பின்னர்ச் செய்த செயல் எலாம் விரிக்கலுற்றாம் 6.30.69

இராமன் வில் ஏந்திச் சேனையின் முன்னணியில் வந்து பொருதல்

வில்லினைத் தொழுது வாங்கி, ஏற்றினான் வில்நாண்; மேருக்
கல் எனச் சிறந்ததேனும், கருணை அம்கடலே அன்ன
எல் ஒளி மார்பில் தீராக் கவசம் இட்டு, இழையா வேதச்
சொல் எனத் தொலையா வாளித் தூணியும் புறத்துத் தூக்கி, 6.30.70

ஓசனை நூற்றின் வட்டம் இடைவிடாது உறைந்த சேனைத்
தூசி வந்து அண்ணல் தன்னைப் போக்கு அற வளைந்து சுற்றி,
வீசின படையும் அம்பும் மிடைதலும், விண்ணோர் யாக்கை
கூசின; பொடியால் எங்கும் குமிழ்த்தன, வியோம கூடம். 6.30.71

தேவர்கள் தம் கருத்து முடிந்திட இராமனை ஏத்திப் பரவுதல்

'கண்ணனே! எளியேம் இட்ட கவசமே! கடலே அன்ன
வண்ணனே! அறத்தின் வாழ்வே! மறையவர் வலியே! மாறாது
ஒண்ணுமே, நீ அலாது, ஓர் ஒருவர்க்கு இப் படைமேல் ஊன்ற;
எண்ணமே முடித்தி 'என்னா, ஏத்தினர், இமையோர் எல்லாம். 6.30.72

அரக்கர் கூட்டத்தினைக் கண்டு அஞ்சிய, முனிவர்கள் 'இராமன் வெல்க 'என வாழ்த்துக் கூறுதல்

முனிவரே முதல்வர் ஆய அறத்துறை முற்றினோர்கள்,
தனிமையும், அரக்கர் தானைப் பெருமையும், தரிக்கலாதார்,
பனிவரு கண்ணர், விம்மிப் பதைக்கின்ற நெஞ்சர், 'பாவத்து
அனைவரும் தோற்க! அண்ணல் வெல்க 'என்று ஆசி சொன்னார். 6.30.73

தேவர்கள் முதலியோர் இராமனை வாழ்த்துதல்

மற்றும் வேறு அறத்துள் நின்ற வானம் நாடு அனைத்து உேளார்,
'கொற்ற வில்லி வெல்க வஞ்ச மாயர் வீக! குவலயத்து
உற்ற தீமை தீர்க இன்றோடு ' என்று கூறினார்; நிலம்
துற்ற வெம்படைக் கைநீசர், இன்ன இன்ன சொல்லினார். 6.30.74

தனிநின்று பொரும் இராமனது ஆற்றல் கண்டு, அரக்கர் வியத்தல்

'இரிந்த சேனை சிந்தி, யாரும் இன்றி ஏக, நின்று, நம்
விரிந்த சேனை கண்டு, யாதும் அஞ்சல் இன்றி, வெஞ்சரம்
தெரிந்து, சேவகம் திறம்பல் இன்றி, நின்ற செய்கையான்,
புரிந்த தன்மை வென்றி மேலும் நன்று; மா லி பொய்க்குமோ? 6.30.75

'புரங்கள் எய்த புங்கவற்கும் உண்டு தேர்; பொருந்தினார்,
பரந்த தேவர்; மாயன் நம்மை வேர் அறுத்த பண்டைநாள்,
விரைந்து புள்ளின்மீது விண்ணுளோர்கேளாடு மேவினான்;
கரந்திலன், தனித்து ஒருத்தன் நேரும், வந்து, காலினான். 6.30.76

'தேரும், மாவும், யானையோடு சீயம், யாளி ஆதியா
மேரு மானும் மெய்யர்நின்ற வேலை, ஏழின் மேலவாம்;
"வாரும், வாரும் " என்று அழைக்கும் மானுடற்கு, இம் மண்ணிடைப்
பேருமாறும், நம்முழைப் பிழைக்குமாறும் எங்ஙனே? 6.30.77

அரக்கர் வந்து தன்னைச் சூழ்ந்த நிலையில், இராமன் வில்நாணொலியை எழுப்புதல்

என்று சென்று, இரைத்து எழுந்து, ஓர் சீய ஏறு அடர்ந்ததைக்
குன்று வந்து சூழ்வளைத்த போல், தொடர்ந்து கூடலும்,
'நன்று இது 'என்று, ஞாலம் ஏழும் நாகம் ஏழும் மானும்தன்
வென்றி வில்லை வேதநாதன் நாண் எறிந்த வேலைவாய். 6.30.78

அரக்கர் சேனையில் தீய நிமித்தங்கள் தோன்றுதல்

கதம் புலர்ந்த, சிந்தைவந்த, காவல் யானை, மாலொடு
மதம் புலர்ந்த; நின்ற வீரர் வாய்புலர்ந்த; மா எலாம்
பதம், புலர்ந்த வேகம் ஆக, வாள் அரக்கர் பண்பு சால்
விதம் புலர்ந்தது என்னின், வென்ற வென்றி சொல்ல வேண்டுமோ? 6.30.79

வெறித்து இரிந்த வாசியோடு, சீய மாவும் மீளியும்,
செறித்து அமைந்த சில்லி என்னும் ஆழிகூடு தேர் எலாம்
முறித்து எறிந்து முந்த, யானை வீசும் மூசு பாகரைப்
பிறித்து இரிந்து சிந்த, வந்து ஒர் ஆகுலம் பிறந்ததால். 6.30.80

துன்னிமித்தந் தோன்றிய அரக்கர் சேனைமீது இராமன் அம்பு ஏவுதல்

'இந் நிமித்தம் இப்படைக்கு இடம் துடித்து அடுத்தது ஓர்
துன்னிமித்தம் 'என்று கொண்டு வானுளோர்கள் துள்ளினார்;
அந் நிமித்தம் உற்றபோது, அரக்கர் கண் அரங்க, மேல்
மின் நிமிர்த்தது அன்ன வாளி வேதநாதன் வீசினான். 6.30.81

ஆளி மேலும், ஆளின் மேலும், ஆனைமேலும், ஆடல்மா
மீளி மேலும், வீரர்மேலும், வீரர் தேரின்மேலும், வெவ்
வாளி மேலும் : வில்லின் மேலும் மண்ணின்மேல் வளர்ந்த மாத்
தூளி மேலும் ஏற ஏற, வீரன் வாளி தூவினான். 6.30.82

இராமன் எய்த அம்புகளால் அரக்கர் சேனை அழிதல்

மலை விழுந்தவா விழுந்த, மான யானை; மள்ளர் செந்
தலை விழுந்தவா விழுந்த, தாய வாசி; தாளறும்
சிலை விழுந்தவா விழுந்த திண் பதாகை; திங்களின்
கலை விழுந்தவா விழுந்த, வெள் எயிற்ற காடு எலாம். 6.30.83

வாடை நாலுபாலும் வீச, மாக மேக மாலை வெங்
கோடை மாரி போல வாளி கூட, ஓடை யானையும்
ஆடல் மாவும் வீரர் தேரும், ஆளும், மாள்வது ஆனவால்;
பாடு பேரும் ஆறு கண்டு, கண் செல் பண்பும் இல்லையால். 6.30.84

விழித்த கண்கள், கைகள், மெய்கள், விற்கள், வேல்கள், உட்கிடத்
தழெித்த வாய்கள், செல்லல் உற்ற தாள்கள், தோள்கள், செல்லினைப்
பழித்த வாளி சிந்த நின்று பட்டது அன்றி, விட்டகோல்,
கழித்த ஆயுதங்கள், ஒன்று செய்தது இல்லை கண்டதே. 6.30.85

தொடுத்த வாளியோடு வில் துணிந்து வீழும், முன்; துணிந்து
எடுத்த வாள்கேளாடு தோள்கள் இற்று வீழும்; மற்று உடன்
கடுத்த தாள்கள் கண்டம் ஆகும்; எங்ஙனே, கலந்து நேர்
தடுத்து அ(வ்) வீரர் தாமும் ஒன்று செய்யுமா சலத்தினால்? 6.30.86

குரம் துணிந்து, கண் சிதைந்து, பல்லணம் குலைந்து, பேர்
உரம் துணிந்து, வீழ்வது அன்றி, ஆவி ஓட ஒண்ணுமே
சரம் துணிந்த ஒன்றை நூறு சென்று சென்று தள்ளலால்,
வரம் துணிந்த வீரர் போரின் முந்த உந்து வாசியே! 6.30.87

ஊர உன்னின், முன்பு பட்டு உயர்ந்த வெம் பிணங்களால்
பேர ஒல்வது அன்று; பேரின் ஆயிரம் பெருஞ் சரம்
தூர, ஒன்று நூறு கூறு பட்டு உகும்; துயக்கு அலால்
தேர்கள் என்று வந்த பாவி என்ன செய்கை செய்யுமே? 6.30.88

எட்டு வன் திசைக்கண் நின்ற யாவும் வல்ல யாவரும்,
கிட்டின், உய்ந்து போகிலார்கள் என்ன நின்ற, கேள்வியால்;
முட்டும் வெங்கண் மான யானை, அம்பு உராய, முன்னமே
பட்டு உலந்த போல் விழுந்த; என்ன தன்மை பண்ணுமே? 6.30.89

வாவி கொண்ட புண்டரீகம் அன்ன கண்ணன் வாளி ஒன்று
ஏவின், உண்டை நூறு கோடி கொல்லும் என்ன, எண்ணுவான்
பூவின் அண்டர் கோனும், எண் மயங்கும்; அன்ன போரின் வந்து
ஆவி கொண்ட காலனார் கடுப்பும் அன்னது ஆகுமே. 6.30.90

கொடிக் குலங்கள், தேரின் மேல யானை மேல, கோடைநாள்
இடிக் குலங்கள் வீழ வெந்த காடுபோல் எரிந்தவால்
முடிக் குலங்கள் கோடி கோடி சிந்த, வேகம் முற்று உறா
வடிக் குலங்கள் வாளி ஓட வாயினூடு தீயினால்! 6.30.91

அற்ற வேலும் வாளும் ஆதி ஆயுதங்கள்மீது எழுந்து,
உற்ற வேகம் உந்த ஓடி, ஓத வேலை ஊடு உற,
துற்ற வெம்மை கைம் மிகச் சுறுக்கொளச் சுவைத்ததால்,
வற்றி நீர் வறந்து, மீன் மறிந்து, மண் செறிந்தவால். 6.30.92

போர் அரிந்தமன் துரந்த புங்க வாளி, பொங்கினார்
ஊர் எரிந்தநாள் துரந்தது என்ன மின்னி ஓடலால்,
நீர் எரிந்த வண்ணமே, நெருப்பு எரிந்த, நீள்நெடுந்
தேர் எரிந்த, வீரர்தம் சிரம் பொடிந்து சிந்தவே. 6.30.93

பிடித்த வாள்கள், வேல்கேளாடு, தோள்கள் பேர் அரா எனத்
துடித்த; யானைமீது இருந்து போர்தொடங்கு சூரர்தம்
மடித்த வாய செந்தலைக் குலம் புரண்ட, வானின் மின்
இடித்த வாயின் இற்ற மாமலைக் குலங்கள் என்னவே. 6.30.94

கோர ஆளி, சீயம், மீளி, கூளியோடு, ஞாளியும்,
போர வாளினோடு தேர்கள் நூறு கோடி பொன்றுமால்
நார ஆளி, ஞால ஆளி, ஞான ஆளி, நாந்தகப்
பார வாளி, வீர ஆளி, ஏக வாளி பாயவே. 6.30.95

ஆழி பேற்ற தேர் அழுந்தும்; ஆள் அழுந்தும், ஆேளாடும்
சூழி பெற்ற மா அழுந்தும்; வாசியும் சுரிக்குமால்
பூழி பெற்ற வெங்களம் குளம்படப் பொழிந்த பேர்
ஊழி பெற்ற ஆழி அன்ன சோரி நீரினுள் அரோ. 6.30.96

அற்று மேல் எழுந்தவன் சிரங்கள் தம்மை அண்மி, மேல்
ஒற்றும் என்ன அங்கும் இங்கும் விண்ணுளோர் ஒதுங்குவார்;
'சுற்றும் வீழ் தலைக் குலங்கள் சொல்லு கல்லின் மாரிபோல்
எற்றும் 'என்றும், பாரின் எங்கும் வாழுவார் இரங்குவார். 6.30.97

மழைத்த மேகம் வீழ்வது என்ன, வான மானம் வாடையின்
சுழித்து வந்து வீழ்வது என்ன, மண்ணின்மீது துன்னுமால்
அழித்து ஒடுங்கு கால மாரி அன்ன வாளி ஓளியால்,
விழித்து எழுந்து, வானின் ஊடு மொய்த்த பொய்யர் மெய் எலாம். 6.30.98

அரக்கர்கள் கடும் போர் புரிதல்

தெய்வ நெடும் படைக் கலங்கள் விடுவர்சிலர்;
சுடுகணைகள் சிலையில் கோலி,
எய்வர் சிலர்; எறிவர் சிலர்; எற்றுவர்,
மலைகள் பலவும் ஏந்திப்
பெய்வர் சிலர்; 'பிடித்தும் 'எனக் கடுத்து உறுவர்;
படைக்கலங்கள் பெறாது, வாயால்,
வைவர் சிலர்; தழெிப்பர் சிலர்; திரிவர்
சிலர் வயவர் மன்னோ. 6.30.99

ஆர்ப்பர் பலர்; அடர்ப்பர் பலர்; அடுத்து அடுத்தே
படைக் கலங்கள் அள்ளி அள்ளித்
தூர்ப்பர் பலர்; மூவிலைவேல் துரப்பர் பலர்;
கரப்பர் பலர்; சுடுதீத் தோன்றப்
பார்ப்பர் பலர்; நெடு வரையைப் பறிப்பர் பலர்;
பகலோனைப் பற்றிச் சுற்றும்
கார்ப் பருவ மேகம் என, வேக நெடும் படை
அரக்கர் கணிப்பு இலாதார். 6.30.100

இராமன் அரக்கர் படைகளை வென்று மேம்படுதல்

எறிந்தனவும், எய்தனவும், எடுத்தனவும்,
பிடித்தனவும், படைகள் எல்லாம்
முறிந்தன, வெம் கணைகள் பட; முற்றின,
சுற்றின தேரும், மூரிமாவும்;
நெறிந்தன குஞ்சிகேளாடும் நெடுந்தலைகள்
உருண்டன; பேர் இருளின் நீங்கி,
பிறிந்தனன் வெய்யவன் என்னப் பெயர்ந்தனன் மீது
உயர்ந்த தடம் பெரிய தோளான். 6.30.101

இராமபாணத்தின் செயல்

சொல் அறுக்கும் வலி அரக்கர், தொடுகவசம்
துகள்படுக்கும்; துணிக்கும் யாக்கை;
வில் அறுக்கும்; தலை அறுக்கும்; மிடல் அறுக்கும்;
அடல் அறுக்கும்; மேல் மேல் வீசும்
கல் அறுக்கும்; மரம் அறுக்கும்; கை அறுக்கும்;
செய்யமள்ளர் கமலத்தோடு
நெல் அறுக்கும் திருநாடன் நெடுஞ்சரம் என்றால்,
எவர்க்கும் நிற்கலாமோ? 6.30.102

கவிக்கூற்று

' கால் இழந்தும், வால் இழந்தும், கை இழந்தும்,
கழுத்து இழந்தும், பருமக் கட்டின்
மேல் இழந்தும், மருப்பு இழந்தும் விழுந்தன,
என்குநர் அல்லால், வேலை அன்ன
மால் இழந்து, மழை அனைய மதம் இழந்து, வலி
இழந்து, மலைபோல் வந்த
தோல் இழந்த தொழில் ஒன்றும் சொல்லினார்
இல்லை நெடுஞ் சுரர்கள் எல்லாம். 6.30.103

பலகோடிகளாய் வந்த நால்வகைச் சேனையையும் இராமன் ஒருவனாகவே பொருது வெல்லுதல்

வேல் செல்வன சத கோடிகள்; விண்மேல் நிமிர் விசிகக்
கோல் செல்வன சதகோடிகள்; கொலை செய்வன மலைய,
தோல் செல்லன சதகோடிகள் : துரகம் தொடர் இரதக்
கால் செல்வன சதகோடிகள்; ஒருவன், அவை கடிவான். 6.30.104

ஒரு வில்லியை, ஒரு காலையின், உலகு ஏழையும் உடற்றும்
பெரு வில்லிகள், முடிவு இல்லவர், சரமாமழை பெய்வார் :
பொரு வில்லவர் கணை மாரிகள் பொடியாம் வகை பொழிய,
திருவில்லிகள் தலைபோய் நெடுமலைபோல் உடல் சிதைவார். 6.30.105

'நூறாயிர மதயானையின் வலியோர் ' என நுவல்வோர்,
மாறு ஆயினர், ஒரு கோல் பட, மலைபோல உடல் மறிவார்;
ஆறு ஆயிரம் உள ஆகுவ அழி செம்புனல்; அவைபுக்கு
ஏறாது எறிகடல் பாய்வன, சின மால் கரி இனமால். 6.30.106

மழு அற்று உகும்; மலை அற்று உகும்; வளை அற்று உகும்; வயிரத்து
எழு அற்று உகும;் இலை அற்று உகும்; அயில் அற்று உகும்; எறிவேல்
பழு அற்று உகும்; மத வெங் கரி; பரி அற்று உகும்; இரதக்
குழு அற்று உகும்; ஒரு வெங்கணை தொடை பெற்றது ஓர் குறியால். 6.30.107

அரக்கர் பலரும் போரில் இறத்தல்

ஒருகாலையின், உலகத்து உறும் உயிர் யாவையும் உண்ண
வருகாலனும், அவன் தூதரும், நமன்தானும், அவ் வரைப்பின்
இரு கால் உடையவர் யாவரும் திரிந்தார் இளைத்திருந்தார்;
அருகு ஆயிரம் உயிர் கொண்டு தம் ஆறு ஏகலர் அயர்ந்தார். 6.30.108

போர்க்களத்தில் கவந்தங்கள் எழுந்து ஆடுதல்

அடுக்கு உற்றன, மதயானையும், அழிதேர்களும், பரியும்
தொடுக்குற்றன விசும்பு ஊடு உறச் சுமந்து ஓங்கின எனினும்,
மிடுக்குற்றன கவந்தம் குலம் எழுந்து ஆடலின் எல்லாம்
நடுக்குற்றன, பிணக் குன்றுகள், உயிர் நண்ணின என்ன. 6.30.109

பகைவரது உடற்குருதி தன் திருமேனியிற் படியப் பொருதுநின்ற இராமனது தோற்றம்

பட்டார் உடல்படு செம்புனல் திருமேனியில் படலால்,
கட்டு ஆர் சிலைக் கரு ஞாயிறு புரைவான், கடையுகநாள்,
சுட்டு ஆசு அறுத்து உலகு உண்ணும் அச் சுடரோன் எனப் பொலிந்தான்;
ஒட்டார் உடல் குருதி குளித்து எழுந்தானையும் ஒத்தான். 6.30.110

இறவாது எஞ்சிய அரக்கர்கள் இராமனைச் சூழ்ந்துகொள்ளுதல்

தீ ஒத்தன உரும் ஒத்தன சரம் சிந்திட, சிரம் போய்
மாயம் தமர் மடிகின்றனர் எனவும், மறம் குறையார்,
காயத்திடை உயிர் உண்டிட, உடன்மொய்த்து எழு களியால்
ஈ ஒத்தன நிருதக்குலம்; நறவு ஒத்தனன் இறைவன். 6.30.111

இராமன், தன்னைச் சூழ்ந்து மொய்த்தாரை அழித்தல்

மொய்த்தாரை ஓர் இமைப்பின்தலை, முடுகத் தொடு சிலையால்
தைத்தான்; அவர், கழல் திண் பசுங்காய் ஒத்தனர், சரத்தால்;
கைத்தார் நெடுந்தேரும், கடுங் களிறும், களத்து அழுந்தக்
குத்தான், அழி குழம்பு ஆம் வகை, வழுவாச் சரக் குழுவால். 6.30.112

பிரிந்தார் பலர்; இரிந்தார் பலர்; பிழைத்தார் பலர்; உழைத்தார்;
புரிந்தார் பலர்; நெரிந்தார் பலர்; புரண்டார் பலர்; உருண்டார்;
எரிந்தார் பலர்; கரிந்தார் பலர்; எழுந்தார் பலர், விழுந்தார்,
சொரிந்தார் குடல், துமிந்தார் தலை, கிடந்தார்; எதிர் தொடர்ந்தார். 6.30.113

மணி குண்டலம், வலயம், குழை, மகரம், சுடர் மகுடம்,
அணி கண்டிகை, கவசம், கழல் திலகம் முதல கலம்,
துணிவு உண்டவர் உடல் சிந்தின, தொடர்கின்றன, சுடரும்;
திணி கொண்டலினிடை மின்குலம் மிளிர்கின்றன சிவண. 6.30.114

அரக்கர் அஞ்சி வியக்குமாறு இராமன் சாரிகை திரிதல்

முன்னே உளன்; பின்னே உளன்; முகத்தே உளன்; அகத்தின்
தன்னே உளன்; மருங்கே உளன்; தலைமேல் உளன்; மலைமேல்
கொன்னே உளன்; நிலத்தே உளன்; சும்பே உளன்; கொடியோர்,
'என்னே ஒரு கடுப்பு! 'என்றிட, ஞ் சாரிகை திரிந்தான். 6.30.115

நேரினன்; என் நேரினன் ' என்று யாவரும் எண்ண,
பொன் நேர்வரு வரிவில் கரத்து ஒரு கோளரி பொருவான்,
ஓன்னார் பெரும் படைப் போர் கடல் உள் நின்றனன் எனினும்
அல்நேரவர் உடனே திரி நிழலே எனல் ஆனான். 6.30.116

பள்ளம் படுகடல் ஏழினும், படி ஏழினும், பகையின்
வெள்ளம் பல உள என்னினும், வினையம் பல தெரியா,
கள்ளம் படர் பெருமாயையின் கரந்தார் உருப் பிறந்தார்
உள் அன்றியும் புறத்தேயும் உற்று உளனாம் என உற்றான். 6.30.117

நானாவிதப் பெருஞ் சாரிகை திரிகின்றது நவிலார்,
போனான், இடை புகுந்தான், எனப் புலன் கொள்கிலர்,
'தானாவதும் உணர்ந்தான், உணர்ந்து உலகு எங்கணும் தானே
ஆனான்; வினை துறந்தான் 'என, இமையோர்களும் அயிர்த்தார். 6.30.118

சண்டக் கடு நெடுங் காற்று இடை துணிந்து எற்றிட, தரைமேல்
கண்டப் படு மலைபோல், நெடு மரம்போல், கடுந் தொழிலோர்
துண்டம் பட, கடுஞ் சாரிகை திரிந்தான், சரம் சொரிந்தான்
அண்டத்தினை அளந்தான் எனக் கிளர்ந்தான், நிமிர்ந்து அகன்றான். 6.30.119

களியானையும், நெடுந் தேர்களும், கடும் பாய் பரிக்கணனும்,
தெளி யாளியும், முரண் சீயமும், சின வீரர்தம் திறமும்,
வெளி வானகம் இலதாம் வகை விழுந்து ஓங்கிய பிணம் பேர்
நளிர் மாமலை பல தாவினன், நடந்தான் கடல் கிடந்தான். 6.30.120

அரக்கர் சேனைகள் அழிவுற்றுக் கிடக்கும் தோற்றம்

அம்பரங்கள் தொடும் கொடி ஆடையும்
அம்பரங்கெளாடும் களி யானையும்
அம்பு அரங்க அழுந்தின சோரியின்
அம்பரங்கம் அருங்கலம் ஆழ்ந்து என. 6.30.121

தம் மனத்தில் சலத்தர் மலைத்தலை
வெம்மை உற்று எழுந்து ஏறுவ மீளுவ
தமெ்முனைச் செரு மங்கை தன் செங்கையால்
அம் மனைக்குலம் ஆடுவ போன்றவே. 6.30.122

கேட கங்கண வன்கையொடும் கிளர்
கேடகங்கள் துணிந்து கிடந்தன;
கேடு அகம் கிளர்கின்ற களத்த நன்கு
ஏட கங்கள் மறிந்து கிடந்தவே. 6.30.123

அங்கதம் களத்து அற்று அழிந்தாரொடும்
அம் கதம் களத்து அற்று அழிவு உற்றவால்
புங்கவன் கணைப் புட்டில் பொருந்திய
புங்க வன்கணைப் புற்று அரவம் பொர. 6.30.124

கயிறு சேர் கழல் கார்நிறக் கண்டகர்
எயிறு வாளி படத் துணிந்து யானையின்
வயிறுதோறும் மறைவன வானிடைப்
புயல்தொறும் புகு வெண்பிறை போன்றவே. 6.30.125

வென்றி வீரர் எயிறும் விடா மதக்
குன்றின் வெள்ளை மருப்பும் குவிந்தன
என்றும் என்றும் எழுந்த இளம்பிறை
ஒன்றி மாநிலத்து உக்கவும் ஒத்தவால். 6.30.126

குருதி கடல் போற் பரவியதனால் தீவுகளில் உறைவோர் மலைகளின் மேலேறுதல்

ஓவிலார் உடல் உந்து உதிரப் புனல்
பாவி வேலை உலகு பரத்தலால்
தீவுதோறும் இனிது உறை செய்கையார்
ஈவு இலாத நெடுமலை ஏறினார். 6.30.127

இராமனது விற்றொழில் வன்மையால் அரக்கர் விண்ணில் நிரம்ப அவர்தம் உடல்கள் மண்ணில் நிறைதல்

விண் நிறைந்தன மெய் உயிர் வேலையும்
புண் நிறைந்த புனலின் நிறைந்தன;
மண் நிறைந்தன பேர் உடல்; வானவர்
கண் நிறைந்தன வில் தொழில் கல்வியே. 6.30.128

குருதி வெள்ளத்தால் இழுத்துச் செல்லப்பட்ட படைக்கலங்கள் கடலிற் புக்கமையால் மீன்கள் முதலியன அறுபட்டு இறத்தல்

செறுத்த வீரர் பெரும்படை சிந்தின
பொறுத்த சோரி புகக் கடல் புக்கன
இறுத்த நீரின் செறிந்தன எங்கணும்
அறுத்து மீனம் உலந்த அனந்தமே. 6.30.129

அரக்கர் படைத்தலைவனாகிய வன்னி என்பவன் இராமனொருவனால் நேர்ந்த அழிவினை எண்ணி வெகுண்டு அரக்கரகளைப் போரில் ஊக்குதல்

'ஒல்வதே! இவ் ஒருவன் இவ் யூகத்தைக்
கொல்வதே நின்று! குன்று அன்ன யாம் எலாம்
வெல்வது ஏதும் இலாமையின் வெண் பலை
மெல்வதே! 'என வன்னி விளம்பினான். 6.30.130

'கோல் விழுந்து அழுந்தாமுனம் கூடி யாம்
மேல் விழுந்திடினும் இவன் வீயுமால்;
கால் விழுந்த மழை அன்ன காட்சியீர்!
மால் விழுந்துளிர் போலும் மயங்கி நீர்! 6.30.131

'ஆயிரம் பெருவெள்ளம் அரைபடத்
தேய நிற்பது; பின்பு இனி என்செய?
பாயும் உற்று உடனே 'எனப் பன்னினான்
நாயகற்கு ஓர் உதவியை நல்குவான். 6.30.132

வெண்குண்டெழுந்த அரக்கர்கள் இராமனைச் சூழ்ந்து கொண்டு பல்வகைப் படைக்கலங்களைச் சொரிதல்

உற்று உருத்து எழு வெள்ளம் உடன்று எழா
சுற்று முற்றும் வளைந்தன தூவின
ஒற்றை மால் வரைமேல் உயர் தாரைகள்
பற்றி மேகம் பொழிந்து என பல் படை. 6.30.133

இராமன் அவற்றைச் சிதைத்து அம்பு மழை பொழிதல்

குறித்து எறிந்தன எய்தன கூறு உறத்
தறித்து தேரும் களிறும் தரைப்பட
மறித்து வாசி துணித்து அவர் மாப்படை
தறெித்துச் சிந்த சர மழை சிந்தினான். 6.30.134

தலையறுபட்ட உடல்கள் குருதி பொங்க ஆடுதலின் தோற்றம்

வாய் விளித்து எழு பல் தலை வாளியில்
போய் விளித்த குருதிகள் பொங்கு உடல்
பேய் விளிப்ப நடிப்பன பெட்பு உறும்
தீ விளிப்பு உறு தீபம் நிகர்த்தவால். 6.30.135

குருதியும் நிணமும் படிந்த நிலத்தின் தோற்றம்

நெய்கொள் சோரி நிறைந்த நெடுங்கடல்
செய்ய ஆடையள் அன்ன செஞ்சாந்தினள்
வைய மங்கை பொலிந்தனள்; மங்கலச்
செய்ய கோலம் புனைந்த அன்ன செய்கையாள். 6.30.136

எங்கும் குருதி பரந்தமையால் 'கடல்கள் ஏழு 'என்னும் அம்மொழி தவறுபடுதல்

உப்பு தேனு நெய் ஒண்தயிர் பால் கரும்பு
அப்பு தான் என்று உரைக்கும் அவ் ஆழிகள்
துப்புப் போல் குருதிப் புனல் சுற்றலால்
தப்பிற்று அவ் உரை இன்று ஓர் தனுவினால். 6.30.137

இராமனது வில் வளைந்தேயிருத்தலும் அரக்கர் சேனையின் அளவின்மையும்

ஒன்றுமே தொடை; கோல் ஒரு கோடிகள்
சென்று பாய்வன; திங்கள் இளம்பிறை
அன்றுபோல் எனல் ஆகியது அச்சிலை;
என்று மாள்வர் எதிர்த்த இராக்கதர்? 6.30.138

கடும் போர்புரிந்த அரக்கர் இராமன் அம்பினால் இறத்தல்

எடுத்தவர், இரைத்தவர், எரிந்தவர்,
செறிந்தவர், மறம் கொடு எதிரே
தடுத்தவர், சலித்தவர், சரிந்தவர், பிரிந்தவர்,
தனிக் களிறுபோல்
கடுத்தவர், கலித்தவர், கறுத்தவர், செறுத்தவர்,
கலந்து, சரம் மேல்
தொடுத்தவர், துணிந்தவர், தொடர்ந்தனர்,
கிடந்தனர் துரந்த கணையால். 6.30.139

தொடுப்பது சுடர்ப் பகழி ஆயிரம் நிரைத்தவை
துரந்த துறைபோய்ப்
படுப்பது, வயப் படைஞர் ஆயிரரை
அன்று, பதினாயிரவரை;
கடுப்பு அது; கருத்தும் அது; கட்புலன் மனம்
கருதல் கல்வி இல; வேல்
எடுப்பது படப் பொருவது அன்றி, இவர்
செய்வது ஒரு நன்றி உளதோ? 6.30.140

தூசியொடு நெற்றி இரு கையினொடு பேரணி
கடைக்குழை தொகுத்து
ஊசி நுழையா வகை சரத்து அணி வகுக்கும்;
அவை உண்ணும் உயிரை;
ஆசைகளை உற்று உருவும்; அப்புறமும் ஓடும்;
அதன் இப்புறமும் உளார்,
ஈசன் எதிர் உற்று, உகுவது அல்லது, இகல்
முற்றுவது ஒர் கொற்றம் எவனோ? 6.30.141

ஊன் நகுவடிக் கணைகள் ஊழி அனல் ஒத்தன; உலர்ந்த உலவைக்
கானகம் நிகர்த்தனர் அரக்கர்; மலை ஒத்தன களித்த மதமா;
மானவன் வயப் பகழி வீசுவலை ஒத்தன; வலைக்குள் வழுவா
மீனகுலம் ஒத்தன, கடற்படை இனத்தொடும் விளிந்து அவிதலால். 6.30.142

ஊழி இறுதிக் கடுகும் மாருதமும் ஒத்தனன்,
இராமன்; உடனே
பூழி என உக்கு உதிரும் மால் வரைகள் ஒத்தனர்,
அரக்கர், பொருவார்;
ஏழ் உலகும் உற்று உயிர்கள் யாவையும் முருக்கி,
இறுதிக் கணில் எழும்
ஆழியையும் ஒத்தனன்; அம் மன்னுயிரும் ஒத்தனர்,
அலைக்கும் நிருதர் 6.30.143

மூல முதல் ஆய், இடையும் ஆய், இறுதி ஆய்,
எவையும் முற்றும் முயலும்
காலம் எனல் ஆயினன் இராமன்; அவ் அரக்கர்
கடை நாளில் விளியும்
கூலம் இல் சர அசரம் அனைத்தினையும்
ஒத்தனர்; குரைகடல் எழும்
ஆலம் எனல் ஆயினன் இராமன்; அவர் மீனம்
எனல் ஆயினர்களால். 6.30.144

வஞ்ச வினைசெய்து, நெடுமன்றில் வளன் உண்டு,
கரி பொய்க்கும் மறம் ஆர்
நெஞ்சம் உடையோர்கள் குலம் ஒத்தனர் அரக்கர்;
அறம் ஒக்கும் நெடியோன்;
நஞ்ச நெடுநீரினையும் ஒத்தனன்; அடுத்து
அதனை நக்குநரையும்,
பஞ்சம் உறுநாளில் வறியோர்களையும்
ஒத்தனர், அரக்கர், படுவார். 6.30.145

அரக்கர் இறந்துபடப் பெருகிய குருதி வெள்ளம் இலங்கை நகரத்தினுள்ளும் சென்று புக்கமை கண்டு அரக்கியர் அலறி ஓடுதல்

வெள்ளம் ஒருநூறுபடும் வேலையில், அவ் வேலையும்
இலங்கை நகரும்,
பள்ளமொடு மேடு தெரியாத வகை சோர்
குருதி பம்பி எழலும்,
உள்ளும் மதிளும் புறமும் ஒன்றும் அறியாது
அலறி ஓடினர்களால்,
கள்ள நெடு மான்விழி அரக்கியர் கலக்கமொடு
கால்கள் குலைவார். 6.30.146

நூறுசதகோடி யளவினராகிய படைத் தலைவர்கள் தமது சேனை பின்னிடாதவாறு தாங்கி நின்று இராமனொடு பொருதல்

நீங்கினர், நெருங்கினர் முருங்கினர், உலைந்து; உலகின் நீளும் மலைபோல்
வீங்கின, பெரும்பிணம் விசும்பு உற; அசும்புபடுசோரி விரிவுற்று,
ஓங்கின, நெடும்பரவை, ஒத்து உயர எத்திசையும் உற்று எதிர் உற;
தாங்கினர், படைத்தலைவர், நூறுசத கோடியர் தடுத்தல் அரியார். 6.30.147

தேரும், மத மாவும், வரை ஆளியொடு
வாசி, மிகு சீயம், முதலா
ஊரும் அவை யாவையும் நடாயினர், கடாயினர்கள்,
உந்தினர்களால்;
காரும் உரும் ஏறும் எரி ஏறும் நிகர் வெம்படையொடு
அம்பு கடிதின்
தூரும் வகை தூவினர்; துரந்தனர்கள், எய்தனர்,
தொடர்ந்தனர்களால். 6.30.148

'வம்மின், அட, வம்மின்! எதிர் வந்து, நுமது ஆர்
உயிர் வரங்கள் பிறவும்,
தம்மின் 'என இன்னன மொழிந்து, எதிர் பொழிந்தன,
தடுப்ப அரியவாம்
வெம்மின் என, வெம்பகழி வேலை என ஏயினன்;
வெய்ய வினையோர்
தம் இனம் அனைத்தையும் முனைந்து எதிர் தடுத்தனன்,
தனித் தனி அரோ. 6.30.149

அரக்கரது கடும் போர் கண்டு அஞ்சிய தேவர்கள் சிவபெருமானை யடைந்து வணங்கி நின்று, 'இப் போரின் நிலை யாதாகும்? 'என வினவுதல்

அக்கணையை அக்கணம் அறுத்தனர் செறுத்து,
இகல் அரக்கர் அடைய,
புக்கு அணையல் உற்றனர், மறைத்தனர் புயற்கு
அதிகம் வாளி பொழிவார்,
திக்கு அணை வகுத்தனர் எனச் செல நெருங்கினர்;
செருக்கின் மிகையால்;
முக்கணனை உற்று அடி வணங்கி இமையோர்
இவை மொழிந்தனர்களால். 6.30.150

'படைத் தலைவர் உற்று ஒருவர் மும்மடி இராவணன்
எனும் படிமையோர்;
கிடைத்தனர் அவர்க்கு ஒரு கணக்கு இலை; வளைத்தனர்
கிளர்ந்து உலகு எலாம்
அடைத்தனர், தழெித்தனர், அழித்தனர், தனித்து உளன்
இராமன், அவரோ
துடைத்தனர் எம் வெற்றி என உற்றனர்; இனிச் செயல்
பணித்தி சுடரோய்! 6.30.151

'எய்த கணை எய்துவதன் முன்பு, இடை அறுத்து,
இவர்கள் ஏழு உலகமும்
பெய்த கணை மாமுகில் எனப்புடை வளைத்தனர்,
பிடித்தனர்கள் போய்;
வைது அகலின் அல்லது மறம் படை, கொடிப்படை,
கடக்கும் வலிதான்
செய்ய திருமாலினொடு உனக்கும் அரிது ' என்றனர்,
திகைத்து விழுவார். 6.30.152

சிவபெருமான் தேவர்களது அச்சத்தைப் போக்கி, அரக்கரை அழித்து இராமனே வெற்றி பெறுவான் எனத் தெளிவித்தல்

'அஞ்சி அயரன்மின்! அவர் எத்தனையர்
ஆயிடினும், அத்தனைவரும்,
பஞ்சி எரி உற்றது என, வெந்து அழிவர் : இந்த உரை
பண்டும் உளதால்;
நஞ்சம் அமுதத்தை நனிவென்றிடினும், நல் அறம்
நடக்கும் அதனை
வஞ்ச வினை பொய்க் கருமம் வெல்லினும், இராமனை
அவ் வஞ்சகர் கடவார். 6.30.153

'அரக்கர் உளர் ஆர்சிலர், அவ் வீடணன் அலாது,
உலகின் ஆவி உடையார்?
இரக்கம் உளது ஆகியது; நல் அறம் எழுந்து
வளர்கின்றது; இனிநீர்
கரக்க, முழைதேடி உழல்கின்றிலிர்கள்; இன்று
ஒரு கடும்பகலிலே
குரக்கின் முதல் நாயகனை ஆளுடைய கோள் உழுவை
கொல்லும், இவரை. 6.30.154

அம்மொழி கேட்டு அயல் நின்ற பிரமனும் அதுவே நிகழும் என உடன் பட்டுரைக்க அப்பொழுது இராமன் அம்புமழையினால் அரக்கர் தலைகளை மலை போற் குவித்தல்

என்று பரமன் பகர, நான்முகனும் அன்ன பொருளே இசைதலும்,
நின்று நிலை ஆறினர்கள் வானவர்கள்; மானவனும் நேமி எனலாம்
வென்று நெடு வாளி மழை, மாரியினும் மேலன துரந்து, விரைவில்
கொன்று, குல மால் வரைகள் மானு தலை மாமலை குவித்தனன் அரோ. 6.30.155

அரக்கர் உயிர் துறக்கம் புக அவர்களுடைய உடல்கள் பூமியிற் சிதைவுற்றுக் கிடக்க, எங்கும் வழியில்லை யாதல்

மகர மறி கடலின் வளையும் வய நிருதர்
சிகரம் அனைய உடல் சிதறி இறுவர் உயிர்
பகர அரிய பதம் விரவ அமரர் பழ
நகரம் இடம் அருக நவையர் நலிவுபட. 6.30.156

உகளும் இவுளி தலை துமிய உறுகழல்கள்
தகளியுற வலிய தலைகள் அறு தலைவர்
துகளின் உடல்கள் விழ உயிர்கள் சுரர் உலகின்
மகளிர் வன முலைகள் தழுவி அகம் மகிழ. 6.30.157

மலையும் மறி கடலும் வனமும் வறு நிலமும்
உலைவு இல் அமரர் உறை உலகும் உயிர்கெளாடு
தலையும் உடலும் இடை தழுவு தவழ்குருதி
அலையும்; மரியது ஒருதிசையும் இலது அணுக. 6.30.158

அரக்கர் தலைவர்கள் பலரும் இறந்துபட, அமரர் சொரிந்த மலர்கள் மழைபோல எங்கும் பரவிக் கிடத்தல்

இனைய செருநிகழும் அளவின் எதிர்பொருத
வினையமுடை முதல்வர் எவரும் உடன் விளிய.
அனைய படை நெளிய வயவர் அழி குருதி
நனைய விசையின் எழுதுவலை மழை நலிய. 6.30.159

அரக்கர் படைத்தலைவர்கள் பின்னிடும் சேனையைத் தடுத்து இராமன்மீது செலுத்திக் கடும் போர் விளைத்தல்

இரியல் உறுபடையை நிருதர் இடை விலகி
எரிகள் சொரியும் நெடு விழியர் 'இழுதையர்கள்!
திரிக திரிக! 'என உரறு தழெுகுரலர்
கரிகள் அரிகள் பரி கடிதின் எதிர் கடவ. 6.30.160

உலகு செவிடுபட மழைகள் உதிர உயர்
அலகு இல் மலை குலைய அமரர் தலை அதிர
இலகு தொடு படைகள் இடியொடு உரும் அனைய
விலகியது திமிரம் வளையும்வகை வளைய. 6.30.161

தன்னை எதிர்த்துப் பொரும் அரக்கர் சேனையை இராமன் உவகையுடன் ஏற்றுக் கடும் போர் புரிதல்

'அழகிது அழகிது 'என அழகன் உவகையொடு
பழகும் அதிதியரை எதிர்கொள் பரிசுபட
விழைவின் எதிர அதிர் எரிகொள் விரி பகழி
மழைகள் முறை சொரிய அமரர் மலர் சொரிய. 6.30.162

தினகரனை அணவு கொடிகள் திசை அடைவ
சினவு பொரு பரிகள் செறிவ அணுக உயர்
அனகனொடும் அமரின் முடுகி எதிர எழு
கனக வரை பொருவ; கதிர்கொள் மணி இரதம். 6.30.163

பாறு படு சிறகு கழுகு பகழி பட
நீறுபடும் இரத நிரையின் உடல் தழுவி
வேறு படர் படர இரவி சுடர் வலையம்
மாறுபட உலகின் மலைகள் அளறு பட. 6.30.164

அருகு கடல் திரிய அலகு இல் மலை குலைய
உருகு சுடர்கள் இடை திரிய உரனுடைய
இருகை ஒரு களிறு திரிய விடு குயவர்
திரிகை என உலகு முழுதும் முறை திரிய. 6.30.165

சிவனும் அயனும் எழு திகிரி அமரர் பதி
அவனும் அமரர்குலம் எவரும் முனிவரொடு
கவனம் உறு கரணம் இடுவர் கழுது இனமும்
நமனும் வரிசிலையும் அறனும் நடன் நவில. 6.30.166

'தேவர் திரிபுவன நிலையர் செரு இதனை
ஏவர் அறிவுறுவர் இறுதி? முதல் அறிவின்
மூவர் தலைகள் பொதிர் எறிவர் 'அற முதல்வ!
பூவை நிறவ! 'என வேதம் முறை புகழ. 6.30.167

எய்யும் ஒரு பகழி ஏழு கடலும் இடு
வெய்ய களிறு பரி ஆெளாடு இரதம் விழ
ஒய்யென் ஒருகதியின் ஓட உணர் அமரர்
கைகள் என அவுணர் கால்கள் கதி குலைவ. 6.30.168

அண்ணல் விடு பகழி யானை இரதம் அயல்
பண்ணு புரவி படை வீரர் தொகு பகுதி
புண்ணின் இடுகுறிகள் புள்ளி என விரவி
எண்ணுவன அனைய எல்லை இல நுழைவ. 6.30.169

அரக்கர் தப்பிச் செல்லாதவாறு இராமன் சரமதில் அமைத்தல்

'சுருக்கம் உற்றது படை சுருக்கத்தால் இனிக்
கரக்க மற்று ஒரு புறத்து 'என்னும் கண்ணினால்
அரக்கருக்கு அன்று செலவு அரியதாம் வகை
சரக் கொடு நெடு மதில் சமைத்து இட்டான் அரோ. 6.30.170

அரக்கர் சரமதிலைக் கடக்க மாட்டாமை

மாலியை மாலியவானை மால் வரை
போல் உயிர் கயிடனை மதுவை போன்று உளார்
சாலிகை யாக்கையர் தணிப்பு இல் வெஞ்சர
வேலியைக் கடந்திலர் உலகை வென்று உளார். 6.30.171

அரக்கரிற் பெரும்பாலார் இறந்துபட அவர்தம் சேனை அளவிற் சுருங்குதல்

மாண்டவர் மாண்டு அற மற்று உேளார் எலாம்
மீண்டனர் ஒரு திசை ஏழு வேலையும்
மூண்டு உற முருங்கிய ஊழிக் காலத்தில்
தூண்டுறு சுடர் சுட சுருங்கித் தொக்கபோல். 6.30.172

இராமனது அம்பின் கொடுமை கண்டு திகைப்புற்ற அரக்கர்கள் தம்மவர்களை நோக்கிக் கூறுதல்

'புரம் சுடு கடவுளும் புள்ளின் பாகனும்
அரம் சுடு குலிச வேல் அமரர் வேந்தனும்
உரம் சுடுகிற்கிலர்; ஒருவன் நாமுடை
வரம் சுடும்; வலி சுடும்; வாழும் நாள் சுடும். 6.30.173

'ஆயிர வெள்ளம் உண்டு; ஒருவர் ஆழி சூழ்
மா இரு ஞாலத்தை மறிக்கும் வன்மையோர்;
மேயின பெரும்படை இதனை ஓர் விலால்
"ஏ " எனும் மாத்திரத்து எய்து கொன்றனன். 6.30.174

'இடை படும்; படாதன இமைப்பிலோர் படை
புடைபட வலம்கொடு விலங்கிப் போகுமால்;
படை படும் கோடி; ஓர் பகழியால்; பழிக்
கடை படும் அரக்கர்தம் பிறவி கட்டமால். 6.30.175

'பண்டு உலகு அளித்தவனோடும் பண் அமை
குண்டையின் பாகனும் பிறரும் கூடினார்
அண்டர்கள் விசும்பின் நின்று ஆர்க்கினார் உழைக்
கண்டிலம்; இவன் நெடு மாயக் கள்வனால். 6.30.176

இவ்விராமன் திருமாலே என்று துணிந்து ஆற்றல் குன்றிய அரக்கர்களை நோக்கி வன்னி என்பவன் 'நாம் பகைவனொடு பொருது உயிர் துறத்தலே இனிச் செய்யத் தகுவது 'என அறிவுறுத்தல்

'கொன்றனன் இனி ஒரு கோடி கோடி மேற்று;
அன்று எனின் பதுமம்; அன்றாயின் வெள்ளமா
நின்றது; நின்று இனி நினைவது என் பிற?
ஒன்று என நினைக 'என வன்னி ஓதினான். 6.30.177

'விழித்துமோ இராவணன் முகத்து மீண்டு யாம்
பழித்துமோ நம்மை நாம் படுவது அஞ்சினால்?
அழித்தும் ஓர் பிறப்பு உறா நெறிசென்று அண்ம யாம்
கழித்தும் இவ் ஆக்கையை புகழைக் கண்ணுற. 6.30.178

'இடுக்கினில் பெயர்ந்து உறை எண்ணுவேம் எனின்
அடுத்த கூர் வாளியின் அரணம் நீங்கலோம்;
எடுத்து ஒரு முகத்தினால் எய்தி யாம் இனிக்
கொடுத்தும் நம் உயிர் 'என ஒருமை கூறினான். 6.30.179

அரக்கர் அனைவரும் இராமனைச் சூழ்ந்து பொருது அடர்த்தல்

இளக்க அரு நெடு வரை ஈர்க்கும் ஆறு எலாம்
அளக்கரின் பாய்ந்து என பதங்கம் ஆரழல்
விளக்கினில் வீழ்ந்தனெ விதிகொடு உந்தலால்
வளைத்து இரைத்து அடர்த்தனர் மலையின் மேனியார். 6.30.180

அரக்கர் பல்வகைப் படைகளை இராமன்மேற் சொரிதல்

மழு எழு தண்டு கோல் வலையம் நாஞ்சில் வாள்
எழு அயில் குந்தம் வேல் ஈட்டி தோமரம்
கழு இகல் கப்பணம் முதல கைப்படை
தொழுவினில் புலி அனான் உடலில் தூவினார். 6.30.181

இராமன் காந்தருப்பம் என்னும் தெய்வப் படையை அரக்கர்மேற் செலுத்தல்

காந்தருப்பம் எனும் கடவுள் மாப் படை
வேந்தருக்கு அரசனும் வில்லின் ஊக்கினான்
பாந்தளுக்கு அரசு என பறவைக்கு ஏறு என
போந்து உருத்தது நெருப்பு அனைய போர்க்கணை. 6.30.182

காந்தருப்பம் என்னும் அப் படையின் தோற்றமும் திறலும்

மூன்று கண் அமைந்தன ஐம் முகத்தன
ஆன்ற மெய் தழலன புனலும் ஆடின
வான்தொட நிமிர்வன வாளி மா மழை
தோன்றின புரம் சுடும் ஒருவன் தோற்றத்த. 6.30.183

பத்துக் கோடி யளவினராகிய அரக்க வேந்தர்கள் பொருந்திய இராவணனது மூலச் சேனை முழுதும் அழிதல்

ஐ இரு கோடியர் அரக்கர் வேந்தர்கள்
மொய் வலி வீரர்கள் ஒழிய முற்றுற
'எய் 'எனும் மாத்திரத்து அவிந்தது என்பரால்
செய் தவத்து இராவணன் மூலச் சேனையே. 6.30.184

அந் நிலையில் பெரிய தீவுகளிலிருந்தும் பல திசைகளிலிருந்தும் பாதாள உலகத்தினிலிருந்தும் இராவணனது ஆணையாற் காவல் புரியும் படை வீரர்கள் ஒருங்கு குழுமி இராமனொடு பொருதற்கு நண்ணுதல்

மாப் பெருந் தீவுகள் ஏழும் மாதிரம்
பாப்பு அரும் பாதலம் அத்து உள்ளும் பல் வகைக்
காப்பு அரு மலைகளும் பிறவும் காப்பவர்
யாப்புறு காதலர் இராவணற்கு அவர். 6.30.185

மாத்தட மேருவை வளைந்த வான் சுடர்
கோத்து அகல் மார்பு இடை அணியும் கொள்கையார்
பூத் தவிசு உகந்தவன் புகன்ற பொய் அறு
நாத் தழும்பு ஏறிய வரத்தர் நண்ணினார். 6.30.186

வந்த அரக்கர்கள் இராமனொடு ஒருவர் ஒருவராகப் பொருவதா அன்றி ஒன்று சேர்ந்து பொருவதா எனத் தமக்குள் வினாவுதல்

'நம்முள் ஈண்டு ஒருவனை வெல்லும் நன்கு எனின்
வெம்முனை இராவணன் தனையும் வெல்லுமால்;
இம்மென உடன் எடுத்து எழுந்து சேருமோ?
செம்மையின் தனித்தனிச் செய்துமோ செரு? 6.30.187

எல்லோரும் ஒருங்கு சேர்ந்து பொருதலே நன்று என்ற வன்னியின் சொல்லுக்கு எல்லோரும் இசைதல்

'எல்லோம் எல்லோம் ஒன்றி வளைந்து இந் நெடியோனை
வல்லே வல்ல போர்வலி கொண்டு மலையோமேல்
வெல்லோம் வெல்லோம் ' என்றனன், வன்னி; மிடலோரும்,
'தொல்லோன் சொல்லே நன்று ' என, அஃதே துணிவுற்றார். 6.30.188

அரக்கர்களின் போர் ஆரவாரம்

அன்னார் தாமும், ஆர்கலி ஏழும் என ஆர்த்தார்;
'மின் ஆர் வானம் இற்று உறும் 'என்றே, விளிசங்கம்
கொன்னே ஊதி, தோள் புடை கொட்டிக் கொடு சார்ந்தார்,
என் ஆம், வையம்? என்படும்; வானம்? திசை ஏதாம்? 6.30.189

இராமன் தன் வில்நாணைத் தறெித்து ஒலியெழுப்புதல்

ஆர்த்தார் அன்னார்; அன்ன களத்தே அவர் ஆற்றல்
தீர்த்தானும், தன் வெஞ்சிலை நாணைத் தறெிப்புற்றான்;
பேர்த்தான் பொன் தோள் முற்றும் அளந்தான் பிறழ்சங்கம்
ஆர்த்தால் ஒத்தது அவ் ஒலி எல்லா உலகுக்கும். 6.30.190

அரக்கர் பல்லாயிர கோடியராய் இராமனை வளைத்துப் பொருதல்

பல் ஆயிர கோடியர்; பல் படை நூல்
வல்லார்; அவர் மெய்ம்மை வழங்க வலார்;
எல்லா உலகங்களும் ஏறிய போர்
வில்லாளர் அரக்கரின் மேதகையோர். 6.30.191

வென்றார் உலகங்களை விண்ணவரோடு;
ஒன்றா உயர்தானவர் யூகம் எலாம்
கொன்றார் நிமிர் கூற்று என எவ் உயிரும்
தின்றார்; எதிர் சென்று செறிந்தனரால். 6.30.192

வளைத்தார் மதயானையை வன்தொழுவில்
தளைத்தார் என வந்து தனித்தனியே
உளைத்தார் உரும் ஏறு என ஒன்று அலபோர்
விளைத்தார்; இமையோர்கள் வெதும்பினரால். 6.30.193

விண்தீய வழங்கிய வெம் படையில்
சுட்டீய நிமிர்ந்த சுடர்ச் சுடரும்
கண்தீயும் ஒருங்கு கலந்து எழலால்
உள் தீ உற வெந்தன ஏழ் உலகும். 6.30.194

அரக்கர் சேனைகளில் தோன்றிய பலவகை ஒலிகள்

தேர் ஆர்ப்பு ஒலி வீரர் தழெிப்பு ஒலியும்
தார் ஆர்ப்பு ஒலியும் கழல் தாக்கு ஒலியும்
போரால் சிலை நாணி புடைப்பு ஒலியும்
காரால் பொலியும் களிறு ஆர்ப்பு ஒலியும். 6.30.195

இராவணனை யொத்த ஆற்றலுடைய பல்லயிரகோடி வீரர்களை இராமன் ஒருவனாகவே வெகுண்டு சென்று எதிர்த்தல்

'எல்லாரும் இராவணனே அனையார்;
வெல்லா உலகு இல்லவர்; மெய் வலியார்;
'தொல்லார் படை வந்து தொடர்ந்தது 'எனா
நல்லானும் உருத்து எதிர் நண்ணினனால். 6.30.196

இராமன் அம்புமழை பொழிதல்

ஊழிக் கனல் போல்பவர் உந்தினபோர்
ஆழிப் படை அம்பொடும் அற்று அகல
பாழிக் கடை நாள் விடு பல் மழைபோல்
வாழிச் சுடர் வாளி வழங்கினனால். 6.30.197

இராமன் ஏவிய அம்புகளாற் சிதைந்தழிந்த அரக்கர் சேனையின் தோற்றம்

சூரோடு தொடர்ந்த சுடர்க் கணைதான்
தாரோடு அகலங்கள் தடிந்திடலும்
தேரோடு மடிந்தனர் செங் கதிரோன்
ஊரோடு மறிந்தனன் ஒத்து உரவோர். 6.30.198

கொல்லோடு சுடர்க் கணை கூற்றின் நிணப்
பல்லோடு தொடர்ந்தன பாய்தலினால்
செல்லோடு எழு மாமுகில் சிந்தினபோல்
வில்லோடும் விழுந்த; மிடல் கரமே. 6.30.199

செம்போடு உதிரத் திரை ஆழியின் வாய்
வெம்பு ஓடு அரவக் குலம் மேல் நிமிரும்
கொம்போடும் விழுந்தன ஒத்த குறைந்து
அம்போடும் விழுந்த அடல் கரமே. 6.30.200

முன் ஓடு உதிரப் புனல் மூதுலகைப்
பின் ஓடி வளைந்த பெருங்கடல் வாய்
மின்னோடும் விழுந்தன மேகம் என
பொன் ஓடை நெடுங் கரி புக்கனவால். 6.30.201

மற வெற்றி அரக்கர் வலக் கையொடும்
நறவக் குருதிக் கடல் வீழ் நகைவாள்
சுறவு ஒத்தன; மீது துடித்து எழலால்
இறவு ஒத்தன வாவும் இனப் பரியே. 6.30.202

தாமச் சுடர் வாளி தடிந்து அகலப்
பாமக் குருதிப் படிகின்ற படைச்
சேமப் படர் கேடகம் மால்கடல் சேர்
ஆமைக் குலம் ஒத்தன அத்தனையால். 6.30.203

காம்போடு பதாகைகள் கார் உதிரப்
பாம்போடு கடல் படிவுற்றனவால்
வாம் போர் நெடு வாடை மலைந்த கலம்
கூம்போடு உயர் பாய்கள் குறைந்தன போல். 6.30.204

மண்டப் படு சோரியின் வாரியின்வீழ்
கண்டத்த சரத் தொகை கவ்வியதாள்
முண்டக் கிளர்தண்டின முள்தொகுவன்
துண்டச் சுறவு ஒத்த துடித்தனவால். 6.30.205

தெளிவுற்ற பளிங்கு உறு சில்லிகொள்தேர்
விளிவு உற்று உக வேறு உற வீழ்வனதாம்
அளிமுற்றிய சோரியின் ஆழியின் ஆழ்
ஒளிமுற்றிய திங்களை ஒத்துளவால். 6.30.206

நிலைகோடல் இல் வென்றி அரக்கரை நேர்
கொலைகோடல் நமன் குறி கோளுறுமே?
சிலைகோடிய தோறும் சிரத்திரள் வன்
மலை கோடியின்மேலும் மறிந்திடுமால். 6.30.207

திண் மார்பின்மிசைச் செறி சாலிகையின்
கண் வாளி கடைச் சிறை கானம் நுழைந்து
எண் வாய் அற மொய்த்தன இன் நறை உற்று
உண் வாய் வரி வண்டு இனம் ஒத்தனவால். 6.30.208

அரக்கர் சேனைகளைக் கொன்று குவித்து இராமர் பலர் என அரக்கர் திகைப்புற இராமன் சாரிதிரிதல்

பாறு ஆடு களத்து ஒருவன் பகலின்
கூறு ஆகிய நாலில் ஒர் கூறு இடையே
நூறாயிர யோசனை நூழில்களால்
மாறாது உழல் சாரிகை வந்தனனால். 6.30.209

நின்றாருடன் நின்று நிமிர்ந்து அயலே
சென்றார் எதிர் சென்று சிதைத்திடலால்
'தன் தாதையை ஓர்வுறு தன்மகன்நேர்
கொன்றான் அவனே இவன் 'என்று கொள்வார். 6.30.210

'இங்கே உளன்; இங்கு உளன்; இங்கு உளன் 'என்று
அங்கே உணர்கின்ற அலந்தலையால்
வெங்கோப நெடும்படை வெஞ்சரம் விட்டு
எங்கேனும் வழங்குவர்; ஏகுவரால். 6.30.211

'ஒருவன் என உன்னும் உணர்ச்சி இலீர்!
இரவு அன்று இதுவோ பகல் 'என்பர்களால்;
'கரவு அன்று இது இராமர் கணக்கு இலரால்;
பரவை மணலின் பலர் 'என்பர்களால். 6.30.212

இராமன் விரைந்து சாரிகை திரியும் நிலையில் அவன்மீது அரக்கர் வீசிய படைக்கலம் தம்மினத்தவர்மீது பட அரக்கர் தம்மைத் தாமே அடித்துக்கொண்டு மாய்தல்

ஒருவன் ஒருவன் மலைபோல் உயர்வோன் :
ஒருவன் படை வெள்ளம் ஒர் ஆயிரமே;
ஒருவன் ஒருவன் உயிர் உண்டது அலால்
ஒருவன் உயிர் உண்டதும் உள்ளதுவோ? 6.30.213

அரக்கர் பலர் முன்னும் விரைந்து தோன்றிப் பொரும் நிலையில் இராமர் பலராகத் தோன்றுதல்

தேர்மேல் உளர்; மாவொடு செந் தறுகண்
கார்மேல் உளர்; மாகடல்மேல் உளர்; இப்
பார்மேல் உளர்; உம்பர் பரந்து உளரால்
போர்மேலர் இராமர் புகுந்து அடர்வார். 6.30.214

என்னும்படி எங்கணும் எங்கணுமாய்த்
துன்னும்; சுழலும்; திரியும்; சுடரும்;
பின்னும் அருகும் எதிரும் பிரியான்
மன்னன்மகன்! வீரர் மயங்கினரால். 6.30.215

படு மத கரி, பரி, சிந்தின; பனி வரை இரதம் அவிந்தன;
விடுதிசை செவிடு பிளந்தன; விரிகடல் அளறது எழுந்தன;
அடு புலி அவுணர்தம் மங்கையர் அலர்விழி அருவிகள் சிந்தின
கடு மணி நெடியவன் வெஞ்சிலை, 'கண கண, கண கண 'எனும் தொறும். 6.30.216

ஆனை ஆயிரம், தேர் பதினாயிரம், அடல் பரி ஒரு கோடி,
சேனை காவலர் ஆயிரம் பேர் படின், கவந்தம் ஒன்று எழுந்தாடும்;
கானம் ஆயிரம் கவந்தம் நின்று ஆடிடின், கவின் மணி கணில் என்னும்;
ஏனை அம் மணி ஏழரை நாழிகை ஆடியது இனிது அன்றே 6.30.217

ஊன் ஏறு படைக்கை வீரர் எதிர் எதிர் ஊரும் தோறும்
கூன் ஏறு சிலையும் தானும் குதிக்கின்ற கடுப்பின் கொட்பால்,
வான் ஏறினார்கள் தேரும், மலைகின்ற வயவர் தேரும்,
தான் ஏறிவந்த தேரே ஆக்கினான் தனி ஏறு அன்னான். 6.30.218

காய் இருஞ் சிலை ஒன்றேனும், கணைப் புட்டில் ஒன்றதேனும்,
தூயெழும் பகழி மாரி மழைத் துளித் தொகையின் மேல;
ஆயிரம் கைகள் செய்த செய்தன, அமலன் செங்கை;
ஆயிரம் கையும் கூடி, இரண்டு கை ஆய அன்றே. 6.30.219

பொய், ஒருமுகத்தன் ஆகி மனிதன் ஆம்புணர்ப்பு இது என்றல்;
மெய்யுற உணர்ந்தோம்; வெள்ளம் ஆயிரம் மிடைந்த சேனை
செய்யுறு வினையம் எல்லாம் ஒருமுகம் தெரிவது உண்டே?
ஐ இரு நூறும் அல்ல; அனந்தம் ஆம் முகங்கள் அம்மா! 6.30.220

கண்ணுதல் பரமன்தானும், நான்முகக் கடவுள்தானும்
'எண்ணுதும் தொடர எய்த கோல் 'என எண்ணலுற்றார்,
பண்ணையாய்ப் பகுக்க மாட்டார், தனித்தனிப் பார்க்கலாற்றார்,
'ஒண்ணுமோ, கணிக்க? 'என்றார், உவகையின் உயர்ந்த தோளார். 6.30.221

'வெள்ளம் ஈர் ஐந்து நூறே; விடுகணை அவற்றின் மெய்யே
உள்ளவாறு உளவாம் 'என்று ஓர் உரைகணக்கு உரைத்துமேனும்,
'கொள்ளை ஓர் உருவை நூறு கொண்டன பலவால்; கொற்ற
வள்ளலே வழங்கினானோ ' என்றனர், மற்றை வானோர் 6.30.222

'குடைக்கு எலாம், கொடிகட்கு எல்லாம், கொண்டன குவிந்த கொற்றப்
படைக்கு எலாம், பகழிக்கு எல்லாம், யானை, தேர், பரிமா, ஆதி
கடைக்கு எலாம், துரந்த வாளி கணித்ததற்கு அளவை காட்டி
அடைக்கலாம் அறிஞர் யாரே? ' என்றனர் முனிவர் அப்பால். 6.30.223

கண்டத்தும், கீழும், மேலும், கபாலத்தும், கடக்கல் உற்ற
சண்டப் போர் அரக்கர் தம்மைத் தொடர்ந்து கோல் புணருந் தன்மை
பிண்டத்தில் கரு ஆம் தன் பேர் உருக்களைப் பிரமன் தந்த
அண்டத்தை நிறையப் பெய்து குலுக்கியது அனையது அம்மா! 6.30.224

கோடி ஐ இரண்டு தொக்க படைக்கல மள்ளர் கூவி,
ஓடி ஓர் பக்கம் ஆக, உயிர் இழந்து, உலத்தலோடும்,
'வீடிநின்று அழிவது என்னே! விண்ணவர் படைகள் வீசி,
மூடுதும் இவனை 'என்னா, யாவரும் மூண்டு மொய்த்தார். 6.30.225

விண்டுவின் படையே ஆதி வெய்யவன் படை ஈறாக
கொண்டு ஒருங்கு உடனே விட்டார்; குலுங்கியது அமரர் கூட்டம்;
அண்டமும் கீழ்மேலாக ஆகியது; அதனை அண்ணல்
கண்டு ஒரு முறுவல் காட்டி, அவற்றினை அவற்றால் காத்தான். 6.30.226

'தான் அவை தொடுத்தபோது, தடுப்ப அரிது; உலகம் தானே
பூநனி வடவைத் தீயின் புக்கு எனப் பொரிந்துபோம் 'என்று,
ஆனது தெரிந்த வள்ளல் அளப்ப அருங் கோடி அம்பால்
ஏனையர் தலைகள் எல்லாம் இடி உண்ட மலையின் இட்டான். 6.30.227

ஆயிர வெள்ளத் தோரும் அடுகளத்து அவிந்து வீழ்ந்தார்;
மா இரு ஞாலத்தாள் தன் வன்பொறைப் பாரம் நீங்கி,
மீஉயர்ந்து எழுந்தாள் அன்றே, வீங்கு ஒலி வேலை நின்றும்
போய் ஒருங்கு அண்டத்தோடும் கோடி யோசனைகள் பொங்கி! 6.30.228

ஆனை ஆயிரம், தேர் பதினாயிரம், அடல் பரி ஒரு கோடி,
சேனை காவலர் ஆயிரம் பேர்படின், கவந்தம் ஒன்று எழுந்து ஆடும்;
கானம் ஆயிரம் கவந்தம் நின்று ஆடிடின், கவின்மணி கணில் என்னும்;
ஏனை அம்மணி ஏழரை நாழிகை ஆடியது இனிது அன்றே. 6.30.229

தேவர் முதலியோர் துயர் தீர்ந்து இராமனை வாழ்த்துதல்

'நினைந்தன முடித்தேம் 'என்னா, வானவர் துயரம் நீத்தார்;
'புனைந்தனென் வாகை 'என்னா, இந்திரன் உவகை பூத்தான்;
வனைந்தன அல்லா வேதம் வாழ்வு பெற்று உயர்ந்த மாதோ;
அனந்தனும் தலைகள் ஏந்தி, அயாவுயிர்த்து, அவலம் தீர்ந்தான். 6.30.230

தாய், 'படைத்து உடைய செல்வம் ஈக 'என, தம்பிக்கு ஈந்து,
வேய் படைத்துடைய கானம் விண்ணவர் தவத்தின் மேவி,
தோய் படைத்தொழிலால் யார்க்கும் துயர் துடைத்தானை நோக்கி,
வாய் படைத்துடையார் எல்லாம் வாழ்த்தினார், வணக்கம் செய்தார் 6.30.231

தீ மொய்த்த அனைய செங்கண் அரக்கரை முழுதும் சிந்தி,
பூமொய்த்த கரத்தர் ஆகி விண்ணவர் போற்ற, நின்றான்
பேய் மொய்த்து, நரிகள் ஈண்டி, பெரும் பிணம் பிறங்கித் தோன்றும்
ஈமத்துள் தமியன் நின்ற கறைமிடற்று இறைவன் ஒத்தான். 6.30.232

அண்டம் மாக் களமும், வீந்த அரக்கரே உயிரும் ஆக,
கொண்டது ஓர் உருவம் தன்னால், இறுதிநாள் வந்துகூட,
மண்டு நாள், மறித்தும் காட்ட, மன்னுயிர் அனைத்தும் வாரி
உண்டவன் தானே ஆன தன் ஒருமூர்த்தி ஒத்தான். 6.30.233

இலக்குவன் இராவணனுடன் பொருது நிற்கும் இடத்திற்கு இராமன் செல்லுதல்

ஆகுலம் துறந்த தேவர் அள்ளினர் சொரிந்த வெள்ளச்
சேகு அறு மலரும் சாந்தும் செருத் தொழில் வருத்தம் தீர்க்க,
மாகொலை செய்த வள்ளல் வாள் அமர்க் களத்தைக் கைவிட்டு
ஏகினன், இளவலோடும் இராவணன் ஏற்ற கைம்மேல். 6.30.234

இவ்வழி இயன்ற எல்லாம் இயம்பினாம்; இரிந்து போன
தவெ் அழி ஆற்றல் வெற்றிச் சேனையின் செலவும், சென்ற
வெவ்வழி அரக்கர் கோமான் செய்கையும், இளைய வீரன்
எவ்வம் இல் ஆற்றல் போரும், முற்றும் நாம் இயம்பல் உற்றாம். 6.30.235

அஞ்சி நிலைகெட்டோடிய வானர சேனை மீளுதல்

'பெரும் படைத் தலைவர் யாரும் பெயர்ந்திலர், பெயர்ந்துபோய், நாம்
விரும்பினம் வாழ்க்கை என்றால், யார் இடை விலக்கற்பாலார்?
வரும்பழி துடைத்தும், வானின் வைகுதும் யாமும் 'என்னா,
இரும்கடல் பெயர்ந்தது என்ன, தானையும் மீண்டது, இப்பால். 6.30.236
----------------

6.31 – Der Speerstoß

6.31 வேல் ஏற்றப் படலம் 9673 – 9721 (49)

இராவணன் தேரேறிப் போர்க்களம் புகுதல்

'சில்லி ஆயிரம், சில் உளை பரியொடும் சேர்ந்த,
எல்ல வன் கதிர் மண்டலம் மாறு கொண்டு இமைக்கும்,
செல்லும் தேர்மிசைச் சென்றனன் தேவரைத் தொலைத்த
வில்லும் வெங்கணைப் புட்டிலும், கொற்றமும் விளங்க. 6.31.1

இராவணனுடன் சென்ற சேனைகள்

நூறு கோடி தேர் நொறில்பரி நூறு இரு கோடி
ஆறுபோல் மத மா கரி ஐ இரு கோடி
ஏறுகோள் உறு பதாதியும் இவற்று இவற்று இரட்டி.
சீறு கோள் அரி ஏறு அனானுடன் அன்று சென்ற. 6.31.2

முரசம் முதலியன முழங்குதல்

'மூன்று வைப்பினும், அப்புறத்து, உலகினும், முனையின்
ஏன்று கோள் உறும், வீரர்கள் வம்மின்! 'என்று இசைக்கும்
ஆன்ற பேரியும், அதிர்குரல் சங்கமும், அசனி
ஈன்ற காளமும், ஏழொடு ஏழ் உலகினும் இசைப்ப. 6.31.3

இராவணன் சேனையோடு வருவதை வானரர் காணுதல்

அனையன் ஆகிய அரக்கர்க்கும் அரக்கனை அவுணர்
வினையை வானவர் வெவ்வினைப் பயத்தினை, வீரர்
நினையும் நெஞ்சையும் சுடுவதோர் நெருப்பினை, நிமிர்ந்து
கனையும் விண்ணையும் கடப்பதோர் கடலினை, கண்டார். 6.31.4

இராவணனைக் கண்ட வானரர்களின் போர் ஆரவாரம்

கண்டு, கைகேளாடு அணிவகுத்து, உரும் உறழ் கற்கள்
கொண்டு, கூற்றமும் நடுக்குறத் தோள்புடை கொட்டி,
அண்ட கோடிகள் அடுக்கு அழிந்து உலைவுற, ஆர்த்தார்,
'மண்டு போர் இடை மடிவதே நலம் 'என மதித்தார். 6.31.5

இருபடையும் கைகலத்தல்

அரக்கர் சேனையும், ஆருயிர் வழங்குவான் அமைந்த
குரக்கு வேலையும், ஒன்றொடு ஒன்று, எதிரெதிர் கோத்து,
நெருக்கு நேர்ந்தன; நெருப்பு இடை பொடித்தன; நெருப்பின்
உருக்கு செம்பு என, அம்பரத்து, ஓடினது, உதிரம். 6.31.6

இறந்துபட்ட சேனையின் வருணனை (9677-9679)

அற்றவன்தலை அறுகுறை எழுந்து எழுந்து அண்டத்து
ஒற்ற, வானகம் உதய மண்டலம் என ஒளிர,
சுற்றும் மேகத்தைத் தொத்திய குருதிநீர் துளிப்ப
முற்றும் வையகம் போர்க்களம் ஆம் என முரஞ்ச. 6.31.7

யானைகள்

தூவி அம் பெடை அரி இனம் மறிதர சூழி
தூவி அம்பு எடை சோர்ந்தன சொரி உடல் சுரிப்ப
மே வியம் படை படப்படர் குருதியின் வீழ்ந்த
மேவி அம் படைக் கடலிடை குடரொடு மிதந்த. 6.31.8

வீரர் மனைவியர் உயிர் கணவர் உயிரோடு கலத்தல்

கண் திறந்தன கணவர்தம் முகத்து அவர் முறுவல்
கண்டு இறந்து அன மடந்தையர், உயிரொடும் கலந்தார்
பண்டு இறந்தன பழம் புணர்வு அகம் புகப் பன்னி,
பண் திறந்தன புலம்பு ஒலி, சிலம்பு ஒலி பணிப்ப. 6.31.9

தன் தானை தருக்கழியும் என இராவணன் கூறுதல்

ஏழும் ஏழும் என்று உரைக்கின்ற உலகங்கள் யாவும்
ஊழி பேர்வதே ஒப்பது ஓர் உலைவு உற, உடற்றும்
நூழில் வெஞ்சமம் நோக்கி, அவ் இராவணன் நுவன்றான்
'தாழ் இல் என்படை தருக்கு அறும் ' என்பது ஓர் தன்மை. 6.31.10

இராவணன் தன் சேனை சிதைந்தது கண்டு கலங்கிக் கூறுதல் (9681-9684)

'மரமும் கல்லுமே வில்லொடு வாள், மழு, சூலம்,
அரமும், கல்லும் வேல் முதலிய அயில்படை அடக்கி
சிரமும் கல் எனச் சிந்தலின், சிதைந்தது என் சேனை.
உரமும் கல்வியும் உடையவன் செரு நின்றது ஒருபால். 6.31.11

அழலும் கண்களிறு அணியொடும் துணிபடும்; ஆவி
சுழலும் பல்படைத் தொகுதியும்; அன்னதே சுடர் தேர்;
கழலும் சோரிநீர் ஆற்றொடும் கடல் இடைக் கலக்கும்;
குழலும் நூலும் போன்ம், அனுமனும் தானும் அக்குமரன். 6.31.12

'வில்லும் கூற்றுவற்கு உண்டு 'என, திரிகின்ற வீரன்
கொல்லும் கூற்று அறக் குறைக்கும், இந் நிறைப் பெருங் குழுவை,
ஒல்லும் கோள் அரி, உருமன்ன குரங்கினது உகிரும்
பல்லும் கூர்க்கின்ற; கூர்க்கில அரக்கர்தம் படைகள். 6.31.13

இராவணன் கொதிப்பு

'கண்டு நின்று, இறைப் பொழுது, இனிக் காலத்தைக் கழிப்பின்,
உண்டு கைவிடும் கூற்றுவன், நிருதர் பேர் உயிரை;
மண்டு வெஞ் செரு நான் ஒரு கணத்திடை மடித்தே
கொண்டு மீள்குவென், கொற்றம் 'என்று இராவணன் கொதித்தான். 6.31.14

இராவணன் சுடுகணை விடுதல்

ஊதை போல்வன, உரும் உறழ் திறலன, உருவிப்
பூதலங்களைப் பிளப்பன, அண்டத்தைப் பொதுப்ப,
மாதிரங்களை அளப்பன, மாற்ற அரும் கூற்றின்
தூது போல்வன, சுடுகணை முறைமுறை துரந்தான். 6.31.15

வானர சேனை இரிந்தோடுதல்

ஆளி போன்று உளன், எதிர்த்த போது, அமர்க் களத்து அடைந்த
ஞாளி போன்று உளது என்பது என்? நள் இருள் அடைந்த
காளி போன்றனன் இராவணன் வெள்ளிடைக் கலந்த
பூளை போன்றது, அப்பொரு சினத்து அரிகள்தம் புணரி. 6.31.16

இலக்குவன் இராவணனை எதிர்த்தல்

இரியல் போகின்ற சேனையை இலக்குவன் விலக்கி
'அரிகள்! அஞ்சன்மின், அஞ்சன்மின் ' என்று அருள் வழங்கி,
திரியும் மாருதி தோள் எனும் தேர்மிசைச் சென்றான்;
எரியும் வெஞ்சினத்து இராவணன் எதிர்புகுந்து ஏற்றான். 6.31.17

இராவணன் விட்ட அம்புகளை இலக்குவன் விலக்குதல்

ஏற்றுக் கோடலும், இராவணன் எரிமுகப் பகழி
நூற்றுக் கோடியின்மேல் செலச் சிலைகொடு நூக்க,
காற்றுக்கு ஓடிய பஞ்சு எனத் திசைதொறும் கரக்க,
வேற்றுக் கோல்கொடு விலக்கினன், இலக்குவன் விசையால். 6.31.18

இருவரும் மாறி மாறி அம்பு எய்தல்

விலக்கினான் தடம் தோளினும் மார்பினும், விசிகம்,
உலக்க உய்த்தனன், இராவணன், ஐந்தொடு ஐந்து; உருவக்
கலக்கம் உற்றிலன் இளவலும், உள்ளத்தில் கனன்றான்,
அலக்கண் எய்துவித்தான், அடல் அரக்கனை, அம்பால். 6.31.19

இலக்குவனை அம்பினால் வெல்ல இயலாது என இராவணன் எண்ணுதல்

காக்கல் ஆகலாக் கடுப்பினில் தொடுப்பன கணைகள்
நூக்கினான்; கணை நுறுக்கினான், அரக்கனும், 'நூழில்
ஆக்கும் வெஞ்சமத்து அரிது இவன்தனை வெல்வது; அம்பால்
நீக்கி, என் இனிச் செய்வது? 'என்று இராவணன் நினைந்தான். 6.31.20

இராவணன் சிந்தனை

'கடவுள் மாப்படை தொடுக்கின் மற்று அவை முற்றும் கடக்க
விடவும் ஆற்றவும் வல்லன் எல்லாரையும் வெல்லும்,
தடவும் ஆற்றலைக் கூற்றையும்; தமையனைப் போலச்
சுடவும் ஆற்றும் எவ் உலகையும்; எவனுக்கும் தோலான். 6.31.21

மோகப்படை தொடுக்க முடிவு செய்தல்

'கடவுள் மாப்படை தொடுக்கின் மற்று அவை முற்றும் கடக்க
விடவும் ஆற்றவும் வல்லன் எல்லாரையும் வெல்லும்,
தடவும் ஆற்றலைக் கூற்றையும்; தமையனைப் போலச்
சுடவும் ஆற்றும் எவ் உலகையும்; எவனுக்கும் தோலான். 6.31.22

மோகன விஞ்சையை இராவணன் அனுப்ப இலக்குவன் நாரணன் படையால் அதனை அழித்தல்

என்பது உன்னி, அவ் விஞ்சையை மனத்திடை எண்ணி,
முன்பன் மேல் வரத் துரந்தனன், அதுகண்டு முடுகி,
அன்பின் வீடணன், 'ஆழியான் படையினின் அறுத்தி!
என்பது ஓதினன்; இலக்குவன் அது தொடுத்து எய்தான். 6.31.23

வீடணன் சொற்படி இலக்குவன் மோகத்தை நீக்கியது கண்டு இராவணன் வீடணன் மேல் சினங் கொள்ளுதல்

வீடணன் சொல, விண்டுவின் படைக்கலம் விட்டான்,
மூடு வெஞ்சின மோகத்தை நீக்கலும், முனிந்தான்,
'மாடு நின்றவன் உபாயங்கள் மதித்திட, வந்த
கேடு நம் தமக்கு 'என்பது மனம் கொண்டு கிளர்ந்தான். 6.31.24

வீடணனை வேலால் கொல்லக் கருதுதல்

மயன் கொடுத்தது, மகெளாடு, வயங்கு அனல் வேள்வி;
அயன் படைத்து உளது; ஆழியும் குலிசமும் அனையது;
உயர்ந்த கொற்றமும் ஊழியும் கடந்து உளது உருவிச்
சயம்தனைப் பொரும் தம்பியை, உயிர் கொளச் சமைந்தான். 6.31.25

இராவணன் வீடணன் மேல் வேலை வீசுதல்

விட்ட போதினில் ஒருவனை வீட்டியே மீளும்,
பட்ட போது அவன் நான்முகன் ஆயினும் படுக்கும்,
வட்ட வேல் அது வலம் கொடு வணங்கினன் வாங்கி,
எட்ட நிற்கிலாத் தம்பிமேல் வல்விசைத்து எறிந்தான். 6.31.26

வேல் வருவது கண்டு அஞ்சிய வீடணனை அஞ்சல் என்றுகூறி இலக்குவன் அவ்விடத்து வந்து நிற்றல்

எறிந்த காலையில், வீடணன் அதன் நிலை எல்லாம்
அறிந்த சிந்தையன், 'ஐய! ஈது என் உயிர் அழிக்கும் :
பிறிந்து செய்யல் ஆம் பொருளிலை ' என்றதும், பெரியோன்;
'அறிந்து போக்குவல்; அஞ்சல்நீ! ' என்று இடை அணைந்தான். 6.31.27

இலக்குவன் விட்ட அம்புகளால் அவ்வேல் சிதையாது வருதல்

எய்த வாளியும் ஏவின படைக்கலம் யாவும்,
செய்த மாதவத்து ஒருவனைச் சிறுதொழில் தீயோன்
வய்த வையினில் ஒழிந்தன; 'வீடணன் மாண்டான்;
உய்தல் இல்லை 'என்று உம்பரும் தம் மனம் உலைந்தார். 6.31.28

இலக்குவன் அவ் வேலினைத் தம் மார்பில் ஏற்க எதிர்தல்

'தோற்பென் என்னினும், புகழ் நிற்கும்; தருமமும் தொடரும்;
ஆர்ப்பர் நல்லவர்; அடைக்கலம் புகுந்தவன் அழியப்
பார்ப்பது என்? நெடும்பழி வந்து தொடர்வதன் முன்னம்,
ஏற்பென், என்தனி மார்பின் 'என்று, இலக்குவன் எதிர்ந்தான். 6.31.29

வேலை ஏற்க வீடணன், அங்கதன், சுக்கிரீவன், அனுமன் முந்துதல்

இலக்குவற்கு முன் வீடணன் புகும்; இருவரையும்
விலக்கி, அங்கதன் மேற்செலும்; அவனையும் விலக்கி,
கலக்கும் வானரக் காவலன்; அனுமன்முன் கடுகும்;
அலக்கண் அன்னதை இன்னது என்று உரைசெயல் ஆமோ? 6.31.30

முன்நின்றார் எலாம் பின் உற, காலினும் முடுகி,
'நின்மின்; யான் இது விலக்குவென் ' என்று உரை நேரா,
மின்னும் வேலினை, விண்ணவர் கண்புடைத்து இரங்க,
பொன்னின் மார்பிடை ஏற்றனன், முதுகிடைப் போக. 6.31.31

வீடணன் சினந்தழெுந்து இராவணனது தேர்க் குதிரைகளையும் பாகனையும் தாக்குதல்

'எங்கு நீங்குதி நீ? 'என வீடணன் எழுந்தான்,
சிங்க ஏறு அன்ன சீற்றத்தன் இராவணன் தேரில்
பொங்கு பாய்பரி சாரதியொடும் படப் புடைத்தான்
சங்க வானவர் தலை எடுத்திட, நெடுந் தண்டால். 6.31.32

இராவணன் விசும்பில் எழுந்து இலங்கைக்குப் போதல்

சேய்விசும்பினில் நிமிர்ந்துநின்று, இராவணன் சீறி,
பாய் கடுங்கணை பத்து அவன் உடல்புகப் பாய்ச்சி,
ஆயிரம் சரம் அனுமன்தன் உடலினில் அழுத்தி,
போயினன், 'செருமுடிந்தது ' என்று இலங்கை ஊர் புகுவான். 6.31.33

வீடணன் இராவணனைத் தொடர்ந்து விண்ணில் எழுதல

'தேடிச் சேர்ந்த என் பொருட்டினால், உலகுடைச் செல்வன்
வாடிப் போயினன்; நீ இனி வஞ்சனை மதியால்
ஓடிப் போகுவது எங்கு? அடா! உன்னொடும் உடனே
வீடிப் போவென் 'என்று அரக்கன்மேல் வெகுண்டான். 6.31.34

வீடணனைக் கொன்று என்ன பயன் என்று இராவணன் திரும்பிப் பாராது இலங்கை புகுதல்

'வென்றி என்வயம் ஆனது; வீடணப் பசுவைக்
கொன்று, இனிப் பயன் இல்லை 'என்று இராவணன் கொண்டான்;
நின்றிலன், ஒன்றும் நோக்கிலன், முனிவு எலாம் நீத்தான்;
பொன் திணிந்தன மதிலுடை இலங்கை ஊர் புகுந்தான். 6.31.35

வீடணன் அரற்றி அழுதல்

அரக்கன் ஏகினான்; வீடணன் வாய்திறந்து அரற்றி
இரக்கம் தான் என இலக்குவன் இணை அடித் தலத்தில்,
கரக்கல் ஆகலாக் காதலின் வீழ்ந்தனன் கலுழ்ந்தான்;
குரக்கு வெள்ளமும் தலைவரும் துயரிடைக் குளித்தார். 6.31.36

வீடணன் இறக்கத் துணியச் சாம்பன் நிறுத்தி ஒன்று கூறுதல்

'பொன், அரும்புறு தார்ப் புயப் பொருப்பினான் பொன்ற
என் இருந்து நான்? இறப்பென், இக்கணத்து; எனை ஆளும்
மன் இருந்து இனி வாழ்கிலன் ' என்றனன் மறுக,
'நில். நில் 'என்றனன், சாம்பவன் உரை ஒன்று நிகழ்த்தும். 6.31.37

அனுமன் மருத்துமலை கொணர இலக்குவன் எழுவான் எனல்

'அனுமன் நிற்க, நாம் ஆர் உயிர்க்கு இரங்குதல் அறிவோ?
நினையும் அத்துணை மாத்திரத்து, உலகு எலாம் நிமிர்வான்,
வினையின் நல்மருந்து அளிக்கின்றான்; உயிர்க்கின்றான், வீரன்;
தினையும் அல்லல் உற்று அழுங்கன்மின் ' என்று இடர் தீர்த்தான். 6.31.38

சாம்பன் அனுமனுக்கு உணர்த்த அனுமன் விரைதல்

மருத்தின் காதலன் மார்பிடை அம்பு எலாம் வாங்கி,
'இருத்தியோ, கடிது ஏகலை? இளவலை இங்ஙன்
வருத்தம் காணுமோ மன்னவன்? ' என்றனன் சாம்பன்;
கருத்தை உன்னி, அம்மாருதி உலகு எலாம் கடந்தான். 6.31.39

மாருதி மருந்து மலை கொணர்ந்தான்

உத்தர திசைமேல் ஓடி உலகு எலாம் கடக்கப் பாய்ந்து,
மெய்த்தகு மருந்து தன்னை, வெற்பொடும் கொணர்ந்தான், வீரன்;
பொய்த்தல் இல் குறிகெடாமே பொது அற நோக்கி, பொன்போல்
வைத்தது வாங்கிக் கொண்டு வருதலில் வருத்தம் உண்டோ? 6.31.40

இலக்குவன் எழுதல்

தந்த நன் மருந்து தன்னை; தாக்குதல் முன்னம் வேகம்
வந்தது, மாண்டார்க்கு எல்லாம் உயிர்தரும் வலத்தது என்றால்.
நொந்தவர் நோவு தீர்க்கச் சிறிது அன்றோ? நொடியின் முன்னே,
இந்திரன் உலகம் ஆர்க்க, எழுந்தனன் இளைய வீரன். 6.31.41

எழுந்த இலக்குவன் அனுமனைத் தழுவி வீடணன் நலம் அறிந்து மகிழ்தல்

எழுந்து நின்று அனுமன் தன்னை இருகையால் தழுவி, எந்தாய்!
விழுந்திலன் அன்றோ மற்று அவ் வீடணன்! 'என்ன, விம்மித்
தொழுந் துணையவனை நோக்கி, துணுக்கமும், துயரும் நீங்கி,
'கொழுந்தியும் மீண்டாள்; பட்டான் அரக்கன் 'என்று உவகை கொண்டான். 6.31.42

வானரத் தலைவர்கள் அனுமனைப் புகழ்ந்துவிட்டு இராமனைச் சார்தல்

'தருமம் என்று அறிஞர் சொல்லும் தனிப்பொருள் தன்னை இன்னே
கருமம் என்று அனுமன் ஆகக் காட்டிய தன்மை கண்டால்,
அருமை என் எமருக்கு? அம்மா! அறம் வெல்லும், பாவம் தோற்கும்,
இருமையும் நோக்கின் 'என்னா, இராமன்பால் எழுந்து சென்றார். 6.31.43

தன்னை வானரத் தலைவர் வணங்கக் கண்ட இராமன், 'விளைந்தது என் 'எனல்

ஒன்று அல பல என்று ஓங்கும் உயர்பிணத்து உம்பர் ஒன்றும்
குன்றுகள் பலவும் சோரிக் குரைகடல் அனைத்தும், தாவிச்
சென்று அடைந்து, இராமன் தன்னைத் திருவடி வணக்கம் செய்தார்;
வென்றியின் தலைவர்க் கண்ட இராமன் 'என் விளைந்தது? 'என்றான். 6.31.44

சாம்பனால் நிகழ்ந்ததறிந்து இராமன் அனுமனை வாழ்த்துதல்

உற்றது முழுது நோக்கி ஒழிவு அற, உணர்வின் ஊன்றச்
சொற்றனன் சாம்பன்; வீரன் அனுமனைத் தொடரப் புல்லி,
பெற்றனென் உன்னை; என்னை பெறாதன? பெரியோய்! என்றும்
அற்று இடை ஈறு செல்லா ஆயுளை ஆக 'என்றான். 6.31.45

இலக்குவன் இராமனைச் சார்தல்

புயல்பொழி அருவிக் கண்ணன், பொருமலன் பொங்குகின்றான்,
உயிர்புறத்து ஒழிய நின்ற உடல் அன்ன உருவத் தம்பி
துயர்தமக்கு உதவி, மீளாத் துறக்கம் பெற்று உயர்ந்த தொல்லைத்
தயரதற் கண்டால் ஒத்த தம்முனைத் தொழுது சார்ந்தான். 6.31.46

இராமன் இலக்குவனைத் தழுவிப் பாராட்டுதல் (9717-9718)

இளவலைத் தழுவி, 'ஐய! இரவிதன் குலத்துக்கு ஏற்ற
அளவு, தம் அடைந்தோர்க்கு ஆகி, மன் உயிர் அளிக்கும் தன்மை;
துளவு இயல் தொங்கலாய்! நீ அன்னது துணிந்தாய் என்றால்,
அளவியல் அன்று; செய்தற்கு அடுப்பதே ஆகும் அன்றே. 6.31.47

'புறவு அதன் பொருட்டால் யாக்கை புண் உற அரிந்த புத்தேள்
அறவனும், ஐய! நின்னை நிகர்க்கிலன்; அப்பால் நின்ற
பிற இனி உரைப்பது என்னே? பேர் அருளாளர் என்பார்
கறவையும் கன்றும் ஒப்பார், தமர்க்கு இடர் காணில் 'என்றான். 6.31.48

இராமன் இலக்குவனது போர்க்கோலம் நீக்கி இளைப்பாறுதல்

சாலிகை முதல ஆன போர்ப்பரம் தாங்கிற்று எல்லாம்
நீல் நிற ஞாயிறு அன்ன நெடியவன் முறையின் நீக்கி,
கோல் சொரி தனுவும் கொற்ற அனுமன் கைக் கொடுத்து, கொண்டல்
மேல்நிறை குன்றில் நின்று மெய்ம்மெலிவு ஆற்றல் உற்றான். 6.31.49
--------------

6.32 – Die Vanaras betrachten das Schlachtfeld

6.32 வானரர் களம் காண் படலம் 9722 – 9757 (36)

சுக்கிரீவன் வானர சேனையோடு இராமனை வணங்கி இறந்த அரக்கரின் பெருக்கை நோக்கித் திகைத்தல்

ஆயபின், கவியின் வேந்தும், அளப்பருந் தானையோடும்
மேயினன், இராமன் பாதம் விதிமுறை வணங்கி, வீந்த
தீயவர் பெருமை நோக்கி, நடுக்கமும், திகைப்பும் உற்றான்,
ஓய்வுறு மனத்தான் ஒன்றும் உரைத்திலன், நாணம் உற்றான். 6.32.1

இராமன் சுக்கிரீவனை வீடணனோடு சென்று களத்தைக் காண் எனல்

'மூண்டு எழு சேனை வெள்ளம் உலகு ஒரு மூன்றின் மேலும்
நீண்டு உளது அதனை, ஐய! எங்ஙனம் நிமிர்ந்தது? 'என்ன
தூண் திரண்டு அனைய திண்தோள் சூரியன் சிறுவன் சொல்லக்
'காண்டிநீ, அரக்கர் வேந்தன் தன்னொடும் களத்தை 'என்றான். 6.32.2

போர்க்களக் காட்சியைக் கண்ட வானரர்களின் நிலை

தொழுதனர் தலைவர் எல்லாம், தோன்றிய காதல் தூண்ட
'எழுக 'என விரைவில் சென்றார், இராவணற்கு இளவலோடும்
கழுகொடு பருந்தும் பாறும் பேய்களும் கணங்கள் மற்றும்
குழுவிய களத்தைக் கண்ணின் நோக்கினர் துணுக்கம் கொண்டார் 6.32.3

களக் காட்சியைக் காட்டுமாறு வீடணனை வானரர் வேண்டுதல்

ஏங்கினார்; நடுக்கம் உற்றார்; இரைத்து இரைத்து. உள்ளம் ஏற,
வீங்கினார்; வெருவலுற்றார்; விம்மினார்; உள்ளம் வெம்ப,
ஓங்கினார்; மெள்ள மெள்ள உயிர் நிலைத்து, உவகை ஊற
ஆங்கு அவர் உற்ற தன்மை யார் அறிந்து அறைய கிற்பார்? 6.32.4

ஆயிரம் பருவம் கண்டால் காட்சிக்கு ஓர் கரையிற்று அன்றால்
மேயின துறைகள் தோறும் விம்மினர் நிற்பது அல்லால்
பாய்திரைப் பரவை ஏழும் காண்குறும் பதகர் என்ன
நீ இருந்து உரைத்தி என்றார்; வீடணன் நெறியில் சொல்வான். 6.32.5

இறந்தும் நிற்கும் யானைகளின் காட்சியைக் காட்டுதல்

காகப் பந்தர்ச் செங்களம் எங்கும், செறிகால
ஓகத்து அம்பின் பொன்றின வேனும், உடல் ஒன்றி,
மேகச் சங்கம் தொக்கு என வீழும் வெளி இன்றி,
நாகக் குன்றம் நின்றமை காணீர் நமரங்காள்! 6.32.6

யானைகளின்மேல் வீரர்கள் இறந்து கிடக்கும் காட்சி

'வென்றிச் செங்கண் வெம்மை அரக்கர் மிசை ஊர்வ
ஒன்றிற்கு ஒன்று உற்று அம்பு தலைப்பட்டு உயிர் நுங்கப்,
பொன்றிச் சிங்கம், நாக அடுக்கல், பொலிகின்ற
குன்றில் துஞ்சும் தன்மை நிகர்க்கும் குறிகாணீர். 6.32.7

மாண்ட வீரரின் முகமலர்ச்சி

'அளியின் பொங்கும் அங்கணன் ஏவும் அயில் வாளிக்
களியில் பட்டார், வாள்முகம், மின்னும் கரையில்ல,
புளினத் திட்டின் கண் அகன் வாரிக் கடல் பூத்த
நளினக் காடே ஒப்பன காண்மின் நமரங்காள். 6.32.8

குதிரைகள் இல்லாத் தேர்கள் இரத்த வெள்ளத்தில் நாவாய் போலத் தோன்றுதல்

'பூவாய் வாளிச் செல் எறி காலைப் பரிபொன்ற,
கோவாய் விண்சேர் வெண்கொடி திண் காலொடு கூட,
மாவாய் திண்தேர் மண்டுதலால் நீர், மறிவேலை
நாவாய் மானச் செல்வன காண்மின் நமரங்காள்; 6.32.9

யானைகள் உயிரோடும் இரத்த வெள்ளத்தோடு கடலையடைதல்

'ஒழுகிப் பாயும் மும்மத வேழம் உயிரோடும்
எழுகிற்கில்லாச் செம்புனல் வெள்ளத்திடை ஈர்ப்ப,
பழகிற்று இல்லாப் பல்திரை தூங்கும் படர்வேலை
முழுகித் தோன்றும் மீன் அரசு ஒக்கும் முறை காணீர். 6.32.10

கவந்தமாடுதல்

'கடக்கார் என்னப் பொங்கு கவந்தத்தொடு கைகள்
தொடக்கா நிற்கும் பேய், இலயத்தின் தொழில் பூண்ட
மடக்கு ஓவு இல்லா வார் படிமக் கூத்து அமைவிப்பான்,
நடக்கால் காட்டும் கண்ணுளர் ஒக்கும் நமரங்காள்! 6.32.11

நரம்புத் தொடக்கிலகப்பட்ட பேய் நழுவிப் போதல்

'மழுவின் கூர் வாய் வன் பல் இடுக்கின் வய வீரர்
குழுவின் கொண்டந் நாடி தொடக்காப் பொறி கூட்டித்
தழுவிக் கொள்ள, கள்ள மனப் பேய் அவைதள்ளி
நழுவிச் செல்லும் இயல்பின காண்மின் நமரங்காள். 6.32.12

இறந்து மாறி வீழ்ந்து கிடக்கும் இரு யானைகள் இருதலை பெற்ற ஒரு விலங்குபோலக் காணப்படுதல்

பொன்னின் ஓடை மின்பிறழ் நெற்றிப் புகர்வேழம்,
பின்னும் முன்னும் மாறின வீழ்வின் பிணைவு உற்ற,
தன்னின் நேராம் மெய் இருபாலும் தலைபெற்ற
என்னும் தன்மைக்கு ஏய்வன பல்வேறு இவை காணீர். 6.32.13

கோபக் கனல் எரிகின்ற அரக்கரின் வாய்கள் ஓம குண்டம் போலுதல்

'நாமத் திண் போர் முற்றிய கோப நகை நாறும்
பாமத் தொல்நீர் அன்ன நிறத்தோர் பகுவாய்கள்,
தூமத் தோடும் வெங்கனல் இன்னும் சுடர்கின்ற
ஓமக் குண்டம் ஒப்பன பல்வேறு இவை காணீர். 6.32.14

இரத்த வெள்ளத்தில் வீழ்ந்து கிடக்கும் யானைகளின் கொம்புகள்

மின்னும் ஓடை ஆடல் வயப் போர் மிடல் வேழக்
கன்னம் மூலத்து உற்றன வெண்சாமரை காணீர்;
மன்னும் மாநீர்த் தாமரை மீதின் மகிழ்வு எய்தி
அன்னம் மெல்லத் துஞ்சுவ ஒக்கின்றன வம்மா! 6.32.15

'ஓளிம் முற்றாது உற்று உயர் வேழத்து ஒளிர் வெண் கோடு
ஆளின் முற்றாச் செம்புனல் வெள்ளத்தவை காணீர்;
கோளின் முற்றாச் செக்கருள் மேகக் குழுவின்கண்
நாளின் முற்றா வெண்பிறை போலும் நமரங்காள்! 6.32.16

வீரர்களின் கண்ணெரியால் வெந்த தசையைப் பேய்கள் உண்டு மகிழ்தல்

'கொடியும் வில்லும், கோலொடு தண்டும், குவிதேரும்,
துடியின் பாதக் குன்றின்மிசைத் தோல் விசியும் சுட்டு
ஒடிவில் வெய்யோர் கண் எரி செல்ல, உடன் வெந்த
தடி உண்டு ஆடிக் கூளி தடிக்கின்றன காணீர். 6.32.17

மகர மீன்கள் குருதி வெள்ளத்தைக் கடலென மருண்டுவந்து தம்மைக் கண்டு யானைகள் ஓடுவதால் உண்மையுணர்ந்து மீளல்

'சகர முந்நீர் செம்புனல் வெள்ளம் தடுமாற,
மகரம் தம்மின் வந்தன காணா, மனம் உட்கிச்
சிகரம் அன்ன யானைகள் ஓடிச் செல, நாணின்
நகரம் நோக்கிச் செல்வன காண்மின் நமரங்காள். 6.32.18

விண்ணில் இறந்த அரக்கர் உடம்பு தம்மேல் வீழ்ந்தமையால் மண்ணில் செல்வார் மடங்கி வீழ்ந்து மீளமுடியாது வருந்தும் நிலை

'விண்ணில் பட்டார் வெற்பு உறழ் காயம் பல, மென்மேல்
மண்ணில் செல்வார் மேனியின் வீழ, மறைவுற்றார்,
எண்ணில் தீரா அன்னவை நீக்கும் மிடல் இல்லார்
கண்ணில் தோன்றார் விம்மி உழக்கும் படிகாணீர். 6.32.19

அரக்கர்களின் இரத்ததாரை பட்ட உச்சிச் சூரியன் உதய சூரியனாகத் தோன்றுகை

'அச்சின் திண்தேர் ஆனையின் மாமேல் காலாளின்
மொய்ச்சுச் சென்றார் மொய் குருதித் தாரைகள் முட்ட,
உச்சிச் சென்றான் ஆயினும் வெய்யோன், உதயத்தின்
குச்சிச் சென்றான் ஒத்து உளன் ஆகும் குறிகாணீர். 6.32.20

அரக்கரின் இரத்தம்பட்ட சந்திரன் சூரியனைப் போலுதல்

கால் தோய் மேனிக் கண்டகர் கண்டப் படுகாலை,
"ஆறோ! " என்ன, விண்படர் செஞ்சோரி அது ஆகி,
வேறாய் நின்ற வெண்மதி செங்கேழ் நிறம் விம்மி,
மாறு ஓர் வெய்யோன் மண்டலம் ஒக்கின்றது காணீர். 6.32.21

குருதிக்கடல் படிந்த பறவைகளின் சிறகுகள் துளித்த குருதித் துளிகளைத் தாங்கிக் கானிலும் காவிலும் உள்ள மலர்களும் வண்டுகளும் செந்நிறம் பெறுதல

வான்நனைய, மண்நனைய, வளர்ந்து எழுந்த
கொழுங்குருதி மகர வேலை
தான் நனைவுற்று எழும் பறவைச்சிறை தெளித்த
புதுமழையின் துள்ளிதாங்கி,
மீன் அனைய நறும் போதும் விரை அருந்தும்
சிறை வண்டும், நிறம்வேறு எய்தி,
கானகமும் கடிபொழிலும் முறி ஈன்ற போன்று
ஒளிர்வ காண்மின்! காண்மின்! 6.32.22

இரத்த ஆறு பேராறு போன்றமை

'வரை பொருத மத யானைத் துணைமருப்பும்
கிளர்முத்தும், மணியும், வாரி,
திரை பொருது புறம் குவிப்பத் திறங்கொள்பணை மரம்
உருட்டி, சிறைப்புள் ஆர்ப்ப,
நுரை, கொடியும், வெண்குடையும் சாமரையும் எனச்சுமந்து,
பிணத்தின் நோன்மைக்
கரை பொருது கடல் மடுக்கும் கடுங்குருதிப் பேர்யாறு
காண்மின்! காண்மின்! 6.32.23

'கய்க்குன்றப் பெருங்கரைய, நிருதர்புயக்
கல்செறிந்த, கதலிக் கான,
மொய்கின்ற பரித்திரைய, முரண்கரிக்கைக்
கோள்மாவ, முளரிக்கானின்
நெய்க்கின்ற வான்முகத்த, விழும் குடரின்
பாசடைய, நிணமென் சேற்ற,
உய்க்கின்ற உதிரநீர் அகன்குளங்கள் உலப்பு
இறந்த உவையும் காண்மின். 6.32.24

போர்க்களம் மருத நிலம் போல்கின்றது

'நெடும்படைவாள் நாஞ்சில் உழு நிணச் சேற்றின்
உதிரநீர் நிறைந்த காப்பின்,
கடும்பகடு படிகிடந்த கரும்பரம்பின், இனமள்ளர்
பரந்த கையின்,
படுங்கமல மலர்நாறு முடிகிடந்த பெருங்கிடக்கை,
பரந்த பண்ணைத்
தடம்பணையின், நறும்பழனம் தழுவியதே எனப்
பொலியும் தகையும் காண்மின். 6.32.25

இரத்தப் பரப்பில் சுழிகள் தோன்றுவதைக் காட்டுதல்

வெளில் தீர்த்த வரை புரையும் அடல் அரக்கர்
உடல்விழவும், வீரன் வில்லின்
ஒளிறு ஈர்த்த முழுநெடுநாண் உருமேறு பலபடவும்,
உலகம்கீண்டு
நளில் தீர்த்த நாகபுரம் புக்கு இழிந்த பகழிவழி,
நதியின் ஓடி
களிறு ஈர்த்துப் புகமண்டும் கடுங்குருதித் தடஞ்சுழிகள்
காண்மின்! காண்மின்! 6.32.26

இராமன் அம்பு அரக்கருடலில் தங்காமல் சென்றமை

"கைத்தலமும், காத்திரமும், கருங்கழுத்தும் நெடும்புயமும்,
உரமும், கண்டித்து
எய்த்திலபோய், திசைகள்தொறும் இருநிலத்தைக் கிழித்து
இழிந்த என்னின் அல்லால்,
மத்தகரி வயமாவின் வாள்நிருதர் பெருங்கடலின்
மற்று இவ் வாளி
தைத்துளதாய் நின்றது என ஒன்றேயும் காண்பரிய
தகையும் காண்மின். 6.32.27

மடிந்து கிடந்த மத்த யானைகள்

'குமுதம் நாறும் மதத்தன கூற்றன
சமுதரோடு மடிந்தன சார்தரும்
திமிர மா அன்ன செய்கைய இத்திறம்
அமுதின் வந்தன ஐ இரு கோடியால். 6.32.28

அயன் வேள்வியில் தோன்றிய யானைகள்

'ஏறு நான்முகன் வேள்வி எழுந்தன
ஊறும் மாரியும் ஓங்கு அலை ஓதமும்
மாறும் ஆயினும் மாமதமாய் வரும்
ஆறு மாறில ஆறு இரு கோடியால். 6.32.29

ஐராவதத்தின் மரபில் வந்த யானைகள்

'உயிர் வறந்தும் உதிரம் வறந்து தம்
மயர் வறந்தும் மதம் மறவாதன
புயலவன் திசைப் போர்மத யானையின்
இயல் பரம்பரை ஏழ் இரு கோடியால். 6.32.30

வடதிசை யானையின் வழிவந்த யானைகள்

'கொடாது நிற்றலின் கொற்ற நெடுந்திசை
எடாது நிற்பன நாட்டம் இமைப்பு இல
வடாது திக்கின் மதவரையின் வழிக்
கடாம் முகத்த முளரிக் கணக்கவால். 6.32.31

வானவர்க்கு இறைவன் திறை தந்தன
ஆனவர்க்கம் ஓர் ஆயிர கோடியால்;
தானவர்க்கு இறைவன் திறை தந்தன
ஏனைவர்க்கம் கணக்கு இல இவ்வெலாம். 6.32.32

குதிரைகளின் வகைகள்

பாற்கடல் பண்டு அமிழ்தம் பயந்த நாள்
ஆர்த்து எழுந்தன ஆயிரம் ஆயிரம்
மால் கணம் பரி ஈங்கு இவை; மாறு உவை
மேற்கின் வேலை வருணனை வென்றவால். 6.32.33

குபேரன், விஞ்சையர் வேந்தன் என்பவரை வென்று பெற்றகுதிரைகள்

'இருநிதிக் கிழவன் இழந்து ஏகின
அரிய அப்பரி ஆயிரம் ஆயிரம்;
விரிசினத்து இகல் விஞ்சையர் வேந்தனைப்
பொருது பற்றிய தாமரை போலுமால். 6.32.34

வானரத் தலைவர்கள் களக் காட்சியை விடுத்து இராமனை அடைதல்

என்று காணினும் காட்டினும் ஈது இறைக்
குன்று காணினும் கோளிலது ஆதலான்
நின்று காணுதும் நேமியினான் உழைச்
சென்று காண்கும் என்று ஏகினர் செவ்வியோர். 6.32.35

அனைவரும் இராமனருகில் வியப்புடன் இருத்தல்

ஆரியன் தொழுது ஆங்கு அவன் பாங்கரின்
போர் இயற்கை நினைந்து எழும் பொம்மலார்
பேர் உயிர்ப்பொடு இருந்தனர்; பின்பு உறும்
காரியத்தின் நிலைமை கழறுவாம். 6.32.36
--------

Rama mit Pfeil und Bogen: Stärke steht im Dienst verantwortlichen Handelns.

Die bildlichen Darstellungen begleiten die Lektüre; sie sind keine Abbildungen einzelner Verse.

6.33 – Ravana betrachtet das Schlachtfeld

6.33 இராவணன் களம் காண் படலம் 9758 – 9784 (27)

இலங்கை எய்திய இராவணன் வெற்றி பெற்றதனால் மகிழ்ந்திருத்தல்

அலக்கண் எய்தி அமரர் அழிந்திட
உலக்க வானர வீரரை ஓட்டி அவ்
இலக்குவன்தனை வீட்டி இராவணன்
துலக்கம் எய்தினன் தோம் இல் களிப்பினே. 6.33.1

போரில் வருந்தினர்க்கு விருந்து அமைக்க இராவணன் விரும்புதல்

பொருந்து பொன்பெருங் கோயிலுள் போர்த்தொழில்
வருந்தினர்க்கு தம் அன்பினின் வந்தவர்க்கு
அருந்துதற்கு அமைவு ஆயின ஆக்குவான்
விருந்து அமைக்க மிகுகின்ற வேட்கையான். 6.33.2

வான நாட்டை வருக என வல்விரைந்து
ஏனை நாட்டவரோடும் வந்து எய்தினார்;
‘ஆன நாட்டு அரும் போகம் அமைத்திர்; மற்று
ஊனம் நாட்டின் இழத்திர் உயிர் ‘என்றான். 6.33.3

போகப் பொருள்கள் வந்து சேர்தல்
நறவும் ஊனும் நவை அற நல்லன
பிறவும் ஆடையும் சாந்தமும் பெய்ம் மலர்த்
திறமும் நானப் புனலொடு சேக்கையும்
புறமும் உள்ளும் நிறையப் புகுந்தவால். 6.33.4

போகப் பொருள்களை அமைக்க வான் அரமகளிர் வருதல்

நான நெய் நன்கு உரைத்து நறும்புனல்
ஆன கோது அற ஆட்டி அமுது ஒடு
பானம் ஊட்டி சயனம் பரப்புவான்
வான நாட்டியர் யாவரும் வந்தனர். 6.33.5

அரக்கரின் நுகர்ச்சி (9761-9762)

பாடுவார்கள்; பயில்நடம் பாவகத்து
ஆடுவார்கள்; அமளியில் இன்புறக்
கூடுவார்முதல் யாரும் குறைவு அறத்
தேடினார் என பண்ணையில் சேர்ந்தனர். 6.33.6

அரைசர் ஆதி அடியவர் அந்தமா
வரைசெய் மேனி இராக்கதர் வந்துளார்
விரைவின் இந்திர போகம் விளைதரக்
கரையிலாத பெருவளம் கண்ணினார். 6.33.7

தூதுவர் வந்து வணங்குதல்

இன்ன தன்மை அமைந்த இராக்கதர்
மன்னன் மாடு வந்து எய்தி வணங்கினார்
அன்ன சேனை களப்பட்ட ஆறு எலாம்
துன்னு தூதர் செவியிடைச் சொல்லுவார். 6.33.8

தூதுவரின் அச்ச நிலை

நடுங்குகின்ற உடலினர் நா உலர்ந்து
ஒடுங்குகின்ற உயிர்ப்பினர் உள் அழிந்து
இடுங்குகின்ற விழியினர் ஏங்கினார்
பிடுங்குகின்ற மொழியினர் பேசுவார். 6.33.9

தூதர் சொன்னது (9765-9766)

‘இன்று யார் விருந்து இங்கு உண்பார்? இகல் முகத்து இமையோர் தந்த
வென்றியாய்! ஏவச் சென்ற ஆயிர வெள்ளச்சேனை
நின்றது புறத்தது ஆக, இராமன்கை நிமிர்ந்த சாபம்
ஒன்றினால் இரண்டு, மூன்று கடிகையில் உலர்ந்தது ‘என்றார். 6.33.10

‘வலிக்கடன் வான் உேளாரைக் கொண்டு, நீவகுத்த போகம்,
“கலிக்கடன் அளிப்பல் “ என்று நிருதர்க்குக் கருதினாயேல்,
பலிக்கடன் அளிக்கற்பாலை அல்லது, உன்குலத்தின் பாலோர்
ஒலிக்கடல் உலகத்து இல்லை; ஊர் உளார் உளமே உள்ளார். 6.33.11

இராவணன் திகைத்தல்

ஈட்டரும் உவகை ஈட்டி இருந்தவன், இசைத்த மாற்றம்
கேட்டலும், வெகுளியோடு துணுக்கமும் இழிவும் கிட்டி
ஊட்டு அரக்கு அனைய செங்கண் நெருப்பு உக, உயிர்ப்பு வீங்க
தீட்டிய படிவம் என்னத் தோன்றினன், திகைத்த நெஞ்சன். 6.33.12

இராவணன் தூதுவர் சொல்லை ஐயுறுதல்

என்னினும் வலியர் ஆன இராக்கதர் யாண்டும் வீயார்
உன்னினும் உலப்பு இலாதார்; உவரியின் மணலின் மிக்கார்;
“பின் ஒரு பெயரும் இன்றி மாண்டனர் “ என்று பேசும்
இந்நிலை பொய்ம்மை; மெய்ம்மை விளம்புவீர் விரைவின் என்றான்! 6.33.13

மாலியவான், தூதர் பொய்யுரையார் எனல்

கேட்டு அயல் இருந்த மாலி, ஈது ஒரு கிழமைத்து ஆமோ?
ஓட்டு உறு தூதர் பொய்யே உரைப்பரோ? உலகம் யாவும்
வீட்டுவது இமைப்பின் அன்றே, வீங்கு எரி? விரித்த எல்லாம்
மாட்டுவன் ஒருவன் அன்றே, இறுதியில் மனத்தால்? ‘என்றான் 6.33.14

மாலியவான் மேலும் கூறுதல் (9770-9772)

“அளப்ப அரும் உலகம் யாவும் அமைத்துக் காத்து அழிக்கின்றான்தன்
உளப் பெரும் தகைமை தன்னால் ஒருவன் ‘‘ என்று உண்மை வேதம்
கிளப்பது கேட்டும் அன்றே? அரவின்மேல் கிடந்து, மேல்நாள்,
முளைத்த போர் இராமன் ‘‘ என்று வீடணன் மொழி பொய்த்து ஆமோ? 6.33.15

‘ஒன்று இடில் அதனை உண்ணும் உலகத்தின் உயிர்க்கு ஒன்றாத
நின்றன எல்லாம் பெய்தால், உடன் நுங்கும் நெருப்பும் காண்டும்;
குன்றொடு மரமும், புல்லும். பல்லுயிர்க் குழுவுங் கொல்லும்
வன் திறல் காற்றும் காண்டும்; வலிக்கு ஒரு வரம்பும் உண்டோ? 6.33.16

‘பட்டதும் உண்டே உன்னை, இந்திரச் செல்வம் பற்று
விட்டதும் மெய்ம்மை; ஐய! மீட்டு ஒரு வினையும் இல்லை;
கெட்டது, உன் பொருட்டினாலே, நின்னுடைக் கேளிர் எல்லாம்;
சிட்டது செய்தி ‘என்றான்; அதற்கு அவன் சீற்றம் செய்தான். 6.33.17

மாலியவானுக்கு இராவணன் மறுமொழி

‘இலக்குவன் தன்னை வேலால் எறிந்து, உயிர் கூற்றுக்கு ஈந்தேன்;
அலக்கண் இல் தலைவர் எல்லாம் அழுந்தினர் அதனைக் கண்டால்,
உலக்குமால் இராமன்; பின்னர் உயிர்ப்பொறை உகவான்; உற்ற
மலக்கம் உண்டாகின் ஆக; வாகை என் வயத்தது என்றான். 6.33.18

இலக்குவன் உயிர் பெற்றதைத் தூதுவர் உணர்த்துதல்

ஆண்டு அது கேட்டு நின்ற தூதுவர், ‘ஐய! மெய்யே
மீண்டது, அவ் இளவல் ஆவி, மாருதி மருந்து மெய்யில்
தீண்டவும் தாழ்த்தது இல்லை; யாரும் அச் செங்கணானைப்
பூண்டனர் தழுவிப் புக்கார் காணுதி போதி ‘என்றார். 6.33.19

இராவணன் கோபுரத்தில் ஏறிப் போர்க்களத்தைக் காணுதல்

தேறிலன் ஆதலானே, மறுகுறு சிந்தை தேற,
ஏறினன், கனகத்து ஆன கோபுரத்து உம்பர் எய்தி,
ஊறின சேனை வெள்ளம் உலந்தபேர் உண்மை எல்லாம்,
காறின உள்ளம் நோவ, கண்களால் தரெியக் கண்டான். 6.33.20

தலையொடு முடியும் அரக்கியரின் அழுகை ஒலியை இராவணன் கேட்டல்

கொய்தலைப் பூசற் பட்டோர் குலத்தியர் குவளையோடு
நெய்தலை வென்றவாள் கண் குமுதத்தின் நீர்மை காட்ட
கய்தலை உற்ற பூசல்; கடல் எலாம் நிமிருங் காலைச்
செய்தலை உற்ற ஓசைச் செயலது செவியில் கேட்டான். 6.33.21

எண்ணுநீர் கடந்த யானைப் பெரும்பிணம் ஏந்தி, யாணர்
மண்ணின்நீர் அளவும் கல்லி, நெடுமலை மறித்து, மண்டும்
புண்ணின்நீர் ஆறும், பல்பேய்ப் புதுப் புனல் ஆடும் பொம்மல்,
கண்ணின்நீர் ஆறும் மாறாக் கருங்கடல் மழுப்பக் கண்டான். 6.33.22

‘முற்று இயல் சிலை வலாளன் மொய் கணை துமிப்ப, ஆவி
பெற்று இயல் பெற்றி பெற்றாம் ‘ என்ன வாள் அரக்கர் யாக்கை,
சிறு இயல் குறுங்கால் ஓரிக் குரல் கொளை இசையா, பல்பேய்
கற்று இயல் பாணி கொட்டக், களிநடம் பயிலக் கண்டான். 6.33.23

குமிழி நீரோடும், சோரி, கனலொடும், கொழிக்கும் கண்ணான்,
தமிழ் நெறி வழக்கம் அன்ன தனிச்சிலை வழக்கிற் சாய்ந்தார்.
அமிழ்பெருங் குருதி வெள்ளம் ஆற்று வாய் முகத்தில் தேக்கி,
உமிழ்வதே ஒக்கும் வேலை ஓதம் வந்து உடற்றக் கண்டான். 6.33.24

விண்களில் சென்ற வன்தோள் கணவரை, அலகை வெய்ய
புண்களில் கைகள் நீட்டி, புதுநிணம் கவர்வ நோக்கி,
மண்களில் தொடர்ந்து, வானில் பிடித்து, வள் உகிரின் மானக்
கண்களைச் சூன்று நீக்கும் அரக்கியர் குழாமும் கண்டான். 6.33.25

இராவணன் கோபுரத்திலிருந்து இறங்குதல்

விண் பிளந்து ஒல்க ஆர்க்கும் வானரர் வீக்கம் கண்டான்;
மண் பிளந்து அழுந்த ஆடும் கவந்தத்தின் வருக்கம் கண்டான்;
கண் பிளந்து அகல நோக்கும் வானவர் களிப்பும் கண்டான்
புண் பிளந்தனைய நெஞ்சன் கோபுரத்து இழிந்து போந்தான். 6.33.26

இராவணன் சினக் குறிப்புடன் அரசவை அடைதல்

நகை பிறக்கின்ற வாயன் நாக்கொடு கடைவாய் நக்கப்
புகை பிறக்கின்ற மூக்கன், பொறி பிறக்கின்ற கண்ணன்,
மிகை பிறக்கின்ற நெஞ்சன் வெஞ்சினத் தீமேல் வீங்கி
சிகை பிறக்கின்ற சொல்லன், அரசியல் இருக்கை சேர்ந்தான். 6.33.27
-------------

6.34 – Ravana besteigt seinen Wagen

6.34 இராவணன் தேர் ஏறு படலம் 9785 – 9825 (41)

எஞ்சியுள்ள சேனையைத் திரண்டு எழுமாறு முரசு அறையச் செய்க ‘என இராவணன் மகோதரனை நோக்கிக் கூறுதல்

பூதரம் அனைய மேனி, புகைநிறப் புருவச் செங்கண்
மோதரன் என்னும் நாமத்து ஒருவனை முறையின் நோக்கி,
“ஏது உளது இறந்திலாதது இலங்கையுள் இருந்த சேனை
யாதையும் எழுக! ‘என்று ஆனை மணிமுரசு எற்றுக! ‘‘ என்றான். 6.34.1

போர்முரசுகேட்டு அரக்கர்சேனை திரளுதல்

எற்றிய முரசங் கேளா, ஏழ் இரு நூறு கோடி
கொற்ற வாள் நிருதர் சேனை குழீஇயது; கொடித்திண் தேரும்
சுற்றுறு துளைக் கைம்மாவும், துரகமும், பிறவும் தொக்க;
வற்றிய வேலை என்ன இலங்கை ஊர் வறளிற்று ஆக. 6.34.2

இராவணன் சிவபூசைசெய்து தானம் முதலியன நல்குதல்

ஈசனை, இமையா முக்கண் ஒருவனை, இருமைக்கு ஏற்ற
பூசனை முறையின் செய்து, திருமறை புகன்ற தானம்
வீசினன் இயற்றி, மற்றும் வேட்டன வேட்டோர்க்கு எல்லாம்
ஆசு அற நல்கி, ஒல்காப் போர்த்தொழிற்கு அமைவது ஆனான் 6.34.3

இராவணன் போர்க்கோலம் கொள்ளுதல்

அருவி அஞ்சனக் குன்றிடை ஆயிரம் அருக்கர்
உருவினோடும் வந்து உதித்தனர் ஆம் என ஒளிர,
கருவி நான்முகன் வேள்வியில் படைத்ததும், கட்டிச்
செருவில் இந்திரன் தந்த பொன்கவசமும், சேர்த்தான். 6.34.4

வாள் வலம்பட, மந்தரம் சூழ்ந்த மாசுணத்தின்
தாள் வலந்து ஒளிர் தமனியக் கச்சொடும் சார்த்தி;
கோள் வலந்தன குவிந்தனவாம் எனும் கொள்கை
மீள்வு இல் கிம்புரி மணிக் கடிசூத்திரம் வீக்கி; 6.34.5

மறை விரித்து என, ஆடுறு மான மாக் கலுழன்
சிறை விரித்தனெ, கொய்சகம் மருங்கு உறச் சேர்த்தி;
முறை விரித்தன்ன முறுக்கிய கோசிக மருங்கில்
பிறை விரித்தன்ன வெள் எயிற்று அரவமும் பிணித்து; 6.34.6

மழைக் குலத்தொடு வான் உரும் ஏறு எலாம் வாரி
இழைத்து எடுத்தன அனைய வாள் உடை மணி ஆர்த்து;
முழைக் கிடந்த வல் அரி இனம் முழங்குவ போல்வ
தழைக்கும் மின் ஒளிப் பொன்மலர்ச் சதங்கையும் சாத்தி; 6.34.7

உரும் இடித்தபோது அரவு உறு மறுக்கம், வான் உலகின்
இரு நிலத்திடை, எவ் உலகத்திடை, யாரும்
புரிதரப் படும் பொலம் கழல் இலங்குறப் பூட்டி;
சரியுடைச் சுடர் சாய்நலம் சாய்வுறச் சாத்தி; 6.34.8

நால் அஞ்சு ஆகிய கரங்களின் நனந்தலை அனந்தன்
ஆலம்சார் மிடற்று அருங் கறை கிடந்து என, அலங்கும்
கோலம் சார் நெடுங் கோதையும் புட்டிலும் கட்டி;
தாலம் சார்ந்த மாசுணம் எனக் கங்கணம் தழுவ 6.34.9

கடல் கடைந்த மால் வரையினைச் சுற்றிய கயிற்றின்
அடல் கடந்த தோள் அலங்கு போர் வலயங்கள் இலங்க,
உடல் கடைந்த நாள் ஒளியவன் உதிர்த்த பொன் கதிரின்
சுடர் தயங்குற, குண்டலம் செவியிடைத் தூக்கி; 6.34.10

உதயக் குன்றத்தோடு அத்தத்தின் உலாவுறு கதிரின்
துதையும் குங்குமத் தோெளாடு தோள் இடை தொடர,
புதை இருள்பகைக் குண்டலம் அனையவை பொலிய;
சிதைவு இல் திங்களும் மீனும்போல், முத்து இனம் திகழ; 6.34.11

வேலைவாய் வந்து வெய்யவர் அனைவரும் விடியும்
காலை உற்றுளர் ஆம் எனக் கதிர்க் குலம் காலும்
மாலை பத்தின்மேல், மதியம் முன் நாள் இடைப் பலவாய்
ஏல முற்றிய அனைய முத்தக் குடை இமைப்ப; 6.34.12

பகுத்த பல்வளக் குன்றினில முழை அன்ன பகுவாய்
வகுத்த வான்கடை கடைதொறும் வளை எயிற்று ஈட்டம்,
மிகுத்த நீலவான் மேகம்சூழ் விசும்பிடை, தசும்பு ஊடு
உகுத்த செக்கரின் பிறைக் குலம் முளைத்தன ஒக்க. 6.34.13

ஒத்த தன்மையின் ஒளிர்வன, தரளத்தின் ஓதம்
தத்துகின்றன, வீரபட்டத் தொகை தயங்க;
முத்த ஓடைய முரண்திசை மும்மத யானை
பத்து நெற்றியும் சுற்றிய பேர் எழில் படைக்க; 6.34.14

புலவி மங்கையர் பூஞ் சிலம்பு அரற்று அடி போக்கி,
தலைமை கண்ணினர்த் தாழ்கிலா மணிமுடித் தலங்கள்,
உலகம் ஒன்றினை விளக்குறு கதிரினை ஓட்டி
அலகு இல் எவ் உலகத்தினும் வயங்கு இருள் அகற்ற; 6.34.15

நாகம், நால் நிலம், நான்முகன் நாடு என நயந்த
பாகம் மூன்றையும் வென்று கொண்டு, அமரர் முன்பு அணிந்த
வாகை மாலையின் மருங்கு உற வரி வண்டொடு அளவித்
தோகை அன்னவர் விழி தொடர் தும்பையும் சூடி; 6.34.16

அகழும் வேலையை, காலத்தை, அளக்கர் நுண் மணலை,
நிகழும் மீன்களை, விஞ்சையை நினைப்பது என்? நின்ற
இகழ்வு இல் பூதங்கள் இறப்பினும் இறுதி செல்லாத
புகழ் எனச் சரம் தொலைவு இலாத் தூணி பின் பூட்டி; 6.34.17

வருக தேர் ‘என இராவணன் கூறத் தேர் வருதல்

‘வருக, தேர்! ‘என வந்தது வையமும் வானும்
உரக தேயமும் ஒருங்கு உடன் இவரினும், உச்சிச்
சொருகு பூ அன்ன சுமையது; துரகம் இன்று எனினும்,
நிருதர் கோமகன் நினைந்துழிச் செல்வது, ஓர் இமைப்பில். 6.34.18

தேரின் சிறப்பியல்புகள்

ஆயிரம் பரி அமுதொடு வந்தவும், அருக்கன்
பாய் வயப் பசுங் குதிரையின் வழியவும், படர்நீர்
வாய் மடுக்கும் மா வடவையின் வயிற்றின், வன்காற்றின்
நாயகற்கு வந்து உதித்தவும், பூண்டது நலத்தால். 6.34.19

பாரில் செல்வது, விசும்பிடைப் படர்வது, பரந்த
நீரில் செல்வது, நெருப்பினும் செல்வது, நிமிர்ந்த
போரில் செல்வது, பொன் நெடு முகட்டிடை விரிஞ்சன்
ஊரில் செல்வது, எவ் உலகத்தும் செல்வது, ஓர் இமைப்பின். 6.34.20

எண்திசைப் பெருங் களிற்றிடை மணி என இசைக்கும்
கண்டை ஆயிர கோடியின் தொகையது; கதிரோன்
மண்டிலங்களை மேருவில் குவித்தனெ வயங்கும்
அண்டம் விற்கும் நன் காசு இனம் குயிற்றியது, அடங்க. 6.34.21

முனைவர் வானவர் முதலினர், அண்டத்து முதல்வர்
எனைவர் அன்னவர் ஈந்தவும், இகலில் இட்டனவும்,
வினையின் வெய்யன படைக்கலம், வேலை என்று இசைக்கும்
சுனையின் நுண் மணல் தொகையன சுமந்தது, தொக்க. 6.34.22

கண்ணன் நேமியும், கண்ணுதல் கணிச்சியும், கமலத்து
அண்ணல் குண்டிகைக் கலசமும், அழியினும், அழியாத்
திண்மை சான்றது; தேவரும் உணர்வு அரும் செய்கை
உண்மை ஆம் எனப் பெரியது; வென்றியின் உறையுள். 6.34.23

அனைய தேரினை அருச்சனை வரன்முறை ஆற்றி,
எனையர் என்பது ஓர் கணக்கு இலா மறையவர் எவர்க்கும்
வினையின் நல்நிதி முதலிய அளப்ப அரும் வெறுக்கை
நினையின் நீண்டது ஓர் பெருங்கொடை அருங் கடன் நேர்ந்தான். 6.34.24

இராவணன் தேரில் ஏறுதல்

ஏறினான் தொழுது; இந்திரன் முதலிய இமையோர்
தேறினார்களும் தியங்கினார், மயங்கினார், திகைத்தார்;
வேறு நாம் சொலும் வினை இலை, மெய்யின் ஐம்புலனும்
ஆறினார்களும் அஞ்சினார், உலகு எலாம் அனுங்க. 6.34.25

இராவணன் கூறிய வஞ்சினம்

‘மன்றல் அம்குழல் சனகி தன் மலர்க் கையால் வயிறு
கொன்று, அலந்தலைக் கொடு நெடுந் துயரிடைக் குளித்தல்;
அன்று இது என்றிடின், மயன்மகள் அத்தொழில் உறுதல்;
இன்று, இரண்டின் ஒன்று ஆக்குவென், தலைப்படின் ‘என்றான். 6.34.26

போருக்கு எழுந்த இராவணனது தோற்றப் பொலிவு

பல களம் தலை மௌலியோடு இலங்கலின் பல் தோள்
அலகு அளந்து அறியா நெடும் படைகேளாடு அலங்க,
விலகு அளம் தரு கடல் திரை விசும்பொடும் விம்ம,
உலகு அளந்தவன் வளர்ந்தனன் ஆம் என உயர்ந்தான். 6.34.27

இராவணன் தன் தோள்களைத்தட்டி ஆரவாரித்தல்

விசும்பு விண்டு இரு கூறு உற, குலம் வரை வெடிப்ப,
பசும் புண் விண்டு என புவிபட, பகலவன் பசும் பொன்
தசும்பு நிள்று இடைந்து இரிந்திட, மதிதகை அமிழ்தின்
அசும்பு சிந்தி நொந்து உலைவுற, தோள் புடைத்து ஆர்த்தான். 6.34.28

இராவணன் தன் வில் நாணைத்தறெித்தல்

‘நணித்து வெஞ் சமம் ‘என்பது ஓர் உவகையின் நலத்தால்
திணித் தடம் கிரி வெடித்து உக, சிலையை நாண் தறெித்தான்;
மணிக் கொடுங்குழை வானவர் தானவர் மகளிர்,
துணுக்கம் எய்தினர், மங்கல நாண்களைத் தொட்டார். 6.34.29

உயிர்கள் யாவும் நடுங்க இராவணன் போர்க்களத்திலே தோன்றுதல்

சுரிக்கும் மண்டலம் தூங்கு நீர்ச் சுரிப்பு உற வீங்க,
இரைக்கும் பல் உயிர் யாவையும் நடுக்கம் உற்று இரிய,
‘பரித்திலன் புவி, படர் சுடர் மணித் தலை பலவும்
விரித்து எழுந்தனன், அனந்தன் மீது ‘ எனப் பொலி மெய்யான் 6.34.30

தோன்றினான் வந்து சுரர்கேளாடு அசுரரே தொடங்கி
மூன்று நாட்டினும் உள்ளவர் யாவரும் முடிய,
‘ஊன்றினான் செரு ‘என்று உயிர் உமிழ்தர, உதிரம்
கான்று, நாட்டங்கள் வட அனற்கு இருமடி கனல. 6.34.31

அப்பொழுது உலகில் தோன்றிய கலக்கத்தைக்கண்டு சுக்கிரீவன் முதலியோர் துணுக்குற்றெழுதல்

உலகில் தோன்றிய மறுக்கமும், இமைப்பிலர் உலைவும்,
மலையும் வானமும் வையமும் மறுகுறும் மறுக்கும்,
அலைகொள் வேலைகள் அஞ்சின சலிக்கின்ற அயர்வும்,
தலைவனே முதல் தண்டல் இலோர் எலாம் கண்டார். 6.34.32

‘பீறிற்றாம் அண்டம் ‘என்பது ஓர் ஆகுலம் பிறக்க,
வேறிட்ட ஓர் பெருங் கம்பலை பம்பி மேல் வீங்க,
‘மாறிப் பல் பொருள் வகுக்குறும் காலத்து மறுக்கம்
ஏறிற்று; உற்றுளது என்னை கொலோ? ‘ என எழுந்தார். 6.34.33

இராவணன் தேர்மீதேறிச் சேனையொடு வருகின்றான் என்பதைச் சுக்கிரீவன் முதலியோர் அறிதல்

கடல்கள் யாவையும், கன மலைக் குலங்களும், காரும்,
திடல்கொள் மேருவும், விசும்பிடைச் செல்வன சிவண,
அடல்கொள் சேனையும், அரக்கனும், தேரும், வந்து ஆர்க்கும்
கடல் கொள் பேர் ஒலிக் கம்பலை என்பதுங் கண்டார். 6.34.34

இராவணன் வருகையை வீடணன் இராமனுக்குக் கூறுதல்

‘எழுந்து வந்தனன் இராவணன்; இராக்கதத் தானை
கொழுந்து முந்த வந்து உற்றது; கொற்றவ! குலுங்குற்று
அழுந்துகின்றது, நம் பலம்! அமரரும் அஞ்சி,
விழுந்து சிந்தினர் ‘என்றனன், வீடணன், விரைவான். 6.34.35

இராமன் போருக்கு எழுதல்

தொழும் கையொடு, வாய் குழறி, மெய்ம் முறை துளங்கி,
விழுந்து கவி சேனை இடு பூசல் மிக, விண்ணோர்
அழுந்து படு பால் அமளி ‘அஞ்சல் ‘என அந்நாள்,
எழுந்தபடியே கடிது எழுந்தனன், இராமன். 6.34.36

இராமன் போர்க்கோலங் கொள்ளுதல்

கடக் களிறு எனத்தகைய கண்ணன், ஒரு காலன்
விடக் கயிறு எனப் பிறழும் வாள் வலன் விசித்தான்,
‘மடக்கொடி துயர்க்கும், நெடு வானின் உறைவோர் தம்
இடர்க் கடலினுக்கும் முடிவு, இன்று ‘என இசைத்தான். 6.34.37

தன் அக வசத்து உலகு தங்க, ஒரு தன்னின்
பின்ன கவசத்த பொருள் இல்லை; பெரியோனை
மன் அக வசத்து உற வரிந்தது எனின், மாதோ!
இன்ன கவசத்தையும் ஒர் ஈசன் எனல் ஆமால். 6.34.38

புட்டிலொடு கோதைகள், புழுங்கி எரி கூற்றின்
அட்டில் எனல் ஆய மலர் அங்கையின் இலங்கக்
கட்டி, உலகின் பொருள் எனக் கரை இல் வாளி
வட்டில் புறம் வைத்து அயல் வயங்கு உற வரிந்தான். 6.34.39

சிவபெருமான் தேவர்களைநோக்கி இராமனுக்குத் தேரனுப்புமாறு பணித்தல்

‘மூண்டசெரு இன்று அளவில் முற்றும்; இனி, வெற்றி
ஆண்தகையது; உண்மை; இனி அச்சம் அகல்வுற்றீர்,
பூண்ட மணி ஆழி வய மா நிமிர் பொலந்தேர்
ஈண்ட விடுவீர் அமரர்! ‘ என்று அரன் இசைத்தான். 6.34.40

இந்திரன், இராமனுக்கு உதவக்கருதித் தேரைக் கொணருமாறு மாதலிக்குக் கட்டளையிடுதல்

தேவர் அதுகேட்டு, ‘இது செயற்கு உரியது ‘என்றார்;
ஏவல் புரி இந்திரனும் அத் தொழில் இசைந்தான்,
‘மூவுலகும் இன்று ஒரு கணத்தின் முறை முற்றிக்
காவல்புரி தன் பொரு தேர் கொணர்தி ‘என்றான். 6.34.41
------------

6.35 – Rama besteigt seinen Wagen

6.35 இராமன் தேர் ஏறு படலம் 9826 – 9846 (21)

மாதலி தேர் கொணர்தல்

மாதலி கொணர்ந்தனன் மகோததி வளாவும்
பூதலம் எழுந்துபடர் தன்மைய பொலந்தேர்;
சீத மதிமண்டலமும் ஏனை உளவும் திண்
பாதம் எனநின்றது பரந்தது விசும்பின். 6.35.1

வந்த தேரின் சிறப்பியல்புகள்

குலக் கிரிகள் ஏழின் வலிகொண்டு உயர்கொடிஞ்சும்,
அலக்கும், உயர்பாரும், வலி ஆழியும், நல் அச்சும்
கலக்கு அற வகுத்தது; கதத்து அரவம் எட்டின்
வலக் கயிறு கட்டியது; முட்டியது வானை. 6.35.2

ஆண்டினொடு நாள் இருது திங்களிவை என்னா
மீண்டனவும் மேலனவும் ஈட்டி விரிதட்டில்
பூண்டு உளது; தாரகை மணிப்பொரு இல் கோவை
நீண்ட புனைதாரின் அது; நின்றுளது குன்றின். 6.35.3

மாதிரம் அனைத்தையும் மணி சுவர்கள் ஆகக்
கோது அற வகுத்தது; மழைக்குழுவை எல்லாம்
மீது உறு பதாகை என வீசியது; மெய்ம்மைப்
பூதம் அவை ஐந்தின் வலியின் பொலிவது அம்மா! 6.35.4

மரத்தொடு மருந்து உலகில் யாவும் உளவாரித்
தரத்தொடு தொடுத்த கொடி தங்கியது; சங்கக்
கரத்தொடு தொடுத்த கடல்மீது நிமிர்காலத்து
உரத்தொடு தொகுத்த கதழ் ஓசை அதன் ஓதை. 6.35.5

பண்டு அரிதன் உந்தி அயன் வந்த பழ முந்தைப்
புண்டரிக மொட்டு அனைய மொட்டினது; பூதம்
உண்டவை வயிற்றிடை ஒடுக்கி உமிழ்கிற்போன்
அண்டச மணி சயனம் ஒப்பது அகலத்தின். 6.35.6

வேதம் ஒரு நாலும், நிறைவேள்விகளும், வெவ்வேறு
ஓதம் அவை ஏழும், மலை ஏழும், உலகு ஏழும்,
பூதம் அவை ஐந்தும், எரிமூன்றும், நனி பொய் தீர்
மாதவமும், ஆவுதியும், ஐம்புலனும், மற்றும்; 6.35.7

அருங் கரணம் ஐந்து, சுடர் ஐந்து, திசை நாலும்,
ஒருங்கு குணம் மூன்றும், உழல் வாயு ஒரு பத்தும்,
பெரும் பகலும், நீள் இரவும், என்று இவை, பிணிக்கும்
பொரும் பரிகள் ஆகி நனி பூண்டது, பொலந்தேர். 6.35.8

தங்களுக்குப் போரில் வெற்றி தேடித்தரும்படித் தேவர்கள் அத்தேரை வேண்டுதல்

வந்ததனை வானவர் வணங்கி, ‘வலியோய்! நீ
எந்தை தர வந்தனை; எமக்கு உதவுகிற்பாய்;
தந்தருள்வை வென்றி ‘என நின்று, தகை மென் பூச்
சிந்தினர்கள்; மாதலி கடாவி நனி சென்றான். 6.35.9

தேர் இராமனருகே விரைந்து வருதல்

‘வினைப்பகை விசைக்கொடு விசும்பு உருவி, மான
மனத்தின் விசைபெற்றுளது வந்தது ‘என வானோடு
அனைத்து உலகமும் தொழ, அடைந்தது, அமலன்பால்;
நினைப்பும் இடை பின் பட நிமிர்ந்து உயர் நெடுந்தேர். 6.35.10

தேரினைக் கண்டு இராமன் வியத்தல்

‘அலரி தனி ஆழி புனை தேர் இது எனின், அன்றால்;
உலகின் முடிவில் பெரிய ஊழ் ஒளி இது அன்றால்;
நிலைகொள் நெடு மேரு கிரி அன்று; நெடிது அம்மா!
தலைவர் ஒரு மூவர் தனி மானம் இது தானோ? 6.35.11

இராமன், தேர்ப்பாகனாகிய மாதலியை நோக்கி வினவுதல்

‘என்னை இது நம்மை இடை எய்தல்? ‘என எண்ணா,
மன்னவர்தம் மன்னன்மகன், மாதலியை, ‘வந்தாய்,
பொன்னின் ஒளிர்தேர் இதுகொடு, ஆர்புகல? ‘என்றான்;
அன்னவனும் அன்னதனை ஆக உரை செய்தான். 6.35.12

மாதலியின் மறுமொழி

‘முப்புரம் எரித்தவனும், நான்முகனும், முன்நாள்
அப்பகல் இயற்றி உளது; ஆயிரம் அருக்கர்க்கு
ஒப்பு உடையது; ஊழி திரி காலும் உலைவு இல்லா
இப்பொரு இல் தேர் வருவது இந்திரனது எந்தாய்! 6.35.13

‘அண்டம் இது போல்வன அளப்பு இல அடுக்கிக்
கொண்டுபெயரும்; குறுகும்; நீளும்; அவை கோள் உற்று
உண்டவன் வயிற்றினையும் ஒக்கும், உவமிக்கின்;
புண்டரிக! நின்சரம் எனக்கடிது போமால். 6.35.14

‘கண்ணும் மனமும் கடிய காலும் இவை கண்டால்,
உண்ணும் விசையால் உணர்வு பின்படர ஓடும்;
விண்ணும் நிலனும் என விசேடம் இலது; அஃதே
எண்ணும் நெடுநீரினும், நெருப்பிடையும் எந்தாய்! 6.35.15

‘நீரும் உளவே, அவை ஓர் ஏழு; நிமிர்கிற்கும்
பாரும் உளவே, அதின் இரட்டி; அவை பண்பின்
பேரும் ஒருகாலை, ஒருகாலும் இடைபேராத்
தேரும் உளதே, இது அலால்? உலகு செய்தோய்! 6.35.16

‘தேவரும், முனித்தலைவரும், சிவனும், மேல்நாள்,
மூவுலகு அளித்த அவனும், முதல்வ! முன் நின்று!
ஏவினர்; சுரர்க்கு இறைவன் ஈந்து உளது இது ‘என்னா,
மாவின் மனம் ஒப்ப உணர் மாதலி, வலித்தான். 6.35.17

இத்தேர் அரக்கர் மாயையால் தோன்றியதோ ‘என இராமன் ஐயுற, தேர்க்குதிரைகள் அந்த ஐயத்தைப்போக்குதல்

ஐயன் இதுகேட்டு, ‘இகல் அரக்கர் அகல் மாயச்
செய்கை கொல்? ‘எனச் சிறிது சிந்தையில் நினைந்தான்;
‘மெய் அவன் உரைத்தது ‘என வேண்டி, இடை பூண்ட
மொய் உளை வயப்பரி மொழிந்த, முது வேதம். 6.35.18

தெளிவுபெற்ற இராமன் மாதலியை நோக்கி ‘உனது பெயரைக் கூறுக ‘என அவன் தன் பெயரைக் கூறுதல்

‘இல்லை இனி ஐயம் ‘என எண்ணிய இராமன்,
நல்லவனை, ‘நீ உனது நாமம் நவில்க! ‘என்ன,
‘வல் இதனை ஊர்வது ஒரு மாதலி எனப்பேர்
சொல்லுவர் ‘எனத் தொழுது, நெஞ்சினொடு சொன்னான். 6.35.19

மாருதியை நோக்கி, இள வாள் அரியை நோக்கி,
‘நீர் கருதுகின்றதை நிகழ்த்தும் ‘என, நின்றான்
ஆரியன்; வணங்கி அவர், ‘ஐயம் இலை, ஐயா!
தேர் இது புரந்தரனது ‘ என்றனர், தெளிந்தார். 6.35.20

இராமன் தேரில் ஏறுதல்

விழுந்து புரள் தீவினை குலத்தோடும் வெதும்ப,
தொழும் தகைய நல்வினை களிப்பினொடு துள்ள,
அழுந்து துயரத்து அமரர் அந்தணர் கைமுந்துற்று
எழுந்து தலை ஏற, இனிது ஏறினன் இராமன். 6.35.21
-------------

6.36 – Die Tötung Ravanas

6.36 இராவணன் வதைப் படலம் 9847 – 10097 (251)

ஆழி அம் தடந்தேர், வீரன் ஏறலும், அமலச் சில்லி
பூழியிற் சுரித்த தன்மை நோக்கிய புலவர் போத,
ஊழி வெங் காற்றின் வெய்ய கலுழனை ஒன்றும் சொல்லார்,
வாழிய அனுமன் தோள் என்று ஏத்தினார் மலர்கள் தூவி. 6.36.1

தேவர்கள் வாழ்த்த இராமன் தேர் செல்வது

‘எழுக தேர்; சுமக்க எல்லோம் வலியும்; புக்கு இன்றே பொன்றி
விழுக, போர் அரக்கன்; வெல்க, வேந்தர்க்கு வேந்தன்; விம்மி
அழுக, பேர் அரக்கிமார் ‘என்று ஆர்த்தனர், அமரர்; ஆழி
முழுகி மீது எழுந்தது என்னச் சென்றது, மூரித் திண் தேர். 6.36.2

இராவணன் தன்தேரை இராமனுக்கு எதிரே செலுத்துமாறு பாகனுக்குக் கூறுதல்

அன்னது கண்ணில் கண்ட அரக்கனும், ‘அமரர் ஈந்தார்
மன் நெடுந் தேர் ‘என்று உன்னி, வாய் மடித்து எயிறு தின்றான்;
பின், ‘அதுகிடக்க ‘என்னா, தன்னுடைப் பெருந் திண் தேரை
மின் நகு வரிவில் செங்கை இராமன் மேல் விடுதி ‘என்றான். 6.36.3

அஞ்சிய வானரரும் அஞ்சாது ஆரவாரித்துப் பொருதல்

இரிந்த வானரங்கள் எல்லாம், ‘இமையவர் இரதம் ஈந்தார்;
அரிந்தமன் வெல்லும் என்றற்கு ஐயுறவு இல் ‘என்று, அஞ்சார்,
திரிந்தனர்; மரமும் கல்லும் சிந்தினர்; ‘திசையோடு அண்டம்
பிரிந்தன கொல்! ‘என்று எண்ணப் பிறந்தது, முழக்கின் பெற்றி. 6.36.4

பலவகை ஆரவாரங்கள்

வார்ப்பொலி முரசின் ஓதை, வயவர் வாய் புடைப்பின் ஓதை,
போர்த் தொழில் களத்து மற்றும் முற்றிய பொம்மல் ஓதை,
ஆர்த்தலின், யாரும் பார்வீழ்ந்து அடங்கினர், இருவர் ஆடல்
தேர் குரல் ஓதை பொங்க, செவிமுற்றும் செவிடு செய்ய. 6.36.5

இராமன் மாதலிக்குச் சில அறிவுரை பகர்தல்

மாதலி வதனம் நோக்கி, மன்னர்தம் மன்னன் மைந்தன்,
“காதலால் கருமம் ஒன்று கேட்டியால்; களித்த சிந்தை
ஏதிலன் மிகுதி எல்லாம் இயற்றிய பின்றை, என்தன்
சோதனை நோக்கிச் செய்தி; துடிக்கலை ‘‘ என்னச் சொன்னான். 6.36.6

மாதலி அவ்வாறு செய்வேன் எனல்

‘வள்ளல்! நின் கருத்தும், மாவின் சிந்தையும், மாற்றலார் தம்
உள்ளமும், மிகையும், உற்ற குற்றமும், உறுதி தானும்,
கள்ளம் இல் காலப் பாடும், கருமமும், கருதேன் ஆகில்,
தெள்ளிது என் விஞ்சை! ‘என்றான்; அமலனும் ‘செவ்விது! ‘என்றான். 6.36.7

இராம இராவணர்க்குப் போர்மூள மகோதரன் விடைபெறுதல்

‘தோன்றினன் இராமன், எந்தாய்! புரந்தரன் துரகத் தேர்மேல்;
ஏன்று இருவோர்க்கும் வெம்போர் எய்தியது; இடையே யான் ஓர்
சான்று என நிற்றல் குற்றம்; தருதியால் விடை ஈண்டு ‘என்றான்;
வான் தொடர் குன்றம் அன்ன மகோதரன் இலங்கை மன்னை. 6.36.8

இலக்குவனோடு பொருமாறு மகோதரனை ஏவுதல்

‘அம்புயம் அனைய கண்ணன் தன்னை யான் அரியின் ஏறு
தும்பியைத் தொலைத்தது என்னத் தொலைக்குவென்; தொடர்ந்து நின்ற
தம்பியைத் தடுத்தியாயின், தந்தனை கொற்றம் ‘என்றான்;
வெம்பு இகல் அரக்கன், ‘அஃதே செய்வென் ‘என்று, அவனின் மீண்டான். 6.36.9

மீண்டவன் இளவல் நின்ற பாணியின் விலங்கா முன்னம்,
ஆண்தகை தயெ்வத் திண்தேர் அணுகியது; அணுகுங் காலை,
மூண்டு எழு வெகுளியோடும், மகோதரன் முனிந்து, ‘முட்டத்
தூண்டுதி தேரை ‘என்றான்; சாரதி தொழுது சொல்வான். 6.36.10

சாரதி அப்பாற்சேறலே கருமம் எனல்

‘எண் அரும் கோடி வெங்கண் இராவணரேயும், இன்று
நண்ணிய பொழுது மீண்டு நடப்பரோ, கிடப்பது அல்லால்?
அண்ணல்தன் தோற்றம் கண்டால், ஐய! நீ கமலம் அன்ன
கண்ணனை ஒழிய, அப்பால் போதலே கருமம் ‘என்றான். 6.36.11

மகோதரன் இராமனொடு பொருதல் (9856-9858)

என்றலும், எயிற்றுப் பேழ்வாய் மடித்து, ‘அடா! எடுத்து நின்னைத்
தின்றனென் எனினும் உண்டாம் பழி ‘என, சீற்றம் சிந்தும்
குன்று அன தோற்றத்தான்தன் கொடி நெடுந் தேரின் நேரே
சென்றது, அவ் இராமன் திண் தேர்; விளைந்தது திமிலத் திண்போர். 6.36.12

பொன் தடந் தேரும், மாவும், பூட்கையும், புலவு வாள் கைக்
கல் தடந் திண்தோள் ஆளும், நெருங்கிய கடல்கள் எல்லாம்
வற்றின, இராமன் வாளி வட அனல் பருக; வன்தாள்
ஒற்றை வன்தடந் தேரோடும் மகோதரன் ஒருவன் சென்றான். 6.36.13

அசனி ஏறு இருந்த கொற்றக் கொடியின்மேல், அரவத் தேர்மேல்,
குசை உறு பாகன் தன்மேல், கொற்றவன் குவவுத் தோள்மேல்,
விசை உறு பகழி மாரி வித்தினான்; விண்ணினோடும்
திசைகளும் கிழிய ஆர்த்தான்; தீர்த்தனும், முறுவல் செய்தான். 6.36.14

இராமன் மகோதரனைச் சிதைத்தது

வில் ஒன்றால், கவசம் ஒன்றால், விறல் உடைக் கரம் ஓர் ஒன்றால்,
கல் ஒன்று தோளும் தாளும் ஒன்று ஒன்றால், கழுத்தும் ஒன்றால்,
செல் ஒன்று கணைகள் ஐயன் சிந்தினன்; செப்பி வந்த
சொல் ஒன்றாய்ச் செய்கை ஒன்றாய்த் துணிந்தனன், அரக்கன் துஞ்சி. 6.36.15

மகோதரன் மாண்டதை அறிந்து இராவணன் இராமனோடு போர்செய்ய விரைதல்

மோதரன் முடிந்த வண்ணம், மூவகை உலகு முற்றும்
மாதிரத்தோடும் வென்ற வன்தொழில் அரக்கன் கண்டான்,
சேதனை உண்ணக் கண்டான்; ‘செலவிடு, செலவிடு! ‘என்றான்;
சூதனும் முடுகித் தூண்ட, சென்றது, துரகத் திண்தேர். 6.36.16

இராவணனது சேனையை இராமன் அழித்தல்

பனிப்படா நின்றது என்னப் பரக்கின்ற சேனை பாறித்
தனிப்படான் ஆகில் உள்ளம் தாழ்கிலன் என்னும் தன்மை
நுனிப்படா நின்ற வீரன், அவன் ஒன்றும் நோக்கா வண்ணம்
குனிப்படா நின்ற வில்லால், ஒல்லையின் நூறிக் கொன்றான். 6.36.17

இராவணனுக்கு இடத்தோள்கள் துடித்தல்

அடல்வலி அரக்கற்கு அப்போது, அண்டங்கள் அழுந்த, மண்டும்
கடல்களும் வற்ற, எற்றிக் கால் கிளர்ந்து உடற்றுங் காலை,
வடவரை முதல ஆன மலைக்குலம் சலிப்ப மான,
சுடர் மணி வலயம் சிந்தத் துடித்தன, இடத்த பொன் தோள். 6.36.18

தீ நிமித்தங்கள் (9863-9865)

உதிர மாரி சொரிந்தது உலகு எலாம்;
அதிர வானம் இடித்தது; அருவரை
பிதிர வீழ்ந்தது அசனி; ஒளிபெறாக்
கதிரவன் தனை ஊரும் கலந்ததால். 6.36.19

வாவும் வாசிகள் தூங்கின; வாங்கல் இல்
ஏவும் வெஞ்சிலை நாண் இடை இற்றன;
நாவும் வாயும் உலர்ந்தன; நாள் மலர்ப்
பூவின் மாலை புலால் வெறி பூத்ததால். 6.36.20

எழுது வீணை கொடு ஏந்து பதாகைமேல்
கழுகும் காகமும் மொய்த்தன; கண்கள் நீர்
ஒழுகுகின்றன ஓடு இகல் ஆடல் மா;
தொழுவில் நின்றன போன்றன சூழிமா. 6.36.21

இராவணன் இத் துன்னிமித்தங்களை மதியாமை

இன்ன ஆகி இமையவர்க்கு இன்பம் செய்
துன் நிமித்தங்கள் தோன்றின; தோன்றவும்
அன்னது ஒன்றும் அறிந்திலன், ‘ஆற்றுமோ,
என்னை வெல்ல மனித்தன்? ‘என்று எண்ணுவான். 6.36.22

இராவணன் தேர்வர வானரர் இருபாலும் ஒதுங்கி ஓடுதல்

வீங்கு தேர் செலும் வேகத்து வேலை நீர்
ஓங்கு நாளின் ஒதுங்கும் உலகுபோல்
தாங்கல் ஆற்றகிலார் தடுமாறித் தாம்
நீங்கினார் இருபாலும் நெருங்கினார். 6.36.23

இராமனும் இராவணனும் எதிர்க்கும் தோற்றம் (9868-9871)

கருமமும் கடைக்கண் உறும் ஞானமும்
அருமை சேரும் அறிவும் அவிச்சையும்
பெருமைசால் கொடும் பாவமும் பேர்கலாத்
தருமமும் எனச் சென்று எதிர்தாக்கினார். 6.36.24

சிரம் ஒர் ஆயிரம் தாங்கிய சேடனும்
உரவு கொற்றத்து உவணத்து அரசனும்
பொர எதிர்ந்தனர் போலப் பொலிந்தனர்;
இரவும் நண்பகல் என்னவும் ஆயினார். 6.36.25

வென்றி அம்திசை யானை வெகுண்டன
ஒன்றை ஒன்று முனிந்தவும் ஒத்தனர்
அன்றியும் நரசிங்கமும் ஆடகக்
குன்றம் அன்னவனும் பொரும் கொள்கையார். 6.36.26

துவன வில்லின் பொருட்டு ஒரு தொல்லைநாள்
எவன வில் வலி? என்று இமையோர் தொழ,
புவன மூன்றும் பொலங்கழலால் தொடும்
அவனும் அச்சிவனும் எனல் ஆயினார். 6.36.27

இராவணன் சங்கினை ஊதுதல்

கண்ட சங்கரன் நான்முகன் கைத் தலம்
விண்டு அசங்க தொல் அண்டம் வெடிபட
அண்ட சங்கத்து அமரர்தம் ஆர்ப்பு எலாம்
உண்ட சங்கம் இராவணன் ஊதினான். 6.36.28

இராமனது சங்கு தானே முழங்குதல்

சொன்ன சங்கினது ஓசை துளங்குற
‘என்ன சங்கு? ‘என்று இமையவர் ஏங்குற
அன்ன சங்கைப் பொறாமையின் ஆரியன்
தன்னவெண் சங்கு தானும் முழங்கிற்றால். 6.36.29

இராமன் அறியாதபடி ஐம்படையும் அருகில் நின்றமை

அய்யன் ஐம்படைதாமும் அடித் தொழில்
செய்ய வந்து அயல் நின்றன; தேவரின்
மெய்யன் அன்னவை கண்டிலன் வேதங்கள்
பொய்யில் தன்னைப் புலன் தரெியாமைபோல். 6.36.30

மாதலியின் சங்கமுழக்கம்

ஆசையும் விசும்பும் அலை ஆழியும்
தேசமும் மலையும் நெடுந் தேவரும்
கூச அண்டம் குலுங்க குலம் கொள்தார்
வாசவன் சங்கை மாதலி வாய்வைத்தான். 6.36.31

தேவமாதர் இராமனைக் காணுதல்

துமில வாளி அரக்கன் துரப்பன
விமலன் மேனியின் வீழ்வதன் முன்னமே
கமல வானக நாடியர் கண் கணை
அமலன் மேனியில் தைத்த அனந்தமால். 6.36.32

இரு தேர்களிலும் பூட்டிய குதிரைகள் சினந்து நோக்குதல்

சென்ற தேரோர் இரண்டினும் சேர்த்திய
குன்றி வெங்கண் குதிரை குதிப்பன
ஒன்றை ஒன்று உற்று எரி உக நோக்கின;
தின்று தீர்வன போலும் சினத்தன. 6.36.33

இரு தேர்க்கொடிகளிலுள்ள இடியும் வீணையும் முழங்குதல்

கொடியின்மேல் உறை வீணையும் கொற்ற மா
இடியின் ஏறும் முறையின் இடித்தன
படியும் விண்ணும் பரவையும் பண்பு அற
முடியும் என்பது ஓர் மூரி முழக்கின. 6.36.34

இருவருடைய வில் ஒலி

ஏழு வேலையும் ஆர்ப்பு எடுத்த என்னல் ஆம்
வீழி வெங்கண் இராவணன் வில் ஒலி;
ஆழி நாதன் சிலை ஒலி அண்டம் விண்டு
ஊழி பேர்வுழி மாமழை ஒத்ததால். 6.36.35

வானர வீரர்களின் திகைப்பு

ஆங்கு நின்ற அனுமனை ஆதியாம்
வீங்கு வெஞ்சின வீரர் விழித்தனர்
ஏங்குகின்றது அல்லால், ஒன்று இழைத்திலர்,
வாங்கு சிந்தையர், செய்கை மறந்துளார். 6.36.36

தேவர்களின் திகைப்பு

‘ஆவது என்னை கொலாம்? ‘ என்று அறிகிலர்,
‘ஏவர் வெல்வர்? ‘என்று எண்ணலர் ஏங்குவார்,
போவர், மீள்வர், பதைப்பர், பொருமலால்,
தேவரும் தங்கள் செய்கை மறந்தனர். 6.36.37

இராமனது தோளின் பூரிப்பைக்கண்டு அமரர் மலர்மழை சொரிதல்

சேண வந்து அமர் நோக்கும் செழும்புயம்
பூண் அழுந்தின; சிந்தின பூமழை
காண வந்த கடவுளர் கை எலாம்
ஆண் அவன் துணை ஆருளர் ஆகுவார். 6.36.38

கவிக்கூற்று: இருவர்தம் வில்லின் தோற்றம்

நீண்ட மின்னொடு வான் இடு நீலவில்
பூண்டு இரண்டு எதிர் நின்றன போன்றன
ஆண்ட வில்லிதன் வில்லும் அரக்கன்தன்
தீண்ட வல்லவர் இல்லாச் சிலையுமே. 6.36.39

இராவணனது படைக்கலங்களின் ஒளி
இக்கணத்தும் எறிப்ப தடித்து என;
நெக்க மேகத்து உதிக்கும் நெருப்பு அன
பக்கம் வீசு படை சுடர் பல்திசைப்
புக்குப் போக பொடிப்பன போக்கு இல. 6.36.40

இராவணன் ஆர்ப்பும் வில்லின் முழக்கும்

அரக்கன் அன்று எடுத்து ஆர்த்தன ஆர்ப்பும், பேர்
சிரிப்பும், வில்லின் தழெிப்பும் உண்டே கொலாம்
குரைக்கும் வேலையும், மேகக் குழாங்களும்,
இரைத்து இடிக்கின்றது, இன்றும் ஓர் ஈறு இல 6.36.41

இராவணனது கண்ணில் சிந்தின சினத் தீ

மண்ணில் செல்வன செல் இனும் மாசு அற
எண்ணில் சூல் மழை அல்ல; இராவணன்
கண்ணில் சிந்தின தீ கடு வேகத்த
விண்ணிற் செல்வன மீண்டு இன்று வீழ்வன. 6.36.42

இராமன் சிரிப்பு

மால் கலங்கல் இல் சிந்தையன் மாதிரம்
நால் கலங்க நகும்தொறும் நாவொடு
கால் கலங்குவர் தேவர்; கண மழை
சூல் கலங்கும்; இலங்கை துளங்குமால். 6.36.43

இராவணன் வீரப் பேச்சு வில்லின் பெருமை

‘குற்றம் வில்கொடு கொல்லுதல்; கோள் இலாச்
சிற்றையாளனைத் தேவர்தம் தேரொடும்
பற்றி வானில் சுழற்றி படியின்மேல்
எற்றுவேன் ‘என்று உரைக்கும்; இரைக்குமால். 6.36.44

கணையின் பெருமை

‘தடித்து வைத்து அன்ன வெங்கணை தாவு அற
வடித்து வைத்தது மானுடற்கே? வலி
ஒடித்து தேரை உதிர்த்து ஒரு வில்லொடும்
பிடித்துக் கொள்வென் சிறை ‘எனப் பேசுமால். 6.36.45

இராவணன் அம்பு எய்தல்

பதைக்கின்றது ஒர்மனமும், இடை படர்கின்றது ஓர் சினமும்,
விதைக்கின்றன பொறிபொங்கின விழியும், உடைவெய்யோன்,
குதைக்குன்று என நிமிர்வெஞ்சிலை குழைய, கொடுங் கடுங் கால்
உதைக்கின்றன சுடர்வெங்கணை, உரும் ஏறு என எய்தான். 6.36.46

அம்பின் தன்மைகள்

உரும் ஒத்தன, அனல் ஒத்தன, ஊற்றம்தரு கூற்றின்
மருமத்தினும் நுழைகிற்பன, மழை ஒத்தன, வானோர்
நிருமித்தன, படை பற்று அற நிமிர்வு உற்றன, அமிழ்தப்
பெரு மத்தினை முறைசுற்றிய பெரும்பாம்பினும் பெரிய. 6.36.47

இராவணன் எய்த அம்புகளை இராமன் அழித்தல்

‘துண்டப்பட நெடு மேருவைத் துளைத்து, உள் இறை தொங்காது
அண்டத்தையும் பொதுத்து ஏகும் ‘என்று இமையோர்களும் அயிர்த்தார்;
கண்டத் தறெு கணைக் காற்றினை, கருணைக் கடல், கனகச்
சண்டச் சர மழை கொண்டு, அவை இடையே அறத் தடுத்தான். 6.36.48

இராவணன் மீண்டும் அம்பு சொரிதல்

உடையான் முயன்ற ஒருகாரியம் உறுதீவினை உடற்ற,
இடையூறு உறச் சிதைந்தாங்கு எனச் சரம் சிந்தின, விறலும்;
தொடை ஊறின கணைமாரிகள் தொகை தீர்ந்தன துரந்தான்
கடை ஊறு உறு கணமாமழை கால் வீழ்த்து எனக் கடியான். 6.36.49

இராவணன் விட்ட அம்புகளின் நிலை

விண்போர்த்தன; திசை போர்த்தன; மலைபோர்த்தன; இமையோர்
கண்போர்த்தன; கடல் போர்த்தன; படிபோர்த்தன; கலையோர்
எண்போர்த்தன; எரிபோர்த்தன; இருள்போர்த்தன; ‘என்னே
திண்போர்த்தொழில்? ‘என்று ஆனையின் உரி போர்த்தவன் திகைத்தான். 6.36.50

இராவணன் அம்பினால் வானரசேனை அழிவதுகண்டு இராமன் அவ்வம்புகளை விலக்குதல்

அல்லா நெடும் பெருந்தேவரும் மறைவாணரும் அஞ்சி,
எல்லாரும் தம் கரங்கொண்டு இரு விழிபொத்தினர், இரிந்தார்;
செல் ஆயிரம் விழுங்கால் உகும் விலங்கு ஒத்தது சேனை;
வில்லாளனும் அதுகண்டு, அவை விலக்கும் தொழில் வேட்டான். 6.36.51

இராமன் எய்த அம்பினால் இராவணன் அம்புகள் அழிதல்

செந்தீவினை மறைவாணனுக்கு ஒருவன் சிறுவிலை நாள்
முந்து ஈந்தது ஒர் உணவின்பயன் எனல் ஆயின, முதல்வன்
வந்து ஈந்தன வடி வெம் கணை; அனையான் வகுத்து அமைத்த
வெம் தீ இனை பயன் ஒத்தன, அரக்கன் சொரி விசிகம். 6.36.52

இராமனும் இராவணனும் ஒத்துப் பொருதல் (9897-9901)

நூறு ஆயிரம் வடிவெங்கணை நொடி ஒன்றினில் விடுவான்,
ஆறா விறல் மறவோன், அவை தனி நாயகன் அறுப்பான்;
கூறு ஆயின, கனல் சிந்தின, குடிக்கப் புனல் குறுகி,
சேறு ஆயின, பொடி ஆயின, திடர் ஆயின, கடலும். 6.36.53

வில்லால் சரம் துரக்கின்றவற்கு, உடனே, மிடல் வெம்போர்
வல்லான், மழு, எழு, தோமரம், மணித் தண்டு, இருப்பு உலக்கை
தொல் ஆர் அயில், வாள், சக்கரம் சூலம், இவை தொடக்கத்த
எல்லா நெடுங்கரத்தால் எடுத்து எறிந்தான், செரு அறிந்தான். 6.36.54

வேலாயிரம், மழு ஆயிரம், எழு ஆயிரம், விசிகக்
கோல் ஆயிரம், பிற ஆயிரம், ஒருகோல்படக் குறைவ
கால் ஆயின, கனல் ஆயின, உரும் ஆயின, கதிய
சூலாயின் மழை அன்னவன், தொடை பல்வகை தொடுக்க. 6.36.55

ஒத்துச் செரு விளைக்கின்றது ஒர் அளவின்தலை உடனே
பத்துச் சிலை எடுத்தான், கணை தொடுத்தான், பல முகிலாத்
தொத்துப்பட நெடும் தாரைகள் சொரிந்தாலெனத் துரந்தான்
குத்துக்கொடு நெடுங்கோல் படு களிறு ஆம் எனக் கொதித்தான். 6.36.56

ஈசன்விடு சரம் மாரியும் எரிசிந்துறு தறுகண்
நீசன்விடு சர மாரியும் இடை எங்கணும் நெருங்க
தேசம் முதல் ஐம்பூதமும் செறிவுற்றன செருவில்
கூசிம்மயிர் பொடிப்பு உற்றன எனலாயின குலைய. 6.36.57

இராவணனது தேர் விண்ணில் எழுதல்

மந்தரக் கிரி என மருந்து மாருதி
தந்த அப் பொருப்பு என புரங்கள்தாம் என
கந்தருப்பந் நகர் விசும்பில் கண்டு என
அத்தரத்து எழுந்தது அவ் அரக்கன் தேர் அரோ. 6.36.58

இராமன் காண வானரசேனை அழிதல்

எழுந்து உயர் தேர்மிசை இலங்கை காவலன்
பொழிந்தன சரமழை உருவிப் போதலால்
ஒழிந்ததும் ஒழிகிலது என்ன ஒல்லெனக்
கழிந்தது கவிக்குலம் இராமன் காணவே. 6.36.59

இராமன் தேரை விண்மிசைவிடுமாறு மாதலிக்குச் சொல்லுதல்

‘முழவு இடு தோெளாடு முடிகொள் பல்தலை
விழவிடுவேன் இனி; விசும்பு சேமமோ?
மழவிடை அனைய நம் படைஞர் மாண்டனர்
எழவிடு தேரை ‘என்று இராமன் கூறினான். 6.36.60

மாதலி தேரை விண்ணில் செலுத்துவது

‘அந்து செய்குவென் ‘என அறிந்த மாதலி
உந்தினன் தேரெனும் ஊழிக்காற்றினை;
இந்து மண்டலத்தின்மேல் இரவி மண்டலம்
வந்தனெ வந்தது அம் மானத்தேர் அரோ. 6.36.61

இரிந்தன மழைக்குலம் இழுகித் திக்கு எலாம்;
உரிந்தன உடுக்குலம் உதிர்ந்து சிந்தின;
நெரிந்தன நெடுவரைக் குடுமி; நேர்முறை
திரிந்தன சாரிகை தேரும் தேருமே. 6.36.62

சாரிகையின் விளைவு

வலம் வரும்; இடம் வரும்; மறுகி வானொடு
நிலம் வரும்; இடம் வலம் நிமிரும்; வேலையும்
அலம்வரும்; குலவரை அனைத்தும் அண்டமும்
சலம்வரும் குலால்மகன் திகிரித் தன்மைபோல். 6.36.63

சாரிகையின் விரைவு (9908-9913)

‘எழும்புகழ் இராமன் தேர்; அரக்கன்தேர் இது ‘என்று
உழுந்து உருள் பொழுதின் எவ் உலகும் சேர்வன,
தழும்பிய தேவரும் தரெிவு தந்திலர்,
பிழம்பின திரிவன என்னும் பெற்றியார். 6.36.64

உக்கு இலா உடுக்களும் உருள்கள் தாக்கலின்
நெக்கு இலா மலைகளும் நெருப்புச் சிந்தலின்
வக்கு இலா திசைகளும் உதிரம் வாய்வழிக்
கக்கிலா உயிர்களும் இல்லை காண்பன. 6.36.65

‘இந்திரன் உலகத்தார் ‘என்பர்; என்றவர்
‘சந்திரன் உலகத்தார் ‘என்பர்; ‘தாமரை
அந்தணன் உலகத்தார் ‘என்பர்; ‘அல்லரால்
மந்தர மலையினார் ‘என்பர் வானவர். 6.36.66

‘பாற்கடல் நடுவணார் ‘என்பர்; ‘பல்வகை
மால்கடலினுக்கும் அவ் வரம்பினார் ‘என்பர்;
‘மேல்கடலார் ‘என்பர்; ‘கிழக்கு உளார் ‘என்பர்;
‘ஆர்ப்பு இடை அது ‘என்பர் அறியும் வானவர். 6.36.67

‘மீண்டனவோ? ‘என்பர்; ‘விசும்பு விண்டு உகக்
கீண்டனவோ? ‘என்பர்; ‘கீழவோ? என்பர்;
‘பூண்டன புரவியோ? புதிய காற்று! ‘என்பர்
‘மாண்டன உலகம் ‘என்று உரைக்கும் வாயினார். 6.36.68

ஏழுடைக் கடலினும் தீவு ஒர் ஏழினும்
ஏழுடை மலையினும் உலகு ஒர் ஏழினும்
சூழுடை அண்டத்தின் சுவர்கள் எல்லையா
ஊழியில் காற்று எனத் திரிந்த ஓவில. 6.36.69

இராவணன் வீசிய அம்புகள் கடல் முதலிய இடங்களில் எல்லாம் மழைத்துளிகளைப்போல வீழ்தல்

உடைக்கடல் ஏழினும் உலகம் ஏழினும்
இடைப்படும் தீவினும் மலை ஒர் ஏழினும்
அடைக்கலப் பொருள் என அரக்கன் வீசிய
படைக்கலம் மழைபடு துளியின் பான்மைய. 6.36.70

இராவணன் விடுத்த படைக்கலங்களை அறுத்தலும் தடுத்தலும் அன்றி வெகுண்டு இராமன் போர் செய்யாமை

ஒறுத்து உலகு அனைத்தையும் உரற்றும் ஓட்டின,
இறுத்தில; இராவணன் எறிந்த எய்தன
அறுத்ததும் தடுத்ததும் அன்றி, ஆரியன்
செறுத்து ஒரு தொழில் இடை செய்தது இல்லையால். 6.36.71

இரு தேரும் இலங்கையை எய்துதல்

விலங்கலும் வேலையும் மேலுங் கீழரும்
அலங்கு ஒளி திரிதரும் உலகு அனைத்தையும்
கலங்குறத் திரிந்தது ஓர் ஊழிக்காலக் காற்று
இலங்கையை எய்தின இமைப்பின் வந்து அரோ. 6.36.72

தேர்பூண்ட புரவிகளின் பெருமை

உய்த்து உலகு அனைத்தினும் உழன்ற சாரிகை
மொய்த்தது கடலிடை மணலின் மும்மையால்;
வித்தகர் கடவிய விசயத் தேர் பரி
எய்த்தில உயிர்த்தில இரண்டு பாலவும். 6.36.73

இராமன் ஏறிய தேரின் கொடியை இராவணன் அறுத்தல்

இந்திரன் தேரின்மேல் உயர்ந்த ஏந்து எழில்
உந்தரும் பெருவலி உருமின் ஏற்றினை
சந்திரன் அனையது ஓர் சரத்தினால் தரைச்
சிந்தினன் இராவணன் எரியும் சிந்தையான். 6.36.74

இடி கொடி பாய்ந்த கடலின்நீர் சுருங்குதல்

சாய்ந்த வல் உருமுபோய் அரவத் தாழ்கடல்
பாய்ந்த வெங்கனல் என முழங்கிப் பாய்தலும்
காய்ந்த பேர் இரும்பின் வன்கட்டி கால் உறத்
தோய்ந்த நீராம் எனச் சுருங்கிற்று ஆழியே. 6.36.75

மாதலிமார்பில் இராவணன் அம்புகளை அழுத்தல்

எழுத்து எனச் சிதைவு இலா இராமன் தேர்ப்பரிக்
குழுக்களைக் கூர்ங்கணைக் குப்பை ஆக்கி, நேர்
வழுத்த அரும் மாதலி வயிர மார்பிடை
அழுத்தினன் கொடுஞ் சரம், ஆறொடு ஆறு அரோ. 6.36.76

இராவணன் அம்புகளால் இராமனை மறைத்தல்

மண்டல வரிசிலை வான வில்லொடும்
துண்ட வெண்பிறை எனத் தோன்றத் தூவிய
உண்டை வெங்கடுங்கணை ஒருங்கு மூடலால்
கண்டிலர் இராமனை இமைப்பு இல் கண்ணினார். 6.36.77

இராமன்மேல் பட்ட அம்புகளைக் கண்டு அமரர் அஞ்சுதலும் அரக்கர் ஆர்த்தலும்

‘தோற்றனனே இனி ‘என்னும் தோற்றத்தால்
ஆற்றலர் அமரரும் அச்சம் எய்தினார்
வேற்றவர் ஆர்த்தனர்; மேலும் கீழரும்
காற்று இயக்கு அற்றது கலங்கிற்று அண்டமே. 6.36.78

இராமன்மேல் அம்பு பட்டதன் விளைவுகள்

அங்கியும் தன் ஒளி அடங்கிற்று; ஆர்கலி
பொங்கில திமிர்த்தன; விசும்பில் போக்கு இல
வெங்கதிர் தண்கதிர் விலங்கி மீண்டன
மங்குலும் நெடுமழை வறந்து சாய்ந்ததால். 6.36.79

திசைநிலைக் கடகரி செருக்குச் சிந்தின;
அசைவு இல வேலைகள் ஆர்க்க அஞ்சின;
விசைகொடு விசாகத்தை நெருக்கி ஏறினன்
குசன்; நெடுமேருவும் குலுக்கம் உற்றதே. 6.36.80

வானரத் தலைவனும் இளைய மைந்தனும்
ஏனைய தலைவனும் ‘காண்கிலேம் ‘எனக்
கானகக் கரி எனக் கலங்கினார்; கடல்
மீன் எனக் கலங்கினார் வீரர் வேறு உளார். 6.36.81

இராவணன் எய்த அம்புகள் இராமனுக்கும் துயர் விளைத்தன

நீல்நிற நிருதர்கோன் எய்த நீதியின்
சால்புடை மாதலி மார்பில் தைத்தவெங்
கோலினும் இலக்குவன் கோல மார்பின் வீழ்
வேலினும் வெம்மையே விளைத்த வீரற்கும். 6.36.82

இராமன் இராவணனை எய்து வருத்துதல்

எய்தன சரம் எலாம் இமைப்பின் முந்துறக்
கொய்தனன் அகற்றி, வெங்கோலின் கோவையால்
நொய்து என அரக்கனை நெருங்க நொந்தன
செய்தனன், இராகவன்; அமரர் தேறினார். 6.36.83

இராவணனுடைய வில் ஒடியுமாறு இராமன் அம்பு எய்தல்

தூண் உடை நிரை புரை கரம் அவை தொறும் அக்
கோண் உடை மலை நிகர் சிலை இடை குறைய,
சேணுடை நிகர் கணை சிதறினன் உணர்வோடு
ஊண் உடை உயிர் தொறும் உறை உறும் ஒருவன். 6.36.84

இராமன் இராவணனது கவசத்தைப் பிளந்து அவன் குருதியைப் பருகுமாறு கணைகளை விடுதல்

கயில் விரிவுற வரு கவசமும் உருவிப்
பயில் விரி குருதிகள் பருகிட வெயிலோடு
அயில் விரி சுடுகணை கடவினன் அறிவின்
துயில் புரிவுழி உணர் சுடர் ஒளி ஒருவன். 6.36.85

இராவணனது வீணைக் கொடியை வீழ்த்துதல்

திசை உறு துகிலது செறி மழை சிதறும்
விசை உறு முகிழது விரிதரு சிரனோடு
இசை உறு கருவியின் இலகுறு கொடியைத்
தசை உறு கணை கொடு தரை உற இடலும். 6.36.86

படை உக இமையவர் பருவரல் கெட வந்து
இடை உறு திசை திசை இடுகுற இறைவன்
அடையுறு கொடி மிசை அணுகினன் அளவு இல்
கடை உக முடிவு எழு கடல் புரை கலுழன். 6.36.87

இராமனது கொடியில் கலுழன் அமர்ந்தது கண்டு தேவர் மகிழ்தல்

பண்ணவன் உயர் கொடி என ஒரு பரவைக்
கண் அகன் உலகினை வலம்வரு கலுழன்
நண்ணலும் இமையவர் ‘நமது உறு கருமம்
எண்ணலன் முனிவினின் இவறினன் ‘எனவே. 6.36.88

இராமன்மேல் தாமதக் கணையை இராவணன் எய்தல்

ஆயது ஒர் அமைதியின் அறிவினுள் அறிவன்
நாயகன் ஒருவனை நலிகிலது உணரான்
ஏயினன் இருள் உறு தாமதம் எனும் அத்
தீவினை தருபடை தறெு தொழில் மறவோன். 6.36.89

தாமதக்கணையின் தன்மை (9934-9936)

தீ முகம் உடையன சில முகம்; உதிரம்
தோய் முகம் உடையன; சுரர்முகம் உடைய;
பேய் முகம் உடையன; பில முகம் நுழையும்
வாய் முக வரி அரவு அனையன வருமால். 6.36.90

ஒரு திசை முதல் கடை ஒரு திசை அளவும்
இரு திசை எயிறு உற வருவன; பெரிய;
கருதிய கருதிய புரிவன; கனலும்
பருதியை மதியொடு பருகுவ பகழி. 6.36.91

இருள் ஒரு திசை ஒரு திசை வெயில் விரியும்;
சுருள் ஒரு திசை ஒரு திசை மழை தொடரும்;
உருள் ஒரு திசை ஒரு திசை உரும் முரலும்;
மருள் ஒரு திசை ஒரு திசை சிலை வருடம். 6.36.92

இத்தகைய தாமதக்கணைக்கும் இராமன் நினைவு மயங்காமை

இனையன நிகழ்வுற எழுவகை உலகும்
கனை இருள் கதுவிட உயிர் இடை கதற
வினை அறு தொழில் இடை விரவலும் விமலன்
நினைவுறு தகையினன் நெறியுறு முறையின். 6.36.93

இராமன் விட்ட சிவன் கணையால் தாமதக்கணை அழிதல்

கண்ணுதல் ஒருவனது அடுபடை கருதிப்
பண்ணவன் விடுதலும் அது நனி பருக;
எண்ணுறு கனவினொடு உணர்வு என இமையில்
துண்ணெனும் நிலையினின் எறிபடை தொலைய. 6.36.94

அது கண்டு பொறாத இராவணன் இராமனது மேனியில் அம்புகளை அழுத்தல்

விரிந்த தன்படை மெய்கண்ட பொய் என வீய,
எரிந்த கண்ணினன், எயிற்றிடை மடித்த வாயினன், தன்
தரெிந்த வெங்கணை, கங்க வெம் சிறையன திறத்த
அரிந்தமன் திரு மேனிமேல் அழுத்தி, நின்று ஆர்த்தான். 6.36.95

இராவணன் ஆசுரப்படை விடுதல்

ஆர்த்து, வெஞ்சினத்து ஆசுரப் படைக்கலம், அமரர்
வார்த்தை உண்டது, இன் உயிர்களால் மறலிதன் வயிற்றைத்
தூர்த்தது, இந்திரன் துணுக்குறு தொழிலது, தொடுத்து,
தீர்த்தன் மேல் செலத் துரந்தனன், உலகங்கள் திரிய. 6.36.96

இராமன் அங்கியின்கணை விடுத்து ஆசுரக்கணையை அழித்தல்

‘நுங்குகின்றது, இவ் உலகை ஓர் நொடிவரை ‘என்ன,
எங்கும் எங்கும் நின்று அலமரும் அமரர்கண்டு இரைப்ப,
மங்குல் வல் உரும் ஏற்றின் மேல் எரிமடுத்து என்ன
அங்கி தன் நெடும்படை தொடுத்து, இராகவன் அறுத்தான். 6.36.97

இராவணன் கோடிக்கணக்கான கொடிய அம்புகளை எய்தல்

கூற்றுக் கோடினும் கோடல, கடல் எலாம் குடிப்ப,
நீற்றுக் குப்பையின் மேருவை நூறுவ, நெடிய
காற்றுப் பின் செலச் செல்வன, உலகு எலாம் கடப்ப,
நூற்றுக் கோடி அம்பு எய்தனன், இராவணன், நொடியில். 6.36.98

இராவணனது விற்போரைப் பலரும் பாராட்டுதல்

‘என்ன கைக்கடுப்போ! ‘என்பர் சிலர்; சிலர், ‘இவையும்
அன்ன மாயமே; அம்பு அல ‘ என்பர்; ‘அவ் அம்புக்கு
இன்னம் உண்டு கொல் இடம் ‘என்பர் சிலர்; சிலர் ‘‘இகல்போர்
முன்னம் இத்தனை முயன்றிலன் ஆம் ‘ என மொழிவர். 6.36.99

மறை முதல் தனி நாயகன், வானினை மறைத்த
சிறையுடைக் கொடுஞ் சரம் எலாம் இமைப்பு ஒன்றில் சிந்தப்
பொறை சிகைப் பெருந் தலை நின்றும் புங்கத்தின் அளவும்
பிறைமுகக் கொடுங் கடுஞ்சரம் அவை கொண்டு பிளந்தான். 6.36.100

இராவணன் மயன்கணை தொடுத்தல்

அயன் படைத்த பேர் அண்டத்தின் அருந்தவம் ஆற்றி,
பயன் படைத்தவர் யாரினும் படைத்தவன், ‘பல் போர்
வியன் படைக்கலம் தொடுப்பென் நான், இனி ‘என விரைந்தான்;
மயன் படைக்கலம் துரந்தனன், தயரதன் மகன்மேல். 6.36.6.36.101

மயன்கணை கண்டு வானவரும் வானரரும் அஞ்சுதல்

‘விட்டனன் விடு படைக்கலம் வேரோடும் உலகைச்
சுட்டனன் ‘எனத் துணுக்கம் உற்று, அமரரும் சுருண்டார்;
‘கெட்டனம் ‘என வானரத் தலைவரும் கிழிந்தார்;
சிட்டர் தம் தனி தேவனும் அதன் நிலை தரெிந்தான். 6.36.102

இராமன் காந்தருவம் என்னும் கணையால் மயன்கணையை மாய்த்தல்

‘பாந்தள் பல்தலைப் பரந்து அகன் புவி இடைப் பயிலும்
மாந்தர்க்கு இல்லையால் வாழ்வு ‘என வருகின்ற அதனைக்
காந்தர்ப்பம் எனும் கடுங் கொடுங் கணையினால் கடந்தான்
ஏந்தல் பன்மணி எறுழ்வலித் திரள்புயத்து இராமன். 6.36.103

இராவணன் தண்டு கொண்டு வீசுதல்

‘பண்டு நான்முகன் படைத்தது, கனகன் இப் பாரைத்
தொண்டு கொண்டது, மது எனும் அவுணன் முன் தொட்டது,
உண்டு இங்கு என்வயின் அது துரந்து உயிர் உண்பென் ‘என்னா,
தண்டு கொண்டு எறிந்தான், ஐந்தோடு ஐந்துடைத் தலையான். 6.36.104

இராவணனது கதையின் பெருமை(9949-9950)

தாருகன் பண்டு தேவரைத் தகர்த்தது, தனி மா
மேரு மந்தரம் புரைவது, வெயில் அன்ன ஒளியது,
ஓர் உகம்தனின் உலகம் நின்று உருட்டினும் உருளாச்
சீர் உகந்தது, நெரித்தது, தானவர் சிரங்கள். 6.36.105

பசும் புனல் பெரும்பரவை பண்டு உண்டது, பனிப்புற்று
அசும்பு பாய்கின்றது, அருக்கனின் ஒளிர்கின்றது, அண்டம்
தசும்புபோல் உடைந்து ஒழியும் என்று அனைவரும் தளர,
விசும்பு பாழ்பட வந்தது மந்தரம் வெருவ. 6.36.106

இராமன் தன் அம்பினால் அந்தக் கதையை நீறு ஆக்கியது

கண்டு, தாமரைக் கண்ணன், அக் கடவுள் மாக் கதையை,
அண்டர் நாயகன் ஆயிரம் கண்ணினும் அடங்காப்
புண்டரீகத்தின் முகை அன்ன புகர்முகம் விட்டான்
உண்டை நூறுடன் நீறுபட்டுளது என உதிர்த்தான். 6.36.107

மாயையின்கணை விட இராவணன் எண்ணுதல்

‘தேய நின்றவன், சிலைவலம் காட்டினான்; தீராப்
பேயை என்பல துரப்பது? இங்கு இவன் பிழையாமல்
ஆய தன்பெரும் படையொடும் அடுகளத்து அவிய
மாயையின் படை தொடுப்பன் ‘என்று, இராவணன் மதித்தான். 6.36.108

இராவணன் மாயையின் கணையை விடுதல்

பூசனைத் தொழில் புரிந்து, தான் முறைமையின் போற்றும்
ஈசனைத் தொழுது, இருடியும் சந்தமும் எண்ணி,
ஆசை பத்தினும் அந்தரப் பரப்பினும் அடங்கா
வீசினன் செல, வில் இடை தொடைகொடு விட்டான். 6.36.109

மாயையின் கணையால் இறந்த அரக்கர் எழுந்து ஆர்த்தல்

மாயம் பொத்திய வயப்படை விடுதலும், வரம்பு இல்
காயம் அத்தனையும், நெடுங் காயங்கள் கதுவ,
ஆயு உற்று எழுந்தார் என ஆர்த்தனர் அமரில்
தூய கொற்றவர் சுடுசரத்தால் முன்பு துணிந்தார். 6.36.110

இந்திரற்கு ஒரு பகைஞனும், அவற்கு இளையோரும்,
தந்திரப் பெருந் தலைவரும், தலைத் தலையோரும்,
மந்திரச் சுற்றத்தவர்களும் வரம்பு இலர் பிறரும்,
அந்தரத்தினை மறைத்தனர், மழை உக ஆர்ப்பார். 6.36.111

குடப் பெருஞ் செவிக்குன்றமும், மற்றுள குழுவும்,
படைத்த மூல மாத் தானையும், முதலிய பட்ட,
விடைத்து எழுந்தன; யானை, தேர், பரி முதல் வெவ்வேறு
அடைத்த ஊர்திகள் அனைத்தும் வந்து, அவ் வழி அடைந்த. 6.36.112

ஆயிரம் பெருவெள்ளம் என்று அறிஞரே அறைந்த
காய்சினப் பெருங் கடல் படை களப்பட்ட எல்லாம்,
ஈசனின் பெற்ற வரத்தினால் எய்திய என்ன,
தேசம் முற்றவும் செறிந்தன, திசைகளும் திகைப்ப. 6.36.113

சென்ற எங்கணும், தேவரும் முனிவரும் சிந்த
‘வென்றது எங்களைப் போலும்; யாம் விளிவதும் உளதே?
இன்று காட்டுதும்; எய்துமின், எய்துமின் ‘என்னா,
கொன்ற கொற்றவர் தம்பெயர் குறித்து அறை கூவி. 6.36.114

மாயப் படையால் பூதங்களும் பேய்களும் தோன்றுதல்
பார் இடந்துகொண்டு எழுந்தன பாம்பு எனும் படிய,
பாரிடம் துனைந்து எழுந்தன மலை அன்ன படிய,
‘பேர் இடம் கதுவரிது, இனி விசும்பு ‘என, பிறந்த,
பேர் இடங்கரின் கொடுங்குழை அணிந்தன பேய்கள். 6.36.115

தாமசத்தினிற் பிறந்தவர், அறம் தறெும் தகையர்,
தாமசத்தினில் செல்கிலாச் சது முகத்தவற்கும்
தாமசத்தினைச் செய்பவர் அடைந்தனர் தளராத்
தாம சத்திரம் சித்திரம் பொருந்தினர் தயங்க. 6.36.116

தாம் அவிந்து மீது எழுந்தவர்க்கு இரட்டியின் தகையர்,
தாம இந்துவின் பிளவு எனத் தயங்கும் வாள் எயிற்றர்,
தாம் அவிஞ்சையர், கடல்பெருந் தகையினர், தரளத்
தாம விஞ்சையர் துவன்றினர் திசைதொறும் தருக்கி. 6.36.117

தாம் மடங்கலும் முடங்கு உளை யாளியும் தகுவார்,
தாம் அடங்கலும் நெடுந்திசை உலகொடு தகைவார்,
தாம் மடங்கலும் கடலும் ஒத்து ஆர்தரும் பகையார்,
தா மடங்கலும் கொடும் சுடர் படைகளும் தரித்தார். 6.36.118

மாயப்படையின் விளைவு கண்டு இராமன் மாதலியை வினவுதல்

இனைய தன்மையை நோக்கிய இந்திரை கொழுநன்,
‘வினையம் மற்று இது மாயமோ? விதியது விளைவோ?
வனையும் வன்கழல் அரக்கர்தம் வரத்தினோ? மற்றோ?
நினைதியாம் எனின், பகர் ‘என, மாதலி நிகழ்த்தும். 6.36.119

மாதலியின் மறு மொழி (9964-9965)
இருப்புக் கம்மியற்கு இழைநுழை ஊசி ஒன்று இயற்றி,
விருப்பின் ‘கோடியால் விலைக்கு ‘எனும் பதடியின், விட்டான்
கருப்புக் கார்மழை வண்ண! அக் கடுந்திசைக் களிற்றின்
மருப்புக் கல்லிய தோளவன் மீளரு மாயம். 6.36.120

வீய்க்கும் வாய் அயில் வெள் எயிற்று அரவின் வெம் விடத்தை
மாய்க்குமா நெடுமந்திரம் தந்தது ஓர் வலியின்,
நோய்க்கும் நோய்தரு வினைக்கும் நின் பெரும்பெயர் நொடியின்,
நீக்குவாய்! நினை நினைப்பவர் பிறப்பு என நீங்கும். 6.36.121

மாதலி வேண்ட இராமன் ஞானமாக்கணையை விடுதல்

‘வரத்தின் ஆயினும், மாயையின் ஆயினும், வலியோர்
உரத்தின் ஆயினும், உண்மையின் ஆயினும் ஓடத்
துரத்தியால் ‘என, ஞானமாக் கடுங்கணை துரந்தான்
சிரத்தின் நான்மறை இறைஞ்சவும் தொடரவும் சேயோன். 6.36.122

ஞானக்கணையால் மாயையின் விளைவு மாய்தல்

துறத்தல் ஆற்றுறு ஞானமாக் கடுங்கணை தொடர,
அறத்து அலாது செல்லாத நல் அறிவு வந்து அணுக,
பிறத்தல் ஆற்றுறும் பேதைமை பிணிப்புறத் தம்மை
மறத்தலால் தந்த மாயையின் மாய்ந்தது அம்மாயம். 6.36.123

இராவணன் சூலப்படை விடுதல்

நீலம் கொண்டு ஆர்கண்டனும், நேமிப் படையோனும்,
மூலம் கொண்டு ஆர் கண்டகர் ஆவி முடிவிப்பான்,
காலம் கொண்டார்; கண்டன முன்னே கழிவிப்பான்,
சூலம் கொண்டான், அண்டரை எல்லாம் தொழில் கொண்டான். 6.36.124

இராவணன் விட்ட சூலத்தை இராமன் காணுதல்

கண்டா குலம் உற்று ஆயிரம் ஆர்க்கின்றது, கண்ணில்
கண்டு ஆகுலம் உற்று உம்பர் அயிர்க்கின்றது, ‘வீரர்
கண், தா, குலம் முற்றும் சுடும் ‘ என்று அக்கழல் வெய்யோன்,
கண் தாகுதல் முன், செல்ல விசைத்து உள்ளது கண்டான். 6.36.125

வருகின்ற சூலத்தின் இயல்பு

எரியா நிற்கும் எஃகு இலை மூன்றும் எரி அஞ்ச,
திரியா நிற்கும் தேவர்கள் ஓட, திரள் ஓட,
இரியா நிற்கும் எவ் உலகும் தன் ஒளியே ஆய்,
விரியா நிற்கும்; நிற்கிலது, ஆர்க்கும் விழி செல்லா. 6.36.126

சூலத்தை அழிக்குமாறு தேவர்கள் இராமனை வேண்டுதல்

‘செல்வாய் ‘என்னச் செல்ல விடுத்தான்; ‘இது தீர்த்தற்கு
ஒல்வாய் நீயே; வேறு ஒருவர்க்கும் உடையாதால்;
வல்வாய் வெங்கண் சூலம் எனும் காலனை, வள்ளால்!
வெல்வாய், வெல்வாய்! ‘என்றனர், வானோர், மெலிகின்றார். 6.36.127

இராமன் எய்த கணைகள் பயனின்றிப் போதல்

துனையும் வேகத்தால் உரும் ஏறும் துண்ணென்ன
வனையும் காலின் செல்வன தன்னை மறவாதே
நினையும் ஞானக்கண் உடையார்மேல் நினையாதார்
வினையம் போலச் சிந்தின வீரன்சரம் வெய்ய. 6.36.128

இராமன் செய்வதறியாது நிற்றல் (9973-9974)

எய்யும், எய்யும் தேவருடைத் திண்படை எல்லாம்;
பொய்யும் துய்யும் ஒத்து, அவை சிந்தும்; புவிதந்தான்
வய்யும் சாபம் ஒப்பன, ஒப்பு இல் அது கண்டான்,
அய்யன் நின்றான், செய்வதை ஒன்றும் அறிகில்லான். 6.36.129

‘மறந்தான் செய்கை; மாறு எதிர் செய்யும்வகை எல்லாம்
துறந்தான் ‘என்னா, உம்பர் துணுக்கம் தொடர்வுற்றார்;
அறம்தான் அஞ்சிக் கால் குலைய, தான் அறியாதே
பிறந்தான், நின்றான்; வந்தது சூலம், பிறர் அஞ்ச. 6.36.130

இராமனது உங்காரத்தால் சூலம் சிதைதல்

சங்காரத்தான் கண்டை ஒலிப்ப, தழல் சிந்த,
பொங்கு ஆரத்தான் மார்பு எதிர் ஓடிப் புகலோடும்,
வெங்காரத்தான் முற்றும் முனிந்தான்; வெகுளிப் பேர்
உங்காரத்தால் உக்கது, பல்நூறு உதிராகி. 6.36.131

அமரரின் அகமகிழ்ச்சி

ஆர்ப்பார் ஆனார்; அச்சமும் அற்றார்; அலர்மாரி
தூர்ப்பார் ஆனார்; துள்ளல் புரிந்தார்; தொழுகின்றார்,
‘தீர்ப்பாய் நீயே தீ என வேறாய் வருதீமை
பேர்ப்பாய் போலாம்! ‘என்றனர் வானோர், உயிர்பெற்றார். 6.36.132

இராவணன் தன் சூலம் சிதைந்தது கண்டு வீடணன் சொல்லியதை நினைதல்

‘வென்றான் ‘என்றே உள்ளம் வியந்தான் விடுசூலம்
‘பொன்றான் என்னின் போகலது ‘ என்னும் பொருள் கொண்டான்,
ஒன்று ஆம் உங்காரத்திடை உக்கு, ஓடுதல் காணா
நின்றான், அந்நாள் வீடணனார் சொல் நினைவு உற்றான். 6.36.133

இராமனை ‘வேத முதற்காரணனோ? ‘என இராவணன் எண்ணுதல்

‘சிவனோ? அல்லன்; நான்முகன் அல்லன்; திருமாலாம்
அவனோ? அல்லன்; மெய்வரம் எல்லாம் அடுகின்றான்;
தவனோ என்னின், செய்து முடிக்கும் தரன் அல்லன்;
இவனோதான் அவ் வேதமுதல் காரணன்? ‘என்றான். 6.36.134

யாவரே ஆயினும் பொருவேன் எனல்

‘யாரேனும் தான் ஆகுக! யான் என் தனி ஆண்மை
பேரேன்; இன்றே வென்றி முடிப்பென்; புகழ்பெற்றேன்
நேரே செல்வென், கொல்லும் எனின்தான் நிமிர்வென்றி
வேரே நிற்கும்; மீள்கிலது ‘ என்னா, மிடல், உற்றான். 6.36.135

நிருதியின் படையை இராவணன் ஏவுதல்

நிருதித் திக்கில் நின்றவன் வென்றிப்படை நெஞ்சில்
கருத, தன்பால் வந்ததை வன்கைக் கொடு, காலன்
விருதைச் சிந்தும் வில்லின் வலித்துச் செலவிட்டான்
குருதிச் செங்கண் தீஉக, ஞாலம் குலைவு எய்த. 6.36.136

நிருதிப் படை வருதல் (9981-9983)

வய்யந் துஞ்சும் வன்பிடர் நாகம் மனம் அஞ்ச,
பய்யும் கோடிப் பல்தலையோடும் அளவு இல்லா
மெய்யும் வாயும் பெற்றன, மேருக் கிரி சால
நொய்து என்று ஓதும் தன்மைய ஆக நுழைகின்ற. 6.36.137

வாய்வாய் தோறும் மாகடல் போலும் விட வாரி
போய்வார்கின்ற, பொங்கு அனல் கண்ணின் பொழிகின்ற,
மீவான் எங்கும் வெள்ளிடை இன்றி மிடைகின்ற,
பேய்வாய் என்ன வெள் எயிறு எங்கும் பிறழ்கின்ற. 6.36.138

‘கடித்தே தீரும்; கண்ணகன் ] ஞாலம் கடலோடும்
குடித்தே தீரும் ‘என்று உயிர் எல்லாம் குலைகின்ற,
‘முடித்தான் அன்றோ, வெங்கண் அரக்கன்? முழுமுற்றும்
பொடித்தான் ஆகும், இப்பொழுது ‘ என்னப் புகைகின்ற. 6.36.139

இராமன் காருடக் கணையை விடுதல்

அவ்வாறு உற்ற ஆடு அரவம் தன் அகல் வாயால்
கவ்வா நின்ற; மால்வரை முற்றும் வகை கண்டான்;
‘எவ்வாய் தோறும் எய்தின ‘ என்னா, எதிர் எய்தான்,
தவ்வா மெய்ம்மைக் காருடம் 6.36.140

காருடக் கணையின் இயல்பு (9985-9987)

எவண் எத்தன்மைத்து ஏகின நாகத்து இனம் என்ன,
பவணத்து அன்ன வெஞ்சிறை வேகத்தொழில் பம்ப,
சுவணக் கோலத் துண்டம் நகம் தொல் சிறை வெம் போர்
உவணப் புள்ளே ஆயின, வானோர் உலகு எல்லாம். 6.36.141

அளக்க அரும் புள் இனம் அடைய ஆர் அழல்
துளக்க அரும் வாய்தொறும் எரியத் தொட்டன,
‘இளக்கரும் இலங்கை தீ இடுதும் ஈண்டு ‘என
விளக்கு இனம் எடுத்தன போன்ற விண் எலாம். 6.36.142

குயின்றன சுடர்மணி, கனலின் குப்பையின்
பயின்றன, சுடர்தரப் பதும நாளங்கள்
வயின்தொறும் கவர்ந்து என, பணியை வாய்களால்
அயின்றன, புள் இனம் உகிரின் அள்ளின. 6.36.143

ஆயிடை அரக்கனும், அழன்ற நெஞ்சினன்,
தீயிடைப் பொடித்து எழும் உயிர்ப்பன், சீற்றத்தன்,
மா இரு ஞாலமும் விசும்பும் வைப்பு அறத்
தூயினன், சுடுசரம் உருமின் தோற்றத்த. 6.36.144

இராவணன் அது கண்டு சினந்து சரங்களைத் தூவுதல்

அங்கு அ(வ்) வெங்கடுங்கணை அயிலின் வாய்தொறும்,
வெங்கணை படப்பட, விசையின் வீழ்ந்தன;
புங்கமே தலையெனப் புக்க போலுமால்;
துங்கவாள் அரக்கனது உரத்தில் தோன்றல. 6.36.145

இராவணன் நிலைதளர இராமன் வலி மிகுதல்

ஒக்கநின்று எதிர் அமர் உடற்றும் காலையில்
முக்கணான் தடவரை எடுத்த மொய்ம்பற்கு
நெக்கன விஞ்சைகள் நிலையில் தீர்ந்தன;
மிக்கன இராமற்கு வலியும் வீரமும். 6.36.146

இராமன் இராவணன் தலையை அறுத்தல்

வேதியர் வேதத்து மெய்யன் வெய்யவர்க்கு
ஆதியன் அணுகிய அற்றம் நோக்கினான்
சாதியின் நிமிர்ந்தது ஓர் தலையைத் தள்ளினான்
பாதியின் மதிமுகப் பகழி ஒன்றினால். 6.36.147

அற்ற தலை கடலிடை வீழ்தல்

மேருவின் கொடுமுடி வீசு கால் எறி
போரிடை ஒடிந்துபோய் புணரி புக்கு என
ஆரியன் சரம்பட அரக்கன் வன்தலை
நீரிடை விழுந்தது நேர்கொண்டு ஒன்றுபோய். 6.36.148

தேவர்களின் மகிழ்ச்சி ஆரவாரம்

குதித்தனர் பாரிடை குன்று கூறு உற
மிதித்தனர்; வடகமும் தூசும் வீசினர்;
துதித்தனர்; பாடினர்; ஆடித் துள்ளினர்;
மதித்தனர் இராமனை வானுேளார் எலாம். 6.36.149

இராவணன் தலை மீண்டும் முளைத்தல்

இறந்ததோர் உயிர் உடன் தருமத்து ஈட்டினால்
பிறந்துளதாம் எனப் பெயர்த்தும் ஓர்தலை
மறந்திலது எழுந்தது மடித்த வாயது;
சிறந்தது தவம் அலால் செயல் உண்டாகுமோ? 6.36.150

எழுந்த தலை இராமனை இகழ்ந்து அதட்டுதல்

கொய்தது கொய்து இலது என்னும் கொள்கையின்
எய்த வந்து, அக்கணத்து எழுந்ததோர் சிரம்,
செய்த வெஞ்சினத்துடன் சிறக்கும் செல்வனை
வய்தது, தழெித்தது, மழையின் ஆர்ப்பது. 6.36.151

அற்றுக் கடலில் விழுந்த தலையின் செயல்

இடந்தது கிரி குவடு என்ன எங்கணும்
படர்ந்தது குரைகடல் பருகும் பண்பது
விடம்தரு விழியது முழுகி வேலையில்
கிடந்ததும் ஆர்த்தது மழையின் கேழது. 6.36.152

இராமன் தோள்களில் பதினான்கு அம்புகளை அழுத்தி இராவணன் ஆரவாரித்தல்

‘விழுத்தினன் சிரம் ‘எனும் வெகுளி மீக் கொள,
வழுத்தின, உயிர்களின் முதலின் வைத்ததோர்
எழுத்தினன் தோள்களின் ஏழொடு ஏழுகோல்
அழுத்தினன் அசனி ஏறு அயிர்க்கும் ஆர்ப்பினான். 6.36.153

இராமன், இராவணனது விற்பிடித்த கையை அறுத்தல்

‘தலை அறின் தருவது ஓர் தவமும் உண்டு ‘என
நிலை உறு நேமியான் அறிந்து நீசனைக்
கலை உறு திங்களின் வடிவு காட்டிய
சிலை உறு கையையும் தலத்தில் சேர்த்தினான். 6.36.154

கொற்றவன் சரம்படக் குறைந்துபோன கை
பற்றியே கிடந்தது சிலையைப் பாங்குற
மற்று ஒர் கைப் பிடித்தது போல வவ்வியது
அற்றகைப் பிறந்தகை யார் அது ஓர்குவார். 6.36.155

மாதலிமேல் எறிதற்காக அற்ற கையை இராவணன் எடுத்தல்

பொன்கையிற்று ஊர்தியான் வலியைப் போக்குவான்
முன் கையில் துறுமயிர் முள்ளின் துள்ளுற,
மின் கையில் கொண்டு என வில்லை விட்டிலா
வன் கையைத் தன்கையின் வலியின் வாங்கினான். 6.36.156

அற்றகையால் தாக்குண்ட மாதலி இரத்தம் கக்குதல்

விளங்கு ஒளி வயிரவாள் அரக்கன் வீசிய
தளம் கிளர் தடக்கைதன் மார்பில் தாக்கலும்,
உளம்கிளர் பெருவலி உலைவு இல் மாதலி
துளங்கினன், வாய்வழி உதிரம் தூவுவான். 6.36.157

மாதலிமேல் இராவணன் தோமரம் எறிதல்

மாமரத்து ஆர்கையால் வருந்துவானை ஓர்
தோமரத்தால் உயிர் தொலைப்பத் தூண்டினான்
தாம் அரத்தால் பொராத் தகைகொள் வாட்படை,
காமரத்தால் சிவன் கரத்து வாங்கினான். 6.36.158

இராமன்கணையால் தோமரம் துகளாதல்

‘மாண்டது இன்றொடு மாதலி வாழ்வு ‘என
மூண்ட வெந் தழல் சிந்தி முடுகலும்
ஆண்ட வில்லி ஓர் ஐம்முக வெங்கணை
தூண்டினான்; துகள் ஆனது தோமரம். 6.36.159

இராமன் இராவணன் தலைகளை அறுத்தல்

ஓய்வு அகன்றது ஒருதலை நூறு உற
போய் அகன்று புரள பொருகணை
ஆயிரம் தொடுத்தான் அறிவின் தனி
நாயகன் கைக் கடுமை நடத்துவான். 6.36.160

தலைகள் பலவிடங்களிலும் வீழ்தல்

நீர்த் தரங்கங்கள் தோறும் நிலம்தொறும்
சீர்த்த மால்வரை தோறும் திசைதொறும்
பார்த்த பார்த்த இடந்தொறும் பல்தலை
ஆர்த்து வீழ்ந்த அசனிகள் வீழ்ந்து என. 6.36.161

வீழ்ந்த தலைகளின் விளைவு

தகர்ந்து மால்வரை சாய்வுறத் தாக்கின;
மிகுந்த வான்மிசை மீனம் மலைந்தன;
புகுந்த மா மகரக் குலம் போக்கு அற
முகந்த வாயின் புணரியை முற்றுற. 6.36.162

அற்றுவீழ்ந்த இராவணனது தலைகளின் கண்களைப் பேய்கள் தொண்டுதல்

பொழுது நீடித்த புண்ணியம் போனபின்
பழுது செல்லும் அன்றே மற்றைப் பண்பு எலாம்?
தொழுது சூழ்வன முன் இன்று தோன்றிட
கழுது சூன்ற இராவணன் கண் எலாம். 6.36.163

இராவணன் வாள் முதலிய படைகளை இராமன்மேல் வீசுதல்

வாளும் வேலும் உலக்கையும் வச்சிரக்
கோளும் தண்டும் மழு எனும் கூற்றமும்
தோளின் பத்திகள் தோறும் சுமந்தன
மீளி மொய்ம்பன் உரும் என வீசினான். 6.36.164

இராமனும் இராவணன் உடம்பினை அம்பினால் புனைவேன் எனச் சினத்தல்

அனைய சிந்திட ஆண்தகை வீரனும்
‘வினையம் என்னினி? யாதுகொல் வெல்லுமா?
நினைவென் ‘என்ன ‘நிசாசரன் மேனியைப்
புனைவென் வாளியினால் ‘எனப் பொங்கினான். 6.36.165

இராவணன் மேனியை அம்பினால் மூடுதல் (10010-10011)

மஞ்சு அரங்கிய மார்பினும் தோளினும்
நஞ்சு அரங்கிய கண்ணினும் நாவினும்
வஞ்சன் மேனியை வார்கணை அட்டிய
பஞ்சரம் எனலாம் வகை பண்ணினான். 6.36.166

வாய் நிறைந்தன கண்கள் மறைந்தன
மீ நிறங்களின் எங்கும் மிடைந்தன
தோய்வுறும் கணை செம்புனல் தோய்ந்தில
போய்நிறைந்தன அண்டப் புறம் எலாம். 6.36.167

அம்புகள் துளைத்தமையால் இராவணன் சோர்தல்.

மயிரின் கால்தொறும் வார்கணை மாரி புக்கு
உயிரும் தீர உருவின ஓடலும்
செயிரும் சீற்றமும் நிற்க திறல் திரிந்து
அயர்வு தோன்ற துளங்கி அழுங்கினான். 6.36.168

இராவணன் செயலற்று இருத்தல்

வாரி நீர்நின்று எதிர்மகரம் படச்
சோரி சோர உணர்வு துளங்கினான்;
தேரின்மேல் இருந்தான் பண்டு தேவர்தம்
ஊரின் மேலும் பவனி உலாவுவான். 6.36.169

இராவணனது பாகன் தேரைப் பின்னால் விலக்குதல்

ஆர்த்துக் கொண்டு எழுந்து உம்பர்கள் ஆடினார்;
வேர்த்துத் தீவினை வெம்பி விழுந்தது;
‘போர்த் துப்பு ஓய்ந்தனன் ‘ என்று, பொலன் கொள்தேர்
பேர்த்துச் சாரதி போயினன், பின்றுவான். 6.36.170

இராவணன் தளர்ச்சிகண்டு இரங்கி இராமன் அம்பு விடாமை

கய் துறந்த படையினன் கண் அகல்
மெய்துறந்த உணர்வினன் வீழ்தலும்
எய்திறம் தவிர்ந்தான் இமையோர்களை
உய்திறம் துணிந்தான் அறம் உன்னுவான். 6.36.171

சோர்வுற்றபோழ்தே அவனுயிரை வாங்குக என மாதலி கூறுதல்

‘தேறினால் பின்னை யாதும் செயற்கு அரிது;
ஊறு தான் உற்ற போழ்தே உயிர்தனை
நூறுவாய் ‘என மாதலி நூக்கினான்;
ஏறு சேவகனும் இது இயம்பினான். 6.36.172

படை துறந்து சோர்ந்தவன்மேல் படை துரத்தல் நீதியன்று எனல்
‘படைதுறந்து மயங்கிய பண்பினோன்
இடை பெறும் துயர் பார்த்து இகல்நீதியின்
நடைதுறந்து உயிர்கோடலும் நன்மையோ?
கடைதுறந்தது போர் என்கருத்து ‘என்றான். 6.36.173

இராவணன் தெளிதல்

கூவிரம் செறி பொன் கொடித் தேரோடும்
போவர் அஞ்சினர் அன்னது ஓர் போழ்தினின்
ஏவர் அஞ்சலியாதவர்? எண் உடை
தேவர் அஞ்ச இராவணன் தேறினான். 6.36.174

தெளிவுற்ற இராவணன் இராமனைத் தன்முன் காணாமையால் சினந்து நோக்குதல்

உறக்கம் நீங்கி உணர்ச்சி உற்றான் என
மறக்கண் வஞ்சன் இராமனை வான்திசைச்
சிறக்கும் தேரொடும் கண்டிலன்; சீற்றத் தீப்
பிறக்க நோக்கினன் பின் உற நோக்கினான். 6.36.175

சாரதியை இராவணன் சலித்துக்கொள்ளுதல்
10021. 6.36.‘தேர் திரித்தனை தேவரும் காணவே;
வீர விற்கை இராமற்கு வெண்நகை
பேர உய்த்தனையே; பிழைத்தாய் ‘எனா
சாரதிப் பெயரோனைச் சலிப்புறா. 6.36.176

‘தஞ்சம் என்று உனை எண்ணத் தருதலால்
வஞ்ச! நீபெருஞ் செல்வத்து வைகினை;
“அஞ்சினேன் ” எனச் செய்தனை ஆதலான்
உஞ்சிபோதி கொலாம்! ‘என்று உருத்து எழா. 6.36.177

சாரதி பணிந்து தேரைத் திருப்பிய காரணத்தை இராவணனுக்குத் தரெிவித்தல் (10022-10024)

வாள் கடைக்கணித்து ஓச்சலும், வந்து, அவன்
தாள் கடைக்கணியாத் தலை தாழ்வுறா,
‘மூள் கடைக்கடுந் தீயின் முனிவு ஓழி,
கோள் கடைக்கணித்து ‘ என்று அவன் கூறுவான். 6.36.178

ஆண்தொழில் துணிவு ஓய்ந்தனை; ஆங்கு இறை
ஈண்ட நிற்றிடின், ஐயனே! நின் உயிர்
மாண்டது இக்கணம் என்று, இடர் மாற்றுவான்,
மீண்டது இத்தொழில், எம் வினை; மெய்ம்மையால். 6.36.179

‘ஓய்வும் ஊற்றமும் நோக்கி உயிர்ப் பொறைச்
சாய்வு நீக்குதல் சாரதி தன்மையால்
மாய்வு நிச்சயம் வந்துழி; வாளினால்
காய்வு தக்கது அன்றால்; கடை காண்டியால். 6.36.180

இராவணன் இரக்கங்கொண்டு தேரைத் திருப்பச்செய்து இராமனைக் காணுதல்

என்று இறைஞ்சலும் எண்ணி இரங்கினான்
‘வென்றி அம்தடந் தேரினை மீட்க! ‘என
சென்று எதிர்ந்தது தேரும்; அத் தேர்மிசை
நின்ற வஞ்சன் இராமனை நேர்வுறா. 6.36.181

இராவணன் இராமன்மேல் அம்புகளைச் சொரிதல்

கூற்றின் வெங்கணை கோடியின் கோடிகள்
தூற்றினான் வலி மும்மடி தோற்றினான்;
வேற்று ஓர் வாள் அரக்கன் என வெம்மையால்
ஆற்றினான் செரு; கண்டவர் அஞ்சினார். 6.36.182

இராவணனது வில்லை முறிக்க இராமன் அம்பு எய்தல்

“‘எல் உண்டாகின் நெருப்பும் உண்டு “ என்னும் இச்
சொல் உண்டாம்; அது போல், இவன் தோளிடை
வில் உண்டாகின் வெலற்கு அரிது ஆம் ‘எனா,
செல் உண்டால் அன்னது ஓர் கணை சிந்தினான். 6.36.183

இராவணன் வில் இரு கூறாதல்
10029. 6.36.நாரணன் படை நாயகன் உய்ப்பு உறா
பார் அணங்கினைத் தாங்குறும் பல்வகை
வாரணங்களை வென்றவன் வார்சிலை
ஆர் அணங்கை இருதுணி ஆக்கினான். 6.36.184

வில் முறிந்தமை கண்டு தேவர்கள் மகிழ்ந்து குதித்தல்

அயன் படைத்தவில் ஆயிரம் பேரினான்
வியன் படைக்கலத்தால் அற்று வீழ்தலும்
உயர்ந்து உயர்ந்து குதித்தனர் உம்பரார்
பயன் படைத்தனம் பல்தவத்தால் என்றார். 6.36.185

இராவணன் எடுத்த வேறு விற்களை எல்லாம் இராமன் நுறுக்குதல்

மாறி மாறி வரிசிலை வாங்கினான்
ஆறு நூறினொடு ஐ இரு நூறு அவை
வேறு வேறு திசை உற வெங்கணை
நூறி நூறி இராமன் நுறுக்கினான். 6.36.186

இராமன்மேல் இருப்புலக்கை முதலியவற்றை வீசுதல்

இருப்பு உலக்கை, நீள் தண்டு, வேல், ஈட்டி, வாள்,
நெருப்பு உலக்க வரும் நெடுங் கப்பணம்,
திருப் புலக்க உய்த்தான் திசை யானையின்
மருப்பு உலக்க வழங்கிய மார்பினான். 6.36.187

இராவணனைக் கொல்லுநெறி யாதனெ இராமன் ஆராய்தல் (10032-10033)

அவை அனைத்தும் அறுத்து, அகன் வேலையில்
குவை அனைத்தும் எனக் குவித்தான், குறித்து,
‘இவை அனைத்தும் இவனை வெல்லா ‘என,
நவை அனைத்தும் துறந்தவன் நாடினான். 6.36.188

‘கண்ணினுள் மணியூடு கழிந்தன
எண்ணின் நுண்மணலின் பல வெங்கணை;
புண்ணினுள் நுழைந்து ஓடிய புந்தியோர்
எண்ணின் நுண்ணிய; என் செயற்பாற்று ‘எனா 6.36.189

அயன்கணை எய்யத் துணிதல்

‘நாரணன் திரு உந்தியில் நான்முகன்
பார வெம்படை வாங்கி இப் பாதகன்
மாரின் எய்வென் ‘என்று எண்ணி வலித்தனன்
ஆரியன் அவன் ஆவி அகற்றுவான். 6.36.190

இராமன் பிரமாத்திரம் தொடுத்தல்

முந்தி வந்து உலகு ஈன்ற முதற் பெயர்
அந்தணன் படை வாங்கி அருச்சியா
சுந்தரன் சிலை நாணில் தொடுப்புறா
மந்தரம் புரை தோள் உற வாங்கினான். 6.36.191

பிரமாத்திரம் விடுதல்

புரம் சுடப் பண்டு அமைத்தது பொன் பணை
மரம் துளைத்தது வாலியை மாய்த்துளது
அரம் சுடச்சுடர் அம்பது அவ் ஆற்றலான்
உரம் சுடச் சுடரோன்மகன் உந்தினான். 6.36.192

அயன்கணை செல்லுதல் (10037-10038)

காலும் வெம் கனலும் கடை காண்கிலா
மாலும் கொண்ட வடிக்கணை மாமுகம்
நாலும் கொண்டு நடந்தது நான்முகன்
மூல மந்திரம் தன்னொடு மூட்டலால். 6.36.193

ஆழி மால்வரைக்கு அப்புறத்து அப்புறம்
பாழி மால்கடலும் ஒளி பாய்ந்ததால்
ஊழி ஞாயிறு மின்மினி ஒப்புறும்
வாழி வெஞ்சுடர் பேர் இருள் வாரவே. 6.36.194

அயன்கணை இராவணன் மார்பில் புகுதல்

அக்கணத்தின் அயன்படை ஆண்தகை
சக்கரப் படையோடும் தழீஇச் சென்று
புக்கது அக்கொடியோன் உரம்; பூமியும்
திக்கு அனைத்தும் விசும்பும் திரியவே. 6.36.195

இராமன் அம்பு இராவணன் உயிரைப் பருகிப்போதல்

முக்கோடி வாழ்நாளும் முயன்றுடைய பெருந்தவமும்,
முதல்வன் முன்நாள்,
‘எக்கோடியாராலும் வெலப்படாய் ‘ எனக்கொடுத்த
வரமும், ஏனைத்
திக்கோடும் உலகு அனைத்தும் செரு கடந்த புய
வலியும், தின்று, மார்பில்
புக்கு ஓடி உயிர்பருகி, புறம் போயிற்று,
இராகவன்தன் புனித வாளி. 6.36.196

இராவணனைக் கொன்ற அம்பு நீராடி இராமனது தூணியில் புகுதல்

ஆர்க்கின்ற வானவரும், அந்தணரும், முனிவர்களும்,
ஆசிகூறித்
தூர்க்கின்ற மலர்மாரி தொடரப்போய், பாற்கடலில்
தூய்நீர் ஆடி,
தேர் குன்றம் இராவணன்தன் செழுங்குருதிப் பெரும்பரவைத்
திரைமேல் சென்று,
கார்க்குன்றம் அனையான்தன் கடுங்கணைப் புட்டிலின்
நடுவண் கரந்தது அம்ம 6.36.197

இராவணன், தேரிலிருந்து தலைகீழாகத் தரையில் வீழ்தல்

கார்நின்ற மழைநின்றும் உரும் உதிர்வ எனத் திணி
தோள் காட்டின் நின்றும்
தார்நின்ற மலைநின்றும், பணி குலமும் மணிக்குலமும்
தகர்ந்து சிந்த,
போர்நின்ற விழிநின்றும் பொறிநின்ற புகையோடும்
குருதி பொங்க,
தேர்நின்ற நெடுநிலத்துச் சினம் முகம் கீழ்ப்பட விழுந்தான்,
சிகரம்போல்வான். 6.36.198

இராவணன் உயிர்துறந்த முகங்கள் பொலிவுடன் தோன்றுதல்

வெம்மடங்கல் வெகுண்டு அனைய சினம் அடங்க,
மனம் அடங்க, வினையம் வீய,
தமெ் அடங்கப் பொருதடக்கைச் செயல் அடங்க,
மயல் அடங்க, ஆற்றல்தேய,
தம் அடங்கு முனிவரையும் தலை அடங்க, நிலை
அடங்கச் சாய்த்த நாளின்
மும்மடங்கு பொலிந்தன, அம்முறை துறந்தான் உயிர்துறந்த
முகங்கள் அம்மா. 6.36.199

விண்ணிலிருந்து இராமன் இராவணன் மேனியை முற்றும் பார்த்தல்

‘பூதலத்தது ஆக்குவாயாக, இனிப் பொலம்
தேரை ‘என்ற போதில்,
மாதலிப் பேரவன் கடவ, மண் தலத்தின்
அப்பொழுதே வருதலோடும்,
மீது அலைத்த பெருந்தாரை விசும்பு அளப்பக்
கிடந்தான் தன் மேனி முற்றும்
காதலித்த உருவாகி, அறம் வளர்க்கும்
கண்ணாளன் தரெியக் கண்டான். 6.36.200

இராமன் தரையில் இறங்கி இராவணனுடம்பை நெருங்கி நோக்குதல்

‘தேரினை நீகொடு விசும்பில் செல்க ‘என்ன
மாதலியைச் செலுத்தி, பின்னர்,
பாரிடம் மீதினின் அணுகி, தம்பியொடும்
படைத்தலைவர் பலரும் சுற்ற,
போரிடை மீண்டு ஒருவருக்கும் புறங்கொடாப்
போர்வீரன் பொருது வீழ்ந்த
சீரினையே மனம் உவப்ப, உருமுற்றும்
திருவாளன் தரெியக் கண்டான். 6.36.201

கவிக்கூற்று: இராவணன் மேனிமேல் வானரங்கள் ஏறி விளையாடுதல்

புலைமேலும் செலற்கு ஒத்துப் பொதுநின்ற செல்வத்தின்
புன்மைத் தன்மை
நிலைமேலும் இனி உண்டே? ‘நீர்மேலைக் கோலம்
‘எனும் நீர்மைத்து அன்றே
தலைமேலும் தோள்மேலும் தடமுதுகின்
படர்புறத்தும் தாவி ஏறி,
மலைமேல் நின்று ஆடுவபோல் ஆடினவால்,
வானரங்கள், வரம்பு இலாத. 6.36.202

இராவணன் முதுகில் திசை யானையின் கொம்புகள் வெளிப்பட்டிருப்பதை இராமன் பார்க்கின்றான்

தோடு உழுத நறும் தொடையல் தொகை உழுத
கிளைவண்டின் சுழியல் தொங்கல்
பாடு உழுத படர்வெரிநின் பணி உழுத அணிநிகர்ப்ப,
பணைக்கை யானைக்
கோடு உழுத நெடுந்தழும்பின் குவைதழுவி, எழுமேகக்
குழுவின் கோவைக்
காடு உழுத கொழும்பிறையின் கறைகழன்று
கிடந்தனபோல் கிடக்கக் கண்டான் 6.36.203

இராவணனது புறப்புண் வடுவைக் கண்ட இராமன் சிரித்தல்

தளிர் இயல் பொருட்டின் வந்த சீற்றமும் தருக்கினோன் தன்
கிளர் இயல் உருவினோடும் குழிப்புறக் கிளர்ந்து தோன்றும்
வளரியல் வடுவின் செம்மைத் தன்மையும் மருவ நின்ற
முளரி அம்கண்ணன் மூரல் முறுவலன், மொழிவது ஆனான். 6.36.204

இராவணன் முதுகில்பட்ட பிழம்பு இருத்தலால் இவன் போரில் புறமுதுகிட்டவனே என இராமன் வருந்துதல் (10049-10050)

வென்றியான் உலகம் மூன்றும் மெய்ம்மையால் மேவினானும்
பொன்றினான் என்று தோளைப் பொது அற நோக்கும் பொற்பும்
குன்றி ஆசு உற்றது அன்றே இவன் எதிர் குறித்த போரில்
பின்றியான் முதுகில்பட்ட பிழம்பு உள தழும்பின் அம்மா. 6.36.205

“‘கார்த்த வீரியன் என்பானால் கட்டுண்டான் “ என்னச் சொல்லும்
வார்த்தை உண்டு; அதனைக் கேட்டு, நாணுறு மனத்தினேற்குப்
போர்த்தலைப் புறகிட்டு ஏற்ற புண்ணுடைத் தழும்பு போலாம்
நேர்த்ததும் காணல் உற்றது; ஈசனார் இருக்கை நிற்க! 6.36.206

இராமன், இராவணனை வென்ற வெற்றி சிறந்தது ஆகாது என வீடணனை விளித்துக்கூறியது

‘மாண்டு ஒழிந்து உலகில் நிற்கும் வயங்கு இசை முயங்க மாட்டாது,
ஊண்தொழில் உகந்து, தவெ்வர் முறுவல் என் புகழை உண்ண,
பூண்தொழில் உடைய மார்பா! போர்ப் புறம் கொடுத்தோர்ப் போன்ற
ஆண்தொழிலோரின் பெற்ற வெற்றியும் அவத்தம் ‘என்றான். 6.36.207

வீடணன் வருந்திச் சொல்லத் தொடங்குதல்

அவ்வுரை உரைப்பக் கேட்ட வீடணன், அருவிக் கண்ணன்,
வெவ்வுயிர்ப்போடு நீண்ட விம்மலன், வெதும்பும் நெஞ்சன்,
‘செவ்வியின் தொடர்ந்த அல்ல செப்பலை, செல்வ! ‘என்னா,
எவ்வுயிர்ப் பொறையும் நல்கி இரங்கிநின்று, இனைய சொன்னான். 6.36.208

இராவணனது வீரம்

‘ஆயிரம் தோளினானும், வாலியும் அரிதின், ஐய!
மேயின வென்றி விண்ணோர் சாபத்தின் விளைந்த; மெய்ம்மை;
தாயினும் தொழத் தக்காள் மேல் தங்கிய காதல் தன்மை
நோயும் நின்முனிவும் அல்லால், வெல்வரோ நுவலற்பாலார்? 6.36.209

இராவணன் முதுகில் வடு இருந்தமைக்குக் காரணம் கூறுதல் (10054-10057)

‘நாடு உளதனையும் ஓடி நண்ணலார்க் காண்கிலாமல்,
பீடு உள குன்றம் போலும் பெருந்திசை எல்லை யானைக்
கோடு உள தனையும் புக்குக் கொடும்புறத்து அழுந்து புண்ணின்
பாடு உளது அன்றி, தவெ்வர் படைக்கலம்பட்டு என் செய்யும்? 6.36.210

அப்பணை அனைத்தும் மார்புக்கு அணி எனக் கிடந்த; வீரக்
கைப்பணை முழங்க, முன்நாள் அமரிடைக் கிடைத்த போது உன்
துப்பு அணை வயிர வாளி விசையினும் காலின் தோன்றல்
வெப்பு அணை குத்தினாலே வெரிந் இடை போய அன்றே. 6.36.211

அவ்வடு அன்றி, இந்த அண்டத்தும் புறத்தும் ஆன்ற
தவெ் அடு படைகள் அஞ்சாது இவன்வயின் செல்லின், தேவ!
வெவ்விடம் ஈசன் தன்னை விழுங்கினும், பறவை வேந்தை
அவ்விட நாகம் எல்லாம் அணுகினும், அணுகல் ஆற்றா. 6.36.212

‘வென்றியாய்! பிறிதும் உண்டோ வேலைசூழ் ஞாலம் எல்லாம்
பன்றியாய் எயிற்றுக்கொண்ட பரம்பரன் முதல பல்லோர்,
“என்றுயாம் இடுக்கண்தீர்வது? “ என்கின்றார்; “இவன் இன்று உன்னால்
பொன்றினான் ‘‘ என்ற போதும், புலப்படார், ‘‘பொய்கொல் ‘‘ என்பார் ‘ 6.36.213

வீடணன் சொல்லைக் கேட்ட இராமன் மன நிறைவு பெற்றவனாய் இராவணனுக்கு இறுதிக்கடன் செய்ய ஏவுதல்

'அன்னதோ? ‘என்னா, வீரன் ஐயமும் நாணும் நீங்கி,
தன்னதோள் இணையை நோக்கி, ‘வீடணா! தக்கது அன்றால்;
என்னதோ இறந்துளான்மேல் வயிர்த்தல்? நீ இவனுக்கு ஈண்டு
சொன்னது ஓர் விதியினாலே கடன்செயத் துணிதி ‘என்றான். 6.36.214

தன்னைக் காண வந்த தேவர் முதலியோரை இராமன் காணச் செல்லுதல்

அவ்வகை அருளி, வள்ளல் அனைத்து உலகங்கேளாடும்
எவ்வகை உள்ள தேவர் யாவரும் இரைத்துப் பொங்கிக்
கவ்வையின் தீர்ந்தார் வந்து வீழ்கின்றார் தம்மைக் காண,
செவ்வையின் அவர்முன் சென்றான்; வீடணன் இதனைச் செய்தான். 6.36.215

வீடணன் இராவணன் மேனிமேல் வீழ்தல்
‘போழ்ந்தனெ அரக்கன்செய்த புன்தொழில் பொறையிற்று ஆமால்,
வாழ்ந்தநீ இவனுக்கு ஏற்ற வரன்முறை வகுத்தி ‘என்ன,
தாழ்ந்தது ஓர் கருணைதன்னால், தலைமகன் அருள, தள்ளி,
வீழ்ந்தனன் அவன்மேல், வீழ்ந்த மலையின்மேல் மலைவீழ்ந்தனெ்ன 6.36.216

ஏவரும், உலகத்து எல்லா உயிர்களும், எரியும் நெஞ்சத்
தேவரும், முனிவர்தாமும் சிந்தையின் இரக்கம் கூர,
தாஅரும் பொறையினான்தன் அறிவினால் தகைக்க நின்ற
ஆவலும் துயரும் தீர, அரற்றினான் பகுவாய் ஆர. 6.36.217

வீடணன் வாய்திறந்தரற்றியது (10062-10068)

‘உண்ணாதே உயிர் உண்ணாது ஒருநஞ்சு; சனகி
எனும் பெருநஞ்சு உன்னைக்
கண்ணாலே நோக்கவே போக்கியதே உயிர்; நீயும்
களம் பட்டாயே!
எண்ணாதேன் எண்ணியசொல் இன்று இனித்தான்
எண்ணுதியோ? எண் இல் ஆற்றல்
அண்ணாவோ! அண்ணாவோ! அசுரர்கள்தம்
பிரளயமே! அமரர் கூற்றே. 6.36.218

‘ஓராசை ஒருவன்மேல் உயிராசைக் குலமகள்மேல்
உடைய காதல்
தீர்; ஆசை பழி ‘‘ என்றேன்; எனைமுனிந்த முனிவு
ஆறித் தேறினாயோ?
போர் ஆசைப்பட்டு எழுந்த குலம் முற்றும்
பொன்றவும்தான் பொங்கி நின்ற
பேராசை பேர்ந்ததோ? பேர்ந்து ஆசைக் கரி
இரியப் புருவம் பேர்த்தோய்! 6.36.219

"அன்று எரியில்விழு வேதவதி இவள்காண்; உலகுக்கு
ஓர் அன்னை “ என்று,
குன்று அனைய நெடுந்தோளாய்! கூறினேன், அது மனத்துள்
கொள்ளாதே போய்,
உன்தனது குலம் அடங்க, உருத்து அமரில்
படக்கண்டும், உறவு ஆகாதே
பொன்றினையே! இராகவன்தன் புயவலியை
இன்று அறிந்து போயினாயோ? 6.36.220

‘மன்றல் மாமலரானும், வடிமழுவாள்
படையானும், வரங்கள் ஈந்த
ஒன்று அலாதன உடைய முடியோடும் பொடி
ஆகி உதிர்ந்து போன;
அன்றுதான் உணர்ந்திலையே ஆனாலும்
வான்நாட்டை அணுகா நின்ற
இன்றுதான் உணர்ந்தனையே, இராமன் தான்
யாவருக்கும் இறைவன் ஆதல். 6.36.221

‘வீரநாடு உற்றாயோ? விரிஞ்சனாம் யாவருக்கும்
மேலாம் உன்தன்
பேரன்நாடு உற்றாயோ? பிறைசூடும் பிஞ்ஞகன்தன்
புரம் பெற்றாயோ?
ஆர், அணா! உன் உயிரை, அஞ்சாதே, கொண்டு
அகன்றார்? அது எலாம் நிற்க,
மாரனார் வலி ஆட்டம் தவிர்ந்தாரோ? குளிர்ந்தானோ,
மதியம் என்பான்? 6.36.222

‘கொல்லாத மைத்துனனைக் கொன்றாய் “ என்று
அதுகுறித்துக் கொடுமை சூழ்ந்து,
பல்லாலே இதழ் அதுக்கும் கொடும்பாவி நெடும்பாரப்
பகை தீர்ந்தாளோ?
நல்லாரும் தீயாரும் நரகத்தார் துறக்கத்தார்,
நம்பி! நம்மோடு
எல்லாரும் பகைஞரே; யார்முகத்தே விழிக்கின்றாய்?
எளியை ஆனாய்! 6.36.223

‘போர்மகளை, கலைமகளை, புகழ்மகளை,
தழுவியகை பொறாமை கூர,
சீர்மகளை, திருமகளை, தேவர்க்கும் தரெிவரிய
தெய்வக் கற்பின்
பேர்மகளை, தழுவுவான் உயிர்கொடுத்து, பழிகொண்ட
பித்தா! பின்னைப்
பார்மகளைத் தழுவினையோ, திசையானை பணை
இறுத்த பணைத்த மார்பால்? 6.36.224

சாம்பவன் ஆறுதல் கூற வீடணன் தேறுதல்

என்று ஏங்கி, அரற்றுவான்தனை எடுத்து, சாம்பவனாம்
எண்கின் வேந்தன்,
‘குன்று ஓங்கு நெடுந்தோளாய்! விதிநிலையை மதியாத
கொள்கைத்து ஆகிச்
சென்று ஓங்கும் உணர்வினையோ? தேறாது வருந்துதியோ?
‘என்னத் தேறி
நின்றான், அப்புறத்து அரக்கன் நிலைகேட்டாள், மயன்பயந்த
நெடுங்கண் பாவை. 6.36.225

மண்டோதரி இராவணன் கிடக்கும் இடத்தை அடைதல்

அனந்தம் நூறு ஆயிரம் அரக்கர் மங்கைமார்
புனைந்த பூங்குழல் விரித்து அரற்றும் பூசலார்
இனம் தொடர்ந்து உடன்வர எய்தினாள் அரோ
நினைந்ததும் மறந்ததும் இலாத நெஞ்சினாள். 6.36.226

அரக்கியர் அரற்றும் ஓசை

இரக்கமும் தருமமும் துணைக்கொண்டு, இன்னுயிர்
புரக்கும் நன்குலத்து வந்து ஒருவன் பூண்டது ஓர்
பரக்கழி ஆம் எனப் பரந்து, நீண்டதால்
அரக்கியர் வாய்திறந்து அரற்றும் ஓதையே. 6.36.227

மேலும் அரக்கியர் வருதல் (10072-10073)

நூபுரம் புலம்பிட சிலம்பு நொந்து அழ
கோபுரந் தொறும் புறம் குறுகினார் சிலர்;
‘ஆ! புரந்தரன் பகை அற்றது ஆம் ‘எனா
மாபுரம் தவிர விண்வழிச் சென்றார்சிலர். 6.36.228

அழைப்பு ஒலி முழக்கு எழ அழகு மின்னிட
குழை பொலி நல் அணிக் குலங்கள் வில்லிட
உழைப்பொலி உண்கண் நீர்த்தாரை மீது உக
மழைப்பெருங் குலமென வான்வந்தார் சிலர். 6.36.229

அரக்கியர் இராவணன்மேல் வீழ்ந்து அழுதல் (10074-10078)

தலைமிசைத் தாங்கிய கரத்தர், தாரைநீர்
முலைமிசைத் தூங்கிய முகத்தர், மொய்த்துவந்து,
அலைமிசைக் கடலின்வீழ் அன்னம்போல், அவன்
மலைமிசைத் தோள்கள்மேல் வீழ்ந்து, மாழ்கினார். 6.36.230

தழுவினர் தழுவினர் தலையும் தாள்களும்
எழு உயர் புயங்களும் மார்பும் எங்கணும்
குழுவினர் முறைமுறை கூறுகூறு கொண்டு
அழுதனர் அயர்த்தனர் அரக்கி மார்களே. 6.36.231

வருத்தம் ஏது எனின், அது புலவி; வைகலும்,
பொருத்தமே வாழ்வு எனப் பொழுது போக்குவார்,
ஒருத்தர்மேல் ஒருத்தர் வீழ்ந்து உயிரின் புல்லினார்
‘திருத்தமே ‘என அவன் சிகரத் தோள்கள்மேல். 6.36.232

இயக்கியர் அரக்கியர் உரகர் ஏழையர்
மயக்கம் இல் சித்தியர் விஞ்சை மங்கையர்
முயக்கு இயல் முறைகெட முயங்கினார்கள் தம்
துயக்கு இலா அன்புகண்டு எவரும் சோரவே. 6.36.233

'அறம்தொலைவுற மனத்து அடைத்த சீதையை
மறந்திலையோ, இனும்? எமக்கு உன் வாய்மலர்
திறந்திலை; விழித்திலை; அருளும் செய்கிலை;
இறந்தனையோ? ‘என இரங்கி, ஏங்கினார். 6.36.234

மண்டோதரி இராவணன்மேல் விழுந்து அழுதல் (10079-10087)

தரங்கநீர் வேலையில் தடித்து வீழ்ந்து என
உரங்கிளர் மதுகையான் உருவின் வீழ்ந்தனள்
மரங்களும் மலைகளும் உருக வாய்திறந்து
இரங்கினள் மயன்மகள் இனைய பன்னினாள். 6.36.235

‘அன்னேயோ! அன்னேயோ! ஆ, கொடியேற்கு
அடுத்தது! நான் அரக்கர் வேந்தன்
பின்னேயோ, இறப்பது? முன்பிடித்திருந்த
கருத்ததுவும் பெற்றிலேனே!
முன்னேயோ விழுந்ததுவும் முடித்தொகையோ?
படித்தலைய முகங்கள் தானோ?
என்னேயோ, என்னேயோ, இராவணனார் முடிந்த
பரிசு! இதுவோ பாவம்! 6.36.236

‘வெள் எருக்கஞ் சடைமுடியான் வெற்பு எடுத்த
திருமேனி, மேலும் கீழும்
எள் இருக்கும் இடனின்றி, உயிர் இருக்கும் இடன்நாடி,
இழைத்தவாறோ?
“கள் இருக்கும் மலர்க்கூந்தல் சானகியை மனம்
சிறையில் கரந்த காதல்
உள்ளிருக்கும் ‘‘ எனக் கருதி, உடல் புகுந்து,
தடவியதோ ஒருவன் வாளி? 6.36.237

‘ஆரம்போர் திருமார்பை அகல் முழைகள் எனத்
திறந்து, இவ் உலகுக்கு அப்பால்
தூரம்போயின, ஒருவன் சிலைதுரந்த சரங்களே;
போரில் தோற்று,
வீரம்போய், உரம்குறைந்து, வரம்குறைந்து, வீழ்ந்தானே!
வேறே! கெட்டேன்!
ஓர் அம்போ, உயிர்பருகிற்று, இராவணனை!
மானுடவன் ஊற்றம் ஈதோ! 6.36.238

‘காந்தையருக்கு அணியனைய சானகியார் பேர்
அழகும், அவர்தம் கற்பும்,
ஏந்து புயத்து இராவணனார் காதலும், அச் சூர்ப்பணகை
இழந்த மூக்கும்,
வேந்தர் பிரான், தயரதனார் பணியினால் வெம்
கானில் விரதம் பூண்டு
போந்ததுவும், கடைமுறையே புரந்தரனார் பெருந்
தவமாய்ப் போயிற்று, அம்மா! 6.36.239

"தேவர்க்கும், திசை கரிக்கும், சிவனார்க்கும்,
அயனார்க்கும், செங்கண்மாற்கும்,
ஏவர்க்கும் வலியானுக்கு என்று உண்டாம் இறுதி? ‘‘
என ஏமாப்புற்றேன்;
ஆவற்கண் நீ உழந்த அருந்தவத்தின் பெருங்கடற்கும்,
வரமென்று ஆன்ற
காவற்கும் வலியான் ஒர் மானுடவன் உளன்
என்னக் கருதினேனோ? 6.36.240

அரைகடை இட்டு அமைவுற்ற முக்கோடி ஆயுவும்
பேர் அறிஞர்க்கேயும்
உரைகடை இட்டு அளப்பு அரிய பேர் ஆற்றல்
தோளாற்றற்கு உலப்போ இல்லை
திரைகடை இட்டு அளப்ப அரிய வரமென்னும்
பாற்கடலைச் சீதை என்னும்
பிறகடை இட்டு அழிப்பதனை அறிந்தேனோ,
தவப்பயனின் பெருமை பார்ப்பேன்? 6.36.241

‘ஆர் அனார், உலகு இயற்கை அறிதக்கார்? அவை ஏழும் ஏழும் அஞ்சும்
வீரனார் உடல் துறந்து, விண்புக்கார்; கண்புக்க வேழ வில்லால்
நார நாண் மலர்க்கணையால், நாளெல்லாம் தோள் எல்லாம், நைய எய்யும்
மாரனார் தனி இலக்கை மனித்தனார் அழித்தனரே, வலத்தினாலே! 6.36.242

ஆரா அமுதாய் அலைகடலில் கண்வளரும்
நாராயணன் என்று இருப்பேன் இராமனைநான்;
ஓராதே கொண்டு அகன்றாய், உத்தமனார் தேவிதனை;
பாராயோ, நின்னுடைய மார்பு அகலம் பட்ட எலாம்? 6.36.243

மண்டோதரி இராவணன் உடலைத் தழுவி உயிர்விடுதல்

என்று அழைத்தனள், ஏங்கி எழுந்து, அவன்
பொன் தழைத்த பொரு அரு மார்பினைத்
தன் தழைக் கைகளால் தழுவித் தனி
நின்று அழைத்து உயிர்த்தாள், உயிர் நீங்கினாள். 6.36.244

கணவனோடு மாண்ட மண்டோதரியை மாதர்கள் வாழ்த்துதல்

வான மங்கையர், விஞ்சையர், மற்றும் அத்
தான மங்கையரும் தவப் பாலவர்
ஆன மங்கையரும் அருங் கற்புடை
மான மங்கையர் தாமும் வழுத்தினார். 6.36.245

வீடணன் இராவணனுக்கு ஈமக்கடன் புரிதல் (10090-10093)
பின்னர் வீடணன் பேர் எழில் தம்முனை
வன்னி கூவி வரன்முறையால் மறை
சொன்ன ஈமம் விதிமுறையால் தொகுத்து
இன்னல் நெஞ்சினொடு அஞ்சலித்து ஏற்றினான். 6.36.246

இந்தனத்து அகில் சந்தனமிட்டு மேல்
அந்த மானத்து அழகுறத் தான் அமைத்து
எந்த ஓசையும் கீழ் உற ஆர்த்து இடை
முந்து சங்கு ஒலி எங்கும் முழங்குற. 6.36.247

கொற்ற வெண்குடையோடு கொடி மிடைந்து
உற்ற ஈம விதியின் உடன்பட
சுற்றம் மாதர் தொடர்ந்து உடன்சூழ்வர
மற்ற வீரன் விதியின் வழங்கினான். 6.36.248

கடன்கள் செய்து முடித்து கணவனை
உடன் தொடர்ந்த மயன்மகேளாடு உடன்
அடங்க வெங்கனலுக்கு அவி ஆக்கினான்
குடங்கொள் நீரினும் கண்சோர் குமிழியான். 6.36.249

மற்றையரக்கர்க்கும் உரிய கடன்களைச் செய்து வீடணன் இராமனை அணுகுதல்

மற்றையோர்க்கும் வரன்முறையால் வகுத்து
உற்ற தீக் கொடுத்து உண்குறு நீர் உகுத்து
‘எற்றையோர்க்கும் இவன் அலது இல் ‘எனா
வெற்றிவீரன் குரைகழல் மேவினான். 6.36.250

வந்து தாழ்ந்த துணைவனை வள்ளலும்
‘சிந்தை வெந்துயர் தீருதி தெள்ளியோய்!
முந்தை எய்தும் முறைமை இது ஆம் ‘எனா
அந்தம் இல் இடர்ப் பாரம் அகற்றினான். 6.36.251
---------------

6.37 – Befreiung und Heimkehr

6.37 மீட்சிப் படலம் 10098 – 10454 (357)

வீடணனுக்குத் தேறுதலுரை பகர்ந்த இராமன், இலக்குவனை நோக்கி ‘நீ வீடணனுக்கு முடிசூட்டுவாயாக ‘என ஏவுதல்
‘வருந்தல் நீதி மனு நெறி யாவையும்
பொருந்து கேள்விப் புலமையினோய்! ‘எனா
அருந்தவப் பயனால் அடைந்தாற்கு அறைந்து
இருந் தவத்து இளையோற்கு இது இயம்பினான். 6.37.1

‘சோதியான் மகன் வாயுவின் தோன்றல் மற்று
ஏது இல் வானர வீரரோடு ஏகி நீ
ஆதிநாயகன் ஆக்கிய நூல் முறை
நீதியானை நெடுமுடி சூட்டுவாய் 6.37.2

என்று கூறி இளவெளாடு யாரையும்
வென்றிவீரன் விடை அருள் வேலையில்
நின்ற தேவர் நெடுந் திசையோரொடும்
சென்று தம்தம செய்கை புரிந்தனர். 6.37.3

முடிசூட்டுதற்கு அமரர்கள் ஆவனசெய்தல்

சூழ் கடல் புனலும் பல தோயமும்
நீள் முடித் தொகையும் பிறநீர்மையும்
பாழி துற்று அரி பற்றிய பீடமும்
தாழ்வு இல் கொற்றத்து அமரர்கள் தந்தனர். 6.37.4

வாசநாள் மலரோன் சொல மான்முகன்
காசும் மாநிதியும் கொடு கங்கைசூடு
ஈசனே முதலோர் வியந்து ஏத்திட
தேசு உலாம் மணிமண்டபம் செய்தனன். 6.37.5

இலக்குவன் வீடணனுக்கு முடிசூட்டுதல்

மெய்கொள் வேத விதிமுறை விண் உேளார்
தயெ்வ நீள்புனல் ஆடல் திருத்திட
ஐயன் ஆணையினால் இளங் கோளரி
கையினால் மகுடம் கவித்தான் அரோ. 6.37.6

வீடணன் அரியணையில் அமர்ந்திருத்தல்

கரிய குன்று கதிரினைச் சூடி ஓர்
எரி மணித் தவிசில் பொலிந்து என்னவே
விரியும் வெற்றி இலங்கையர் வேந்தன் நீடு
அரியணைப் பொலிந்தான் தமர் ஆர்த்து எழ. 6.37.7

தேவர் பூமழை, சித்தர் முதலினோர்
மேவு காதல் விரைமலர் வேறு இலா
மூவரோடு முனிவர் மற்று யாவரும்
நாவில் ஆசி நறைமலர் தூவினார். 6.37.8

மூடிசூடிய வீடணன் இலக்குவனை வணங்கி உபசரித்து இராமபிரானை யெய்தி இறைஞ்சுதல்

முடி புனைந்த நிருதர் முதலவன்
அடி வணங்கி இளவலை ஆண்டை அந்
நெடிய காதலினோற்கு உயர் நீர்மை செய்து
இடிகொள் சொல்லன் அவற்கு இது இயம்பினான். 6.37.9

‘விலங்கல் நாண மிடைதரு தோளினாய்!
இலங்கை மாநகர் யான்வரும் எல்லைநீ
கலங்கலா நெடுங்காவல் இயற்று ‘எனா
அலங்கல் வீரன் அடியிணை எய்தினான். 6.37.10

வணங்கிய வீடணனை இராமன் தழுவிக்கொண்டு அவனுக்கு நீதிகளை எடுத்துரைத்தல்

குரக்கு வீரன் அரசு இளங்கோளரி
அரக்கர் கோமகனோடு அடி தாழ்தலும்
பொருக்கெனப் புகல் புக்கவன் புல்லி அத்
திருக்கொள் மார்பன் இனையன செப்பினான். 6.37.11

‘உரிமை மூவுலகும் தொழ உம்பர்தம்
பெருமை நீதி அறன்வழிப் பேர்கிலாது
இருமை ஏய் அரசு ஆளுதி ஈறு இலாத்
தருமசீல! ‘என்றான் மறை தந்துளான். 6.37.12

பன்னும் நீதிகள் பற்பல கூறி ‘மற்று
உன் அடைந்தவரோடு உயர் கீர்த்தியே
மன்னி வாழ்க ‘என்று உரைத்து அடல்மாருதி
தன்னை நோக்கினன் தாயர்சொல் நோக்கினான். 6.37.13

சீதைக்குச் செய்தி சொல்லி வருமாறு, இராமன், அனுமனை அனுப்புதல்

இப்புறத்து இ(ன்)ன எய்துறு காலையில்
அப்புறத்தை உன்னி அனுமனை
‘துப்பு உறு அச் செய்யவாய் மணித்தோகைபால்
செப்புறு இப்படிப் போய் ‘எனச் செப்பினான். 6.37.14

அனுமன் அசோகவனம் சென்று, பிராட்டியைத் தொழுது சோபனம் பாடி இராமனால் இராவணன் கொல்லப்பட்ட செய்தியைக் கூறுதல்

வணங்கி அந்தமில் மாருதி மாமலர்
அணங்கு சேர் கடி காவு சென்று அண்மினான்;
உணங்கு கொம்புக்கு உயிர்வரு நீர் என
சுணங்கு தோய்முலையாட்கு இவை சொல்லுவான். 6.37.15

பாடினான் திருநாமங்கள்; பல் முறை
கூடு சாரியின் குப்புற்றுக் கூத்து நின்று
ஆடி அங்கை இரண்டும் அலங்குறச்
சூடி நின்றனன் குன்று அன்ன தோளினான். 6.37.16

‘ஏழை சோபனம்! ஏந்திழை சோபனம்!
வாழி சோபனம்! மங்கல சோபனம்!
ஆழி ஆன அரக்கனை ஆரியச்
சூழி யானை துகைத்தது சோபனம்! 6.37.17

‘தலை கிடந்தன தாரணி தாங்கிய
மலை கிடந்தனபோல்; மணித்தோள் எனும்
அலை கிடத்தன; ஆழி கிடந்தனெ
நிலைகிடந்தது உடல் நிலத்தே ‘என்றான். 6.37.18

‘அண்ணல் ஆணையின் வீடணனாம் மறக்
கண் இலாதவன் காதல் தொடர்தலால்
பெண் அலாது பிழைத்து உளது ஆகும் என்று
எண்ணல் ஆவது ஒர்பேர் இலதால் ‘என்றான். 6.37.19

செய்திகேட்டுச் சீதை மகிழ்ச்சியால் உடம்பு பூரித்தல்

ஒரு கலைத்தனி வெண்மதி நாெளாடும்
வரு கலைக்குள் வளர்வது மானுறப்
பொரு கலை குலம் பூத்தது போன்றனள்
பருகல் உற்ற அமுது பயந்த நாள். 6.37.20

ஆம்பல் வாயும் முகமும் அலர்ந்திட
தேம்பு நுண் இடை நோவ திரள்முலை
ஏம்பல் ஆசைக்கு இரட்டிவந்து எய்தினாள்
பாம்பு கான்ற பனிமதிப் பான்மையாள். 6.37.21

10118. 6.37.புந்தி ஓங்கும் உவகைப் பொருமலோ
உந்தி ஓங்கும் ஒளிவளைத் தோள்கொலோ
சிந்தி ஓடு கலையுடைத் தேர்கொலோ
முந்தி ஓங்கின யாவை முலைகொலோ? 6.37.22

குனித்த, கோலப் புருவங்கள்; கொம்மைவேர்
பனித்த, கொங்கை; மழலைப் பணிமொழி
நுனித்தது ஒன்று, நுவல்வது ஒன்று, ஆயினாள்;
கனித்த இன்களி கள்ளினில் காட்டுமோ? 6.37.23

களிப்பின் மிகுதியால் ஒன்றும் பேசமாட்டாது பிராட்டியிருந்தாளாக, ‘ஒன்றும் பேசாதது ஏன்? ‘என அனுமன் வினவுதல்

அனையள் ஆகி அனுமனை நோக்கினாள்
இனையது இன்னது இயம்புவது என்பது ஓர்
நினைவு இலாது நெடிது இருந்தாள் நெடு
மனையின் மாசு துடைத்த மனத்தினாள். 6.37.24

‘யாது இதற்கு ஒன்று இயம்பலை என்பது,
மீது உயர்ந்த உவகையின் விம்மலோ?
தூது பொய்க்கும் என்றோ? ‘ எனச் சொல்லினான்,
நீதி வித்தகன்; நங்கை நிகழ்த்தினாள். 6.37.25

பிராட்டியின் மறுமொழி
மேக்கு நீங்கிய வெள்ள உவகையால்
ஏக்கம் உற்று “ஒன்று இயம்புவது யாது? ” என
நோக்கி நோக்கி அரிது என நொந்துளேன்;
பாக்கியம் பெரும் பித்தும் பயக்குமோ? 6.37.26

‘முன்னை “நீக்குவென் மொய்சிறை ” என்ற நீ
பின்னை நீக்கி உவகையும் பேசினை;
“என்ன பேற்றினை ஈகுவது? ” என்பதை
உன்னி நோக்கி உரை மறந்து ஓவினேன் 6.37.27

‘உலகம் மூன்றும் உதவற்கு ஒரு தனி
விலை இலாமையும் உன்னினென்; மேல் அவை
நிலை இலாமை நினைந்தனென்; நின்னை என்
தலையினால் தொழவுந் தகும் தன்மையோய்! 6.37.28

‘ஆதலான் ஒன்று உதவுதல் ஆற்றலேன்;
“யாது செய்வது? ” என்று எண்ணி இருந்தனென்
வேத நல்மணி வேகடம் செய்து அன்ன
தூத! என் இனிச் செய்திறம்? சொல் ‘என்றாள். 6.37.29

அனுமன் தான் விரும்பிய பணி இதுவெனக் கூறுதல்

‘எனக்கு அளிக்கும் வரம் எம்பிராட்டி! நின்
மனக்களிக்கு மற்று உன்னை அம் மானவன்
தனக்கு அளிக்கும் பணியினும் தக்கதோ?
புனக் களிக்குல மாமயில் போன்றுளாய்! 6.37.30

நின்னை வருத்திய கொடிய அரக்கியரை யான் வருத்தும்படி எனக்கு அனுமதி தருக ‘என அனுமன் பிராட்டியை வேண்டுதல்

என உரைத்து ‘திரிசடையாள் எம்மோய்!
மனவினில் சுடர் மாமுக மாட்சியாள்
தனை ஒழித்து இவ் அரக்கியர் தங்களை
வினையினின் சுட வேண்டுவன் யான் ‘என்றான். 6.37.31

‘உரை அலா உரை உன்னை உரைத்து, உராய்
விரைய ஓடி, ‘ விழுங்குவம் ‘என்றுளார்
வரைசெய் மேனியை வள் உகிரால் பிளந்து,
இரை செய்வேன், மறலிக்கு, இனி ‘என்னுமால். 6.37.32

அனுமன் சொல்லிய சொல்லினைக் கேட்ட அரக்கியர் சீதையைச் சரண்புகுதல்

‘குடல் குறைத்து, குருதி குடித்து இவர்
உடல் முருக்கியிட்டு உண்குவென் ‘என்றலும்,
அடல் அரக்கியர் ‘ அன்னை! நின் பாதமே
விடலம்; மெய்ச்சரண் ‘ என்று விளம்பலும். 6.37.33

பிராட்டி அரக்கியர்க்கு அபயம் அளித்து, அனுமனை நோக்கி, ‘அவர்களுக்கு இடர்செய்யற்க ‘என இரந்து வேண்டுதல்

அன்னை ‘அஞ்சல்மின்! அஞ்சல்மின்! நீர் ‘எனா
மன்னும் மாருதி மாமுகம் நோக்கி வேறு
என்ன தீமை இவர் இழைத்தார் அவன்
சொன்ன சொல்லினது அல்லது? தூய்மையோய்! 6.37.34

‘யான் இழைத்த வினையினின் இவ் இடர்
தான் அடுத்தது; தாயினும் அன்பினோய்!
கூனியின் கொடியார் அ(ல்)லரே இவர்?
போன அப்பொருள் போற்றலை புந்தியோய்! 6.37.35

‘எனக்கு நீ அருள் இவ் வரம்; தீவினை
தனக்கு வாழ்வு இடமாய சழக்கியர்
மனக்கு நோய்செயல் ‘என்றனள்; மாமதி
தனக்கு மா மறு தந்த முகத்தினாள். 6.37.36

பிராட்டியின் அருள் நினைந்து அனுமன் பணிதலும்

என்ற போதின் இறைஞ்சினன் ‘எம்பிரான்
தன்துணைப் பெருந்தேவி தயா ‘எனா
நின்ற காலை நெடியவன் ‘வீடண!
சென்று தா நம தேவியைச் சீரொடும் 6.37.37

வீடணன் சென்று பிராட்டியின் திருவடிகளை வணங்குதல்

என்னும்காலை இருளும் வெயிலும் கார்
மின்னும் காலை இயற்கைய வீடணன்
‘உன்னும்காலைக் கொணர்தி ‘என்று ஓதும் அப்
பொன்னின் கால்தளிர் சூடினன் போந்துளான். 6.37.38

வீடணன் பிராட்டியை நோக்கி, ‘பூணத்தக்ககோலம் புனைந்து இராமன்பக்கல் எழுந்தருள்க எனக் கூறுதல்

‘வேண்டிற்று முடிந்தது அன்றே வேதியர் வேதன், நின்னைக்
காண்டற்கு விரும்புகின்றான்; உம்பரும் காண வந்தார்;
“பூண்தக்க கோலம் வல்லை புனைந்தனை வருத்தம் போக்கி,
ஈண்டு, கொண்டணைதி ‘‘ என்றான்; எழுந்தருள் இறைவி ‘என்றான். 6.37.39

அணி புனைந்துகொள்ளாமல் இங்கிருந்த கோலத்துடன் வருதலே எனக்குத் தகுதி என்று சீதை கூறுதல்

‘யான் இவண் இருந்த தன்மை, இமையவர் குழுவும், எங்கள்
கோனும், அம் முனிவர்தங்கள் கூட்டமும், குலத்துக்கு ஏற்ற
வான் உயர் கற்பின் மாதர் ஈட்டமும் காண்டல் மாட்சி;
மேல் நிலை கோலம் கோடல் விழுமியது அன்று; வீர! ‘ 6.37.40

அணி புனைந்து வருதல்வேண்டும் ‘என்பது இராமனது கட்டளை என வீடணன் வற்புறுத்திக் கூறப் பிராட்டி அதற்கிசைந்தநிலையில் தேவமாதர்கள் பிராட்டியை நீராட்டிக் கோலஞ்செய்தல்

என்றனள், இறைவி; கேட்ட இராக்கதர்க்கு இறைவன், ‘நீலக்
குன்று அன தோளினான் தன் பணியினின் குறிப்பு அது ‘என்றான்;
‘நன்று ‘என, நங்கை நேர்ந்தாள், நாயகக் கோலம் கொள்ள;
சென்றனர், வானநாட்டுத் திலோத்தமை முதலோர், சேர. 6.37.41

மேனகை, அரம்பை, மற்றை உருப்பசி, வேறும் உள்ள
வானக நாட்டு மாதர் யாரும், மஞ்சனத்துக்கு ஏற்ற
நானம் நெய் ஊட்டப் பட்ட நவை இல கலவை தாங்கி,
போனகம் துறந்த தையல் மருங்குற நெருங்கிப் புக்கார். 6.37.42

காணியைப் பெண்மைக்கு எல்லாம், கற்பினுக்கு அணியை, பொற்பின்
ஆணியை, அமிழ்தின் வந்த அமிழ்தினை, அறத்தின் தாயை,
சேணுயர் மறையை எல்லாம் முறைசெய்த செல்வன் என்ன,
வேணியை, அரம்பை, மெல்ல, விரல்முறை சுகிர்ந்து விட்டாள். 6.37.43

பாகு அடர்ந்து அமுது பில்கும் பவளவாய்த் தரளப் பத்தி
சேகு அற விளக்கி, நானம் தீட்டி, மண்சேர்ந்த காசை
வேகடம் செய்யுமாபோல், மஞ்சன விதியின், வேதத்து
ஓகை மங்கலங்கள் பாட, ஆட்டினர், உம்பர் மாதர். 6.37.44

உருவிளை பவள வல்லி பால்நுரை உண்ட தனெ்ன
மருவிளை கலவை ஊட்டிக் குங்குமம் முலையின் மாட்டி,
கருவிளை மலரின் காட்சிக் காசு அறு தூசும் காமர்
திருவிளை அல்குற்கு ஏற்ப மேகலை தழுவச் சேர்த்தார் 6.37.45

தேவமாதர் பிராட்டிக்கு மங்கல ஆரத்திசுழற்றிக் காப்பிடுதல்

சந்திரன் தேவிமாரின் தகை உறு தரளப் பைம்பூண்,
இந்திரன் தேவிக்கு ஏற்ப, இயைவன பூட்டி, யாணர்ச்
சிந்துரப் பவளச் செவ்வாய்த் தேம்பசும் பாகு தீற்றி,
மந்திரத்து அயினி நீரால் வலஞ்செய்து காப்பும் இட்டார். 6.37.46

பிராட்டியை விமானத்திலேற்றி இராமனிடம் அழைத்துச் செல்லுதல்

மண்டல மதியின் நாப்பண் மான் இருந்து என்ன, மானம்
கொண்டனர் ஏற்றி, வான மடந்தையர் தொடர்ந்து கூட
உண்டை வானரரும் ஒள்வாள் அரக்கரும் புறஞ்சூழ்ந்து ஓட,
அண்டர் நாயகன்பால், அண்ணல் வீடணன் அருளின் சென்றான். 6.37.47

தேவர்களும் முனிவர்களும் தேவர்மகளிரும் முனிவர் மனைவியரும் பிராட்டியைக் காணுதற்கு நெருங்குதல்

இப்புறத்து இமையவர் முனிவர் ஏழையர்
துப்பு உறச் சிவந்தவாய் விஞ்சைத் தோகையர்
முப்புறத்து உலகினும் எண்ணின் முற்றினார்
ஒப்புறக் குவிந்தனர் ஓகை கூறுவார். 6.37.48

மிகப்பலராய் நெருங்கியவர்களை அரக்க வீரர்கள் அடித்து விலக்க அவர்கள் அரற்றுதல்

அருங்குலக் கற்பினுக்கு அணியை அண்மினார்
மருங்குபின் முன்செல வழி இன்று என்னலாய்
நெருங்கினர் நெருங்குழி நிருதர் ஓச்சலால்
கருங்கடல் முழக்கு எனப் பிறந்த கம்பலை. 6.37.49

அரற்றொலியைக் கேட்ட இராமன், அதற்குக் காரணம் யாது என முனிவர்களை வினவியறிதல்

அவ்வழி, இராமனும் அலர்ந்த தாமரைச்
செவ்விவாள் முகம்கொடு செயிர்த்து நோக்கு உறா,
‘இவ்வொலி யாவது? ‘என்று இயம்ப, ‘இற்று ‘எனா,
கவ்வை இல் முனிவரர் கழறினார் அரோ. 6.37.50

இராமன் வீடணனைக் கடிந்துரைத்தல்

முனிவரர் வாசகம் கேட்புறாத முன்
நனி இதழ் துடித்திட நகைத்து வீடணன்
தனை எழ நோக்கி ‘நீ தகாத செய்தியோ
புனிதநூல் கற்று உணர் புந்தியோய்? ‘என்றான். 6.37.51

‘கடுந்திறல் அமர்க்களம் காணும் ஆசையால்
நெடுந் திசை தேவரும் நின்ற யாவரும்
அடைந்தனர்; உவகையின் அணைகின்றார்களைக்
கடிந்திட யார் சொனார்? கருது நூல்வலாய்! 6.37.52

‘பரசுடைக் கடவுள், நேமிப் பண்ணவன், பதுமத்து அண்ணல்,
அரசுடைத் தரெிவைமாரை இன்றியே அமைவது உண்டோ?
கரைசெயற்கு அரிய தேவர், ஏனையோர், கலந்து காண்பான்
விரசு உறின், விலக்குவாரோ? வேறு உளார்க்கு என்கொல்? வீர! 6.37.53

இராமன் சொல்லைக்கேட்டு வீடணன் அஞ்சி நடுங்கி நிற்றல்

‘ஆதலால், அரக்கர் கோவே! அடுப்பது அன்றும் உனக்கும், இன்னே
சாதுவாம் மாந்தர் தம்மைத் தடுப்பது ‘என்று அருளி, செங்கண்
வேத நாயகன் தான் நிற்ப, வெய்து உயிர்த்து, அலக்கண் எய்தி,
கோது இலா மனனும் மெய்யும் குலைந்தனன், குணங்கள் தூயோன். 6.37.54

போர்க்களத்தையடைந்த சீதை, இராமபிரானது கோலத்தைக்கண்டு அனுமன் செய்த உதவியை நினைந்து பாராட்டுதல்

அருந்ததி அனைய நங்கை, அமர்க்களம் அணுகி, ஆடல்
பருந்தொடு கழுகும் பேயும் பசிப்பிணி தீருமாறு
விருந்திடு வில்லின் செல்வன் விழா அணி விரும்பி நோக்கி,
கருந்தடங் கண்ணும் நெஞ்சும் களித்திட, இனைய சொன்னாள். 6.37.55

‘சீலமும் காட்டி, என்கணவன் சேவகக்
கோலமும் காட்டி, என்குலமும் காட்டி, இஞ்
ஞாலமும் காட்டிய கவிக்கு நாள் அறா
காலமும் காட்டுங்கொல் எனது கற்பு? என்றாள். 6.37.56

பிராட்டி இராமனது திருமேனியைக் காணுதல்

‘எச்சில் என்னுடல் உயிர் ஏகிற்றே; இனி
நச்சு இலை ‘என்பது ஓர் நவை இலாள் எதிர்
பச்சிலை வண்ணமும் பவள வாயும் ஆய்க்
கைச்சிலை ஏந்தி நின்றானைக் கண்ணுற்றாள். 6.37.57

சீதை விமானத்திலிருந்து இறங்கி, இராமனைத் தொழுது ஏக்கம் நீங்குதல்

மானமீது அரம்பையர் சூழ வந்துளாள்
போனபேர் உயிரினைக் கண்ட பொய் உடல்
தானது கவர்வுறும் தன்மைத்து ஆம் என
ஆனனம் காட்டுற அவனி எய்தினாள். 6.37.58

பிறப்பினும் துணைவனை பிறவிப் பேரிடர்
துறப்பினும் துணைவனை தொழுது ‘நானினி
மறப்பினும் நன்று; இனிமாறு வேறுவீழ்ந்து
இறப்பினும் நன்று ‘என ஏக்கம் நீங்கினாள். 6.37.59

இராமன் சீதையை அமைய நோக்குதல்

கற்பினுக்கு அரசினை பெண்மைக் காப்பினை
பொற்பினுக்கு அழகினை புகழின் வாழ்க்கையை
தன் பிரிந்து அருள்புரி தருமம் போலியை
அற்பின் அத்தலைவனும் அமைய நோக்கினான். 6.37.60

இராமன், தன்னை வணங்கிய சீதையைச் சினந்து நோக்கிப் பலவாறு கடிந்துரைத்தல்

சுணங்கு உறுதுணை முலை முன்றில் தூங்கிய
அணங்கு உறு நெடும் கண் நீர் ஆறு வார்வுற
வணங்கிய மயிலினை கற்பின் வாழ்வினை
பணம்கிளர் அரவு என எழுந்து பார்ப்பு உறா. 6.37.61

‘ஊண்திறம் உவந்தனை; ஒழுக்கம் பாழ்பட,
மாண்டிலை; முறைதிறம்பு அரக்கன் மாநகர்
ஆண்டு உறைந்து அடங்கினை; அச்சம் தீர்ந்து இவண்
மீண்டது என்? நினைவு, “எனை விரும்பும் “ என்பதோ? ‘ 6.37.62

‘உன்னை மீட்பான்பொருட்டு, உவரி தூர்த்து, ஒளிர்
மின்னை மீட்டு உறு படை அரக்கர் வேர் அற,
பின்னை மீட்டு, உறுபகை கடந்திலேன்; பிழை
என்னை மீட்பான் பொருட்டு, இலங்கை எய்தினேன் 6.37.63

‘மருந்தினும் இனிய மன்னுயிரின் வான்தசை
அருந்தினையே; நறவு அமைய உண்டியே;
இருந்தனையே இனிது? எமக்கும் ஏற்பன
விருந்து உளவோ? உரை வெறுமை நீங்கினாய்! 6.37.63

‘கலத்தினின் பிறத்த மாமணியின் காந்துறு
நலத்தினின் பிறந்தன நடந்த; நன்மைசால்
குலத்தினில் பிறந்திலை; கோள் இல் கீடம்போல்
நிலத்தினில் பிறந்தமை நிரப்பினாய் அரோ. 6.37.64

‘பெண்மையும் பெருமையும், பிறப்பும் கற்பு எனும்
திண்மையும், ஒழுக்கமும், தெளிவும், சீர்மையும்,
உண்மையும், நீ எனும் ஒருத்தி தோன்றலால்
வண்மை இல் மன்னவன் புகழின், மாய்ந்தவால். 6.37.65

‘அடைப்பர், ஐம்புலன்களை; ஒழுக்கம் ஆணியாச்
சடைப்பரம் புனைந்து, ஒளிர் தகையின் மாதவம்
படைப்பர்; வந்து இடை ஒரு பழிவந்தால், அது
துடைப்பர், தம் உயிரோடும் குலத்தின் தோகைமார். 6.37.66

‘யாது யான் இயம்புவது? உணர்வை ஈடு அறச்
சேதியாநின்றது, உன் ஒழுக்கச் செய்தியால்;
சாதியால்; அன்று எனின், தக்கது ஒர்நெறி
போதியால் ‘என்றனன் புலவர் புந்தியான். 6.37.67

இராமன் கூறிய கடுஞ்சொற்களைக் கேட்டு அங்கு நின்ற முனிவர் முதலியோர் அனைவரும் அரற்றுதல்
முனைவரும் அமரரும் மற்றும் முற்றிய
நினைவு அரு மகளிரும் நிருதர் என்று உளார்
எனைவரும் வானரத்து எவரும் வேறு உளார்
அனைவரும் வாய்திறந்து அரற்றினார் அரோ. 6.37.68

இராமன் கூறிய கடுஞ்சொற்களைக் கேட்ட சீதையின் துயர்நிலை
கண் இணை உதிரமும் புனலும் கான்று உக
மண்ணினை நோக்கிய மலரின் வைகுவாள்
புண்ணினைக் கோலுறுத் தனைய பொம்மலால்
உள்நினைப்பு ஓவிநின்று உயிர்ப்பு வீங்கினாள். 6.37.69

பருந்து அடர் சுரத்திடை பருகுநீர் நசை
வருந்து அரும் துயரின் ஆல் மாளலுற்ற மான்
இருந் தடம்கண்டு அதின் எய்துறா வகைப்
பெருந்தடை உற்று என பேதுற்றாள் அரோ. 6.37.70

உற்றுநின்று உலகினை நோக்கி ஓடு அரி
முற்று உறு நெடுங்கண்நீர் ஆலிமொய்த்து உக
‘இற்றதுபோலும் யான் இருந்துபெற்ற பேறு?
உற்றதால் இன்று அவம் ‘என்று என்று ஓதுவாள். 6.37.71

‘மாருதி வந்து எனைக் கண்டு “வள்ளல்நீ
சாருதி ஈண்டு “ எனச் சமையச் சோல்லினான்;
யாரினும் மேன்மையான் இசைத்தது இல்லையோ
சோரும் என்நிலை? அவன் தூதும் அல்லனோ? 6.37.72

‘எத் தவம் என்நலம் என்ன கற்பு நான்
இத்தனை காலமும் உழந்த ஈது எலாம்
பித்து எனலாய் அவம் பிழைத்ததாம் அன்றே
உத்தம! நீமனத்து உணர்ந்திலாமையால். 6.37.73

‘பார்க்கு எலாம் பத்தினி; பதுமத் தானுக்கும்
பேர்க்கலாம் சிந்தையள் அல்லள், பேதையேன்;
ஆர்க்கு எலாம் கண்ணவன், ‘அன்று ‘என்றால், அது
தீர்க்கல் ஆம் தகையது தயெ்வம் தேறுமோ? 6.37.74

‘பங்கயத்து ஒருவனும், விடையின் பாகனும்,
சங்குகைத் தாங்கிய தரும மூர்த்தியும்
அங்கையின் நெல்லிபோல் அனைத்தும் நோக்கினும்,
மங்கையர் மனநிலை உணர வல்லரோ? 6.37.75

‘ஆதலின் புறத்து இனி யாருக்காக என்
கோது அறுதவத்தினைக் கூறிக் காட்டுகேன்?
சாதலின் சிறந்தது ஒன்று இல்லை; தக்கதே
வேத! நின்பணி; அதுவிதியும் ‘என்றனள். 6.37.76

சீதை தனக்குத் தீ அமைக்குமாறு இலக்குவனை வேண்ட அவன் இராமனைத் தொழுது குறிப்பினால் அவனது இசைவை உணர்தல்

இளையவன் தனை அழைத்து ‘இடுதி தீ ‘என
வளை ஒலி முன்கையாள் வாயின் கூறினாள்;
உளைவுறு மனத்தவன் உலகம் யாவுக்கும்
களைகணைத் தொழ அவன் கண்ணின் கூறினான். 6.37.77

இலக்குவன் தீ அமைக்க, சீதை அதனருகே செல்லுதல்

ஏங்கிய பொருமலின் இழி கண்ணீரினன்
வாங்கிய உயிரினன் அனைய மைந்தனும்
ஆங்கு எரி விதிமுறை அமைவித்தான்; அதன்
பாங்குற நடந்தனள் பதுமப் போதினாள். 6.37.78

அப்பொழுது உலகில் எல்லாப் பகுதிகளும் எல்லாவுயிர்களும் கலக்கமுற்று நடுங்குதல்

தீ இடை, அருகுறச் சென்று, தேவர்க்கும்
தாய் தனிக்குறுகலும், தரிக்கிலாமையால்,
வாய்திறந்து அரற்றின மறைகள் நான்கொடும்
ஓய்வு இல் நல் அறமும், மற்று உயிர்கள் யாவையும். 6.37.79

வலம்வரும் அளவையின் மறுகி வான்முதல்
உலகமும் உயிர்களும் ஓலமிட்டன;
அலமரல் உற்றன; அலறி ஐய! இச்
சலம் இது தக்கிலது ‘என்னச் சாற்றின. 6.37.80

இந்திரன் தேவியே முதல ஏழையர்
அந்தர வானின் நின்று அரற்றுகின்றவர்
செந் தளிர்க் கைகளால் சேயரிப் பெருஞ்
சுந்தரக் கண்களை எற்றித் துள்ளினார். 6.37.81

நடுங்கினர், நான்முகன் முதல நாயகர்;
படம் குறைந்தது, படிசுமந்த பாம்பு; வாய்
விடம் பரந்து உளது என, வெதும்பிற்றால் உலகு;
இடம் திரிந்தன சுடர்; கடல்கள் ஏங்கின. 6.37.82

யான் குற்றமுடையேன் தீச்செல்வா என்னைச் சுடுதி ‘என்று அக்கினியை நோக்கிக் கூறி, இராமனுக்கு வணக்கஞ் செலுத்தி, தீயிற் பாய்தல்

கனத்தினால் கடந்த பூண் முலைய கைவளை,
மனத்தினால், வாக்கினால், மறு உற்றேன் எனின்,
சினத்தினால் சுடுதியால், ‘தீச்செல்வா! ‘என்றாள்;
புனத் துழாய்க் கணவற்கும் வணக்கம் போக்கினாள். 6.37.83

சீதையின் கற்புத் தீயினால் அக்கினி வெந்து தீய்தல்

நீந்த அரும் புனலிடை நிவந்த தாமரை
ஏய்ந்த தன் கோயிலே எய்துவாள் எனப்
பாய்ந்தனள்; பாய்தலும் பாலின் பஞ்சு எனத்
தீய்ந்தது அவ் எரி அவள் கற்பின் தீயினால். 6.37.84

தீக்கடவுள் சீதையைக் கையிலேந்தி

அழுந்தின நங்கையை அங்கையால் சுமந்து
எழுந்தனன் அங்கி, வெந்து எரியும் மேனியான்,
தொழும் துணைக் கரத்தினன், சுருதி ஞானத்தின்
கொழுந்தினைப் பூசலிட்டு அரற்றும் கொள்கையான். 6.37.85

ஊடின சீற்றத்தால் உதித்த வேர்களும்
வாடின இல்லையால்; உணர்த்துமாறு உண்டோ?
பாடிய வண்டொடும் பனித்த தேனொடும்
சூடின மலர்கள் நீர் தோய்ந்த போன்றவால். 6.37.86

அப்பொழுது உலகம் தடுமாற்றம் ஒழிய யாவரும் மகிழ்தல்

திரிந்தன உலகமும் செவ்வை நின்றன;
பரிந்தவர் உயிர் எலாம் பயம் தவிர்ந்தன;
அருந்ததி முதலிய மகளிர் ஆடுதல்
புரிந்தனர் நாணமும் பொறையும் நீங்கினார். 6.37.87

அங்கியங் கடவுள் இராமனை நோக்கி முறையிடுதல்

‘கனிந்து உயர் கற்பு எனும் கடவுள் தீயினால்
நினைந்திலை என் வலி நீக்கினாய் ‘எனா
அநி்ந்தனை அங்கி ‘நீ அயர்வு இல் என்னையும்
முனிந்தனை ஆம் ‘என முறையிட்டான் அரோ. 6.37.88

இராமன் ‘நீ யார்? ‘என வினாதல்
‘இன்னது ஓர் காலையில், இராமன், ‘யாரை நீ?
என்னை நீ இயம்பியது? எரியுள் தோன்றி, இப்
புன்மைசால் ஒருத்தியைச் சுடாது போற்றினாய்,
அன்னது ஆர் சொல்ல? ஈது அறைதியால் ‘என்றான். 6.37.89

அக்கினிதேவன் மறுமொழி
‘அங்கி, யான்; என்னை இவ் அன்னை கற்பு எனும்
பொங்கு வெந்தீச் சுடப் பொறுக்கிலாமையால்,
இங்கு அணைந்தேன்; உறும் இயற்கை நோக்கியும்,
சங்கியா நிற்றியோ, எவர்க்கும் சான்று உளாய்? 6.37.90

‘வேட்பதும், மங்கையர் விலங்கினார் எனின்
கேட்பதும், பல்பொருட்கு ஐயம் கேடு அற
மீட்பதும், என்வயின் ‘ என்னும் மெய்ப் பொருள்
வாள் பெருந் தோளினாய்! மறைகள் சொல்லுமால். 6.37.91

‘ஐயுறு பொருள்களை ஆசு இல் மாசு ஒரீஇக்
கை உறு நெல்லி அம் கனியின் காட்டும் என்
மெய் உறு கட்டுரை கேட்டும் மீட்டியோ?
பொய் அறு மாருதி உரையும் போற்றலாய்! 6.37.92

‘தேவரும் முனிவரும், திரிவ நிற்பவும்,
மூவகை உலகமும், கண்கள் மோதிநின்று,
“ஆ! “ எனல் கேட்கிலை; அறத்தை நீக்கி, வேறு
ஏவம் என்று ஒருபொருள் யாண்டுக் கொண்டியோ? 6.37.93

‘பெய்யுமே மழை? புவி பிளப்பது அன்றியே
செய்யுமே, பொறை? அறம் நெறியில் செல்லுமே?
உய்யுமே உலகு, இவள் உணர்வு சீறினால்?
வையுமேல், மலர் மிசை அயனும் மாயுமே. ‘ 6.37.94

பிராட்டியை இராமன் அருகில் அக்கினிதேவன் கொண்டுவர இராமன் அவளை ஏற்றுக்கொள்ளுதல்

பாடு உறு பல்மொழி இனைய பன்னி நின்று
ஆடு உறு தேவரோடு உலகம் ஆர்த்து எழ,
சூடு உறும் மேனி அ(வ்) அலரி, தோகையை
மாடு உறக் கொணர்ந்தனன்; வள்ளல் கூறுவான். 6.37.95

‘அழிப்பு இல சான்றுநீ, உலகுக்கு; ஆதலால்,
இழிப்பு இல சொல்லி, நீ இவளை, “யாதும் ஓர்
பழிப்பு இலள் ‘‘ என்றனை; பழியும் இன்று; இனிக்
கழிப்பிலள் ‘என்றனன் கருணை உள்ளத்தான். 6.37.96

தேவர்கள் வேண்டியவண்ணம் பிரமதேவன் இராமனது உண்மைநிலையை அவனுக்கு உணர்த்துதல்
‘உணர்த்துவாய் உண்மை ஒழிவு இன்று, காலம் வந்துளதால்,
புணர்த்தும் மாயையில் பொதுவுற நின்று, அவை புணரா
இணர்த் துழாய்த் தொங்கல் இராமற்கு ‘என்று இமையவர் இசைப்ப,
தணப்பு இல் தாமரைச் சதுமுகன் உரைசெயச் சமைந்தான். 6.37.97

‘மன்னர் தொல்குலத்து அவதரித்தனை; ஒரு மனிதன்
என்ன உன்னலை உன்னை, நீ; இராம! கேள், இதனை;
சொன்ன நான்மறைத் துணிவினில் துணிந்த மெய்த்துணிவு
நின் அலாது இல்லை; நின் இன் இல் வேறு உளது இலை நெடியோய்! 6.37.98

‘பகுதி என்று உளது, யாதினும் பழையது, பயந்த
விகுதியால் வந்த விளைவு, மற்று அதற்குமேல் நின்ற
புகுதி, யாவர்க்கும் அரிய அப் புருடனும், நீ; இம்
மிகுதி உன்பெரு மாயையினால் வந்த வீக்கம். 6.37.99

‘முன்பு பின்பு இருபுடை எனும் குணிப்பு அரு முறைமைத்
தன்பெருந் தன்மை தான் தரெி மறைகளின் தலைகள்,
“மன்பெரும் பரமார்த்தம் “ என்று உரைக்கின்ற மாற்றம்,
அன்ப! நின்னை அல்லால் மற்று இங்கு யாரையும் அறையா. 6.37.100

‘எனக்கும், எண் வகை ஒருவற்கும், இமையவர்க்கு இறைவன்
தனக்கும், பல்பெரு முனிவர்க்கும், உயிருடன் தழீஇய
அனைத்தினுக்கும், நீயே பரம் என்பதை அறிந்தார்,
வினைத் துவக்கு உடை வீட்ட அரும் தளைநின்று மீள்வார். 6.37.101

என்னைத்தான் முதலாகிய உருவங்கள் எவையும்
முன்னைத் தாய் தந்தை எனும் பெரு மாயையின் மூழ்கி,
தன்னைத் தான் அறியாமையின் சலிப்ப; அச் சலம் தீர்ந்து,
உன்னைத் தாதை என்று உணர்குவ, முத்தி வித்து, ஒழிந்த. 6.37.102

“‘ஐ அஞ்சு ஆகிய தத்துவம் தரெிந்து அறிந்து, அவற்றின்
மெய் எஞ்சாவகை மேல் நின்ற நினக்குமேல் யாதும்
பொய் எஞ்சா இலது ‘‘ என்னும் ஈது அருமறை புகலும்;
வையம் சான்று; இனி, சான்றுக்குச் சான்று இலை, வழக்கால். 6.37.103

‘அளவையால் அளந்து, “ஆம் “ , “அன்று “என்று அறிவுறும் அமைதி
உ(ள்)ளவை யாவையும் உனக்கு இல்லை; உபநிடத்து உறும் நின்
களவை ஆய்ந்து உறத் தெளிந்து இலது ஆயினும், கண்ணால்,
துளவை ஆய் முடியாய்! “உளை நீ “ எனத் துணியும். 6.37.104

‘கரணம் என்று உள உன்னை வந்து அறிவு காணாமே,
அரணம் அல்லவர்க்கு இவை கடந்து அறிவு அரிது ஆக,
மரணம் தோற்றம் என்று இவற்றிடை மயங்குப; அவர்க்கு உன்
சரணம் அல்லது ஓர் சரண் இல்லை, அன்னவை தவிர்ப்பான். 6.37.105

'தோற்றம் என்பது ஒன்று உனக்கு இல்லை; நின்கணே தோற்றும்,
ஆற்றல்சால் முதற்பகுதி; மற்று அதனுள் ஆம், பண்பால்
காற்றை முன்னுடைப் பூதங்கள்; அவை சென்று, கடைக்கால்,
வீற்று வீற்று உற்று வீவுறும்; நீ என்றும் விளியாய். 6.37.106

'மின்னைக் காட்டுதல்போல் வந்து விளியும் இவ் உலகம்
தன்னைக் காட்டவும், தருமத்தை நாட்டவும், தனியே
என்னைக் காட்டுதி; இறுதியும் காட்டுதி; எனக்கும்
உன்னைக் காட்டலை; ஒளிக்கின்றும் இலை, மறை உரையால். 6.37.107

‘என் உருக் கொடு இவ் உலகினை ஈனுதி; இடையே
உன் உருக் கொடு புகுந்துநின்று ஓம்புதி; உமைகோன்
தன் உருக்கொடு துடைத்தி; மற்று இது, தனி அருக்கன்
முன் உருக் கொடு பகல் செயும் தரத்தது முதலோய் 6.37.108

'திருக் குவால்மலி செல்வத்துச் செருக்குவேம் திறத்துத்
தருக்கு மாய்வுற, தானவர் அரக்கர் வெஞ் சமரில்
இரிக்க, மாழ்கி நொந்து, உனைப் புகல் யாம்புக, இயையாக்
கருக்குளாய் வந்து தோற்றுதி; ஈங்கு இது கடனோ? 6.37.109

‘ஓங்காரப் பொருள் தேருவோர்தாம் உன்னை உணர்வோர்;
ஓங்காரப் பொருள் என்று உணர்ந்து இருவினை உகுப்போர்;
“ஓங்காரப் பொருள் ஆம் “ , “அன்று “என்று, ஊழி கண்டாலும்
ஓங்காரப் பொருளே பொருள் என்கிலா உரவோர் 6.37.110

‘இனையது ஆதலின், என்னையும் யாரையும் ஈன்று, இம்
மனையின் மாட்சியை வளர்த்த எம் மோயினை வாளா
முனியல் ‘என்று உரை முடித்தனன் முந்துநீர் முளைத்த
சினையின் பந்தமும் பகுதிகள் அனைத்தையும் செய்தோன். 6.37.111

சிவபெருமான் இராமனுக்கு உண்மையை உணர்த்துதல்
என்னும் மாத்திரத்து, ஏறு அமர் கடவுளும் இசைத்தான்;
‘உன்னை நீ ஒன்றும் உணர்ந்திலை போலுமால், உரவோய்!
முன்னை ஆதி ஆம் மூர்த்திநீ; மூவகை உலகின்
அன்னை சீதை ஆம் மாது, நின் மார்பின் வந்து அமைந்தாள். 6.37.112

'துறக்கும் தன்மையள் அல்லளால், தொல்லை எவ் உலகும்
பிறக்கும் பொன்வயிற்று அன்னை; இப் பெய்வளை பிழைக்கின்,
இறக்கும் பல உயிர்; இராமன் நீ இவள் திறத்து இகழ்ச்சி
மறக்கும் தன்மையது ‘என்றனன், வரதர்க்கும் வரதன். 6.37.113

இராமனைத் தரெுட்டுமாறு துறக்கத்திலுள்ள தயரதனுக்குச் சிவபெருமான் பணித்தல்

பின்னும் நோக்கினான், பெருந்தகைப் புதல்வனைப் பிரிந்த
இன்னலால் உயிர் துறந்து, இருந் துறக்கத்துள் இருந்த
மன்னவற் சென்று கண்டு, நின் மைந்தனைத் தரெுட்டி
முன்னை வன்துயர் நீக்குதி மொய்ம்பினோய் என்றான். 6.37.114

தயரதன் பூதலத்திடைப் புகுதலும், இராமன் அவனை வணங்குதலும்

ஆதியான் பணி அருள் பெற்ற அரசருக்கு அரசன்
காதல் மைந்தனைக் காணிய உவந்தது ஓர் கருத்தால்,
பூதலத்திடைப் புக்கனன்; புகுதலும், பொரு இல்
வேதவேத்தனும் அவன் மலர்த் தாள்மிசை வீழ்ந்தான். 6.37.115

தயரதன் இராமனை இடர்நீங்க எடுத்துத் தழுவி மகிழ்ந்துரைத்தல்

வீழ்ந்த மைந்தனை எடுத்து, தன் விலங்கல் ஆகத்தின்
ஆழ்ந்து அழுந்திடத் தழுவி, தன் கண்ணின் நீர் ஆட்டி,
வாழ்ந்த சிந்தையின் மனங்களும் களிப்புற, மன்னன்
போழ்ந்த துன்பங்கள் புறப்பட, நின்று இவை புகன்றான். 6.37.116

‘அன்று கேகயன் மகள் கொண்ட வரமெனும் அயில்வேல்
இன்றுகாறும் என் இதயத்தினிடை நின்றது, என்னைக்
கொன்றும் நீங்கலது, இப்பொழுது அகன்றது, உன் குலம் பூண்
மன்றல் ஆகம் ஆம் காந்த மா மணி இன்று வாங்க. 6.37.117

‘மைந்தரைப் பெற்று வான் உயர் தோற்றத்து மலர்ந்தார்,
சுந்தரப் பெருந் தோளினாய்! என்துணைத் தாளின்
பைந் துகள்களும் ஒக்கிலர் ஆம் எனப் படைத்தாய்;
உய்ந்தவர்க்கு அருந் துறக்கமும் புகழும்பெற்று உயர்ந்தேன். 6.37.118

‘பண்டு நான் தொழும் தேவரும் முனிவரும் பாராய்,
கண்டு கண்டு எனைக் கைத்தலம் குவிக்கின்ற காட்சி;
புண்டரீகத்துப் புராதனன் தன்னொடும் பொருந்தி
அண்ட மூலத்து ஒர் ஆசனத்து இருத்தினை, அழக! ‘ 6.37.119

தயரதன் சீதையை யணுகித் தன்னை வணங்கிய சீதைக்குத் தேறுதலுரை பகர்தல்

என்று மைந்தனை எடுத்து எடுத்து, இறுகுறத் தழுவி,
குன்று போன்று உள தோளினான், சீதையைக் குறுக,
தன் துணைக்கழல் வணங்கலும், கருணையால் தழவி
நின்று, மற்று இவை நிகழ்த்தினான், நிகழ்த்த அரும்புகழோன். 6.37.120

“‘நங்கை! மற்றுநின் கற்பினை உலகுக்கு நாட்ட
அங்கி புக்கிடு ‘‘ என்று உணர்த்திய அது மனத்து அடையேல்;
சங்கை உற்றவர் பெறுவதும் உண்டு, அதுசரதம்;
கங்கை நாடுடைக் கணவனை முனிவுறக் கருதேல். 6.37.121

“‘பொன்னைத் தீயிடைப் பெய்தல் அப்பொன்னுடைத் தூய்மை
தன்னைக் காட்டுதற்கு ‘‘ என்பது மனக்கொளல் தகுதி;
உன்னைக் காட்டினன், ‘கற்பினுக்கு அரசி ‘ என்று, “உலகில்
பின்னைக் காட்டுவது அரியது ‘‘ என்று எண்ணி இப்பெரியோன். 6.37.122

‘பெண் பிறந்தவர், அருந்ததியே முதல் பெருமைப்
பண்பு இறந்தவர்க்கு அருங்கலம் ஆகிய பாவாய்!
மண் பிறந்தகம் உனக்கு; நீ வான்நின்றும் வந்தாய்;
எண்பு இறந்த நின்குணங்களுக்கு இனி இழுக்கு இலையால். 6.37.123

தயரதன் இலக்குவனைக் தழுவிப் பாராட்டுதல்

என்னச் சொல்லி, அவ் ஏந்திழை திருமனத்து யாதும்
உன்னச் செய்வது ஓர்முனிவு இன்மை மனம்கொளா உவந்தான்;
பின்னைச் செம்மல் அவ் இளவலை, உள் அன்பு பிணிப்ப,
தன்னைத்தான் எனத் தழுவினன், கண்கள் நீர்ததும்ப. 6.37.124

கண்ணின்நீர்ப் பெருந்தாரை மற்று அவன் சடைக் கற்றை
மண்ணின் நீத்தம் ஒத்து இழிதர, தழீஇ நின்று, ‘மைந்த!
எண் இல் நீக்க அரும்பிறவியும் என்நெஞ்சின் இறந்த
புண்ணும் நீக்கினை, நுமையனைத் தொடர்ந்து உடன் போந்தாய் 6.37.125

‘புரந்தரன் பெரும் பகைஞனைப் போர்வென்ற உன்தன்
பரந்து உயர்ந்த தோள் ஆற்றலே தேவரும் பலரும்
நிரந்தரம் புகல்கின்றது; நீஇந்த உலகின்
அரந்தை வெம்பகை துடைத்து, அறம் நிறுத்தினை ஐய! 6.37.126

என்று, பின்னரும், இராமனை, ‘யான் உனக்கு ஈவது
ஒன்று கூறுதி, உயர்குணத்தோய்! ‘ என, ‘உனை யான்
சென்று வானிடைக்கண்டு, இடர் தீர்வென் என்று இருந்தேன்;
இன்று காணப்பெற்றேன்; இனிப் பெறுவது என்? ‘என்றான். 6.37.127

‘ஆயினும், உனக்கு அமைந்தது ஒன்று உரை ‘என, அழகன்,
‘தீயள் என்று நீ துறந்த என் தயெ்வமும் மகனும்,
தாயும் தம்பியுமாம் வரம் தருக ‘எனத் தாழ்ந்தான்;
வாய் திறந்து எழுந்து ஆர்த்தன உயிரெலாம் வழுத்தி. 6.37.128

தயரதன் மறுமொழி

‘வரதகேள்! ‘எனத் தயரதன் உரை செய்வான்; ‘மறு இல்
பரதன் அன்னது பெறுக! தான் முடியினைப் பறித்து இவ்
விரத வேடம் மற்று உதவிய பாவிமேல் விளிவு
சரதம் நீங்கலதாம் ‘என்றான், தழீஇய கைதளர. 6.37.129

கைகேயியின்மேல் தயரதன் கொண்ட தணியாக் கோபம் இராமனது உரையால் நீங்குதல்

'ஊன் பிழைக்கிலா உயிர்நெடிது அளிக்கும்நீள் அரசை
வான்பிழைக்கும் இதுமுதல் எனாது, ஆள்வுற மதித்து
யான் பிழைத்தது அல்லால், என்னை ஈன்ற எம்பிராட்டி
தான்பிழைத்தது உண்டோ? ‘என்றான்; அவன் சலம் தவிர்ந்தான் 6.37.130

எவ் வரங்களும் கடந்தவன் அப்பொருள் இசைப்ப,
‘தவெ்வரம்பு அறு கானிடைச் செலுத்தினாட்கு ஈந்த
அவ் வரங்களும் இரண்டு; அவை ஆற்றினாற்கு ஈந்த
இவ் வரங்களும் இரண்டு ‘என்றார், தேவரும் இரங்கி. 6.37.131

வரமிண்டையும் அளித்த தயரதன் விமானத்திலேறித் துறக்கத்தை யடைதல்

வரம் இரண்டும் அளித்து, அழகனை, இளவலை, மலர்மேல்
விரவு பொன்னினை, மண்ணிடை நிறுத்தி, விண்ணிடையே
உரவு மானம்மீது ஏகினன் உம்பரும் உலகும்
பரவும் மெய்யினுக்கு உயிரளித்து, உறுபுகழ் படைத்தோன். 6.37.132

தேவர்கள் இராமனை நோக்கி ‘வீர நீ வேண்டும் வரம் கேள் ‘என ‘போரில் மாண்ட குரங்குகள் உயிர் பெற்றெழுமாறும் குரங்குகள் செல்லும் வனம் முதலிய இடங்களிற் காய் கனிகள் மிகுமாறும் அருள்புரிக ‘என இராமன் வேண்டுதல்

கோட்டு வார்சிலைக் குரிசிலை அமரர்தம் குழாங்கள்
மீட்டும் நோக்குறா, ‘வீர! நீ வேண்டுவ வரங்கள்
கேட்டியால் ‘என, ‘அரக்கர்கள் கிளர்பெருஞ் செருவில்
வீட்ட, மாண்டுள குரங்கு எலாம் எழுக! ‘என விளம்பி, 6.37.133

பின்னும் ஓர் வரம், ‘வானரப் பெருங்கடல் பெயர்ந்து
மன்னு பல் வனம், மால்வரைக் குலங்கள், மற்று இன்ன
துன் இடங்கள், காய் கனி கிழங்கோடு தேன் துற்ற,
இன் உண் நீர் உளவாக! என விளம்பிடுக ‘என்றான். 6.37.134

தேவர்கள் அருளிய வரத்தால், போரில் மாண்ட குரங்குகள் யாவும் உயிர் பெற்றெழுந்து இராமனை வணங்குதல்

வரம் தரும் முதல் மழுவலான், முனிவரர், வானோர்,
புரந்தர் ஆதி, மற்று ஏனையோர், தனித்தனி புகழ்ந்து ஆங்கு
‘அரந்தை வெம்பிறப்பு அறுக்கும் நாயக! நினது அருளால்
குரங்கு இனம் பெறுக! ‘என்றனர், உள்ளமும் குளிர்ப்பார். 6.37.135

முந்தைநாள் முதல் கடைமுறை அளவையும் முடிந்த
அந்த வானரம் அடங்கலும் எழுந்து, உடன் ஆர்த்து,
சிந்தையோடு கண்களிப்புற, செரு எலாம் நினையா,
வந்து தாமரைக் கண்ணனை வணங்கின, மகிழ்ந்து 6.37.136

கும்ப கன்னனோடு இந்திரசித்து, வெங்குலப் போர்
வெம்பு வெஞ்சினத்து இராவணன் முதலிய வீரர்
அம்பின் மாண்டுள வானரம் அங்கு வந்து ஆர்ப்ப,
உம்பர் யாவரும் இராமனைப் பார்த்து, இவை உரைத்தார். 6.37.137

பரினான்கு ஆண்டுகள் முடிந்தன; நீ பரதனிடம் இன்று சென்று சேர்க ‘என்று தேவர்கள் இராமனுக்கு உணர்த்தி நீங்குதல்

‘இடை உவாவினில் சுவேலம் வந்து இறுத்து, எயில் இலங்கைப்
புடை அவாவுறச் சேனையை வளைப்பு உறப் போக்கி,
படை அவாவுறும் அரக்கர்தம் குலம் முற்றும் படுத்து,
கடை உவாவினில் இராவணன் தன்னையும் கட்டு, 6.37.138

'வஞ்ச இல்லை இவ் அண்டத்தின் “ எனும்படி மடித்த
கஞ்ச நாள்மலர்க் கையினாய்! அன்னைசொல் கடவாது
அஞ்சொடு அஞ்சு நான்கு என்று எணும் ஆண்டு போய் முடிந்த
பஞ்சமிப் பெயர் படைத்துள திதி இன்று பயந்த. 6.37.139

‘இன்று சென்று, நீ பரதனை எய்தலை என்னின்,
பொன்றுமால் அவன் எரியிடை; அன்னது போக்க,
வென்றிவீர! நீ போதியால் ‘ என்பது விளம்பா,
நின்ற தேவர்கள் நீங்கினார்; இராகவன் நினைந்தான். 6.37.140

இன்றே யான் பரதனைச் சென்றடைதற்குரிய விமானம் உண்டோ? என இராமன் வினவ, ‘உண்டு ‘எனக் கூறி வீடணன் வணங்குதல்
‘ஆண்டு பத்தொடு நாலும் இன்றோடு அறும் ஆயின்
மாண்டதாம் இனி என்குலம், பரதனே மாயின்;
ஈண்டு போக ஓர் ஊர்தி உண்டோ? ‘ என, ‘இன்றே
தூண்டு மானம் உண்டு ‘என்று, அடல் வீடணன் தொழுதான். 6.37.141

வீடணன், புட்பக விமானத்தின் தன்மையைக் கூறி ‘இவ்விமானத்திற் செல்வாய் ‘என, இராமன் அவ்விமானத்தைக் கொணருமாறு பணித்தல்.
‘வாங்கினான் இருநிதியொடு தனதனில், வள்ளால்!
ஓங்குமால், வெள்ளம் எழுபஃது ஏறினும் ஒல்காது;
ஈங்கு உளார் எலாம் இவருவது; இவரின் நீ இனிது
பூங்குலா நகர் புகுதி இஞ்ஞான்று ‘ எனப் புகன்றான். 6.37.142

‘இயக்கர் வேந்தனுக்கு அருமறைக் கிழவன் அன்று ஈந்த,
துயக்கு இலாதவர் மனமெனத் தூயது, சுரர்கள்
வியக்க வான்செலும் புட்பக விமானமுண்டு ‘என்றே
மயக்கு இலான் சொல, ‘கொணருதி வல்லையின் ‘என்றான். 6.37.143

வீடணன் புட்பகவிமானத்தை விரைந்து கொணர்தல்

அண்ட கோடிகள் அனந்தம் ஒத்து, ஆயிரம் அருக்கர்
விண்டது ஆம் என விசும்பிடைத் திசை எலாம் விளங்க,
கண்டை ஆயிர கோடிகள் ஒலிப்புறக் கஞலக்
கொண்டு அணைந்தனன் நொடியினில், அரக்கர்தம் கோமான். 6.37.144

புட்கவிமானம் வரத், தேவர்கள் பூமழை சொரிதல்

அனைய புட்பகவிமானம் வந்து அவனியை அணுக,
இனிய சிந்தனை இராகவன் உவகையோடு, ‘இனிநம்
வினையம் முற்றியது ‘என்று கொண்டு ஏறினன்; விண்ணோர்
புனைமலர் சொரிந்து ஆர்த்தனர், ஆசிகள் புகன்றே. 6.37.145

புட்பகத்தில் இராமனுடன் சீதையும் இலக்குவனும் அமர்தல்

வணங்கு நுண்ணிடைத் திரிசடை வணங்க, வான் கற்பிற்கு
இணங்கர் இன்மையாள் நோக்கி, ‘ஓர் இடர் இன்றி இலங்கைக்கு
அணங்கு தான் என இருத்தி ‘என்று, ஐயன்மாடு அணைந்தாள்;
மணம்கொள் வேல் இளங் கோள் அரி மானம் மீப்படர்ந்தான். 6.37.146

விமானத்தில் அமர்ந்த இராமன் வீடணன் சுக்கிரீவன் முதலியோரை நோக்கிக் கூறுதல்

அண்டம் உண்டவன் மணி அணி உதரம் ஒத்து, அனிலன்,
சண்ட வேகமும் குறைதர, நினைவு எனுந் தகைத்தாய்,
விண்தலம் திகழ் விமானம் ஆம் புட்பகம் இதன்மேல்
கொண்ட கொண்டல், தன் துணைவரைப் பார்த்து, இவை குணித்தான் 6.37.147

வீடணன் தனை அன்புற நோக்குறா, விமலன்,
‘தோடு அணைந்த தார் மவுலியாய்! சொல்வது ஒன்று உளது உன்
மாடு அணைந்தவர்க்கு இன்பமே வழங்கி, நீள் அரசின்,
நாடு அணைந்தவர் புகழ்ந்திட, வீற்றிரு நலத்தால். 6.37.148

'நீதி ஆறு எனத் தரெிவுறு நிலைமைபெற்று உடையாய்!
ஆதி நான்மறைக் கிழவன் நின் குலம் என அமைந்தாய்!
ஏதிலார் தொழும் இலங்கைமா நகரினுள் இனி நீ
போதியால் ‘எனப் புகன்றனன் நான்மறை புகன்றான். 6.37.149

'சுக்கிரீவ! நின் தோளுடை வன்மையால் தசம்தொகு
அக்கிரீவனைத் தடிந்து; வெம் படையினால் அசைத்த
மிக்க வானரச்சேனையின் இளைப்பு அற, மீண்டு, ஊர்ப்
புக்கு வாழ்க ‘எனப் புகன்றனன் ஈறு இலாப் புகழோன். 6.37.150

வாலி சேயினை, சாம்பனை, பனசனை, வயப் போர்
நீலன் ஆதியாம் நெடும் படைத் தலைவரை, நெடிய
காலின் வேலையைத் தாவி மீண்டருளிய கருணை
போலும் வீரனை, நோக்கி, மற்று இம்மொழி புகன்றான். 6.37.151

ஐயன் இம் மொழி புகன்றிட, துணுக்கமோடு அவர்கள்,
மெய்யும் ஆவியும் குலைதர, விழிகள் நீர் ததும்ப,
செய்ய தாமரைத் தாளிணை முடி உறச் சேர்த்தி,
‘உய்கிலோம், உனை நீங்கின் ‘என்று இனையன உரைத்தார். 6.37.152

‘பார மா மதில் அயோத்தியின் எய்தி, நின் பைம்பொன்
ஆரமா முடிக் கோலமும் செவ்வியும் அழகும்,
சோர்வு இலாது, யாம் காண்குறும் அளவையும் தொடர்ந்து
பேரவே அருள் ‘என்றனர் உள் அன்பு பிணிப்பார். 6.37.153

இராமன் அதற்கு இசைய, யாவரும் மகிழ்தல்

அன்பினால் அவர் மொழிந்த வாசகங்களும், அவர்கள்
துன்பம் எய்திய நடுக்கமும் நோக்கி, ‘நீர் துளங்கல்;
முன்பு நான் நினைந்து இருந்தது அப்பரிசு; நும்முயற்சி
பின்பு காணுமாறு உரைத்தது ‘என்று உரைத்தனன் - பெரியோன். 6.37.154

ஐயன் வாசகம் கேட்டலும் அரிகுலத்து அரசும்,
மொய் கொள் சேனையும், இலங்கையர் வேந்தனும் முதலோர்,
வையம் ஆளுடை நாயகன் மலர்ச்சரண் வணங்கி,
மெய்யினோடு அருந் துறக்கம் உற்றார் என வியந்தார். 6.37.155

சுக்கிரீவன் முதலிய எல்லோரையும் விமானத்தில் ஏறுமாறு இராமன் கூற, யாவரும் புட்பகத்தில் ஏறுதல்

அனையது ஆகிய சேனையோடு அரசனை, அனிலன்
தனயன் ஆதியாம் படைப்பெருந் தலைவர்கள் தம்மை,
வனையும் வார் கழல் இலங்கையர் மன்னனை, ‘வந்து இங்கு
இனிதின் ஏறுமின், விமானம் ‘என்று இராகவன் இசைத்தான் 6.37.156

சொன்ன வாசகம் பிற்பட, சூரியன் மகனும்,
மன்னு வீரரும், எழுபது வெள்ள வானரரும்,
கன்னி மாமதில் இலங்கை மன்னொடு கடற்படையும்,
துன்னினார், நெடும் புட்பக மிசை ஒருசூழல் 6.37.157

பத்து நாலென அடுக்கிய உலகங்கள் பலவின்
மெத்து யோனிகள் ஏறினும் வெளியிடம் மிகுமால்;
முத்தர் ஆனவர் இதன்நிலை மொழிகுவது அல்லால்,
இத் தராதலத்து இயம்புதற்கு உரியவர் யாரே? 6.37.158

புட்பக விமானத்தில் இராமன் விளங்கிய காட்சி

எழுபது வெள்ளத் தோரும், இரவி கான் முளையும், எண்ணின்
வழு இலா இலங்கை வேந்தும், வான் பெரும் படையும் சூழ,
தழுவுசீர் இளைய கோவும், சனகன்மா மயிலும் போற்ற,
விழுமிய குணத்து வீரன் விளங்கினன், விமானத்து உம்பர 6.37.159

அண்டமே போன்றது ஐயன் புட்பகம்; அண்டத்து உம்பர்
எண்தரும் குணங்கள் இன்றி, முதல் இடை ஈறு இன்று ஆகி,
பண்டை நான்மறைக்கும் எட்டாப் பரஞ்சுடர் பொலிவதே போல்,
புண்டரீகக் கண்வென்றிப் புரவலன் பொலிந்தான் மன்னோ 6.37.160

இராமன் கட்டளையினால் யாவரும் மனித வடிவங்கொள்ளுதல்
தேனுடை அலங்கல் மோலிச் செங்கதிர்ச் செல்வன் சேயும்,
மீனுடை அகழி வேலை இலங்கையர் வேந்தும், வெற்றித்
தானையும், பிறரும், மற்றைப் படைப்பெருந் தலைவர்தாமும்
மானுட வடிவங் கொண்டார், வள்ளல்தன் வாய்மைதன்னால். 6.37.161

விமானம் வடதிசை நோக்கிச் செல்கையில் இராமன் வழியிலுள்ள காட்சிகளைச் சீதைக்குக் காட்டிச் சொல்லுதல்

குடதிசை மறைந்து, பின்னர்க் குணதிசை உதயம் செய்வான்,
வடதிசை அயனம் முன்னி வருவதே கடுப்ப, மானம்,
தடை ஒருசிறிது இன்றாகித் தாவி வான்படரும் வேலை,
படை அமை விழியாட்கு, ஐயன் இவை இவை பகரல் உற்றான் 6.37.162

இலங்கையை வலஞ் செய்து ஏக என நினைந்திடுமுன், மானம்
வலம் கிளர் கீழைவாயில் வர, ‘பிரகத்தன், நீலன்
நலம் கிளர் கையின் மாண்டது இவண் ‘என, நமன்தன் வாயில்
கலந்திட, ‘ஈங்குக் கண்டாய் சுபாரிசற் கட்டது ‘என்றான். 6.37.163

‘குடதிசை வாயில், வேகக் குன்று அரிந்தவனை வென்ற
விடம்நிகர் மேகநாதன் இளவலால் வீழ்ந்தது; என்முன்
வடதிசை வாயில்மேல் அவ் இராவணன் மவுலி பத்தும்
உடலமும் இழந்தது இங்கு ‘என்று உணர்த்தி, வேறு உரைக்கல் உற்றான் 6.37.164

சேதுவைக் காட்டி அதன் சிறப்பினை எடுத்துரைத்தல்

நன்னுதல் நின்னை நீங்கி நாள் பல கழிந்த பின்றை,
மன்னவன் இரவி மைந்தன் வான் துணை ஆக நட்ட
பின்னை, மாருதி வந்து உன்னைப் பேது அறுத்து, உனது பெற்றி
சொன்னபின், வானரேசர் தொகுத்தது இச்சேது கண்டாய். 6.37.165

மற்று இதன் தூய்மை எண்ணின் மலரயன் தனக்கும் எட்டா;
பொன் தொடித் தரெிவை! யான் என் புகலுகேன்? கேட்டி அன்பால்;
பெற்ற தாய் தந்தையோடு தேசிகன் பிழைத்துச் சூழ்ந்த
சுற்றமும் கெடுத்துேளாரும் எதிர்தரின், சுரர்கள் ஆவார். 6.37.166

‘இந்திரற்கு அஞ்சி, மேல்நாள், இருங்கடல் புக்கு, நீங்காக்
கந்தர சயிலம், தன்னைக் கண்டவர் வினைகள் தீர்க்கும்
கந்தமாதனம் என்று ஓதும் கிரி இவண் கிடப்ப கண்டாய்;
பைந்தொடி! அடைத்த சேது பாவனம் ஆயது ‘என்றான். 6.37.167

கங்கையோடு, யமுனை, கோதாவிரியொடு களிந்தை சூழ்ந்த
பொங்குநீர் நதிகள் யாவும், படிந்து அலால், புன்மை போகா;
சங்கு எறி தரங்க வேலை தட்ட இச் சேது என்னும்
இங்கு இதின் எதிர்ந்தோர் புன்மை யாவையும் நீங்கும் அன்றே. 6.37.168

ஆவினைக் குரவரோடும் அரு மறை முனிவர் தம்மைப்
பாவையர் குழுவை இன் சொல் பாலரைப் பயந்து தம்மின்
மேவின அவரைச் செற்றோர், விரிகடல் சேது வந்து
தோய்வரேல், அவர்கள் கண்டாய் சுரர் தொழும் சுரர்கள் ஆவார். 6.37.169

மரக்கலம் இயங்க வேண்டி வரி சிலைக் குதையால் கீறித்
தருக்கிய இடத்து, பஞ்ச பாதகரேனுஞ் சாரின்,
பெருக்கிய ஏழு மூன்று பிறவியும் பிணிகள் நீங்கி
நெருக்கிய அமரர்க்கு எல்லாம் நீள் நிதி ஆவர் அன்றே. 6.37.170

'நெற்றியின் அழலும் செங்கண் நீறு அணி கடவுள் நீடு
கற்றை அம் சடையின் மேவும் கங்கையும், “சேது ஆகப்
பெற்றிலம் ‘‘ என்று கொண்டு பெருந் தவம் புரிகின்றாளால்;
மற்று இதன்தூய்மை எவ்வாறு உரைப்பது? மலர்க்கண் வந்தாய்! ‘ 6.37.171

வருணன் சரணமடைந்த இடத்தை இராமன் சீதைக்குக் காட்டுதல்

தவெ் அடு சிலைக் கை வீரன் சேதுவின் பெருமை யாவும்
வெவ் விடம் பொருது நீண்டு மிளிர்தரும் கருங் கண் செவ்வாய்,
நொவ் இடை, மயில் அனாட்கு நுவன்று, பின் வருணன் நோனாது,
இவ் இடை வந்து கண்டாய், “சரண் “ என இயம்பிற்று என்றான். 6.37.172

பொதியமலை, திருமாலிருஞ்சோலை, திருவேங்கடமலை முதலியவற்றைச் சீதைக்குக் காட்டுதல்

‘இது, தமிழ் முனிவன் வைகும் இயல்தரு குன்றம்; முன்நாறு
உது, வளர் மணிமால் ஓங்கல், உப்புறத்து உயர்ந்து தோன்றும்
அது, திகழ் அனந்தவெற்பு ‘என்று அருள்தர, ‘அனுமன் தோன்றிற்று
எது? ‘என, அணங்கை நோக்கி, இற்று என இராமன் சொன்னான். 6.37.173

சுக்கிரீவனது நகரைக் காட்டுதல்

‘வாலி என்று அளவு இல் ஆற்றல் வன்மையான், மகரநீர் சூழ்
வேலியைக் கடக்க வாவும் விறல் உடையவனை வீட்டி,
நூல் இயல் தரும நீதி நுனித்து அறங்குணித்த மேலோர்
போல் இயல் தபனன் மைந்தன் உறைதரு புரம் ஈது ‘என்றான். 6.37.174

வானரமகளிரையும் உடனழைத்துச் செல்லவேண்டும் எனச் சீதை கூறுதல்

‘கிட்கிந்தை இதுவேல், ஐய! கேட்டியால் : எனது பெண்மை
மட்கும்தான், ஆய வெள்ள மகளிர் இன்று ஆகி, வானோர்
உட்கும் போர்ச் சேனை சூழ ஒருத்தியே அயோத்தி எய்தின்;
கள் கொந்து ஆர் குழலினாரை ஏற்றுதல் கடன்மைத்து ‘என்றாள். 6.37.175

வானரமகளிரைக் கொணரும்படி இராமன் பணிக்கச் சுக்கிரீவன் சொற்படி அனுமன் அவர்களைக் கொணர்தல்

அம்மொழி இரவு மைந்தற்கு அண்ணல்தான் உரைப்ப, அன்னான்
மெய்ம்மை சேர் அனுமன் தன்னை நோக்கி, ‘நீ விரைவின், வீர!
மைம்மலி குழலினாரை மரபினாற் கொணர்தி ‘என்ன,
செம்மை சேர் உள்ளத்து அண்ணல், கொணர்ந்தனன், சென்று மன்னோ. 6.37.176

வானரமகளிர் சுக்கிரீவனையும் இராமனையும் சீதையையும் வணங்குதல்

வரிசையின் வழாமை நோக்கி, மாருதி, மாதர் வெள்ளம்
கரை செயல் அரிய வண்ணம் கொணர்ந்தனன், கணத்தின் முன்னம்;
விரை செறி குழலினார், தம் வேந்தனை வணங்கி, பெண்மைக்கு
அரசியை ஐயனோடும் அடி இணை தொழுது நின்றார். 6.37.177

விமானம் மீண்டும் எழுந்து செல்லுதல்

மங்கலம் முதலாய் உள்ள மரபினின் கலன்கள் யாவும்
அங்கு அவர் கொணர்ந்து, பெண்மைக்கு அரசியைத் தொழுதுசூழ,
நங்கையும் உவந்து, ‘வேறு ஓர் நவை இலை இனி மற்று என்றாள்;
பொங்கிய விமானம் தானும் மனமென எழுந்து போன. 6.37.178

கோதாவரியையும் சீதையைப் பிரிந்த இடத்தையும் இராமன் சீதைக்குக் காட்டுதல்

போதா விசும்பில் திகழ் புட்பகம் போதலோடும்,
சூது ஆர் முலைத்தோகையை நோக்கி, ‘முன் தோன்று சூழல்
கோதாவிரி; மற்று அதன் மாடு உயர் குன்று நின்னைப்
பேதாய்! பிரிவித்து உயர் பீழை பிணித்தது ‘என்றான். 6.37.179

தண்டகவனம், சித்திரகூடபருவதம், பரத்துவாசர் ஆச்சிரமம் ஆகியவற்றைச் சீதைக்குக் காட்டுதல்

'சிரத்து வாச வண்டு அலம்பிடு தரெிவை! கேள் : இதுநீள்
தரத்து உவாசவர், வேள்வியர் தண்டகம்; அது தான்
வரத்து வாசவன் வணங்குறு சித்திர கூடம்;
பரத்துவாசனது உறைவிடம் இது ‘எனப் பகர்ந்தான். 6.37.180

பரத்துவாச முனிவர் இராமனை எதிர்கொள்ளுதல்

மின்னை நோக்கி, அவ் வீரன் ஈது இயம்பிடும் வேலை
தன்னை நேர் இலா முனிவரன் உணர்ந்து, தன் அகத்தின்,
‘என்னை ஆளுடை நாயகன் எய்தினன் ‘என்னா,
துன்னு மாதவர் சூழ்தர, எதிர் கொள்வான், தொடர்ந்தான் 6.37.181

இராமன் பரத்துவாச முனிவரைக் காணுதல்

ஆதபத்திரம், குண்டிகை, ஒரு கையின் அணைத்து,
போதம் முற்றிய தண்டு ஒரு கையினில் பொலிய,
மா தவப்பயன் உருவு கொண்டு எதிர் வருமாபோல்,
நீதி வித்தகன் நடந்தமை நோக்கினன், நெடியோன். 6.37.182

பரத்துவாசர் ஆச்சிரமத்தில் புட்பக விமானம் இறங்குமாறு இராமன் நினைதல்

எண்பக, தினை அளவையும் கருணையோடு இசைந்த
நட்பு அகத்து இலா அரக்கரை நருக்கி, மா மேரு
விட்பு அகத்து உறை கோள் அரி எனப் பொலி வீரன்
புட்பகத்தினை வதிகென நினைந்தனன், புவியில். 6.37.183

இராமன் விரைந்து எதிர்சென்று பரத்துவாச முனிவரை வணங்குதல்

உன்னும் மாத்திரத்து, உலகினை எடுத்து உம்பர் ஓங்கும்
பொன்னின் நாடு வந்து இழிந்தனெப் புட்பகம் தாழ,
என்னை ஆளுடை நாயகன், வல்லையின் எதிர் போய்,
பன்னு மாமறைத் தபோதனன் தாள்மிசைப் பணிந்தான். 6.37.184

பரத்துவாச முனிவர் நல்வாழ்த்துடன் இராமனைத்தழுவி உவகைக்கண்ணீர் சொரிதல்

அடியின் வீழ்தலும், எடுத்து நல் ஆசியோடு அணைத்து
முடியை மோயினன் நின்றுழி, முளரி அம் கண்ணன்
சடில நீள் துகள் ஒழிதர, தனது கண் அருவி
நெடிய காதல் அம் கலசம் அது ஆட்டினன், நெடியோன் 6.37.185

சீதையும் இலக்குவனும் முனிவரை வணங்க, அவர் பரிவால் உளம் மகிழ்தல்

கருகும் வார்குழல் சனகியோடு இளவல் கைதொழுதே,
அருகு சார்தர, அருந்தவன் ஆசிகள் வழங்கி,
உருகு காதலின் ஒழுகு கண்ணீரினன், உவகை
பருகும் ஆர் அமிழ்து ஒத்து, உளம் களித்தனன், பரிவால். 6.37.186

வானரேசனும், வீடணக் குரிசிலும், மற்றை
ஏனை வீரரும், தொழும்தொறும் ஆசிகள் இயம்பி,
ஞான நாதனைத் திருவொடு நன்மனை கொணர்ந்தான்,
ஆன மாதவர் குழாத்தொடும் அருமறை புகன்றே. 6.37.187

பரத்து வாசமுனிவர் இராமனை அருச்சித்து அன்போடு உபசரித்து அவனது சிறப்பினை எடுத்துரைத்தல்

பன்ன சாலையுள் புகுந்து, நீடு அருச்சனை பலவும்
சொன்ன நீதியின் புரிந்து, பின் சூரியன் புதல்வன்
தன்னை நோக்கினன், பல் முறை கண்கள் நீர் ததும்ப,
பின் ஓர் வாசகம் உரைத்தனன், தபோதரின் பெரியோன். 6.37.188

‘முனிவர் வானவர் மூவுலகத்து உேளார் யாரும்
துனி உழந்திடத் துயர்தரு கொடுமனத் தொழிலோர்
நனி மடிந்திட, அலகைகள் நாடகம் நடிப்ப,
குனியும் வார் சிலைக் குரிசிலே! என், இனிக் குணிப்பாம்? 6.37.189

'விராதனும், கரனும், மானும், விறல் கெழு கவந்தன் தானும்,
மராமரம் ஏழும், வாலி மார்பமும், மகர நீரும்,
இராவணன் உரமும், கும்பகருணனது ஏற்றம் தானும்,
அராவு அரும் பகழி ஒன்றால் அழித்து, உலகு அளித்தாய் ஐய! ‘ 6.37.190

இன்று எம் விருந்தாக இங்குத்தங்குக ‘எனப்பரத்துவாச முனிவர் இராமனை வேண்டுதல்

‘சித்திர கூடம் தீர்ந்து, தனெ்திசைத் தீமை தீர்த்திட்டு
இத்திசை அடைந்து எம் இல்லின் இறுத்தமை இறுதி ஆக
வித்தக! மறந்திலேன் யான் விருந்தினை ஆகி, எம்மோடு
இத்தினம் இருத்தி ‘என்றான் மறைகலின் இறுதி கண்டான். 6.37.191

பரதன் இயல்பினை இப்பொழுதே சொல்கின்றேன் ‘என முனிவர் இராமனிடம் பரதன் தன்மையை எடுத்துரைத்தல்

'கரதலம் அதனின் நீடு கார்முகம் வளைய வாங்கி,
சரத வானவர்கள் துன்பம் தணித்து உலகங்கள் தாங்கும்
மரகத மேனிச் செங்கண் வள்ளலே! வழுவா நீதிப்
பரதனது இயல்பும் இன்றே பணிக்குவன் கேட்டி ‘என்றான். 6.37.192

வியர்த்த மேனியன், விழிபொழி மழையன், மூவினையைச்
செயிர்த்த சிந்தையன், தரெுமரல் உழந்து உழந்து அழிவான்,
அயர்த்து நோக்கினும் தனெ்திசை அன்றி வேறு அறியான்,
பயத்த துன்பமே உருவு கொண்டு என்னல் ஆம் படியான். 6.37.193

'இந்தியம் களைந்து, இருங் கனி காய் நுகர்ந்து, இவுளிப்
பந்தி வந்த புல் பாயலான், பழம் பதி புகாது,
நந்தியம் பதி இருந்தனன், பரதன், நின் நாமம்
அந்தியும் பகல் அதனினும் மறப்பு இலன் ஆகி 6.37.194

பரத்துவாச முனிவர் இராமனைப் பாராட்டிக்கூற, இராமன் முனிவரைப் போற்றுதல்

என்று உரைத்து, ‘அரக்கர் வேந்தன் இருபது என்று உரைக்கும் நீலக்
குன்று உரைத்தனைய தோளும், குலவரைக் குவடும் ஏய்க்கும்
என்று உரைத்தனைய மௌலித் தலை பத்தும் இறுத்த வீர!
நின்தனைப் பிரிந்தது உண்டே யான்? ‘என நிகழ்தினனால். 6.37.195

பரத்துவாசர் இராமனை நோக்கி ‘நீ விரும்பிய வரத்தைத் தருவேன் ‘எனக்கூற, இராமன் வானரங்கள் சென்ற விடமெல்லாம் வளம்பெற்று வாழும் வரத்தினை வேண்டிப்பெறுதல்

‘மின்னை ஏய் உழையினானும் விரை மலர்த் தவிசினானும்
நின்னையே புகழ்தற்கு ஒத்த நீதி மாதவத்தின் மிக்கோய்!
உன்னையே வணங்கி உன்தன் அருள் சுமந்து உயர்ந்தேன்; மற்று இங்கு
என்னையே பொருவும் மைந்தர் யான் அலாது இல்லை ‘என்றான். 6.37.196

அவ் உரை புகலக் கேட்ட அறிவனும், அருளின் நோக்கி,
‘வெவ் அரம் பொருத வேலோய்! விளம்புகேன் கேட்டி வேண்டிற்று
எவ் வரம் எனினும் தந்தேன் இயம்புதி ‘எனலும், ஐயன்,
‘கவ்வை இன்று ஆகி வென்றி கவிக்குலம் பெற்று வாழ்க ‘. 6.37.197

‘அரி இனம் சென்ற சென்ற அடவிகள் அனைத்தும், வானம்
சொரிதரு பருவம் போன்று, கிழங்கொடு கனிகாய் துன்றி,
விரிபுனல் செழுந்தேன் மிக்கு விளங்க என விளம்புக ‘என்றான்;
புரியும் மாதவனும், ‘அஃதே ஆக ‘எனப் புகன்றிட்டானால். 6.37.198

பரத்துவாச முனிவர், அங்கு வந்தோர் அனைவர்க்கும் விருந்தளித்தல்

அருந்தவன், ‘ஐய! நின்னொடு அனிக வெஞ் சேனைக்கு எல்லாம்
விருந்து இனிது அமைப்பென் ‘என்னா, விளங்கும் முத் தீயின் நாப்பண்
புரிந்து ஒர் ஆகுதியை ஈந்து புறப்படும் அளவில், போகம்
திருந்திய வான நாடு சேர வந்து இறுத்தது அன்றே. 6.37.199

அப்பொழுது இராமன் அனுமனை நோக்கி ஒன்று கூறத் தொடங்குதல்

அரைசரே ஆதி ஆக, அடியவர் அந்தம் ஆக,
கரை செயல் அரிய போகம் துய்க்குமா கண்டு, இராமற்கு
அரைசியல் வழாமை நோக்கி அறுசுவை அமைக்கும் வேலை,
விரை செறி கமலக் கண்ணன், அனுமனை விளித்துச் சொன்னான். 6.37.200

‘இன்று நாம்பதி ஏகுமுன் மாருதி! ஈண்டச்
சென்று தீது இன்மை செப்பி, அத் தீமையும் விலக்கி
நின்ற காலையின் வருதும் ‘என்று ஏயினன், நெடியோன்;
‘நன்று ‘எனா, அவன் மோதிரம் கைக்கொடு நடந்தான். 6.37.201

அனுமன் விரைந்து வான்வழிச் செல்லுதல்

தந்தை வேகமும், தனது நாயகன் தனிச்சிலையின்
முந்து சாயகக் கடுமையும், பிற்பட முடுகி,
சிந்தை பின்வரச் செல்பவன், குகற்கும் அச்சேயோன்
வந்த வாசகம் கூறி, மேல் வான்வழிப் போனான். 6.37.202

கவிக்கூற்று

இன்று இசைக்கு இடமாய இராகவன்
தனெ் திசைக் கருமச் செயல் செப்பினாம்;
அன்று இசைக்கும் அரிய அயோத்தியில்
நின்று இசைத்துள தன்மை நிகழ்த்துவாம். 6.37.203

நந்தியம்பதியில் பரதன் (10300-10304)

நந்தியம் பதியின் தலை நாள் தொறும்
சந்தி இன்றி நிரந்தரம் தம் முனார்
பந்தி அம் கழல் பாதம் அருச்சியா
இந்தியங்களை வென்றிருந்தான் அரோ. 6.37.204

துன்பு உருக்கவும் சுற்றி உருக்கொணா
என்பு உருக்கும் தகைமையின் ஈட்டத்தான்
முன்பு உருக்கொண்டு ஒருவழி முற்றுறா
அன்பு உருக்கொண்டது ஆம் எனல் ஆகுவான். 6.37.205

நினைக்கவும் தடங்கண் இணை நீர்வர
இனத்த தண்டலை நாட்டிருந்தேயும் அக்
கனத்த கந்தமும் காயும் கனிகளும்
வனத்த அல்ல அருந்தலில் வாழ்க்கையான். 6.37.206

நோக்கின் தனெ்திசை அல்லது நோக்குறான்;
ஏக்குற்று ஏக்குற்று, ‘இரவி குலத்து உளான்
வாக்கில் பொய்யான்; வரும், வரும் ‘என்று உயிர்
போக்கிப் போக்கி, உழக்கும் பொருமலான்; 6.37.207

உண்ணும் நீர்க்கும் உயிர்க்கும் உயிரவன்,
எண்ணும் கீர்த்தி இராமன், திருமுடி
மண்ணும் நீர்க்கு வரம்பு கண்டால் அன்றி
கண்ணின் நீர்க்கு ஒர் கரை எங்கும் காண்கிலான். 6.37.208

பரதன் இராமன் வருநாளை நினைத்தல்

அனையன் ஆய பரதன் அலங்கலின்
புனையும் தம்முனார் பாதுகைப் பூசனை
நினையும் காலை நினைத்தனன் ஆம் அரோ
மனையின் வந்து அவன் எய்த மதித்தநாள். 6.37.209

இராமன் வரவேண்டிய நாள் இன்றுதான் என்று சோதிடர் பரதனுக்குக் கூறுதல்

யாண்டு வந்து இங்கு இறுக்கும் என்று எண்ணினான்,
‘மாண்ட சோதிட வாய்மைப் புலவரை
ஈண்டுக் கூய்த்தரு கென்ன, வந்து எய்தினார்,
‘ஆண்தகைக்கு இன்று அவதி ‘என்றார் அரோ. 6.37.210

குறித்த நாளில் இராமன் வாராமைக்கு வருந்திச் சிந்தித்தல் (10307-10311)
என்ற போதத்து இராமன் வனத்திடைச்
சென்ற போதத்தது அவ் உரை செல்வத்தை
வென்ற போதத்த வீரனும் வீழ்ந்தனன்
கொன்ற போதத்து உயிர்ப்புக் குறைந்துளான். 6.37.211

மீட்டு எழுந்து விரிந்த செந்தாமரைக்
காட்டை வென்று எழுகண் கலுழிப்புனல்
ஓட்ட உள்ளம் உயிரினை ஊசல் நின்று
ஆட்டவும் அவலத்து அழிந்தான் அரோ. 6.37.212

‘எனக்கு இயம்பிய நாளும் என் இன்னலும்
தனைப் பயந்தவள் துன்பமும் தாங்கி அவ்
வனத்து வைகல் செய்யான்; வந்து அடுத்தது ஓர்
வினைக் கொடும்பகை உண்டு ‘என விம்மினான். 6.37.213

மூவகைத் திருமூர்த்தியர் ஆயினும்
பூவகத்தில் விசும்பில் புறத்தினில்
ஏவர் கிற்பர் எதிர்நிற்க என்னுடைச்
சேவகற்கு? என ஐயமும் தேறினான். 6.37.214

‘என்னை “இன்னும் அரசியல் இச்சையன்
அன்னன் ஆகின் அவன் அது கொள்க “ என்று
உன்னினான்கொல் உறுவது நோக்கினான்?
இன்னதே நலன் ‘என்று இருந்தான் அரோ. 6.37.215

பரதன் உயிர்துறக்க எண்ணுதல்.

‘அனைத்தும் அங்கு ஒன்றும் ஆயினும் ஆகுக;
வனத்து இருக்க : இவ் வையம் புகுதுக
நினைத்திருந்து நெடுந்துயர் மூழ்கிலேன்;
மனத்து மாசு என் உயிரோடும் வாங்குவேன். 6.37.216

சத்துருக்கனை அழைத்தல்

என்னப் பன்னி ‘இளவலை என் உழைத்
துன்னச் சொல்லுதிர் ‘என்னலும் தூதர்போய்
‘உன்னைக் கூயினன் உம்முன் ‘எனா முனம்
முன்னர்ச் சென்றனன் மூவர்க்கும் பின் உளான். 6.37.217

வந்து சத்துருக்கனிடம் பரதன் வரம் வேண்டுதல்

தொழுது நின்ற தன் தம்பியைத் தோய்கணீர்
எழுது மார்பகத்து இறுகத் தழுவினான்
அழுது, ‘வேண்டுவது உண்டு ஐய! அவ் வரம்,
பழுது இல் வாய்மையினாய்! தரற்பாற்று ‘என்றான். 6.37.218

“‘என்னது ஆகும்கொல் அவ் வரம்? ” என்றியேல்
சொன்ன நாளில் இராகவன் தோன்றிலன்;
மின்னு தீயிடை யான் இனி வீடுவென்;
மன்னன் ஆதி; என் சொல்லை மறாது ‘என்றான். 6.37.219

கேட்ட சத்துருக்கன் வருந்திச் சொல்லுதல் (10316-10319)

கேட்ட தோன்றல் கிளர்தடக் கைகளால்
தோட்ட தன் செவி பொத்தி துணுக்குறா
ஊட்டு நஞ்சம் உண்டான் ஒத்து உயங்கினான்;
நாட்டமும் மனமும் நடுங்கா நின்றான். 6.37.220

விழுந்து, மேக்கு உயர் விம்மலன், வெய்து உயிர்த்து,
எழுந்து, ‘நான் உனக்கு என்ன பிழைத்துளேன்?
அழுந்து துன்பத்தினாய்! ‘ என்று அரற்றினான்
கொழுந்து விட்டு நிமிர்கின்ற கோபத்தான். 6.37.221

கானாள நிலமகளைக் கைவிட்டுப் போனானைக்
காத்துப் பின்பு
போனானும் ஒருதம்பி; “போனவன்தான் வரும்
அவதி போயிற்று “ என்னா
ஆனாத எரிபுக என்று அமைவானும் ஒருதம்பி;
அயலே நாணாது,
யான் ஆம் இவ் அரசு ஆள்வென்? என்னே, இவ்
அரசாட்சி! இனிதே அம்மா 6.37.222

“‘மன்னின்பின் வளநகரம் புக்கிருந்து
வாழ்ந்தானே, பரதன் என்னும்
சொல்நிற்கும் ‘‘ என்று அஞ்சி, புறத்து இருந்தும்
அருந்தவமே தொடங்கினாயே!
“என்னின்பின் இவன் உளனாம் “ என்றே பின்
அடிமையுனக்கு இருந்த தேனும்
உன்னின்பின் இருந்ததுவும் ஒருகுடைக்கீழ்
இருந்ததுவும் ஒக்கும் என்றான். 6.37.223

பரதன் சத்துருக்கனுக்கு அமைதி கூறி எரிவளர்க்கக் கட்டளையிடுதல்

முத்து உருக் கொண்டு அமைந்தனைய முழுவெள்ளிக்
கொழுநிறத்து, முளரிச் செங்கண்,
சத்துருக்கன் அஃது உரைப்ப, அவன் இங்குத் தாழ்க்கின்ற
தன்மை, யான் இங்கு
ஒத்திருக்கலால் அன்றே? உலந்ததன் பின் இவ்வுலகை
உலைய ஒட்டான்;
அத்திருக்கும் கெடும்; உடனே புகுந்து ஆளும் அரசு;
எரிபோய் அமைக்க ‘என்றான் 6.37.224

இச்செய்தி யறிந்து கோசலை பரதனை விலக்க விரைந்து வருதல்

அப்பொழுதின் இவ் உரை சென்று, அயோத்தியினில்
இசைத்தலுமே, அரியை ஈன்ற
ஒப்பு எழுத ஒண்ணாத கற்புடையாள், வயிறு புடைத்து,
அலமந்து ஏங்கி
‘இப்பொழுதே உலகு இறக்கும், யாக்கையினை முடித்து
ஒழிந்தால், மகனே! ‘என்னா,
வெப்பு எழுதினால் அன்ன மெலிவுடையாள் கடிது ஓடி,
விலக்க வந்தாள். 6.37.225

கோசலை பரதனை அடைதல்

மந்திரியர், தந்திரியர், வளநகரத்தவர்,
மறையோர், மற்றும் சுற்றச்
சுந்தரியர் எனைப்பலரும் கைதலையில் பெய்து
இரங்கித் தொடர்ந்து செல்ல,
இந்திரனே முதலாய இமையவரும் முனிவரரும்
இறைஞ்சி ஏத்த,
அந்தர மங்கையர் வணங்க, அழுது அரற்றி, பரதனை
வந்து அடைந்தார் அன்றே. 6.37.226

எரிபுகும் பரதனைக் கோசலை பற்றிக் கொள்ளுதல்

விரி அமைத்த நெடு வேணி புறத்து அசைந்து
வீழ்ந்து அசைய மேனி தள்ள,
எரியமைக்கும் மயானத்தை எய்துகின்ற காதலனை
இடையே வந்து,
சொரிவு அமைப்பது அரிது ஆய மழைக் கண்ணாள்
தொடருதலும், துணுக்கம் எய்தா,
பரிவு அமைந்த திருமனத்தான் அடிதொழுதான்; அவள்புகுந்து
பற்றிக் கொண்டாள். 6.37.227

'‘மன் இழைத்ததும் மைந்தன் இழைத்ததும்
முன் இழைத்த விதியின் முயற்சியால்;
பின் இழைத்ததும் எண்ணில் அப் பெற்றியால்;
என் இழைத்தனை என்மகனே? ‘என்றாள். 6.37.228

‘நீ இது எண்ணினையேல் நெடு நாடு எரி
பாயும்; மன் அருஞ் சேனையும் பாயுமால்;
தாயர் எம் அளவு அன்று; தனி அறம்
தீயின் விழும்; உலகும் திரியுமால். 6.37.229

‘தரும நீதியின் தன் பயன் ஆவது உன்
கருமமே அன்றிக் கண்டிலம் கண்களால்;
அருமை ஒன்றும் உணர்ந்திலை; ஐய! நின்
பெருமை ஊழி திரியினும் பேருமோ? 6.37.230

‘எண் இல் கோடி இராமர்கள் என்னினும்
அண்ணல் நின் அருளுக்கு அருகு ஆவரோ?
புண்ணியம் எனும் நின் உயிர் போயினால்
மண்ணும் வானும் உயிர்களும் வாழுமோ? 6.37.231

'இன்று வந்திலனே எனின், நாளையே
ஒன்றும் வந்து, உனை; உன்னி, உரைத்த சொல்
பின்றும் என்று உணரேல்; பிழைத்தான் எனின்,
பொன்றும் தன்மை புகுந்தது போய் ‘என்றாள். 6.37.232

‘ஒருவன் மாண்டனன் என்று கொண்டு ஊழிவாழ்
பெருநிலத்துப் பெறல் அரும் இன் உயிர்க்
கருவும் மாண்டு அறக் காணுதியோ? கலைத்
தருமம் நீ அலது இல் எனும் தன்மையாய்! 6.37.233

“‘இறக்கையும் சிலர் ஏகலும் மோகத்தால்
பிறக்கையும் கடன் “ என்று பின் பாசத்தை
மறக்கை காண் மகனே! வலி ஆவதும்
துறக்கை தானும் என்றாள் மனம் தூய்மையாள். 6.37.234

கோசலையின் சொல்லைப் பரதன் மறுத்துரைத்தல் (10331-10333)

“‘மைந்தன் என்னை மறுத்து உரைத்தான் ” எனல்;
எந்தை மெய்ம்மையும் இக்குலச் செம்மையும்
நைந்து போக உயிர்நிலை நச்சிலேன்;
முந்து செய்த சபதம் முடிப்பன் ஆல். 6.37.235

‘யானும் மெய்யினுக்கு இன் உயிர் ஈந்துபோய்
வானுள் எய்திய மன்னவன் மைந்தனால்;
கானுள் எய்திய காகுத்தற்கே கடன்?
ஏனையோர்க்கு இது இழுக்கு இல் வழக்கு அன்றோ? 6.37.236

தாய் சொல் கேட்டலும், தந்தைசொல் கேட்டலும்,
பாசத்து அன்பினைப் பற்று அற நீக்கலும்,
ஈசற்கே கடன்; யான் அஃது இழைக்கிலேன்;
மாசு அற்றேன் இது, காட்டுவென், மாண்டு என்றான். 6.37.237

பரதன் தீயினை நெருங்கி அதற்குப் பூசனை புரியும்போது அனுமன் வந்து தடுத்தல்

என்று தீயினை எய்தி இரைத்து எழுந்து
ஒன்று பூசலிடும் உலகோர் உடன்
நின்று பூசனை செய்கின்ற நேசற்கு
குன்று போல் நெடு மாருதி கூடினான். 6.37.238

அய்யன் வந்தனன்; ஆரியன் வந்தனன்;
மெய்யின் மெய் அன்ன நின் உயிர் வீடினால்
உய்யுமே அவன்? என்று உரைத்து உள்புகா
கய்யினால் எரியைக் கரி ஆக்கினான். 6.37.239

அனுமன் பரதனுக்குக் கூறுவது (10336-10338)

ஆக்கி மற்று அவன் ஆய்மலர்த் தாள்களைத்
தாக்கத் தன்தலை தாழ்த்து வணங்கி கை
வாக்கின் கூடப் புதைத்து ‘ஒருமாற்றம் நீ
தூக்கிக் கொள்ளத் தகும் ‘எனச் சொல்லினான். 6.37.240

‘இன்னம் நாழிகை எண் ஐந்து உளது ஐய!
உன்னை முன்னம் வந்து எய்த உரைத்த நாள்;
இன்னது இல்லை எனின் அடி நாயினேன்
முன்னம் வீழ்ந்து இவ் எரியில் முடிவெனால். 6.37.241

ஒன்றுதான் உளது; உன் அடியேன் சொலால்
நின்று தாழ்த்து அருள் நேமிச் சுடர் குணக்
குன்று தோன்றளவும்; இது குன்று மேல்
பொன்று நீ இவ் அனலினில் பொய்யிலாய். 6.37.242

பரத்துவாசர் ஆசிரமத்தில் தங்கநேர்ந்தமை கூறுதல்

‘எங்கள் நாயகற்கு இன் அமுது ஈகுவான்
பங்கயத்துப் பரத்துவன் வேண்டலால்
அங்கு வைகினன் அல்லது தாழ்க்குமோ?
இங்கண் நல்லது ஒன்று இன்னமும் கேட்டியால். 6.37.243

அனுமன் அடையாள மோதிரத்தைக் காட்டுதல்

‘அண்டர் நாதன் அருளின் அளித்துளது
உண்டு ஒர் பேர் அடையாளம்; உனக்கு அது
கொண்டு வந்தனென்; கோதறு சிந்தையாய்!
கண்டு கொண்டு அருள்வாய் ‘எனக் காட்டினான். 6.37.244

மோதிரம் வாங்கிய பரதன் மகிழ்ச்சி (10343-10348)

காட்டிய மோதிரம் கண்ணில் காண்டலும்
ஊட்டிய வல்விடம் உற்று முற்றுவார்க்கு
ஊட்டிய நல் மருந்து ஒத்ததாம் அரோ
ஈட்டிய உலகுக்கும் இளைய வேந்தற்கும். 6.37.245

அழுகின்ற வாய் எலாம் ஆர்த்து எழுந்தன
விழுகின்ற கண் எலாம் வெள்ளம் மாறின;
உழுகின்ற தலை எலாம் உயர்ந்து எழுந்தன;
தொழுகின்ற கை எலாம் காலின் தோன்றலை. 6.37.246

மோதிரம் வாங்கிய பரதன் மகிழ்ச்சி (10343-10348)

மோதிரம் வாங்கி தன்முகத்தின்மேல் அணைத்து
‘ஆதரம் பெறுவதற்கு ஆக்கையோ? ‘எனா
ஓதினர் நாண் உற ஓங்கினான் தொழும்
தூதனை முறை முறை தொழுது துள்ளுவான். 6.37.247

ஆதி வெந்துயர் அல்லால் அருந்தல் இன்மையால்
ஊதுறப் பறப்பதாய் உலர்ந்த யாக்கை போய்
‘ஏதிலன் ஒருவன்கொல் ‘என்னல் ஆயது;
மாதிரம் வளர்ந்தன வயிரத் தோள்களே. 6.37.248

அழும்; நகும்; அனுமனை ஆழிக் கைகளால்
தொழும்; எழும்; துள்ளும்; வெங் களி துளக்கலால்,
விழும் அழிந்து; ஏங்கும்; போய் வீங்கும்; வேர்க்கும்; அக்
குழுவொடும் குனிக்கும்; தன் தடக்கை கொட்டுமால். 6.37.249

‘ஆடுமின் ஆடுமின்! ‘என்னும்; ‘ஐயன்பால்
ஓடுமின் ஓடுமின்! ‘என்னும்; ‘ஓங்கு இசை
பாடுமின் பாடுமின்! ‘என்னும்; பாவிகாள்!
‘சூடுமின் சூடுமின் தூதன் தாள்! ‘எனும். 6.37.250

‘வஞ்சனை இயற்றிய மாயக் கைகையார்
துஞ்சுவர் இனி ‘எனத் தோளைக் கொட்டுமால்;
குஞ்சித அடிகள் மண்டலங்கள் கூடுற
அஞ்சனக் குன்றின் நின்று ஆடும் பாடுமால். 6.37.251

வேதியர்தமைத் தொழும்; வேந்தரைத் தொழும்;
தாதியர் தமைத் தொழும்; தன்னைத் தான் தொழும்;
ஏதும் ஒன்று உணர்குறாது இருக்கும்; நிற்குமால்;
காதல் என்றதுவும் ஓர் கள்ளில் தோற்றிற்றே. 6.37.252

பரதன் அனுமனைப் பாராட்டி ‘‘நீயார்? ‘என வினவுதல(10349- 10350)

அத்திறத்து ஆண்தகை அனுமன் தன்னை ‘நீ
எத்திறத்தாய்? எமக்கு இயம்பி ஈதியால்!
முத் திறத்தவருளே ஒருவன் மூர்த்தியை
ஒத்திருந்தாய் என உணர்கின்றேன் ‘என்றான். 6.37.253

மறையவர் வடிவு கொண்டு அணுக வந்தனை;
இறைவரில் ஒருவன் என்று எண்ணுகின்றனென்;
“துறை எனக்கு யாது எனச் சொல்லு, சொல்! “ என்றான்;
அறை கழல் அனுமனும் அறியக் கூறுவான். 6.37.254

அனுமன் தன் வரலாற்றைக் கூறுதல்(10351-10352)

காற்றினுக்கு அரசன்பால் கவிக் குலத்தினுள்
நோற்றுளாள் வயிற்றின் வந்து உதித்து, நும்முனாற்கு
ஏற்றிலா அடித்தொழில் ஏவலாள் ஆனேன்;
மாற்றினென் உரு, ஒரு குரங்கு, மன்ன! யான். 6.37.255

அனுமன் தன் பெருவடிவைக் காட்டுதல்

‘அடித்தொழில் நாயினேன் அருப்ப யாக்கையைக்
கடித்தடந் தாமரைக் கண்ணின் நோக்கு ‘எனா
பிடித்த பொய் உருவினைப் பெயர்த்து நீக்கினான்
முடித்தலம் வானவர் நோக்கின் முந்துவான். 6.37.256

அனுமனது பெருவடிவு கண்டோர் அதிசயமும் அச்சமும் அடைதல்

வெஞ்சிலை இருவரும் விரிஞ்சன் மைந்தனும்
‘எஞ்சல் இல் அதிசயம் இது’என்று எண்ணினார்;
துஞ்சிலது ஆயினும் சேனை துண்ணென
அஞ்சினது அஞ்சனை சிறுவன் ஆக்கையால். 6.37.257

பரதன் அனுமனது பெருவடிவைச் சுருக்கிக் கொள்ள வேண்டுதல்

‘ஈங்கு நின்று யாம் உனக்கு இசைத்த மாற்றம் அத்
தூங்கு இருங் குண்டலச் செவியின் சூழ்வர
ஓங்கல ஆதலின் உலப்பு இல் யாக்கையை
வாங்குதி விரைந்து ‘என மன்னன் வேண்டினான். 6.37.258

அனுமனுக்குப் பரதன் பரிசு கொடுத்தல்(10355-10356)

சுருக்கிய உருவனாத் தொழுது முன் நின்ற
அருக்கன் மாணாக்கனுக்கு ஐயன் அன்பினால்
பொருக்கென நிதியமும் புனை பொன் பூண்களின்
வருக்கமும் வரம்பு இல நனி வழங்கினான். 6.37.259

கோவொடு தூசு நல் குல மணிக்குலம்
மாவொடு கரிக்குலம் வாவு தேர் இனம்
தாவு நீர் உடுத்த நல் தரணி தன்னுடன்
ஏவரும் சிலை வலான் யாவும் நல்கினான். 6.37.260

இராமனை எதிர்கொள்ள நகர மக்களைப் புறப்படச் செய்யுமாறு பரதன் சத்துருக்கனிடம் சொல்லுதல்

இளவலை, “‘அண்ணலுக்கு எதிர் கொள்க “ என்று, நம்
வளைமதில் அயோத்தியில் வாழும் மக்களை,
“கிளையொடும் ஏகு “ எனக் கிளத்தி, எங்கணும்
அளை ஒலி முரசு இனம் அறைவிப்பாய் ‘என்றான். 6.37.261

நகரை அணிசெய்கென மக்களுக்குச் செப்புமாறு சத்துருக்கனுக்குப் பரதன் கூறுதல் (10358-10359)

“‘தோரணம் நட்டு மேல்துகில் பொதிந்து நல்
பூரணப் பொற்குடம் பொலிய வைத்து நீள்
வாரணம் இவுளி தேர் வரிசைதான் வழாச்
சீரணி அணிக! “ எனச் செப்புவாய் ‘என்றான். 6.37.262

‘பரத்துவன் உறைவிடத்து அளவும், பைம்பொன் நீள்
சிரத்தொகை மதில் புறத்து இறுதி சேர்தர,
வரத்தகு தரள மென் பந்தர் வைத்து, வான்
புரத்தையும் புதுக்குமா புகறி, போய் ‘என்றான் 6.37.263

சத்துருக்கன் பரதனது கட்டளையைச் சுமந்திரனுக்கு அறிவித்தல்

என்றலும் அவனடி இறைஞ்சி ஏகி, அக்
குன்று உறழ் வரிசிலைக் குவவுத் தோளினான்,
நன்று உணர் கேள்வியன், நவை இல் செய்கையன்,
தன்துணைச் சுமந்திரற்கு அறியச் சாற்றினான். 6.37.264

சுமந்திரன் வள்ளுவர்க்குக் கட்டளையிடுதல்

அவ்வுரை கேட்டலும் அறிவின் வேலையான்
கவ்வை இல் அன்பினில் களிக்கும் சிந்தையான்
‘வெவ் வெயில் புரைமணி வீதி எங்கணும்
எவ்வம் இன்று அறை பறை எற்றுக ‘என்றிட. 6.37.265

வள்ளுவன் முரசறைதல்

‘வானையும் திசையையும் கடந்த வான்புகழ்க்
கோனை இன்று எதிர்கொள்வான் கோல மாநகர்த்
தானையும் அரசரும் எழுகதான் ‘என
யானையில் வள்ளுவர் முரசம் எற்றினார். 6.37.266

முரசொலி கேட்ட நகர மக்கள் ஆரவாரித்துக் கொண்டு புறப்படுதல்

முரைசொலி கேட்டலும் முழங்கு மாநகர்
அரைசரும் மாந்தரும் அந்தணாளரும்
கரைசெயல் அரியதோர் உவகை கைதர
திரை செறி கடல் என எழுந்து சென்றதால். 6.37.267

அம்முரசொலியின் சிறப்பு

‘அனகனை எதிர்கொள்க ‘என்று, அறைந்த பேரி, நல்
கனகம் நல்கூர்ந்தவர் கைப்பட்டென்னவும்,
சனகனது ஊர்க்கு என முன்னம் சாற்றிய
வனைகடிப் பேரியும், ஒத்த ஆம் அரோ. 6.37.268

அறுபதினாயிரம் அக்குரோணி சேனையும் நகரமாந்தரும் இராமனை வரவேற்க மகிழ்ச்சியோடு போதல்

அறுபதினாயிரம் அக்குரோணி என்று
இறுதி செய் சேனையும் ஏனை வேந்தரும்
செறிநகர் மாந்தரும் தரெிவை மார்களும்
உறுபொருள் எதிர்ந்தனெ உவந்து போயினார். 6.37.269

தாயர் மூவரும் சிவிகையிற் செல்லப் பரதன் அனுமனது கையைப் பற்றிச் செல்லுதல்

அன்னையர் மூவரும் அமரர் போற்றிட
பொன் இயல் சிவிகையின் எழுந்து போய பின்
தன் நிகர் முனிவனும் தமருஞ் சூழ்தர
மன்னவன் மாருதி மலர்க்கை பற்றுறா. 6.37.270

பரதன் இராமனது பாதுகைகளையே மகுடமாகச் சூடிக்கொண்டு செல்லுதல்

திருவடி இரண்டுமே செம்பொன் மௌலியா
இருபுறம் சாமரை இரட்ட ஏழ்கடல்
வெருவரும் முழக்கு என வேதம் ஆர்த்து எழ
பொரு அரு வெண்குடை நிழற்றப் போயினான். 6.37.271

சூரியன் மறைதல்

எல்லவன் மறைந்தனன் என்னை ஆளுடை
வில்லியை எதிர்கொள பரதன் மீச்செல்வான்
அல்லி அம் கமலமே அனைய தாள்களில்
கல் அதர் சுடும் தன கதிரின் என்னவே. 6.37.272

இராமன் காட்டில் தங்கிச் செய்த செயல்களைப் பற்றிக் கூறுமாறு அனுமனைப் பரதன் வேண்டுதல்

அவ்வழி மாருதி அம்கை பற்றிய
செவ்வழி உள்ளத்தான் ‘திருவின் நாயகன்
செவ்வழி உறைந்த அச்செயல் எலாம் விரித்து
இவ்வழி எமக்கு நீ இயம்புவாய் ‘என்றான். 6.37.273

அனுமன் இராமனது செயல்களைச் சொல்லுதல் (10370-10397)

என்றலும் மாருதி தொழுது ‘இங்கு எம்பிரான்
மன்றல் அம் தொடையினாய்! அயோத்தி மாநகர்
நின்றதும் மணவினை நிரப்பி மீண்டு கான்
சென்றதும் நாயினேன் செப்பல் வேண்டுமோ? 6.37.274

சித்திர கூடத்தைத் தீர்ந்த பின் சிரம்
பத்துடையவனுடன் விளைத்த பண்பெலாம்
இத்தலை அடைந்ததே இறுதியாம் என
வித்தகத் தூதனும் விரிக்குஞ் சிந்தையான். 6.37.275

விராதன் வதை

‘குன்று உறழ் வரிசிலைக் குரிசில் எம்பிரான்
தனெ்றிசைச் சித்திர கூடம் தீர்ந்தபின்
வன்திறல் விராதனை மடித்து மாதவர்
துன்றிய தண்டக வனத்துள் துன்னினான். 6.37.276

தண்டக வனத்துத் தங்குதல்

‘ஆங்கு உறை தபோதனர், “அரக்கர்க்கு ஆற்றலேம்,
நீங்கினம் தவத்துறை, நீதியோய்! ‘‘ என,
தீங்கு செய்தவர்களைச் செகுத்தல் திண்ணம்; நீர்
வாங்குமின் மனத்துயர், வாய்மையால் ‘என்றான். 6.37.277

அகத்திய முனிவர் வரவேற்பு

‘ஆறு நால் ஆண்டு அவண் வைகி அப்புறத்து
ஈறு இலா முனிவரர் ஏய ஆணையால்
மாறு இலாத் தமிழ்முனி வனத்தை நண்ணினான்
ஊறு இலா முனிவரன் உவந்து முன் வர. 6.37.278

அகத்தியன் வில் முதலியன கொடுத்தல்

குடங்கையில் வாரிதி அனைத்தும் கொண்டவன்
தடம் கணான்தனை எதிர் தழுவி சாபமும்
கடுங்கணைப் புட்டிலும் கவசம் தானும் மற்று
இடம்படு சுரிகையும் சேர ஈந்தனன். 6.37.279

சடாயுவைக் கண்டு பஞ்சவடி யடைதல்

அப்புறத்து எருவையின் அரசைக் கண்ணுறா
துப்பு உறச் சிவந்த வாய்த் தோகை தன்னுடன்
மெய்ப்புகழ்த் தம்பியும் வீரன் தானும் போய்
மைப் பொழில் துறு பஞ்சவடியின் வைகினார். 6.37.280

சூர்ப்பணகை மூக்கறுபடல்

.பல்பகல் இறந்த பின்றை, பாதக அரக்கி தோன்றி,
மெல்கிய இடையினாளை வெகுண்டுழி, இளைய வீரன்
அல்கிய திருவைத் தேற்றி, அவளுடைச் செவியும் மூக்கும்
மல்கிய முலையும் கொய்தான்; மறித்து, அவள் கரற்குச் சொன்னாள். 6.37.281

கரதூடணர் வதை

‘கரனொடு திரிசிராவும், கடிய தூடணனும், காந்தி
எரியும் மூன்று அனலே ஒப்பார், எழுந்து, வெஞ்சேனையோடும்
விரவினர்; ஐயன் செங்கை வில்லினை நோக்கு முன்பு ஓர்
எரிதவழ் பஞ்சின் உக்கார்; அரக்கியும் இலங்கை புக்காள். 6.37.282

இராவணன் சீதையைக் கவர்தல்

‘இருபது தடக்கையான்மாட்டு இசைத்தலும் எழுந்து, பொங்கி,
ஒருபது திசையும் உட்க, வஞ்சக உழை ஒன்று ஏவி,
தருபதம் சமைந்த முக்கோல் தாபத வடிவங் கொண்டு
திருவினை நிலத்தொடு ஏந்தி, தனெ்திசை இலங்கை புக்கான 6.37.283

இறக்கும் நிலையிலுள்ள சடாயுவை இராமன் காண்டல்

போகின்ற காலை, ஏற்ற சடாயுவைப் பொருது வீட்டி,
வேகின்ற உள்ளத்தாளை வெஞ்சிறை அதனில் வைத்தான்;
ஏகின்ற வஞ்ச மான் மாரீசன் கொன்று, இளவலோடு
பாகின்ற சீர்த்தி அண்ணல் தந்தையைப் பரிவின் கண்டான். 6.37.284

கவந்தனை வதைத்துச் சவரிபூசனையைக் கொள்ளுதல்

‘அன்னவன் தனக்கு வேண்டும் அருங்கடன் முறையின் ஆற்றி,
நன்னுதல் தன்னைத் தேடித் தனெ்திசை நடக்கும் ஐயன்,
மன்னிய கவந்தன் தன்னை உயிரொடு சாபம் மாற்றி,
தன்னையே மறப்பிலாத சவரி பூசனையும் கொண்டான். 6.37.285

வாலிவதை

ஆங்கு அவள்தனது சொல்லால், அருக்கன்மா மகனை அண்மிப்
பாங்குற நட்டு, “வாலி பருவரல் கெடுப்பேன் “ என்னா,
ஓங்கிய மரமும் வாலி உரமும் ஊடுருவ எய்திட்டு,
ஆங்கு அவன் தனக்குச் செல்வம் அரசொடும் அருளின் ஈந்தான். 6.37.286

மாரிக்காலத்திற்குப் பின் சுக்கிரீவன் சேனையோடு இராமனை அடைதல்

‘கால மா மாரி நீங்க, கவயனோடு இடபன், காந்து
நீலன், மாமயிந்தன், சாம்பன், சதவலி, பனசன், நீடு
வாலி மாமைந்தன், என்றிவ் வானரத் தலைவரோடு
கூல வான் சேனை சூழ அடைந்தனன் எங்கள் கோமான். 6.37.287

சுக்கிரீவன் வானர சேனைக்குக் கட்டளையிடுதல்

‘எழுபது வெள்ளத்து உற்ற குரங்கினம் எழுந்து பொங்கி,
அழுவநீர் வேலை என்ன அடைந்துழி, அருக்கன் மைந்தன்
தழுவிய திசைகள் தோறும் தனித்தனி இரண்டு வெள்ளம்
பொழுது இறை தடாது மீளப் போக்கினன் திருவை நாடி. 6.37.286

சீதையைக்கண்டு சொன்னதும் வானரப்படை தனெ்கடற் கரையில்வந்து தங்குதல்

தனெ்திசை இரண்டு வெள்ளம் சேனையும் வாலி சேயும்
வன்திறல் சாம்பனோடு வாவினர் ஏவ, நாயேன்
குன்றிடை இலங்கை புக்குத் திருவினைக் குறித்து மீண்ட
பின்றை வந்து, அளக்கர் வேலைப் பெரும்படை இறுத்தது அன்றே 6.37.289

‘அறிவினுக்கு அறிவு போல்வான் வீடணன், அலங்கல் தோளான்,
செறிபுயத்து அரக்கன் தம்பி, “திருவினை விடுதி; அன்றேல்,
இறுதி உற்றன நின் வாழ்நாள் ‘‘ என்றுநின்று உரைப்பச் சீறிக்
கறுவுற, பெயர்ந்து போந்து, கருணையான் சரணம் பூண்டான். 6.37.290

வருணன் அடைக்கலம்

'ஆங்கு அவற்கு அவயம் நல்கி, அரசொடு முடியும் ஈந்து,
பாங்கினால் வருணன் தன்னை அழைத்திட, பரிவு இலாமை
தாங்கினன் சிறிது போது, தாமரை நயனம் சேப்ப,
ஓங்குநீர் ஏழும் அன்னான் உடலமும் வெந்த அன்றே. 6.37.291

சேது கட்டி இலங்கை புகுதல்

‘மற்று அவன் அவயம் என்ன மலர்ச்சரண் அடைந்த வேலை
வெற்றி வானரர்கள் பொங்கி, வெற்பினால் வேலை தட்டல்
முற்றுற நன்கு இயற்றி, மொய் ஒளி இலங்கை புக்கு,
பற்றினர் சுற்றி ஆர்த்தார், வானவர் பயங்கள் தீர்ந்தார். 6.37.292

இராவண வதம்

‘மலையினை எடுத்த தோளும், மதமலை திளைத்த மார்பும்,
தலை ஒருபத்தும் சிந்தி, தம்பிதன் தோளும் தாளும்
கொலைத் தொழில் அரக்கராயோர் குலத்தொடும் தலத்து வீழ
சிலையினை வளைவித்து, ஐயன் தேவர்கள் இடுக்கண் தீர்த்தான். 6.37.293

இந்திரசித்து வதை

'இலக்குவன் பகழி ஒன்றால் இந்திரசித்து என்று ஓதும்
விலக்கரு வலத்தினானும் இளைஞரும் கிளையும் வீழ்ந்தார்
அலக்கண் உண்டு உழலும் தேவர் அலர்மழை தூவி ஆர்த்து, அன்று
உலக்குநர் குழுக்கள் தோறும் உடற்குறை ஆடல் கண்டார். 6.37.294

மாண்ட அரக்கர்க்கு வீடணனை இறுதிக்கடன் செய்யச் செய்தல்

‘தேவரும் முனிவர் தாமும், சித்தரும் தரெிவை மாரும்
மூவகை உலகு உேளாரும், முறைமுறை தொழுது மொய்ப்ப,
பூவைபோல் நிறத்தினானும், வீடணப் புலவர் கோமாற்கு
யாவையும் இயம்பி, “மாண்டோர்க்கு இயற்றுதி கடன்கள் “ என்றான். 6.37.295

இராமன் சீதையைச் சினந்துபின் தணிதல்

‘நான்முகன், விடையை ஊரும் நாரி ஓர் பாகத்து அண்ணல்
மான்முகன் முதலாய் உள்ள வானவர் தொழுது போற்ற
ஊன்முகம் கெழுவு வேலாய்! உம்பர் நாயகியைச் சீறித்
தேன்முகம் மலரும் தாரான் அரிசொலச் சீற்றம் தீர்ந்தான். 6.37.296

தயரதன் வருகையும் வரமருளுதலும்

‘மெய்யினுக்கு உயிரை ஈந்த வேந்தர்கோன் விமானத்து எய்த,
அய்யனும் இளைய கோவும் அன்னமும் அடியில் வீழ,
கய்யினால் பொருந்தப் புல்லி, கண்ணின் நீர்க்கலசம் ஆட்டி,
“செய்வரம் அருளுக “ என்றான்; திருவின் நாயகனும் கொண்டான். 6.37.297

வரங்கொடுத்துத் தயரதனும் அமரரும் செல்லுதல்

“என்னை, ‘நன் கருணை தன்னால் ஈன்று எடுத்து, இனிது பேணும்
அன்னையும் மகனும் முன்போல் ஆக ‘‘ என அருளின் ஈந்து,
மன்னவன் போய பின்றை, வானரம் வரழ்வு கூர,
பொன்நெடு நாட்டில் உள்ளார் வரம்பல வழங்கிப் போனார். 6.37.298

வீடணன் விமானம் ஈதல்

‘வெள்ளம் ஓர் ஏழுபத்தும், விலக்கரும் வீரர் ஆகி
உள்ளவர் அறுபத்து ஏழு கோடியும், ஒற்றை ஆழி
வள்ளல்தன் மகனும், உள்ளம் மகிழ்வுற விமானம் ஈந்தான்
எள்ளல் இல்லாத கீர்த்தி வீடணன் இலங்கை வேந்தன். 6.37.299

இராமன் துணைவரோடு விமானத்தில் ஏறிப் பரத்துவன் ஆசிரமத்தையடைதல்

'ஆரியன் பின்னை நின்னை அன்பினால் நினைந்து, காதல்
சூரியன் மகனும் தொல்லைத் துணைவரும் இலங்கை வேந்தும்,
பேரியல் படையும் சூழ, பெண்ணினுக்கு அரசியோடும்
சீரிய விமானத்து ஏறிப் பரத்துவன் இருக்கை சேர்ந்தான 6.37.300

அனுமன் தன்னை ஆழிகொடுத்து இராமன் அனுப்பியதைக் கூறியது

‘அன்பினால் என்னை, நின்பால் ஆழியும் காட்டி “ஆன்ற
துன்பு எலாம் துடைத்தி ‘‘ என்று துரந்தனன், தோன்றல் ‘என்று,
முன்பினால் இயன்ற எல்லாம் மொழிந்தனன் முதுநீர் தாவி
வன்பினால் இலங்கை முற்றும் எரிக்கு உணவாக வைத்தோன். 6.37.301

பரதன் தன்னிலை நினைந்து இரங்குதல்

காலின்மா மதலை சொல்ல, பரதனும் கண்ணீர் சோர,
வேலி மா மதில்கள் சூழும் இலங்கையில் வேட்ட கொண்ட
நீல மா முகில்பின் போனான் ஒருவன்; நான் நின்று நைவேன்
போலுமால்; இவைகள் கேட்பேன்; புகழுடைத்து, அடிமை மன்னோ. 6.37.302

பரதன் அனுமனது கைபற்றிக்கொண்டு கங்கையைக் சார்தல்

என்று அவன் இரங்கி ஏங்கி, இருகணும் அருவி சோர
வன்திறல் அனுமன் செங்கை வலக்கையால் பற்றி, காலின்
சென்றனன் இருளின் ஊடு, செறிபுனல் கங்கை சேர்ந்தான்
குன்றினை வலஞ்செய் தேரான் குணகடல் தோன்றும் முன்னர். 6.37.303

சூரியன் உதித்தல்

இராவணன் வேட்டம்போய் மீண்டு, எம்பிரான், அயோத்தி எய்தி
தராதல மகளும் பூவின் தையலும் மகிழச் சூடும்
அராவுபொன் மௌலிக்கு ஏய்ந்த சிகாமணி குணபால் அண்ணல்
விராவுற எடுத்தால் என்ன வெய்யவன் உதயம் செய்தான். 6.37.304

இராமன் வருகையில் ஐயங்கொண்டு பரதன் அனுமனை வினவுதல் (10401-10403)

காலைவந்து இறுத்த பின்னர்க் கடன்முறை கமலக் கண்ணன்
கோலநீள் கழல்கள் ஏத்தி, குரக்கினத்து அரசை நோக்கி
சாலவும் கலைகள் வல்லோய்! தவறு உண்டு போலும், வாய்மை;
மூலமே உணரின், உன்தன் மொழிக்கு எதிர்மொழியும் உண்டோ? 6.37.305

‘எழுபது வெள்ளம் சேனை வானரர் இலங்கை வேந்தன்
முழுமுதல் சேனை வெள்ளம், கணக்கு இல மொய்த்த என்றால்,
அழுவநீர் வேலை அன்ன அரவம் இன்று ஆக வற்றோ?
விழுமிது, “எம்பிரான் வந்தான் “ என்று உரைத்தது, வீர! என்றான். 6.37.306

‘ஓசனை இரண்டே உள்ள, பரத்துவன் உறையுஞ் சோலை;
வீசுதணெ் திரையிற்று ஆய வெள்ளமோர் ஏழு பத்தும்
மூசிய பழுவம் இங்ஙன் கிடப்பதோ, முரற்றல் இன்றி?
பேசியது அமையும்; நம்கோன் எங்குளன், பெரும! ‘என்றான். 6.37.307

அனுமான் கூறிய விடை (10404-10405)

பரதன் அஃது உரைத்தலோடும் பணிந்து மாருதியும் சீர்சால்
விரத மாதவத்து மிக்கோய்! விண்ணுேளார் தம்மை வேண்டி
வரதன் ஆண்டு அளித்த அந்த வரத்தினால், மலரும் தேனும்
சரதமே மாந்தி மாந்தித் துயின்றது தானை என்றான் 6.37.308

‘வானவர் கொடுக்க வந்த வரத்தினால், மதுபம் மூசும்
தேனொடு கிழங்கும் காயும் கனிகளும் பிறவும் சீர்த்துக்
கானகம் பொலிதலாலே, கவிக்குலம் அவற்றை மாந்தி
ஆனனம் மலர்ந்தது இல்லை யாகும் : நீ துயரல், எந்தாய்! 6.37.309

‘இனி ஒரு கணத்தின், எம்கோன் எழுந்தருள் தன்மை ஈண்டுப்
பனிவரும் கண்ணின் நீயே பார்த்தி ‘என்று உரைத்தான்; இப்பால்,
முனிதனது இடத்து வந்த முளரி அம் கண்ணன், வண்ணக்
குனிசிலைக் குருசில், செய்தது இற்று எனக் குணிக்கல் உற்றாம். 6.37.310

குகன் வருதல்

அருந்தவன் சுவைகள் ஆறோடு அமுது இனிது அளிப்ப, ஐயன்
கருந்தடங் கண்ணியோடும் களைகணாம் துணைவரோடும்,
விருந்து இனிது அருந்தி நின்ற வேலையின், வேலை போலும்
பெருந்தடந் தானையோடும், கிராதர்கோன் பெயர்ந்து வந்தான். 6.37.311

இராமன் குகனைத் தழுவிக்கொள்ளுதல்

தொழுதனன்; மனமுங் கண்ணும் துளங்கினன்; சூழ ஓடி
அழுதனன்; கமலம் அன்ன அடித்தலம் அதனின் வீழ்ந்தான்;
தழுவினன் எடுத்து, மார்பில் தம்பியைத் தழுவுமாபோல்;
‘வழுவிலர், வலியர் அன்றோ, மக்களும் மனையும்? ‘என்றான். 6.37.312

குகன் கூறும் விடை

'அருள் உனது உளது, நாயேற்கு; அவரெலாம் அரிய ஆய
பொருளலர்; நின்னை நீங்காப் புணர்ப்பினால் தொடர்ந்து போந்து
தரெுள்தரும் இளைய வீரன் செய்வன செய்கலாதேன்;
மருள்தரும் மனத்தினேனுக்கு இனிது அன்றோ, வாழ்வு மன்னோ? ‘ 6.37.313

குகன் இலக்குவனையும் சீதையையும் வணங்குதல்

ஆயன பிறவும் பன்னி அழுங்குவான் தன்னை, ‘ஐய!
நீ இவை உரைப்பது என்னோ; பரதனின் நீ வேறு உண்டோ?
போய், இனிது இருத்தி ‘என்ன, புளிஞர்கோன் இளவல் பொன்தாள்
மேயினன் வணங்கி, அன்னை விரைமலர்த் தாளின் வீழ்ந்தான் 6.37.314

குகனை மற்றவர்கட்கு இராமன் அறிமுகப்படுத்தல்

தொழுது நின்றவனை நோக்கி, துணைவர்கள் தமையும் நோக்கி,
முழுது உணர் கேள்வி மேலோன் மொழிகுவான் முதுநீர்க் கங்கை
தழுவு இருகரைக்கும் நாதன்; தாயினும் உயிர்க்கு நல்லன்
வழுவு இலா எயினர் வேந்தன்; குகனெனும் வள்ளல் என்றான் 6.37.315

சூரியன் மறைதல்

அண்ணல் அஃது உரைத்தலோடும், அரிக்குலது அரசன் ஆதி
நண்ணிய துணைவர் யாரும் இனிதுறத் தழுவி, நட்டார்
கண்ணகல் ஞாலம் எல்லாம் கங்குலால் பொதிவான் போல
வண்ணமால் வரைக்கும் அப்பால் மறைந்தனன், இரவி என்பான். 6.37.316

அலங்கல் அம் தொடையினானும், அந்தியின் கடன்கள் ஆற்றி,
பொலங் குழை மயிலினோடு துயிலுற, புணரி போல
இலங்கிய சேனை சூழ, இளவலும் எயினர் கோனும்,
கலங்கலர் காத்து நின்றார்; கதிரவன் உதயம் செய்தான். 6.37.317

இராமன் சீதையோடும் சேனையோடும் விமானத்தில் செல்லுதல்

கதிரவன் உதிப்ப, காலைக் கடன் கழித்து இளவலோடும்
அதிர்பொலன் கழலினான் அவ் அருந்தவன் தன்னை ஏத்தி,
விதிதரு விமானம் மேவி, விளங்கிழையோடும், கொற்றம்
முதிர்தரு சேனை யோடும் முனிமனம் தொடரப் போனான். 6.37.318

விமானத்திலுள்ேளார்க்கு அயோத்தி நகரின் மதில் தோன்றுதல்

தாவி வான் படர்ந்து மானம் தடை இலது ஏகும் வேலை,
தீவிய கன்னி ஆகிச் செருக்கிய காமச் செவிவி,
ஓவியம் உயிர் பெற்றென்ன, உம்பர் கோன்நகரும் ஒவ்வா
மா இயல் அயோத்தி சூழும் மதில் புறம் தோன்றிற்று அன்றே. 6.37.319

பொன்மதில் கிடக்கை சூழப் பொலிவுடை நகரம் தோன்ற,
நன்மதிக் கிழவர் தம்மை நோக்கிய ஞான மூர்த்தி,
‘சொல்மதித்து ஒருவராலும் சொலப்படா அயோத்தி தோன்றிற்று ‘
என்னலும், கரங்கள் கூப்பி எழுந்தனர் இறைஞ்சி நின்றார். 6.37.320

புட்பகவிமானம் தரையிலுள்ள அனுமன் முதலியோர்க்குத் தோன்றுதல்

அன்னது ஓர் அளவையின் விசும்பின் ஆயிரம்
துன் இருங் கதிரவர் தோன்றினால் என
பொன் அணி புட்பகப் பொரு இல் மானமும்
மன்னவர்க்கு அரசனும் வந்து தோன்றினான். 6.37.321

அனுமன் பரதனுக்கு இராமனைக் காட்டிக் கூறுதல (10418 - 10419)

‘அண்ணலே! காண்டியால் அலர்ந்த தாமரைக்
கண்ணனும் வானரக் கடலும் கற்புடைப்
பெண் அருங் கலமும் நின் பின்பு தோன்றிய
வண்ணவில் குமரனும் வருகின்றார்களை. 6.37.322

‘ஏழ் இரண்டு ஆகிய உலகம் ஏறினும்
பாழ்புறம் கிடக்குறு படியது ஆயது ஓர்
சூழ் ஒளி மானத்துத் தோன்றுகின்றனன்.
ஊழியோன் ‘என்று கொண்டு உணர்த்தும் காலையே. 6.37.323

இராமனை எதிர்கொள்வோர் ஆர்ப்பு

பொனொளி மேருவின் பொதும்பில் புக்கது ஓர்
மினொளி மேகம்போல் வீரன் தோன்றலும்,
மன் எதிர் வருநர்கள் ஆர்ப்பு, இராவணன்
தனெ்நகர்க்கு அப்புறத்து அளவும் சென்றதால். 6.37.324

பரதன் இராமனைக் காணுதல்

ஊனுடை யாக்கை விட்டு உண்மை வேண்டிய
வானுடைத் தந்தையார் வரவு கண்டென
கானிடைப் போகிய கமலக் கண்ணனை
தானுடை உயிரினை தம்பி நோக்கினான். 6.37.325

கெட்ட வான்பொருள் வந்து கிடைப்ப முன்பு தாம்
பட்ட வான்படர் ஒழிந்தவரின் பையுள் நோய்
சுட்டவன் மானவன் தொழுதல் உன்னியே
விட்டனன் மாருதி கரத்தை மேன்மையான் 6.37.326

அனுமன் விமானத்திலுள்ள இராமன் முன் நிற்றல்

அக்கணத்து அனுமனும் அவண் நின்று ஏகி, அத்
திக்குறு மானத்தைச் செல்வன் எய்தி, அச்
சக்கரத்து அண்ணலைத் தாழ்ந்து முன் நின்றான்
உக்குறு கண்ணநீர் ஒழுகும் மார்பினான். 6.37.327

அனுமன் பரதனுக்குத் தரெிவித்ததை இராமனிடம் சொல்லுதல்

உருப்பு அவிர் கனலிடை ஒளிக்கல் உற்ற இப்
பொருப்பு அவிர் தோளனைப் பொருந்தி, நாயினேன்,
திருப்பொலி மார்ப! நின் வரவு செப்பினேன்;
இருப்பன ஆயின உலகம் யாவையும். 6.37.328

இராமன் அனுமனைப் பாராட்டுதல்

தீவினை யாம் பல செய்யத் தீர்வு இலா
வீ வினை முறை முறை விளைவ மெய்ம்மையால்;
நீ அவை துடைத்து நின்று அளிக்க நேர்ந்ததால்
யாயினும் அன்பினாய்! யாம் செய் மாதவம். 6.37.329

இராமன் அனுமனைத் தழுவுதல்

என்று உரைத்து அனுமனை இறுகப் புல்லினான்,
‘ஒன்று உரைத்து இறுப்பது என், உனக்கும், எந்தைக்கும்,
இன்துணைத் தம்பிக்கும் யாய்க்கும்? ‘என்றனன்
குன்று இணைத்தன உயர் குவவுத் தோளினான். 6.37.330

பரதன் தோன்றுதல்

ஈடுறு வான் துணை இராமன் சேவடி
சூடிய சென்னியன் தொழுத கையினன்
ஊடு உயிருண்டு என உலர்ந்த யாக்கையன்
பாடு உறு பெரும்புகழ்ப் பரதன் தோன்றினான். 6.37.331

அனுமன், விமானத்துள் அமர்ந்திருக்கும் இராமனுக்குப் பரதனைக் காட்டுதல்

தோன்றிய பரதனைத் தொழுது தொல் அறச்
சான்று என நின்ற நின் இளைய தம்பியை
வான்தொடர் பேரரசு ஆண்ட மன்னனை
ஈன்றவள் பகைஞனைக் காண்டி ஈண்டு ‘எனா. 6.37.332

இராமன் பரதனைக் காண்டல்

காட்டினன் மாருதி; கண்ணின் கண்ட அத்
தோட்டு அலர் தரெியலான் நிலைமை சொல்லுங்கால்
ஓட்டிய மானத்துள் உயிரின் தந்தையார்
கூட்டு உருக் கண்டன்ன தன்மை கூடினான். 6.37.333

விமானம் நிலத்தைச்சேர்தல்

அவ்வயின், ‘அயோத்தி வைகும் சனமொடும் அக்குரோணி
தவ்வல் இல் ஆறுபத்தாயிரமோடும் தாயரோடும்,
இவ்வயின் அடைந்து உேளாரைக் காண்பென் ‘என்று இராமன் உன்ன,
செவ்வையின் நிலத்தை வந்து சேர்ந்தது அவ் விமானம் தானும். 6.37.334

நிலத்தைச் சேர்ந்த விமானத்தைக் கண்ட மக்கள் மகிழ்ச்சி

எவ்வயின் உயிர்கட்கும், இராமன் ஏறிய
செவ்விய புட்பகம் நிலத்தைச் சேர்தலும்,
அவ் அவர்க்கு அணுகிய அமரர்நாடு உய்க்கும்
எவ்வம் இல் மானம் என்று இசைக்கல் ஆயதால். 6.37.335

இராமனைக் கண்ட தாயர் முதலியோர் நிலை (10432-10435)

தாயாருக்கு அன்று சார்ந்த கன்று எனும் தகையன் ஆனான்;
மாயையின் பிரிந்தோர்க்கு எல்லாம் மனோலயம் வந்தது ஒத்தான்;
ஆய் இளையர்க்குக் கண்ணுள் ஆடு இரும் பாவை ஒத்தான்;
ஓய்வுற உலந்த யாக்கைக்கு உயிர்புகுந்தாலும் ஒத்தான். 6.37.336

எளிவரும் உயிர்கட்கு எல்லாம் ஈன்ற தாய் எதிர்ந்தது ஒத்தான்;
அளிவரும் மனத்தோர்க்கு எல்லாம் அரும்பத அமுதம் ஒத்தான்;
ஒளிவு அறப் பிறந்தது ஒத்தான், உலகினுக்கு; ஒண்கணார்க்கு,
தெளிவரு களிப்புச் செய்யும் தேம்பிழித் தேறல் ஒத்தான். 6.37.337

ஆவி அங்கு அவன் அலால் மற்று இன்மையால், அனையன் நீங்க,
காவி அம் கழனி நாடும், நகரமும், கவன்று வாழும்
மா இயல் ஒண்கணாரும், மைந்தரும் வள்ளல் எய்த,
ஓவியம் உயிர் பெற்றென்ன ஓங்கினர் உணர்வு பெற்றார். 6.37.338

சுண்ணமும், சாந்தும், நெய்யும், சுரிவளை முத்தும், பூவும்,
எண்ணெயும், கலினமா விலாழியும், எண் இல் யானை
வண்ணவார் மத முந்நீரும் மான்மதம் தழுவும் மாதர்
கண்ண ஆம் புனலும், ஓடிக் கடலையும் கடந்த அன்றே. 6.37.339

வசிட்டன் முதலியோர் விமானத்தில் ஏற இராமன் வசிட்டனை வணங்குதல்

அனைவரும் அனையர் ஆகி அடைந்துழி அருளின் வேலை
தனை இனிது அளித்த தாயர் மூவரும், தம்பி மாரும்,
புனையும் நூல் முனிவன் தானும், பொன் அணி விமானத்து ஏற,
வனைகழல் குரிசில் முந்தி, மாதவன் தாளில் வீழ்ந்தான். 6.37.340

வசிட்டன் இராம இலக்குவரை வாழ்த்துதல்

எடுத்தனன் முனிவன், மற்று அவ் இராமனை ஆசி கூறி,
அடுத்துள துன்பம் நீங்க, அணைத்து அணைத்து, அன்பு கூர்ந்து,
விடுத்துழி, இளைய வீரன் வேதியன் தாளில் வீழ,
வடித்த நூல் முனியும் முன்போல் வாழ்த்தினான் ஆசி கூறி. 6.37.341

இராமன் தாயரை வணங்குதல்

கய்கயன் தனையை முந்தக் கால் உறப் பணிந்து, மற்றை
மொய்குழல் இருவர் தாளும் முறைமையின் வணங்கும் செங்கண்
அய்யனை, அவர்கள் தாமும் அன்புறத் தழுவி, தம்தம்
செய்ய தாமரைக்கண் நீரால் மஞ்சனத் தொழிலும் செய்தார். 6.37.342

சீதையும் இலக்குவனும் வணங்குதல்

அன்னமும் முன்னர்ச் சொன்ன முறைமையின் அடியில் வீழ்ந்தாள்;
தன்நிகர் இலாத வென்றித் தம்பியும் தாயர் தங்கள்
பொன்னடித் தலத்தில் வீழத், தாயரும் பொருந்தப் புல்லி,
‘மன்னவற்கு இளவல் நீயே; வாழி! ‘என்று ஆசி சொன்னார். 6.37.343

தன்னை வணங்கிய பரதனை இராமன் தழுவுதல் (10440-10441)

சேவடி இரண்டும் அன்பின் அடி உறை ஆகச் சேர்த்தி,
பூவடி பணிந்து வீழ்ந்த பரதனைப் பொருமி விம்மி,
நாவிடை உரைப்பது ஒன்றும் உணர்ந்திலன், நின்ற நம்பி,
ஆவியும் உடலும் ஒன்றத் தழுவினன், அழுது சோர்வான். 6.37.344

தழுவினன் நின்ற காலை தத்திவீழ் அருவி காலும்
விழுமலர்க் கண்ணீர் மூரி வெள்ளத்தால் முருகற் செவ்வி
வழுவுற, பின்னி மூசு மாசுண்ட சடையின் மாலை
கழுவினன், உச்சி மோந்து, கன்றுகாண் கறவை அன்னான். 6.37.345

இலக்குவன் பரதனைப் பணிதல்

அனையது ஒர் காலத்து, அம்பொன் சடைமுடி அடியது ஆக,
கனைகழல் அமரர் கோமாற் கட்டவன் படுத்த காளை
துனைபரி, கரி தேர், ஊர்தி என்றிவை பிறவும், தோலின்
வினை உறு செருப்புக்கு ஈந்தான் விரைமலர்த் தாளின் வீழ்ந்தான். 6.37.346

ஊடுறு கமலக் கண்ணீர் திசைதொறும் சிவிறி ஓட
தாள்தொடு தடக்கை ஆரத் தழுவினன் ‘தனிமை நீங்கிக்
காடு உறைந்து உலைந்த மெய்யோ, கையறு கவலை கூர
நாடு உறைந்து உலைந்த மெய்யோ, நைந்தது? ‘என்று உலகம் நைய. 6.37.347

சத்துருக்கன் வணக்கம்

மூவர்க்கும் இளைய வள்ளல் முடி மிசை முகிழ்த்த கையன்,
தேவர்க்கும் தேவன் தாளும், செறிகழல் இளவல் தாளும்,
பூவர்க்கம் பொழிந்து வீழ்ந்தான்; எடுத்தனர் பொருந்தப் புல்ல,
வாவிக்குள் அன்னம் அன்னாள் மலர் அடித்தலத்து வீழ்ந்தான். 6.37.348

இராமன் சத்துருக்கனைத் தழுவிக்கொண்டு தன் தம்பிமார்கட்குச் சுக்கிரீவன் முதலிய நண்பர்களை அறிமுகப்படுத்தல்

பின் இணைக் குரிசில் தன்னைப் பெருங்கையால் வாங்கி, வீங்கும்
தன் இணைத் தோள்கள் ஆரத் தழுவி, அத்தம்பி மாருக்கு
இன் உயிர்த் துணைவர் தம்மைக் காட்டினான்; இருவர் தாளும்,
மன் உயிர்க்கு உவமை கூர வந்தவர், வணக்கம் செய்தார். 6.37.349

பரதன், சுக்கிரீவன் முதலியோரைப் பாராட்டுதல்

குரக்கினத்து அரசை, சேயை, குழுதனை, சாம்பன் தன்னை,
செருக்கிளர் நீலன் தன்னை, மற்றும் அத்திறத்தினோரை,
அரக்கருக்கு அரசை, வெவ்வேறு அடைவினின் முதன்மை கூறி
மருக்கமழ் தொடையல் மாலை மார்பினன், பரதன், நின்றான். 6.37.350

சுமந்திரன் இராமனை வரவேற்க வருதல்

மந்திரச் சுற்றத்துள்ளார் தம்மொடும், வயங்கு தானைத்
தந்திரத் தலைவரோடும், தமரொடும், தரணி ஆளும்
சிந்துரக் களிறு போல்வார் எவரொடும், சேனையோடும்,
சுந்தரத் தடந்தோள் வெற்றிச் சுமந்திரன் தோன்றினானால். 6.37.351

வந்த சுமந்திரனை இராமன் தழுவுதல்

அழுகையும் உவகைதானும் தனித்தனி அமர்செய்து ஏற,
தொழுதனன், எழுந்து விம்மி, சுமந்திரன் நிற்றலோடும்,
தழுவினன் இராமன்; மற்றைத் தம்பியும் அனைய நீரான்;
‘வழு இனி உளதன்று, இந்த மாநிலக் கிழத்திக்கு; என்றான். 6.37.352

இராமன் ஏவலின்படி வரவேற்க வந்த சேனையெல்லாம் விமானத்தில் ஏறி இராமனை வணங்குதல்

‘ஏறுக சேனை எல்லாம் விமான மீது ‘என்று தன்போல்
மாறு இலா வீரன் கூற, வந்துள அனிக வெள்ளம்
ஊறு இரும் பரவை வானத்து எழிலியுள் ஒடுங்குமாபோல்
ஏறி, மற்று இனைய வீரன் இணையடி தொழுதது அன்றே. 6.37.353

தேவர்கள் புட்பக விமானத்தைப்புகழ்ந்து பூமாரி பொழிதல்
‘உரைசெயின் உலகம் உண்டான் மணி அணி உதரம் ஒவ்வா,
கரைசெயல் அரிய வேதக் குறுமுனி கையும் ஒவ்வா,
விரைசெறி அலங்கல் மாலைப் புட்பக விமானம் ‘என்று என்று,
உரைசெய்து வான் உேளார்கள் ஒண்மலர் தூவி ஆர்த்தார். 6.37.354

விமானத்துள் முரசமுதலியவற்றின் முழக்கம்

அசனியின் குழுவும் ஆழி ஏழும் ஒத்து ஆர்த்தது என்ன,
விசியுறு முரசும், வேதத்து ஓதையும், விளிகொள் சங்கும்,
இசையுறு குழலும், ஏத்தின் அரவமும், எழுந்து பொங்கி,
திசை உறச் சென்று, வானோர் அந்தரத்து ஒலியின் தீர்ந்த. 6.37.355

விமானம் அயோத்திநோக்கிச் செல்லும் தோற்றம்

அவ்வயின் விமானம் தாவி, அந்தரத்து, அயோத்தி நோக்கி,
செவ்வையின் படரல் உற்ற; செகதல மடந்தையோடும்,
இவ்வுலகத்து உேளார்கள் இந்திரர் உலகு காண்பான்,
கவ்வையின் ஏகுகின்ற நீர்மையைக் கடுக்கும் அன்றே. 6.37.356

விமானம் நந்திக்கிராமத்தை யடைதல்

ஆனது ஓர் அளவையின் அமரர் கோனொடும்
வானவர் திருநகர் வருவதாம் என
மேல் நிறை வானவர் வீசும் பூவொடும்
தான் உயர் புட்பகம் நிலத்தைச் சார்ந்ததால். 6.37.357
-------------

6.38 – Die Krönung

6.38 திரு முடி சூட்டுப் படலம் 10455 – 10496 (42)

இராமன் தம்பியருடன் மயிர்வினை முற்றி ஒப்பனை செய்தல்

நம்பி அப் பரதனோடு நந்தியம் பதியை நண்ணி,
வம்பு இயல் சடையும் மாற்றி, மயிர்வினை முற்றி, மற்றைத்
தம்பியரோடு தானும் தண்புனல் படிந்த பின்னர்,
உம்பரும் உவகை கூர, ஒப்பனை ஒப்பச் செய்தார். 6.38.1

அயோத்திக்குள் புக இராமன் தேர் ஏறுதல்

நிருதியின் திசையில் தோன்றும் நந்தியம் பதியை நீங்கி
குருதி கொப்பளிக்கும் வேலோன் கொடிமதில் அயோத்தி மேவ
சுருதி ஒத்தனைய வெள்ளைத் துரகதக் குலங்கள் பூண்டு,
பருதி ஒத்து இலங்கும் பைம் பூண் பருமணித் தேரன் ஆனான். 6.38.2

தம்பியர் பணிசெய இராமன் தேர்மேற் செல்லுதல்

ஊழியின் இறுதி காணும் வலியினது உயர் பொன் தேரின்,
ஏழ் உயர் மதமா அன்ன இலக்குவன் கவிகை ஏந்த,
பாழிய மற்றைத் தம்பி பால் நிறக் கவரி பற்ற,
பூழியை அடக்கும் கண்ணீர்ப் பரதன் கோல் கொள்ளப் போனான் 6.38.3

இராமன் தேரின் நாற்புறத்திலும் வீடணன் முதலோர் செல்லுதல்

வீடணன் குருசில் மற்றை வெங்கதிர்ச் சிறுவன் வெற்றிக்
கோடு அணை குன்றம் ஏறி, கொண்டல் தேர் மருங்கு போத,
தோடு அணை மவுலிச் செங்கண் வாலி சேய் தூசு செல்ல,
சேடனைப் பொருவும் வீர மாருதி பின்பு சென்றான். 6.38.4

வானரத் தலைவர் போதல்

அறுபத்து ஏழ் அமைந்த கோடி யானைமேல் வரிசைக்கு ஆன்ற
திறம் உற்ற சிறப்பர் ஆகி, மானுடச் செவ்வி வீரம்
பெறுகுற்ற வனப்பர் உச்சி பிறங்கு வெண்குடையர் செச்சை
மறு உற்ற அலங்கல் மார்பர், வானரத் தலைவர் போனார். 6.38.5

பதினெட்டுத் தேயத்து வேந்தர் செல்லுதல்

எட்டு அமை ஈறு பத்தின் எழுதிரை வளாக வேந்தர்,
பட்டம் வைத்து அமைந்த நெற்றிப் பகட்டினர், பைம்பொன் தேரர்,
வட்டவெண் குடையர் வீசு சாமரை மருங்கர், வானைத்
தொட்ட வெஞ்சோதி மோலிச் சென்னியர், தொழுது சூழ்ந்தார். 6.38.6

சீதை விமானமூர்ந்து செல்லுதல்

.வானர மகளிர் எல்லாம் வானவர் மகளிராய் வந்து,
ஊனம் இல் பிடியும் ஒண்தார்ப் புரவியும் பிறவும் ஊர்ந்து
மீன் இனம் மதியைச் சூழ்ந்த தன்மையின் விரிந்து சுற்ற,
பூநிற விமானம் தன்மேல் மிதிலைநாட்டு அன்னம் போனாள். 6.38.7

கவிக்கூற்று -மலர்மாரியின் மிகுதி

தேவரும், முனிவர் தாமும், திசைதொறும் முறையின் சிந்த,
ஓவல் இல் மாரி ஏய்ப்ப, எங்கணும் உதிர்ந்து வீங்கி,
கேவலம் மலராய் வேறு ஓர் இடம் இன்றிக் கிடந்த ஆற்றால்
பூ எனும் நாமம் இன்று இவ் உலகிற்குப் பொருந்திற்று அன்றே. 6.38.8

யானைகள் மதம் சொரிதல்

கோடையில் வறந்த மேகக் குலம் எனப் பதினால் ஆண்டு
பாடு உறு மதம் செய்யாத பணைமுகப் பரும யானை,
காடு உறைந்து அண்ணல் எய்தக் கடாம் திறந்து உகுத்த வாரி
ஓடின, உள்ளத்து உள்ளக் களிதிறந்து உடைந்ததே போல். 6.38.9

குதிரைகள் ஆலித்தல்

துரகத் தார்ப் புரவி எல்லாம் மூங்கையர் சொல் பெற்றென்ன,
அரவப் போர் மேகம் என்ன ஆலித்த; மரங்கள் ஆன்று,
பருவத்தால் பூத்த என்னப் பூத்தன; பகைவிற் சீறும்
புருவத்தார் மேனி எல்லாம் பொன்நிறப் பசலை பூத்த. 6.38.10

இராமன் அயோத்தியில் அரண்மனை புகுதல்

ஆயது ஓர் அளவில் செல்வத்து அண்ணலும் அயோத்தி நண்ணி,
தாயரை வணங்கித் தங்கள் இறையொடு முனியைத் தாழ்ந்து,
நாயகக் கோயில் எய்தி நானிலக் கிழத்தியோடும்
சேய் ஒளிக் கமலத்தாளும் திருநடம் செய்யக் கண்டான். 6.38.11

நகர மக்களின் மகிழ்ச்சி (10465-10466)

‘வாங்குதும் துகில்கள் ‘என்னும் மனம் இலர் எனினும் பல்கால்
தாங்கினர் என்ற போதும் மைந்தரும் தையலாரும்
வீங்கிய உவகை மேனி சிறக்கவும் மேல் மேல் துள்ளி
ஓங்கவும், களிப்பால் சோர்ந்த, உடையிலாதாரை ஒத்தார் 6.38.12

வேசியர் உடுத்த கூறை வேந்தர்கள் சுற்ற, வேறு
பாசிழை மகளிர் ஆடை அந்தணர் பரிந்து சுற்ற,
வாச மென் கலவை சாந்து என்று இனையன, மயக்கம் தன்னால்,
பூசினர்க்கு இரட்டி ஆனார், பூசலார் புகுந்துேளாரும் 6.38.13

மகளிர் அணிகலன் பூண்டு அழகொடு தோன்றுதல்

இறைப்பெருஞ் செல்வம் நீத்த ஏழ் இரண்டு ஆண்டும், யாரும்
உறைப்பு இலர் ஆதலானே, வேறு இருந்து ஒழிந்த மின்னார்,
பிறைக்கொழுந்து அனைய நெற்றிப் பெய்வளை மகளிர், மெய்யை
மறைந்தனர் பூணின், மைந்தர் மனங்களின் மறுக்கம் கொள்ள. 6.38.14

விண்ணவர் மணமும் மண்ணவர் மணமும் தலை தடுமாறல்

விண் உறைவோர்தம் தயெ்வ வெறியொடு, வேறு உேளார் தம்
தண் நறு நாற்றம் தம்மில் தலை தடுமாறும் நீரால்,
மண் உறை மாதரார்க்கும், வான் உறை மடந்தைமார்க்கும்,
உள்நிறைந்து உயிர்ப்பு வீங்கி ஊடல் உண்டாயிற்று அன்றே. 6.38.15

அரண்மனை நலங்களை வீடணன் முதலானோர்க்குக் காட்டுமாறு பரதனுக்கு இராமன் கூறுதல்

ஆயது ஓர் அளவில் ஐயன், பரதனை அருளின் நோக்கி,
‘தூய வீடணற்கும், மற்றைச் சூரியன் மகற்கும், தொல்லை
மேய வானரங்களாய வீரர்க்கும், பிறர்க்கும், நம்தம்
நாயகக் கோயில் உள்ள நலம் எலாம் தரெித்தி ‘என்றான் 6.38.16

பரதன் அவ்வாறே நாயகக் கோயில் புகுதல்

என்றலும் இறைஞ்சி, மற்றைத் துணைவர்கள் யாவரோடும்
சென்றனன் எழுந்து, மாடம் பல ஒரீஇ, உலகில் தயெ்வப்
பொன் திணிந்து அமரரோடும் பூமகள் உறையும் மேருக்
குன்று என விளங்கித் தோன்றும் நாயகக் கோயில் புக்கான். 6.38.17

நாயகக் கோயிலைக் கண்டவர்கள் வியப்புறுதல்

வயிரம், மாணிக்கம், நீலம், மரகதம் முதலாய் உள்ள
செயிர் அறு மணிகள் ஈன்ற செழுஞ்சுடர்க் கற்றை சுற்ற,
உயிர் துணுக்குற்று நெஞ்சும் உள்ளமும் ஊசல் ஆட,
மயர்வு அறு மனத்து வீரர், இமைப்பிலர், மயங்கி நின்றார 6.38.18

பரதன் அந்த அரண்மனையின் வரலாற்றைக் கூறுதல்

விண்டுவின் மார்பில் காந்தும் மணி என விளங்கும் மாடம்
கண்டனர்; பரதன் தன்னை வினவினர் அவர்க்குக் காதல்
புண்டரீகத்து வைகும் புராதனன், கன்னல் தோளான்,
கொண்டநல் தவம் தன்னாலே உவந்து, முன் கொடுத்தது என்றான். 6.38.19

‘பங்கயத்து ஒருவன் இக்குவாகுவிற்கு அளித்த பான்மைத்து
இங்கு இது, மலராள் வைகும் மாடம் ‘ என்று இசைத்த போதில்,
‘எங்களால் துதிக்கலாகும் இயல்பதோ ‘என்று கூறி
செங்கைகள் கூப்பி வேறு ஓர் மண்டபம் அதனில் சேர்ந்தார். 6.38.20

சுக்கிரீவன் பரதனை வணங்கி இராமனது முடிசூட்டு விழாவைப் பற்றி வினவுதல்

இருந்தனர், அனைய மாடத்து இயல்பு எலாம் எண்ணி எண்ணி;
பரிந்தனன் இரவி மைந்தன், பரதனை வணங்கி, ‘தூயோய்!
கருந்தட முகில் அன்னாற்குக் காப்பு நாண் அணியும் நன்னாள்
தரெிந்திடாது இருத்தல் என்னோ? ‘ என்றலும், அண்ணல் செப்பும். 6.38.21

தீர்த்தநீர் கொணர அனுமன் விரைதல்

‘ஏழ்கடல் அதனில் தோயம், இருநதி பிறவில் தோயம்
தாழ்வு இலாது இவண் வந்து எய்தற்கு அருமைத்தோர் தன்மைத்து ‘என்ன,
ஆழி ஒன்று உடையோன் மைந்தன், அனுமனைக் கடிதின் நோக்க,
சூழ்புவி அதனை எல்லாம் கடந்தனன், காலின் தோன்றல். 6.38.22

வசிட்டன் வர அனைவரும் அவனை வணங்குதல்

‘கோமுனியோடு மற்றைக் கணிதரைக் கொணர்க! ‘என்னா
ஏவினன்; தேர்வலான் சென்று இசைத்தலும், உலகம் ஈன்ற
பூமகன் தந்த அந்தப் புனித மாதவன் வந்து எய்த,
யாவரும் எழுந்து போற்றி இணையடி தொழுது நின்றார 6.38.23

வசிட்டன் : ஆராய்ந்து, இராமன் காப்பு நாண் அணியும் நாள் நாளைக்கு எனல்

அரியணை பரதன் ஈய, அதன்கண் ஆண்டு இருந்த அந்தப்
பெரியவன், அவனை நோக்கி, ‘பெருநிலக் கிழத்தியோடும்
உரியமா மலராேளாடும் உகந்தனன் ஒருவு இல் செல்வம்
கரியவன் துய்த்தற்கு ஏய்ந்த காப்பு நாண் நாளை ‘என்றான். 6.38.24

இராமனது முடிசூட்டு விழாவிற்கு அழைப்பு விடுதல்

இந்திரன் குருவும், அன்னாற்கு ஏய்ந்தவர் எனவும், நின்ற
மந்திர விதியினாரும், வசிட்டனும், வரைந்து விட்டார்,
சந்திர கவிகை ஓங்கும் தயரத ராமன் தாமச்
சுந்தர மவுலி சூடும் ஓரையும் நாளும், தூக்கி. 6.38.25

இராமன் முடிசூட்டு விழாவிற்கு மூவுலகத்தோரும் அயோத்தி அடைதல்

.அடுக்கிய உலகம் மூன்றும் ஆதரத் தூதர் கூற,
இடுக்கு ஒருபேரும் இன்றி அயோத்திவந்து இறுத்தது என்றால்,
தொடுக்குறு கவியான் மற்றைத் துழனியை இறுதி தோன்ற
ஒடுக்குறுத்து உரைக்கும் தன்மை நான்முகத்து ஒருவற்கு உண்டோ? 6.38.26

வசிட்ட முனிவன் முதலியோர் இராமனை அணுகி முடிசூடும் நாள் நாளை என்பதை அறிவித்தல் 10480-10481

அவ்வயின் முனிவனோடும் பரதனும், அரியின் வேந்தும்
செவ்வியல் நிருதர் கோனும், சாம்பனும், வாலி சேயும்,
எவ்வம் இல் ஆற்றல் வீரர் யாவரும், எழுந்து சென்று ஆங்கு
அவ்வியம் அவித்த சிந்தை அண்ணலைத் தொழுது சொன்னார் 6.38.27

நாளைநீ மவுலி சூடும் நலம் திகழ் பெரிய நல் நாள்;
காளை! நீ அதனுக்கு ஏற்ற கடன்மை மீது இயற்றுக! ‘என்று,
வேளையே பொடியது ஆக விழிக்கும் நீள் நுதலின் வெண்பூம்
பூளையே சூடு வானைப் பொருவும் மாமுனியும் போனான். 6.38.28

மயன் மண்டபம் அமைத்தல்

நன்முகத்து ஒருவன் ஏவ, நயன் அறி மயன் என்று ஓதும்
நூல்முகத்து ஓங்கு கேள்வி நுணங்கியோன், வணங்கும் நெஞ்சன்,
கோன்முகத்து அளந்து குற்றம் செற்று உலகு எல்லாம் கொள்ளும்
மான்முகத்து ஒருவன் நல்நாள் மண்டபம் வயங்கக் கண்டான். 6.38.29

அனுமன் எழுகடல் நீரைக் கொணர்தல்

சூழ்கடல் நான்கின் தோயம் எழுவகைத்தாகச் சொன்ன
ஆழ்திரை ஆற்றின் நீரோடு அமைத்தி இன்று ‘என்ன, ஆம் என்று,
ஊழியின் இறுதி செல்லும் தாதையின் உலாவி, அன்றே
ஏழ்கடல் நீரும் தந்தான், இருந்து உய்ய மருந்து தந்தான். 6.38.30

வேந்தர்கள் சரயுநதியின் புனலை யானைமேற் கொணர்தல்

எரிமணிக் குடங்கள் பல் நூற்று யானைமேல் வரிசைக்கு ஆன்ற
விரிமதிக் குடையின் நீழல், வேந்தர்கள் பலரும் ஏந்தி,
புரைமணிக் காளம் ஆர்ப்ப, பல் இயம் துவைப்ப, பொங்கும்
சரயுவின் புனலும் தந்தார், சங்கு இனம் முரல மன்னோ. 6.38.31

பளிங்கு மாடத்திட்ட மாணிக்க பீடத்தில் இராமன் சீதையோடு அமர்தல்

மாணிக்கப் பலகை தைத்து, வயிரத்தின் கால்கள் சேர்த்தி,
ஆணிப் பொன் சுற்று முற்றி அழகு உறச் சமைத்த பீடம்
ஏண் உற்ற பளிக்கு மாடத்து இட்டனர்; அதனின் மீது
பூண் உற்ற திரள்தோள் வீரன் திருவொடும் பொலிந்தான் மன்னோ. 6.38.32

இராமனுக்கு வேந்தர் அபிடேகம் செய்தல்

மங்கல கீதம் பாட, மறை ஒலி முழங்க, வல்வாய்ச்
சங்கினம் குமுற, பாண்டில் தண்ணுமை ஒலிப்ப, தா இல்
பொங்கு பல் இயங்கள் ஆர்ப்ப, பூமழை பொழிய விண்ணோர்,
எங்கள் நாயகனை வெவ்வேறு எதிர்ந்து, அபிடேகம் செய்தார். 6.38.33

மாதவர் முதலியோர் அபிடேகம் செய்தல்

மாதவர், மறைவலாளர், மந்திரக் கிழவர் மற்றும்
மூதறிவாளர் உள்ள சான்றவர் முதல் நீர் ஆட்ட,
சோதியான் மகனும் மற்றைத் துணைவரும், அனுமன் தானும்,
தீது இலா இலங்கை வேந்தும் பின் அபிடேகம் செய்தார். 6.38.34

அபிடேக நீரின் சிறப்பு

'அம்கண் வான் உலகம் தாய அடி, மலர்த் தவிசோன் ஆட்டும்
கங்கை வார் சடையின் ஏற்றான், கண்ணுதல் ஒருவன்; இந்நாள்
சிங்க ஏறு அனையான் செய்ய திருமுடி ஆட்டும் நலநீர்
எங்கன் ஏற்று அன்னோன் வாழும்? ‘ என்றனர், புலவர் எல்லாம். 6.38.35

அபிடேகம் செய்துகொள்ளும் இராமன் சீதையோடிருந்த தோற்றம்

மரகதச் சயிலம் செந்தாமரை மலர்க் காடு பூத்து,
திரைகெழு கங்கை வீசும் திவலையான் நனைந்து, செய்ய
இருகுழை தொடரும் வேற்கண் மயிலொடும் இருந்தது ஏய்ப்ப,
பெருகிய செவ்வி கண்டார், பிறப்பு எனும் பிணிகள் தீர்ந்தார். 6.38.36

முடிசூட்டுவிழாவிற்கு வேண்டியவை வந்துசேர்தல்

தயெ்வநீர் ஆடற்கு ஒத்த செய்வினை வசிட்டன் செய்ய,
அய்யமில் சிந்தையான் அச் சுமந்திரன் அமைச்சரோடும்
நொய்தினின் இயற்ற, நோன்பின் மாதவர் நுனித்துக் காட்ட
எய்தின இயன்ற பல்வேறு இந்திரற்கு இயன்ற என்ன. 6.38.37

இராமனுக்கு வசிட்டமுனிவன் திருமுடி சூட்டுதல்

அரியணை அனுமன் தாங்க, அங்கதன் உடைவாள் ஏந்த,
பரதன் வெண்குடை கவிக்க, இருவரும் கவரி வீச
விரைசெறி குழலி ஓங்க வெண்ணெயூர்ச் சடையன் தங்கள்
மரபுேளார் கொடுக்க வாங்கி வசிட்டனே புனைந்தான் மௌலி. 6.38.38

இராமன் முடிசூடிக் கொள்ளுதல்

வெள்ளியும் பொன்னும் என்பார் விதிமுறை மெய்யின் கொண்ட
ஒள்ளிய நாளின் நல்ல ஓரையின், உலகம் மூன்றும்
துள்ளின குனிப்ப, மௌலி சூடினான் கடலின் வந்த
தெள்ளிய திருவும், தயெ்வப் பூமியும், சேரும் தோளான். 6.38.39

இராமன் மணிமுடி சூடியதில் மக்களுக்குள்ள மகிழ்ச்சி

சித்தம் ஒத்துளன் என்று ஓதும் திருநகர்த் தயெ்வ நன்னூல்
வித்தகன் ஒருவன் சென்னி மிலைச்சியது எனினும் மேன்மை
ஒத்த மூவுலகத்தோர்க்கும் உவகையின் உறுதி உன்னின்
தத்தம் உச்சியின்மேல் வைத்தது ஒத்தது அத் தாம மௌலி. 6.38.40

பூமி தேவியின் மகிழ்ச்சி

பல் நெடுங் காலம் நோற்று, தன்னுடைய பண்பிற்கு ஏற்ற
பின் நெடுங் கணவன் தன்னைப் பெற்று, இடைப்பிரிந்து, முற்றும்
தன் நெடும் பீழை நீங்கத் தழுவினாள், தளிர்க்கை நீட்டி
நல் நெடும் பூமி என்னும் நங்கை, தன் கொங்கை ஆர. 6.38.41

இராமன் பரதனை இளவரசனாக்கி இன்புற்றிருத்தல்

விரதநூல் முனிவன் சொன்ன விதிநெறி வழாமை நோக்கி,
வரதனும் இளைஞற்கு ஆங்கண் மாமணி மகுடஞ் சூட்டி,
பரதனைத் தனது செங்கோல் நடாவுறப் பணித்து, நாளும்
கரை தரெிவு இலாத போகக் களிப்பினுள் இருந்தான் மன்னோ. 6.38.42
-----------

6.39 – Der Abschied

6.39 விடை கொடுத்த படலம் 10498 -10535

சிவிகையின் இராமன் இருத்தல்

பூமகட்கு அணி அது என்னப் பொலி பசும்பூரி சேர்த்தி,
மாமணித் தூணின் செய்த மண்டபம் அதனின் நாப்பண்,
கோமணிச் சிவிகை மீதே, கொண்டலும் மின்னும் போல,
தாமரைக் கிழத்தியோடும் தயரத ராமன் சார்ந்தான். 6.39.1

விரிகடல் நடுவண் பூத்த மின் என ஆரம் வீங்க,
எரிகதிர்க் கடவுள் தன்னை இனமணி மகுடம் ஏய்ப்பக்
கருமுகிற்கு அரசு செந்தாமரைமலர்க் காடு பூத்து, ஓர்
அரியணைப் பொலிந்தது என்ன, இருந்தனன் அயோத்தி வேந்தன். 6.39.2

இராமனுக்குக் கவரி வீசுதல்

மரகதச் சயில மீது வான் நிலாப் பாய்வது என்ன
இருகுழை இடறும் வேற்கண், இளமுலை, இளநலார்தம்
கரகமலங்கள் பூத்த கற்றை அம் கவரி தறெ்ற,
உரகரும், நரரும், வானத்து உம்பரும், பரவி ஏத்த. 6.39.3

வெண்குடை நிழற்றும் காட்சி

உலகம் ஈர் ஏழும் தன்ன ஒளிநிலாப் பரப்ப வானில்
விலகி நின்று ஒளிரும் திங்கள் வெட்கி உள் கருப்புக் கொள்ள,
கலக வாள் நிருதர் கோனைக் கட்டு அழித்திட்ட கீர்த்தி
இலகிமேல் நிவந்தது என்ன எழு தனிக் குடை நிழற்ற. 6.39.4

வாத்தியங்கள் முழங்க மகளிர் நடம்புரிதல்

மங்கல கீதம்பாட, மறையவர் ஆசி கூற,
சங்கு இனம் குமுற, பாண்டில் தண்ணுமை துவைப்ப, தா இல்
பொங்கு பல் இயங்கள் ஆர்ப்ப, பொரும் கயல் கருங்கண், செவ்வாய்,
பங்கய முகத்தினார் கள் மயில்நடம் பயில மாதோ. 6.39.5

மன்னர்கள் அடிபணிதல்

திரைகடல் கதிரும் நாணச் செழுமணி மகுட கோடி
கரைதரெிவு இலாத சோதிக் கதிர் ஒளி பரப்ப, நாளும்
வரைபொரு மாட வாயில் நெருக்குற வந்து, மன்னர்
பரசியே வணங்கும் தோறும் பதயுகம் சேப்ப மன்னோ. 6.39.6

மந்திரக் கிழவர் முதலோர் சூழ இராமன் இருத்தல்

மந்திரக் கிழவர் சுற்ற, மறையவர் வழுத்தி ஏத்த,
தந்திரத் தலைவர் போற்ற, தம்பியர் மருங்கு சூழ,
சிந்துரப் பவளச் செவ்வாய்த் தரெிவையர் பலாண்டு கூற,
இந்திரற்கு உவமை ஏய்ப்ப எம்பிரான் இருந்த காலை. 6.39.7

வானர வீரர்கேளாடு சுக்கிரீவன் வந்து வணங்குதல் (10503-10504)

மயிந்தன், மா துமிந்தன், கும்பன், அங்கதன், அனுமன், மாறு இல்
சயம் தரு குமுதக் கண்ணன், சதவலி, குமுதன், தண்தார்
நயம்தரெி ததிமுகன், கோகச முகன், முதல நண்ணார்
வியந்து எழும் அறுபத்து ஏழு கோடியாம் வீரரோடும். 6.39.8

வீடணன் வந்து வணங்குதல்

ஏனையர் பிறரும் சுற்ற, எழுபது வெள்ளத்து உற்ற
வானரரோடும் வெய்யோன் மகன் வந்து வணங்கிச் சூழ,
தேன் இமிர் அலங்கல் பைந்தார் வீடணக் குரிசில் செய்ய
மான வாள் அரக்கரோடும் வந்து, அடிவணங்கிச் சூழ்ந்தான். 6.39.9

குகன் வந்து வணங்குதல்

வெற்றி வெஞ் சேனையோடும், வெறிப் பொறிப் புலியின் வெவ்வால்
சுற்றுறத் தொடுத்து வீக்கும் அரையினன், சுழலும் கண்ணன்,
கல்திரள் வயிரத் திண்தோள் கடுந்திறல் மடங்கல் அன்னான்,
எற்றுநீர்க் கங்கை நாவாய்க்கு இறை, குகன், தொழுது சூழ்ந்தான். 6.39.10

வந்தவர்களை வள்ளல் இனிதிருக்கச் செய்தல்

வள்ளலும் அவர்கள் தம்மேல் வரம்பின்றி வளர்ந்த காதல்
உள்ளுறப் பிணித்த செய்கை ஒளிமுகக் கமலம் காட்ட,
அள்ளுறத் தழுவினான் போல் அகம் மகிழ்ந்து, இனிதின், நோக்கி,
‘எள்ளல் இல்லாத மொய்ம்பீர்! ஈண்டு இனிது இருத்திர் ‘என்றான். 6.39.11

அறிஞர் முதலிய பல்லோரும் இராமனைச் சுற்றியமர்தல்

நல்நெறி அறிவு சான்றோர், நான்மறைக் கிழவர், மற்றைச்
சொல்நெறி அறியும் நீரார், தோம் அறு புலமைச் செல்வர்,
பல்நெறி தோறும் தோன்றும் பருணிதர், பண்பின் கேளிர்,
மன்னவர்க்கு அரசன் பாங்கர், மரபினால் சுற்ற மன்னோ. 6.39.12

அரசரும் பிறரும் இராமனோடு இருதிங்களை மகிழ்ச்சியாகக் கழித்தல்

தேம்படு படப்பை மூதூர்த் திருநகர் அயோத்தி சேர்ந்த
பாம்பு அணை அமலன் தன்னைப் பழிச்சொடும் வணக்கம் பேணி
வாம்புனல் பரவை ஞாலத்து அரசரும் மற்று உேளாரும்
ஏம்பல் உற்று இருந்தார்; நொய்தின், இருமதி இறந்தது அன்றே. 6.39.13

கவிக்கூற்று

நெருக்கிய அமரர் எல்லாம் நெடுங்கடற்கு இடைநின்று ஏத்த,
பொருக்கென அயோத்தி எய்தி, மற்றவர் பொருமல் தீர,
வருக்கமோடு அரக்கர் யாரும் மடிதர, வரிவில் கொண்ட
திருக்கிளர் மார்பினான் பின் செய்தது செப்பல் உற்றாம். 6.39.14

மறையவர் தங்கட்கு எல்லாம் மணியொடு முத்தும், பொன்னும்,
நிறைவளம் பெருகு பூவும், சுரபியும் நிறைத்து, மேல்மேல்,
குறை இது என்று இரந்தோர்க்கு எல்லாம் குறைவு அறக் கொடுத்து, பின்னர்,
அறைகழல் அரசர் தம்மை ‘வருக ‘என அருள, வந்தார். 6.39.15

அய்யனும் அவர்கள் தம்மை அகம்மகிழ்ந்து, அருளின் நோக்கி
வய்யகம், சிவிகை, தொங்கல், மாமணி மகுடம், பொன்பூண்,
கொய் உளைப் புரவி, திண்தேர் குஞ்சரம் ஆடை இன்ன
மெயுறக் கொடுத்த பின்னர் கொடுத்தனன் விடையும் மன்னோ. 6.39.16

சுக்கிரீவனுக்கு இராமன் பரிசுகள் கொடுத்தல்

சம்பரன் தன்னை வென்று தயரதன் நின்ற காலத்து
உம்பர்தம் பெருமான் ஈந்த ஒளிமணிக் கடகத்தோடும்
கொம்புடை மலையும் தேரும், குரகதக் குழுவும் தூசும்
அம்பரம் தன்னை நீத்தான் அலரி காதலனுக்கு ஈந்தான். 6.39.17

அங்கதம் இலாத கொற்றத்து அண்ணலும், அகிலம் எல்லாம்
அங்கதன் என்னும் நாமம் அழகுறத் திருத்துமாபோல்,
அங்கதம் கன்னல் தோளாற்கு அயன் கொடுத்த அதனை ஈந்தான்,
அங்கதன் பெருமை மண்மேல் ஆர் அறிந்து அறைய கிற்பார். 6.39.18

பின்னரும் அவனுக்கும் ஐயன் பெருவிலை ஆரத்தோடும்
மன்னும் நுண்தூசும், மாவும், மதமலைக் குழுவும், ஈயா,
‘உன்னை நீ அன்றி, இந்த உலகினில் ஒப்பு இலாதாய்!
மன்னுக கதிரோன் மைந்தன் தன்னொடும் மருவி ‘என்றான். 6.39.19

அனுமனுக்குப் பரிசளித்தல் (10515-10517)

மாருதி தன்னை ஐயன் மகிழ்ந்து, இனிது அருளின் நோக்கி,
‘ஆர் உதவிடுதற்கு ஒத்தார், நீ அலால்? அன்று செய்த
பேர் உதவிக்கு யான்செய் செயல் பிறிது இல்லை; பைம்பூண்
போர் உதவிய திண்தோளால் பொருந்துறப் புல்லுக ‘என்றான். 6.39.20

என்றலும், வணங்கி நாணி, வாய் புதைத்து, இலங்கு தானை
முன்தலை ஒதுக்கி நின்ற மொய்ம்பனை முழுதும் நோக்கி
பொன்திணி வயிரப் பைம்பூண் ஆரமும், புனைமென் தூசும்
வன்திறல் கயமும், மாவும், வழங்கினன், வழங்கு சீரான். 6.39.21

பூமலர்த் தவிசை நீத்து, பொன் மதில் மிதிலை பூத்த
தேமொழித் திருவை ஐயன் திருவருள் முகந்து நோக்க,
பாமறைக் கிழத்தி ஈந்த பருமுத்த மாலை கைக்கொண்டு
ஏமுறக் கொடுத்தாள், அன்னாள் இடர் அறிந்து உதவினாற்கே. 6.39.22

சாம்பவனுக்குப் பரிசளித்தல்

சந்திரற்கு உவமை சான்ற, தாரகைக் குழுவை வென்ற
இந்திரற்கு ஏய்ந்ததாகும் என்னும் முத்தாரத்தோடு
கந்து அடு களிறு, வாசி, தூசு, அணிகலன்கள் மற்றும்
உந்தினன், எண்கின், வேந்தற்கு உலகம் முந்து உதவினானே. 6.39.23

நீலனுக்குப் பரிசு

நவமணிக் காழும், முத்து மாலையும், நலம்கொள் தூசும்,
உவமை மற்று இலாத பொற்பூண் உலப்பு இல பிறவும், ஒண்தார்க்
கவனவெம் பரியும், வேகக் கதமலைக்கு அரசும், காதல்
பவனனுக்கு இனிய நண்பன் பயந்தடெுத்தவனுக்கு ஈந்தான். 6.39.24

சதவலிக்குப் பரிசு

.பதவலிச் சதங்கைப் பைந்தார்ப் பாய்பரி, பணைத்திண் கோட்டு
மதவலிச் சைலம், பொன்பூண், மாமணிக் கோவை, மற்றும்
உதவலின் தகைவ அன்றி, இல்லன உள்ள எல்லாம்
சதவலி தனக்குத் தந்தான் சதுமுகத்தவனைத் தந்தான். 6.39.25

கேசரிக்குப் பரிசு

பேச அரிது ஒருவர்க்கேயும் பெருவிலை இதனுக்கு; ஈதுக்
கோ, சரி இலது என்று எண்ணும் ஒளிமணிப் பூணும் தூசும்,
மூசு எரிக்கு உவமை வெம்மை மும்மதக் களிறும், மாவும்,
கேசரி தனக்குத் தந்தான் கிளர்மணி முழவுத் தோளான். 6.39.26

நளன் முதலியோர்க்குப் பரிசு

வளன் அணிகலனும், தூசும், மாமதக் களிறும், மாவும்,
நளனொடு குமுதன், தாரன், நவை அறு பனசன், மற்றோர்
உளம் மகிழ்வு எய்தும் வண்ணம் உலப்பு இல பிறவும் ஈந்தான்
குளன் அமர் கமல வேலிக் கோசலக் காவலோனே. 6.39.27

எழுபது வெள்ளம் சேனைக்கும் கருணை நோக்களித்தல்

அவ்வகை அறுபத்து ஏழு கோடியாம் அரியின் வேந்தர்க்கு
எவ்வகைத் திறனும் நல்கி, இனியன பிறவும் கூறி,
பவ்வம் ஒத்து உலகில் பல்கும் எழுபது வெள்ளம் பார்மேல்
கவ்வை அற்று இனிது வாழக் கொடுத்தனன் கருணை நோக்கம். 6.39.28

வீடணனுக்குப் பரிசு (10524-10525)

மின்னை ஏய் மௌலிச் செம் கண் வீடணப் புலவர் கோமான்
தன்னையே இனிது நோக்கி, ‘சராசரம் சுமந்த சால்பின்
நின்னையே ஒப்பார் நின்னை அலது இலர்; உளரேல், ஐய!
பொன்னையே இரும்பு நேரே பொருவென ஒக்கும் என்றான். 6.39.29

என்று உரைத்து, அமரர் ஈந்த எரிமணிக் கடகத்தோடு
வன்திறல் களிறும், தேரும், வாசியும், மணிப்பொன் பூணும்,
பொன்திணி தூசும், வாசக் கலவையும், புதுமென் சாந்தும்,
நன்று உற, அவனுக்கு ஈந்தான் நாகணைத் துயிலில் தீர்ந்தான். 6.39.30

குகனுக்குப் பரிசு

சிருங்கபேரம் அது என்று ஓதும் செழுநகர்க்கு இறையை நோக்கி,
‘மருங்கு இனி உரைப்பது என்னோ, மறு அறு துணைவற்கு? ‘என்னா,
கருங் கைம்மாக் களிறும், மாவும், கனகமும், தூசும், பூணும்,
ஒருங்குற உதவி, பின்னர் உதவினன் விடையும் மன்னோ. 6.39.31

அனுமன் முதலியோர்க்கு விடைகொடுத்தல்

அனுமனை, வாலி சேயை, சாம்பனை, அருக்கன் தந்த
கனைகழல் காலினானை, கருணையங் கடலும் நோக்கி,
‘நினைவதற்கு அரிது நும்மைப் பிரிக என்றல்; நீவிர் வைப்பும்
எனது அது காவற்கு இன்று என் ஏவலின் ஏகும் ‘என்றான். 6.39.32

வீடணனுக்கு விடைகொடுத்தனுப்புதல்

இலங்கை வேந்தனுக்கும் இவ்வாறு இனியன யாவும் கூறி
அலங்கல் வேல் மதுகை அண்ணல் விடைகொடுத்து அருளலோடும்,
நலம் கொள் பேர் உணர்வின் மிக்கோர், நாடுறு நெஞ்சர், பின்னர்க்
கலங்கலர், ‘ஏய செய்தல் கடன் ‘எனக் கருதிச் சூழ்ந்தார். 6.39.33

யாவரும் இராமன் முதலியோரை வலங்கொண்டு வணங்கி விடைபெற்றுச் செல்லுதல்

பரதனை, இளைய கோவை, சத்துருக்கனனை, பண்பு ஆர்
விரத மாதவனை, தாயர் மூவரை, மிதிலைப் பொன்னை,
வரதனை வலங்கொண்டு ஏத்தி வணங்கினர் விடையும் கொண்டே,
சரதமா நெறியும் வல்லோர் தத்தம பதியைச் சார்ந்தார். 6.39.34

வீடணன் இலங்கை சேர்தல்

குகனைத்தன் பதியின் உய்த்து, குன்றினை வலம்செய் தேரோன்
மகனைத் தன்புரத்தில் விட்டு, வாள் எயிற்று அரக்கர் சூழ,
ககனத்தின் மிசையே எய்தி கனைகடல் இலங்கை புக்கான்
அகன் உற்ற காதல் அண்ணல், அலங்கல் வீடணன், சென்று, அன்றே. 6.39.35

இராமன் அரசு புரிதல் (10531-10532)

அய்யனும் அவரை நீக்கி, அருள்செறி துணைவரோடும்
வய்யகம் முழுதும் செங்கோல் மனுநெறி முறையில் செல்ல,
செய்ய மா மகளும் மற்றச் செகதல மகளும் சற்றும்
நய்யுமாறு இன்றிக் காத்தான், நானிலப் பொறைகள் தீர்த்தே. 6.39.36

உம்பரோடு இம்பர் காறும், உலகம் ஓர் ஏழும் ஏழும்,
‘எம் பெருமான் ‘என்று ஏத்தி இறைஞ்சி நின்று ஏவல் செய்ய,
தம்பியரோடும் தானும் தருமமும் தரணி காத்தான்
அம்பரத்து அனந்தர் நீங்கி, அயோத்தியில் வந்த வள்ளல். 6.39.37

இராவணன் தன்னை வீட்டி, இராமனாய் வந்து தோன்றி,
தராதலம் முழுதும் காத்து, தம்பியும் தானும் ஆகப்
பராபரம் ஆகி நின்ற பண்பினைப் பகருவார்கள்
நராபதி ஆகி, பின்னும் நமனையும் வெல்லுவாரே. 6.39.38
------------

Nachklang

Mit Heimkehr, Krönung und dem Abschied der Gefährten endet das Kamba Ramayanam. Dankbarkeit verbindet den Schluss mit dem langen Weg des Suchens. Was Hanuman, Bharata und die anderen getragen haben, bleibt als Einladung zu Hingabe, Aufmerksamkeit und verlässlichem Handeln gegenwärtig.

Video von Yoga Vidya als Begleitung zur Verehrung und Bedeutung Ramas:

Vorheriger Artikel: Kamba Ramayanam Tamilischer Text Teil 3.

Die Artikel dieser Ausgabe

Übersicht zu Werk, Handlung und spiritueller Bedeutung

Textgrundlage und Lesehinweise

Die Ausgabe folgt Project Madurai. Die deutsche Fassung ist eine vorläufige Prosaübersetzung; die Umschrift ist eine regelbasierte, schriftnahe Übertragung. Quellenbedingte Schreibungen und Nummerierungsabweichungen sind nicht vollständig philologisch bereinigt. Der Gesamtbestand dieser Ausgabe umfasst 10.535 Verspositionen bis 6.39.38. Die tamilischen Zwischenüberschriften stammen teilweise von den Herausgebern.

Siehe auch

Yoga: Grundlagen und Praxis · Meditation bei Yoga Vidya

Seminare

Indische Schriften

26.12.2026 - 02.01.2027 Indische Rituale Ausbildung

Du interessierst dich für indische Rituale? Du hast die einzigartige Gelegenheit, in dieser Rituale Ausbildung bei Yoga Vidya die kleine Puja, große P…
Sukadev Bretz, Shankari Winkelbauer
01.01.2027 - 10.01.2027 Yogalehrer Weiterbildung Intensiv A1 - Jnana Yoga und Vedanta

Kompakte, vielseitige Weiterbildung für Yogalehrer rund um Jnana Yoga und Vedanta.
Tauche tief ein ins Jnana Yoga und Vedanta, studiere die indischen S…
Vedamurti Dr Olaf Schönert

Kundalini Yoga

06.11.2026 - 08.11.2026 Kundalini Yoga Einführung

Gründliche Einführung in die Theorie und Praxis des Kundalini Yoga, Yoga der Energie. Die praktischen Übungen des Kundalini Yoga umfassen Pranayama (…
Arjuna Wingen
13.11.2026 - 15.11.2026 Kundalini Yoga Mittelstufe

Intensives Kundalini Yoga Seminar zur Erweckung der inneren Kundalini Energie, Erweiterung des Bewusstseins und Entfaltung des vollen Potentials. Yoga A…
Manuel Hirning

Chakras

20.11.2026 - 22.11.2026 Heilreise durch die Chakren

Tauche ein in eine transformative Reise durch die sieben Hauptchakren und erfahre, wie du deine Energiezentren aktivieren, ausbalancieren und für dein …
Nese Niekrens, Gajendra Sebastian Niekrens
26.12.2026 - 01.01.2027 Kundalini Yoga Intensiv Praxis - Live Online

Intensives Praktizieren der im Mittelstufen-Seminar gelernten Übungen für noch tiefere Erfahrung und Erweiterung des Bewusstseins ohne viel Theorie. L…
Sukadev Bretz, Shaktipriya Vogt, Radharani Birkner

Energiearbeit

04.11.2026 - 04.11.2026 Einführung in die Chakratherapie - Online Workshop

Uhrzeit: 18 - 21 Uhr
Ein Chakra ist ein feinstoffliches Kraftzentrum des Körpers, welches wichtige Körperfunktionen steuert und bestimmten Organen zug…
Beate Menkarski
06.11.2026 - 08.11.2026 Kundalini Yoga Einführung

Gründliche Einführung in die Theorie und Praxis des Kundalini Yoga, Yoga der Energie. Die praktischen Übungen des Kundalini Yoga umfassen Pranayama (…
Arjuna Wingen